தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

20 செப்டம்பர் 2020

மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 6- செங்கோட்டை ஆவுடையக்காள்

புதிய மாதவி

Spread the love

puthiyamad1.

இக்கட்டுரையை நிறைவு செய்யும் இத்தருணத்தில் என் நினைவுக்கு வருபவர்

செங்கோட்டை ஆவுடையக்காள்.

 

செங்கோட்டை ஆவுடையக்காள். “பக்தி, யோக ஞான வேதாந்த ஸமரச பாடல்திரட்டு” – 325 பக்கங்கள் -என்ற பெயரில் ஆவுடையக்காளின் பாடல்களை ஶ்ரீ ஆனந்த நிகேதன் வெளியிட்டிருக்கிறது. “பிரம்மயோகம்” என்ற பெயரில் ஆவுடையக்காளின் சிறுபாட்டு புத்தகம் 450 ஆண்டுகளுக்கு முன்னரே

வெளிவந்துவிட்டது. செங்கோட்டை ஆவுடையக்காள் தான் ஒருவகையில்

மகாகவி பாரதியாரின் கவிதைகளைப் பாதித்த ஆளுமைமிக்கவர் எனலாம்.

என்ன காரணத்தாலோ நம் மகாகவி செங்கோட்டை ஆவுடையக்காவைப் பற்றி

எவ்வித குறிப்புகளையும் பதிவு செய்யவில்லை. இச்செய்தி தனிப்பட்ட

ஆய்வுக்குரியதுதான்.

 

ஜாதி வர்ணாசிரமம் போச்சே

வேத சாஸ்திரம் வெறும் பேச்சே – ஆவுடையாக்கா

 

இதையே பாரதி தன் வரிகளில்,

 

ஜாதி சண்டை போச்சே- உங்கள்

சமயச் சண்டை போச்சே

 

என்கிறார்.

 

“தேகத்தை விடும்போது தரிசனம் எனக்குத் தந்து

மோகத்தை வெல்லாமல் மோசம் போகாதே –

என்கிறார் ஆவுடையக்கா.

 

பாரதி,

 

மோகத்தைக் கொன்றுவிடு அல்லால்

எந்தன் மூச்சை நிறுத்திவிடு

 

என்கிறார்.

 

பாவாடை கட்டத் தெரியாத வயதில் திருமணம் நடக்கிறது.

பால்யவிவாகத்தின் கொடுமையை அனுபவிக்கிறார்

ஆவுடையக்கா. ஆம், ஆவுடையக்காவின் கணவர் இறந்துவிட

இளம்வயதிலேயே கைம்பெண் கோலம், ஆனால் அதுவே

அவர் அறிவுதேடலின் ஆரம்பமாகிறது. கல்வி ஞானம் பெறுகிறார்.

அத்வைத தத்துவத்தில் ஆளுமை உடைய ஞானப்பெண்ணாக

ஆவுடையக்கா தன்னை வளர்த்துக் கொள்கிறார். பாடல்கள் புனைகிறார்.

விளைவு? இந்தச் சாதி சமூகம் ஆவுடையக்காவை “ஜாதிபிரஷ்டம்” செய்கிறது.

செங்கோட்டை பகுதியில் ஆவுடையக்காவைப் பற்றி

அக்ரஹாரத்து பெண்களுக்கு தெரிர்ந்திருக்கிறது. அதுவும் இன்றும் ஆவுடையக்காவின் பெயரை உச்சரித்துவிட்டாலே போதும்,

கண்களில் கண்ணீர் மல்க கரைந்து போகின்றார்கள்: அந்தப் பெண்கள்.

(கோரேகான் தமிழ்ச் சங்கத்தில் 30 ஜனவரி 2014 அன்று அமரர் கி.

நரசிம்மன் நினைவுச் சொற்பொழிவு ஆற்றியபோது எனக்கு ஏற்பட்ட

அனுபவம் இது)

 

 

ஆண்டாளும் மீராவும் கோவிலுக்குள் சென்றவர்கள் திரும்பிவரவில்லை.

ஆண்டவனுடன் ஐக்கியமாகிவிட்டார்கள் என்று சொல்கிறார்கள்.

அக்காமகாதேவி அவள் வாழ்ந்த குகைக்குள் மறைந்தாள்.

காஷ்மீரின் லல்லா ஆகாய மேகக்கூட்டத்தில் மறைந்தாள்.

நம் ஆவுடையக்கா குற்றால அருவிக்கு குளிக்கப் போனவள்

மலைமீதேறி மறைந்துவிட்டாள் என்கிறார்கள். சிலர் அருவியில் விழுந்து

விட்டாள் என்கிறார்கள்.

 

மெய்வழி பயணத்தில் இந்தப் பெண்கள் அனைவருக்குமே ஏன்

ஒரேமாதிரியான முடிவு?

சமூகத்தில் இந்தப் பெண்களுக்கு ஏற்பட்ட நிலை என்ன?

 

இவர்களின் ஆன்மீகத் தேடலில் இந்தப் பெண்ணுடல்கள்

எங்கே காணமால் போனது? ஏன் காணமல் போனது?

இந்தப் பெண்ணுடல்கள் மீது அப்படி என்ன ஓவ்வாமை?

இக்கேள்விகள் கேட்கும் பெண்களை ஒதுக்கலாம்,

இருட்டடிப்பு செய்யலாம், கள்ளமவுனத்தில் வழக்கம் போல

கடந்து செல்லலாம். உயிருடன் எரித்துவிடலாம், உடலைக் கூட

காணாமல் ஆக்கி அதற்கும் வேதாந்த ரீதியாக காரணங்கள்

சொல்லலாம். ஆனால் இந்தக் கேள்விகளை எவராலும்

ஒன்றும் செய்ய முடியாது,

மீராவின் கவிதையுடன் நிறைவு செய்கிறேன்:

 

 

ஓ நண்பர்களே..

இந்தப் பாதையில் என் விழிகள்

இவை இனி என் விழிகள் அல்ல

விழிகளின் ஊடாக வியாபித்த ஆனந்தம்

என் இதயத்தை துளைக்கிறது.

சாலையை வெறித்தப்படி

இன்னும் எவ்வளவு காலம்

உடல் என்ற வீட்டில் காத்திருப்பேன்?

வாழ்க்கைப் பிணி தீர்த்த மாமருந்து

அவனே மூலிகை

எல்லோரையும் தாங்கும் வல்லமைப்படைத்தவன்

அந்தக் கிரிதரன்

அவனுக்குச் சொந்தமானவள் இந்த மீரா

எல்லோரும் சொல்கிறார்கள்

அவளைப் “பிச்சி” என்று.

 

 

துணை நின்ற குறிப்புகள்:

 

> தமிழ்நேயம் – மெய்யியல் கட்டுரைகள்

 

> www.poemhunter.com

> http:www.sssbpt.info/vahinis/Prasnottara.10.pdf

 

 

Series Navigationகூத்தர் பாணர் விறலி பொருநர் யார்?முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 18

2 Comments for “மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 6- செங்கோட்டை ஆவுடையக்காள்”

 • Guru Ragavendran says:

  “வேத சாஸ்திரம் வெறும் பேச்சே” ‍ என்ப‌தும் “அத்வைத தத்துவத்தில் ஆளுமை உடைய ஞானப்பெண்ணாக ஆவுடையக்கா தன்னை வளர்த்துக் கொள்கிறார்” என்ப‌தும் முர‌ண்பாடான‌ செய்திக‌ளாகும். அத்வைத‌ த‌த்துவ‌ம் வேத சாஸ்திரங்க‌ளால் விவரிக்க‌ப்ப‌ட்ட‌து.பாரதி வேதத்தை உயர்ந்த விஷயமாகத்தான் கருதியிருக்கிறார். “வேதமடி நீயெனக்கு, வித்தையடி நானுனக்கு” என காதலியுடன் அடிமனதிலிருந்து இயல்பாக சொல்லுகிறார். மற்றபடி, க‌ட்டுரையில் காட்டியபடி அக்கால‌த்திலிருந்து இக்கால‌ம் வ‌ரை பெண்ணுக்கு மெய்வழி பயணத்தில் மட்டுமல்ல சாதாரண வாழ்க்கைப் பயணத்திலேயே அவ‌ள‌து உட‌லே அவளுக்கு பெரும் பார‌மாய் இருந்திருக்கிறது, இன்றும் அதிமாக இருக்கிற‌து. பெண்ணின் உடலை தாண்டி உள்ளே இருக்கும் மனித தன்மை பார்க்கப்ப‌டுவதில்லை. ஆண்க‌ள் ஆழ்ந்து படி‌க்க‌வேண்டிய‌ க‌ட்டுரை.

 • ஒரு அரிசோனன் says:

  உயர்திரு புதிய மாதவி அவர்களே,

  தங்களது கட்டுரைகளை விரும்பிப் படித்து வருகிறேன். தங்களது எளிய தமிழ் நடையும், எந்த ஒரு கருத்தையும் உணர்ச்சி ததும்ப எடுத்துரைப்பதும் என்னை ஈர்க்கிறது. தங்கள் தமிழின் ரசிகன் நான்.

  சிலபோது உங்கள் கருத்துடன் எனக்கு உடன்பாடு இல்லாதுபோனாலும், “உங்கள் கருத்து உங்களதே!” என்று எதிர்க்கருத்தைப் பதிவு செய்ய நான் விரும்பியதில்லை.

  நீங்கள் நோக்கும் கோணம் வேறு, நான் போகும் பாதை வேறு. அவரவர் வழி அவரவருக்கே!

  ஆயினும் தங்கள் எழுதிய சில வரிகள் என் மனதில் அலைகளைத் தொன்றுவிக்கிறது.

  //மெய்வழி பயணத்தில் இந்தப் பெண்கள் அனைவருக்குமே ஏன்

  ஒரேமாதிரியான முடிவு?

  சமூகத்தில் இந்தப் பெண்களுக்கு ஏற்பட்ட நிலை என்ன?//

  இதற்கு என்னுடைய தாழ்மையான கருத்தைப் பதிவு செய்து விலகலாம் என்று தோன்றுகிறது.

  — இறை உணர்வு கிட்டும்போது மனித உடல் மறைந்து விடும் என்பதையே உலக சமயங்கள் கூறுகின்றன.

  முதலில் விவிலியத்தை எடுத்துக் கொள்வோம்:

  — கடவுளால் உறுதியளிக்கப்பட்ட நிலத்தைக்(promised land) கண்டதும் மோசஸ் இறங்கிவர மறுத்துவிடுகிறார். ஏரனே யூதர்களை வழி நடத்திச் செல்கிறான். அதன்பின் அவர் நிலை என்ன ஆயிற்று என்று விவிலியம் சொல்லுவதில்லை.

  உறுதியளிக்கப்பட்ட நிலத்தைக் கடவுளின் குழந்தைகளான யூதர்களுக்குக் காட்டியுடன் அவரது பூத உடலைப்பற்றிப் பேசவேண்டாம் என்றோ என்னவோ விவிலியம் அமைதி காக்கிறது.

  — சிலுவையில் அறையப்பட்ட ஏசுபிரான் உயிர் நீத்ததும், அவரது உடலை ஒரு குகையில் வைத்துக் கல்லால் மூடுகிறார்கள். அடுத்த நாள் திரும்பி வந்து பார்த்தால் ஏசுபிரானின் பூத உடலை அங்கு இல்லை. அவர் ஒளிமயமான புகழுடம்புடன் (விஷ்ணு சரீரம் – omnipresent state) தோன்றி அருளுகிறார்.

  விவிலியத்தில் இரண்டு மேற்கோள்கள் காட்டிவிட்டேன். மெய்வழிப் பயணிகளான இவர்கள் பெண்கள் இல்லை. ஆண்கள்தான். அவர்களும் அதே முடிவுதான்.

  இந்து சமயத்தின் ஒரு பிரிவான சைவத்திற்கு வருவோம்.

  — பதினாறு வயது வந்ததும், காழிப் பிள்ளையாரான ‘தமிழ் ஞான ஞானமுனிவரான திருஞானசம்பந்தருக்குத் திருமணம் முடிக்க அவர் தந்தை விழைகிறார். தனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் “தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” என்று அதற்குச் சம்மதிக்கிறார்.

  திருமணம் முடிந்தவுடன் சிவம்பெருமான் மீது “காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி..” என்ற பதிகத்தைப் பாடிக்கொண்டு, தன் மனையாள், பெற்றோர், உற்றோருடன் ஒளியில் கலந்து மறைந்து விடுகிறார்.

  இங்கும் மெய்வழிப் பயணத்தின் முடிவு பூத உடலைத் துறப்பதாகவே அமைந்துள்ளது. ஆண், பெண் என்ற விலக்கல் இல்லை. அனைவரும் ஒன்றாகவே பரம்பொருளை ஏகுகிறார்கள்.

  — இன்னொரு சைவ குரவரான (guru)சுந்தரமூர்த்தி நாயனாரும் தன் உற்ற நண்பர் சேரமான் பெருமானுடன் பூத உடலைத் துறந்து திருக்கயிலையை ஏகுகிறார்.

  — “திருநாளைப் போவாரான” நந்தனாரும் இறைவன் இல்லமான தில்லைக் கோவிலில் புகுவதற்கு முன்னால், எரியில் புகுந்து, பூத உடலைத் துறந்து, சீர்த்த உடலுடன் இறைவனின் சன்னதிக்கு விரைகிறார். அவரது மெய்வழிப் பயணமும் அப்படியே நிறைவு பெறுகிறது.

  இன்னும் பல மேற்கோள்களை நான் எடுத்துக் காட்டலாம். இடம்தான் போதாது.

  //இக்கேள்விகள் கேட்கும் பெண்களை ஒதுக்கலாம்,

  இருட்டடிப்பு செய்யலாம், கள்ளமவுனத்தில் வழக்கம் போல

  கடந்து செல்லலாம். உயிருடன் எரித்துவிடலாம், உடலைக் கூட

  காணாமல் ஆக்கி அதற்கும் வேதாந்த ரீதியாக காரணங்கள்

  சொல்லலாம். //

  இங்கு யாரும் இருட்டடிப்புச் செய்யவில்லை. தாங்கள்தான் அப்படி நினைக்கிறீர்கள், அல்லது இறைநூல்களின் மேற்கோள்களை மறந்து போனீர்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.

  கல்வி, செல்வம், திறன் (சக்தி) இம்மூன்றையும் பெண் தெய்வங்களாகக் கலைமகள், திருமகள், மலைமகள் என்று எத்தியதும் இங்குதான். அதுவும் மறந்தது ஏனோ? இங்கு வேதாந்தம் என்ன இருட்டடிப்புச் செய்தது?

  ஏசுபிரான் கூறியதையே சொல்லத் தோன்றுகிறது — தேடுங்கள், கிடைக்கும்! தட்டுங்கள், திறக்கப்படும்!

  “சாக்தம்” என்று, பரம்பொருளை இறைவியாகவே, ஆண்ட சராசரங்களின் தாயாகவே வழிபடும் சமயம் இந்து சமயம் என்றும் அறிந்த பின்னரும் இப்படி எழுதினால் அது உங்களது எழுத்துரிமை என்றே கொண்டு, நீங்குகிறேன்.

  தொடர்ந்து எழுதி வாருங்கள். உங்களது தீந்தமிழ்க் கட்டுரைகளை அள்ளிப் பருக ஆவலாக உள்ளேன்.

  நன்றி. வணக்கம்.


Leave a Comment to Guru Ragavendran

Archives