ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் -அத்தியாயம்-29 நிறைவுரை.

This entry is part 8 of 19 in the series 13 ஏப்ரல் 2014

 

ஸ்ரீ கிருஷ்ணர் மீதான  ஒரு விமர்சகனின் விமர்சனம் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது.

  1. ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிப் புனையப்பட்ட கர்ண பரம்பரைக் கதைகளை ஒதுக்கித் தள்ளுதல்.
  2. ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய உண்மைகளைப் புனரமைப்பது

என்னுடைய இந்த ஸ்ரீகிருஷ்ண ஆராய்ச்சியில் என் சக்தி முழுவதையும் ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றியக் கட்டுக் கதைகளைக் களைவதிலேயே செலவிட்டேன். அவரைப் பற்றிய நிதர்சனத்தைப் புனரமைப்பது என்பது சற்றுக் கடினமான வேலையாகவே இருந்தது. ஏன் எனில் சாம்பல் எவ்வாறு நெருப்பை மூடி விடுகிறதோ அதே போல் இங்கே உண்மை மூடப்பட்டுக் கிடக்கின்றது. எந்தக் கூறுகளைக் கொண்டு நான் ஸ்ரீகிருஷ்ணரைப் புனரமைக்க நினைக்கிறேனோ அந்தக் கூறுகள் எல்லாம் பொய்மைக் கடலில் மூழ்கிக் கிடக்கின்றன. இருப்பினும் அந்தப் புனரமைப்பைச் செவ்வனே செய்ததாகவேக் கருதுகிறேன்.

இந்த இறுதி அத்தியாத்தில் ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றி கூறும் உண்மை அது எவ்வளவு சிறியதாக இருப்பினும் அந்த உண்மையை வெளிக்கொணர்ந்து அதன் மூலம் புராணங்களிலும், இதிகாசங்களிலும் குறிப்பிடப் படும் ஸ்ரீகிருஷ்ணரின் பிம்பத்தை வடிவமைக்க வேண்டியது என்னுடைய கடமையாக உள்ளது.

ஸ்ரீகிருஷ்ணருக்கு சிறு பிராயத்திலிருந்தே வலிமையான உடலமைப்பு இருந்ததைக் காண முடிகிறது. அவர் பிருந்தாவனத்தில் உள்ள கோபியர்களைக் கொடிய விலங்குகளிலிருந்துக் காப்பாற்றியதைக் காண்கிறோம். கம்சன் அனுப்பிய மல்லர்களைக் கொன்றவர். குவாலயம் என்ற யானையைக் கொன்றவர். காளிங்கன் என்ற கொடிய விஷப் பாம்பை யமுனையிலிருந்து விரட்டியவர். அது மட்டுமல்ல அவர் ஓர் அற்புதமான தேரோட்டியும் கூட.

ஸ்ரீகிருஷ்ணர் இயல்பாகத் தனக்கு அமையப் பெற்றிருந்த  புத்திசாலித்தனமான  மூளையை பயிற்சி மூலம் மேலும் கூர்மையாக்கிக் கொண்டார். ஆயுதப் பிரயோகத்தில் அவர்,  அவருடைய காலத்தில் இருந்த அனைத்து வீரகளைக் காட்டிலும் சிறந்தவராக விளங்கினார்.  பராக்கிரமத்தில் அவருக்கு  இணை வேறு ஒருவரும் கிடையாது. கம்சன், ஜராசந்தன், சிசுபாலன் போன்ற வீரகளையும், மேலும் வீரத்தில் சிறந்த வாரணாசி, கலிங்கம்,புண்டரிகரம், காந்தாரம் போன்ற தேசங்களின் மன்னர்களையும், வென்றவர். கிருஷ்ணரின் சீடர்களான சாத்யகியும், அபிமன்யுவும் மிகச் சிறந்த வீரர்களாகத் திகழ்ந்தனர். அர்ஜுனன் கூட ஸ்ரீகிருஷ்ணரிடம் ஆயுதப் பயிற்சி எடுத்துக் கொன்டவன்.

புராணங்களிலும், இதிகாசங்களிலும் யுத்தம் புரியும் கதை மாந்தர்களின் போர்த் திறைமை குறித்தத் தகவல்கள் கிடைக்குமே அன்றி அவர்களுடைய ஆளுமை மாண்பு குறித்துத் தகவல் கிடைக்காது. யுத்த தந்திரம் என்பது ஒரு போர் வீரனின் முக்கிய குணமாக அந்தக் காலத்தில் ஏற்றுக் கொள்ளப் படவில்லை. பீமனோ அர்ஜுனனோ புகழப் படுவது அவர்களுடைய யுத்தத் தந்திரங்களுக்காக அல்ல என்பதை கவனிக்க வேண்டும். அவருடைய காலத்தில் ஸ்ரீகிருஷ்ணர் மட்டுமே தொலைநோக்குச் சிந்தனை உள்ளவராக சித்தரிக்கப் பட்டு தனித்து நிற்கிறார். அவருடைய திறமையான தலைமைப் பண்பினாலும், சிறந்த தொலை நோக்குப் பார்வையினாலும், யாதவர்களின் சின்ன சைதன்யம் கூட ஜராசந்தன் போன்ற மாபெரும் வீர்களின் படையை அழிக்கப் போதுமானதாக இருந்தது. ஸ்ரீகிருஷ்ணரின் இந்த தொலைநோக்குப் பார்வையால்தான் யாதவக்குடிப் புலம் பெயர்ந்து மதுராவிலிருந்து துவாரகைக்குக் குடிபெயர்ந்தது.

ஸ்ரீகிருஷ்ணர் ஒரு தத்துவ ஞானியாகத் திகழ்ந்தார். அவர் போதித்த மதம் அவரது முதிர்ந்த அறிவைப் பறைசாற்றுகிறது. பகவத் கீதை முழுவதும் ஓரு மாமனிதனின் பேருரைகளாகத் திகழ்கின்றன. ஸ்ரீகிருஷ்ணரின் மன்னனுக்குரிய மாண்பு கூட பெரிதும் போற்றத் தகுந்ததாகவே இருந்தது. யுதிஷ்டிரர் வேறு முதிர்ந்த அறிஞர்கள் அவர் சபையில் இருந்தாலும் ஸ்ரீகிருஷ்ணரின் அறிவுரைகளின் படியே நடக்கிறார். ஸ்ரீகிருஷ்ணர் பல்வேறு துறைகளில் ஞானம் உடையவராக விளங்கினார்.—குறிப்பாக தத்துவம், ஆன்மிகம், மருத்துவம், இசை மற்றும் குதிரை வளர்த்தல் போன்ற துறைகளில்—-

ஸ்ரீகிருஷ்ணர் ஒரு யதார்த்தவாதி. துணிச்சல் மிகுந்தவர்.ப விரைந்து செயலாற்றக் கூடியவர். அவர் சற்றும் சலியாமல் எது தேவையோ அதை அடையும் வரை செயலாற்றக் கூடியவர்.

அவர் சிறிதும் சஞ்சலமின்றி எப்பொழுதும் தர்மத்தின் பக்கமும், நேர்மையின் பக்கமும் நிற்பவர். அவருடைய மொத்த வாழ்க்கையையும் அலசி ஆராய்ந்த எனக்கு அவருடைய தனிப்பட்டப் பண்புகள் தெளிவாக விளங்கின. ஸ்ரீ கிருஷ்ணர் அவர் காலத்து வீரர்களைக் காட்டிலும் வலிமை மிக்கவராக விளங்கினாலும் அவர் இந்த உலகம் முழுவதும் அமைதியை நிலை நாட்டவே விரும்பினார். அதற்காக அவர் அன்புடையவராக விளங்கினார். அவர் மனிதர்கள் மீது மட்டுமல்ல மற்ற அனைத்து உயிரினங்கள் மீதும் கருணையும்  பரிவும் மிக்கவராக விளங்கினார். இந்திர வழிபாட்டிற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்து கோபியர்கள் தங்கள் ஆநிரைகளைத் தாங்களே பராமரிக்கும்வண்ணம் செய்தார்.

நமக்கு ஸ்ரீகிருஷ்ணர் தனது யாதவக் குடியை நன்கு காப்பாற்றி வந்தார் என்பது தெரியும். இருப்பினும் அவர்களில் எவராவது பாபச் செயல்களில் ஈடுபட்டால் அவர்களை மறுப்பதோடும் நில்லாமல் அவர்களைத் தண்டிக்கவும் அவர் தயங்கியதில்லை. ஸ்ரீகிருஷ்ணரின் மன்னிக்கும் மாண்பினை நாம் அறிவோம். இருப்பினும் வேண்டும் சமயங்களில் தன் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு தண்டனை வழங்கத் தயங்கியதில்லை.

இவ்வாறு ஸ்ரீகிருஷ்ணரின் ஆளுமையில் பல்வேறு நற்பண்புகள் மிளிர்வதைக் காண்கிறோம். அதற்காக அவருடைய நற்பண்புகள் காரணமாக அவருடைய நுண்கலைத் திறன்கள் மறைக்கப் பட்டன என எண்ண வேண்டாம். அவருடைய இந்தப் பகுதியைக் குறித்து நான் விரிவாக எடுத்துரைக்கவில்லை. என்றாலும் அவர் நுண்கலைகளிலும் வித்தகர் என்பதை அவருடைய பிருந்தாவனப் பகுதிகளில் காணலாம். அதற்குப் பிறகு அவரது துவாரகை வாசத்தின் பொழுது  அவர் கடலில் பல மகிழ்ச்சியான தருணங்களை அனுபவித்தவர்.  ரைவத்ர மலையின் ஓரங்களில் சுழன்ற நதியின் மீது அவருடைய படகுச் சவாரிகள் இனிமை நிறைந்தவை. இவருடைய  இந்தப் பரவசமூட்டும் தருணங்கள் அனைத்துக் கலைகளிலும் அவரை ஒரு சகலகலா வல்லவரராக மாற்றியிருக்க வேண்டும்.

ஸ்ரீகிருஷ்ணரின் குணாதிசயங்களில் ஒன்றே ஒன்று காணப்படவில்லை. என்னுடைய ( பங்கிம் சந்திர சட்டர்ஜி ) தர்மதத்துவம் என்ற நூலில் மனிதனுடைய அனைத்து உணர்வுகளிலும் முதன்மையானது அவனது பக்தி உணர்வுதான் என்று குறிப்பிட்டுள்ளேன். ஆனால் மகாபாரதத்தில்  ஸ்ரீகிருஷ்ணரின் பக்தி குறித்து எந்த இடத்திலும் விவரிக்கப் படவில்லை. சில இடங்களில் ஸ்ரீ கிருஷ்ணர் பரமசிவனை வணங்குவதாகவும், பக்தி செய்வதாகவும் குறிப்பிடப் பட்டுள்ளன. அவை வெறும் இடைசெருகல் அன்றி வேறில்லை.

நான் கற்பனை செய்வது என்னவென்றால் ஸ்ரீகிருஷ்ணர் தன்னைத் தானே வணங்கும் ஒருவராகக் கருதியிருக்க வேண்டும் என்பதுதான். தன்னைத்தானே ஆராதிக்கும் மனப்பாங்கு ஒருவருக்கு வர வேண்டும் என்றால் தானும், படைத்தவனும் வேறு வேறு அல்ல என்ற எண்ணம் ஆழமாகவே வேரூன்றி இருக்க வேண்டும். இந்த உறுதிதான் தளராத ஞானமார்க்கம். இந்த நிலையை சென்றடைவதற்கு ‘ ஆத்மரதி ‘ என்று பெயர். சாந்தோக்ய உபநிடத்தில் இந்த ஆத்மரதி இவ்வாறு விளக்கப் படுகிறது.

“ இதை எவன் பார்க்கிறானோ, இதை எவன் உணர்கிறானோ, இதை எவன் அறிகிறானோ, இதை எவன் மேற்கொள்கிறானோ, இதை எவன் தனது துணையாகக் கொள்கிறானோ, இந்தத் தான் என்பதை எவன் அனுபவிக்கிறானோ அவன்தான் கடவுள். “

ஸ்ரீகிருஷ்ணரை கீதை ஆத்மராமன்” எனக் குறிப்பிடுகிறது. தன்னை அறிந்தவன் அதாவது இந்தப் பிரபஞ்சமாகிய தன்னை அறிந்தவன் என்று பொருள். இதை விட ஆத்மாராமன் என்பதை என்னால் எப்படி விளக்குவது என்று தெரியவில்லை.

நிறைவு செய்யும் விதமாக நாம் ஸ்ரீகிருஷ்ணரை இந்தக் கீழ்கண்ட காரணங்களுக்காக முழு மனிதனாகப் பார்க்கிறோம். அவர் வெல்லப் படாதவர்; வெல்ல முடியாதவர்; அவர் தூய ஹிருதயம் படைத்தவர்; நேர்மையானவர்; குணசீலர்; ப்ரேமை மிகுந்தவர்; அன்பனாவர்; கடமை தவறாதவர்; தர்மத்தைக் கடைபிடிப்பவர்; வேத பண்டிதர்; நற்பண்புகளின் உறைவிடம்; மனித குலத்தின் மீது நல்லெண்ணம் கொண்டவர்; நியாயஸ்தர்; கருணாமூர்த்தி; பாரபட்சமற்றவர்; இருப்பினும் குற்றம் புரியும் சுற்றத்தாரை தண்டிக்கத் தயங்காதவர். தன் செயலில் ஆதிக்கமற்றவர். எளிமையும் , கட்டுப்பாடும், அர்ப்பணிப்பும் மிகுந்த ஒரு யோகியைப் போன்றவர். ஸ்ரீ கிருஷ்ணர் மனித சக்தியின் எல்லைகளுக்குட்பட்டு செயல்பட்டாலும் அவருடைய மிக மேன்மையான நற்குணங்கள் அவரை ஒரு தெய்வ நிலைக்கு உயர்த்தியது. மனித சக்திகளுக்கு அப்பாற்பட்ட தனது மேன்மையான குணங்களினால் அவர் தெய்வ நிலைக்கு உயர்த்தப் பட்டார். ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு கடவுளா அல்லது ஒரு மானுடனா என்பதை இந்த ஆராய்ச்சி நூலைப் படிக்கும் எந்த வாசகனும் அவர்களுக்குரிய முறையில் யோசித்து முடிவு செய்து கொள்ள வேண்டும்.

என் வாசகர்கள் ஸ்ரீகிருஷ்ணர் கடவுள் இல்லை மனிதர்தான் என்று நினைத்தால் ரைஸ் டேவிட் என்ற அறிஞர் புத்தரைக் குறிப்பிட்டதைப் போல ஸ்ரீ கிருஷ்ணரைக் குறிப்பிடட்டும். “ இந்துக்களில் மிக்க அறிவுடையவரும், மிக்க மேன்மை மிக்கவரும் இவர் ஆவார். “

எனது ஏனைய வாசகர்கள் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தெய்வாம்சம் பொருந்திய குணங்கள் மிகுந்து காணப்படுகின்றன என்று நம்பினால் அவர்கள் என்னுடன் சேர்ந்து கீழ் கண்ட வாக்கியத்தை உரக்க உச்சரிக்கட்டும். “ இங்கே பகவானாக உருவகப்படுத்தப் பட்டுள்ள மேன்மையானவர் மானுட விதிகளுக்கு அப்பாற்பட்டவர்.”

சர்வம் கிருஷ்ணமயம் ஜகத்து.

—————————————–நிறைவுற்றது——————————-

மொழிபெயர்ப்பாளரின் குறிப்பு.

ஸ்ரீவைஷ்ணவம் குறித்து மிக விரிவான நாவல் எழுதுவதுதான் என் நோக்கமாக இருந்தது. நாராயணனைத் தேடிக் கொண்டு சென்ற என் பயணம் நடுவில் பங்கிம் சந்திர சட்டர்ஜியின் இந்த ஸ்ரீ கிருஷ்ண சரித்திரத்தில் கொண்டு விட்டது. ராதையைப் பற்றி அவர் முன் வைக்கும் கருத்துகளும், இறுதி அத்தியாயத்தில் அவர் ஸ்ரீகிருஷ்ணரை ஒரு ஆத்மராமன் என்று கூறுவதும் என் தேடலின் எல்லைகளை விரிவு படுத்தியுள்ளது. இந்த நூலுக்கு இரவீந்திர நாத் தாகூர் அவர்கள் எழுதிய மிக விமர்சனக் கட்டுரையும் அதற்கு பங்கிம் எழுதிய பதில் மறுப்புக் கட்டுரையும் பிரசித்தமானவை. நான் அந்த இரண்டு கட்டுரைகளையும் இந்தப் புத்தகம் நூலாக வெளி வரும்பொழுது சேர்க்கலாம் என்று எண்ணியுள்ளேன்.

இத்தனை வாரங்களும் இதனை தங்கள் இணைய இதழில் வெளியிட்டு உதவிய திண்ணை இனைய இதழுக்கு எனது மனமார்ந்த நன்றி.

சில நேரங்களில் அவசரமாக டைப் அடித்து அனுப்பும்பொழுது ஏற்படும் சிற்சில எழுத்துப் பிழைகளையும் பொறுத்துக் கொண்டு இதனுடன் கூடவே பயணித்த வாசகர்களாகிய உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

********************************

Series Navigationநீங்காத நினைவுகள் – 42
author

சத்தியப்பிரியன்

Similar Posts

Comments

  1. Avatar
    ஒரு அரிசோனன் says:

    உயர்திரு சத்தியப்பிரியன் அவர்களுக்கு,
    நீங்கள் எழுதிவரும் “ஸ்ரீ கிருஷ்ண சரித்திரத்தின்” கடைசி சில பகுதிகளைப் படித்தேன். உங்களுடைய சில கருத்துக்கோணங்கள் மாறுபட்டு இருந்ததும் ரசிக்கும்படியாகத்தான் இருந்தது.
    அதிலும், இந்தக் கடைசி அத்தியாயம் என் மனதை மிகவும் கவர்ந்தது.
    நான் கிருஷ்ணரை ஒரு சிறந்த அரசியல் மேதையாக நினைத்திருந்தேன். இந்து சமயத்தின் சாரமான கீதையின் நாயகனாகவும் எண்ணி இருந்தேன்.
    அவரது மற்ற பண்புகளையும், மாண்புகளையும் எடுத்துக் காட்டியது மிகவும் நன்றாக இருக்கிறது.
    உங்களது இந்த பணி தொடர என் வாழ்த்துக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *