பேராசிரியர் டாக்டர் வே.சபாபதி
[மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 6/4/2014இல் குவால லும்பூரில் நடத்திய கருத்தரங்கில், இணைப் பேராசிரியர் டாக்டர் வே.சபாபதி (இந்திய ஆய்வியல் துறை, மலாயாப் பல்கலைக் கழகம்) படைத்த கட்டுரையின் சுருக்கம்]
.
முன்னுரை
ஆளப்பிறந்த மருதுமைந்தன் நாவலை எழுதியவர் மலேசியாவின் பன்முகத்தன்மை கொண்ட எழுத்தாளர் அமரர் ப.சந்திரகாந்தம். இந்நூல் ஒரு வரலாற்று நாவல். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியிலும் தென்னிந்தியாவிலும் குறிப்பாக, தமிழகத்திலும் மலாயாவிலும் நடந்தேறிய பல்வேறு வரலாற்று நிகழ்வுகளையும் உண்மையில் வாழ்ந்த மாந்தர்களையும் மையமாகக்கொண்டு இந்நாவல் புனையப்பட்டுள்ளது.
நாவலின் கதையும் கதையமைப்பும்
தன்முனைப்பையும் ஆக்கச் சிந்தனையையும் தூண்டும் வகையிலான தலைப்பைக் கொண்டுள்ளது இந்நாவல். இந்நாவலின் தலைப்பானது கதை யாரை மையமாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது என்பதனை ஓரளவிற்கு உணர்த்தி விடுகின்றது. கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழகத்தில் சிவகங்கை சமஸ்தானத்தை ஆண்ட மருது சகோதரர்களின் உண்மை வரலாறு இந்நாவலின் கதையாக எடுத்தாளப்பட்டுள்ளது. வரலாறு நன்கு அறியப்பட்ட ஒரு காலப்பகுதியில் உண்மையில் வாழ்ந்த மனிதர்களையும் அவர்கள் எதிர்நோக்கிய சிக்கல்களையும் இந்நாவலின் கதை பேசுகின்றது. பேசுவதற்கு எடுத்துக்கொண்ட காலப்பகுதியின் வரலாற்றை இந்திய நாட்டின் வரலாற்றாசிரியர்களும் மேனாட்டு வரலாற்றாசிரியர்களும் முழுமையாகவும் முறையாகவும் தெளிவாகவும் பதிவு செய்து வைத்துள்ளதால், கதாசிரியர் மிகுந்த கவனத்தோடு அவ்வரலாற்றுச் செய்திகளைச் சரியாகவும் முறையாகவும் பிழையின்றியியும் முரணின்றியும் நாவலின் கதையமைப்புக்குப் பயன்படுத்தியுள்ளது இங்குக் குறிப்பிடத்தக்கது. வரலாற்றில் பிழை ஏற்படலாகாது என்ற கதாசிரியரின் பொறுப்பு பாராட்டுக்குரியது.
பொதுவாக, மருது எனும் பெயர் சிவகங்கையை ஆண்ட மருது சகோதரர்களாகிய பெரிய மருது, சின்ன மருது ஆகிய இரு சகோதரர்களையே சிறப்பாகக் குறிக்கும். ஆனால், நாவலின் தலைப்பில் மருதுமைந்தன் எனும் பெயர் மருது சகோதரர்களுள் இளையவரான சின்னமருதுவின் ஒரே மகனான இளவரசன் துரைசாமியைக் குறிக்கின்றது. கதையின் தொடக்கத்தில் துரைசாமியின் வயது பதினைந்து. நாவலின் இறுதி அத்தியாயத்தில் கதை முடிவடையும்போது அவனுக்கு வயது ஏறத்தாழ முப்பத்தைந்தாகக் காட்டப்பட்டுள்ளது. எனவே, நாவலின் தலைப்பு இளவரசன் துரைசாமியைச் சுட்டுவதாக இருந்தாலும் நாவலின் மையக்கதை முழுக்க முழுக்க அவனுடையதல்ல. மாறாக, இளவரசன் துரைசாமியின் பெரிய தந்தை, சொந்தத் தந்தை ஆகிய இருவரையுமே கதை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
நாவலின் கதைக்களம்
நாவலின் கதை நிகழுகின்ற களம் சேதுபதி பூமியாகிய சிவகங்கை சீமை. சிவகங்கையை ஆண்டவர்கள் பலர் இருப்பினும் சிவகங்கை என்றதுமே உடனடியாக நினைவலைகளில் தோன்றுபவர்கள் காளையார் கோயில் வரலாற்றிலும் சிவகங்கை சமஸ்தானத்து வரலாற்றிலும் நீங்கா இடம்பிடித்துள்ள மருது சகோதரர்களே. வெள்ளையரிட மிருந்து நீண்டதொரு போராட்டத்தை மேற்கொண்டு, எட்டு ஆண்டுகளுக்குப்பின் சிவகங்கையை மீட்டு ஆட்சியில் அமர்ந்து நல்லாட்சி தந்தவர் ராணி வேலுநாச்சியார். ராணி வேலுநாச்சியாருக்கு நல்ல பெயரும் புகழும் இருந்தாலும் சிவகங்கையின் மக்களின் மனங்கவர்ந்த ஒப்பற்றத் தலைவர்களாக இந்த மருது சகோதரர்களே திகழ்ந்துள்ளனர். தவிர, ராணி வேலுநாச்சியார் மீண்டும் சிவகங்கையின் அரியணையைப் பெறுவதற்குப் பெரிதும் போராடியவர்களும் உதவியவர்களும் இந்த மருது சகோதரர்களே. ராணி வேலு நாச்சியாருக்குச் சிறந்த ஆலோசகர்களாகவும் வழிகாட்டிகளாகவும் இருந்து சிவகங்கையைக் கட்டிக் காத்தவர்கள் மருது சகோதரர்களே. அதனால்தான் கணவனை இழந்தபின் சிவகங்கையில் நெருக்கடி மிகுந்த ஒரு காலகட்டத்தில் ராணி வேலுநாச்சியார் நாட்டின் தளபதிகளாக இருந்த மருது சகோதரர்களுள் பெரிய மருதுவை இரண்டாவதாக மணந்து கொண்டார். பெரிய மருதுவுக்கு மன்னர் தகுதியை அளித்து, அவரைச் சிவகங்கையின் அரியணையில் அமர்த்தி மன்னராக்கினார்.
இவற்றுக்கான காரணங்கள் யாவை என்பவற்றையும் நாவலாசிரியர் உண்மை வரலாறு பிசகாத வகையில் நாவலின் கதைச்சம்பவங்களின்வழி காட்டிச் சென்றுள்ளார். ராணி வேலுநாச்சியாருக்கு வெள்ளச்சி நாச்சியார் என்ற ஒரு பெண்வாரிசைத்தவிர வேறு ஆண்வாரிசு யாருமே இல்லாததாலும் அதனால் சிவகங்கையின் அரசபரம்பரைக்குள்ளேயே அரியணை வாரிசுக்கான உரிமைப் போராட்டம் ஏற்பட்டிருந்ததாலும் அவர்களிடமிருந்து சிவகங்கையைக் காப்பாற்ற நினைத்ததாலும் ஆண்வாரிசற்ற சிவகங்கை சமஸ்தானத்தைப் பிரிட்டிஷார் பறிக்க, சரியான தருணத்திற்காகக் காத்திருந்ததாலும் ராணியார் மருது சகோதரர்களின் வீரதீரத்தையும் பராக்கிரமத்தையும் மக்களைக் கண்ணிமைபோல் காத்து நிற்கும் குணாதிசயத்தையும் சீர்தூக்கிப் பார்த்து, ஏற்கெனவே மணமான பெரிய மருதுவைத் தியாகச் சிந்தனையோடு மணந்துகொண்ட வரலாற்று உண்மைச் செய்திகளை இந்நாவலின் கதைச் சம்பவங்களின் வழி காட்டிப்போகின்றார் நாவலாசிரியர். இவற்றுள் பல்வேறு வரலாற்றுச் செய்திகள் தமிழ் மக்களுள் பலர் அறியாத, மனத்தை நெகிழவைக்கும் இனவரலாற்று உண்மைகளாகும். இவற்றுக்கான சரியான ஆதாரங்களையும் நாவலாசிரியர் கதையில் காட்டிப் போகின்றார். எனவேதான். ஆளப்பிறந்த மருதுமைந்தன் என்று மருது சகோதரர்களின் இறுதி ஆண்வாரிசான துரைசாமியின் பெயரை நாவலின் தலைப்பு சுட்டினாலும் சிவகங்கையின் முக்கிய ஆட்சியாளர்களான மருது சகோதரர்களின் அரசியல் போராட்ட வாழ்வையே இந்நாவல் முழுக்கக் காணமுடிகின்றது. மருது சகோதரர்களின் பரம்பரையில் அவன் ஒருவனே ஆங்கிலேயரின் தண்டனைக்குத் தப்பி வாழ்ந்தான் என்பதற்காகவும் மருது சகோதரர்களின் பரம்பரையில் இறுதியாக உயிர்விட்டவன் அவன்தான் என்பதற்காகவும் அவனுடைய பெயர் நாவலுக்குச் சூட்டப்பட்டுள்ளது.
மருது சகோதரர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்கள் நிம்மதியாக ஆட்சிசெய்ய முடியாதபடி உள்ளிருந்தே பலர் குறிப்பாக, படமாத்தூர் கௌரி வல்லப உடையணத்தேவரும் வெளிச்சக்தியாகப் பிரிட்டிஷாரும் கொடுத்த தொல்லைகள் ஏராளம். நாவல் முழுக்க அவை கதைநிகழ்ச்சிகளின்வழி காட்டப்பட்டுள்ளன. பிரிட்டிஷாரிடம் சிவகங்கை கி.பி. 1800இல் வீழ்ச்சி கண்டபிறகு மருது சகோதரரும் தூக்கில் ஏற்றப்பட்டபிறகு, மருது சகோதரர்களின் ஒற்றை வாரிசான இளவரசன் துரைசாமியை அவனுடைய பதினைந்தாம் அகவையில் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவு (Prince of Wales Island) என்று அழைக்கப்பட்ட பினாங்குத் தீவுக்கு 1801இல் நாடு கடத்துகின்றனர். இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தாயகத்திற்குத் திரும்பிய சில நாள்களிலேயே நோயினால் அவன் மரணத்தைத் தழுவுகிறான் எனக் கதை அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள இந்நாவலின் கதையில் நாவலாசிரியர் உண்மைகளைச் சரியாகவும் அதே வேளையில் பிழையாகச் சொல்லப்பட்டதைச் சரியான சான்றுகளுடன் திருத்தியும் சொல்லியுள்ளார். இதற்குரிய சரியான சான்றுகளை மேனாட்டிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் அன்றையப் பிரிட்டிஷ் மலாயாவிலிருந்தும் பெற்றுப் பயன்படுத்தியதாக நாவலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டிஷார் தென்னாட்டில் தங்களுக்குப் பெரும் சவாலாகவும் மிரட்டலாகவும் இருந்த ஆட்சியாளர்களை அடியோடு களையெடுத்தனர். அவர்களுள் மிக முக்கியமானவர்கள் நால்வர். மைசூர் சீரங்கப்பட்டணத்தில் திப்பு சுல்தான், திருநெல்வேலி, பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன், சிவகங்கையில் மருது சகோதரர்கள் ஆகியோரே அந்நால்வர் ஆவர். பிரிட்டிஷார் இவர்களை வென்று அவர்களின் சமஸ்தானங்களைக் கைப்பற்றியவுடன் உடனடியாகச் சில கொடூர நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். அவர்களின் ஆண் வாரிசுகளைச் சுட்டும் தூக்கிலிட்டுக் கொன்றனர்; அந்த அரச குடும்பத்துப் பெண்களைச் சிறையிலிட்டனர்; அவர்களின் கோட்டைக் கொத்தளங்கள் தரைமட்டமாக்கப்பட்டு, உப்பு இரைக்கப்பட்டன; ஆமணக்கு விதைக்கப்பட்டன; அவர்களின் பாதுகாப்புப் படைகள் கலைக்கப்பட்டன அல்லது கொல்லப்பட்டன. இதனாற்றான் வரலாற்றாசிரியர்களுள் சிலர் பதினைந்து வயது துரைசாமியும் கொல்லப்பட்டான் என்று தாங்கள் எழுதிய வரலாற்று நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். பிரிட்டிஷார் பல சமஸ்தானங்களின் ஆண்வாரிசுகளைக் கொன்றொழித்தது உண்மையே. ஆனாலும் சின்ன மருதுவின் ஒரே மகனான இளவரசன் துரைசாமியை மட்டும் கொல்லவில்லை என்ற உண்மைக்கான ஆதாரத்தை நாவலாசிரியர் தொடக்ககால பினாங்கு வரலாற்றை ஆய்வுசெய்து நூல் எழுதிய கெர்னியால் சிங் சந்துவின் (Kernial Singh Sandhu) மலாயாவில் இந்தியர்கள் (Indians in Malaya) எனும் வரலாற்று நூலிலிலிருந்து எடுத்தாண்டுள்ளார். இளவரசன் துரைசாமி பினாங்கில் இருந்து சென்றதற்கான ஆதாரங்களும் பிரிட்டிஷாரிடம் உள்ளன. அவன் மட்டும் உயிரோடு விடப்பட்டு, பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்டான் எனும் உண்மையை விளக்கிக் காட்டவே நாவலுக்கு அவனை மையமாகக்கொண்ட பெயரையும் சூட்டியுள்ளார் நாவலாசிரியர்.
இளவரசன் துரைசாமி மட்டும் எப்படி உயிரோடு விடப்பட்டான் என்பதற்கும் தக்க சான்றுகளை நாவலின் கதைப்போக்கில் காட்டிச் சென்றுள்ளார் நாவலாசிரியர். மருது சகோதரர்களின் நற்குணங்களும் நல்வினைகளுமே இதற்குக் காரணம் என்கிறார். சின்னமருது பல மொழிகள் தெரிந்தவராகவும் இருந்தார். உருது மொழி தெரிந்திருந்ததால் மைசூரின் திப்பு சுல்தானோடும் ஆங்கில மொழி அறிந்திருந்ததால் தென்னாட்டில் கிழக்கிந்தியக் கம்பெனியில் (EIC) பணியிலிருந்த மேஜர் வெல்ஷ் அவர்களோடும் நல்ல தொடர்பும் நட்பும் கொண்டிருந்தார். இந்த நட்புறவே இளவரசன் துரைசாமியின் உயிரைக் காப்பாற்றி நாடு கடத்தப்படும் தண்டனையாகக் குறைக்கக் காரணமாயிற்று. மேஜர் வெல்ஷ் ஆங்கிலேயரிடம் அவனுக்காகப் பரிந்து பேசி உயிரைக் காப்பாற்றினான். அதேபோன்று ராணி வேலு நாச்சியாரின் மகளின் கணவன் வெங்கண் பெரிய உடையணனும் போர்னியோவிற்கு நாடு கடத்தப்பட்ட உண்மைச் செய்தியையும் நாவலில் புதியதாகக் காட்டிச் சென்றுள்ளதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.
எனவே, நாவலாசிரியர் நாவலின் கதையின் மையப்பபுள்ளியாக சிவகங்கையின் வரலாற்றையும் அதில் மருது சகோதரர்களின் வீரதீரப் போராட்டங்களையும் எடுத்துக்கொண்டு அவற்றிற்குத் தொடர்புடைய தென்னாட்டின் பிற சமஸ்தானங்கள்/பாளையங்கள், அவற்றின் ஆட்சியாளர்கள் எனப் பல்வேறு வரலாற்றுச் செய்திகளை நாவல் முழுவதும் கொடுத்துக் கொண்டே போகிறார். எனவே, இந்நாவல் மருது சகோதரர்களின் அரசியல் வாழ்வு பற்றிய கதையாக இருந்தாலும், அக்காலக்கட்டத்தினுடைய தென்னாட்டின் அரசியல் நிலவரமும் சமூக நிலவரமும் கதையோடு இணைத்துச் சுவை குன்றாமல் சொல்லப்பட்டுள்ளன.
பொதுவாக, தென்னிந்திய வரலாறு குறிப்பாகத் தமிழகத்தின், தமிழ் மக்களின் வரலாறு இதுநாள் வரையில் முழுமையாக எழுதப்படவில்லை என்பது வரலாற்றாசிரியர், இனப்பற்றாளர் பலரும் சொல்லிவரும் குற்றச்சாட்டு ஆகும். இதற்குக் காரணம் இந்திய வரலாற்றை எழுதியவர்கள் நீண்ட நெடுங்காலமாக வட இந்தியாவை மையமாகக்கொண்டு எழுதியதாலும் அவ்வாறு எழுதும்போது சமஸ்கிருத நூல்களின் துணைகொண்டு, ஆரியர்களின் மனநிலைக்கு ஏற்ப அந்நோக்கில் எழுதியதாகவும் அதனால், தென்னிந்திய/தமிழக வரலாறு சரியாகவும் முறையாகவும் எழுதும் நிலை இதுவரை ஏற்படவேயில்லை என்றும் கூறப்படுகின்றது. இதனால் பல்வேறு சிறப்புகள் நிறைந்த தமிழகத்தின் வரலாறு இன்னும் முழுமையாக எழுதப்படவில்லை. இம்முயற்சியில் தமிழகத்தில் உள்ளவர்கள் மட்டும்தான் ஈடுபட வேண்டும் என்கிற கட்டாயம் எதுவுமில்லை. பூமிப்பந்தில் வாழ்கிற இனஉணர்வுடைய எந்தத்தமிழனும் (அயலகத் தமிழனும்) இம்முயற்சியில் ஈடுபடலாம். வரலாற்று அறிவும் உண்மையான இன, சமுதாய ஈடுபாடும் இருந்தால் யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்பதற்கேற்ப இந்நாவலாசிரியரின் இந்நூல் சரியானதோர் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது.
கதையின் தொடக்கமும் முடிவும்
நாவலாசிரியர் சிவகங்கையை மையமாகக்கொண்டு, சிவகங்கையின் வீழ்ச்சியான கி.பி. 1801இலிருந்து கதையைத் தொடங்குகின்றார். தென்னாட்டில் சிவகங்கையே இறுதியாகப் பிரிட்டிஷாரின் பிடிக்குள் வந்தது. தொடர்ந்து போராடி இறுதியாகத் தோல்வி கண்டவர்கள் மருது சகோதரர்கள் ஆவர். இவ்வாறு அமையும் இக்கதை பதினைந்து வயதான இளவரசன் துரைசாமி பினாங்கிற்கு நாடு கடத்தப்படுவதற்காக தூத்துக்குடி தடுப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு கதை தொடங்குகின்றது. இவ்வாறு தொடங்கி, வளர்த்துச் செல்லப்படும் கதை 102 அத்தியாயங்கள்வரை செல்லுகின்றது. பின்னோக்கில் சொல்லப்பட்டுள்ள கதையில் சிவகங்கை சமஸ்தானம் தோன்றிய வரலாறு, அதன் ஆட்சியாளர்கள், சிவகங்கை அரசில் ஏற்பட்ட உட்பூசல்கள், பிரிட்டிஷ் போன்ற ஆதிக்கசக்திகளின் ஊடுருவல்கள், சிவகங்கையோடு தோழமை கொண்டுள்ள பாளையங்கள், மருது சகோதரர்களின் போராட்டங்கள், பெரிய மருது மன்னராக்கப்படுதல், ராணி வேலு நாச்சியாரின் வீரச்செயல்கள், அரியணைக்காக நடந்தேறிய போராட்டங்கள், இனத்துரோகிகள் பிரிட்டிஷாரிடம் காட்டிக் கொடுக்கும் படலங்கள், ஆதரவு சமஸ்தானங்களும் பாளையங்களும் பிரிட்டிஷாரால் அநியாயமுறையில் பறிக்கப்படுதல், இறுதியாக சிவகங்கையின் வீழ்ச்சி, மருது சகோதரர்கள் தூக்கிலிடப்படுதல், துரைசாமி பினாங்கிற்குச் செல்லப்படுதல் என வரலாற்று நிகழ்வுகள் சிறிதும் சுவை குன்றாமலும் பரபரப்போடும் விறுவிறுப்போடும் சொல்லப்பட்டுள்ளன. இறுதி அத்தியாயமான 102-இல் துரைசாமியும் போராட்ட வீரர்களும் பினாங்கிற்குக் கொண்டு செல்லப்படுதல், அங்கு அவர்களின் தாய்நாட்டு ஏக்கம், பின்னர் ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்குப்பின் நாடு திரும்புதல், திரும்பிய சில நாள்களிலேயே துரைசாமி இறத்தல் என வரலாற்று நிகழ்வுகள் காட்டப்பட்டுள்ளன. இதன்மூலம் கதாசிரியரின் நோக்கம் இளவரசன் துரைசாமியின் பினாங்கில் வாழ்ந்த வாழ்க்கையை விளக்குவது அல்ல; மாறாக, அவனுக்கு அவ்வாறு நேர்ந்ததற்கான காரணகாரியத்தையும் அக்காலச் சூழலையும் விளக்குவதே ஆகும்.
நாவலின் மொழிநடை
ஒரு படைப்பின் வெற்றிக்கு அடிப்படையான கூறுகளுள் மொழிநடையும் ஒன்று. அதிலும் வரலாற்று நாவலின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றுவது கதாசிரியர் கையாண்டுள்ள மொழிநடையே ஆகும். இன்றைய நிலையில் சமூகநாவல்களில் கையாளப்படும் மொழிநடை மிகுதியும் வட்டாரப் பண்பினைக்கொண்ட மொழிநடையும் தலித்திய மொழிநடையும் ஆகும். ஆனால், இவை வரலாற்று நாவல்களுக்கும் வரலாற்று நாயகர்களுக்கும் பொருந்தா. ஏனெனில் அரண்மனையை ஒட்டிய பண்பாடு, நாகரிகம், பழக்கவழக்கம், நடைமுறை, செயல்பாடு ஆகியன மிக உயர்வாகவும் கண்ணியமாகவும் மரியாதையாகவும் மதிப்பாகவும் பார்க்கப்படும் நிலை உள்ளதால் உயர்நிலையிலான இலக்கிய நடையே வரலாற்று நாவல்களில் மொழிநடையாகப் பயன்படுத்தப் படுகின்றது. தமிழில் வரலாற்று நாவல் எழுதிய நாவலாசிரியர்கள் பலரும் மேற்குறித்த மொழிநடையையே பயன்படுத்தியுள்ளனர். இந்நாவலாசிரியரும் அதன் அடியொற்றியே இலக்கிய நடையையே சிறப்பாகக் கையாண்டுள்ளார்.
நாவலின் சில இடங்களில் கதைமாந்தர்கள் தம் கோப உணர்ச்சிகளைக் காட்டும் இடங்களில் கதாசிரியர் தம்மையறியாமல் அங்கு வெளிப்பட்டு விடுகின்றார். உண்மையான தம் கோபத்தைக் கதைமாந்தர்களின் மீது ஏற்றிக்காட்டி நிற்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. எடுத்துக்காட்டாக:
“தமிழ் மன்னர்களுக்கிடையே ஒற்றுமை இல்லாததையும் காழ்ப்புணர்ச்சியையும் பிரிட்டிஷார் நன்கு பயன்படுத்திக் கொள்கிறார்களே எனும் எண்ணம் ஏற்பட்ட போது தமிழன் எனும் ரீதியில் துப்பாஷ் பெரியசாமிப்பிள்ளையின் நெஞ்சில் ரத்தம் வடிந்தது. அப்போது அவர் மனம் பிரிட்டிஷாரைத் திட்டவில்லை. அருகில் இருந்தே குழிபறிக்கும் இனத்துரோகிகளைச் சாட்டையால் அடிக்க வேண்டும் போலிருந்தது அவருக்கு.”
இவ்விடத்தில் துபாஷ் பெரியசாமிப்பிள்ளை நம் கண்களுக்குத் தென்படவில்லை. மாறாக, கதாசிரியர்தான் அவர் உருவில் நம் கண்களுக்குத் தென்படுகின்றார்.
முடிவுரை
தமிழில் வரலாற்று நாவல்கள் என்ற பெயரில் பல ராஜாராணிக் கதைகள் வெளிவந்துள்ளதாகவும் அவற்றுள் ஆய்வாளர்களால் வரலாற்று நாவல்களாக ஏற்கப்பட்டவை ஏறத்தாழ 250 தான் என்றும் இவற்றுள் அற்புத வரலாற்று நாவல்களும் (Historical Romances) அரைவரலாற்று நாவல்களும் (Semi Historical Novels) கணிசமானவை என்றும் குறிப்பிடுவர் ஆய்வாளர். இந்நாவல் உண்மையிலேயே வரலாற்று நாவல் (Historical Novel) எனும் தகுதியை அடைந்துள்ளது. அந்த அளவிற்கு வரலாற்றுச்செய்திகளைச் சரியாகவும் துல்லிதமாகவும் தந்துள்ளார். அச்செய்திகளுக்கு ஏற்ப நேர்த்தியாக ஒரு கதையையும் தந்து, உண்மையின் அடிப்படையில் அற்புதநவிற்சி இல்லாமல் இந்நாவலை உருவாக்கியுள்ளார்.
———————————————————————-
- வீடு திரும்புதல்
- க.நா.சுப்ரமண்யம் (1912-1988) – ஒரு விமர்சகராக
- சீன மரபு வழிக்கதைகள் 2. பட்டாம்பூச்சிக் காதலர்கள்
- நட்பு
- கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – சான்றிதழ்ப் படிப்பு
- இலக்கிய சிந்தனை 44 ஆம் ஆண்டு நிறைவு விழா
- “போடி மாலன் நினைவு சிறுகதைப்போட்டி”
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சனிக்கோள் வளையத்தில் புதிய துணைக்கோள் தோன்றுவதை நாசாவின் விண்ணுளவி காஸ்ஸினி கண்டுபிடித்தது
- அம்மாகுட்டிக்கான கவிதைகள்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 71 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam)
- தொடுவானம் – 12. அழகிய சிறுமி ஜெயராணி
- தினமும் என் பயணங்கள் – 13
- சுட்ட பழங்களும் சுடாத பழங்களும்
- கம்பனின் புதுமைப்பெண் சிந்தனை
- உயர்ந்த உள்ளம் உயர்த்தும்
- திண்ணையின் இலக்கியத் தடம் -31
- குழந்தைமையின் கவித்துவம் – ராமலக்ஷ்மியின் ‘இலைகள் பழுக்காத உலகம்’
- திராவிட இயக்கத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் – 3
- ப.சந்திரகாந்தத்தின் ‘ஆளப்பிறந்த மருதுமைந்தன்’ நாவல்
- சீதாயணம் நாடகப் படக்கதை – 29
- ’ரிஷி’யின் கவிதைகள்
- ரொம்ப கனம்
- அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் – 24 -5-2014
- திரை ஓசை – தெனாலிராமன் ( திரை விமர்சனம் )
- பயணச்சுவை 2 . நினைவில் வந்த ஒரு கனவுத்தொழிற்சாலை