ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-25 கர்ணனின் வீழ்ச்சி

This entry is part 6 of 24 in the series 9 மார்ச் 2014

 

துரோணருடைய மகன் அசுவத்தாமன் இறந்ததாக பொய்யானத் தகவல் அளித்து அவரை மோசமான முறையில் திசை திருப்பிய அதே கவிஞன்தான் பாண்டவர் முகாமில் அர்ஜுனன் ஒருவன்தான் நேர்மையான வீரன் என்ற சித்திரத்தைத் தீட்டுகிறான். யுதிஷ்டிரன், பீமன், ஸ்ரீகிருஷ்ணர் அளவிற்குப் பொய் பேசாததால் அர்ஜுனன் அவர்களைவிடச் சிறந்தவன் என்று சித்தரிக்கப்படுகிறான். இருப்பினும் அடுத்து வருகின்ற நிகழ்ச்சியின் மூலம் அவனுடைய நிலை மிக மோசமாகச் சித்தரிக்கப் படுகிறது. அவன் ஓர் உயரியச் சத்திரியன் என்ற நிலையிலிருந்து சடாரென்று கீழே இறக்கப் படுகின்றான். இந்த நிகழ்ச்சியில் அர்ஜுனன் ஒரு முட்டாளைப் போலவும், ஒரு காட்டுமிராண்டியைப் போலவும் நடந்து கொள்வதாகக் காட்டப் படுகிறான். ஸ்ரீகிருஷ்ணர் அவனைச் சமாதானப் படுத்தி மீண்டும் ஒரு சகஜ நிலைக்குக் கொண்டுவர முயற்சிக்கிறார். அந்த நிகழ்ச்சியை மகாபாரதத்தை இயற்றியக் கவிஞர் இவ்வாறு விவரிக்கிறார்.

துரோணரின் மரணத்திற்குப் பின்னர் கௌரவர்களின் படைத் தலைமையைக் கர்ணன் ஏற்றுக் கொள்கிறான்.அவனுடைய தோள் வலிமையும் வில்லின் ஆற்றலும் பாண்டவர்களை நிலை குலையச் செய்கிறது. ஒரு சமயம் யுதிஷ்டிரருக்கும் அவனுக்கும் நடைபெறும் யுத்தத்தில் கர்ணன் அவருடன் கடுமையாகப் போரிட்டு அவரைக் குற்றுயிரும் கொலையுயிருமாக ஆக்கிவிடுகிறான். படு காயமடையும் யுதிஷ்டிரர் பாசறைக்குத் திரும்பிப் படுக்கையில் வீழ்ந்து கிடக்கிறார். வேறொரு இடத்தில் யுத்தம் புரியும் அர்ஜுனன் அருகில் யுதிஷ்டிரர் இல்லாததை அறிந்துக் கலவரப் படுகிறான் .கவலையுடன் பாசறைக்குத் திரும்பும் அர்ஜுனன் அங்கு யுதிஷ்டிரர் படுக்கையில் கிடப்பதைக் கண்டு மனம் சமாதானம் கொள்கிறான். அர்ஜுனன் கர்ணன் வீழ்ந்தான் என்ற செய்தியைக் கொண்டு வருவான் என்று யுதிஷ்டிரர் ஆவலுடன் காத்திருக்க அப்படி ஒரு செய்தியைக் கொண்டு வராத அர்ஜுனன் மேல் சீற்றம் கொள்கிறார். அர்ஜுனன் ஒன்றுக்கும் இலாயக்கிலாதவன் என்று ஏசுகிறார். எந்த ஒரு செயலையும் தான் முன்னின்று நடத்தாமல் ஒரு கோழையைப் போல அடுத்தவரைக் கொண்டு நடத்திக் கொள்வது தருமனுக்கு இயல்புதான். அர்ஜுனனை ஏசிக் கொணடே வரும் யுதிஷ்டிரர் இறுதியாக “ உன் காண்டீபத்தைக் கீழே போடு. அதைத் தரிக்க உனக்கு யோக்கியதை இல்லை. ஸ்ரீகிருஷ்ணரிடம் உன் காண்டீபத்தைக் கொடுத்து விடு “  என்கிறார். அர்ஜுனன் தன்மானம் மிக்கவன். தன் சொந்த சகோதரனிடமிருந்து கூட ஒரு சுடு சொல் தரியாதவன்  மேலும் அர்ஜுனன் தன் இளவயதில் தன்னுடையக் காண்டீபத்தைப் பழித்துப் பேசுபவர்களைக் கொன்று விடுவதாகச் சபதம் எடுத்திருக்கிறான்.  “ காண்டீபத்தை ஏந்த எனக்குத் தகுதியில்லை என்று ஏளனம் செய்பவர் என் சகோதரராக இருந்தாலும்  அவர்கள் தலையைக் கொய்து விடுவேன். “என்கிறான்

ஸ்ரீகிருஷ்ணர் அவனைத் தடுத்து இனிய வார்த்தைகளைக் கூறிச் சமாதானம் செய்கிறார். இந்த இடத்தில்தான் ஸ்ரீகிருஷ்ணர் தான் ஸ்தாபிக்க நினைக்கும் தர்மத்தின் சாராம்சத்தைக் கூறுகிறார்.” அகிம்சை ஒன்றுதான் அனைத்து இலட்சியங்களிலும் உயர்ந்த இலட்சியம். அகிம்சையைக் கடைபிடிப்பது என்பது ஒரு மனிதனுக்கு அவனுடைய சபதத்தை நிறைவேற்றுவதை விட முக்கியமானது. அகிம்சை சத்தியத்தைக் கடைப்பிடிப்பதை விடச் சிறந்தது. “ என்கிறார். நற்குணங்களுக்கு ஒரு பட்டியல் தயாரித்தால் அகிம்சை என்பது சத்தியத்தையும் முந்திக் கொண்டு முன்னால் நிற்கும். “ என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். மற்ற நல்ல காரியங்களான தானம், தவம், பக்தி, தூய்மை போன்றவை சத்தியத்திற்கு அடுத்த நிலையிலேயே இருக்கின்றன என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

ஸ்ரீகிருஷ்ணரின் இந்த வாதத்தை எதிர்த்து தீர்மானமான வாதங்களை முன் வைக்க முடியும். முதல் வாதமாக நாம் முன் வைப்பது எவராலும் அனைத்து நேரங்களிலும் எல்லா இடங்களிலும் அகிம்சையைக் கடைப் பிடிக்க முடியாது என்பதாகும். இரண்டாவது வாதம் ஸ்ரீகிருஷ்ணரே பகவத்கீதை மூலம் அர்ஜுனனை வன்முறைக்கு இட்டுச் செல்கிறார்.

அகிம்சையின் உட்பொருளை நன்கு அறிந்து கொண்டால் எதிர்வாதங்கள் எழுவதற்குச் சாத்தியமில்லை. வாழ்வின் நெறிப்படி நம்மால் ஒரு நொடிகூட இன்னொரு உயிரினத்தைக் கொல்லாமல்  வாழ முடியாது. நாம் நீர் அருந்துபொழுதும், உணவு சமைக்கும்பொழுதும், காற்றை சுவாசிக்கும்பொழுதும் நாம் பல்லாயிரக் கணக்கில் நுண்ணுயிர்களைக் கொன்ற வண்ணம் இருக்கிறோம்.நாம் வன்முறையைத் தவிர்த்து அகிம்சை வழியில் செல்ல நினைத்தால் கூட இதை நம்மால் தவிர்க்க முடியாது. அதே போல் ஒரு விஷ நாகத்தைக்  கொல்லும்பொழுது ஒரு வன்முறையாளராக நாம் மாறுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் தேவையின்றி வன்முறைச் செயல்;களில் ஈடுபடுவது அதர்மமாகும்.

ஸ்ரீகிருஷ்ணரின் அகிம்சை குறித்த விடாத முயற்சியினால் அர்ஜுனன் தன் தவறை உணர்ந்து வாளை மீண்டும் உறையில் போடுகிறான். அர்ஜுனன் தான் எடுத்த சபதத்தை நிறைவேற்றும் பொருட்டு  அவன் தருமனைக் கொல்ல முயலும்பொழுது ஸ்ரீகிருஷ்ணர் அவனைச் சமாதானம் செய்யும் விதமாக தர்ம சாஸ்திரங்களின்படி நமது முன்னோர்கள் தர்மத்தை எங்கனம் பார்க்கின்றனர் என்று எடுத்துரைக்கிறார்.” ஒருவன் சத்தியத்தை உரைப்பது நலம்.சத்தியத்தை விட மேலானது எதுவும் இல்லை. இருப்பினும் எந்த ஒரு இடத்தில் பொய் மெய்யின் பயனைத் தருமோ மெய் பொய்யின் பயனைத் தருமோ அந்த இடத்தில் மெய்யானது சொல்லத் தகாததாக இருக்கும். பொய்யானது சொல்லத் தக்கதாக இருக்கும். “ என்கிறார்.

அந்தக் காலத்தில் நிலைபெற்றிருந்த தர்ம சாஸ்திரங்களுக்கு எதிராக ஸ்ரீகிருஷ்ணர் செயல்பட்டதில்லை. அவர் கூட காரியம், அக்காரியம், மெய், பொய் ஆகியவை, அவை வெளிப்படும் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்பப் பின்னப் பட்டுள்ளன என்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் மெய்யாக இருப்பது இன்னொரு சந்தர்ப்பத்தில் பொய்யாக இருக்கும். ஸ்மிருதிகளில் கூறியுள்ளபடி எது தர்மம் எது அதர்மம் என்று பகுத்தாராய வேண்டும் என்கிறார். இருப்பினும் ஸ்ரீகிருஷ்ணர் தனி மனித தீர்மானத்திற்கு அதிக அழுத்தம் கொடுக்கிறார். தர்ம சாஸ்திரங்களை நூல் பிடிப்பதுபோல் கடை பிடிக்க வேண்டும்

என்பதற்குக் கூட அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஒவ்வொருவரும் தமது பகுத்தறிவைக் கொண்டு தர்மம் எது என்பதைத் தீர்மானிக்க வேண்டும் என்கிறார்.

மேலும் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். “ தர்மம்தான் இந்த உலகில் சகல ஜீவராசிகளையும் உயிருடன் வாழ வைக்கிறது “ என்கிறார். ஸ்ரீகிருஷ்ணரின் பார்வையின்படி ஒரு மனிதன் தன்னுடைய அக்கம்பக்கம் நடப்பவற்றைக் கூர்ந்து கவனித்து எவை இந்த மனித குலத்தை வாழச் செய்கிறது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த ஒழுங்கமைவைக் காப்பாற்றுவதே ஒரு மனிதனின் தலையாயக் கடமையாகும் என்கிறார்.

சுருங்கச் சொல்வதென்றால் ஸ்ரீகிருஷ்ணர் போதித்த தர்மம் ஒரு பயனீட்டுவாதத்தை அடிப்படையாகக் கொண்ட தர்மம். அதன் இறுதியானதும் எதார்த்தமானதுமான இலக்கு ல் மனித குலத்தின் பாதுகாப்பும், நலனும், அக்கறையும் மட்டுமே.

இளம்பருவத்தில் சிறுபிள்ளைத்தனமாக அர்ஜுனன் எடுத்துக் கொண்ட சபதத்தை நிறைவேற்றும் பொருட்டு தன் சொந்த சகோதரனையேக் கொல்லவேண்டிய அவசியமில்லை என்று கூறி ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனை சமாதானம் செய்கிறார்.. இருந்த போதிலும் பிறப்பால் சத்திரியனாக பிறந்து, சத்திரிய குல நெறிகளில் வளர்ந்த ஒருவன் தனது சபதம் நிறைவேறாமல் போகும்பொழுது தனது உயிரை விடவும் தயங்க மாட்டான். வாக்குத் தவறுவது என்பது அர்ஜுனனைப் பொறுத்த வரையில் தற்கொலை செய்துகொள்வதற்குச் சமமாகும்.. உரையிலிருந்து உருவிய வாளுக்கு வேலை கொடுக்காமலும் தன் வாக்கினைக் காப்பாற்ற முடியாமலும் அவன் சங்கடத்தில் நெளிகிறான். இதற்கும் ஸ்ரீ கிருஷ்ணரிடம் ஒரு உபாயம் உள்ளது. அவர் கூறுகிறார். “ ஒரு கண்ணியமான மனிதனை ஒருமையில் அவமரியாதையாக அழைப்பது என்பது அவனைக் கொல்வதற்குச் சமமாகும்.எனவே நீ யுதிஷ்டிரரை ஒருமையில் அழைத்து அவமானப் படுத்து. சுடு சொற்களால் அவரைச் சாகடி. “ என்கிறார்.

உடனே அர்ஜுனன் தருமரை வாய்க்கு வந்தபடியெல்லாம் ஏசுகிறான். சிறிது நேரத்திலேயே தனது தவறை உணர்ந்து வருத்தப் படுகிறான். தன் அண்ணனைக் கடிந்து கொண்டதன் அவமானம் தாங்காமல் மீண்டும் வாளை உருவித் தன்னை மாய்த்துக் கொள்ள முயல்கிறான். இதற்கும் ஸ்ரீகிருஷ்ணரிடம் உபாயம் இருக்கிறது. ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். “அர்ஜுனா! உன்னை நீயே தற்புகழ்ச்சியாகப் புகழ்ந்து கொள். ஒருவன் தன்னைத் தானே புகழ்ந்து கொள்வது தற்கொலை செய்து கொள்வதற்குச் சமமாகும். “ என்கிறார். உடனே அர்ஜுனன் தன் சுய பெருமைகளை ஒரு பட்டியலிட்டுத் தன்னைப் போல் எவனுமில்லை என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறான்.அவன் மனம் சமநிலை அடைகிறது.அதன் பிறகே அவனது ஆவேசம் தணிகிறது.

ஸ்ரீகிருஷ்ணரை நாம் அர்ஜுனனின் சாரதியாக மட்டும் பார்க்கவில்லை. அவர் அடிக்கடி அவனது அந்தரங்க ஆலோசகராவும் வழிகாட்டியாகவும் மாறுகிறார். போர்க் களத்தில் போர்த்தந்திரங்களைக்  கற்றுக் கொடுக்கும் குருவாகவும் விளங்குகிறார்.

கூடாரத்தை விட்டுப் போர்க்களத்திற்குத் திரும்பும் அர்ஜுனனை ஸ்ரீகிருஷ்ணர் கர்ணன் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறார். இந்த சமயமே அர்ஜுனன் கர்ணனைக் கொல்வதற்கு ஏதுவான சமயம் என்பதால் அவர் தேரினை கர்ணன் இருக்கும் பக்கமாகக் கொண்டு செல்கிறார்.

கர்ணனின் மரணம் வரும் பகுதி மகாபாரதத்தின் மிக முக்கியமானப் பகுதியாகும். இதுகாறும் உள்ள பர்வங்களையும் அதில் உள்ள அத்தியாயங்களையும் இயற்றியக் கவிஞர்கள் ஒரு மேடையை அமைத்து அதில் கர்ணனின் முடிவை அரங்கேற்ற உள்ளனர். கர்ணன் மிகத் திறமை பெற்ற வில்லாளி. அர்ஜுனனுக்கு நிகரான வில்வித்தை அறிந்தவன். அர்ஜுனனின் நேர் எதிரி. தானே தனியாகக் கர்ணன் கற்றுக் கொண்ட வில்வித்தை துரோணரைப் பொறுத்தவரையில் அர்ஜுனன் தவிர்த்த மற்ற பாண்டவ சகோதர்கள் கற்றுக் கொண்ட வில்வித்தையினைக் காட்டிலும் அதிகம். அர்ஜுனன் துரோணரின் சீடன் என்றால் கர்ணன் துரோணரின் குருவான பரசுராமனின் சீடன். அர்ஜுனன் காண்டீபம் என்ற மிகச் சிறந்த வில்லைத் தாங்கியவன். கர்ணன் தரித்த வில்லின் பெயர் விஜயம்.அந்த விஜய வில் காண்டீபத்தை விடச் சிறந்தது. ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனின் தேரோட்டி என்றால் மகாரதனான சல்லியன் கர்ணனின் தேரோட்டி.. இருவரும் அதாவது அர்ஜுனனும் கர்ணனும் ஒருவரை ஒருவர் கொல்லாமல் விடுவதில்லை என்று சபதம் எடுத்துக் கொண்டுள்ளவர்கள். அர்ஜுனன் எவ்வித பதற்றமுமின்றி பீஷ்மரையும், துரோணரையும் வீழ்த்தி விடுகிறான். கர்ணனை வதம் செய்ய வேண்டும் என்ற அவனது வெறி அதன் உச்சத்தை எட்டுகிறது. இதற்கு முன்பே குந்தி கர்ணனைத் தனிமையில் சந்தித்துத் தான்தான் அவனது தாய் என்ற உண்மையினை உரைத்துப் போரில் அவன் பாண்டவர்களை மாய்க்கக் கூடாது என்று வரம் கேட்கிறாள்.  அதற்குக் கர்ணன் அர்ஜுனனைத் தவிர மற்ற நால்வரையும் கொல்வதில்லை என்று சத்தியம் செய்து கொடுக்கிறான். ஒன்று தன்னால் அர்ஜுனனுக்கோ அல்லது அர்ஜுனனால் தனக்கோ மரணம் நிச்சயம் என்று உறுதிபடக் கூறி விடுகிறான்.

இப்படி ஒரு சந்தர்ப்பத்திற்குக் காத்திருந்த ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனைக் கர்ணனை வதம் செய்யும் பொருட்டு அவன் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறார். சொல்லப் போனால் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனை யுதிஷ்டிரர் படுத்திருக்கும் பாசறைக்கு அழைத்து வந்ததற்கு ஒரு காரணம் உள்ளது. உண்மையில் அர்ஜுனனுக்குப் போர்க்களத்தைத் துறந்து மீண்டும் பாசறைக்குப் போகும் எண்ணமே அப்பொழுது இல்லை. யுதிஷ்டிரர் போர்க்களத்தில் இல்லை என்பதை ஒரு சாக்காக வைத்து அர்ஜுனனைப் பாசறைக்கு அழைத்துச் செல்கிறார். தொடர்ந்து போரிட்டதால் அவனுக்கு சிறிது ஒய்வு தேவை என்பதை உணர்ந்ததால் அவனைப் பாசறைக்குத் கொண்டுவ  வருகிறார். புத்துணர்வு பெற்று அர்ஜுனன் போர்க்களத்திற்குச் சென்றால் கர்ணனை அழிக்க ஏதுவாக இருக்கும் என்பதால் அவ்வாறு செய்கிறார். மேலும் பாசறையிலிருந்துப் போர்க்களத்திற்குப் போகும்பொழுது அர்ஜுனனின் வெற்றிகளைப் பட்டியலிட்டு அவனை வானளாவப் புகழ்கிறார். கர்ணனைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது அவன் அபிமன்யுவை எப்படி ஒரு சிறுவன் என்றும் பாராமல் போரில் கொன்ற விதத்தையும், பாஞ்சாலியை ஒரு பெண் என்றும் பாராமல் கௌரவர்கள் சபையினில் அவமானப் படுத்தியதையும் குறிப்பிடுகிறார்.

ஸ்ரீகிருஷ்ணர் அப்பொழுது அர்ஜுனனுடன் ஆற்றிய முழு உரையை நான் இப்பொழுது பகிர்ந்து  கொள்ள வரவில்லை. என்றாலும் ஒரு சுவாரசியமான விஷயத்தைக் கூறிக் கொள்ள விரும்பகிறேன். அவருடைய உரை முழுவதிலும் அவர் அடிக்கடி மகா விஷ்ணு தானவர்களைக் கொன்றதைப் போன்று, மகாவிஷ்ணு தைத்யர்களைக் கொன்றதைப் போல என்ற உதாரணங்களை அவர் உரையினில் குறிப்பிடுகிறார். இதிலிருந்து ஸ்ரீகிருஷ்ணர் தானும் மகாவிஷ்ணுவும் வேறு வேறு அடையாளங்கள் என்பதைத் தெளிவுப் படுத்துகிறார். இதிலிருந்து நமக்குத் தெளிவாகத் தெரிவது என்னவென்றால் இந்தப் பகுதி மகாபாரதத்தின் மூலப் பகுதி என்பதும், ஸ்ரீகிருஷ்ணர் ஒரு சாதாரண மானுடர் என்றும் அவர் கடவுளின் அவதாரம் இல்லை என்பதும் தெளிவாகிறது.

மீண்டும் கர்ணனும் அர்ஜுனனும் நேருக்கு நேராக மோதிக் கொள்கின்றனர். போர் உக்கிரம் அடைந்த நிலையில் கர்ணன் தனது நாகாஸ்திரத்தை அர்ஜுனன் மேல் பிரயோகிக்கிறான். ஸ்ரீகிருஷ்ணர் மிக வேகமாகச் செயலாற்றி அர்ஜுனனின் தேரை நிலத்தில் அழுத்தி விடுகிறார். எனவே அந்த நாகாஸ்திரம் அர்ஜுனனைத் தாக்குவதற்குப் பதில் அவன் கிரீடத்தைச் சேதப் படுத்தி விட்டுச் செல்கிறது. மற்ற ஏனையப் பகுதிகளுடன் இந்தப் பகுதியிலும் ஸ்ரீகிருஷ்ணர் ஒரு சிறந்த தேரோட்டி என்பது தெளிவாக்கப் பட்டுள்ளது இங்கே உற்று நோக்கப் பட வேண்டிய விஷயம்.

பதினேழாம் நாள் யுத்தத்தின் முடிவில்கர்ணனின் தேர் சக்கரம் மண்ணில் புதைந்து விடுகிறது. கர்ணன் கீழே இறங்கி தேரை மண்ணிலிருந்து மீட்கும் நிர்பந்தத்திற்கு ஆளாகிறான். அர்ஜுனனும் கர்ணன் சக்கரத்தை வெளியில் எடுத்துத் தேரைச் செலுத்தும் வரையில் காத்திருக்கிறான். ஏன் எனில் அந்தக் காலப் போர் விதிகளின் படி இரண்டு போர் வீரர்களும் அவர்கள் இரதங்களுக்குப் பழுது நேர்ந்தால் பழுது செப்பனிடப் பட்டு இரதங்கள் ஓடும் நிலைக்கு வந்த பின்னரே போர் புரியத் தொடங்க வேண்டும் என்பதாகும். கர்ணனின் துரதிர்ஷ்டம் காரணமாகவோ என்னவோ ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனிடம் போர்க் கடமைகளை ஆற்றச் சொல்லாமல் அவன் கர்ணனைக் கொல்வதர்கானக் கடப்பாட்டினைச் சுட்டிக் காட்டி கர்ண சக்கரத்தைச் சரி செய்து கொண்டிருக்கும்பொழுதே அவன் மீது அம்பு எய்தச் சொல்லுகிறார்.

இந்த நேரத்தில் ஸ்ரீகிருஷ்ணர் கர்ணன் தன் வாழ்நாளில்’ செய்த அதர்மங்களை அர்ஜுனனுக்குப் பட்டியலிடுகிறார். இதன் நோக்கம் கர்ணனைத் தளர்த்துவதும் அர்ஜுனனை ஊக்கப் படுத்துவதுமே ஆகும். ஒற்றை வஸ்திரம் அணித திரௌபதியை  கௌரவர் சபைக்கு இழுத்து வரச் சொன்னபொழுதும், சத்திதீட்டம் தட்டப் பட்டு மாய சூதில் பாண்டவர்கள் தோற்கடிக்கப் பட்ட போதும், பீமனைக் கொல்வதற்கு விஷம் வைக்கச் சொல்லி துரியோதனனைத்ன் தூண்டிய போதும், பாண்டவர்களை வனவாசத்தின்போது  அரக்கு மாளிகையில் வைத்துக் கொள்ள திட்டமிட்டபோதும், சின்னஞ்சிறு பாலகனான அபிமன்யுவை எவ்விதப் போர் தர்மங்களும் இல்லாமல் நூறு பேர் சூழ்ந்து கொன்றபோதும் கர்ணனுக்குத் தோன்றாத தர்மம் இப்பொழுது மட்டும் தோன்றியதன் காரணத்தை ஸ்ரீகிருஷ்ணர் வினவுகிறார். இத்தனை அதர்மங்களுக்கு உடந்தையாக இருந்த கர்ணன் இப்பொழுது தேர்ச் சக்கரம் மாட்டிக் கொண்டதற்கு மட்டும் அர்ஜுனனிடம் தர்மம் குறித்துப் பேசியதற்கு ஸ்ரீகிருஷ்ணர் பெரும் ஆவேசப் படுகிறார். கர்ணனிடம் பதில் இல்லை. தளி கவிழ்கிறான்.மீண்டும் போர் துவங்கும்போழுது கர்ணனிடம் பழைய உத்வேகம் இல்லை. அர்ஜுனன் தன் கணைகளால் கர்ணனை வீழ்த்துகிறான்.

*********************************************************

Series Navigation
author

சத்தியப்பிரியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *