(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை)
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
50.அமெரிக்காவின் கவிதை மேதையாகத் திகழ்ந்த ஏழை………
என்னங்க பேப்பரும் கையுமா என்னமோ எழுத ஒக்காந்துட்டீங்க… என்னது கவிதை எழுதப் போறீங்களா… திடீர்னு என்னாச்சுங்க ஒங்களுக்கு…. என்ன நான்தான் கவிதை எழுதக் கத்துத்தரணுமா…,இங்க பாருங்க கவிதைங்கறது கத்துக்கிட்டு வர்ரதில்ல…அது தன்னாலேயே வர்ரது…பாரதிகூட,
“உள்ளத்து உள்ளது கவிதை
இன்ப ஊற்றெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில்
உண்மை தெரிந்துரைப்பது கவிதை….”
அப்படின்னு சொல்லிருக்காரு..
யாருமே பிறக்கும்போது கவிஞனாப் பிறக்கறது இல்ல…ஒருத்தன காலந்தான் கவிஞனா உருவாக்குது…காலந்தான் எல்லா மாற்றத்தையும் செய்யுது…அதோடு முயற்சியுந்தான்…முயற்சியும் உழைப்பும் சேர்ரபோது அவன் மற்றவங்களுக்கு வழிகாட்டியா விளங்குகிறான். அனுபவம் வரவர அவ்வனுபவம் பல்வேறு விதங்கள்ள வெளிப்படுது…சிலர் கவிஞராகவும், சிலர் தத்துவ அறிஞராகவும் ஆகிடறாங்க…
அப்படி உருவானவருதான் நான் போனவாரம் ஒங்ககிட்டே கேட்டேன்ல அந்தக் கேள்விக்குரிய ஒருத்தரு…என்ன கண்டுபிடுச்சிட்டீங்களா…அட ஆமா சரியாச் சொல்லீட்டீங்க… அமெரிக்காவுல மக்களாட்சிக்கு ஆதரவா குரல் கொடுத்தவரு புத்திலக்கியச் சிற்பி என்றும் புரட்சிக் கவி என்றும் அழைக்கப்பட்டவரு அவருதான் வால்ட்விட்மன்… அவர வேதாந்தி அப்படீன்னும் சொல்வாங்க… பாட்டாளி வர்க்க மக்களுக்காகக் கவிதைகள் எழுதினாரு…
அவரப் பத்தி ஒங்களுக்குத் தெரியுமா…? என்னது கொஞ்சந்தான் தெரியுமா.. பரவாயில்லே…நான் சொல்றேன் கேட்டுக்கோங்க….வால்ட்விட்
விவசாயியின் மகன்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழ்ந்த எழுத்தாளர்களுள் வால்ட் விட்மனும் ஒருவர். அவர் எமர்ஸன், தோரோ போன்ற தத்துவ ஞானிகளின் வழிவந்தவர். எனினும் அவர் எழுதிய கவிதை நடையும். அவற்றின் கருத்துக்களும் அவருடைய காலத்து எழுத்தாளர்களாலும்,அவருக்குப்பி
பொருளற்ற கட்டுப்பாடுகளுக்கு உட்பட விரும்பாத அவரது இயல்பான போக்கே அதற்குக் காரணமாகும். அவர் வாழ்க்கை எண்ணற்ற சோதனைகட்கு உள்ளானது. ஏதோ சில கடும் உணர்ச்சிகளால் உந்தப்பட்டு பிறருடைய பாராட்டுக்கோ, பழிப்புரைக்கோ செவிசாய்க்காமல் தம் மனம் போன போக்கில் சென்றார் வால்ட் விட்மன்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த வால்ட் விட்மன் 1819 – ஆம் ஆண்டு நியூ இங்கிலாந்தில் லாங் ஐலண்டில் (Long Island) ஒரு ஏழை விவசாயியின் மகனாகப் பிறந்தார். இளம் வயதில் பள்ளி செல்வதற்குரிய வாய்ப்புகள் அவருக்கு மிகக் குறைவாகவே இருந்தது. வாழ்க்கையை நடத்துவதற்கே மிகுந்த துன்பத்திற்களானதால் விட்மனை அவரது தந்தையால் சரியாகப் பள்ளிக்கு அனுப்பிப் படிக்க வைக்க முடியவில்லை. அவருக்கு 11 வயதானபோது வீட்டில் ஏற்பட்ட வறுமை காரணமாக அவரது தந்தையார் அவரை வேலைக்கு அனுப்புவதற்காக அவரைப் பள்ளியிலிருந்து நிறுத்தினார். இந்நிலையில் வாழ்க்கையை நடத்துவதற்குரிய பொருளாதாரத்தைத் தேடும் சூழ்நிலை விட்மனுக்கு ஏற்பட்டது. அதனால் அவர் வழக்கறிஞர் ஒருவரிடம் பணியாளாகச் சேர்ந்து வேலை பார்த்தார். அதன் பின்னர் ஒரு அச்சகத்தில் அச்சுக்கோப்பாளராகச் சேர்ந்து வேலைபார்த்தார். அவரது 17 வயதில் பள்ளி ஆசிரியராகச் சில காலம் வேலை செய்தார். 27 ஆவது வயதில் புரூக்லின் நாளிதழின் ஆசிரியரானார்.
கவிஞர் விட்மன்
அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்நாட்டுப் போர் நடைபெற்றபொழுது போர்க்கால பத்திரிக்கையாளராகவும் விட்மன் செயலாற்றினார். இச்சமயத்தில் தான் விட்மனின் கவிதைப் புலமை வெளிப்படலாயிற்று. பள்ளிப்படிப்போ வால்ட் விட்மனுக்கு அதிகம் கிடையாது. அவருக்குத் தானாக ஏற்பட்ட அனுபவ அறிவே கவிதையாகப் பரிணமித்தது. ஆனால் அவர் எழுதிய கவிதைகள் அவரை இலக்கியத் திறனாய்வாளர்களின் வசை மொழிக்கு இலக்காக்கின. இருப்பினும் அவர் அவற்றைப் பொருட்படுத்தாது புரட்சிகரமான பல கவிதைகளை எழுதினார்.
கவிதை என்பது அர்த்தமற்ற கட்டுப்பாடுகளிடையே சிக்கித் திணறும் சொற்கூட்டமன்று ; கற்பனை சிறந்த உள்ளத்தில் பொங்கி எழும் உணர்வுகளை எழுத்துக்கள் மூலம் வெளிப்படுத்துவதே கவிதையாகும். ஆத்மாவைவும் உள்ளுணர்ச்சியையும் கவிதையின் மூலம் வெளிப்படுத்தும்பொழுது இலக்கணக் கட்டுப்பாடுகட்கு இடமளித்து அதனைச் சீர்குலைத்து விடக்கூடாது என்பது விட்மனின் கருத்தாகும். அவர் எழுதிய “புல்லின் இலைகள்” (Leaves of grass) என்ற கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டபொழுது, தொன்மைவாத இலக்கியப் பற்றுடையவர்கள் அதனை ஒரு புரட்சி இலக்கியமாகப் பார்த்து விமர்சனம் செய்தனர். அவருடைய புதுக்கவிதைகளைப் பார்த்த இலக்கியத் திறனாய்வாளர்கள் அக்கவிதைகளை அமைப்பிலும், கருத்திலும் புதுமையைக் காணவே இலக்கணங்கள் அமையப் பெறாமல்,கட்டுக்கடங்காது மனம் போன போக்கில் அவை எழுதப்பட்டன என்று குறை கூறினார்கள்.
விட்மனது கருத்துக்கள் பலருக்கு விபரீதமாகத் தோன்றின. விட்மனைத் திறனாய்வாளர்கள் தவறாக விமர்சனம் செய்தனர். ஆனால் கவியின் நோக்கம் உலகிலுள்ள உன்னதமான விஷயங்களைத்தெள்ளத்தெளிய எடுத்துக் கூறுவதுதானே! அந்த நோக்கம் கொண்டு புல்லின் இலைகள் என்ற அவருடைய கவிதைத் தொகுப்பைக் காணாவிடில் அக்கவிதைகள் பிதற்றலாகவோ அல்லது காமவெறியினால் உந்தப்பட்டு எழுதப்பெற்ற கவிதைகளாகவோ தான் கொள்ளப்படும்.
வால்ட் விட்மன் தனது கவிதைகளில் ஒளிமறைவின்றி எதையும் வெளிப்படையாக வெளியிட்டதால், அவரது படைப்புகள் ஆபாசமானவை, வெறுக்கத் தக்கவை என்று முதலில் பலரால் ஒதுக்கப் பட்டன ! அவரது கவிதைகள் அனைத்தும் இலக்கண விதிக்கு அப்பாற்பட்ட வசன நடைக் கவிதைகளாய்[Free Verse] எழுதப் பட்டவை. அவரது கவிதைகளை உயர்வாகப் பாராட்டி யவருள் ஒருவர் கவிஞர் எமர்ஸன் [Ralph Waldo Emerson]. 1855 இல் 12 பாடல்களுடன் முதற்பதிப்பு “புல்லின் இலைகள்” புத்தகத்தை வெளியிட்டார். பின்னால் அது 300 கவிதைகளுடன் விரிவானது. அதற்கு தொடக்கத்தில் அமெரிக்கர்களிடம் ஆதரவு கிடைக்க வில்லை.
நியூ ஆர்லியன்ஸ் செல்லுதல்
1848-ஆம் ஆண்டில் வால்ட் விட்மன் நியூயார்க்கிலிருந்து நியூ ஆர்லியன்ஸ் சென்றார். அவர் அங்கேதான் முதன் முதலில் அடிமைகள் நடுத்தெருவில் ஏலம் விடப்படும் அருவருப்பு வாணிபத்தையும்,அடிமைக் கறுப்பர் படும் கொடுமைகளையும் கண்டு மனவேதனை அடைந்தார். ஆர்வமாய்ப் படிக்கும் வேட்கை மிகுந்த வால்ட் விட்மன் 1848-ஆம் ஆண்டில் தனது சொந்தச் செய்தித்தாள் “உரிமைப் பூமி“ [Free Soil] என்பதை வெளியிட்டு அதற்கு அதிபதி ஆனார். மின்சார உடல் பற்றி என் பாடல் [I Sing the Body Electric] & என்னைப் பற்றிய எனது பாடல்(Song of Myself) ஆகிய இரண்டு நூல்களும் மனித உடம்பைப் பற்றியும், உடல் நலம்,பாலுறவு பற்றியும் எழுதப் பட்டவை.
தென்னக மாநிலங்களில் கொடுமைப் படுத்தப்படும் அடிமைகளை விடுவிக்க ஆப்ரஹான் லிங்கன் கடுமையான போர் நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று. அதுவே சகிக்க முடியாத “உள்நாட்டு போர்” [Civil War] எனப்படும் உள்நாட்டுப் போரானது. அரசாங்க ஐக்கியப் படைக்கும், “கூட்டு மாநிலங்கள்” என்னும் கன்ஃபெடரேஷன் படைக்கும் போர் ஏற்பட்டது. இறுதியில் இருபுறமும் சமப்போர் புரிந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 30,000 மேற்பட்டது. அப்போது ஐக்கியப் படைகளுடன் போர் புரிந்த வால்ட் விட்மன் சகோதரன் ஜார்ஜ் விட்மன் காய முற்றதால் அவரைக் குணப்படுத்த வால்டயர் வாஷிங்டன். D.C. வர வேண்டிய தாயிற்று. அவர் தன்னலமற்றத் தொண்டராகச் சேர்ந்து காயமுற்ற சுமார் 100,000 நபர்களுக்கு உதவி செய்தார். வாஷிங்டன் D.C., மருத்துவ மனைக்கு பணிபுரிய வால்ட் விட்மன் 600 தடவை வந்ததாக அறிஞர்கள் கூறுவது நோக்கத்தக்கது.
உள்நாட்டுப் போர் வெற்றியில் முடிந்து, ஆப்ரஹாம் லிங்கன் இரண்டாம் முறையாக தேர்தலில் நின்று, ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றி விழாவில் வால்ட் விட்மன் கலந்து கொண்டார். போர் முடிந்த பின்னர் சட்டத் மூலமாக அடிமை வைப்பு முறை அமெரிக்காவில் இருந்துரு முற்றிலும் நீக்கப் பட்டது.
போர் நின்ற ஐந்தாம் நாள், அதற்கு ஆப்ரஹாம் லிங்கன் பலியானார். லிங்கன் சுடப்பட்டு மரித்ததைப் பற்றி வால்டர் விட்மன் எழுதிய இரங்கற்பா “ஓ காப்டன், என் காப்டன்” படிப்போரை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துவது. 19 -ஆம் நூற்றாண்டில் கவிதைப் படைப்புகள் எழுதிய வால்ட் விட்மனுக்கு 20 -ஆம் நூற்றாண்டில்தான் அவரது படைப்புகளின் உன்னதம் வெளியாகிப் பரவியது.
அவருடைய படைப்புகளின் செல்வாக்கு,மேன்மை புகழ் பெற்ற கவிஞர்கள் பாப்லோ நெரூடா, அல்லன் கின்ஸ்பெர்க், [அமெரிக்கா] ஃபெர்னான்டோ பெஸ்ஸோவா [போர்ச்சுகல்] ஆகியோர் ஆக்கங்களில் புலப்படுவதைக் காணலாம். அடிமை ஒழிப்புப் போர் பற்றி “டிரம் டாப்ஸ்”, “பீட் பீட் டிரம்ஸ்”, “இரங்கற்பா ஆப்ரஹாம் லிங்கனுக்கு”, குடியாட்சித் திறப்புகள்,” “இந்தியா நோக்கிப் பாதை.” [Drum-Taps, Beat ! Beat ! Drums !” “When Lilacs Last in the Dooryard Boom’d”, Democratic Vistas,” “A Passage toIndia.”]. ஆகியவை வால்ட் விட்மனின் கவிதைப் படைப்புகளில் சிலவாகும் :
வேதாந்தியாகத் திகழ்ந்த விட்மன்
விட்மனின் ஞானநிலையை அறியாதவர்கள் அவருடைய கொள்கைகளை மிகவும் தாக்கினார்கள். சிலர்போற்றவும் செய்தனர். தோரோ,விட்மனின் புல்லின் இலைகள் கவிதைத் தொகுப்பை முதன்முறையாக வாசித்தவுடன் (Oriental) இந்தியநாட்டுக் கருத்துகளை வியக்கத் தக்க முறையில் வழங்கும் நூல் என்றுஅதனைப் போற்றினார். எமர்ஸன் அப்புத்தகத்தை பகவத் கீதையின் சீரிய கருத்துக்களும், ஐக்கிய நாடுகளின் சாதாரண செய்தித்தாள் இலக்கியப்போக்கும் கலந்த ஒரு படைப்பு எனக் கருதினார்.
விட்மனுக்கு இந்து மதக் கோட்பாடுகளுடன் எவ்வாறு தொடர்பு ஏற்பட்டது என்பது பற்றி உறுதியாக ஒன்றும் தெரியவில்லை. ராஜாராம் மோகன்ராய் என்ற வங்காளநாட்டுப் பெரியவர் உபநிசத்துக்களின் மேன்மையை விளக்கி ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதி இருந்தார். இந்து சமயத்திலும், தத்துவங்களிலும் நாட்டம் கொண்ட சில நியூ இங்கிலாந்து மக்கள் அவற்றை ஐக்கிய நாடுகளில் வெளியிட்டிருந்தனர். அவற்றின் மூலமாக விட்மன் வேதாந்தக் கருத்துக்களை அறிந்திருக்கலாம். எமர்ஸன் போன்ற தத்துவ ஞானிகளின் சொல்லும், எழுத்தும் இவர் கொள்கைகளை உருவாக்கி இருக்கலாம் என்பது ஒரு சாரார் கருத்து. உலகில் பரந்து கிடக்கும் பற்பல சொரூபங்களில் ஒற்றுமையைக் கண்டது விட்மனின் மனம். எல்லாம் ஒன்றே; அதுவே ஆத்மன் (All is One and all is Self) என்று அடிக்கடி அவர் கூறியிருப்பது வேதாந்தக் கோட்பாட்டையே நமக்கு நினைவூட்டுகின்றது.
மேலும் எனது ஆத்மாவும் நானும் -(My Soul and I) என்று அவர் பிரித்துக்கூறுவதும், நித்தியமான நான் (The Real Me) என்று ஆத்மாவின் நித்தியத்துவத்தை அவர் குறிப்பிடுகின்றார். இவை அனைத்தும் வேதாந்தக் கோட்பாடுகளே ஆகும். மற்றுமோரிடத்தில் அவர் என்னிடமுள்ள ஒவ்வொரு அணுவும் உன்னிடம் உள்ளதுதான், (Every atom belonging to me as goods belongs to you) நான் நீ என்று வேறுபடுத்திப் பேசப்படுவதெல்லாம் உண்மையில் ஒன்றே (The mystical identity of the real I or you)- என்று குறிப்பிட்டுள்ளார். இக்கருத்துக்கள் அனைத்தும் இந்து சமயத்தின் அடிப்படையானவையே ஆகும்.
மனித இயல்பில் பாகுபாடுகள் உண்டு. கீழ்த்தரமான உணர்ச்சிகளைப் பக்குவப்படுத்தி ஆத்மாவை மாசற்றதாகச் செய்ய வேண்டும் என்று அவர் கூறியிருப்பது பகவத்கீதையில் தன் முயற்சியால் தன்னை உயர்த்திக் கொள்ளவேண்டும் என வருவதைப்போல் ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் கொண்ட கருத்துக்களுக்காக அவர் பல தியாகங்கள் புரிய வேண்டியிருந்தது. ஆனால் அவற்றிற்காக அவர் அஞ்சவில்லை.
கற்பனைகளின் ஊர்வலமே கவிதை என்பதை மாற்றி உண்மைகளின் ஒருங்கிணைப்பே கவிதை என நாட்டியவர் விட்மன். எதைக் காட்டிலும் வல்லது வாய்மை என்பது தமிழ்ப்புலவர் வள்ளுவர் கூறிய குறள்நெறி விட்மனின் கருத்தில் எதிரொலிக்கிறது.
பண்பாளர் விட்மன்
வால்ட்விட்மனின் புதிய கவிதை வடிவத்தைத் (Chaotic) தாறுமாறானது என்று திறனாய்வாளர்கள் குறிப்பிட்டனர். மரபு ரீதியாக வந்த வடிவத்திற்குப் புறம்பாகக் கட்டுப்பாடற்ற கவிதையோட்டத்தை ஏற்றுக்கொள்ள இயலாத பழைமைவாதிகள் இதற்கு குற்றக்கணைகளை வீசினர். ஆனால் விட்மன் இத்தகு கண்டனக் குரல்களைப் பொருட்படுத்தவில்லை. தம் இலக்கிய வடிவம் இப்படித்தான் இருக்கும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் எண்ணற்ற படைப்புகளைப் படைத்தார். “சொற்கள் பொருள்களை ஏந்திச் செல்லும் ஊர்திகளே தவிர அலங்கார விளையாட்டுப் பொம்மைகளல்ல” என்பதை நிறுவுவதற்காக 80 வயதுவரை தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருந்தார்.
விட்மன் சாதாரண மனிதராக இருந்தும் எளியவர்களைக் கண்டு இரங்கினார். மக்களாட்சியின் மேன்மையையும் மானுடத்தின் உயர்வையும் பாதிக்கப்பட்டவர்களின் இடர்ப்பாடுகளையும் எண்ணி நைந்துபோனார். விட்மன் தாம் எழுதிய “முகமறியாத ஒரு பொது பூ பரத்தைக்கு” (To an unknown prostitute) என்ற கவிதையில்
”அமெரிக்கக் குடியரசுத் தலைவருக்கும்
உனக்கும் என்ன வேறுபாடு பெண்ணே!
விதி உன்னை இப்படிச் செலுத்தியிருக்கலாம்
ஆனால் அவருக்கும் உனக்கும்
ஆன்ம அடிப்படையிலான
வேறுபாடு ஏதுமில்லை
சாவின் போது உனக்கும் அவருக்கும்
ஒரே நிலை தான்”
என்று மனிதாபிமானத்தோடு பரத்தையரைப் பற்றி இரக்கத்தோடு சிந்தித்துப் பாடியுள்ளார். “இரக்கம் மிகுந்தவர்களின் உள்ளமே எல்லா உணர்ச்சிகளுக்கும் கலைப் படைப்புகளுக்கும் ஏற்றவாறு அமைந்து விளங்கும்” என்பதற்குச் சான்றாக இத்தகு கவிஞர்கள் திகழ்கின்றனர்.
வால்ட்விட்மனைப் பற்றிய கட்டுரை ஒன்றிற்கு அறிஞர் அண்ணா “அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்” என்ற தலைப்பைத் தந்திருப்பது (திராவிட நாடு 01-04-1945) தனித்துக் குறிப்பிடத்தக்கது. மேலும் பாரதிதாசன் மணிவிழாவையொட்டி “ஒரே நிலவு” என்னும் தலைப்பில் அண்ணா பாவேந்தரையும் விட்மனையும் ஒப்பிட்டுச் செய்துள்ள ஒப்பாய்வு சிறப்பிற்குரிய ஒன்றாகத் திகழ்கின்றது. இக்கட்டுரை அனைவரும் அறிய வேண்டிய ஒன்றாகும். இத்தகைய ஒப்பாய்வு வால்ட்விட்மனின் ஒப்புயர்வற்ற சமுதாயச் சிந்தனையை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.
கவிஞரின் முடிவு
இவ்வாறு மற்றவர்களுக்காக, மற்றவர்களின் வாழ்க்கைக்காக புரட்சிகரமான கருத்துக்களைக் கவிதைகள எழுதி மேதையாகத் திகழ்ந்த வால்ட்விட்மன் 1873 –ஆம் ஆண்டில் மூளையில் ஏற்பட்ட வலிப்பு நோயால் (Stroke) பாதிக்கப்பட்டுத் துன்பத்திற்கு ஆளானார். இந்நோயல் அவரின் ஒரு பகுதி உடலுறுப்புகள் அசைவற்றுப் போயின. அந்நோயோடு அவர் ஒன்பது ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. அவ்வாறு துன்புற்ற அமெரிக்கக் கவிதை மேதை வால்ட் விட்மன் 1892-ஆம் ஆண்டில் தனது 73 – ஆம் வயதில் காலமானார். அவர் மரணமடைந்த பொழுதுதான் அவரது பெருமையை மக்கள் நன்கு உணர்ந்தனர். அம்மாமேதைக்காகக் கண்ணீர் விட்டனர்.
வழக்கத்துல ஒண்ணு சொல்வாங்க…இருக்கறபோது ஒரு பொருளோட மதிப்போ ஒருத்தரோட மதிப்போ அவ்வளவா நமக்குத் தெரியாது…ஆனா அது நம்மிடத்தில் இல்லாதபோதுதான் அதனோட மதிப்புத் தெரியும்…கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் பண்ணி என்ன பிரயோசனம்.. வால்ட்விட்மன் இறந்த பின்னர் அவரைப் புரிஞ்சுகிட்டா என்ன? புரிஞ்சுக்காட்டி என்ன…? காலங்கள் பல கடந்தாலும் அம்மாமேதையின் பெயர் இலக்கிய வரலாற்றில் இடம்பெற்றிருக்கும்…அவரது படைப்புகள் வழி வால்ட்விட்மன் இன்னும் வாழ்ந்துகிட்டுத்தான் இருக்காரு….
என்ன எந்தவிதமான பின்புலமும் இல்லாம முயற்சி செஞ்சா வாழ்க்கையில முன்னேறலாம் என்பதை வால்ட்விட்மனின் வாழ்க்கையில இருந்து தெரிஞ்சுகிட்டீங்கள்ள…..அப்
அடிமையாய்ப் பிறந்து தந்தை யாரென்று அறியாது வளந்தாரு ஒருத்தாரு…அறியாமையில் தவழ்நதாரு….வறுமையில வாடினாரு.. இளம் வயதிலேயே உப்பளத்தில் வேலைபார்த்தாரு…அடிமைத் தளையிலிருந்து விடுபட்டாலும் அவரது வறுமைத் துன்பம் தீரவில்லை….நீக்ரோக்களுக்கெ
(தொடரும்…………….51)
- சூரியனை நெருங்கிச் சுற்றும் முதற்கோள் புதன் மெதுவாய்ச் சுருங்கிக் கொண்டு வருகிறது
- “மார்பு எழுத்தாளர்கள்”-ஒரு பின்னூட்டக் கட்டுரை -2
- தமிழ்த்தாத்தா உ.வே.சா. : கற்றலும் கற்பித்தலும் – 3
- சென்னை பெண்கள் சர்வதேச திரைப்பட விழா (CWIFF) – 2014
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 67 ஆதாமின் பிள்ளைகள் – 3
- பயணத்தின் அடுத்த கட்டம்
- தினம் என் பயணங்கள் -9
- தொடுவானம் – 8. கடல் கடந்த தமிழன்
- நீங்காத நினைவுகள் 39
- கொங்கு மணம் கமழும் கவிஞர் சிற்பியின் படைப்புகள்
- ”பங்கயக் கண்ணான்”
- புகழ் பெற்ற ஏழைகள் -50
- திண்ணையின் இலக்கியத் தடம் – 27
- வெளி
- நீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா-2014
- சிங்கையிலிருந்து திருச்சி செல்லச் செலவில்லை
- கால் பக்க கப்சா, ஒரு பக்க உடான்ஸ்
- சமுத்திரக்கனியின் ‘ நிமிர்ந்து நில் ‘
- என் நிலை
- உறைந்த சித்திரங்கள் – கேரள சர்வதேசத் திரைப்பட விழா
- சீதாயணம் நாடகப் படக்கதை – 2 5
- மொட்டைத் தெங்கு
- வாழ்க நீ எம்மான்.(1 )