ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 4

author
2
0 minutes, 27 seconds Read
This entry is part 9 of 18 in the series 26 ஜனவரி 2014

க்ருஷ்ணகுமார்

 

 

செல்வரிநற் கருநெடுங்கண் சீதைக் காகிச்

சினவிடையோன் சிலையிறுத்து மழுவா ளேந்தி*

வெவ்வரிநற் சிலைவாங்கி வென்றி கொண்டு

வேல்வேந்தர் பகைதடிந்த வீரன் தன்னை*

தெவ்வரஞ்சு நெடும்புரிசை யுயர்ந்த பாங்கர்த்

தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்*

எவ்வரிவெஞ் சிலைத்தடக்கை யிராமன் தன்னை

இறைஞ்சுவா ரிணையடியே யிறைஞ்சி னேனே.

 

 

5. டாக்டர் ஜே.எல்.ப்ராகிங்க்டன் அவர்களது பார்வை :-

 

க்ரிடிகல் எடிஷனில் பதிக்கப்பட்ட ராமாயணத்தை மேற்கொண்டு ஆராய்ந்து ஆய்வுக்கருத்துக்களை பதிவு செய்தவர் டாக்டர் ஜே.எல்.ப்ராகிங்க்டன் (Dr.J.L.Brockington) அவர்கள்.  ராமாயண காவ்யம் ஐந்து நிலைகளில் விரிவடைந்திருக்க வேண்டும் என இந்த ஆய்வாளர் அபிப்ராயப்படுகிறார்.

 

முதல் நிலையில் வால்மீகி முனிவரால் இயற்றப்பட்ட ராமாயண காவ்யத்தில் இன்றைக்கு புழக்கத்தில் உள்ள ராமாயணத்தில் காணப்படும் 2 – 6 காண்டங்களில் காணப்படும் ச்லோகங்கள் இயற்றப்பட்டிருக்க வேண்டும்.  இது இன்றைக்கு புழக்கத்தில் இருக்கும் ராமாயணத்தின் கிட்டத்தட்ட 37.10 சதமானமாக  இருக்கலாம் எனக் கருத்து தெரிவிக்கிறார்.

 

 

இரண்டாம் நிலையில் பாணர்கள் மனனம் செய்யப்பட்ட ராமாயண காவ்யத்தை தேச முழுதும் ப்ரசாரத்திற்கு எடுத்துச் செல்கையில் சில நிகழ்வுகளை இணைத்திருக்கலாம்.  மேலும் விவரணைகளில் அழகு கூட்டும் படிக்கு மேற்கொண்டு விரிவுகள் செய்திருக்கலாம்.  இத்துடன் ஸ்தல தேவதைகளைப் பற்றியும் அந்தந்த ஸ்தலத்தின் பூகோள வர்ணனைகளையும் இணைத்திருக்கலாம்.  பொ.மு 3 ம் நூற்றாண்டு முதல் பொ.யு 1ம் நூற்றாண்டு வரை இவ்வாறு விரிவு படுத்தப்பட்ட ராமாயணம் கிட்டத்தட்ட இரு மடங்காக (2-6 காண்டம் மட்டிலும்) மேலும் 34.05 சதமானம் அளவுக்கு ச்லோக வடிவில் விரிவடைந்திருக்க வேண்டும். வால்மீகி ராமாயணத்தில் பொதுவிலே காணப்படும் அனுஷ்டுப் சந்தஸ் என்ற பா வடிவைத் தவிர நீளமான பா வகைகளில் செய்யப்பட்ட வ்ருத்தங்களை அடக்கிய ச்லோகங்களாக மேலும் 4.27 சதமானம் இதே பகுதியைச் சார்ந்து இருக்க வேண்டும் எனத் தன் ஆய்வின் படி கருத்துத் தெரிவிக்கிறார்.   2 – 6 ம் காண்டங்களில் இவ்வாறு விரிவு படுத்தப்பட்ட ச்லோகங்களின் பட்டியலையும் பகிர்கிறார்.

 

மூன்றாம் நிலையில் அதே பொ.மு 3 ம் நூற்றாண்டு முதல் பொ.யு 1ம் நூற்றாண்டு வரையில் பல நிகழ்வுகளை உள்ளடக்கிய பகுதிகளான பால காண்டம் மற்றும் உத்தரகாண்டம் ராமாயண காவ்யத்தின் முற்சேர்க்கையாகவும் பிற்சேர்க்கையாகவும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கருத்துத் தெரிவிக்கிறார்.  இவை பல ஆசிரியர்களால் இயற்றப்பட்டிருந்தாலும் ஒன்றுடன் ஒன்று ஒரே வடிவினை ஒத்தபடிக்கு மூல காவ்யத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என அபிப்ராயப்படுகிறார்.  இந்த சேர்க்கை ராமாயண காவ்யத்தின் 24.57 சதமானமாக இருக்க வேண்டும் என கருத்துத் தெரிவிக்கிறார்.

 

அடுத்ததாக நாலாம் மற்றும் ஐந்தாம் நிலைகளை விவரிக்கிறார்.   மூன்று நிலையில் மேலே விவரிக்கப்பட்ட ராமாயணம் விரிவடைந்த பின்னர், க்ரிடிகல் எடிஷனில் நக்ஷத்ர பகுதிகள் எனவும் அனுபந்தங்கள் எனவும் சுட்டப்பட்ட பகுதிகள், மேற்கொண்டு பாடாந்தரங்கள் என்ற விரிவடையும் நிலையில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதுகிறார்.  இவற்றில் வலுவான சுவடி ஆதாரங்களுடன் இணைக்கப்பட்ட பகுதிகளை நாலாம் நிலையிலும் வலுவற்ற  ஆதாராங்களால் இணைக்கப்பட்ட பகுதிகளை ஐந்தாம் நிலையிலும் பட்டியலிடுகிறார்.

 

இந்த புதிய ஆய்வு ஒரு வகையில் க்ரிடிகல் எடிஷன் என்ற ஆய்வினை ஒட்டியும் மேலும் அதிலிருந்து முன்னகர்ந்த ஆய்வு எனச் சொல்லலாம். இந்த ஆய்வில் புதியதாக இரண்டு முதல் ஆறு காண்டங்களடங்கிய காவ்யத்தின் வளர்ச்சியையும் இரண்டு நிலைகளில் விவரிப்பது புதியதான ஆய்வுக் கூறு.

 

அப்படி இருப்பினும் கூட மூல காவ்யம் என்று கருதப்படும் நூலானது முதல் நிலையில் சுட்டப்படும் ச்லோகங்களை மட்டிலுமல்லாமல் விரிவாக்க (இடைச்செருகல் அல்ல)  நிலை என்று சுட்டப்படும் இரண்டாம் நிலை உள்ளடக்கிய ச்லோகங்களையும் கொண்டதாக இருந்திருக்க வேண்டும் என அபிப்ராயப்படுகிறார்  !!!!!

 

விரிவாக்கம் எனப்படும் இரண்டாம் நிலையில் மூன்று விஷயங்கள் சார்ந்து விரிவாக்கம் இருந்திருக்க வேண்டும் என அபிப்ராயப்படுகிறார்.

 

1. இலக்கியச் சுவையுடன் கூடிய விவரணைகள், ஸ்வபாவோக்தி விவரணைகள் எனப்படும்படியான துல்லியமாக குணாதிசயங்களை விவரிக்கும் விவரணைகள், புதிய நிகழ்வுகள் மற்றும் பழமொழிகள் என்று சொல்லத்தக்கதான வாக்யங்கள் போன்றவை முதல் விஷய விரிவு.

 

2. மஹாபாரதத்தில் காணப்படும் படிக்கான உபதேச ரீதியிலான மற்றும் நீதி சார்ந்த விஷயங்கள் இரண்டாவது விஷய விரிவு.

 

3.  பொதுவில் வால்மீகி ராமாயணத்தில் அனுஷ்டுப் சந்தஸ் என்ற எளிமையான சம்ஸ்க்ருத பா வகையில் ச்லோகங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன.  ஆயினும் ஒவ்வொரு சர்க சமாப்தியும் (சர்க்கத்தின் அறுதி ச்லோகம்) அனுஷ்டுப் என்ற சந்தஸ்ஸில் அல்லாது அதை விட நீளமான வேறொரு வ்ருத்தத்தில் செய்யப்பட்ட ச்லோகத்தில் (பா வகையில்) காணப்படும்.  இவ்வாறு சர்க சமாப்தியில் காணப்படும் வேறான வ்ருத்தங்களும் மேலும் அனுஷ்டுப் பா வகையில் அல்லாது வேறு வ்ருத்தங்களில் இயற்றப்பட்ட சர்க்கங்களும் மூன்றாவதான விஷய விரிவாகக் கருதுகிறார்.

 

இந்த வகையிலான ஆய்வு மிகவும் அடிப்படையிலான ஒரு புரிதலின்மையைக் கொண்டுள்ளது என்பதால் ஸ்ரீ ப்ராகிங்க்டன் அவர்கள் இந்த காவ்யம் ஒரே ஆசிரியரால் வடிக்கப்பட்டுள்ளது என்றில்லாது பல ஆசிரியர்களால் வடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற தவறான முடிபை எட்டச்செய்கிறது.  இந்த அறிஞர் வால்மீகியின் ஆதிகாவ்யத்தையும் அது வடிக்கப்பட ஆதாரமாய் இருந்திருக்கக் கூடிய சாத்தியக்கூறான அதற்கு சமமான அல்லது சற்றே முந்தைய காலத்திய பாணர் மற்றும் நாட்டார்பாடல்களுடன் குழப்பிக்கொள்கிறார்.   அப்படி ஒரு குழப்பத்தினை அடியொற்றி வால்மீகி ராமாயணத்தில் காணப்படும் கவிச் சுவை மிகுந்த வித்யாசமான வ்ருத்தங்கள் (பாவகைகள்) பிற்காலத்திய ஆசிரியர்களால் இயற்றப்பட்டவை (ஏனெனில் நுட்பமான பா வகைகள் சாமான்ய மக்களின் புழக்கத்தில் இருந்திருக்கவியலாது என்ற ஒரு அனுமானம்) என்றதொரு ஆய்வு முடிபை எடுக்க விழைகிறார்.  ஒரு புறம் முழு ராமாயண காவ்யமும் ஒரே வடிவுடைத்தாகியது என்ற ஆய்வுக்கூறை முன்வைத்தாலும் இந்தக் காவ்யத்தை சரியான ஆய்வாதாரங்களின் பாற்படாது செயற்கையாய் முன் தீர்மானத்தின் பாற்பாட்டு பிரிக்க விழைந்த  நிலைகள் மற்றும் துணை நிலைகளால் இவரது முயற்சி  முரண்பாடுகளுடைய மற்றும் கலைச்செறிவற்ற விளக்கங்களாலும் உருக்குலைகிறது.

 

 

பிற்காலத்தினரால் பல புதிய சேர்க்கைகளின் வழியாக ராமாயணம் என்ற காவ்யம் மொழிச்செறிவு மற்றும் உள்ளடக்கங்கள் சார்ந்த தொடர்ச்சியான விரிவாக்கங்களுக்குட்பட்டு மஹாகாவ்யம் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது என்ற கருத்தைப் முன்வைக்கிறார். ஆனால் இதற்கு முற்றிலும் மாறாக உண்மையில் எதிர்காலத்தினர் மஹாகாவ்யம் என்பது எப்படி இருக்க வேண்டும் என்று புரிந்து கொள்வதற்கான அலகீடுகளைக் கொண்ட ஒரு மாதிரிக்காவ்யமாகவே மூல ராமாயண காவ்யம் உள்ளது என்பதே அவதானிக்கத் தக்கது.

 

லக்ஷண க்ரந்தங்கள் (எடுத்துக்காட்டான படைப்புகள்) எப்படி இருக்க வேண்டும் என்பதனை லக்ஷ்ய க்ரந்தங்கள் ( படைப்புகள் இப்படி இருக்க வேண்டும் என்ற நோக்கங்கள்) முன் தீர்மானித்து அதனை அடியொற்றியே லக்ஷண க்ரந்தங்கள் வடிவமைக்கப்படுகின்றன என்பதே சாரமான கருத்து.

 

 

பிற்காலப் பாடாந்தரங்களைக் கட்டமைத்தவர்கள் ப்ராம்மண கருத்தாக்கங்களை ராமாயணத்தில் இடைச்செருகலாக நுழைத்திருக்க முடியும் என்ற கருத்தையும் இந்த அறிஞர் முன்வைக்கிறார்.  ஆனால் இவருக்கு ஒரு நூற்றாண்டு முன்னர் ராமாயண ஆராய்ச்சி செய்த ஜேக்கபி மற்றும் மேக்டொனல் என்ற இரு அறிஞர்களும் இது போன்றதொரு அபத்தமான கருத்தாக்கத்தை மறுதலிக்கிறார்கள். தர்மத்தின் படி ஒழுகுவது என்பது அரசன் மற்றும் குடிமக்கள் அனைவருக்கும் ராமாயண காலத்தில் ஆதர்சமாக இருந்த விஷயம். தர்மத்தின் படி ஒழுகும் க்ஷத்ரிய ராமன் அதர்மமான வழியில் செல்லும் ப்ராம்மண ராவணனை வதம் செய்து தர்மத்தினை நிலைநாட்டுதல் என்பதே ராம காவ்யம் சுட்டும் விஷயம்.  இப்படியான கருத்தாக்கத்தை உள்ளபடி காவ்யம் வடித்திருப்பதால் ப்ராம்மண கருத்தாக்கங்களுக்குட்பட காவ்யம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்ற முடிபை எட்டுவது விளக்கமளிக்கவியலா முரண்பாடு என்றே கொள்ளத்தக்கது.

 

மேலும் ருக்ஷர்கள், வானரர்கள் மற்றும் ராக்ஷசர்கள் போன்ற சமூஹத்தினரை  பற்பல பரிணாம வளர்ச்சிக்கட்டங்களில் இருந்திருக்ககூடிய அக்காலத்திய தக்ஷிண பாரதத்து ஆர்யரல்லா இனத்தினராக கட்டமைக்க விழைகிறார். ஹிந்துஸ்தானத்தைப் பற்றிய – இன்று செல்லாக்காசாகிப்போன – மேற்கத்திய ஆர்ய – த்ராவிட இனப்பாகுபாடு எனும் செல்லக்கோட்பாட்டின் பாற்பட்ட முன்தீர்மானத்தினை ஒட்டிய பார்வை இது.  ஒரு புறம் சமூஹத்தில்  முழுமையாக வளர்ச்சியடையா நிலையில் இவர்கள் இருப்பதாக கட்டமைக்க முயல்கிறார்.  ஆயினும் காவ்யம் இந்த விவிதமான பாத்ரங்களை முன்வைக்கும் பாங்கில் சாதாரண மானுடர்களுக்கு இல்லாத அதிசயத்தக்க சக்திகளை இவர்கள் கொண்டிருப்பதையும் அதி உன்னதமான நிலையில் இவர்களது வாழ்முறைகள் இருப்பதனை காவ்யம் சுட்டுவதையும் கூடவே அவதானிக்கிறார்.  முன்தீர்மானம் கொடுக்கும் முரண்களின் காரணத்தால் முடிபாக ஒரு கருத்தினை எட்ட இயலாது குழப்பத்தினையே எட்டுகிறார்.

 

பல நிலைகளில் இவர் ராமாயண காவ்யத்தை  பிரிக்க விழைந்தாலும் மொழியியல் குணாதிசயங்கள் சார்ந்து அல்லது காவ்ய வடிவம் சார்ந்து இந்த நிலைகள் எந்த விதத்தில் வேறுபடுகின்றன என்ற விளக்கங்களை  ஆய்வாளர் கொடுக்க இயலாததால்  இவர் பிரிக்க விழையும் நிலைகள் மற்றும் அவற்றின் கிளைகள் என்பவை செயற்கையான கட்டுமானங்களாகவே அமைவது மட்டுமில்லாது வெளிப்படையான நகைமுரண்களுக்கு இவரது ஆய்வுக்கூறுகளை எடுத்துச்செல்கிறது என்பது நோக்கத் தக்கது.  ஆகவே ஆழமான சான்றுகளால் கட்டமைக்கப்படாத ஆய்வுக்கூறுகளைக் கொண்ட இந்த ஆய்வு ராமாயண காவ்யம் உருப்பெற்றிருக்கக் கூடிய சாத்தியக்கூறுகளை விளக்கவொண்ணாது தோல்வியுறுகிறது.

 

ஹிந்துஸ்தானத்தில் எண்ணிறந்த நூற்றாண்டுகளில் மரபு சார்ந்து ராமாயண காவ்யத்தினைப்பற்றி உருவாகியுள்ள நிலைப்பாடுகள் மற்றும் பல நூற்றாண்டுகளாய்ப் பாதுகாக்கப்பட்டு வரும் —  ஏட்டுச்சுவடிகளில் பொதிந்து இருக்கும் —  ராமாயண காவ்யத்திற்கான சான்றாதாரங்களுடன் ஒப்பிடுகையில் சாரமற்று ஆழமற்று உருவகிக்கப்பட்ட ஆராய்ச்சிச் சான்றாதாரங்கள்  ராமாயண காவ்யம் உருப்பெற்றிகக் கூடிய ஆராய்ச்சி முடிபுகளை எட்டத்தக்க ஒரு அடிப்படையை அளிக்கவில்லை என்பதே நோக்கத்தக்கது.

 

 

 

விதேச மற்றும் ஹிந்துஸ்தான அறிஞர் பெருமக்கள் பலர் ராமாயண காவ்யத்தை ஆராய்ந்திருந்தாலும் ஒரு திண்ணமான முடிவை இவர்கள் எட்டவில்லை என்பதே நோக்கத் தக்கது.  மேற்கொண்டு இந்த காவ்யத்தை ஆராய்பவர்கள் புதிய ஆய்வு முடிபுகளை ஒருக்கால் எட்டலாம்.

 

சம்ஸ்க்ருத பாஷையில் வீரம் போற்றும் கவிதைகள் (Heroic Poetry) என்ற அலகீடுகளைக் கொண்ட காவ்யங்கள் மிகக் குறிப்பாகக் காணக்கிட்டவில்லை எனினும் வால்மீகி ராமாயணம் இந்த அலகீடுகளுடன் முற்றுமாக ஒத்துப்போகும் ஒரு அபூர்வ காவ்யம் என்பது நோக்கத்தக்கது. நவீன அறிஞர்கள் ராமாயண காவ்யத்தினை இலக்கியச் செறிவுள்ள ஒரு காவ்யமாக அணுக விழைந்தாலும்  அதே சமயம் இந்த காவ்யத்தில் பொதிந்துள்ள சௌர்யம் (வீரம்) போற்றும் பாங்கு ஒரே காவ்யம் இரண்டு அபூர்வமான குணாதிசயங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளமையைக் காட்டுகிறது என்றால் மிகையாகாது.

 

 

மற்றெந்த  வீரக்கவிதைகள் போன்றே ராமாயண காவ்யமும் மானுடஇனத்தொன்மையை (anthropocentric) உள்வாங்கிய ஒரு காவ்யமாக உள்ளது. பல கடவுட்களை வழிபடும் மற்றெந்த சமயத்தைப்போலவே இந்த வீர காவ்யத்திலும்  காவ்யம் முன்னகர்கையில் பல தேவர்களின் வருகை காவ்யத்தில் காணப்படுகின்றது.  ஆனால் இவர்கள் யாரும் காவ்யத்தின் மையக்கரு இல்லை.  ராமாயண காவ்யத்தின் மையக்கரு காவ்யத்தின் கதாநாயகனான தர்மத்தின் உருவான ராமபிரான். ராமாயண காவ்யத்தின் ஆதியில் பாலகாண்டத்தில் நாரத வால்மீகி சம்வாதத்தில் (உரையாடலில்) விவரிக்கப்பட்டபடி இந்தக் காவ்யத்தின் கதாநாயகன் எண்ணிறந்த குணாதிசயங்களைத் தன்னகத்தே கொண்ட ஒரு அபூர்வ மனிதன்.  மனிதர்களிடம் பொதுவிலே சாமான்யமாகக் காணப்படாத அபூர்வமான குணாதிசயங்களைத் தன்னகத்தே கொண்ட படிக்கு ராமன் என்ற கதாநாயகன் வியப்பினை அளிக்கக் கூடிய கதாநாயகன். வீரக்கவிதைகளில் பாடப்படும் கதாநாயகர்கள் சாமான்ய மனிதர்களிடமிருந்து வேறுபட்டு மிகவும் உன்னதமாய் வடிக்கப்படுவதால் வாசகர்கள் அவர்களை முழுதும் மனிதனாக மட்டிலும் அவதானிக்க இயலாது அவர்கள் பால் சொல்லில் வடிக்கவியலா தெய்வீகத்தைக் கண்டு வியப்புறுதல் வெள்ளிடைமலை.  ஆகவே ரிக்வேதத்திற்கு பிந்தைய காலத்தில் வடிக்கப்பட்ட ராமாயண காவ்யத்தில் வால்மீகி முனிவர் அரசனாகிய ராமபிரானை விஷ்ணுவின் அவதாரமாக முன்வைப்பது என்பது அவ்வாறு காவ்யம் வடிக்கப்பட்ட காலத்திய மரபுகளை அடியொற்றிய ஒரு செயல்பாடே என்பது அவதானிக்கத் தக்கது.

 

அப்படி இருப்பினும் வால்மீகி முனிவர் ராமபிரானின் தெய்வீகத்தன்மைகளையோ அல்லது இயற்கையைக்கடந்த தன்மைகளையோ மிக அபூர்வமாகவே காண்பிக்கிறார் என்றாலும் பொதுவிலே உயர்ந்த குணங்களைத் தன்னகத்தே கொண்ட உன்னத மனிதனாகவே காண்பிக்கிறார் என்பது நோக்கத்தகுந்தது.  ஆகவே காவ்யத்தின் எந்தெந்தப் பகுதிகளில் ராமபிரானை விஷ்ணுவின் அவதாரமாகக் காண்பிக்கிறாரோ அப்பகுதிகளைச் சந்தேகக் கண்கொண்டு நோக்குவதோ அல்லது அதை அலகீடாகக் கொண்டு அப்பகுதிகளை இடைச்செருகல் என்று நிராகரிக்க விழைவதோ தர்க்கபூர்வமானதன்று.

 

சாகசங்களை உள்ளடக்கிய நிகழ்வுகள் மூலம் உயர்வான கௌரவத்தை நிலைநாட்டல் என்ற அக்காலத்திய நடைமுறைகளை சொல்லில் வடிக்கும் முயற்சி இந்தக் காவ்யம்.  இது போன்ற சாஹச நிகழ்வுகள் தேசத்தின் அக்காலகட்டத்திய ஆதர்சமான பொதுமனோநிலையை அடியொற்றி இருப்பதனால் இவை காலங்காலமாக மரபு சார்ந்து மிகுந்த முனைப்புடன் பாதுக்காக்கப்பட்டு வந்துள்ளது என்பது வியப்பளிக்காது.

 

வால்மீகி முனிவர் காவ்யம் வடித்த காலத்தில் காவ்யத்தினை எழுத்தில் வடிக்கும் படிக்கான வாய்ப்புகள் இருந்திருந்தனவா என்பது தெரியாவிட்டாலும் இந்தக் காவ்யம் வாய்மொழியாக கேட்பவர் முன் சொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. வாய்மொழியாக சொல்லப்படும் ஒரு காவ்யத்தைக் கேட்பவர்கள் முழுதுமாக உள்வாங்க வேண்டி விவிதமான கருவிகளும் உபாயங்களும் கையாளப்பட வேண்டியது அவசியம்.  சொல்லப்படும் இடம் மற்றும் சொல்லப்படும் மக்கள் இவற்றிற்கு ஏற்றபடி கருவிகளும் உபாயங்களும் வேறுபடலாம். ஆனால் உள்ளார்ந்த நோக்கம் கேழ்க்கும் ச்ரோதாக்கள் (கேழ்ப்பவர்கள்)  சொல்லக்கூடிய விஷயத்தை முழுதுமாக உள்வாங்க வேண்டும் என்பதே.

 

காவ்யத்தில்  தேவர்கள் மற்றும் முனிவர்களின் வருகை ஹனுமான் போன்ற பாத்ரங்களின் அமானுஷ்யமான சாஹசங்கள் போன்றவை கேழ்ப்பவர்கள் சலிப்பின்றி காவ்யத்தில் ஒன்றி காவ்யத்தினை கேழ்க்க வைக்கும் ஒரு உத்தி எனக் கொள்ளலாம்.  அரசவையில் முனிவர்கள் மற்றும் ராஜகுமாரர்களின் வருகை, வீராவேச மிகுந்த பேச்சுக்கள், ஆர்ப்பரிக்கும் வசைமாரிகள், கதாநாயகர்கள் அவ்வப்போது தர்மத்தினை நிலைநிறுத்தவேண்டி நிகழ்த்தும் சாஹசங்கள்,  வானரர்கள் மற்றும் ராக்ஷசர்கள் தங்கள் உருவினை நினைத்தபோது நினைத்தபடி மாற்றிக்கொள்ளுதல் மற்றும் மஹேந்த்ரஜாலங்கள் நிகழ்த்துதல் போன்று காவ்யத்தில் தொடர்ச்சியாக காண்பிக்கப்படும் இது போன்ற நிகழ்வுகள் இந்த உத்தியை அடியொற்றி என்பது நோக்கத் தகுந்தது.

 

 

காவ்யத்தைக் கேழ்ப்பவர்கள் இது போன்ற நிகழ்வுகளில்  நம்பிக்கை வைத்திருப்பதால் இவை காவ்யத்தில் உபயோகிக்கப்படும் என அவர்கள் எதிர்ப்பார்ப்பது இயல்பே. அது மட்டுமின்றி இது போன்ற உத்திகள் கையாளப்படுவது கேழ்ப்பவர்களுக்குப் பழக்கமான ஒரு உத்தியே என்பதும் கவி இது போன்ற உத்திகளைத் திறமையாகக் கையாளும் போது ச்ரோதாக்கள் (கேழ்ப்பவர்கள்) இவற்றை உகப்புடன் விதந்தோதுகிறார்கள் என்பதும் நோக்கத் தக்கது. இது போன்ற உத்திகளை வால்மீகி முனிவரின் காவ்யம் படைக்கப்பெற்ற காலத்தில் இருந்திருக்கக்கூடிய கலாசார இலக்கிய சூழ்நிலையில் ஒரு அங்கமாகக் கருதவேண்டுமேயல்லாது நமது தற்காலத்திய அளவுகோல்களின் படி இவற்றைப் புரிந்து கொள்ள விழைந்து இவற்றைச் சந்தேகக் கண்ணுடன் காணவோ அல்லது  தற்கால அளவுகோல்களை அலகீடாகக் கொண்டு நிராகரணம் செய்யவோ புகக் கூடாது.

 

வால்மீகி முனிவரின் ராமாயண காவ்யம் வாய்மொழிப்படைப்பாகப் படைக்கப்பட்டது என்பது மட்டுமின்றி பற்பல நூற்றாண்டுகளாக இந்தப் படைப்பு வாய்மொழியாகவே பாதுகாக்கப்பட்டது என்பதும் கவனத்துடன் நோக்கத் தகுந்தது.  பொதுவிலே இது போன்ற படைப்புகள் சிற்சில இடங்களில் சிற்சில குடும்பத்தினரால் ப்ரசாரம் செய்யப்பட்டு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு பயிற்றுவிக்கப்பட்டு வந்திருக்க வேண்டும். அவ்வாறு அடுத்தடுத்து உள்வாங்கப்படுகையில் பெரும்பாலும் ஆதாரமான வடிவம் அப்படியே பாதுகாக்கப்பட்டு வரினும் பற்பல நகரங்களிலும் தேசத்தின் பற்பல பகுதிகளுக்கும் இப்படிப் பாரம்பர்யமான வாய்மொழியான காவ்ய ப்ரசாரம் ப்ரயாணம் செய்கையில் காலதேச வர்த்தமானங்களில் மாறுபடும் மரபுகள் சம்ப்ரதாயங்கள் சார்ந்து காவ்யம் வேறுபாடுகளுக்கும் உள்ளாவது இயற்கையே.

 

இது வால்மீகி ராமாயண காவ்யத்தில் பற்பல நூற்றாண்டுகளில் நிகழ்ந்திருக்க வேண்டும் என அனுமானிக்க இயலும்.  பற்பல பாடாந்தரங்களிலும் அதன் கிளைகளிலும் காணப்படும் ஒற்றுமை மற்றும் வேற்றுமைகள் இது போன்ற சாத்தியக்கூறுகளாலேயே விளக்கப்பட இயலும். நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின் இந்த ஒற்றுமை வேற்றுமைகளை அவதானிக்க விழையும் போது சில அடிப்படைகளைப் புரிந்து கொள்ளல் அவசியமானது.

 

அவையாவன :-

 

1.  மஹாபாரதத்தைப் போலன்றி வால்மீகி ராமாயண காவ்யமுழுதும் ஒரே வடிவில் அமைந்தமை காணத் தக்கது. இன்று வரை இக்காவ்யம் ஒரே ஆசிரியரால் இயற்றப்பட்டது என்றே ஏற்கப்படுகிறது. அடிப்படையான இக்கூற்றுகள் இக்காவ்யம்  சில அல்லது பல அல்லது முழுமையான திட்டமிடப்பட்ட மாறுதல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்ற சாத்தியக்கூறுகள் மறுதலிக்கப்பட ஹேதுவாக இருக்கிறது. அகச்சான்று மற்றும் புறச்சான்றுகளை வைத்து ஆராய்கையில் பாலகாண்டம் மற்றும் உத்தரகாண்டம் போன்றவை பிற்சேர்க்கையாக இருக்கவியலாது மாறாக  மூல வால்மீகி ராமாயண காவ்யத்தின் அபின்ன அங்கமாகவே இருக்க வேண்டும் என்பது இங்கு அலசப்பட்ட ஆய்வுக்கூறுகளால் தெளிவாகிறது.

 

2. ராமாயண காவ்யத்தில் காணப்படும் தனிச் சர்க்கங்களை அல்லது அத்யாயங்களை இவை ஒட்டு மொத்த ராமாயண காவ்யத்தின் ஒட்டுமொத்த  கதைக்கரு மற்றும் வடிவத்தின் ஒரு பகுதி என்றும் ஒட்டுமொத்த காவ்யத்தினுடைய கலைநுட்பத்தின் ஒரு அங்கம் என்றும் கதை சொல்லப்படும் காலகட்டத்தின் கலாசாரப் பின்னணியில் உறையும் ஒரு நிகழ்வு என்று அவதானிக்க வேண்டும்.  அவ்வாறு இல்லாது இவற்றை தனித்த ஒரு பகுதியாக ஆய்வுக்கு உட்படுத்துவது தவறான ஆய்வுக்கூறாகி தவறான முடிபுக்கு இட்டுச்செல்லும்.  மேலும் இந்தப் பகுதிகளை அக்காலகட்டத்திய அல்லது அக்காலகட்டத்துக்கு முந்தைய இலக்கியங்களில் சொல்லப்படும் விஷயங்களுடன் அவதானிப்பதும் முறையான ஆய்வின் பாற்பட்டதாகும்.

 

அதுபோன்றே காவ்யத்தின் இலக்கண முறைபாடுகள், வாசக அமைப்புகள் மற்றும் கையாளப்பட்ட விவித வ்ருத்தங்கள் (பா வகைகள்) போன்றவை அக்கால கட்டத்தியதாக இருக்குமெனில் அதற்குச் சான்றாக  விதிவிலக்கான அபூர்வமான சான்றுகள் கிடைத்தாலும் கூட அவற்றை மூலராமாயணத்தின் அங்கமாகவே கருதுதல் சரியாகும். ராமாயண காவ்யத்தில் இது விஷயமாக காணப்படும் சிறு சிறு வேறுபாடுகளை அவ்வாறு காணப்படும் பகுதிகளைக் களைய காரணியாக முன்வைத்தல் சரியாகாது.

 

வானரர்கள், ராக்ஷஸர்கள், ஆர்யர்கள் போன்றவர்களை அவதானிக்க விழைகையிலும் இவர்களின் சமூஹ மற்றும் அரசியல்  நிலைப்பாடுகளையும் மேற்சொன்ன அலகீடுகள் சார்ந்து ஒட்டு மொத்த காவ்யத்தில் முன்வைக்கப்படும் ஒரு சித்திரமாகவே அணுகவேண்டுமேயல்லாது தனிப்பட்ட பகுதிகளில் சொல்லப்படுவதற்கு ஏற்ப அல்ல.

 

3. மிக முக்யமாக அவதானிக்கப்பட வேண்டிய விஷயம் வால்மீகி ராமாயண காவ்யம் பல நூற்றாண்டுகளாக வாய்மொழி ப்ரசார முறையிலேயே பாதுகாக்கப்பட்டது என்பது.  பல நூற்றாண்டுகள் இவ்வாறான வாய்மொழிப் புழக்கத்தில் இக்காவ்யம் இருந்த பின்பே எழுத்தில் வடிக்கப்பட்டது என்பது நோக்கத் தக்கது.  இவ்வாறு பல நூற்றாண்டுகள் தேசத்தில் பற்பல பகுதிகளில் பற்பல மாந்தர்களால் இந்தக் காவ்யம் பாதுகாக்கப்பட்டு வருகையில் புதிய சேர்க்கைகள் மற்றும் இடைச்செருகள் போன்றவற்றிற்கு எப்படி சாத்தியக்கூறுகள் உள்ளனவோ அதே அளவு சாத்தியக்கூறுகள் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள பகுதிகள் புழக்கத்திலிருந்து மறைவதற்கும் உண்டு என்பதனை ஏற்றல் மிகவும் முக்யம். ஒரு பாடாந்தரத்தில் காணப்படும் ஒரு விஷயம் மற்றொரு பாடாந்தரத்தில் காணப்படுவதில்லை என்பதனை அலகீடாகக் கொண்டு அதிகமாகக் காணப்படும் ஒரு விஷயத்தை நிராகரணம் செய்யப் புகலாகாது என்பதனை இந்த அலகீடு சுட்டுவதாக எடுத்துக்கொள்ளலாம்.

 

நிறைவுரை :-

 

இதுகாறும் அறிஞர் பெருமக்கள் பலரும் வால்மீகி ராமாயணம் என்ற நூல் எவ்வாறு உருவாக்கப்பட்டுப் பின் எவ்வாறு விரிவாக்கம் பெற்றது என்ற தங்கள் கருத்தினைப் பகிர்ந்ததைப் பார்த்தோம். ஒரு முழுமைப் பார்வையில் வால்மீகி ராமாயண காவ்யம் என்ற பெயரில் இன்று புழக்கத்தில் இருக்கும் நூலில் இடைச்செருகல்களும் இருக்க வாய்ப்புண்டு என்பது ஏற்கத்தகுந்த விஷயம்.

 

ஹிந்துஸ்தானத்தின் காலக்கணக்கிடவியலா மரபு சார்ந்த அறிவு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு வாய்மொழியாகவே பகிரப்பட்டது என்பது ஹிந்துஸ்தானியர் அறிந்த விஷயம்.  வேதங்கள், புராணங்கள் மற்றும் இதிஹாசங்களான ராமாயணம் மற்றும் மஹாபாரதமும் பல்லாயிரக்கணக்கான வருஷங்கள் இவ்வாறே பயிற்றுவிக்கப்பட்டிருக்க வேண்டும்.  நூற்களை எழுத்தில் வடிக்கும் முறை ப்ரபலமாகும் காலத்தில் மற்றெந்த நூற்களைப் போன்று ராமாயண காவ்யமும் எழுத்தில் வடிக்கப்பட்டிருக்க வேண்டும்.

 

தேச முழுதும் ப்ரசாரத்தில் இருந்த ராமாயண காவ்யத்தில் பல பாடாந்தரங்கள் புழக்கத்தில் இருந்திருந்ததைக் கண்டோம்.  இவற்றில் மிக அதிக பக்ஷமாக மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமாக ஒரு பாடாந்தரம் மற்றும் வேறான மற்றொரு பாடாந்தரத்துக்கும் வேறுபாடுகள் இருந்ததை அறிஞர்கள் பகிர்ந்ததையும் பார்த்தோம்.  அப்படியானால் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பாடாந்தரங்களின் இடையே ஒற்றுமையும் இருப்பதையும் கவனிக்க வேண்டும்.

 

வால்மீகி ராமாயணம் என்ற மூல காவ்யத்தின் கதைக்கரு மற்றும் ஒட்டு மொத்த வடிவம் தேச முழுதும் ஒரே படிக்கு மக்களால் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே விவிதமான ஆய்வுகள் ஒட்டுமொத்தமாகக் காண்பிக்கும் சித்திரம் என்றால் மிகையாகாது.  எந்த ஒரு ஆய்வாளரும் ஒட்டு மொத்த ராமாயணக் கதைக்கரு என்ற விஷயத்தை மறுதலிக்கும் படிக்கான ஒரு ஆய்வு முடிவை முன்வைக்கவில்லை என்பது நோக்கத் தக்கது.

 

வேறுபாடுகள் என்பவை குறிப்பிட்ட நிகழ்வுகளை வடிக்கும் வகையில் தான் என்பதே அவதானிக்கத் தக்கது.  எடுத்துக்காட்டாக ராவணன் சீதாபிராட்டியை லங்காபுரிக்கு கவர்ந்து சென்றான் என்பது எல்லா பாடாந்தரங்களிலும் ராமாயண காவ்யத்தின் கதைக்கருவாக காணக்கிட்டுவது.  ஒரு பாடாந்தரத்தில் சீதாபிராட்டியின் கேசத்தை பிடித்து இழுத்து தன் விமானத்தில் ஏற்றி கவர்ந்து சென்றான் என்றிருக்கலாம்.  மற்றொன்றில் சீதா பிராட்டி நின்றிருந்த இடத்தை பூமியுடன் பெயர்த்து சீதையைக் கவர்ந்து சென்றான் என்று இருக்கலாம்.  சூர்ப்பணகை ராமபிரானிடம் ஆசைமிகக்கொண்டு அவனை விவாஹம் செய்ய உத்தேசித்து பஞ்சவடி வந்தாள் என்பது எல்லா பாடாந்தரத்திலும் காணக்கிட்டும் விஷயம்.  பஹுரூபியான அவளது சுயரூபம் குரூபமானதா பொலிவு மிக்கதா என்பது பாடாந்தரங்களில் வேறுபாட்டுடன் வடிக்கப்பட்டிருக்கலாம்.

 

ஒட்டு மொத்த ஆய்வுகளையும் ஆய்வாளர்களின் பார்வைகளையும் அவற்றில் உள்ள நிறைகுறைகள் மற்றும் குறைகளுக்கு வைக்கப்படும் சமாதானங்கள் இவற்றை முழுமையாகப் பார்க்கையில் அறிவியல் பூர்வமாக ஆய்வு நிகழ்த்திய ஆய்வாளர்களது பார்வைக்கும் மரபாளர்களது பார்வைக்கும் இடையே மிகப்பெரிய வித்யாசம் இல்லை என்பதும் புலனாகிறது.

 

வால்மீகி முனிவரால் வடிக்கப்பட்ட மூல ராமாயணம்  —  ஹிந்துஸ்தான முழுதும் ஒரே படிக்கு —  தேசத்து மாந்தர்களால் அவரவரது பாஷைகளிலும் சம்ஸ்க்ருத பாஷையிலும் வாசித்து அனுபவிக்கப் படுகிறது என்பது நோக்கத் தகுந்த விஷயம்.

 

ஸ்ரீ ராமஜெயம்

 

ஜகம் புகழும் புண்யகதை ராமனின் கதையே

அதை செவி குளிரப்பாடிடுவோம் கேளுங்கள் இதையே

 

 

வன்பெருவா னகமுய்ய அமர ருய்ய

 

மண்ணுய்ய மண்ணுலகில் மனிச ருய்ய

 

துன்பமிகு துயரகல அயர்வொன் றில்லாச்

 

சுகம்வளர அகமகிழுந் தொண்டர் வாழ*

 

அன்பொடுதென் திசைநோக்கிப் பள்ளி கொள்ளும்

 

அணியரங்கன் திருமுற்றத்து* அடியார் தங்கள்

 

இன்பமிகு பெருங்குழுவு கண்டு யானும்

 

இசைந்துடனே யென்றுகொலோ விருக்கும் நாளே?

 

குலசேகராழ்வார்

 

 

உருகியு மாடிப் பாடியு மிருகழல் நாடிச் சூடியு

முணர்வினோ டூடிக் கூடியும் …… வழிபாடுற்

 

றுலகினொ ராசைப் பாடற நிலைபெறு ஞானத் தாலினி

யுனதடி யாரைச் சேர்வது …… மொருநாளே

 

வள்ளல் அருணகிரிப்பெருமான்

 

Series Navigationஜாக்கி சான் 25. திறமையைக் கண்டு கொண்ட இயக்குநர்தினம் என் பயணங்கள் – 2
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    paandiyan says:

    நன்றி க்ருஷ்ணகுமார். விதண்டாவாதம் புரிந்தவர்களுக்கு மிக்க ஆதாரத்துடான், தெளிவாக பதில் கொடுத்தமைக்கு நன்றி

  2. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    நன்றி ஸ்ரீமான் பாண்டியன். ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்களுடைய முதலாவதான ஒரே ஒரு பொய்ப்பரப்புரை மட்டிலும் ஆய்வாளர்கள் கருத்து சார்ந்து மறுதலிக்கப்பட்டுள்ளது. அன்பர் அவர்களுடைய ஆதாரமற்ற ஹிந்துமதக்காழ்ப்புக் கருத்துக்கள் , போலிப்பகுத்தறிவுப் பரப்புரை, போலி மதசார்பின்மை கருத்துக்கள், வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்படாத கருத்துக்களை சொல்லியதான பிறழ்வுப் பரப்புரைகள் போன்றவை தொடர இருக்கும் வ்யாசத் தொடரில் அம்பலப்படுத்தப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *