சிறகு இரவிச்சந்திரன்.
பால்ய சிநேகிதன் சாரதிதான் சொன்னான்:
“ நம்ம கூட படிச்சானே கண்ணன்? அவன் ரொம்ப மோசமான நிலையிலே இருக்கானாம். “
என் நினைவுகள் தன் கோப்புகளைப் புரட்ட ஆரம்பித்தது. சட்டென்று என் நினைவுக்கு வரவில்லை கண்ணன் என்பதை என் முகம் காட்டிக் கொடுத்தது.
“ என்னடா முழிக்கறே? நம்ப கண்ணண்டா! பள்ளியிலே படிக்கும்போதே பத்து ரூபாய் செலவுக்கு எடுத்திட்டு வருவானே! அவன்டா!”
இப்போது பளிச்சென்று அவன் முகம் ஞாபகத்திற்கு வந்தது. கண்ணன் கொஞ்சம் குள்ளம். அதனாலேயே எந்த விளையாட்டிலும் அவன் இருக்கமாட்டான். அப்படி எந்த விளையாட்டிலும் சேராத நானும் சாரதியும் தான் அவனது நண்பர்கள். ஆனால் நாங்கள் ஒன்றும் குள்ளம் இல்லை. சராசரி உயரம். பள்ளி விட்ட அரை மணி நேரத்தில் நான் வீடு வரவில்லையென்றால் ஊரைக் கூட்டி விடுவாள் என் பாட்டி. ஆளுக்கொரு திசையென்று என் மாமாக்களை அலைய விட்டு விடுவாள். அதனால் இறுதி வகுப்பு முடிந்த மணி அடித்தவுடன் முண்டியடித்துக் கொண்டாவது முதலில் வரும் பேருந்தில் ஏறி விடுவேன்.
சாரதி கதை வேறு மாதிரி. அப்பா இல்லாத பையன். அம்மா தன் வீட்டாரின் ஆதரவோடு இவனைப் படிக்க வைக்கிறாள். வாழ்வாதாரத்திற்கு தையல் வேலை, எம்ப்ராய்டரி என்று ஏதோ செய்து கொண்டிருக்கிறாள். அதனால் சாரதிக்கு குற்ற உணர்ச்சி அதிகமாகி, பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு ஓடிவிடுவான். உடை மாற்றிக் கொண்டு அம்மாவுக்கு உதவியாக இருப்பான்.
மதிய உணவு இடைவேளையில் கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் கூட, என் வயதொத்த பையன்கள் ஏதாவது விளையாடிக் கொண்டிருப்பர். நானும் சாரதியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம். அப்படி ஒரு நாள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போதுதான் கண்ணன் எங்களை நெருங்கி வந்தான். அவனும் என் வகுப்புதான். துணைப்பாடம் தமிழ்தான். ஆனாலும் யாரோடும் பேசமாட்டான். அவனது உயரக்குறைவாலோ, அல்லது அவனது தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலோ – அவன் எப்போதுமே வகுப்பில் கடைசி மாணவன் – எப்போதுமே அவன் முன்வரிசையில் தான் உட்கார வைக்கப்பட்டிருப்பான். அதனால் அவனோடு பேசும் வாய்ப்பு குறைவானதாயிருந்தது.
“ நீங்கள்ளாம் விளையாட மாட்டீங்களா? “
வெறுமனே தலையாட்டினோம் நானும் சாரதியும். யாரோடும் பேசாத கண்ணன் எங்களோடு பேசிய அதிர்ச்சியிலிருந்து நாங்கள் மீளவில்லை.
“ஐஸ்கிரீம் சாப்பிடலாமா? எங்கிட்ட பத்து ரூபா இருக்கு. “
பத்து ரூபாய் என்பது அந்த காலத்தில் பெரிய தொகை. எங்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. அதற்கும் தலையாட்டினோம். முன்வாசல் கேட்டின் அருகில் நின்றிருக்கும் ரிட்ஸ் ஐஸ்கிரீம் வண்டி. பால் ஐஸ் பத்து பைசா. சாக்கோபார் இருபத்துஐந்து பைசா. அதற்கெல்லாம் கூட வசதியில்லை எங்களிடம் அப்போது. ஒரு ரூபாய்க்கு பத்து ஐஸ். பத்து ரூபாய்க்கு நூறு ஐஸ் என்று கணக்கு போட்டது எங்கள் மனம். கூடவே இவனுக்கு எப்படி கிடைத்திருக்கும் பத்து ரூபாய் என்று ஆராய்ச்சி வேறு. வீட்டிற்குத் தெரியாமல் எடுத்திருப்பானோ? நாளை இவன் மாட்டிக்கொண்டால் ஐஸ்கிரீம் சாப்பிட்ட நாமும் மாட்டிக் கொள்வோமோ என்கிற அச்சம் வேறு. ஆனாலும் கால்கள் கண்ணனைத் தொடர்ந்துதான் போய்க்கொண்டிருந்தன.
கண்ணன் நாலு சாக்கோபார் வாங்கினான். அவனுக்கு இரண்டு. எங்களுக்கு ஆளுக்கு ஒன்று. அதன்பிறகு ஐஸ்கிரீம் ருசிக்கு அடிமையானதில் எங்கள் அச்சங்கள் பறந்தோடின. இன்னமும் நெருக்கமானபிறகு ஓட்டலுக்கு எல்லாம் கூட்டிப் போவான். ஆப்பிள் மில்க் ஷேக் அவன் அறிமுகப்படுத்தியதுதான். அதேபோல பட்டாணி மசால் தோசை.
முன்கூட்டியே சொல்லி விடுவான் கண்ணன். “ நாளைக்கு உடுப்பி கார்னர் போறோம்.. வீட்ல சொல்லிடுங்க.. “ அதற்கேற்றாற்போல் ஏதாவது சொல்லி பாட்டியிடம் தாமதத்திற்கு அனுமதி வாங்கி விடுவேன். எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது, ஒரு நாள் கண்ணனின் தந்தை பள்ளிக்கு வரும்வரை. எங்களுக்கும் அவரைப் பார்க்க ஆவல். எல்லாத் தேர்விலும் தோற்கும் மகனுக்கு தினமும் பத்து ரூபாய் செலவுக்குத் தரும் அவதார அப்பா அல்லவா அவர்.
தலைமை ஆசிரியரிடம் கண்ணனின் அப்பா பேசிக்கொண்டிருந்தார். கட்டுக்குடுமி. பஞ்சக்கச்சம், முழுக்கை வெள்ளைச் சட்டை, காதில் வைரக் கடுக்கன், சட்டைக்கு மேலே பித்தான் இல்லாத பழுப்பு நிறக் கோட்டு. கண்ணன் எதுவும் நடக்காதது போல் எங்களுடம் நின்று கொண்டிருந்தான்.
“ என்னடா ஆச்சு ? “
“ என்னை பள்ளியை விட்டு எடுக்கறாங்க “
“ ஏண்டா? நீ சரியா படிக்கலியே அதனாலயா? “
“ ஆமா.. இப்பத்தான் எங்கப்பாவுக்கு தெரிஞ்சது.. அதான்..”
“ இப்பதான் தெரிஞ்சதா? மதிப்பெண் பட்டியலை அவர் பார்க்கறதே இல்லையா? “
“ அவருக்கு நேரமில்லை.. பெரிய வக்கீல். எப்பவும் அவரைச் சுத்தி ஆளுங்க இருந்திட்டே இருப்பாங்க “
“ அப்ப அட்டையிலே கையெழுத்து? அம்மா போடுவாங்களா?”
“ சிலசமயம் அவங்களும் போடுவாங்க.. அவங்களுக்கும் நேரமில்லைன்னா நானே போட்டுடுவேன். “ எங்களுக்கு சிரிப்பு வந்தது. இவன் ஏதோ தமாஷ் பண்ணுகிறான். ஆறாங்கிளாஸ் பையன் அப்பா கையெழுத்தை போடுவதாவது? கண்ணன் சரசரவென்று ஒரு நோட்டுப் புத்தகத்தைப் பிரித்தான் வெற்றுத் தாளில் கிறுக்கினான். “ இது எங்க அப்பா கையெழுத்து.. இது அம்மாது. “ அப்போதே அஸ்தியில் சுரம் கண்டு விட்டது எங்களுக்கு. அப்போது விலகியவர்கள் தான் நானும் சாரதியும். அவனும் பள்ளியை விட்டு போய்விட்டான். பின் தொடர்பே இல்லை. இப்போது மீண்டும் கண்ணன்.
0
கண்ணன் வசித்த பகுதி சென்னையின் கிழக்குத் தாம்பரம். மேடவாக்கமோ மாடம்பாக்கமோ ஏதோ ஒரு இடம். ஆனால் தாம்பரத்தின் மையப்பகுதியில், அவன் ஒரு தொலைபேசி மையம் வைத்திருப்பதாகத் தகவல் கிடைத்தது.
“ எ கார்னர் ஷாப்.. நெக்ஸ்டு ஒன் ஹொட்டேல் “ என்று குரல் அரட்டையில் கணிப்பொறி வழியாக, அமெரிக்க ஆங்கிலத்தில் சொன்னவன் ஆனந்த் ஜனார்த்தனன். எங்கள் பள்ளியில் எல்லோருடைய பெயரும் தந்தை பெயருடந்தான் பதிவேட்டில் இருக்கும். சாரதிக்குக் கூட சாரதி திருமலாச்சாரி என்று பெயர். ஆனால் வகுப்பெடுக்க வந்த ஆங்கிலோ இந்திய ஆசிரியை மார்கரெட்டுக்கு, அந்தப் பெயர் வாயில் நுழையாத்தால், அவனை சாரதி டி சி என்றே பதிவு செய்து விட்டார். கண்ணனின் பெயர் கண்ணன் கோதண்டராமன். மிஸ் அவனை கண்ணன் கோ தண்டராமன் என்றே உச்சரிப்பார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த அரியோ சிவனோ அப்படியே ஆகட்டும் என்று ஆசிர்வதித்து விட்டார்கள் போல. அவன் உருப்படாமல் போனான்.
சாரதியைப் பற்றி இங்கே கொஞ்சம் சொல்லியாக வேண்டும். பெரும்பாலும் அவன் சாப்பிடுவது பழைய சாதமும் தயிரும் என்பதால், அவன் உடம்பு கரணை கரணையாக இருக்கும். போதாதற்கு அரிசி வடிகஞ்சியில் பள்ளிச்சீருடையான காக்கி அரை நிக்கரை நனைத்துக் காயப்போட்டு, ஈரம் இருக்கும்போதே கையால் நீவி விட்டு, பட்டாக்கத்தி போல் முனை கூராக நீட்டிக் கொண்டிருக்கும்படி போட்டுக் கொண்டு வருவான். போதாததற்கு முடியை ராணுவ வீரன் போல் வெட்டியிருப்பான். அடிக்கடி முடி வெட்ட வசதி இல்லாததால் இந்த ஏற்பாடு. நல்ல உயரம். அதற்கேற்ற ஆகிருதி. இறுதி வகுப்பை முடித்து, பள்ளியை விட்டு நாங்கள் வெளியேறும்போது அவன் மட்டும் தனித்துத் தெரிந்தான். இன்னும் சொல்லப்போனால், நாங்களெல்லாம் பையன்களாக இருந்தபோது அவன் மட்டும் வளர்ந்த ஆள் போல இருந்தான். அந்தத் தோற்றம்தான் கண்ணன் விசயத்தில் எங்களுக்கு உதவப் போகிறது என்று எனக்கு அப்போது தெரியாது.
0
அழுக்கடைந்த எம் ஜி ஆர் சிலைக்குப் பின்னால் நெரிசல் மிக்க ஷண்முகம் சாலையில் இருந்தது கண்ணனின் கடை. கடை என்று கூடச் சொல்ல முடியாது. மாடிப் பாடியின் கீழுள்ள மூன்றுக்கு ஆறு என்கிற சரிவான இடத்தில் ஒரு தொலபேசியுடன் இருந்தது கடை. வாசற்படி அருகில் மட்டும்தான் ஆறடி உயரம். உள்ளே போகப்போகக் குறுகிவிடும்படியான அமைப்பு.
“ குள்ளன் அவன் ஒயரத்துக்கு ஒத்தா மாதிரிதான் கடையைப் பிடிச்சிருக்கான் “ என்று சிரித்தான் சாரதி.
கடையில் கண்ணன் இல்லை. வெளியே போயிருப்பதாகக் கடையில் இருந்த பையன் சொன்னான். கொஞ்சம் தாஜா பண்ணிய பிறகு எதிர் திசையில் கைக்காட்டினான்.
“ அங்கன நிக்கிறாரு.. செகப்பு கட்டம் போட்ட சட்டை.”
அவன் சுட்டிக் காட்டிய இடம் ஒரு அடகுக் கடை. மதன்லால் சேட் என்று போட்டிருந்தது. காலியான ஷெல்புகளில் ஒன்றிரண்டு வெள்ளி விளக்குகள் காணப்பட்டன. சிகப்பு சட்டைக்காரன் ஏதோ பேசிக்கொண்டிருந்தான். சேட் பலமாக இடதும் வலதுமாகத் தலையாட்டிக் கொண்டிருந்தான். பேச்சு வார்த்தை வெற்றி பெறாத சூழலில், தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு அவன் கடையை விட்டு இறங்கினான்.
‘ கண்ணனா அது! அழுக்கேறிய சட்டை, இஸ்திரி போடாத சாயம் போன பேண்ட், சீவாத தலைமுடி ‘ ஏற்கனவே குள்ளம்.. இதில் தாழ்வு மனப்பான்மையால் ஏற்பட்ட கூன் வேறு. மனது நொறுங்கிப் போனது. இவனை மீட்டெடுக்க வேண்டும் என்று இதயம் ஒரு அவசரத் தீர்மானம் போட்டது.
கடைக்கெதிரே ஆட்கள் நிற்பதைக் அவன் கால்கள் தானாக விலகி எங்களைச் சுற்றிப் போக ஆரம்பித்தன. சாரதி பலமாக அவன் தோளைப் பிடித்துத் திருப்பினான். திரும்பிய அவன் முகத்தில் கலவரம் சூழ்ந்தது. அச்சத்துடன் எங்கள் முகங்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“ எங்களைத் தெரியுதா? “ சாரதியின் குரலின் இயல்பான அதிகாரத்தோரணை அவ¨¨ மிரட்டியிருக்க வேண்டும். தெரியாது என்பது போல் தலையாட்டினான்.
“ தெரிய வைக்கிறாம் வா “ என்று அவனைப் பக்கத்தில் இருந்த உடுப்பி ஓட்டலுக்குள் தள்ளிக் கொண்டு போனான் சாரதி. ஒதுக்குப்புறமாக ஒரு மேசையைப் பார்த்து அமர்ந்தோம். கல்லாவைப் பார்த்தான் சாரதி. கூரையின் மின்விசிறி உடனே ஓடத் தொடங்கியது.
மைசூர் மசாலா தோசை, மங்களூர் போண்டா என்று மூவருக்கும் ஆர்டர் செய்து விட்டு, மலங்க மலங்க விழித்துக் கொண்டிருக்கும் கண்ணனிடம் திரும்பிச் சொன்னான் சாரதி “ ஏண்டா இன்னுமா எங்களை அடையாளம் தெரியல.. இல்ல சாக்கோபார் சாப்பிட்டாத்தான் நெனவு வருமா? “
கண்ணனின் கண்களில் ஒரு ப்ளாஷ். “ சாரதி? “ அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக அவன் இறுக்கத்தைத் தளர்த்து, விசயத்தைக் கறந்தோம். அவன் கதை சுருக்கமாக.
படிப்பு ஏறாமல் அப்பாவின் தொழிலைத் தொடர முடியாமல், அவரும் இறந்து போக நிர்கதியற்று, அம்மா வழி உறவில் ஒரு பெண்ணைக் கைப்பிடித்து இரண்டு பெண் குழந்தைகள். தொலைபேசி மையத்தில் வாடகை கூட கொடுக்க முடியாத வியாபாரம். மாசக் கடைசி கைக்கடிக்கு சேட்டுக் கடையில் நகைகள் எல்லாம் வைத்து, வட்டி ஏறி மூழ்கி, அவனே மூழ்கும் நிலைமை.
“ இப்போ என்ன பிரச்சினை? “ என்றேன் நான்.
“ ஒரு வளையல்.. ஒரு சவரன்.. தேஞ்சு போய் அரைதான் தேறும்.. அதுவும் மூழ்க்டும் போலிருக்கு..”
“ எத்தனயோ மூழ்கிருக்கு.. ஒனக்கு என்ன புதுசா என்ன? “
சட்டென்று அவன் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. ஏண்டா கேட்டோம் என்று ஆகிவிட்டது. ஐம்பது சொச்சம் வயதான ஒரு வளர்ந்த ஆண் பிள்ளை அழுதால் சகிக்காது. சுதாரித்துக் கொண்டு கண்ணன் சொன்னான்: “ எங்க அம்மாவொட கடைசி நகை. என் மனைவி அதை அம்மா படத்துக்கு முன்னால பூஜையறையில வச்சு தெனம் வெளக்கேத்துவா.. ஒரு வருசமா ஏத்தறதில்ல.. “
‘ சேட்டை ஏத்தச் சொல்லறதானே ‘ என்று சொல்ல நினைத்து அடக்கிக் கொண்டேன். மறுபடியும் முகாரி ஆரம்பித்து விட்டதென்றால்..
0
கண்ணனை கடையில் உட்கார வைத்து விட்டு என்னையும் இழுத்துக் கொண்டு சேட்டு கடை நோக்கி நடந்தான் சாரதி. கறுப்பு பேண்ட், வெள்ளைச் சட்டையை டக் இன் பண்ணியிருந்தான். அவன் நடையும் உடையும் ஒரு சிபிஐ ஆபிசர் தோற்றத்தைக் கொடுத்தன. வேலை விசயமாக இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் போய் வந்ததால் அவனுக்கு அத்துணை இந்திய மொழிகளும் சரளம்.
சேட்டு பேரேடை வைத்துக் கொண்டு நடுங்கிக் கொண்டிருந்தான். “ தர்வாஜா பந்த் கரோ.. சார் ஸோ பிஸ்.. பத்மாஷ்..’ என்று ஏதேதோ அடுக்கிக் கொண்டிருந்தான் சாரதி. “ யே கியா? “ “ காங்க்கண்.. கண்ணன் சாப் “ யே சோர்.. “ என்று கையை ஓங்கினான் சாரதி. “ கிதர் யே காங்க்கண்? “
மிகவும் மெலிசாக இருந்தது அந்த வளையல். கண்ணன் சொன்ன மாதிரி அரை சவரன் தான் தேறும்போல.
“ 6000 ரூபா வளையலுக்கு ஆயிரம் ரூபா கொடுத்திருக்கான் திருடன். வட்டி அஞ்சாயிரம்.. பகல் கொள்ளை “
இன்னும் கொஞ்சம் மிரட்டலில் வளையலைப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான் சாரதி. கண்களை உருட்டி, சுட்டு விரல் எச்சரிக்கையுடன் கடையை விட்டு வெளியேறினோம்.
0
“ ஏண்டா அவன் போலிசுன்னு ஏதாவது போயிட்டான்னா, கண்ணன் மாட்டிக்குவான். கூடவே நாமளும்.” மத்ய வர்க்க பயம் என்னைப் பேச வைத்தது.
“ மாட்டான்.. திருடனுக்கு தேள் கொட்டினா மாதிரி நடுங்கிட்டிருக்கான். போலிசுன்னு போனா இன்னும் செலவாகும்னு அவனுக்குத் தெரியும்.”
இந்தக் கதையின் ட்விஸ்ட் இப்போதுதான் வருகிறது. மறந்து விட்ட பையை எடுக்க மீண்டும் உடுப்பி ஓட்டலுக்கு போனபோது, கண்ணன் அவன் கடையில் இல்லை.
“ திரும்ப இப்படி ஆவாது சேட்டு.. ஏதோ ஒரு வெலையப் போட்டு வளையலை வச்சுக்கிட்டு காசு குடு.. இல்லன்னா என் பிரண்டுதான் அந்த ஆபிசரு.. போன் போடட்டா? “செல் போனைக் கையிலெடுத்துக் கொண்டிருந்தான் கண்ணன் அந்தச் சேட்டுக் கடையில்.
0
- திராவிட இயக்கம் எழுச்சியும் வீழ்ச்சியும் அத்தியாயம் 4
- முக்கோணக் கிளிகள் படக்கதை 1
- ஆகவே
- அந்தி மயங்கும் நேரம்
- நாடெனும்போது…
- மோடியா? லேடியா? டாடியா?
- திரை ஓசை டமால் டுமீல்
- சிறுநீர் கிருமித் தொற்று
- 1969 ஆம் ஆண்டு நிலவில் முதன்முதல் மனிதத் தடம் பதிக்க ஆழ்ந்து திட்டமிட்ட அமெரிக்கப் பொறியியல் வல்லுநர்.
- கனவு மிருகம்!
- திண்ணையின் இலக்கியத் தடம் -32
- கொள்ளெனக் கொடுத்தல்
- பாரின் சரக்கு பாலிசி
- தினம் என் பயணங்கள் -14
- அப்பா வாசித்த திருக்குறள் புத்தகம்
- அங்கதம்
- நியூஜெர்சியில் (எனது) காரோட்டம்!
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 72 ஆதாமின் பிள்ளைகள் – 3 முறிந்த இதயப் பெருமூச்சு
- பயணச்சுவை 3 . வாடிய பயிரைக்கண்டபோது . . .
- தொடுவானம் 13. பிரியமான என் தோழியே.
- வாசிக்கும் கவிதை
- பிறன்மனைபோகும் பேதை
- புள்ளின்வாய்கீண்டான்
- வளையம்
- நீங்காத நினைவுகள் – 43