மன்மதனிடம் அம்புகள் தீர்ந்துவிட்டன

This entry is part 1 of 28 in the series 27 ஜூலை 2014

 

 

அலுவலகத்தில் கொஞ்சம் வேலை பாக்கி யிருந்தது. காலையில் வந்துகூட முடித்துக் கொள்ளலாம், என்றாலும் என்னவோ ஒரு யோசனை. முடிச்சி ஒழிச்சிட்டுத்தான் போகலாமே. என்றிருந்தது சிதம்பரத்துக்கு. தொட்டுத் தொட்டு வேலை அவனை இழுத்துக்கொண்டது. அடிக்கடி கைக் கடிகாரத்தில் மணி பார்த்துக் கொண்டான். நேரம் போகிற மாதிரியே இல்லை. ஆச்சர்யம். அத்தனை சுறுசுறுப்பாக, ஆவேசமாக வேலை செய்கிறோமா என்ன?… ஒரு கட்டத்தில் அலுத்துப் போய் பேனாவைப் போட்டுவிட்டு எழுந்து சோம்பல் முறித்தான். தலை நிமிர்ந்து பார்க்கவே தூக்கிவாரிப் போட்டது. அலுவலகத்தில் யாருமே இல்லை.

“அழகப்பா?“

பதில் இல்லை. பியூன் கூட இல்லை. போய்விட்டான் போலிருக்கிறது…

திரும்பவும் மணி பார்த்தான். ஐந்தே கால் காட்டியது. அடாடா, கடிகாரம் ஓடவில்லை போலிருக்கிறது. மணிக்கட்டை ஒரு குலுக்கு குலுக்கினான். எத்து வாங்கிய சண்டிமாடு போல திரும்ப ஓட ஆரம்பித்தது. இந்த எத்துக்கு எவ்வளவு நேரம் மரியாதை இருக்கும் தெரியவில்லை. அலுவலக சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தான். ஆறரை!

கடிகாரங்கள், தாம் செத்த நேரத்தை சரியாகக் குறித்துக் கொள்கின்றன.

வீடடைதலில் சிறு அலுப்பு கண்டிருந்தான். மற்றவர்கள் சட்டுப் புட்டென்று வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பி யிருந்தார்கள். அவர்களில் பெரும்பாலோர் நகரத்துக்குத் தள்ளி, அலுவலகத்திற்கு தூரத்தில் குடி யிருக்கிறவர்கள். பத்து மணி அலுவலகத்துக்கு பதினோரு மணிக்கு வந்து, ஐந்து மணிக்குப் போக வேண்டியவர்கள் நாலரை வாக்கில் கிளம்பினார்கள்… பஸ் ஏறி, ரயில் நிலையம் போய் வண்டி மாறி… அப்பாடா, என்று அவர்கள் வீடடையவே ஒண்ணரை, இரண்டு மணி நேரம் ஆகிவிடுகிறது. ஊர் எல்லையில் என்றாலும், சொந்தவீட்டுக் காரன் என்கிற பெருமையை அவர்கள், வியர்வை சுமந்த புன்னகையுடன் மௌனப் பிரகடனம் செய்தார்கள்.

மனுசனுக்கு இதெல்லாமும் வேண்டித்தான் இருக்கிறது.

வள்ளியம்மைக்கும் அவனுக்கும் இதை வைத்துத்தான் காலையில் சிறு சலசலப்பு வந்தது.

கல்யாணம் ஆனதில் இருந்தே மாதம் ஒன்றோ இரண்டோ, இப்படி உரசல்கள், கீறல்கள் இருக்கத்தான் இருந்தன. அவள் சுபாவம் அப்படி. சட்டென்று எதாவது சொல்லிவிடுவது அவள் வழக்கமாய் இருந்தது. அதுகுறித்து பிற்பாடு குறைந்தபட்ச வருத்தம் கூட அவள் பாராட்டாதது ஆச்சர்யம். கல்யாணம் ஆன புதிதிலேயே இவன் சற்று அழுத்தி அதை வேண்டிப் பெற்றிருக்கலாம். அவளை மன்னிப்பு கேட்க வைத்திருக்கலாம்… என்று அவன் இப்போது நினைத்தபோது காலம் கடந்து விட்டிருந்தது. இனி அவளை மாற்ற முடியாது, என ஏனோ நினைக்க ஆரம்பித்திருந்தான். நாம்தான் விட்டுக் கொடுத்துப் போக வேண்டும… என்பதாய் நினைத்தான். பிறகு அதில் மாற்றமே இல்லை.

உணர்ந்து கொள்ளாதவர்களை மாற்றுவது, மாற்றம் அல்ல, அடக்குதல் என்பது அவன் அபிப்ராயம். அது உள்ளத்தில் மாறாத வடுவாகி நிரந்தர கசப்பு எனவே கெட்டிப்பட்டு வக்ரமாக பின்னொரு ஆத்திர நாளில் வெளிப்படும்… அத்தோடு யாரையும் அடக்க அவன் நினைப்பதே இல்லை. அது நியாயாம் அல்ல என்பது அவன் நிலைப்பாடு.

வெளியே வர லேசாய் இருட்ட ஆரம்பித்திருந்தது. பொழுது சற்று மஞ்சள் கொடுத்திருந்தது. நகர வெயில் சீக்கிரம் இருட்டுவது இல்லை. இந்த ஜுன் மாதத்தில் இந்த சூடு அதிகம் தான். அலுவலக ஏ/சிக்கள் வெயிலைப் பார்த்து சதா உருமிக் கொண்டிருந்தன. தெருவில் நடக்கையில் வழியில் இருக்கும் அலுவலகங்களின் ஏ/சிச் சத்தம் இன்னும் கேட்டவாறிருந்தது. சனங்கள் இன்னும் அங்கே வேலை செய்கிறார்கள்… சில நாட்கள் மின் தடை வந்து, இன்வர்ட்டர்கள், அவைவேறு பெருங்குரலில் வசைபாடிக் கொண்டிருக்கும். வாழ்க்கை சாபமாகிப் போன உலகம். வெளியே இத்தனை இடர்ப்பாடுகளுடன், அறைக்குள் கதவைச் சாத்திக்கொண்டு தன்னைக் குளிர்ப்படுத்திக் கொள்ளும் அளவு மனிதர்கள் ஒடுங்கிப் போனார்களே, என்றிருக்கும்.

சிதம்பரம் எளிமையான வாழ்க்கையில் பிரியங் கொண்டவன். உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம், போதும்… என்று வாழ்கிறவன். நகை, என்றும், டி.வி. என்றும், ஏ/சி என்றும், ஃப்ரிட்ஜ் என்றும்… ஆசைகளோ அகாடின் வாத்தியம் போல, வாழ்க்கையின் தேவைகளை விரித்தபடியே இருந்தது. எத்தனை கிட்டே போயும் வசதிகள் தள்ளித் தள்ளி எட்டிப்போய் அவனை வேடிக்கை செய்தன. இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தில் அவன் ஆயாசப்பட்டால், வசதிகள் கிடைக்காததில் இவள் – வள்ளியம்மை ஆத்திரமுற்றாள். ஒற்றைச் சம்பளம். விரல் சார்ந்த வீக்கமே நமக்கு அழகு… என்றெல்லாம் அவள் நினைத்தாளா என்பதே தெரியாது. இவனுக்கு சாமர்த்தியம் அத்தனை பத்தாது, என்பதாய் இருந்தது அவள் கணக்கு.

கல்யாணமாகி வரும்போது, அவன் எதுவும் கேட்காமலேயே அவன்மாமனார் பீரோ, கட்டில், மெத்தை, ஒரு ஃப்ரிட்ஜ்… இருபது பவுன் நகை, என்று அவளுக்குத் தந்தனுப்பினார். எத்தனை போடுகிறீர்கள் என்று சிதம்பரமோ, அவன் தாயாரோ பேரம் பேசவேயில்லை, என்பதில் அவருக்கு சந்தோஷம். மாப்பிள்ளை நல்ல குணம். ஒரு கெட்ட பழக்கம் கிடையாது. நல்ல பக்தி சிரத்தை இருக்கிறது. ஒரு வார்த்தை அதிர்ந்து பேசத் தெரியாது… (நம்ம வீட்டு இது, சதைக் குதிர் – இடிக்கிற இடியைத் தாங்க இப்படியாள்த்தான் சரி, என அவர் நினைத்திருக்கலாமோ என்னவோ.) வீட்டில் கூட லுங்கி கட்டாமல் வேட்டி கட்டுகிறான். எப்பவும் முழுக்கைச் சட்டை அணிகிறான். நெற்றியில் திருநீறு இல்லாமல் அவனைப் பார்க்க முடியாது. கதிரேசனுக்கு அவனை முதல் பார்வையிலேயே பிடித்து விட்டது. ஆகா, என்ன அப்பாவி – ஏமாளிக் களை!

பெண்ணைப் பார்த்து தனியா பேசணுமானால் பேசுங்க, என்று கதிரேசன் சொன்னபோது, சங்கோஜத்துடன் வேணாம், என்றுவிட்டான். ஓரக்கண்ணால் அவளைப் பார்த்தான். தலைநிறையப் பூ. மகா அலங்காரம். ஜ்வலிக்கும் நகைகள்… ஒரிஜினலா கில்ட்டா தெரியாது – அதைப் பற்றியென்ன… என்னைக் கட்டிக்க கசக்குமா இவனுக்கு, என்கிற பெருமிதத்துடன் உட்கார்ந்திருந்தாள். சற்று குண்டாய் இருக்கிறாளோ என்றிருந்தது. ஆளே தாட்டிகமாய் உரல் போல இருந்தாள். கைகள் உலக்-கைகள்… அதைப் பற்றியென்ன… எதையும் குறைபடப் பார்க்க அறியாதவன் அவன்.

“சார் மணியென்ன?“

அவன் கைக்கடிகாரத்தைப் பார்க்காமலேயே “ஏழு இருக்கும்“… என்றான். கேட்டவன் சிறு வியப்புடன் கடந்து போனான். ஒருவேளை மணி பார்க்கத் தெரியாமலேயே வெட்டி பந்தாவுக்கு கடிகாரம் கட்டித் திரிகிறதாக இவனைப்பற்றி அவன் நினைத்துக் கொண்டானோ என்னவோ!

ஒரு பல்கலைக்கழக துணைவேந்தர் கதை ஞாபகம் வந்தது. அலுவலகத்தில் கண்ணாடியை வைத்துவிட்டு வெளியே கார் அருகில் வந்திருந்தார் துணைவேந்தர். ஒரு கல்யாணத்துக்குப் போக வேண்டும். பையில் இருந்து கல்யாணப் பத்திரிகையை எடுத்து… வாசிக்க கண்ணாடி இல்லை. தெருவில் போன ஒருவனை அழைத்தார். இதுல எந்தக் கல்யாண மண்டபம் போட்டிருக்கு? அவன் சொன்ன பதில்…

“சாமி எனக்கும் எழுதப் படிக்கத் தெரியாது. நானும் உங்களை மாதிரிதான்!“

லேசாகப் புன்னகைத்தபடியே கைக் கடிகாரத்தைப் பார்த்தான். நின்றிருந்தது. எதிர்பார்த்ததுதான்… திரும்ப ஆட்டிவிட்டான். முள் நகர ஆரம்பித்தது.

அவன் மாமனார் வாங்கித் தந்த கடிகாரம் அது.

மாமனாருக்கு மலேஷியாவில் உறவினர்கள் இருந்தார்கள். வியாபார நிமித்தம் கடல் கடந்து போய் செட்டில் ஆனவர்கள். கல்யாண சமயத்தில் அங்கிருந்து தருவித்து அவனுக்குப் போட்ட கடிகாரம். தங்க முலாம் பூசிய ஸ்ட்ராப். அதைக் கட்டிக்கொள்ளவே தோரணையாய் இருந்தது. முதலில் தனது சாதாரண உடையுடுத்தலுடன் அதையும் அணிய அவனுக்குக் கூச்சமாய் இருந்தது. அலுவலகத்துக்கு கடிகாரம் இல்லாமலேயே போனான். அடிக்கடி மணி பார்த்து ஆவதென்ன?

ஒருநாள் அவனைப் பார்க்க அலுவலகம் வந்திருந்தார் கதிரேசன். ஜவுளி வியாபாரம் பார்க்கிறார் அவர். சரக்கு எடுக்க என்று இப்படி நகரம் அவர் வருவது உண்டு. வந்துவிட்டு வீட்டுக்கு வராமல் அப்படியே அவனைப் பார்த்துவிட்டுப் போய்விடுவதும் உண்டு.

எல்லாருமே நம்ம ஆட்களாக வேலை செய்கிற அந்த அலுவலகம் அவருக்குப் பிடித்தமானது.

“என்ன மாப்ளே?“

என்ன, என்கிறதாய் அவரைப் புன்னகையுடன் பார்த்தான்.

“வாட்ச்…“

““பழக்கம் இல்லை மாமா. அது கை வியர்வையில… இடைஞ்சலா இருக்கு.“

“பழகிக்கணும் மாப்ளே. நீங்க இன்னும் அந்தக்கால ஆசாமியா இருக்கீங்க…“

பக்கத்து இருக்கை அருணாசலம் அவரைப் பார்த்துப் புன்னகைத்தான்.

“கடிகாரம் எப்பவும் கைல இருந்தாதான், சுறுசுறுப்பு வரும் மாப்ளே.“

அந்த லாஜிக் அவனுக்குப் புரியவில்லை. “சரிங்க மாமா“ என்றான் சிதம்பரம். வேறு எப்படி அவரைச் சமாளிக்க தெரியவில்லை. சுற்றிலும் மாணிக்கம், உமையாள், வாசவி என எல்லாருக்குமே இவன் இல்லாதபோது இவனைப் பற்றிப் பேச விஷயமாச்சு…

“ஒரு காபி சாப்பிடலாம் வாங்க மாமா…“ என அவரை அழைத்துக்கொண்டு வெளியே வந்தான் சிதம்பரம்.

அலுவலகம் வந்தாலும் கடிகாரத்தைக் கழற்றி மேசையில் வைத்து விடுவான். ஒரு மொபைல் போனும் அவள் – வள்ளியம்மை சொல்லி வாங்கிக் கொண்டிருந்தான். செல்ஃபோன், இரண்டு பேனாக்கள், கடிகாரம் எல்லாவற்றையும் அலுவலகம் வந்து, தன் மேசையில் வைத்துவிட்டு பாரத்தை இறக்கி வைத்தாப் போல உணர்ந்தான். எப்பவுமே பர்ஸ் வைத்துக் கொள்ளும் பழக்கம் இல்லை. உடம்பு, பை பாரத்தை உணராமல் இலகுவாக இருக்க வேண்டும் அவனுக்கு.

எந்த சாமானையும் புது மெருகு குறையாமல் நன்கு பராமரித்து வைத்துக் கொள்வான் அவன். இப்போது பார்த்தாலும் நேற்று வாங்கினாப் போலவே இருந்தது அந்த கடிகாரம். ஆறு வருடங்களாக நன்றாக ஓடிக்கொண்டிருந்தது இன்று திடுதிப்பென்று நின்று விட்டது. அட மாமனார் பார்த்தால் வருத்தப் படுவாரோ, என்பதே முதல் எண்ணம்… இதை வள்ளியம்மை எப்படி எடுத்துக் கொள்வாள் தெரியவில்லை. அது அடுத்த யோசனை.

“நீங்க ஒரு சாமானையும் உருப்படியா வைச்சிக்கிற லாயக்கில்லை…“ என்று தயாராய் அம்புகள் வைத்திருந்தாள். மன்மதனின் அம்புகள் தவிர அவளிடம் எல்லா அம்புகளும் இருந்தன… புன்னகை செய்துகொண்டான் அவன்.

ஆறு வருடங்கள். மௌனம் காத்து, விட்டுக் கொடுத்து, அசடு பட்டங்களை திரும்பத் திரும்ப வாங்கிக்கொண்டு இத்தனை வருடம் வாழ்க்கையை ஓட்டியாயிற்று. எத்தனை பணம் கொண்டு வந்தாலும் அவளுக்கு திருப்தி என்பதே இல்லை. அவன் சகாக்கள் ஒரு கம்பெனியில், கிடைத்த சம்பளத்தில் சேர்ந்துவிட்டு, பார்த்துக்கொண்டே யிருந்து, பிறகு அதிக சம்பளம் கிடைக்கிற வேறு நல்ல வேலைகளில் தாவிப் போய்க்கொண்டே யிருந்தார்கள். டிவியெஸ் எக்செல் வைத்திருந்தவர்கள், பைக்கில் போனார்கள். சுப்பையா என்று ஒருத்தன் மாமனார் தயவில் ஃபைனான்ஸ் கம்பெனியே ஆரம்பித்து காரில் பவனி வருகிறான்…

“ஏன்டா நீ இன்னும் அதே கம்பெனிலதான் இருக்கியா?“ என்று வழியில் அவனைப் பார்த்தால் விசாரிக்கிறார்கள்….

வேலையில் அவன் கில்லாடி. மெய்யப்பன், அவன் முதலாளி மனசாரப் பாராட்டுவார். அது ஒரு போதைதான் போலும், என நினைத்துக் கொண்டான். வீட்டிலும் வெளியிலும் அவன் சாமர்த்தியம் சார்ந்து கேலிகள் இருந்தாலும், அவரின் புன்னகையும், ஒரு வார்த்தை கூட கடிந்து கொள்ளாத இயல்பும் அவனுக்குப் பிடித்திருந்தன.

பெருக்கல், வகுத்தல் சார்ந்து வேதகணித முறைப்படி சட்டுச் சட்டென்று அவன் விடை சொல்லி ஆச்சர்யப் படுத்தினான். அப்பா சொல்லிக் கொடுத்தது என்று அதைப்பற்றி பெருமையாய்ச் சொன்னான் சிதம்பரம். வகுப்பில் கெட்டிக்கார மாணவன். எப்பவும் மூணு ரேங்குக்குள் வந்துருவேன், என்றான். முதல் ரேங்க் ஒரு பிராமணப் பெண். ரெண்டாவது பிராமாணப் பையன்… என நினைவு கூர்ந்தான். பெரியவர்களிடம் மட்டு மரியாதை. அலுவலகத்தில் நேர்மையான தன்மையான மனிதன் என்று பெயர்… என்றெல்லாமான அவனது தன்சார்ந்த பெருமிதங்களை அவள் – வள்ளியம்மை சிறிதும் பொருட்படுத்தாதது அவனுக்கு ஆதங்கமாய்த் தான் இருந்தது. எட்டு வரை படித்திருந்தாள் வள்ளியம்மை. ஒன்பதாங் கிளாசில், வயசுக்கு வந்ததும் இதுதான் சாக்கு என்று தானே படிப்பை நிறுத்திக் கொண்டாள். இதில் அவள் அப்பாவுக்கு வருத்தம் தான்… ஓரளவு துட்டுப் புழக்கம் கண்ட அப்பா. அவரது ஒரே பெண் அவள். வசதிக்குக் குறைவு இல்லை. படித்து ஆவதென்ன? வேலைக்கி கீலைக்கி இவரு அனுப்பப் போறாரா? நாம சம்பாதிக்கப் போறமா?…

ஹா ஹா… படித்துவிட்டு எங்க வீட்டு ஆம்பளை என்ன செய்யுது? அடிமை உத்தியோகம். வாழ, அனுபவிக்கத் தெரியாத மனுசன். வீட்டை விட அலுவலகத்தை, உத்தியோகத்தை மேலானதாய்க் கருதும் சுபாவம். வாங்கற சம்பளத்துக்கு வஞ்சகம் பண்ணக் கூடாதுடி, என வாலை ஆட்டுதல்.

தன் சார்ந்த அதித நம்பிக்கையும், பிறத்தியார் சார்ந்த அவநம்பிக்கையும் அவளிடம் இருந்தன.

திரும்பத் திரும்ப இப்படி விட்டுக் கொடுத்து, ஏமாளிப் பட்டம் வாங்கி, இந்த ஆறு வருடங்களில் அலுத்திருந்தான் அவன். வாடகை வீட்டில் வாழ்வதே அவளுக்கு எரிச்சலாய் இருந்தது. வீட்டுக்கார அம்மாளுடன் அடிக்கடி அவளுக்குச் சண்டை வந்தது. ஓரிரு வீடுகள் வேறு மாற்றி விட்டான்… இதைக் கேள்விப்பட்டு மாமனார் தான் உதவிக்கு வந்தார்… அதை அவனிடம் சொல்லாமல் அவளிடம் சொல்லிப் போனார் அவர். அல்லது அவளே அவரை இப்படி இயக்கியும் இருக்கலாம்…

“அப்பா வந்திருந்தாரு…“ என்றாள் வள்ளியம்மை. அவள் முகத்தின் புன்னகை ஆச்சர்யமாய் இருந்தது. அப்பா அவளைப் பார்க்க வருகிற தருணங்களை அவள் விரும்பினாள். எப்பவும் அவளுக்காக எதையாவது வாங்கி வருவார் அவர். ஜவுளி எடுக்க வந்தால் ஒரு நல்ல புடவை. அவனை அலுவலகத்தில் பார்த்தால் அவனிடம் தந்தனுப்புவார்.

“ஐ புதுப்புடவையா? உங்க செலக்ஷனா?“ என்று வாங்கிக் கொண்டாள் வள்ளியம்மை.

“இல்ல“ எனும்போது வெட்கப்பட்டான். “உங்கப்பா வந்திருந்தாரு…“

“அதான பார்த்தேன்!“ என அவள் உள்ளே போனாள்…

இப்போது வீட்டுக்கு வந்து போயிருக்கிறார்.

“அப்படியா? நான் வர்ற வரைக்கும் இருக்கச் சொல்றது தானே?“ அவனும் புன்னகைத்தான். ‘தன் வீட்டுப்‘ பக்கமாய் அவனுக்கு இப்படி போக்குவரத்தோ, உபகாரங்களோ இல்லை. அம்மாக்காரி இறந்து ரெண்டு வருஷம் ஆயிற்று. அக்கா ஒருத்தி, அவள் மும்பையில்… அவன் வீட்டுக்கு உறவு என்று யாரும் வருவது இல்லை. அது குறித்தும் வள்ளியம்மைக்கு ஆத்திரம் இருந்தது. அவளுக்கு உறவு சனத்தில் சண்டை வலிக்க வாய்க்கவே யில்லை.

அவள் அப்பாவே ஜவுளி எடுக்க என்று சென்னை வர வேலை இருப்பதால் வருகிறார்… அவ்வளவுதானே? இதை அவளிடம் அவன் சொல்ல முடியாது.

“அப்பா கொண்ட்டு வந்தாரு…“ என்று சிறு தட்டில் பட்சணங்களைக் கொண்டு வைத்தாள் வள்ளியம்மை.

“என்ன சொல்றாரு உங்க அருமை அப்பா…“ என்றான் மெல்லிய புன்னகையுடன்.

“கல்யாணம் ஆகி ஆறு வருஷமாச்சி… இன்னும் உன் வயித்துல பூச்சி பொட்டைக் காணமேன்னு கவலைப் படறாரு…“ அவளுக்கு இதைச் சொல்ல சிறிது வெட்கமாய் இருந்தது.

“அதது வேளை வந்தால் தன்னைப் போல பலிதம் ஆகும்டி. இதெல்லா நம்ம கையிலயா இருக்கு… அந்த பிள்ளளையார்பட்டி பிள்ளையார் கண் தொறக்கணும்…“

“அவரு நல்ல தூக்கத்துல இருக்காரு போல…“ எனறாள் அவள் சிரிப்புடன்.

“அவரு தூக்கம் பரவாயில்ல. நாம தூங்கிறப்டாது!“ என்று சிதம்பரம் ஜோக் அடித்தான். நகைச்சுவையாகப் பேச அவனுக்குப் பிடிக்கும். அலுவலகத்தில் அவன் சிரிக்கச் சிரிக்கப் பேசுவதாக எல்லாரும் சொல்வார்கள். வீட்டில் அவன் நகைச்சுவைக்கு வரவேற்பு இல்லை. நகைச்சுவை என்ற அம்சமே அவள் வாழ்வில் இல்லை.

“நாம அடுத்தவாட்டி உங்க வீட்டுக்குப் போறச்ச, பிள்ளையார்பட்டி போயிட்டு வரலாம்டி… நல்ல சேதி வரட்டும். வேணாம்னா இருக்கு. ஒரு பிள்ளைன்னு வந்துட்டா, உனக்கும் துணை ஆச்சில்ல?“

எல்லாம் இரவை நோக்கி உற்சாகமாய் நகர்ந்தாப் போலத்தான் இருந்தது.

“அப்பறம் என்ன பேசினீங்க?“

“இன்னமும் எத்தனை நாள் இப்பிடி வாடகை வீட்டுலயே இருக்கப் போறடி? அதுவும் கண்ட வீட்டுக்காரிங்க கிட்ட பேச்சு வாங்கிக்கிட்டு…ன்னு அப்பா வருத்தப் படறாரு…“

அது உன் வாயின் விசேஷம். நான்னா பொறுத்துப்பேன். உங்க ஐயா பொறுத்துப்பாரு. ஊரே பொறுத்துக்கணும்னா எப்பிடி… என அவன் சொல்லவில்லை.

தலையாட்டி அவளைப் பார்த்தான்.

“அப்பாவுக்கு ஸ்ரீபெரும்புதூரில் ஒரு இடம் இருக்கு… எப்பவோ வாங்கிப் போட்டது…“

“ம்.“

“அதை வேணா கட்டிக்கங்களேன்னு சொல்றாரு…“ அவள் முகம் இதைச் சொல்கையிலேயே ஒளிபூத்து விகசித்தது.

“நான் அவருக்கு ஒரே பொண்ணு. எப்படியும் நாளை அது நமக்கு தான். அப்பா அதை இப்பசத்திக்குக் கட்டப் போறது இல்லை.“

“இது அவர் குடுத்த ஐடியாவா? நீயே கேட்டதா?“ என்றான் அடக்க முடியாமல்.

“அதைப் பத்தி என்ன?“ என விரைப்புடன் நிமிர்ந்தாள் அவள். அவள்பேச்சுக்கு மறு பேச்சு எடுத்தாலே அவள் இப்படி ஏனோ விரைத்துக் கொள்கிறாள். எதிர்ப்பேச்சு அவள் காதில் ஏறுவதே இல்லை. ஆறு வருட அனுபவம். அவனுக்கு இது தெரியும்…

“இப்ப என்ன சொல்ற?“

“நீங்க அப்பாகிட்ட பேசுங்க இதைப் பத்தி…“

அவன் அவளைப் பார்த்தான்.

“நாளைக்கு அது நமக்கு தானே வரணும். அதை இப்பவே கேட்டா என்ன தப்பு?“

சொந்த வீட்டுக் கனவு இவளைப் பிசாசாய் ஆட்டுவிக்கிறது என அவனுக்குப் புரிந்தது. என்ன சொல்கிறாள் இவள்? வருகிற வருமானத்தில் வீட்டுச் செலவு போக, கையில் ஆயிரம் ரெண்டாயிரம் மிஞ்சுவதே பெரும் பாடு. அதுவும் இந்த பத்து வருட அனுபவத்தினால் வந்த சம்பள உயர்வு. முதலாளியின் கருணைப் பார்வையினால். மத்தவரை விட அவன் சம்பளம் அதிகம்…

“இதெல்லாம் நடக்கிற கதையா இவளே…“ என இழுத்தான்.

“உங்களுக்கு ஒரு கணக்கும் தெரியாது…“ என ஆரம்பித்தாள் அவள். கணிதத்தில், அலுவலக வரவு செலவுகளில், வேத கணித சாஸ்திரத்தில் தனக்கு நிகர் யாருமில்லை, என அதுவரை நினைத்திருந்தான்.

“வீடு கட்டறதுல என்ன லாபம் சொல்லுங்க பாப்பம்?“

“உனக்குத் தெரியுதே. நீயே சொல்லு…“

“வாடகைப் பணத்தை எடுத்து அப்படியே வீட்டுக் கடனை அடைக்கலாம். வீடு நம்மதா ஆயிரும்!“

அவள் குரலில் பெருமிதம் வழிந்தது.

“அதெல்லாம் அதைவிட பெரிய கணக்குடி… உட்கார்ந்த இடத்தில முடிவு செய்யிற சின்ன சமாச்சாரம் இல்ல…“

“உங்களுக்கு பெரிய முடிவு, எந்த முடிவும் எடுக்க தைரியம் இல்ல..“ என்றாள் அவள்.

அவன் உடைமாற்ற எழுந்துகொண்டான்.

“அப்பாகிட்ட பேசுங்க“ என்றாள் அவள் பிடிவாதமாய்.

“வீடு கட்ட இப்ப நான் அவசரப்பட மாட்டேன்… நீ வெறுங் கையால முழம் போடச் சொல்றே. கைல ஒரு காசும் இல்லாமல் வேலைல இறங்க முடியாது. எப்பவுமே வீடு கட்டறதுன்னு வந்துட்டா, நாம எத்தனை செலவு எதிர்பார்க்கிறமோ, அந்த பட்ஜெட்டுக்கு அதிகமாத்தான் போகும்…“ என்றபடி அவன் வேட்டிக்கு மாறினான்.

“நாளாக நாளாக விலைவாசி ஏறிக்கிட்டே போகுது. இன்னைக்கி விட நாளைக்கின்னா இடத்தின் விலை, கட்டுமானச் செலவு எலலாமே எச்சாயிட்டுதான் போகும்…“

அவள் விடுவதாக இல்லை. அவள் கண்களில் ஒரு மூர்க்கம் வந்திருந்தது. அவனுக்கு பயமாய் இருந்தது.

அவன் மாமனாரிடம் இதைப் பற்றிப் பேசவேயில்லை. ரெண்டு நாளில் அவளே இதை அப்பாவிடம் பேசினாள் என்று தெரிந்து கொண்டான்.

“அப்பாவிடம் பேசிட்டேன்…“

“ம்.“

“நல்ல முடிவுன்னு பாராட்டினார்…“ அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் தெரியவில்லை அப்பாவை அவளால் வளைக்க முடியும். அது அவனுக்குத் தெரியும்.

“சரி. வீடு கட்ட பணம்…“

“பணமா? அதையும் மாமனார் தருவார்னு பாக்கறீங்களா?“

“ச்…“ என்றான். “நான் எதுவும் நினைக்கல்ல. நம்மகிட்ட எங்க இருக்கு பணம்…?“ என்றான் தயக்கமாய். இம்மாதிரி சந்தர்ப்பங்களில் அவளை மேலடி அடித்து அடக்க ஏனோ அவனால் முடியாமலே போய்விட்டது, ஆறு வருடங்களாக.

“நாமதான் யோசனை பண்ணணும்…“

“நம்ம கிட்ட பணம் கிடையாது வள்ளி…“

“பணத்துக்கு என்ன பண்ணலாம்னு யோசிங்க. எல்லா யோசனையும் நானே சொல்லணுமா உங்களுக்கு?“ என்று கத்தினாள் வள்ளியம்மை.

“ஒரு யோசனை சொல்லுவே நீ. அது சரியா வராதுன்னு நான் சொன்னா, அதைக் கேட்கவும் மாட்டே. ஆனால் என்னை இழுத்து விட்டுட்டு… நீ எனக்கு சாமர்த்தியம் பத்தாதுன்னு ஆரம்பிக்கிறே…“

“பணம் பணம்னு யோசனை பண்ணிக்கிட்டு உட்கார்ந்துகிட்டே யிருந்தால் கதையாவாது…“

“என்ன சொல்றே?“

“நாம வீடு கட்டறோம்…“ என்றாள் வள்ளியம்மை.

அவனுக்கு மலைப்பாய் இருந்தது. நான் பெண். என் பிடிவாதத்தினால் நான் எதையும் நிகழ்த்திக் காட்டுவேன், என்று அவள் வெறியேறிக் கிடந்தாப் போலிருந்தது.

அவனுக்கு பயமாய் இருந்தது.

அடுத்த நாள் அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. அவனாக எதாவது நல்ல யோசனையுடன் வருவான், என நினைத்தாள். அவனோ இந்தப் பேச்சை எடுப்பதாகவே தெரியவில்லை. அவளே அவன் தட்டில் சோறு போட்டுவிட்டு, அவனை எழுந்துகொள்ளாத நெருக்கடியில் சிக்க வைத்து, கேட்டாள்…

“என்ன முடிவு பண்ணினீங்க?“

“உங்க அப்பாட்ட நானே பேசறேன்…“

“இங்க பாருங்க. இடம் கேட்டோம். தரேன்னுட்டார். அதுக்கு மேலயும் நாம அவர்கிட்ட பணம் கிணம்னு எதிர்பார்க்க முடியாது…“

அப்பாவே இவளிடம் இதைச் சொல்லி யிருக்கலாம்,

“பணத்துக்கு என்ன யோசனை வெச்சிருக்கீங்க?“

“பாங்க்ல எதுலயாச்சிம், இடம் இருக்குன்னு சொன்னால் கட்ட கடன் கிடைக்கும்…“

“நல்ல காரியம்“ என்றாள் அவள்.

“ஆனால் அப்பவும் வீட்டுச் செலவுல முதல் 20 சதம் நாமதான் தயார் பண்ணணும். மீதிதான் அவன் தருவான்.“

“அதுவும் நியாயம் தான்…“ என உற்சாகமாய் அவனைத் தூண்டினாள்.

“அந்த 20 சதம் நம்மகிட்ட ஏது வள்ளி?“

“யாருமே கை நிறைய காசை வெச்சிக்கிட்டு வீடு கட்டறது இல்லை. நாம அதுக்கும் வழி கண்டுபிடிக்கணும்…“ என்றாள்.

“உங்க அப்பா உனக்கு எவ்வளவு நகை போட்டாரு வள்ளி…“

“ஏன்?” அவள் முகம் மாறியது.

“இங்க பாரு. ஒரு பெரிய வசதிக்கு ஆசைப்பட்டால் சில சின்ன இழப்புகள் கூடவே வரும். அதை ஒண்ணும் பண்ண முடியாது…“

“இப்ப, என்ன எங்க அப்பா போட்ட நகைய நீங்க எப்பிடி கேக்கறீங்க? கல்யாணம் ஆகி ஆறு வருஷம் ஆகுது… நீங்க ஒரு குந்துமணி போட்டது கிடையாது. இப்ப எங்க அப்பா போட்ட நகை உங்க கண்ணை உறுத்த ஆரம்பிச்சிருக்கு…“

“ஒரு உறுத்தலும் இல்லை. நீ பேசாம நம்மகிட்ட இருக்கிற பணத்துல என்ன கதையாவுமோ அதை யோசிச்சிப் பேசு… வீடு கட்டற ஆசையெல்லாம் நமக்கு வேணாம். நாம இப்ப வசதியா தான் இருக்கம்…“ என எழுந்துகொண்டான் சிதம்பரம்.

நடக்க சிறிது பதட்டமாய் இருந்தது. இதுங்களை திருப்திப் படுத்தவே முடியாது… என குமுறலாய் இருந்தது. நான் என்ன செய்ய முடியும்? வாங்கும் சம்பளத்தில் எனக்கு என்று ஒரு பைசா எடுத்துக் கொள்வது கிடையாது. என்னால் முடிந்த அளவு வசதியாய்த் தான் அவளை வைத்துக் கொள்கிறேன். அதுக்கும் மேலே மேலே என்று, இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டால்… நான் என்ன தான் செய்வது?

நெஞ்சு படபடப்பாய் இருந்தது. கைக் கடிகாரத்தைப் பார்த்தான். திரும்ப நின்று போயிருந்தது. ஆத்திரத்துடன் பலமாக ஆட்டி விட்டான். ஓட ஆரம்பித்தது.

அதுவும் இன்று காலை ஒரு மாதிரி நிலைமை எக்கச்சக்கமாய் விட்டது. அவளிடம் வீடு கட்டும் பேச்சை மறந்து விடு, என்றபின் வேறு பேச்சே வராமல் பார்த்துக் கொண்டான். பிடி கொடுக்கக் கூடாது. ஊரில், வெளியில் நம் கௌரவத்தையே இவள் இறக்கி விடுவாள், என்று மனம் சுருங்கினான் சிதம்பரம்.

“வேலைய ஆரம்பிக்க இந்தப் பக்கமா நல்ல மேஸ்திரி ஒருத்தரைப் பார்த்தேன்… நம்ம நாலாவது வீட்டு கோமளவல்லி இல்ல… அவங்களுக்கு உறவு. அவங்க இருக்காங்கல்ல, அந்த வீட்டையே அவரே பிளான் கீன் எல்லாம் போட்டு அப்ரூவல் வாங்கி முறைப்படி கட்டிக் குடுத்தாராம்… நல்லாதானே இருக்கு?“

“உனக்கே எல்லாம் தெரியும்னால் என்கிட்ட ஏன் யோசனை கேட்கறே பின்னே?“ என்றான் சிதம்பரம் சூடாய்.

“என்ன பேசறீங்க நீங்க? எந்த நல்ல காரியம் ஆரம்பிச்சாலும் உடனே அஸ்து பாட வந்துர்றீங்க. உற்சாகமா நல்லவிதமா சிரிப்பா எதையும் எடுத்துக்கறதே கிடையாது நீங்க…“

“வீடு கட்ட என்னாண்ட பணம் இல்லை. புரட்ட வழியும் இல்லை. என் நிலைமை இதுதான்… வேற பேச்சு பேச்சு நீயி…“ என்றான் சிதம்பரம். அவள் முறைப்பதைப் பார்த்தபடி எழுந்து வெளியே போனான். இது எங்க போய் முடியும், என்றிருந்தது.

மறுநாள் காலையில்…. “சரி நம்ம நகையை வெச்சி கடன் வாங்கி வேலையை ஆரம்பிக்கலாம்னா ஒத்து வருவீங்களா?“ என அவளே ஆரம்பித்தாள்.

“ஒண்ணு நகை. இல்லாட்டி வீடு. ஒண்ணுதான் முடியும். உன் நகையை நான் கேக்கல இவளே. ஒரு நல்லநாள் விசேஷம்னா நீ நல்லபடியா டிரஸ் பண்ணிக்கிட்டு நகை நட்டு போட்டுக்கிட்டு வெளியே போகணும்னா அது வேணுந்தான். நான் அதைப் பத்தி ஒண்ணும் சொல்லல…“

“அதைப் பத்தி பரவால்ல. வெச்சி ஒரு வருஷத்ல மீட்டுக்கலாம்…“

“எப்பிடி?“

“எப்பிடின்னா என்ன அர்த்தம்?“ என்று அவனைப் பார்த்தாள் ஆத்திரமாய். இவள் ஏன் இத்தனை படபடப்பாய்ப் பேசுகிறாள் தெரியவில்லை.

“இங்க பார். வீடும் கட்டணும். அதுக்கும் கடன் வாங்கணும். பெரிய அமவுண்ட் அது. லட்சக் கணக்கு. இதுல நகையை வேற அடகு வெச்சி… அதையும் எப்படி மீட்க முடியும்?“

“எப்பிடி எப்பிடின்னு என்னையே கேளுங்க. உங்க ஆபிஸ்ல உங்களைவிட வசதி குறைவானவங்க கூட சொந்த வீடு வெச்சிருக்காங்க…“

“எல்லாரும் அப்பா அம்மா வெச்சிட்டுப் போன வீட்டுல இருந்து வராங்க… சொந்தமா தன் கால்ல யார் நிக்கறாங்க…“

அவளுக்கு ஆத்திரம் இன்ன அளவு என்று இல்லை. என் நகையைத் தருகிறேன், என்கிறேன்… அப்பவும் இந்த கல்லுப் பிள்ளையார் அசையறாப்லவே இல்லை. இந்த ஒரு மனுசனை வெச்சிக்கிட்டு என்னதான் செய்ய முடியும்.

“நீ… பிஸ்கெட்டு முழுசாவும் வேணும். கடிச்சும் திங்கணும்னு அடம் பிடிக்கிற குழந்தை மாதிரி நடந்துக்கற…“

அவள் எழுந்து உள்ளே போய்விட்டாள்.

இந்தப் பெண்களிடம் ஒரு விஷயம் – இவர்கள் வெளியே போய் தன் சார்ந்த தர்க்கத்தை மாத்திரம், அதுவும் பாதி பேசி நல்ல பேர் வாங்க முயல்கிறார்கள்… நான் நகையைத் தர்றேங்கறேன்… அப்ப கூட இந்த மனுசனுக்கு வீடு கட்டணும்னு தைரியமா இறங்க முடியல்ல… என தன் கையை உயர்த்தி என்னை மட்டந் தட்டாமல் தூக்கம் வராது இவளுக்கு.

அப்படியே அவள் நகையை வாங்கிப் பயன்படுத்திக் கொண்டாலும் ஒவ்வொரு நல்லநாள், வெளியிடம் போகையிலும் மண்டகப்படி உண்டு. ஒரு வருடம் தான் கெடு. அதற்குள் எப்படி அதை மீட்டுத் தருவாயோ, அதைப் பற்றி அவர்களுக்குக் கவலை கிடையாது. அது திருப்பப்பட வேண்டும்…

விவகாரம் இன்னும் சூடாகும் போலிருந்தது… அலுவலகத்தில் அவனால் சரிவர வேலை செய்ய முடியவில்லை. இவளை எப்படி தரை யிறக்க தெரியவில்லை. நகையை விற்று விடலாம் என்றால் ஒத்துக் கொள்வாளா? அவன் மாமனார், அவர் இதை எப்படி எடுத்துக் கொள்வார் தெரியாது… இதெல்லாம் சும்மா போற ஓணானை மடில எடுத்து விட்டுக்கிட்டு குத்துது குடையுதுன்னு அழுத கதை.

வீட்டுக்குப் போக மனசே, தைரியமே இல்லை. மாமனாரிடம் இவள் பற்றி நியாயம் கேட்கவே சங்கடமாய் இருந்தது. தன்னிடம் பணம் இல்லை, என அவரிடம், தன் மாமனாரிடம் பேச அவமானமாய் இருந்தது. எனக்குத் தேவையே இல்லாத அவமானம் இது

அவன் மேசையில் கண்ணாடி பேப்பர்-வெயிட் அடியே காகிதம் படபடக்கிறது. அந்தக் காகிதம்… அது நான். மேல் கனம்? எங்க வீட்டு சதைக் குதிர்! புன்னகை செய்து கொண்டான். நகைச்சுவை மாத்திரம் இல்லாவிட்டால் என்னிக்கோ நீ செத்திருப்படா சிதம்பரம். என்று சொல்லிக் கொண்டான்.

WIFE ன்னா என்ன சிதம்பரம்? ஒரிஸ் இன்வைடட் ஃபார் எவர் – அதானே?

இந்த கட்டில், பீரோ, டி.வி., ஃபிரிட்ஜ் இதெல்லாமுமே அவன் தன்னால் வாங்க முடியாது என அறிந்தவன் தான். அவர் தந்தபோது மறுத்திருக்கலாமோ என நினைத்தான். அவர்பெண்ணுக்கு அவர் செய்கிறார், என விட்டுவிட்டது கூட தவறோ என நினைத்தான. எது எப்படி யானாலும் கயிறை அப்போது தளர விட்டுவிட்டு இப்போது இறுக்கிப் பிடிக்க அவனால் கூடாது, என்பது புரிந்தது.

வேலை முடிந்து கிளம்பவே குழப்பமாய் இருந்தது. இல்லாத வேலையை இழுத்துப் போட்டுக்கொண்டான். தானறியாத வேலை மும்முரத்தில் நேரம் போவதே தெரியாமல்… கடிகாரம் நின்று போய்…

பஸ் நிறுத்தம் வரை நடந்து வந்ததே தெரியவில்லை. தன்னியல்பாய் கைக் கடிகாரத்தைப் பார்த்தான். நின்று போயிருந்தது. …

பஸ் நிறுத்தத்தின் எதிரேயே கடை. சிட்டிசன் வாட்ச் சென்ட்டர். பொழுது பார்க்கும் கருவியைப் பழுது பார்க்கும் கடை… உள்ளே போனான். கடிகாரத்தை அவிழ்த்துத் தந்தான்.

“புதுசா சார்?“

“இல்ல. ஆறு வருஷமாச்சி. மாமனார் வாங்கித் தந்தது…“

“நல்லா வெச்சிருக்கீங்க சார்…“ என்றபடி கடிகாரத்தை குப்புறப்போட்டு ஒரு முள் குத்தியால் திருகித் திறந்தான். “பாட்டரி மாத்தணும் சார்…“

பஸ் வந்தது. ஓடிப் போய் ஏறிக் கொண்டான். கடிகாரம் இப்போது பழைய ஓட்டத்தைத் தொடர ஆரம்பித்தது.

Series Navigation
author

எஸ். ஷங்கரநாராயணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *