வாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 4

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

ஜோதிர்லதா கிரிஜா
4.
சேதுரத்தினம் அவனை வியப்புடன் பார்த்தான். ‘என்ன பேசப் போகிறான் இந்த ராமரத்தினம்? ஒருவேளை கடன் கிடன் கேட்கப்போகிறானோ? சேச்சே! அப்படி இருக்காது..’
”சொல்லுங்க. எதுவாயிருந்தாலும் தயங்காம கேளுங்க, ராமரத்தினம்!”
”நான் ப்ளஸ் டூ வரைக்கும் படிச்சிருக்கேன்.”
“அட! ப்ளஸ் டூ வரைக்கும் படிச்சுட்டா ஓட்ட்ல்லே செர்வெரா இருக்கீங்க? ஏன்? வேற வேலை கிடைக்கல்லையா?”
“ஓட்டல்ல வேலை பண்றது கேவலம்னு நினைக்கிறீங்களா, சார்?”
“சேச்சே! நான் அப்படி நினைப்பேனா? படிக்கிறவங்க யாரும் ஓட்டல்ல வேலை செய்யற நோக்கத்தோட படிக்கிறதில்லையே! ஒரு கம்பெனி, கவர்ன்மெண்ட் டிபார்ட்மெண்ட் இது மாதிரி இடங்கள்லேதானே வேலை செய்யணும்னு விரும்புவாங்க? அதனால அப்படிக் கேட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க.”
“இல்லே சார். சும்மா கேட்டேன். நீங்களும் தப்பா எடுத்துக்காதீங்க. … எம்ப்ளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்சில பதிவு பண்ணி ஆறு வருஷமாச்சு, சார். எனக்குப் பின்னாடி பதிவு பண்ணினவங்களுக் கெல்லாம் வேலை கிடைச்சாச்சு. எனக்குக் கிடைக்கல்லே. நான் டைப்பிங், ஷார்ட் ஹேண்ட் ரெண்டும் ஹையர் பாஸ் பண்ணியிருக்கேன். அதுக்கு ஏத்த மாதிரியான வேலையா உங்களால எங்கேயாவது எனக்கு வாங்கித் தர முடியுமா, சார்?”
ராமரத்தினத்திடமிருந்து இப்படி ஒரு வேண்டுகோள் வரும் என்பதை எதிர்பார்க்காததால், சேதுரத்தினம் சிறிது நேரத்துக்கு வாயடைத்துப் போனான். எனினும் அவனது உற்சாகத்தைக் குறைக்கும் வண்ணம் பதில் சொல்ல அவன் விரும்பவில்லை. எனவே, ஆதரவாய் அவனது முழங்காலில் தட்டி, “அந்த அளவுக்கு எனக்குச் செல்வாக்கு இல்லை, ராமு… நான் உங்களைச் சுருக்கமா ராமுன்னு கூப்பிடலாந்தானே?…இருந்தாலும் எனக்குத் தெரிஞ்சவங்க மூலமா முயற்சி பண்ணிப் பார்க்கறேன். கண்டிப்பா வாங்கிக் கொடுப்பேன்னெல்லாம் என்னால ப்ராமிஸ் பண்ண முடியாது…” என்றான் கனிவாக.
அவனது இரக்கம் மிகுந்த பார்வை ராமரத்தினத்தின் மீது பதிந்திருந்தது.
அவனது முகம் உடனேயே வாடிவிட்டது. இருப்பினும், புன்னகை செய்து, “ரொம்ப நன்றி, சார். உங்களால முடிஞ்ச அளவுக்குப் பாருங்க…”
என்றான்.
“கண்டிப்பா.”
“சார்! அப்புறம் ஒரு வேண்டுகோள். என்னை நீங்க, வாங்கன்னெல்லாம் சொல்லாதீங்க, சார். நீன்னே சொல்லுங்க.”
சேதுவுக்குச் சிரிப்பு வந்தது: “அதுக்கென்ன? அப்படியே சொல்லிட்டாப் போச்சு!”
பிறகு, “உங்களுக்கு… சாரி… உனக்கு அம்மா-அப்பால்லாம் இருக்காங்களா? கூடப் பிறந்தவங்க எத்தனை பேரு?”
“அப்பா இல்லை. அம்மா இருக்காங்க. ரெண்டு தங்கைகளும் ஒரு தம்பியும் இருக்காங்க. பெரிய தங்கைக்கு இருபத்து மூணு வயசு. சின்னவளுக்கு இருபது. தம்பிக்குப் பதிமூணு. படிச்சிண்டிருக்கான். என் தங்கைங்க ரெண்டு பேரும் பத்தாவதுல ஃபெயில். படிப்பை அத்தோட நிறுத்திட்டாங்க. சொந்தமா ஒரு சின்ன வீடு இருக்கு. எங்க தாத்தாவோட பூர்வீகச் சொத்து. அதை விக்கிறதுக்கு எங்கப்பாவுக்கு அதிகாரம் இருக்கல்லே. இருந்திருந்தா அதையும் வித்துக் குடிச்சுக் கரைச்சிருப்பாரு…”
“ஓ!குடிப்பழக்கம் உள்ளவரா!”
”ஆமா. ஆனா அவரு பொம்பளைப் பொறுக்கியா இல்லைன்றது மட்டுந்தான் ஒரே ஆறுதல்…”
”உங்கப்பா எப்ப காலமானாரு? அப்ப அவருக்கு என்ன வயசு?”
“ரெண்டு வருஷமாச்சு, சார். அவருக்கு அம்பத்தாறு வயசு அப்ப.”
“என்னவா யிருந்தார்?”
“ஜாஸ்தி படிக்கல்லே. ஓட்டல்லே கணக்கு எழுதறவரா யிருந்தார். தன் பிள்ளை நல்லாப் படிச்சு ஒரு நல்ல உத்தியோகத்துல இருக்கணும்னு ஆசைப்பட்டாரு. ஆனா நானும் அவர் மாதிரியே ஒரு ஓட்டல்ல வேலை செய்துண்டிருக்கேன்!”– இப்படிச் சொல்லிவிட்டு ராமரத்தினம் கசப்புடன் புன்னகை செய்தான்.
“ஓட்டல் வேலை ஒண்ணும் இழிவானதில்லேப்பா. எத்தனையோ பேர் செர்வெரா வேலையில சேர்ந்துட்டு, ஓட்டல் தொழிலோட நெளிவு சுளிவுகளை எல்லாம் கத்துண்டு பின்னால சொந்தமா ஓட்டல் வைக்கிற அளவுக்கு முன்னேறி யிருக்காங்க. சிலர் ஸ்டார் ஓட்டல் வைக்கிற அளவுக்கும் போயிருக்காங்கப்பா. ஆனா, அதுக்காக நீ ஓட்டல் வேலையிலேயே நிரந்தரமா யிருக்கணும்னு நான் சொல்ல வரல்லே. அது உன்னிஷ்டம்….ஆனா ஒண்ணை மட்டும் மறக்காதே. நம்ம வாழ்க்கையிலே ஏற்பட்ற தோல்விகள் எல்லாமே அடுத்து வரப்போற வெற்றிக்கான படிகள்னு நாம நினைக்கணும்…என்ன சொல்றே?”
“நீங்க சரியாத்தான் சார் சொல்றீங்க. ஆனா, இது மாதிரி ஞானம் இருக்கிறவங்களுக்கும் கூட, தோல்வி வர்றப்போ மனசு துவளத்தானே செய்யுது? நீஙளே சொல்லுங்க.”
“நீ சொல்றது சரிதாம்ப்பா. எப்பவுமே பிறத்தியார்க்கு உபதேசம் பண்றதும், தைரியம் சொல்றதும் ரொம்பவே சுலபம். தனக்குன்னு வர்றப்பதானே ஒண்ணோட வலியும் தெரியும்?”
“… நீங்க் எங்க சார் வேலை பண்றீங்க?”
“ஜெய்கணேஷ் அண்ட் கம்பெனியில அக்கவுண்ட்டண்டா இருக்கேம்ப்பா.”
அதன் பின் சிறிது நேரம் போல் இருவரும் ஒன்றும் பேசாமல் கடல் அலைகளை வேடிக்கை பார்த்தபடி இருந்தார்கள்.
பிறகு, “நீங்க தினமும் பீச்சுக்கு வருவீங்களா, சார்?” என்று ராமரத்தினம் அவனை விசாரித்தான்.
“இல்லேப்பா. அப்பப்போ வருவேன். என் ஒய்ஃப் பிரசவத்துக்குக் கோயமுத்தூருக்கு அவங்கம்மா வீட்டுக்குப் போயிருக்கா. வீட்டில போர் அடிக்கும் போது இங்க வருவேன்.”
ராமரத்தினத்தின் விழிகள் உடனே விரிந்ததைச் சேதுரத்தினம் கவனித்து வியப்புற்றான். அதற்குரிய காரணத்தை அடுத்த நொடியிலேயே அவனுக்கு ராமரத்தினம் தன் எதிரொலி வாயிலாகப் புரியவைத்தான்: “இன்னைக்குக் காலையில உங்களை ஒட்டல்லே சந்திச்சதுலேர்ந்து என் மனசில ஒரே ஒரு நினைப்புதான் சார் ஓடிட்டே இருந்தது. இப்ப அது போயிடிச்சு.”
“என்னப்பா சொல்றே?”
“அதை இப்ப சொல்லிப் பிரயோசனமில்லே, சார்.”
“பரவால்லேப்பா. சும்மா சொல்லு. என்னன்னு தெரிஞ்சுக்கறேனே!”
“வேற ஒண்ணுமில்லே. என்னோட முதல் தங்கையை உங்களுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கலாமேன்னு யோசிச்சேன் – உங்களுக்கு வேற யார் மேலயும் நாட்டம் இல்லாம இருந்தா! உங்களுக்குத்தான் ஏற்கெனவே கல்யாணம் ஆயிடிச்சே!”
சேதுரத்தினம் சிரித்தான்: “அதனால என்ன? ஒரு நல்ல இடமாத் தேடுறதுக்கு நானும் முயற்சி பண்றேன். …”
“ஏதோ ஒரு ஆசையிலே அப்படி நினைச்சேனே ஒழிய, அதெல்லாம் இப்போதைக்கு நடக்கிற காரியமே இல்லே, சார். முதல்ல நல்ல சம்பளத்துல நான் ஒரு பெரிய வேலையாத் தேடிக்கணும. பணம் சேமிக்கணும். அதுக்கு அப்புறந்தான் அவ கல்யாணத்தைப் பத்தி யோசிக்கவே முடியும் – அது கூட வரதட்சிணை வேண்டாம், கோவில்ல தாலிகட்டிண்டாப் போதும்னு சொல்ற ஆளாயிருந்தாத்தான்! இதெல்லாம் பகல் கனவுதானே! அந்த மாதிரி ஒரு இளிச்சவாயன் எங்கே கிடைப்பான்?”
“அப்ப? என்னைப் பார்த்ததுமே, ‘இவன் ஒரு இளிச்சவாயன்’னு உனக்குத் தோணிடுத்தாக்கும்!”
“அய்யய்யோ! நான் அந்த அர்த்தத்துல சொல்லல்லே, சார். ‘இளிச்சவாயன்’ அப்படின்னா ‘நல்லவன்’னு அர்த்தமில்லையா, சார்? உங்களுக்கு நான் எடுத்துச் சொல்லணுமா என்ன? தப்பா எடுத்துண்டுட்டீங்களா?”
சேதுரத்தினம் இரைந்து சிரித்தான்: “சேச்சே! நான் சரியாப் புரிஞ்சுண்டுதாம்ப்பா அப்படிக் கேட்டேன். நான் ஒரு பைசா கூட வரதட்சிணை வாங்காமதான் கல்யாணம் பண்ணிண்டேன். இத்தனைக்கும் அது காதல் கல்யாணம் இல்லே. எங்க மாமா பார்த்து ஏற்பாடு பண்ணினதுதான். எனக்கு அப்பா-அம்மா கிடையாது. என்னோட தாய்மாமன்தான் எனக்கு எல்லாமா இருந்தார். அவரும் இப்ப இல்லே. காலமாயிட்டார். என் ஒய்ஃபுக்கும் நெருங்கின உறவுகள் இல்லே.”
“அப்ப, பிரசவத்துக்குக் கோயமுத்தூருக்குப் போயிருக்காங்கன்னுன் சொன்னீங்களே?”
“கோயமுத்தூர்ல அவங்க ஒண்ணுவிட்ட அக்கா – பெரியம்மா பொண்ணு – இருக்காங்க. அவங்கதான் எல்லாம் பார்த்துக்கிறாங்க.”
“இதுதான் முதல் குழந்தையா, சார்?”
“ஆமா.”
“உங்களுககுப் பிள்ளை வேணுமா, பொண்ணு வேணுமா?”
` சேதுரத்தினத்துக்குச் சிரிப்பு வந்தது. “ கொஞ்ச நேரத்துக்கு முந்தி இங்க என்னோட இருந்த சிநேகிதன் கூட இதே கேள்வியைத்தான் கேட்டான். பையனோ, பொண்ணோ, குழந்தை ஊனமில்லாம ஆரோக்கியமா யிருக்கணும். நல்ல குணங்களோட வளரணும். எனக்கு வேண்டியது அதுதான்!”
“சரியாச் சொன்னீங்க, சார். ஆனா ஆண் குழந்தையா இருந்தாத்தான் நல்லது. பொண்ணுன்னா நிறையவே பிரச்ச்னைதான்!”
“பெண் குழந்தை வேண்டாம்னு நினைக்கிற அளவுக்குப் பெண்களைப் பிரச்சனையாக்கி வெச்சிருக்கிறதே ஆண்களாகிய நாமதானே, ராமு?”
“எப்படி, சார்?”
“ஆண் பிறவி பெண் பிறவியை விடவும் ஒசத்தின்ற எண்ணத்தைத் தங்கள் உடல் வலிமை ஒண்ணுனால மட்டும் பெண்கள் மனசிலே கட்டாயமா விதைச்சது ஆண்கள்தானே, ராமு? அதனோட விளைவுதானே ஒசத்தியான ஆணுக்கு அவனைப் பெத்தவங்க வரதட்சிணைன்ற பேரால விலை வைக்கிறதெல்லாம்? இல்லையா?”
“கரெக்ட், சார். நீங்க சொல்ற பாய்ண்ட் ரொமபவே பொருத்தமா யிருக்கு. கல்யாண வயசில இருக்கிற ரெண்டு தங்கைகளையும் நினைச்சு நினைச்சு எங்கம்மா கவலைப் பட்றதைப் பார்த்துப் பார்த்து எனக்கும் ராத்திரி படுத்தா தூக்கம் வரமாட்டேங்குது, சார்.”
சேதுரத்தினம் பதில் சொல்லாதிருந்தான். ராமரத்தினத்தின் சோர்ந்த முகம் பார்த்து அவன் முகமும் இறுகியது.
அப்போது, “டேய், ராஜா!” என்ற அழைப்பைக் கேட்டு ராமரத்தினம் திரும்பிப் பார்த்தான். பின்னால் ரமணி நின்றுகொண்டிருந்தான்.
“அடடே! ரமணியா? வாப்பா. உக்காரு…”என்ற ராமரத்தினம், “என்னை எல்லாரும் ராஜான்னுதான் சார் கூப்பிடுவாங்க!” என்று சேதுரத்தினத்துக்குச் சொன்னபின் இருவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தினான்.
ராமரத்தினத்தின் வீட்டுக்குத் தான் சென்றிருந்தது பற்றியும், அவன் ஏழு மணி வரை வீடு திரும்பாதது பற்றி அவன் வீட்டார் கவலைப்பட்டுக் கொண்டிருந்தது பற்றியும் ரமணி அவனுக்குச் சொன்னான்.
அவன் தன் வீட்டாரிடம் இரும்புப் பொருள்கள் செய்யும் ஒரு கம்பெனியில் தான் வேலை செய்வதாய்ப் பொய் சொல்லியிருப்பதை யறியாத ரமணி, “என்ன கம்பெனிடா அது?” என்று விசாரித்தான்.
தான் அப்படி ஒரு பொய்யைச் சொல்லி யிருப்பதாகக் கூறிய ராமரத்தினம் கூச்சத்துடன் புன்னகை புரிந்தான். “நான் வேலை செய்யிறது ஒரு ஓட்டல்லே செர்வெராடா. புரசவாக்கத்துல, கீழ்ப்பாக்கம் ஹை ரோட்ல இருகிற முரளி கஃபேயிலேடா. வீட்டுல சொன்னா வருத்தப்படுவாங்கன்னு அப்ப்டி ஒரு பொய்யைச் சொல்லி வெச்சிருக்கேன். … சார் அந்த ஓட்டலுக்குச் சாப்பிட வந்தப்போ அறிகுமமானார்…” என்று சேதுரத்தினத்தைக் காட்டினான்.
மூவரிடையேயும் சட்டென்று ஓர் அமைதி நிலவியது.
அதை ராமரத்தினமே கலைத்தான்: “அம்மாவுக்கு நான் பெரிய கம்பெனியிலேயோ கவர்ன்மெண்ட் டிபார்ட்மெண்ட் எதிலேயாவதோ வேலைக்குச் சேரணும்னு ரொம்ப ஆசை. அதனாலதாண்டா, ரமணி, இந்தப் பொய்! ”
“உனக்கு ஒரு நல்ல வேலை தேடிக் குடுக்கச் சொன்னாங்கடா உங்கம்மா. நானும் முயறசி பண்றேன்னிருக்கேன். எங்கப்பா கிட்டவும் சொல்லி வைக்கிறேண்டா. சரி. நான் கிளம்பறேன். நீயும் கிளம்புடா…” என்ற ரமணி இருவரிடமும் விடை பெற்றுக்கொண்டு தனது பைக்கை நோக்கி நடந்தான்.
அவன் பார்வையிலிருந்து மறைந்ததும், “உன் சிநேகிதன் நல்ல வாட்ட சாட்டமா, அழகாயும் இருக்கான். உங்க பெரிய தங்கைக்கு இவனைப் பார்க்கலாமே?” என்று சேதுரத்தினம் சொன்ன யோசனையைக் கேட்டு, ராமரத்தினம் வாய்விட்டுச் சிரித்தான்: “அவங்க எங்கே, நாங்க எங்கே, சேது சார்? … நான் உங்களை சேது சார்னு கூப்பிடலாந்தானே?”
“பேஷாக் கூப்பிடலாம். அது சரி, அவங்க ரொம்பவும் பணக்காரங்களோ?”
“பார்த்தா தெரியல்லையா, சேது சார்? ரெண்டு பங்களாவுக்குச் சொந்தக் காரங்க. அவனோட அப்பா பெரிய கவர்ன்மெண்ட் ஆஃபீசர்…எட்டேணி வெச்சாலும் என்னால அவங்களை எட்ட முடியாது, சார்.”
“மனசு வெச்சா எட்டலாம், ராமு – அதாவது அந்தப் பையன் மனசு வெச்சா!”
“நட்பு வேற, இது வேற, சேது சார். உங்களுக்கு நான் சொல்லணுமா என்ன! என் தங்கை பத்தின பேச்சை எடுத்தாலே, எங்க நட்புல விரிசல் ஏற்பட்டுடும், சேது சார். ரொம்ப நாளைய பழக்கம். அப்படி ஒரு எண்ணம் தானா அவனுக்கு வந்தா நல்லாருக்கும்!”
சேதுரத்தினம் அவன் சொன்னதை ஏற்கும் வகையில் மவுனமாக இருந்தான்.
“அப்ப, நாம கிளம்பலாமா?” என்று சேதுரத்தினம் சொல்ல, ராமரத்தினமும் தலையசைத்து எழுந்துகொண்டான்.
… அன்றிரவு ராமு பக்கத்து வீட்டிலிருந்து இரவல் வாங்கி வந்திருந்த ஒரு வார இதழைப் புரட்டிக்கொண்டிருந்த போது, “உன் சிநேகிதன் ரமணி எந்தக் கம்பெனியில வேலை பண்றான், ராஜா?” என்று மாலா அவனை வினவினாள்
ரமணி சட்டென்று கண் மலர்த்தி அவளைப் பார்த்தான்: “ஏன்? எதுக்குக் கேக்கறே?”
மறு நாள் சமையலுக்கு அரிசியிலிருந்து கல் பொறுக்கிக்கொண்டிருந்த மாலா, அவன் புறம் திரும்பாமலே, தலையைக் குனிந்தவாறு, “சும்மாதான் கேக்கறேன்…ஆமா? அவனுக்கு மட்டும் பெரிய வேலை கிடைச்சிருக்கே? நிறையச் சம்பளமாமே? அம்மா கிட்ட சொன்னான்.”
“அவன் பட்டப் படிப்புப் படிச்சிருக்கானில்லே? தவிர, அவன் அப்பா செல்வாக்கு உள்ளவராச்சே?”
“அது சரி, அவன் வேலை செய்யிற கம்பெனி பேரென்ன, ராஜா? அது எங்க இருக்கு?”
“ராஜா அண்ட் கம்பெனின்னு ஒரு பெரிய கம்பெனி லிங்கிச் செட்டி தெருவில இருக்கு. அதில இருக்கான்.”
“அப்படியா?” என்று கேட்ட மாலா தலையை உயர்த்தாமலே கல் பொறுக்குவதில் மும்முரமாக இருந்தாள். அவள் தலை குனிந்திருந்தாலும், அவளது முகத்து மலர்ச்சியை அவன் கவனித்து வியப்புற்றான். அவன் மனத்தில் ஒரு நெருடல் விளைந்தது. ஆனால் அது அவனுக்கு மகிழ்ச்சி யளிக்க வில்லை. அதன் பின் அவனால் கையில் இருந்த வார இதழில் கவனம் செலுத்த முடியவில்லை.

Series Navigation
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *