தினம் என் பயணங்கள் – 3

This entry is part 1 of 22 in the series 2 பெப்ருவரி 2014

 

வாழ்க்கை என்பது ஒரு நூதனப் போராட்டம். அதில் எப்போது மகிழ்ச்சி வரும், எப்போது  துக்கம் வரும் என்று தெரிவதில்லை. ஒவ்வொரு நிகழ்வும் ஒரு அனுபவப் பாடத்தை நடத்தி செல்லும். அதிலிருந்து ஆயிரம் விடங்களை கற்றுக் கொள்ளலாம். அல்லது துவண்டு போய் வாழ்க்கையை இழந்தும் விடலாம். எதிர்கொள்ளத் துணிவில்லாமல் போகும் போது குழப்பங்கள் இரத்தம் உறிஞ்சும் அட்டையாய் ஒட்டிக் கொள்வது உண்டு.

06.03.2013 புதன்கிழமை அன்று திருவண்ணாமலை செல்வதென்று நான் முடிவெடுத்திருந்தேன். எனது நண்பரான ஷமீர் அகமதுவிற்கு திருவண்ணாமலையில் ஏதும் வேலை யிருப்பின் என்னுடன் வரும்படி கூறினேன். இதற்கு முன்பும் நாங்கள் இப்படி பயணித்தது உண்டு. கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு பிறகு மீண்டும் திருவண்ணாமலை பயணம். இதில் இரண்டு முக்கிய காரியங்கள் நான் முடிக்க வேண்டியிருந்தது.

1. ஓர் ஏலாத முஸ்லீம் பெரியவருக்கு நான் மூன்று சக்கர வாகனம் வாங்கித் தருவதாக வாக்களித்திருந்தேன். அதைக் கொண்டு வந்து அவரிடம் சேர்ப்பது.

2. எனக்கு மூன்று சக்கர மோட்டார் வாகனம் வேண்டி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பம் தருவது

நாங்கள் எப்பொழுதும் பயணிக்கும் ஆட்டோவின் டிரைவர் சவுதி போனபிறகு நாங்கள் எங்கும் பயணிக்க வில்லை. ஒவ்வொரு பயணத்தின் போதும் ஒரு புதிய அறிமுகத்தை ஏற்படுத்திக் கொள்வோம். போன பயணத்தின் போது தமிழரசி எங்களுக்கு நட்பானாள். அவளை டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத சென்ற போது கண்டுபிடித்தோம். தற்போது அவள் அந்த தேர்வில் தேர்ச்சி பெற்று திமிறியில் தட்டச்சராகப் பணிபுரிகிறாள். அவளும் எங்களைப் போன்று ஏலாத மாற்றுத் திறனாளி தான். அவளைத் தூக்க முடியாமல் அவளுடைய அண்ணா சிரமப்பட்ட போது ஷமீர் அழுது விட்டான். எனக்கு அப்பொழுது எதுவும் தோன்ற வில்லை. என்னையும் என் தம்பியோ அப்பாவோ அல்லது நட்பு வட்டத்தில் யாரேனுமோ படிகளில் ஏறும் போதும், வெகு தூரம் நடக்கும் போதும் தூக்கிச் செல்வதுண்டு.  ஆனால் அவன் கண்ணீரைப் பார்த்த போது அன்று என் கண்களும் கலங்கித்தான் போனது.

 

ஒற்றைக் காலில் ஊன்று கோல்களுடன் படியேற இயலாமல், பஸ் ஏற முடியாமல் போனதால் [பிளஸ் 2] என் பி.யூ,சி. தேர்வுகளை எழுத முடியாமல் போனது.  எனக்கு ஆண்டவன் அறிவைக் கொடுத்தும், படிக்க ஆர்வம் அளித்தும், முடிக்க வாய்ப்புகள் இருந்தும் என்னால் கல்லூரிப் படிப்பு இயலாமல் போனது மனதை மிகவும் வருத்தமுறச் செய்கிறது.  இப்படி ஏலாதவர், இயலாதவர் என்னைப் போல் இருப்பவர் பலர் எனக்கு நண்பர் !

 

எங்களோடு வருகிற ஆட்டோ டிரைவர்களும் அந்த பயணத்தின் போது எங்களோடு நட்பாகி விடுவார்கள். இந்த முறை நாங்கள் ஆட்டோ விற்காக அலைந்த போதுதான். ஆட்டோ நண்பரான முபாரக் எங்கள் பயணத்தில் எத்தனை முக்கியமானவராக இருந்திருக்கிறார் என்பது புரிந்தது.

