“பிள்ளைய சேக்க வந்திருக்கீங்களா சார்?” என்று கேட்ட ஓட்டுனரிடம், “இல்லீங்க, நான் தான் சேர வந்திருக்கேன்” என்று சொன்னேன். இதற்குப் பிறகு எட்டிமடை ரயில்வே கேட்டை தாண்டி விருந்தினர் விடுதியில் என்னை விடும் வரை ஓட்டுனர் என் பக்கம் திரும்பவே இல்லை, திரும்பிய நேரத்தில் குழம்பிப் போயிருந்த முகம் தெரிந்தது. நானும் விளக்கவோ மேலும் விவரிக்கவோ இல்லை. நுழைவு வாயிலில் செக்யூரிட்டிகள் புதிராகப் பார்த்து உள்ளேயிருந்து வந்த லிஸ்டில் பெயர் இருக்கிறதா என்று சோதித்து அனுமதித்துகொண்டிருந்தனர். மரங்கள் அடர்ந்து சுற்றிவர மலைகள் படர்ந்திருந்த அந்த வளாகத்தின் உள்ளே நுழைந்தவுடனேயே கேரளாவுக்குள் வந்துவிட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டது. கட்டிட அமைப்புகள், காவலாளிகள், உணவு எல்லாமே கேரளத்தை நினைவுபடுத்திக் கொண்டிருந்தன.
வகுப்பில் நான் தான் வயதானவனாக இருப்பேனோ என்ற கவலை உள்ளே நுழைந்தவுடன் அகன்றது. நீள் வட்ட கான்ஃபரன்ஸ் ஹால் மேஜையைச் சுற்றிலும் பல நரைமுடிகள். சென்னையைச் சேர்ந்த ஶ்ரீராம், டிவிஎஸ் குரூப் கம்பெனி ஒன்றில் சி.ஈ.ஓவாக இருந்தவர். “நானும் என் பையனும் ஒண்ணா பி.எச்.டி முடிப்போம்” என்று சிரித்துக் கொண்டே சொன்னார். என்சால்வ் டெக்னாலஜீஸ் என்ற ஒரு கன்சல்டன்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார், என்ன கன்சல்டன்சி என்றதற்கு ‘குப்பைய சமாளிக்கிறது சார்’ என்று பதில் வந்தது, waste managementல் ஈடுபட்டுள்ளார், நல்ல விஷயம் தான். சிலர் பத்தாண்டுகளுக்கு முன்பு படிப்பை முடித்துவிட்டு கார்பரேட் கம்பெனிகளில் பணி புரிந்து பின்பு ஆய்வுக்கல்விக்கு வந்தவர்கள். துபாயில் ஒரு கோடி ரூபாய் வரும் வேலை மீதான ஆசையைத் துறந்து வந்த பிக்டேட்டா (Big Data) ஆய்வாளர் கல்யாண், சாலை விபத்துக்களை தவிர்க்க எப்படி ஆய்வுகள் பலன் தரும் என்று விளக்கினார். இன்னும் பலர் அமிர்தா பல்கலையின் வளாகங்களில் ஆசிரியப் பணி புரிபவர்கள். ஆசிரியர்களாக இருக்கும் இவர்களனைவருமே எம்.பி.ஏ வுக்குப் பின்பு பல நிறுவனங்களில் பணி புரிந்து பின்பு கார்பரேட் பிரிவு (செக்டர்) தரும் மன அழுத்தம் தாங்காமல் அல்லது அந்த விரைவு வாழ்க்கை பிடிக்காமல் கல்விப்பிரிவுக்கு வந்தவர்கள். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சுரேஷ், “இங்கே(ஆசிரியர் பணியில்) நரைத்தால் அது ப்ளஸ், அங்கே(தனியார் நிறுவனங்களில்) அது மைனஸ்” என்றார். அவர் எட்டிமடையில் எம்பிஏ படித்துவிட்டு டெலிகாம் துறையில் பல காலம் பணிபுரிந்து பின்பு சொந்த தொழிலில் ஈடுபட்டு கையை சுட்டுக் கொண்டு பின்பு கல்வித்துறைக்குள் வந்தவர். இன்னொருவரோ, குடும்பத்துடன் நேரம் செலவழிக்க முடியாததால் கல்வித்துறைக்கு வந்தேன் என்றார். ஒட்டப்பாலம் ராஜீவ் உலகம் முழுவதும் சுற்றியவர், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகானாமிக்ஸில் மேல் படிப்பு, இலங்கையில் மூன்று வருடங்களுக்கு முன்பு மேற்பார்வை பார்த்த ப்ராஜக்டில் தோண்டத் தோண்ட வந்த மனித எலும்புகள், ரிஷி வேலி அனுபவங்கள் என்று சுவாரசியங்களை தனது குறுந்தாடியில் அடக்கியவர். இப்படி ஒவ்வொருவருக்குப் பிறகும் சொல்லிய, சொல்லாமல் விட்ட ஒரு நீண்ட வரலாறு இருந்தது.
ஒரு சிலர் மிகவும் வித்தியாசமானவர்களாகவும் இருந்தனர், குடியுரிமை, நல் வாழ்க்கை அமையப்பெற்றும் அமெரிக்க வாழ்க்கையில் பிடிப்பற்று மாதா அமிர்தானந்தமயி அவர்களின் வழிகாட்டலின் படி அர்ப்பணிப்புடன் வந்து பல்கலையில் சேவையும், பகுதி நேரப்படிப்புமாக இருக்கும் நாராயண், கமலாதாஸ் போன்று கவிதைகளை சிறந்த ஆங்கிலத்தில் எழுதிக் குவிக்கும் பெண், எப்போதும் சிந்தனையும் சீரியஸான முகமுமாக இருக்கும், ‘பெங்கால்’ விஷயங்கள் என்றால் மட்டும் முகத்தில் பிரகாசத்தையும், முறுவலையும் காட்டும் வங்காளி அம்லன் ரே என்று சுவாரசியமான குழு இந்த ஆய்வு மாணவர் குழு.
ஒவ்வொருவருக்குப் பின்னும் வரலாறுகள் தொற்றிக் கொண்டிருந்தாலும் அனைவருமே குதூகலத்துடன் பாடங்களை கற்பது எனக்கு அடிக்கடி ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விஷயம். “வகுப்பில் மூத்தவன் மட்டுமல்ல நான் நமக்கு பாடமெடுக்கும் எல்லா பேராசிரியர்களுக்கும் மூத்தவன்” என்று ஶ்ரீராம் சொல்வார். ஒரு நாள், ‘சார் உங்களுக்கு சுகரா’ என்று கேட்டேன், ‘உலகத்துல இருக்குற எல்லா காம்ப்ளிகேஷன்களும் ஒடம்புல இருக்கு’ என்றார் சிரித்துக் கொண்டே. பாடமெடுக்கும் பேராசிரியர்களை உரிமையோடு கிண்டல் செய்வதும் அவரே. ஆசிரியர்களும் சிரித்துக் கொண்டும் பொறுத்துக் கொண்டும் போய்விடுகிறார்கள். பல்துறை அனுபவங்கள், படிப்பு, வயது தரும் அனுபவங்கள் என்று தீவிரம் முதுகில் தொற்றிக் கொண்டிருந்தாலும், அதை கழட்டிவிட்டுவிட்டு சிரிப்பும், கிண்டலும் என்றிருக்கும் எங்கள் எல்லோரிடமும் இருக்கும் ஒற்றுமை அனைவருமே வயோதிக காலத்தில் பாடம் படிக்க வந்த வருத்தப்படாத (மனதளவில்) வாலிபர்கள் என்பதுதான்.
“எதற்காக ஆய்வுக்கு வந்தீர்கள்?”, “அட, சம்பளம் கொடுத்து அரசாங்கம் படிக்க அனுப்புகிறதா?” போன்ற கேள்விகளை என்னிடம் டெல்லியில் இருந்து கோவை வரை அனைவரும் கேட்டபடி இருந்தனர். வகுப்புக்கு வந்த முதல் வார இறுதியில் நடந்த லிட்டரேச்சர் ரிவ்வியூ குறித்த பிரசண்டேஷனில் எனது ஆய்வு குறித்து ஒரு முன்னோட்டம் கொடுத்தேன், பாக்கெட்டில் இருந்த பேனாவை வெளியே எடுத்து, “இங்க பாருங்க இந்த பேனாவை அரசாங்கம் வாங்குதுன்னு வச்சுக்கோங்க, அப்ப இந்த பேனா எந்த நாட்டிலேர்ந்து வந்ததுன்னு பார்க்கலாம், அதை வாங்க மறுக்கலாம், ஒரு நாட்டிலேர்ந்து வந்தா அதுக்கு மட்டும் எக்ஸ்ட்ரா வரி கிடையாதுன்னு சொல்லலாம், சுருக்கமாச் சொன்னா உலக வர்த்தக அமைப்பின் அடிப்படைகளான MFN மற்றும் National Treatment அரசு வாங்கும்/கொள்முதல் செய்யும் பொருட்களை நிர்ப்பந்திக்காது. அதனால இத ஒரு யுத்தியாக பயன்படுத்தி நம் நாட்டு தொழில்துறையை ஊக்குவிப்பது, இங்கே வெளிநாட்டு முதலீட்டுக்கு நிர்ப்பந்திப்பது, நமது வர்த்தக பேரங்களுக்கு வலு சேர்க்க இதை ஒரு ஆயுதமா பயன்படுத்துறது இப்படி பல வகைகளில் இது பயன்படும், அது தான் அரசு கொள்முதலுக்கு இருக்கும் விலக்குகளின் வசதி…..” என்று ஆரம்பித்தேன் பிரஷண்டேசன் முடியும் வரை எல்லோரிடமிருந்தும் கேள்விகளும், ஆச்சர்யங்களும், வருத்தங்களும், ஆலோசனைகளும் வந்து கொண்டே இருந்தன. எனக்கும் எனது இந்த ஆய்வு பலனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கை வந்தது.
மத்திய அரசு அதிகாரிகளுக்கு அவர்களது அறிவை மேம்படுத்திக் கொள்ளவும், அரசுக்கு பயன்படும் துறைகளில் கொள்நிலையை அதிகரிக்கவும் (capacity building)பல வாய்ப்புகளை வழங்குகிறது. இது குறித்து பல உயர் அதிகாரிகளுக்கே தெளிவில்லாமல் இருப்பது துரதிர்ஷ்டம். தற்போது காஜியாபாத்தில் இருக்கும் தபால்துறை பயிற்சி நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரலும் திருவாரூர்க்காரருமான இராஜராஜன் , ‘அட, வெளிநாட்டுக்குப் போய் DFFT Schemeல படிச்சதுக்கப்புறம் தனியா இரண்டு வருடம் சம்பளத்துடன் மீண்டும் படிக்க அரசு ஒப்புகிறதா?’ என்றார். பொதுவாக ‘ஏ’பிரிவில் இருக்கும் அதிகாரிகளுக்கு ஒன்பது வருடங்கள் அல்லது ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஏழு வருடங்கள் இருந்தால் வெளி நாடுகளில் நீண்ட கால பயிற்சி, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் அவர்களுக்கு இடம் கிடைத்தால் $45000 வரை நிதியுதவி, பணிக்காலமாக படிப்பு/ஆய்வை கருதுவது, கல்வி விடுப்பில் செல்லும்போது முதல் இரு வருடங்களை டெபுடேஷனாக கருதுவது, ஆய்வுப்படிப்பு என்றால் மூன்று வருடங்கள் வரை அனுமதிப்பது(அதில் முதல் இரு வருடங்கள் டெபுடேஷனாக முழு சம்பளத்துடனும், கடைசி ஒரு வருடம் விடுப்பு சம்பளத்துடனும்) போன்ற வசதிகளை நல்குகிறது. இது தவிர தற்போது கட்டாய பயிற்சியும் பல பணிக்குழுக்களில் அமல் படுத்தப்பட்டுள்ளது, அதன் மூலம் ஒவ்வொரு பதவி உயர்வுக்கு முன்பும் பயிற்சி/கல்வி, வெளிநாட்டு அமைப்புகளில் பயிற்சி ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. எனக்கு ஏற்கெனவே இருந்த கட்டாய பயிற்சியில் தாய்லாந்தில் இருக்கும் ஏஷியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, மலேஷியாவில் ஒரு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயிற்சி வழங்கப்பட்டது. இது தவிர இங்கிலாந்தில் எம்பிஏ படித்ததற்கான செலவையும் அரசு ஏற்றுக்கொண்டது. பொதுவாக இது போன்ற படிப்புகளுக்கு செல்லும்போது மீண்டும் அரசுப்பணிக்கு திரும்பி வரவேண்டும், மூன்று வருடங்களாவது பணி புரியவேண்டும் அல்லது அரசு செலவழித்த தொகை, சம்பளம் ஆகியவற்றை திருப்பித் தரவேண்டும் என்ற ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டுச் செல்லவேண்டும்.
பொதுவாக கல்வி/ஆய்வுக்கென விரும்பிச் செல்லும் அதிகாரிகள் சிலரே என்பதால் இப்படியான ஆர்வமிருக்கும்போது அது ஊக்குவிக்கப் படுகிறது. எனது ஆய்வுக்கான அனுமதி, துறைத் தலைவர்/ டைரக்டர் ஜெனரல் மேஜைக்கு சென்ற பத்து நிமிடங்களிலேயே அப்ரூவ் ஆகிவந்தது. எனது வழிகாட்டுனர் இருக்கும் பல்கலைக் கழகத்துக்கு தாம் சென்றிருப்பதாக தற்போதைய வணிகத் துறை செயலாளர் என்னிடம் பேசிக்கொண்டிருக்கும்போது தெரிவித்து, நல்ல விஷயம் செல்லுங்கள் மேலும் ஆய்வுக்கு என்ன வேண்டுமானாலும் உதவி செய்கிறேன் என்றார்.
கல்வி குறித்து எல்லோரும் கேட்கும் கேள்வி, இதனால் பதவி உயர்வு கிடைக்குமா என்பதுதான். ஆனால், இதற்கும் பதவி உயர்வுக்கும் சம்பந்தம் இல்லை, அரசாங்கத்தின் மிக உயர்பதவிக்கு (கேபினட் செக்கரட்டரி) முதல் நிலை பட்டமே போதும் என்று சொன்னால் எல்லோரும் ஆச்சர்யப்படுகின்றனர். ஆனாலும், கல்விக்கும் கல்வியின் மூலம் சீர்படுத்தப்படும் அறிவுக்கும் மதிப்பு இருக்கத்தான் செய்கிறது:
“உற்றுழி உதவியும் உறு பொருள் கொடுத்தும், பிற்றை நிலை முனியாது, கற்றல் நன்றே; பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்றுள்ளும், சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்” (புறம், 183)
என்று சங்ககாலத்திலேயே அவ்வையார் பாடியிருக்கிறார் அல்லவா , மாநில அரசாங்களில் எப்படியோ, மத்திய அரசைப் பொறுத்தவரை பல சமயங்களில் தாய் மனம் திரிவது உண்மைதான், குறிப்பாக டெபுடேஷன் மற்றும் விசேஷப் பதவிகள் விஷயத்தில் இது மேம்பட்டுத் தெரியும். இது மட்டுமல்லாது கல்வி என்பது எந்த இகலோக பலன்கள் இல்லாவிடினும் விசேஷமானதே.
கோவையின் அமிர்தா பல்கலைக் கழகம் ஆச்சர்யங்கள் தொகுப்பு. இங்கே இந்தியா முழுவதிலும் இருந்து வந்திருக்கும் ஆசிரியர்களை பார்க்கும்போது தமிழ்நாட்டின் மேற்படிப்பு எவ்வளவு முன்னேறியிருக்கிறது என்பது தெளிவாகப் புலப்படுகின்றது. சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவின் பர்ட்யூ பல்கலைக் கழகத்திலிருந்து (Purdue University) பத்ரி நாராயண் வந்திருந்தார். சீனாவின் வளர்ச்சி எப்படிப்பட்ட மாற்றங்களை அமெரிக்காவிலும், மற்ற சில நாடுகளிலும் இருக்கும் தொழில்துறை வாய்ப்புகளை பாதிக்கிறது என்பதை CGE முறை மூலம் ஆராய்ந்து விளக்கினார். சீனாவின் வளர்ச்சி, அமெரிக்காவில் உள்ள திறன் குறைவான வேலைவாய்ப்புகளை பாதித்திருக்கிறது, ஆனால் திறன் உள்ளவர்களுக்கான வேலை வாய்ப்புகளை அது அதிகரித்துள்ளது. அது போலவே சிறிய இயந்திர உற்பத்தியை பாதித்துள்ளது ஆனால் அமெரிக்காவின் பெரும் இயந்திர உற்பத்தியின் வளர்ச்சிக்கு உதவியுள்ளது, வேலைவாய்ப்பில் கீழான வேலைகள் குறைய – மேலான வேலைகள் அதிகரித்தது என்பதை புள்ளி விவரங்களுடன் விளக்கினார். ‘இது எதேச்சயாக நடந்ததா, திட்டமிட்டு அமெரிக்கா இதை செய்ததா’ என்று கேட்டேன். அதைக் கேட்ட பத்ரி கொஞ்சம் யோசித்துவிட்டு, ‘திட்டமிட்டுத்தான், அவர்கள் இதில் நிபுனர்கள்’ என்றார். இது போன்ற கணக்கிடும் முறைகள் இந்தியாவில் இல்லாததால் நாம் நமது பன்னாட்டு பேரங்களில் பின் தங்கியிருப்பதாகவும், எனக்கு பரிச்சியமான அபிஜித் தாஸை டெல்லியில் பார்த்ததாகவும், அவர் இது சம்பந்தமாக உதவக் கோரியதாகவும் தெரிவித்தார். எனது வழிகாட்டியும், இங்கிலாந்தில் பல்கலைக்கழகமொன்றில் பேராசிரியராக இருக்கும் பஞ்சாபிப் பெண்மணியிடம் சொன்னபோது, ‘அட பத்ரி எனக்கும் நல்ல நண்பன், அவனுக்கு கோயம்புத்தூர் தானே சொந்த ஊர்’ என்றார், உலகம் எவ்வளவு சிறிதென்று நினைத்துக் கொண்டேன்.
வகுப்புகள் முடிந்தவுடன் மறுநாள் தரவேண்டிய பிரசண்டேஷன் அல்லது அசைன்மண்ட் என்று ஓடப் பார்த்தால் யோகா வகுப்பெடுக்கும் உதயகுமார் ஒருவரையும் விடுவதாயில்லை. இந்திய தத்துவ மரபுகளைப் பற்றிய நீண்ட அனுபவமும், படிப்பும் உள்ளவர் முனைவர் உதயகுமார். ஆனால், இதெல்லாம் ஆய்வு அறிஞர்களிடம் செல்லுபடியாகுமா என்ன? ஒவ்வொரு வகுப்பிலும் வாதங்கள், பிரதிவாதங்கள், சுவையான சம்பவங்கள் என்று நிரம்பி வழிகின்றது. பல தருணங்களில் உதயகுமாரைவிட மாணாக்கர்களுக்கு ஆன்மீக வழிகள் குறித்து அதிக ஆழமும் இருக்கின்றது. தென்னமரிக்க ஞான குரு ஒருவரைப் பற்றிய உரையாடலின் போது நான் அவர் பின்னாளில் எப்படி மாறிப்போனார், அது குறித்து இர்விங் வாலஸின் பெண் அமி வாலஸ் எழுதிய நூல் ஆகியவை குறித்து விரிவாக பேசினேன்.
இதனால் யோகா வகுப்புகள் பிரயோசனமில்லை என்று அர்த்தமில்லை. ஒவ்வொரு யோகா வகுப்பு முடிந்தவுடனும், இதயம் அமைதியில் நிரம்பி வழியும். வகுப்பு முடிந்து விட்டு வான் மறைத்த மரங்கள் இருபுறமும் குளிரை பரப்பிக் கொண்டிருக்க, மெல்லிய இருளும் புல்லினங்களின் இரைச்சலுடன் மிதந்து வரும் அமைதியும் நிரம்பிய சாலைகளின் வழியே பல்கலைக்கழக கேண்டீனுக்கு சென்று உணவருந்திவிட்டு வானில் மினுக்கும் நட்சத்திரப்பூச்சிகளை பார்த்தபடியே வகுப்புகளில் நிகழ்ந்த உரையாடல்கள் தொடரும் இத்தருணங்கள் தான் வாழ்க்கையின் உச்சங்கள் என்ற உணர்வு அடிக்கடி ஏற்படுகின்றது.
அமிர்தாவின் இந்த ஆய்வுப்பயிற்சியின் சர்வதேசத் தரம் மிகவும் ஆச்சர்யப்படுத்துகிறது. இத்தாலியில் இருக்கும் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் வந்து ஆய்வை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்று விரிவாகப் பேசினார். பின்பு நீண்ட கலந்துரையாடலும் இருந்தது. அமெரிக்க பல்கலைக் கழகமொன்றில் பேராசிரியராக இருக்கும் ராம் பிஷூ, ஒவ்வொரு கோடைக்கும் வந்து அமிர்தாவில் பாடங்களை எடுப்பதை வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கின்றார். அதுபோன்றே இந்தியா முழுவதிலுமிருந்தும் வந்து பாடமெடுக்கும் பேராசிரியர்கள். இது போன்ற பல்கலைக்கழகங்கள் இப்போது மெதுவாக ஆய்வுத்துறையில் முன்னேறி வந்தாலும் நாம் இன்னமும் மேலைநாடுகளுடனும், பக்கத்தில் இருக்கும் சீனாவுடனும் ஒப்பிடும்போது மிகவும் பின் தங்கியே இருக்கின்றோம். எனது ஆய்வுக்கரு சம்பந்தமாக சீனாவில் என்ன நிகழ்கிறது என்று கூகிளில் சென்று பார்த்தபோது அங்கே பல பல்கலைக்கழகங்களில் இது ஆய்வு செய்யப்படுவதையும் அவ்வாய்வுகள் எல்லாமே சீன மொழியில் நடைபெறுவதையும் பார்த்தேன். சீன மொழி, கலாச்சாரம் என்பது சீனப்பெருஞ்சுவர் போன்று இருக்கிறது. இருந்தும் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா ஆகியவை சீனாவின் பொருளாதாரப் புள்ளி விவரங்களை அறிந்து கொள்ள எல்லா வகைகளிலும் முயற்சிகளை மேற்கொள்கின்றன. வெளிநாடுகளில் உள்ள சீனர்களும் தற்போது இந்தியர்களை விஞ்சிக் கொண்டு வருகிறார்கள். இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்ஹாம் பல்கலையில் சீனர் ஒருவர் அவர்களது பொதுத்துறையைப் பற்றி செய்த ஆய்வை படிக்கும்போது ஆச்சர்யமாகவும் பிரம்மிப்பாகவும் இருக்கிறது. இது எப்படி நிகழ்கிறது? பாரம்பரியமாக இந்தியர்கள் அறிவுத்திறமைக்கும், ஆங்கில பாரம்பரியத்துடன் ஒட்டி இருந்ததால் மேற்குலகின் முறைகளுடனும் பரிச்சயப் பட்டவர்கள் அதனால் இந்தியாவிற்கு வெளியிலும் அவர்களது திறமை போற்றப்பட்டது. ஆனால் இப்போது அந்நிலைக்கும் போட்டி வந்துவிட்டது.
அமிர்தா பல்கலையில் பாடங்கள் வகுப்புகளுடன் நின்றுவிடுவதில்லை என்பதும் விசேஷம். ஆய்வின் ஒரு பகுதியாக சின்னாம்பதி, புதுப்பதி இருளர் கிராமங்களுக்கு பஞ்சாப் பல்கலையின் இணை பேராசிரியர் பம்பா முகர்ஜி யின் வழிகாட்டுதலில் சென்று வந்தோம். என்னுடன் எனது குடும்பமும் வந்து கலந்து கொண்டது. மலையில் யானைகளும் பிற விலங்குகளும் வந்து உண்ணும் உப்புமண், இருளர்களின் தெய்வங்கள், வண்ணத்துப் பூச்சிகள் அடையடையாய் அப்பியிருந்த யானை சாணம் என்று இவற்றைப் பார்க்கப் பார்க்க எனது மகளுக்கு மிகுந்த சந்தோஷம். திடீரென என்னிடம் பம்பா வந்து அவரது தந்தையுடன் பக்கத்தில் எங்காவது செல்லலாம் என்றார். கோவை கடவுச்சீட்டு அதிகாரியும் நண்பருமான சசிகுமாரிடம் தெரிவித்தேன். கேரள – தமிழக வனத்துறையினரின் வழிகாட்டுதல்களில் உள்ளே காடுகளுக்கு சென்று வந்தோம், வழியில் மடிந்து கிடந்த கனத்த மூங்கில்களை அப்புறப்படுத்திவிட்டு காட்டுக்குள் சென்று வந்தது ஒரு இனிய அனுபவமாக அமைந்தது.
எவ்வளவு மன அழுத்தம் இருந்தாலும், அறையின் சாளரம் வழியே தெரியும் ஆனைமலை (இது நாங்கள் வைத்த பெயர், என்ன பெயர் என்று தெரியாது) அத்தனை அழுத்தங்களையும் நீக்கிவிடும் வல்லமை படைத்ததாக இருக்கிறது. மேகங்கள் அதன் முகட்டை எந்நேரமும் தழுவியபடி இருக்கும். சில சமயங்களில் அம்மேகங்கள் குளிர்ந்து சாரை சாரையாக மலையில் இருந்து சிற்றருவிகள் கொட்டியபடியும் இருக்கும். மலை மேல் ஏறவேண்டும் என்பது என் ஆசை, சில வருடங்களுக்கு முன்பு சில எம்பிஏ மாணவர்கள் ஏறினார்கள் ஆனால் மேலே சென்றதும் வழி தவறிவிட்டார்கள், அங்கே மரங்கள் உயரமாக இருப்பதால் எங்கிருக்கிறோம் என்றே தெரியவில்லை, பின்பு அந்தப் பக்கம் உள்ள மலைக்கிராமத்துக்கு சென்று அங்கிருந்து மறுநாள் வந்தார்கள் என்று பல்கலைக்கழக ஆசிரியர்கள் சொன்னார்கள். மலையில் யானைகள், பல சிறு மிருகங்களும் இருப்பதாகவும் சொன்னார்கள். வனத்துறையில் பேசும்போது கோவைப் பகுதியில் இரண்டாயிரம் யானைகள் உள்ளன என்று சொன்னார்கள். அவை நீர் மற்றும் உணவுக்காக மலை மலையாக நடந்தபடி பிரயாணிக்கின்றன, நீரில்லாத காலங்களில் கீழேயும் வருகின்றன. சின்னாம்பதிக்கு நாங்கள் சென்றிருந்தபோது அன்று அதிகாலையில் தான் ஒரு யானை குடியிருப்புக்குள்ளேயே வந்துவிட்டது என்று சொன்னார்கள். முன்பெல்லாம் மின்வேலிகள் யானைகளை தடுத்து நிறுத்தின. ஆனால் இப்போது யானைகள் புத்திசாலித்தனமாக மரங்களை எடுத்து மின்வேலிகளில் போட்டு உடைத்துவிட்டு உள்ளே வந்துவிடுகின்றன என்றார்கள். சின்னாம்பதியில் அகழி போன்று ஒரு பக்கமாக பள்ளம் வெட்டி வைத்திருக்கின்றனர். யானை வந்தால் வேண்டிக்கொள்வோம், போய்விடும் என்றார் ஒரு இருளர் சமுதாய மூதாட்டி. இப்படித்தான் பிள்ளையார் வழிபாடு தோன்றியிருக்கக் கூடும் என்று நினைத்துக் கொண்டேன் நான். யானைகள் ஒரு காலத்தில் எங்கும் திரிந்திருக்கக் கூடும் அதனால் தான் கோச்செக்கன் யானை ஏற முடியாத மாடக் கோவில்களை காவிரிக்கரையெங்கும் கட்டினான் போலும்.
ஸ்ரீராம் தமது வயது, கம்பெனியின் தலைமைப் பொறுப்பில் இருந்தது, அறிவு, அனுபவம் ஆகியவற்றின் காரணமாக அனைவருக்கும் ‘ஶ்ரீராம் சார்’ ஆகிவிட்டார். நாங்கள் மட்டுமல்ல, ஆசிரியர்களும் அவரை அப்படியே அழைக்கின்றார்கள். ஶ்ரீராம் சாரும் மற்றவர்களுடன் படிக்கட்டில் அமர்ந்து இரவு படிப்பது பார்ப்பதற்கு விசித்திரமான காட்சியாக இருக்கின்றது. சில சமயங்களில் படிப்பு முடிந்தவுடன் இரவு பாட்டுக் கச்சேரியும் உண்டு. ஆய்வறிஞர்கள் தங்கியிருக்கும் கெஸ்ட் ஹவுஸ் சற்றே தனியாக இருப்பதால், பாட்டுச் சப்தம் பிரச்சினையாயிருப்பதில்லை. டெல்லியில் தமது இளமைக் காலத்தை கழித்த ஶ்ரீராம் சார், ஹிந்திப் பாடல்களை பாடுவதில் வல்லவர். பாலக்காடு காரர்களைப் பற்றி சொல்லும் சில விஷயங்களில் அவர்களது சங்கீத அறிவும் பிரமாதமாக சொல்லப்படும், அது நிரூபிக்கும் வண்ணம் இரவு படிப்பு முடிந்தவுடன் உச்சஸ்தானியில் பாட நாங்கள் அமர்ந்து கேட்பதும் அடிக்கடி நிகழ்கிறது. பொதுவாக மலையாளிகளுக்கு நல்ல குரல் வளம், அது எப்படி அமைந்ததென்று தெரியவில்லை. பல மொழிகளும் பேசுகிறார்கள், கிட்டத்தட்ட எல்லோருக்குமே ஓரளவுக்கு தமிழ் தெரிந்திருக்கிறது. ‘சின்னச் சின்ன ஆசை’யை கொச்சியைச் சேர்ந்த ஒரு லெக்சரர் தமிழுக்கே உரிய ஏற்ற இறக்கங்களுடன் துல்லியமாக பாடுவதை ஆச்சர்யத்துடன் கேட்டுக்கொண்டிருந்தேன். நான் டெல்லியில் இத்தனை வருடங்களாக வசித்தும் இன்னமும் எனது ஹிந்தி சென்னை எக்ஸ்பிரஸில் திரைப்படத்தில் வரும் ‘மீனம்மா ஹிந்தி’ போன்றுதான் இருக்கிறது!
இருந்தும் வருத்தமில்லை. படித்துக் கொண்டிருக்கும்போது வருத்தப்பட நேரமேது?
“யாண்டு பல ஆக நரை இல ஆகுதல்
யாங்கு ஆகியர்?’ என வினவுதிர் ஆயின்
மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்,
யான் கண்டு அனையர் என் இளையரும், வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும், அதன் தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே.”
பிசிராந்தையார்- புறநானூறு (191)
- பிரபஞ்ச தோற்றத்துக்கு அகிலாண்ட மூலத் தூசியை [Cosmic Dust] சூப்பர் நோவா [மரணப் பூத விண்மீன்] வெடிப்புகள் ஊட்டியுள்ளன.
- நெப்போலியன் நாடக நூல் வெளியீடு
- நினைவுகளின் சுவட்டில் (84)
- கொலைக்களன்களின் மறு உருவாக்கம்
- சிறை பட்ட மேகங்கள்
- உத்தமபுத்திரா புருஷோத்தம் – தமிழ்க்கவிதைக்குப் புதுவலிமை
- எங்கே செல்கிறது இயல்விருது?
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 12
- வாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 11
- தினம் என் பயணங்கள் -25 அடையாள அட்டை
- மொழிவது சுகம் ஜூலை 10 2014
- வளவ. துரையன் எழுதிய ”ஒரு சிறு தூறல்” [கவிதைத் தொகுப்பு வெளியீடு]
- (84) – நினைவுகளின் சுவட்டில்
- பிரெஞ்சு புரட்சியின் மறுபக்கம்
- முண்டாசுப்பட்டி ( திரை விமர்சனம்)
- வாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 11
- வயதான காலத்தில் பாடம் படிக்கப்போன வருத்தப்படாத வாலிபர்.
- நான் தான் பாலா ( திரை விமர்சனம்)
- மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் – அத்தியாயம் 1
- வேலையத்தவங்க
- சாகசக்காரி ஒரு பார்வை
- பாவண்ணன் கவிதைகள்
- புதுவிலங்கு
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 83
- தொடுவானம் 24. சென்னை கிறிஸ்துவக் கல்லூரி
- இந்துத் திருமணங்களைப் பற்றிக்கொண்டுள்ள ஜோதிட நோய்