எங்கள் வீடுதான் நடு. இடப்பக்கம் சித்தப்பா வீடு.. வலப்பக்கம் பெரியப்பா வீடு. சித்தப்பா வீட்டில் இரண்டு தம்பிகள் பெரியப்பா வீட்டில் இரண்டு அண்ணன்கள், நான் என் தம்பி ஆக ஆறு பேரும் ஒரே துவக்கப்பள்ளியில்தான் படிக்கிறோம். காலை 8.30க்கு எங்கள் தெருவில் இருக்கும் மின்கம்பத்தின் கீழ் கூடிவிடுவோம். வேறு இரண்டு பையன்களும் சேர்ந்துகொள்வார்கள். நாங்கள் ஏழெட்டுப்பேர் ஒன்றாக பள்ளிக்குச் செல்வோம். எங்கள் தெரு தாண்டி பட்டுநூல்காரத் தெரு தாண்டி பழைய ஆஸ்பத்திரி தாண்டினால் எங்கள் பள்ளிக்கூடம். கிட்டத்தட்ட ஒரு மைல். நடை தெரியாமல் இருக்க ஒரு கருங்கல்லையோ சிமிண்டு சில்லையோ எத்திக்கொண்டே செல்வோம். முதலில் ஒருவர் எத்தவேண்டும். அது நிற்கும் இடத்திலிருந்து அடுத்தவன் எத்துவான். இப்படியே பள்ளிக்கூடம் வரை எத்திக்கொண்டு செல்வோம்.
பட்டுநூல்காரத் தெருவில் எல்லார் வீட்டிலும் தறி இருக்கும். குறுக்கு நூல் ஓட்டுவதற்கு முன் சேலைகளை கவட்டை கால்களால் நீளவாட்டில் விரித்து வைத்து அறுந்த நூல்களை சில கிழவர்கள் சரிசெய்வார்கள். துருத்திக்கொண்டிருக்கும் அந்த முதுகெலும்பில் அவர்களின் வாழ்க்கையை வாசித்துக் கொள்ளலாம். வீட்டின் முன்புறத்தில் முளையடித்து எருமைமாடுகள் கட்டப்பட்டிருக்கும். எல்லார் வீட்டிலும் சாணம் சேர்க்கும் குப்பைமேடுகள் உண்டு. எல்லார் வீட்டிலும் பத்துப்பதினைந்து கோழி மற்றும் வாத்துக்குஞ்சுகளுடன் தாய்க்கோழி மேயும். குயில் முட்டையை காகம் அடைகாப்பது போல் வாத்துமுட்டையை பெட்டைக்கோழிதான் அடைகாக்கும். அந்த மாடுகளுக்கும் அந்தக் கோழிகளுக்கும் அவ்வப்போது வரும் பஸ்களுக்கும் மாட்டுவண்டிகளுக்கும் நாங்கள் வாடிக்கையாகிவிட்டோம். எங்கள் விளையாட்டில் அவைகளுக்கு எந்தக் கலவரமும் இல்லை. பழைய ஆஸ்பத்திரியின் முன் இருக்கும் தூங்குமூஞ்சி மரம் தூரிகை போன்ற சிவப்புப் பூக்களை உதிர்த்திருக்கும். நாங்கள் எத்தும் சில்லுக்கு அந்தப் பூக்கள் முட்டிமோதி வழிவிடும். இப்படியாக நாங்கள் பள்ளிக்கூடம் போய்ச் சேருவோம். நடப்பது கால்கள்தான். ஆனாலும் கைகளின் உதவியின்றி ஒரு கல்லை பள்ளிக்கூடம் வரை கொண்டுசேர்த்த பெருமையில் அந்தக் கால்கள் வலியை மறந்துவிடும். 12.30க்கு மதியச் சாப்பாட்டுக்கு வரும்போதும் பள்ளியிலிருந்து வேறொரு கல்லை எத்திக்கொண்டு திரும்புவோம். அப்படி எத்திக்கொண்டு வந்தபோது நான் எத்திய கல் அந்த எருமையைத் தாண்டி கோழிக்குஞ்சுகளை மிரட்டிவிட்டு சாணிக்குப்பையில் போய் செருகிக்கொண்டது. அதை அப்படியே விட்டுவிட்டு அவரவர்கள் வீட்டுக்குப் போய்விட்டோம்.. அடுப்படியில் அக்காவும் தங்கையும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ஒரு தட்டில் சோறு போட்டு கறி குழம்பு ஊற்றி அம்மா எனக்குக் கொடுத்தபோது வாசலில் ‘அம்மா, அம்மா’ என்று கலவரமாக ஒரு குரல் கேட்டது. அம்மா வேகமாக வாசலுக்கு சென்றார். வாத்துக்குஞ்சு, ரத்தம், ஒங்க பையன் என்று சில சொற்கள் காதில் விழுந்தன. நான் சோற்றில் கைவைக்கப்போனேன். ‘டேய் சாரங்கா’ என்று அம்மா கத்தினார். எழுந்து ஓடினேன். கொரட்டால் ஆணியைக் கவ்வுவதுபோல் என் கன்னத்தைக் கவ்வி அம்மா இழுத்தார். நகங்கள் கன்னங்களில் இறங்கியது. ‘இப்படி ரத்தப்பலி கொடுத்துட்டியேடா’ ன்னு சொல்லி அப்படியே தள்ளிவிட்டார். நான் சுவரில் மோதி சரிந்தேன். நெற்றி ஒரு நெல்லிக்காய் அளவு புடைத்துவிட்டது. கன்னத்திலும் நெற்றியிலும் ரத்தம் கசிந்தது. அம்மாவுக்கு கோபம் புயல்போல் வரும் அடித்து துவம்சம் செய்யாமல் அமைதியடையாது. துவம்சம் செய்துவிட்டது. அப்பா வீட்டில் நுழைந்தார். பளீர் வெள்ளையில் எப்போதும் பதட்டமில்லாமல் இருப்பார். எல்லாவற்றையும் ஆமோதிப்பார். தப்பென்றால் மௌனமாகிவிடுவார். அப்பா வந்ததும் திண்ணையில் உட்கார்ந்து என்னை மடியில் வைத்துக்கொண்டார். நெற்றிப்புடைப்பை உள்ளங்கையால் தேய்த்துவிட்டார். அந்த
2
அம்மா வாத்துக்குஞ்சை நான்தான் நொண்டியாக்கினேன் என்று சொன்னார். சட்டைப்பையிலிருந்து 5 ரூபாயை அந்த அம்மாவிடம் கொடுத்து ‘இதில் பெரிய வாத்துக்கள் 5 வாங்கமுடியுமம்மா. வாங்கிக்கொள்ளுங்கள். சின்னப்புள்ளங்க. அறியாம செஞ்சுட்டாங்க. மன்னிச்சிடுங்கம்மா’ என்றார். ‘பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்கய்யா’ ன்னு சொல்லிட்டு ஒடுங்கி கும்பிட்டுவிட்டு நின்றார். கடையிலிருந்து சாத்தையாவை வரச்சொன்னார். அந்த வாத்துக் குஞ்சுகளை கால்நடை டாக்டர் சதாசிவத்திடம் காண்பித்து கட்டுப்போடச்சொல்லி அவர்கள் வீட்டில் கொண்டுபோய் கொடுக்கச் சொன்னார். கடை ஆரம்பித்த காலத்திருந்தே சாத்தையா இருக்கிறார். அவருக்குத் திருமணம் செய்துவைத்ததும் வீடு கட்டிக்கொடுத்ததும் அப்பாதான். அவர் வீட்டில் தெய்வப் படங்கள் எதையும் பார்க்கமுடியாது. அப்பா படம் மட்டும்தான் இருக்கும்.. அன்று மாலை நாங்கள் பள்ளியிலிருந்து வந்தோம். எத்தும் வேலையை விட்டுவிட்டோம். வீட்டுக்கு வந்து நீதி கேட்ட அந்த அம்மா என்னை மட்டும் வீட்டுக்குள் அழைத்தார். ஒரு கள்ளிப்பலகை ஸ்டூலில் என்னை உட்காரச் சொன்னார். வீட்டில் ஒரு கிழவர் தறி ஓட்டிக்கொண்டிருந்தார். வீடே இருட்டாக இருந்தது. இதற்குள்தான் இவர்கள் வாழ்கிறார்களா? அந்த அம்மா உள்ளே போய் சூடாக பால் கொண்டுவந்து குடிக்கச் சொன்னார். ஏதோ ஒரு எண்ணையை நெற்றியில் தடவிவிட்டு ‘போயிட்டு வாங்கய்யா’ என்றார். என் வயதில் உள்ள எல்லாரையும் யாரும் ‘டா’ போட்டுத்தான் அழைப்பார்கள். ஆனால் என்னை மட்டும் யாரும் அவ்வாறு அழைப்பதில்லை. அது என் அப்பாவுக்கு அவர்கள் காட்டும் மரியாதை என்று விளங்கிக் கொண்டேன். என்னை ரோட்டில் விட்டு திட்டித் தூற்றவேண்டிய அந்த அம்மா வீட்டுக்குள் அழைத்து பால் கொடுக்கிறார். அதுதான் என் அப்பாவின் அதிசயப் பண்பு. இப்படி ஒரு அப்பா. அப்படி ஒரு அம்மா.
விடுமுறைக்கு ஊரிலிருந்து அத்தை வந்திருந்தார். அத்தைமகள் முல்லையும் வந்திருந்தாள். எனக்கும் அவளுக்கும் ஒரே வயது. அவள் வந்தால் பள்ளிக்கூடம் போகவே பிடிக்காது. எப்போதும் முல்லையோடே இருக்கத் தோன்றும். அவள் ஒரு சட்டிபானை செட் கொண்டுவந்திருந்தாள். சுட்டமண்ணில் செய்த சிறிய சோற்றுப்பானை, குழம்புச்சட்டி, தட்டுக்கள், ஆப்பைகள், அம்மி, ஆட்டுக்கல், உரல், உலக்கை. ரொம்ப நேர்த்தியான வேலைப்பாடு. கையில் எடுக்கும்போதே ஒரு கிளிக்குஞ்சை தூக்குவதுபோல் இருக்கும். அத்தனை அழகு. அன்று எல்லாரும் அந்த சட்டிபானையில் கூட்டாஞ்சோறு ஆக்கி விளையாடினோம். மண்தான் சோறு. சலித்த செங்கல்பொடிதான் நெய். பூண்டுச்செடியின் இலைகள், மிளகுபோல் இருக்கும் அதன் காய்கள், மாங்காய் போல் இதழ்இதழாய் இருக்கும் எருக்கம்பூ, சக்கரம்போல் இருக்கும் எருக்கமுள் இவைகள்தான் கூட்டு பொறியல். அது ஓர் ஆடிமாதம். அம்மா பயிர்க்குழி போட்டிருந்தார். ஓட்டுத் தாழ்வாரத்தில் வைத்த சுரைவிதை வளர்ந்து ஓட்டைத் தொட்டு ஒரு பிஞ்சையும் விட்டிருந்தது. பஞ்சுமுட்களைப் போர்த்திக்கொண்டு வானத்தையும் எங்களையும் பார்த்து அந்தப் பிஞ்சு சிரித்தது. அதன் வளர்ச்சியை ஒவ்வொரு நாளும் அம்மா பார்த்துப்பார்த்துப் பசியாறினார். முல்லையை சந்தோஷப்படுத்த அந்த சுரைப்பிஞ்சை கிள்ளிவந்து சுரைக்குழம்பு வைப்போமென்றேன். கையாலேயே அந்தப் பிஞ்சைக் கிள்ளிக்கிள்ளி ஒரு கோப்பையில் சேர்த்தேன். கொடியை வந்துபார்த்த அம்மா அறுந்த பல்லிவால் மாதிரி துடித்தார். பிஞ்சு கிள்ளிய இடத்தில் ஒரு மாதிரியான திரவம் முட்டுக்கட்டி நின்றது. நேராக எங்களிடம் வந்தார். நான் அந்தப் பிஞ்சை இன்னும் கிள்ளிக்கொண்டுதான் இருந்தேன். புயல் மீண்டும் புறப்பட்டது. அருகில் கிடந்த சவுக்குக்குச்சியை எடுத்து என் முதுகில் இறக்கினார். ‘அடிக்காதீங்க அத்தே’ ன்னு முல்லை அம்மாவைக் கையோடு சேர்த்து கட்டிப்பிடித்துக்கொண்டாள். எனக்கு அழுகை வரவில்லை. முல்லை தேம்பித்தேம்பி
3
அழுதாள். அப்பா வந்தார். நான் ஓடிப்போய் அப்பாவைக் கட்டிக்கொண்டேன். ‘பச்சக்குழந்த மாதிரி இருந்த அந்தப் பிஞ்சை கிள்ளிப்போட்டுட்டான் கழிச்சல்லபோவான்’ என்று சொல்லி அம்மா போய்விட்டார். அப்பா முதுகைப் பார்த்தார். மொத்த முதுகிலும் நீளமாக ஒரு தடிப்பு பாம்புபோல் நீண்டுகிடந்தது. அப்பா அழுகிறார் என்று நினைக்கிறேன். கண்களை துடைத்துக்கொண்டார். மசஞ்சள்பத்துப் போடும்வரை அப்பா என்னோடு இருந்துவிட்டு கடைக்குப் போனார். அன்று இரவு அப்பாவோடுதான் சாப்பிட்டேன். சாப்பிடும்போதே அப்பா ஒரு வாய் ஊட்டிவிடுவார். அப்பா விரல்கள் வாயில் பட்டாலே பஞ்சுமிட்டாய் கரைவதுபோல் இருக்கும். அந்த சுகத்துக்காகவே நான் அப்பாவோடு சாப்பிடுவேன். ‘போன வருஷம் எத்தனையோ சுரக்காய பறிக்காம கொடியிலேயே விட்டு முத்தவிட்டு அறுத்துப்போட்டோம். இப்பவும் எத்தனையோ காய் காய்க்கப் போவுது. ஒரு பிஞ்சுக்காகப் போயி இப்படியா அடிப்பது’ என்றார் . இதுதான் அப்பாவுடைய ஸ்டைல். அம்மா கோபமாக இருக்கும்போது வாய் திறக்கமாட்டார். அந்த ஆபத்தை பலதடவை அவர் அனுபவித்திருக்கிறார். அதனால்தான். அன்று இரவு எனக்கு நல்ல ஜுரம். அட்டைபோல் சுருண்டுகிடந்தேன். ‘அப்பா அப்பா’ என்று முனகினேன். அந்த முனகலில்கூட நான் அம்மாவைக் கூப்பிட்டதில்லை. அப்பாதான் எழுந்துவந்தார். நெற்றியில் தன் உள்ளங்கையை பரப்பி ஜுரத்தை அறிந்துகொண்டார்.. பின் அடுப்பில் ஒரு சட்டியில் தண்ணீரைக் கொதிக்கவைத்து அதில் பழைய சோறைப்போட்டு மீண்டும் வேகவைத்து நொறுங்கப் பிசைந்து ஊட்டிவிட்டார். பாதி சாரிடான் மாத்திரையைக் கொடுத்து அவரோடு படுக்கவைத்துக் கொண்டார். விடிந்த காலை ஜுரம் ஓடியே போய்விட்டது. இப்படி ஒரு அப்பா. அப்படி ஒரு அம்மா.
37 தாவர மூலிகைகளைப் போட்டு நல்லெண்ணையில் ஊறவைத்து அப்பா ஒரு எண்ணை செய்வார். அதுதான் ‘பருவெண்ணை’ நாள்பட்ட புண்கள் பருக்கள் கட்டிகளில், கோழிஇறகால் அந்த எண்ணையைத் தடவினால் அதிசயப்படும்படி குணமாகும். அப்பா அதற்கு காசு வாங்குவதில்லை. காசு கொடுக்க யாரும் வற்புறுத்தினால், வீரமாகாளி கோயில் உண்டியலில் அல்லது வண்ணான்குளம் தர்காவில் அல்லது மாதாகோயில் உண்டியலில் காசைப் போடச்சொல்வார். ஊரில் அப்பாவின் மதிப்புக்கும் பெயருக்கும் அந்த எண்ணையும் ஒரு காரணம்.
ஒருநாள் காலை அப்பா சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது ஒரு முருங்கைப் போத்துடன் ஒரு அம்மா வந்தார் பக்கத்து கிராமமாம். வயது 50 இருக்கும் சட்டையில்லாத உடம்பை சேலையால் போர்த்திக்கொண்டு ஒடுங்கி அப்பாவைக் கும்பிட்டார். பல மாதங்களாக ஆறாமல் இருந்த ஒரு பரு ஆறிப்போய்விட்டதாம். அதைச் சொல்வதற்காகவும் அந்த முருங்கைப் போத்தை அப்பாவுக்கு கொடுப்பதற்காகவும்தான் வந்தாராம். அடுப்படியிலேயே அவரை உட்காரவைத்து அப்பா சாப்பிடச் சொன்னார். அவர் கையாலேயே ஊன்றி வைக்கச் சொன்னார். அந்த முருங்கைப் போத்து கிடுகிடுவென்று வளர்ந்துவிட்டது. ஒவ்வொரு காயும் வீரசிவாஜியின் வாள் மாதிரி அத்தனை வனப்பு அத்தனை நீளம். காயும் கீரையும் அத்தனை ருசி. ரொம்பப் பேருக்கு அது காய்கறி இல்லாத நேரங்களில் கைகொடுத்தது.
ஒரு மழைக்காலத்தில் அந்த மரம் அடியோடு விழுந்துவிட்டது. அப்பா ஒரு போத்தை வெட்டி என்னிடம் கொடுத்து சரோஜா டீச்சர் வீட்டுக்குப்போய் கொடுக்கச் சொன்னார். அந்த சரோஜா டீச்சர்தான் எனக்கு ஆசிரியை. இரண்டு மகள்கள். சிறிய மகள் என்னோடுதான் படிக்கிறாள். மூத்த மகள் உயர்நிலைப்பள்ளியில். கணவர் இறந்துவிட்டார். மாதக்கடைசியில் என்னிடம் ஒரு துண்டுச்சீட்டுக் கொடுத்து அப்பாவிடம் கொடுக்கச் சொல்வார். யாருக்கும்
4
தெரியக்கூடாதென்பார். அதில் என்ன எழுதியிருப்பாரென்று எனக்குத் தெரியும். அப்பா அதை வாங்கிப் பார்த்துவிட்து யாருக்கும் தெரியாமல் 5 ரூபாயோ 10 ரூபாயோ கொடுப்பார். மாதம் பிறந்ததும் அந்தக் காசை டீச்சர் என்னிடமே கொடுத்து அப்பாவிடம் கொடுக்கச் சொல்வார். கஷ்டஜீவனம்தான். பாவம். அந்த டீச்சருக்குத்தான் அந்தப் போத்தை அப்பா கொடுக்கச் சொன்னார். டீச்சர் அளவுகடந்த சந்தோஷத்தில் அந்தப் போத்தை வாங்கிக்கொண்டார். எல்லாரும் சேர்ந்து அதை ஊன்றிவைத்தோம். டீச்சர் வீட்டில் நிறைய டேபிள்ரோஜா படர்ந்திருந்தது. டீச்சர் டேபிள்ரோஜா கொடியை அறுத்துக் கொடுத்தார். நான் கொண்டுவந்து வீட்டில் வைத்தேன் வீட்டு முகப்பில் படர்ந்து குட்டிக் குட்டிப் பூக்களால் சிரித்தது. தட்டான் பூச்சிகளும் வண்ணத்துப் பூச்சிகளும் அந்தப் பூக்களோடு விளையாடின. அதிகாலை வேளை அது ஒரு அலாதியான அழகு.
அக்கா பூப்படைந்துவிட்டாளாம். வீட்டில் அக்காவை ஜோடித்து உட்கார வைத்திருந்தார்கள். ஒருநாள் மதியம் முக்கியமானவர்களை மட்டும் அழைத்து அப்பா விருந்து கொடுத்தார். சரோஜா டீச்சரையும் அழைத்திருந்தார். ஒரு மல்லிகைப்பூ மாலை கொண்டுவந்து அக்காவுக்கு அணிவித்துவிட்டு அம்மாவோடு பேசிக்கொண்டிருந்தார். அப்பா அனுப்பிவைத்த முருங்கைப்போத்து, மாத இறுதியில் அப்பா செய்யும் உதவிகள் எல்லவாவற்றையும் ஒன்றுவிடாமல் அம்மாவிடம் சொல்விவிட்டு அப்பாவை ஏராளமாய்ப் புகழ்ந்துவிட்டு அவர் சென்றுவிட்டார். எல்லாரும் போய்விட்டார்கள். அந்த இரவு வீடு அமைதியாக இருந்தது. அநேகமாக எல்லாரும் தூங்கிவிட்டார்கள். எனக்கு தூக்கம் வரவில்லை. அப்பா அறையில் அம்மா கோபமாகப் பேசிக்கொண்டிருப்பது கேட்டது. நேரம் ஆக ஆக கொஞ்சம் சப்தமாகவே அம்மா பேசினார். தொடர்ந்து அம்மாதான் பேசிக்கொண்டிருந்தார். அப்பா குரலே கேட்கவில்லை. ‘அவ என்ன வப்பாட்டியா. அவளுக்கு ஏன் கைமாத்து கொடுக்கிறே. அவளுக்கு ஏன் முருங்கைப்போத்தெ அனுப்புனே’ என்று அம்மா ஒருமையில் அப்பாவை திட்டினார். எனக்கு உடம்பெல்லாம் கூசிப்போனது. பசுமரத்தில் விழும் அரிவாள் வெட்டாக அம்மாவின் தடித்த வார்த்தைகள் அப்பாவின் மீது பாய்ந்தன. ஊரே எழுந்து நின்று மரியாதை செய்யும் அப்பா அத்தனையையும் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தார். இப்படி ஒரு அப்பா. அப்படி ஒரு அம்மா. இடையே அப்பா சொன்னார். ‘நீ நினைப்பதுபோல் கபடம் இருந்தால் இத்தனையும் அந்த டீச்சர் உன்னிடம் சொல்லியிருக்கமாட்டாரே’ என்றார். ‘அந்த வேசிக்குத் தெரியாதா எல்லாத்தையும் சொன்னாத்தான் சந்தேகப்படமாட்டாங்கன்னு.’ என்று பேச்சை வேறொரு கோணத்தில் கொண்டுபோனார். டீச்சருக்கு அந்தப் பட்டத்தை அம்மா கொடுக்க தான் காரணமாகிவிட்டதை நினைத்து அப்பா கூனிக்குறுகிப் போய்விட்டார். கற்பனையிலேயே நான் அம்மாவுக்கு பயங்கரமான தண்டனைகளையெல்லாம் கொடுத்தேன். என் இயலாமையில் நான் எதுவுமே செய்யமுடியாது. ஆனாலும் முகம் கொடுத்துப் பேசவேண்டாம் என்றுமட்டும் முடிவு செய்துகொண்டேன். அதிகாலை 5 மணி. இரவு முழுக்க அப்பா தூங்கவே இல்லை. அம்மாவின் அத்தனை அம்புகளையும் நெஞ்சில் ஏந்திக்கொண்ட அப்பா வயலுக்குப் புறப்பட்டார். புறப்படும்போது அம்மாவிடம் சொன்னார். ‘நான் எதைச்செய்தாலும் அதில் நிச்சயம் உன் பாதுகாப்பும் நம் குடும்ப கௌரவமும்தான் இருக்கும். என்றாவது ஒருநாள் நீ புரிந்துகொள்வாய்’ என்றார். இப்படி ஒரு அப்பா . அப்படி ஒரு அம்மா.
அப்பாவுக்கு லேசான ரத்தஅழுத்தம் இருந்தது. அன்று இரவு அப்பா சீக்கிரமாகவே கடையிலிருந்து வந்துவிட்டார். கொஞ்சம் மயக்கமாக இருக்கிறதென்றார். பெருமாள் டாக்டர்தான் எப்போதும் அப்பாவுக்கு வைத்தியம் செய்வார். அவரை அழைத்துவரச் சொன்னார் அப்பா. கொஞ்ச நேரத்தில் பெருமாள் டாக்டரோடு நான் வந்தேன். புதிதாக
5
ஒரு ரத்தஅழுத்தம் அளக்கும் கருவி வாங்கியிருந்தார். அதைத்தான் அப்போது எடுத்துவந்திருந்தார். ரத்த அழுத்தத்தை ரொம்பவும் மிகையாகக் காட்டியது அந்தக் கருவி. ஆனாலும் அந்த அளவுக்கு அப்பாவுக்கு எந்த உபாதையும் இல்லை. கருவியில் ஏதும் கோளாறா? அளவைப்பார்த்து டாக்டர் பதறிவிட்டார் கொஞ்சம் வீரியம் அதிகமான மருந்தை உடனே ஊசியில் செலுத்தினார். ஊசி போட்ட கொஞ்ச நேரத்தில் அப்பா வெடுக்கென தலையை வலப்பக்கம் திருப்பி சாய்ந்துவிட்டார். சாய்ந்தேவிட்டார். சேதி பரவியது. வீட்டில் எழும்பிய கூக்குரலில் காகங்களெல்லாம் நடுங்கிப்போய் பறந்தன. கடைத்தெருவில் எல்லாக் கடைகளும் உடனே சாத்தப்பட்டன. கடைத்தெருவே வீட்டுக்கு வந்துவிட்டது. வயக்காட்டில் வேலை செய்தவர்களெல்லாம் அப்படிஅப்படியே போட்டுவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டார்கள். அறுத்துப்போட்ட கோழிமாதிரி சாத்தையா துடித்தார். பற்கள் கிட்டி மயக்கம்போட்டுக் கிடந்தார். அவரைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்குப் பறந்தார்கள் சிலர். லெளியூர்களிலிருந்து மக்கள் வந்து இறங்கிக்கொண்டே இருந்தார்கள். அப்பா அடிக்கடி சொல்வார். ‘கிடந்து சாகக்கூடாது. நேரம் வந்துச்சா. பட்டுன்னு போயிடனும்’ என்று. அது இவ்வளவு சீக்கிரம் நடக்குமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை.. எல்லாம் முடிந்தது.
இப்போது நான் பள்ளி இறுதி ஆண்டு. படிக்கிறேன். சாத்தையா கடையை அப்பா நடத்துவதுபோலவே நடத்திவந்தார். அப்பா நிறைய கடைகள் வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டிருந்தார். அந்த வாடகையெல்லாம் அம்மாவுக்கு நேரடியாக வந்தது. கடை வரவுசெலவும் உபரி ரொக்கமும் அம்மா கைக்கே வந்தது. அம்மாவின் வங்கிக் கணக்கு கிடுகிடுவென்று உயர்ந்தது. அதே சமயம் பெரியப்பாவும் சித்தப்பாவும் நொடித்துப் போனார்கள். அடிக்கடி அம்மாவிடம் வந்து பணம் கேட்டார்கள் ஒருநாள் பெரியப்பா வீட்டுக்கு வந்தார். ‘வீடு அடமானத்தில் இருக்கிறது. அதை மீட்கவேண்டும்’ என்று சொல்லி ஒரு பெரிய தொகையை அம்மாவிடம் கேட்டார். அவ்வளவு பணம் இல்லை என்றார் அம்மா. உட்கார்ந்திருந்த சேரை தூக்கி அடித்தார் பெரியப்பா. ‘இந்த வீடுகள் கடைகள் எல்லாவற்றிலும் எனக்கும் பங்கு இருக்கு. நான் கோர்ட்டுக்குப் போவேன். முடிஞ்சதப் பாத்துக்க’ என்று கத்திவிட்டு போய்விட்டார். சீதாராம அய்யரை உடனே அழைத்துவரச் சொன்னார் அம்மா. அந்த சீதாராம அய்யர் இல்லாமல் எந்த கொடுக்கல் வாங்கலும் செய்யமாட்டார் அப்பா. பெரியப்பா மிரட்டிவிட்டுப் போனதை அவரிடம் தெரிவித்துவிட்டால் நல்லது என்று அம்மா நினைத்தார்.
நெற்றி நிறைய குங்குமப்பொட்டு. இறுக்கிக் கட்டிய குடுமி ஒற்றை ருத்ராட்ச மாலை. அந்த மாலை தெரியும்படியாக லேசான ஒரு துண்டு. படத்தில் பார்க்கும் திருவள்ளுவர் தோற்றம். அந்த சீதாராமஅய்யர் பக்திப் பரவசமாய் வந்தார். பாய் விரித்து அவரை திண்ணையில் உட்காரவைத்தேன். அம்மா வீட்டுக்குள்ளிருந்தே பேசினார். பெரியப்பா மிரட்டிவிட்டுப் போனதைச் சொன்னார். கேட்ட மாத்திரத்தில் சீதாராமய்யர் அதிர்ந்து சிரித்ததில் குடுமி அவிழ்ந்துகொண்டது. மீண்டும் முடிந்துகொண்டார் அதக்கிவைத்திருந்த வெற்றிலை நெடியேறிக் கொண்டது. இருமினார். சிரித்துக்கொண்டே தண்ணீர் கேட்டார். வாய் கொப்பளித்தார். கொஞ்சம் குடித்தார். மீண்டும் வந்து அமர்ந்தார். என் பக்கம் விரலை நீட்டி அவர் பேசினார். ‘சாரங்கனோட அப்பா வாங்கின எல்லாச் சொத்தையும் உங்க பேருக்குத்தாம்மா பத்திரம் பண்ணியிருக்கார். இந்த வீடு மட்டும்தான் அவர் பேரில் இருந்தது. அதைக்கூட இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு உங்கள் பெயருக்கு மாற்றி பத்திரம் பண்ணிவிட்டார். எல்லாப் பத்திரங்களும் கடையில் பெட்டகத்தில் பத்திரமாக இருக்கின்றன. இவன் ஒன்றும் பு………..’ என்று சொல்லவந்தவர் உதட்டைக் கடித்துக்கொண்டு ‘செய்யமுடியாது’ என்றார். ‘நான் அவரிடம் விபரத்தைச் சொல்லி
6
எச்சரித்துவிட்டுப் போகிறேன். இனிமேல் அவர் உங்களை மிரட்டினால் போலிஸ் கேஸ் ஆக்கிவிடுவேன்’ என்று சொல்லிவிட்டு பெரியப்பா வீட்டுக்குச் சென்றார் சீதாராமய்யர். அப்பா அவருக்கு மிகுதியான மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த காரணத்தை நான் விளங்கிக்கொண்டேன்.
அன்று இரவு அம்மாவின் அறைக்குப் போனேன். ‘அம்மா’ என்றேன். ‘ஏம்பா’ என்றார். ‘அப்பா எல்லாச் சொத்தையும் உங்களுக்கே தெரியாமல் உங்களுக்கு எழுதிவைத்திருக்கிறார். ஒரு முருங்கப்போத்தக் கொடுத்துக்கு ஏம்மா அப்பாவத் திட்டினே. நீ மட்டும் அப்படித் திட்டாம இருந்திருந்தா இன்னும் பல வருஷங்கள் அப்பா நம்மலோட இருந்திருப்பாரும்மா’ என்றேன்.
பளார் பளார் என்று முகத்தில் அறைந்துகொண்டு தரையில் உருண்டு அம்மா அழுதார். ஏதேதோ புலம்பினார். எதுவும் எனக்குப் புரியவில்லை. அவருக்குள் ஏதோ ஒரு பொறி எங்கேயோ தட்டி ஏதோ ஆகியிருக்கிறது. கண்ணில் மட்டும் கண்ணீர் ஓடிக்கொண்டே இருக்கிறது. சப்தங்கள் ஓய்ந்துவிட்டன. அம்மாவிம் உதடுகள் அசையவில்லை. ‘அம்மா’ என்றேன். திரும்பிப் பார்த்தார் பேசவில்லை. ‘என்னம்மா’ என்றேன். என்னை முறைத்துப்பார்த்தார் பேசவில்லை. யாராரோ வந்தார்கள். எல்லாரும் பேசினார்கள். யாரிடமும் அம்மா பேசவில்லை. அன்றுமுதல் பேசவேயில்லை.
முப்பது ஆண்டுகள் முடிந்துவிட்டன. கடை இப்போது என் பொறுப்பில் நடக்கிறது. சாத்தையா இறந்துவிட்டார். அவர் இடத்தில் இப்போது அவர் மகன். பருவெண்ணை பார்முலா எனக்கும் தெரிந்திருந்தது. அது தொடர்கிறது. வீடு பங்களா ஆகிவிட்டது வாடகை வீடுகளெல்லாம் பெரியா காலனியாக உருமாறிவிட்டன. கடையும் மாடிமேல் மாடியாக விரிவடைந்துவிட்டது. வீட்டுக்கு முன்னால் கூர்கா. நாலைந்து கார்கள் பங்களாவுக்கு முன்புறம் அப்பாவுக்கு சிலை அமைக்க ஸ்தபதிகளிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். முப்பது ஆண்டுகளாக அம்மா பேசவேயில்லை.
யூசுப் ராவுத்தர் ரஜித்
- ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 3
- அண்டார்க்டிகாவின் பூதப்பெரும் பனிமதில் [Glacier] சரிந்து மீளா நிலைக்குத் தேய்கிறது
- “மணிக்கொடி’ – எனது முன்னுரை
- தொடாதே
- சீதாயணம் நாடகப் படக்கதை – 1 6
- இந்திய விஞ்ஞான மேதைகள் சி. ஜெயபாரதனின் நான்காவது விஞ்ஞான நூல் வெளியீடு
- ”புள்ளும் சிலம்பின காண்”
- தினம் என் பயணங்கள் – 1
- உமாமோகன் எழுதிய டார்வின் படிக்காத குருவி நூல் வெளியீட்டு விழா
- தாகூரின் கீதப் பாமாலை – 98 நீ அளித்த கொடை .. !
- கூட்டறிக்கை: சென்னைப் பல்கலைக் கழகத்தில் நிகழ்ந்த வன்முறையை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
- அத்தியாயம்-18 – ஸ்ரீ கிருஷ்ண தூது-பகுதி-2
- திருக்குறளும் தந்தை பெரியாரும்
- படிக்கலாம் வாங்க.. 2 – நூல் : இவர்களுக்கு ஏன் இல்லை கல்வி
- தூதும், தூதுவிடும் பொருள்களும்
- மருத்துவக் கட்டுரை ஹைப்போதைராய்டிசம்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை-58 ஆதாமின் பிள்ளைகள் – 3
- தாயகம் கடந்த தமிழ் – அனைத்துலக மாநாடு ஜனவரி 20, 21, 22, 2014 ஆகிய நாள்களில் கோயம்புத்தூர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில்
- கமலா இந்திரஜித் கதைகள்
- நோ செண்டிமெண்ட்ஸ் மம்மி!
- முப்பது ஆண்டுகளாகப் பேசவில்லை
- மருமகளின் மர்மம் – 12
- நவீன அரபு இலக்கியம் : எச்.பீர்முகமது நூல் அறிமுகம்
- புகழ் பெற்ற ஏழைகள் – 42
- நீங்காத நினைவுகள் – 30
- திண்ணையின் இலக்கியத் தடம் -18
- ‘ஆத்மாவின் கோலங்கள்’ – சிறுகதைத் தொகுப்பு வெளியீடு