 

ஷமீர்தான் எப்படியோ ஒரு ஆட்டோவை அழைத்துக் கொண்டு வந்தான். பயணத்தின் போது எனக்காக சோத்து மூட்டையை தூக்கி வருவது அவனின் வாடிக்கை.

அந்த ஆட்டோவில் சென்று நாங்கள் என் மூன்று சைக்கிள் வாகனத்தை மேலே கட்டி வருவதற்காக கயிறு வாங்கி கொண்டு கொஞ்சம் தூரம் தான் போய் இருப்போம். அதற்குள் அந்த ஆட்டோ டிரைவருக்கு ஒரு அலைபேசி அழைப்பு, ஆர்டிஓ வருவதாக. மன்னிப்பு கேட்டு வேறு ஆட்டோவில் மாற்றி விட்டார். வேறு ஆட்டோ மாறி ஏறுவது ஷமீருக்கு இலகுவாக இருந்த போதும், எனக்கு மிகவும் சிரம்மாகவே இருந்தது.

நாங்கள் செங்கமில் இருந்து திருவண்ணாமலைச் சாலையில் கரிய மங்கலம் கடந்த போது லேசாக தூரியது. மழை எனக்கு பிடிக்கும் என்பதால் என் கைகளைத் தூரலில் நனைத்தபடி வந்தேன். தூரல் பெரு மழையாகியது. அந்த நேரத்தில் சாலையில் வெண் குமிழ்கள் விழுந்து வழிந்தது. ஒரு இடத்தில் ஆட்டோ தன் வேகத்தை இழந்து ஊர்ந்தது. சாலையோரங்களில் எல்லா மரங்களும் வெட்டப்பட்டுச் சாலை அகலப் படுத்தப்பட்டு நிர்வாணமாய் நின்றது.

 

எங்கள் எதிர்சாரியில் வந்த ஒரு இருசக்கர வாகனத்தின் விளக்கு எரிந்த படி வர, விளக்கு எரிகிறது என்று சொன்னபோது எனக்கு தெரியும் என்று விட்டுப் போனார்கள். எனக்கு தான் பெரிய பல்ப். எதிரில் வரும் வாகனத்திற்கு இந்த வாகனம் தெரிவேண்டும் என்பதற்காக விளக்கை போட்டபடிச் செல்கிறார் களாம். ஆட்டோ டிரைவர் சொன்னார்.

 

மாற்று திறனாளிகள் நல அலுவலகத்திற்குள் நுழையும் போதே ஷமீரிடம் சொன்னேன் இன்றும் ஒரு நட்பு நமக்காக காத்திருக்கிறது என்று.

வளாகத்தில் கொட்டப்பட்டிருந்த மணற் பரப்பின் போடப்பட்டிருந்த சிமெண்ட் இருக்கையின் மேல் அவன் அமர்ந்திருந்தான். ஷமீர் வாய மூடிக்கிட்டு வாங்கன்னு சொன்னதால நான் அலுவலரை பார்க்க சென்றேன். எங்களின் துரதிர்ஷ்டம் அலுவலர் முகாம் சென்று விட்டாராம்.

விண்ணப்பங்களை போடும்படி ஒரு அட்டைப் பெட்டியை காண்பித்தார்கள் அங்கிருந்தவர்கள்.

 

அட்டைப் பெட்டியில் போடுவதற்கு எனக்கு தான் மனமில்லை. என் தயக்கத்தைப் பார்த்த அந்த அலுவலர் விண்ணப்பத்தைப் பெற்று சம்பந்தப்பட்ட அதிகாரியின் மேசையில் வைத்தார். மூன்று சக்கர மிதிவண்டியும் தீர்ந்துபோய் விட்டதாம்.

ஒரு வெறுமை இதயத்தில் குடிகொண்டு விட்டது. வெளியில் வந்த போது வாயிலில் போடப்பட்டிருந்த பெஞ்சில் ஒருவர் அமர்ந்திருந்தார்.  மனைவிக்கு லோன் வாங்குவதற்கு வந்திருப்பதாக அவர் கூறினார்.

காதல் திருமணமாம். ஒரு குழந்தை. என்ன குழந்தை என்று கேட்க மறந்து விட்டேன். காதலைப் பற்றியதான என் கருத்து லேசாய் ஆட்டம் கண்டது. அழகைப் பார்த்து காதல் வரும் என்று எண்ணி யிருந்தேன். அழகுக்கும் காதலுக்கும் தொடர் பில்லை என்று தோன்றியது இப்போது எனக்கு.

 

அவர்களிடம் விடைபெற்ற பிறகுதான். அலுவலகத்தில் நுழையும் போதே நட்பாக வேண்டும் என்று சொன்ன அவரைச் சந்தித்தோம். குடத்தி லிருந்து தண்ணீர் எடுத்து வாட்டர்கேனில் ஊற்றிக் கொண்டிருந்தார். நாங்கள் அறிமுகம் செய்து கொண்டோம்.

நான் தமிழ்ச்செல்வி

நான் ஷமீர் அகமத்

நான் பாக்கியராஜ்.

நான் தாலுக்கா ஆபிஸ்ல ஒர்க் பண்றேன்

நான் பிடிஓ ஆபிஸ்ல

நான் பிஎச்டி பண்றேன்.

அவ்வளவுதான் எங்கள் அறிமுகம் முடிந்தது.  எம்எல்ஏ நிதியிலிருந்து சைக்கிள் தர்றாங்க வாங்க நான் எப்போ முகாம்னு பார்த்து சொல்றேன். என்று நோட்டிஸ் போர்டில் பார்த்த போது எடுத்த படம்.

வாங்க பஸ்டாண்டில் விடறேன் என்றவரிடம் அலைபேசி எண் பரிமாற்றங் களோடு விடைபெற்றுக் கொண்டோம்.

வெளியில் வந்து ஆட்டோவில் அமர்ந்த பிறகு ஒரு ஜோடி  கார்த்திக் – சாந்தி இதில் சாந்தி மாற்றுத் திறனாளி. இருவரும் காதலர்கள். அவர்களிடமும் அறிமுகமாகி அலைபேசி எண்ணோடு விடைபெற்றோம்..
திருவண்ணாமலையிலிருந்து செங்கம் செல்லும் போது வழியில் பிரியாணி வாங்கினோம்.  பௌர்ணமி அன்று பேருந்து நிற்கும் அந்த இடத்தில் தான் அமர்ந்து உணவருந்தினோம்.

பிரியாணி வாங்கும் போதே தயங்கிய ஆட்டோ டிரைவரிடம் உங்களுக்கும் சேர்த்து வாங்குவதாக இருந்தால் வாங்குங்கள். இல்லை என்றால் வீட்டிற்கே போய் விடலாம் என்றதில் அவர் நெகிழ்ந்து போனார் என்பது பிறகு தெரிந்தது. ஷமீரும் டிரைவரும் பிரியாணியை ஒரு பிடி பிடிக்க, ஷமீரின் அம்மா எனக்காக கொடுத்திருந்த சாதம் & கீரைக் குழம்பை நான் உண்டேன் அம்மாவின் அன்போடு.

இந்த பயணம் நான் எதிர்பார்த்த எதையும் நடத்தி தரவில்லை என்றாலும். என்னை போன்ற மாற்றுத் திறனாளிகளின் மனதைப் படிக்க ஒரு வாய்ப்பாக அமைந்தது.

 

எந்த பயணியும் உங்களைப் போன்று என்னோடு நட்பை பரிமாறியதில்லை என்று ஆழ்ந்த நெகிழ்வோடு வீட்டில் விட்டு விடைபெற்றார் ஆட்டோ டிரைவர். அதன் பிறகு ஷமீரும்.

 

[தொடரும்]

Series Navigationஜோதிர்லதா கிரிஜாவின் “மாறாத மனிதர்கள்”சூரிய மண்டலத்தில் பூமியை நெருங்கச் சுற்றித் திரியும் மூர்க்க முரண் கோள்கள் [Rogue Asteroids]வால்ட் விட்மன் வசனக் கவிதை – 60 ஆதாமின் பிள்ளைகள் – 3சீதாயணம் நாடகப் படக்கதை – 18
author

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

Similar Posts

2 Comments

  1. Avatar
    ஷாலி says:

    //வாழ்க்கை என்பது ஒரு நூதனப் போராட்டம். அதில் எப்போது மகிழ்ச்சி வரும், எப்போது துக்கம் வரும் என்று தெரிவதில்லை. ஒவ்வொரு நிகழ்வும் ஒரு அனுபவப் பாடத்தை நடத்தி செல்லும். அதிலிருந்து ஆயிரம் விடங்களை கற்றுக் கொள்ளலாம்.//

    வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
    வாசல் தோறும் வேதனை இருக்கும்.

    வந்த துன்பம் எதுவென்றாலும்
    வாடி நின்றால் ஓடுவதில்லை!

    எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
    இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்!

    ஏழை மனதை மாளிகையாக்கி
    இரவும் பகலும் காவியம் பாடு!

    நாளை பொழுதை இறைவனுக்களித்து
    நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு!

    உனக்கும் கீழே உள்ளவர் கோடி
    நினைத்து பார்த்து நிம்மதி நாடு!

    மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா
    வாழ்க்கையில் நடுக்கமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *