திராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும் – அத்தியாயம் 2

This entry is part 8 of 19 in the series 13 ஏப்ரல் 2014

puthiyamadhavi

இவர்களுக்கு ஏற்படும் முதல் கூட்டு ஒரு அரசியல் கட்டாயத்தால் ஏற்படும் கூட்டணியாக இருக்கிறதே தவிர இவர்களே முழங்கும் சமத்துவம் என்ற சமூகப்புரட்சியின் காரணமாக அமையவில்லை. என்று கடந்த வாரம் சொல்லியிருந்தேன்.

 

அவர்களாகவே முன்வந்து ஆதிதிராவிடர்களும் திராவிடர்கள் தான் என்றோ பிராமணர் அல்லாதோர் என்று தாங்கள் ஏற்படுத்தி இருக்கும் அமைப்பின் உள்வட்டத்தில் வருவதற்கு உரிமை உள்ளவர்கள் என்றோ உணர்ந்த காரணத்தால் கூட்டணி அமைத்ததாக தெரியவில்லை. அன்றைக்கு ஒட்டுமொத்த பிராமணர் அல்லாதாரின் பிரதிநிதியாக தங்களை மட்டுமே அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் திராவிட இயக்கத்தின்– நீதிக்கட்சிக்கும் அதன் தலைவர்களுக்கு ஏற்பட்டது. அதுதான் –

 

1909ல் முஸ்லீம்களுக்கு மிண்டோ மார்லி சட்டப்படி தனித்தொகுதி வழங்க்கப்பட்ட நிலையில் அதை மனதில் கொண்டு பிராமணர் அல்லாதாரின் நிலையை எப்படி இந்தியா வர இருக்கும் மந்திரி மாண்டேகுவிடம் விளக்குவது என்ற நிலையில் நீதிக்கட்சியின் தலைவர் தியாகராயர் “நீதிக்கட்சி தான் சென்னை மாகாணத்தில் உள்ள 4 கோடி பிராமணர் அல்லாதோருக்கும் பிரதிநிதித்துவம் வகிக்கிறது ” என்று மாண்டேகுவிற்குத்  தந்தி அனுப்பினார்.

நான்குகோடி பிராமணர் அல்லாதாரின் பிரதிநிதி நீதிக்கட்சிதான் என்பதை உறுதிப் படுத்த வேண்டுமானால் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கினராக இருந்த ஆதிதிராவிடர்களின் ஒருமித்த ஆதரவையும் பெற வேண்டிய கட்டாயம் நீதிக்கட்சிக்கு ஏற்பட்டது. இந்த அரசியல் காரணம் மட்டுமே நீதிக்கட்சி ஆதிதிராவிட இனத்துடன் இணைந்து செயல்பட வேண்டிய இக்கட்டான சூழலை ஏற்படுத்தியது.

 

திராவிட இயக்க வரலாற்றுக்கு முன்னரே தமிழ்ச்சமூகத்தில் தங்களை ஆதிதிராவிடர்கள் என்று அடையாளப்படுத்திக்கொண்ட பஞ்சமர்கள் தங்களுக்கென்று தனி இயக்கம் அமைத்து தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருந்தார்கள்.

1890 களில் ஆரம்பிக்கப்பட்ட ஆதிதிராவிட மகாஜனசபாவும் அயோத்திதாச பண்டிதரும்.

1885 ல் திராவிட மித்ரன்

1886 ல் திராவிட பாண்டியன்

1907 ல் திராவிட கோகிலம்-

ஆகிய பத்திரிகைகள் திராவிட இயக்கம் தோன்றுவதற்கு முன்பே ஆதிதிராவிட சமூகத்தில் தோன்றி வளர்தெடுக்கப்பட்ட திராவிட இதழ்கள்.

 

1918ல் ஆதிதிராவிட மகாஜன சபா அரசாங்கத்திற்கு ஒரு மனு கொடுத்தது.

பறையர் என்கிற பெயருக்குப் பதிலாக தொன்றுதொட்டு நிலவி வருவதும் தங்களுக்கு உரிய பெயருமாகிய ‘திராவிடர் ‘ என்கிற பெயரால் தாங்கள் அழைக்கப்பட வேண்டும் என்றும் அப்பெயரை அரசும் அங்கீகரிக்க வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்தனர்.

அக்கோரிக்கையின் நீதிக்கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்ட ஒடுக்கப்பட்ட மக்கள் அமைப்பின் பிரதிநிதியான எம்.சி. ராஜ் அவர்கள் சென்னை மாகாண சட்ட சபையில் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். நீதிக்கட்சியும் அத்தீர்மானத்தை நிறைவேற்றியது. 1922 மார்ச் 22 ல் அப்பெயரை அங்கீகரித்து அரசு ஆணை பிறப்பித்தது. பழைய பஞ்சமர் என்ற பெயர் நீக்கப்பட்டு ஆதிதிராவிடா, ஆதி ஆந்திரா என்ற அங்கீகாரம் சட்டப்படி வழங்கப்பட்டது.

எம். சி ராஜ் தீர்மானம் கொண்டு வந்தார் என்பதைப் பற்றியோ நீதிக்கட்சியின் ஆட்சியில் சட்டசபையிலிருந்த முதல் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி எம்.சி ராஜ் என்றொ எவ்விதமான குறிப்புகளையும் பதிவு செய்யாமல் தங்கள் வரலாற்றை எழுதிச் சென்றிருக்கிறது திராவிட இயக்கம் திராவிட இயக்க நூற்றாண்டு. முரசொலி மாறன் அவர்களும்! ( பக் 198 & 199).)

 

ஒருவேளை எம். சி ராஜா பற்றி எழுதினால் அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளையும் எழுதியாக வேண்டும் என்பதால் வசதியாக அந்தப் பக்கங்களை கடந்து செல்கிறார்களா  திராவிட இயக்க வரலாற்றை எழுதுபவர்கள்., தெரியவில்லை.

 

1921ல் பனகல் அரசர் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டுவர அதை எதிர்த்தவர் எம். சி இராஜா அவர்கள். அவர் எதிர்ப்புக்கான காரணம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கூடாது என்பதல்ல. அவர்களையும் விட பிறபடுத்தப்பட்ட கடைநிலையில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாமல் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்குவது சமூகநீதியாகது என்கிற காரணத்தால் தான்.

எம். சி இராஜாவின் எதிர்ப்புக்கு ஒட்டு மொத்த நீதிக்கட்சியின் அரசும் கள்ள மவுனம் சாதித்தது.

 

எனவே நீதிக்கட்சியின் காலம்வரை பிராமணரல்லாதோரின் ஒன்றிணைதல் என்பது முழுமையடையவில்லை.

 

தொடரும்

Series Navigationநீங்காத நினைவுகள் – 42
author

புதிய மாதவி

Similar Posts

Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள புதிய மாதவி அவர்களுக்கு வணக்கம். நீங்கள் எழுதிவரும் ” திராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும் ” கட்டுரை இன்றைய தலைமுறையினருக்கு மட்டுமல்ல முந்தைய தலைமுறையினருக்கும் மிகவும் பயன்மிக்கது. பிராமணர் அல்லாதவர்களின் இயக்கம்தான் திராவிடர் இயக்கம் என்றுதான் நம்பியிருந்தோம்.ஆனால் அதிலகூட ஆதிதிராவிடரை உள்ளப்பூர்வமாக, கொள்கை அளவில்கூட சேர்த்துக் கொள்ளப்படாமல் அரசியல் காரணமாகத்தான் அங்கீகரிக்கப்பட்டனர் என்பது உங்களின் கட்டுரை மூலம்தான் தெரிய வந்தது.திராவிட இயக்கத்துக்கு முன்பே ஆதிதிராவிடர் இயக்கம் இருந்தது என்பதும் தெரிய வருகிறது. இன்று திராவிட இயக்கங்களை ஆதரிக்கும் அனைத்து தமிழ் மக்களும் திராவிடர் இயக்கம் என்பது என்ன என்பதைப் புரிந்துகொள்ளும் வகையில் கட்டுரையை ஆராய்ச்சி பின்னணியில் எழுதி வருவது பாராட்டுக்குரியது.வாழ்த்துகள். அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *