ரயில் வண்டி நெய்யாற்றிங்கரை ஸ்டேஷனை நெருங்கிக் கொண்டிருந்தது. பத்து நிமிடங்கள் அங்கே ரயில் நிற்கும். பாசஞ்சர் கம்பார்ட்மென்டின் படிக்கருகில் நான் நின்று கொண்டிருந்தேன். காலை நேரத்துக் குளிர்காற்று ரயில் வண்டியின் வேகத்திற்கேற்ப என் மீது மோதிக் கொண்டிருந்தது.
நெய்யாற்றிங்கரை என்று எழுதியிருந்த மும்மொழிப் பெயர்பலகை கண்ணில் பட்டது. மலையாள எழுத்துகள் ஓரளவுக்குப் பரிச்சயமாகிவிட்டன. மெதுவாகிக் கொண்டிருந்த ரயில் வண்டி நின்றது. பிளாட்பாரத்தைப் பார்த்தேன். வேலைக்குச் செல்பவர்கள், படிக்கச் செல்பவர்கள், இலக்கின்றி அலைபவர்கள் என ஒரு கூட்டம் ரயிலேறிக் கொண்டிருந்தது.
என் வயதையொத்த மலையாள இளைஞர் கூட்டமொன்று என்னை உள்ளே தள்ளிவிட்டு படிக்கட்டுப் பகுதியைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டது. குனிந்து ஜன்னலின் வழியாக பிளாட்பாரத்தைப் பார்த்தேன். லேடீஸ் கம்பார்ட்மென்டுக்குப் போகிறவர்கள் நான் இருந்த பெட்டியைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தார்கள். வண்டி நின்றிருந்த பத்து நிமிடமும் குனிந்து நின்று கொண்டிருந்தேன. இன்றைக்கும் அவளைக் காணவில்லை. முன்னாலிருந்த பாசஞ்சர் கம்பார்ட்மென்டில் அவள் ஏறியிருக்கக் கூடும். திருவனந்தபுரத்தில் இறங்கும்போது அவளைப் பார்த்தால் உண்டு. இல்லையென்றால் இனி என்றைக்குமே அவளைப் பார்க்க முடியாது.
காலேஜிலேயே புரோஜெக்டை முடித்திருக்கலாம். அதை விட்டு விட்டு என்றைக்கும் பிரயாணத்திலேயே ஐந்து மணிநேரத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறேன். காலையில் ஐந்து மணிக்கு உறக்கத்தைக் கலைத்து எழும்பி குளித்து ஆறே காலுக்கு இரணியல் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய், திருவனந்தபுரம் வழியாகப் போகும் ஆறரை மணி எக்ஸ்பிரசைப் பிடித்து எட்டு மணிக்குத் திருவனந்தபுரத்துக்குப் போய்ச்சேர்ந்து, தம்பானூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து வேலிக்குப் போகும் எட்டரை பஸ்ஸைப் பிடித்து…. சாயங்காலம் திரும்பவும் ஒரு பயணம். வீட்டுக்குப் போய்ச்சேரும் போது எட்டு மணியாகி விடும். சாப்பிட்டுத் தூங்குவதைத் தவிர வேறு எதற்கும் நேரமிருக்காது.
என் கவனத்தைக் கவர அவள் இல்லாமற்போயிருந்தால் அந்த நாட்களொன்றில் ரயிலில் ஏறி இருப்பதற்குப் பதிலாக என்மீது ஏற ரயிலுக்கு நான் அனுமதி கொடுத்திருக்கக் கூடும். இல்லையென்றால், வேறொரு பெண் என் கவனத்தை ஈர்த்திருக்கக் கூடும்.
அவளை எப்போதிலிருந்து கவனிக்கத் தொடங்கினேனென்று நினைவில்லை. ஆறரை மணி ரயிலில் ஏறிய முதல் நாளிலேயே நான் அவளைக் கவனித்திருக்கக் கூடும். இல்லையென்றால் இரண்டு மூன்று நாட்கள் சென்ற பின்பு அவளைக் கவனித்திருக்கலாம்.
எது எப்படியோ, அந்தக் குறுகிய காலத்துக்குள்ளாகவே அவள் மீது எனக்கு வினோதமான ஒரு ஆர்வம் ஏற்பட்டது. ஒரு ஆணுக்குப் பெண் மீது ஏற்படும் காதல், காமம், தோழமை முதலிய எவ்வுணர்ச்சியிலும் சேராத வெறும் ஆர்வம் அது.
திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் இறங்கும்போது எனக்குப் பத்தடி முன்னால் நடக்கத் தொடங்கியிருப்பாள் அவள். எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் அவளை எளிதாகக் கண்டுபிடித்து விடுவேன். கல்லூரிச் சீருடையான அவளது நீலக்கலர் சட்டையும், இன்னும் முழுதாக ஈரம் காயாமல் காலை நேரத்துச் சூரியனின் ஒளியில் கறுப்பாய் பளபளப்புடன் விரித்துப் போடப்பட்டிருக்கும் கூந்தலும் அவளைக் காட்டிக் கொடுத்து விடும்.
வேகமாய் நடந்து அவளைப் பின் தொடர்ந்து செல்வேன். அவளுக்கும் எனக்குமிருக்கும் தூரம் குறையும்போது, ஓவர்பிரிட்ஜ் வந்து விடும். அதன் படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டும், இறங்கிக் கொண்டுமிருக்கிற ஜனக்கடலில் சிக்கி நான் மூச்சுத்திணறும் போது அவள் ஒரு தேர்ந்த நீச்சல்காரியைப் போல கடந்து போய் என் கண்களில் இருந்து மறைந்து போவாள்.
அவள் நெய்யாற்றிங்கரையில் இருந்து ரயிலேறுகிறாள் என்பதைக் கண்டுபிடிக்க எனக்கு அதிக நாட்கள் ஆகவில்லை. ஆனால், அவள் முகத்தை என்னால் பார்க்க முடிந்ததில்லை. எவ்வளவு தான் கஷ்டப்பட்டு படிக்கருகில் நிற்க முயன்றாலும், அங்கே ஏறும் கூட்டத்தை என்னால் சமாளிக்க முடிந்ததில்லை. அதனால் அவள் கடந்து செல்லும்போது அவளைப் பக்கவாட்டாகவே பார்க்க முடிந்தது. முகத்தைச் சரியாய்ப் பார்க்க முடியவில்லை. ஆனால் அவள் கேரளத்துப் பெண்களுக்குரிய செழிப்பான நிறத்துடன் இருந்தாள் என்பது எனக்குப் புரிந்தது.
பெண்களின் வேறு எந்த அம்சத்தையும் விட அவர்களின் தோலின் நிறம் மீது எனக்கு அளவுகடந்த ஈடுபாடு உண்டு. நான் காதலித்த, மன்னிக்கவும் – நான் காதலிப்பதாகச் சொல்லிக் கொண்டு திரிந்த பெண்களுள் எவளும் கறுப்பாகவோ, ஏன் மாநிறமாகக் கூட இருந்ததில்லை. என்னுடைய கறுப்பு நிறமே இந்த விசித்திர ஈர்ப்புக்குக் காரணம் என்று எனக்கே சில சமயங்களில் தோன்றியதுண்டு. கேரளத்துப் பெண்களின் நிறத்தைப் பற்றி எனக்கிருந்த மனச்சித்திரம் கூட நான் இந்த புரோஜெக்டைச் செய்வதற்கு ஒரு அகத்தூண்டலாய் இருந்திருக்கலாம்.
கிறிஸ்துமசுக்கு லீவு விட்ட அன்றிலிருந்து அவளைப் பார்க்க முடியவில்லை. அவளுக்கு எத்தனை நாட்கள் கிறிஸ்துமஸ் லீவு என்று எனக்குத் தெரியவில்லை. என்றைக்கும் நெய்யாற்றிங்கரையில் அவளுக்காகப் பத்து நிமிடம் குனிந்து காத்திருந்தததில் கழுத்து வலியும், தமிழ், மலையாளம், இந்தி என பன்மொழி வசவுகளும் தான் கிடைத்தன.
இன்றைக்குத் தான் புரோஜெக்டின் கடைசி நாள். இன்றைக்கு அவளைப் பார்க்காவிட்டால் இனி என்றைக்குமே பார்க்க முடியாது. நான் இனி திருவனந்தபுரத்துக்குப் போவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அப்படியே போனாலும் ஆறரை மணி ரயிலில் போகப் போவதில்லை.
திருவனந்தபுரம் ஸ்டேஷனில் எனது சுபாவத்துக்கு விரோதமாய் முண்டியடித்துக் கொண்டு கீழே இறங்கினேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவளைக் காணவில்லை. தளர்ந்து போய் நடந்தேன். ஓவர்பிரிட்ஜ் படிக்கட்டு வழக்கமான ஜனக்கூட்டத்தால் நிறைந்திருந்தது.
எனக்கு நேராக ஒரு படி முன்னால் அவள் ஏறிக்கொண்டிருந்தாள். தேங்காய் எண்ணெய் வாசனை அவள் கூந்தல் மணத்தோடு கலந்து எனக்கு மயக்கமூட்டிக் கொண்டிருந்தது. ஓவர் பிரிட்ஜ் மேல் வந்தவுடன் வேகமாக நடந்து அவளைக் கடந்தேன். இனி திரும்பினாலே அவளைப் பார்த்து விடலாம்.
ஒருவேளை நான் எதிர்பார்த்தது போல் பேரழகியாக அவள் இல்லாமற்போனால்? அப்படியே அவள் பேரழகியாக இருந்தாலும் அதனால் எனக்கென்ன லாபம்? எனது வேகம் குறைந்தது.
அந்த நீலச்சட்டை என்னைக் கடந்து ஜனக்கடலில் மிதந்து சென்றது. நான் எனது புரோஜெக்டின் இறுதி நாளுக்காக தம்பானூர் பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடந்தேன்.
- வாழ்க நீ எம்மான் (2)
- அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் – தி.க.சி. அஞ்சலி
- தொடுவானம் 9. ஒளித்து வைத்த ஓவியங்கள்
- சீன மரபு வழிக்கதைகள் – 1.மெங்கின் பயணம்
- பட்டறிவுகளின் பாடங்கள் – [எஸ்ஸார்சியின் ‘தேசம்’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து]
- மூத்த – இளம்தலைமுறையினர் ஒன்று கூடிய பிரிஸ்பேர்ண் கலை – இலக்கிய சந்திப்பு அரங்கு
- மருத்துவக் கட்டுரை டிங்கி காய்ச்சல்
- ராதா
- தினமும் என் பயணங்கள் – 10
- திண்ணையின் இலக்கியத் தடம் – 28
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-37
- அன்னம் விருது பெறும் எழுத்தாளர் சங்கரநாராயணன்
- நீங்காத நினைவுகள் 40
- புகழ் பெற்ற ஏழைகள் 51
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : அண்டவெளி மோதல்களில் குள்ளக் கோள் சாரிக்ளோவில் வளையங்கள் உண்டானது முதன்முதலில் கண்டுபிடிப்பு
- சென்றன அங்கே !
- ’ரிஷி’ கவிதைகள்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 68 ஆதாமின் பிள்ளைகள் – 3
- சீதாயணம் நாடகப் படக்கதை – 2 6
- நெய்யாற்றிங்கரை
- கவிதைகள்
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க ஏற்பாட்டில் படைப்பாளர்கள் அன்புச்செல்வன் – சந்திரகாந்தம் ஆகியோருக்கு அஞ்சலிக் கூட்டமும் அவர்கள் படைப்புக்கள் பற்றிய கருத்தரங்கமும். 6 ஏப்ரல் 2014 (ஞாயிறு)