நுரைத்துப் பெருகும் அருவி

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

கண்ணோரம் காக்கைக் கால்களாய்ச் சுருங்கி விரிந்து  கிடக்கின்றன காட்டு விருட்சங்கள்..

நுரைத்துக் கிடக்கும் அருவி பெருகி வீழ்கிறது அந்தரங்கம் திறந்த மனமாய்.

தவளைகள் முணுமுணுப்போது குதித்துச் செல்கின்றன கரையோரம்.

மினுமினுப்போடு  தாவித் தாவி நீந்திக் கொண்டிருக்கிறது நதி.

முங்கிக் குளித்துக் கொண்டிருந்தன கற்கள். கரையோரம் கிடந்தவை கால் நனைத்துக் கிடந்தன.

விருட்சங்கள் விருப்பத்தோடு கரை அணைத்துத் தழுவிக் கொடியாய்க் கிடந்தன.

அள்ளி அள்ளிச் சுழற்றிச் சென்றது நீரை நதி…. குழந்தையைக் கொஞ்சுவதாய்.

எச்சில் நுரையால் முத்தமிட்டபடியே சென்றன தாவரப் பாதங்களை.

ஆனந்த அதிர்ச்சியோடு நீர்ப்பாயைப் பரப்பி விட்டது அருவி.

மலைக்குகை திரையணிந்து உள் அமர்ந்து இருந்தது..தும்பிக்கையாய் வீழும் நீரினை கையேந்தியபடி.

மடியேற்றிய இன்பத்தில் பள்ளமாகக் கிடந்தன பாறைகள் மயக்க லாகிரியில்

சுற்றியடித்தபடி. காடுகளையும் கற்களையும் கடந்து கம்பீரமாக ஓடிக் கொண்டிருந்தது ஆறு.

கொலுசணிந்த குழந்தையாய் சலங்கை அணிந்த நாட்டியக்காரியாய், சில இடங்களில் சங்கிலி அணிந்த யானையாய்த் திமிறிக் கொண்டிருந்தது.

கற்கள் உருட்டிய நதி மனிதம் கழுவிக் கரை சேர்ந்து கொண்டிருந்தது நதியாய் நெளிநெளி யாய் அலையாய் அலையலையாய், செதில் செதிலாய் தங்கமீனாய், வெள்ளி மீனாய் இரவிலும் பகலிலும்..

முகத்துவாரத்தில் மௌனமாய்க் கரையைக் கடந்து கடலுள் சங்கமித்துக்  கொண்டிருந்தது புயலாய் அடித்து ஓடிவந்த நதி.. உள்வாங்கி நுரைத்துப் பொங்கிக் கொண்டிருந்தது கடல்..

உப்பு நீர்த் தாவரங்களாய் அசைந்துகொண்டிருந்தன கப்பல்களும், படகுகளும்.

ஓசையற்று உலவிக் கொண்டிருந்தது உப்புக் காற்று.

ஓங்கி அடித்துக் கரை திரும்பத் துடித்துக் கொண்டிருந்தது கடல் சேர்ந்த நதி நீர்…

உப்பளத்தில் வெந்து உயர மேகமாகி மலையைப் புணரத் துவங்கி இருந்தது மழை..

கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்ந்து நதியாய்க் கிளைக்கத் தொடங்கியது..

சூரியக் கிளைகள் இருளுள் ஊடுருவ சத்தமில்லாமல் இறங்கத் தொடங்கியது அருவி .. நுரைத்துப் பெருகத் துவங்குகிறது திரும்பவும்.

Series Navigation
author

தேனம்மை லெக்ஷ்மணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *