பாவண்ணன் கவிதைகள்

This entry is part 1 of 20 in the series 20 ஜூலை 2014

1.முடித்தல்

தொலைபேசிப் பேச்சை முடிக்கும்போதெல்லாம்
என் குரலில் வருத்தம் படிந்துவிடுகிறது

மெதுமெதுவாக இறகையசைத்து
வானைநோக்கி எழுகிற ஆனந்தம்
ஏன் பறந்தபடியே இருப்பதில்லை?

இன்னும் நீட்டிக்கும் வாய்ப்புக்காக
உன்னுடன் சொல்லிப் பகிர்ந்துகொள்ள
நினைவுகளைச் சீய்க்கிறது மனக்காகம்

இந்த முறையாவது
சிரித்தபடியே விடைதரவேண்டுமென
எடுத்த முடிவு
பனித்துளியாக விழுந்து கரைந்துபோகிறது

சரி, வைக்கட்டுமா என
கேட்டே தீரவேண்டியிருக்கிறது
திசையெங்கும் திரும்பித் துள்ளிப் பறக்கும்
பட்டத்தின் கயிற்றை அறுப்பதுபோல

வைத்த பிறகுதான்
சொல்ல மறந்த கதையொன்று உதிக்கிறது

அடுத்த முறையாவது
வருத்தம் படியாமல் முடிக்கவேண்டுமென
மனசுக்குள்
மீண்டும்மீண்டும் சொல்லிக்கொள்கிறேன்

2. நினைவுச்சாரல்

இன்றைய அதிகாலை நடையுடன்
ஒட்டிக்கொண்டது உன் நினைவு

வழக்கமான பறவைகளின் குரல்களுடன்
பாதையோரத்தில் நிற்கின்றன மரங்கள்
இன்னும் பிரியாத இருள்நடுவே

ஏதோ மாயத்தால் உன் குரலாய் மாறியது
அவற்றின் குரல்கள்

நீ இசைக்கும் ஒவ்வொரு வரியையும்
என் நெஞ்சு திருப்பிப் பாடுகிறது

அந்த ராகத்தின் துல்லியம் பிசகாமலிருக்க
ஒவ்வொரு நரம்பும் ஒத்துழைக்கிறது

என் கண்களிலிருந்து கசியும் நீரை
தொட்டுத் துடைப்பது உன் விரலா?

உச்சத்துக்கு, மேலும் உச்சத்துக்கு என
எழுச்சியுறுகிறது இசையின் வெள்ளம்

என் மீதான உன் ஈடுபாடுபற்றி
எந்தக் கேள்விக்கும் இனி இடமில்லை

நான் வீடு திரும்பத்தான் வேண்டுமா
இந்த இனிய சாரலிலிருந்து

3. மறைந்த ரோஜா

ஆசையுடன்
முகம்பார்த்துச் சிரிப்பதைப்போல
ஒரு வேலிக்கு வெளியே
தலைநீட்டிச் சிரிக்கிறது ரோஜாப்பூ

அடுத்தடுத்த நாட்களில்
அதன் சிரிப்பில்
மினுமினுப்பு கூடிக்கொண்டே போனது
சுண்டி இழுப்பதாய் மாறியது அதன் நிறம்
முத்தமிடத் துடித்தன அந்த இதழ்கள்

அத்துமீறிக் கைவைப்பது
அநாகரிகம் என்கிற எண்ணத்தால்
வசீகரத்தின் அழைப்பில்
தடுமாறும் மனத்தைத் தடுத்துவிட்டேன்

இன்று
ரோஜா இல்லாத
வேலியின் வெறுமையில்
தடுமாறுகின்ற கண்கள்

துயரத்தின் கண்ணீர் ததும்ப
எங்கே போனதோ என் ரோஜா?

4. சுயசரிதை

நெருங்கி இருந்த நாற்காலியிடம்
குளிரும் பனியும் தழுவும்
இரவின் தனிமையில்
தன் நெடுங்கதையைச் சொல்கிறது
தோட்டத்து மரம்

தன் இளமையின் எழுச்சியை
அழிந்துபோன சகமரங்களின் சரித்திரத்தை
ஒற்றை இடையிலிருந்து புடைத்து
திசையெங்கும் பிரிந்த கிளைகளை
ஆரத் தழுவ ஓடிவரும்
காற்றின் மீதூறும் மயக்கத்தை
மழையின் ரகசிய மொழியை
இலைகளை உரசி உருவாக்கும் இசையை
பறவைகளிடம் பகிர்ந்துகொண்ட துக்கங்களை
சூரியனும் நிலவும் பொழியும்
அமுதத்தின் ருசியை
பூமியின் ஈரத்தை உள்வாங்கி அனுப்ப
உடலெங்கும் பிரிந்து நீளும்
தண்ணீர்த் தடங்களை

வேதனையைக் கரைக்கும் வேகத்தில்
தொடர்ந்து விவரிக்கிறது
மனங்கவர் இளைஞனின் தழுவலால்
இளம்பெண்ணிடம் பொங்கிய ஆனந்தத்தையும்
தூக்கிட்டு உயிர்துறந்த அவள் துடிப்பையும்

Series Navigation
author

பாவண்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *