அலைகள்

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

கடலூர் சுப்புராயலு ரெட்டியார் மண்டபத்தில் மாநாடு. தமிழ் மாநில மாநாடு அது.தொலைபேசி ஊழியர்களின் சங்கமிப்பு.சிவப்புக்கொடியைக்

கட்டிக்கொண்ட வேன்களையும் தனிப்பேருந்துகளையும் மண்டப வாயிலில் நிறுத்தி இருந்தார்கள்.தாம் எங்கிருந்து கடலூர் வந்தவை என்கிற ஊர் விலாசம் அந்த அந்த வண்டிகளில் நீண்ட பேனர்களில் கொட்டை எழுத்துக்களில் எழுதித்தெரிந்தன.
அவன் மாநாட்டிற்கு திருமுதுகுன்றத்திலிருந்து வந்தான். திருமுதுகுன்றம் கடலூர் மாவட்டத்து ஒரு தாலுக்காவின் தலை நகரம்.கடலூர் மாவட்டத்துத்தோழர்கள். ஆயிரம் பேருக்கு மேல் இருக்கலாம். மொத்தமாகத் தமிழகத்துத்தோழர்கள் எல்லோருமாக ஐயாயிரம் பேருக்குக் கடலூரில் கூடியிருந்தார்கள்.
ஜக்குவோடு அவன் இரு சக்கர வாகனத்தில் முதுகுன்றத்திலிருந்து புறப்பட்டான். முதுகுன்றம் தொலைபேசி நிலைய வாயிலில் கடலூர் மாநாடு பற்றி பெரிய பேரிய தட்டிகள் வைத்து எழுதிப்போட்டிருந்தார்கள்.மாநாட்டின் வெற்றிக்கு வாழ்த்து சொல்லி இருந்தார்கள். திருமுதுகுன்றத்தில் ஜக்குவும் அவனும் தொலைபேசி பழுது நீக்கும் பிரிவு ஊழியர்கள்.ஜகந்நாதனை ஜக்கு ஜக்கு என்று அவன் செல்லமாய் அழைத்துப்பழகி இருந்தான்.
நெல்சன் மண்டேலா வை ஆப்பிரிக்க இன வெறி அரசு சிறையில் அடைத்துவைத்திருந்த இருண்ட காலம். ‘ மண்டேலாவின் விடுதலையே எங்கள் மூச்சு’ என கோஷம் எழுதிய அட்டை ஒன்றை த்தன் இரு சக்கர வாகனத்தில் முன் பக்கமாக மாட்டி இருந்தான் ஜக்கு.
திருமுதுகுன்றம் தோழர்கள் தம்மோடு பணியாற்றிய ஒரு நல்ல நண்பனை சமீபத்தில்தான் இழந்து இருந்திருந்தார்கள்.சையத் மஜகர் அவன் திருப்பெயர்.சைவம்மட்டும்தான் சாப்பிடுவான். இப்படியும் இஸ்லாமியர்களில் இருப்பார்களா என்ன. இருந்தானே அப்பா அந்த சையத் மஜ்கர்.
மஜ்கர் எல்லோருக்கும் இனிய நண்பன்.எந்த பேதமும் பார்க்காமல் யார்க்கும் உதவும் பெரிய மனதுக்காரன்.அவன் சக நண்பர்களுக்குத்தான் செய்த உதவியைப்பற்றி மட்டும் ஒரு போதும் பேசவே மாட்டான். யார் பேசவும் அனுமதிக்க மாட்டன்.’ சார் விடுங்க வேற எதாவது பேசலாம்’ என்பான். அலுவலகப் பணிக்கு நேரம்தவறாமல் வருவான்.செய்யும் வேலையில் பெண்டிங்க் என்பது அறியாதவன்.
செய்த வேலைக்குக் காசு எடுத்து நீட்டிய ஒரு தொலைபேசி வாடிக்கையாளரிடம். ‘ இது தப்பு சார், எங்களுக்கு சோறு போடறது அரசாங்கம், நீங்க ஒருபோதும் இப்படி க்காசு கொடுப்பதை வழக்கமாக ஆக்கிவிடாதீங்க’ என்று கனிவாகச்சொன்ன முதுகுன்றத்து தொலைபேசி ஊழியன். . சொன்னால் யாரும் நம்பதான் மாட்டார்கள்.
மஜ்கர்தான் திடீரென இறந்து போனான். மனித் இறப்புக்கு நியாயம் தர்மம் என்றெல்லாம் உண்டா என்ன.ஏதோ உடல் நிலை சரியில்லை சென்னையில் ஒரு பெரிய மருத்துவ மனைக்குப் போனான். அவ்வளவுதான். அது என்றார்கள் இது என்றார்கள். மருத்துவமனையில் ஆளுக்கு ஒன்று சொன்னார்கள். கடைசியாய் அவன் உடலை வெள்ளைத்துணியில் பொட்டணமாகக்கட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.
அவனுக்கும் ஜக்குவுக்கும் மிக நெருங்கிய நண்பன் தான் மஜ்கர். மஜ்கரின் இறப்பைத் தாங்கமுடியாமல் இருவரும் தவித்துப்போனார்கள். கடலூர் மாவட்டத்துத்தோழர்கள் ஆயிரம் பேருக்குக்கூடி மஜ்கருக்கு அவன் மறைந்த தியாக துருகம் மண்ணில். அடக்கத்தன்று அஞ்சலி செலுத்தி க்கண்ணீர் விட்டார்கள்.
நடைபெற இருக்கும் கடலூர் மாநில மாநாட்டிற்குத் துருகம் மண்ணில் இருந்து’ மஜ்கர் ஜோதி’ ஏந்தி திருமுதுகுன்ற த்தோழர்கள் கடலூர் நகருக்கு நடை பயணமாகப்புறப்பட்டார்கள்.வெள்ளை நிறத்தில் மேற்சட்டையும் முழுக்கால்சட்டையும் அணிந்த அந்தத்தோழர்கள் தலையில் சிவப்பு ரிப்பன் கட்டி இருந்தார்கள்.ஆஜானுபாஹுவாய் இருந்த தோழன் சுந்தரம் தான் பேரணிக்குத் தலைமை ஏற்றுப்போனான்.அடிக்கடி மூகுப்பொடி போட்டுக்கொள்ளும் அந்த சுந்தரத்தை ஜக்கு ‘பொடி மட்டை’ என்றும் அழைப்பதுண்டு.
அவனும் ஜக்குவும் நடைப்பயணம் செல்லும் பேரணிக்கு முன்பாக இருசக்கர வாகனத்தில் மெதுவாகச்சென்றனர்.பேரணியில் செல்வோர்க்கு வேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் ஜக்குவோடு சேர்ந்துகொண்டு அவன் சிறப்பாக கவனித்தான்
அவன் ஊருக்கு அண்டையூர்க்காரன்தான் லோகு. கடலூர் மாவட்டத்துத் தோழர்களால் செல்லாமாய் லோகு என அழைக்கப்பட்ட லோகநாதன் பேரணியில் கோஷங்களை எழுப்பினான். தருமத்தை .வெல்லும் ஒரு படை புறப்பட்டுவிட்டதாய் எல்லார்க்கும் சேதி சொன்னான். தொழிலாளர் ஒற்றுமை இங்கே கட்டப்பட்டு நாங்கள் முன்னேறுவதை வந்து பாருங்கள் என்றான்.போராடாமல் இங்கு எதுவும் வரவில்லை. நாம் பெற்றது எதுவும் போராட்டங்களின் கொடையே என்றான். சாலையில் வருவோர் போவோர் அவ்ன் கோஷம் வழியாகப் பொது மக்களுக்குச்சொல்லும் நல்ல செய்தியைக்கவனித்தார்கள். கோஷம் கேட்டு நின்றவர்கள் யோசித்துவிட்டுப்பின் மீண்டும் நடந்து போனார்கள். கோஷத்தை அற்புதமாய்ப் பொருள் பொதிந்து எழுதிப்படிப்பதிலே லோகு கை தேர்ந்தவன்..
அவனுக்கும் ஜக்குவுக்கும் பேரணி செல்வது ரொம்பவும் பெருமையாக இருந்தது.உளுந்தூர்பேட்டை தொலைபேசி நிலைய வாயிலில் ஆரகளூர் அம்பாயிரம் எல்லோரையும் தன் மனம் இனிக்கும் வரவேற்பு உரையால் நெகிழவைத்தான்.நடந்தே பேரணியாய் கடலூர் செல்லும் தோழர்களுக்கு வேண்டுவன எல்லாம் செய்து அவனும் பேரணியில் சங்கமமானான்.
மீசை ஆறுமுகம் இதே உளுந்தூர்பேட்டைக்காரர்தான். பேரணியில் கலந்துகொண்டதோழர்களுக்கு எல்லாம் ஒரு புத்தகம் கொடுத்துக்கொண்டேபோனார். ஜக்குவுக்கும் அவனுக்கும் இப்போது ஒரு புத்தகம் கைவசமானது. கடலூரில் வாழ்ந்துமறைந்துபோன சிரில் என்னும் தோழர், வேந்தன் என்னும் புனைபெயரில் எழுதிய சிறு கதைத்தொகுப்பு அது.
கடலூரில் தொலை பேசி ஊழியர்களின் மத்தியில் சிரில் என்னும்பெயரை அறியாதோர் உண்டா என்ன? நல்லதொரு தொழிலாளியாய் நேர்மையான தலைவனாய், சிறந்த புத்தகங்களின் வாசகனாய், நல்ல இலக்கியம் படைப்பவனாய் ,அன்பு ஊற்றெடுத்து பிரவாகிக்கும் பெரிய மனதுக்காரனாய், மனிதர்களை மனிதர்களாய் மட்டுமே பார்க்கத்தெரிந்த நடமாடும் அதிசயமாய் வாழ்ந்து மறைந்த உத்தமன் அவன். நினைக்க நினைக்க தித்திக்கும் பொருள் பொதிந்த வாழக்கைக்குச்சொந்தக்காரன் சிரில்….
மீசை ஆறுமுகம் வழங்கிய புத்தகத்தை அவன் பிரித்துப்பார்த்தான்.’பாலம்’ என்னும் ஒரு சிறுகதையில் ஆரம்பித்த அந்த புத்தகத்தில் இருபது கதைகளுக்கு மேல் இருந்தன.
‘மீசைக்கு எப்படி இது எல்லாம் தோன்றுகிறதோ’
என்றான் அவன் ஜக்குவிடம்.
‘ அந்த மீசைக்கு மட்டும்தான் இப்படியெல்லாம் தோணும்’ அவன் பதில் சொன்னான்.இருவரும் மீண்டும் இருசக்கர வாகனத்தில் ஏறி ப்பேரணியின் முன்பாகச்சென்றார்கள்.
மங்கலம்பேட்டை தொலைபேசி அலுவலக வாயிலில் சென்று பார்த்தார்கள்.அங்கு மோகன்ராஜ் என்னும் போன் மெக்கானிக் தயாராக நின்றுகொண்டு இவர்கள் இருவரையும் வரவேற்றான்.
‘என்ன அண்ணாச்சி பேரணி எங்க வருது, இங்க வர இன்னும் நாழி ஆவுமா அதுக்குள்ள ஒரு டீ குடிக்கலாமா என்ன சொல்லுறீங்க’ இப்படிக்கேட்ட மோகன்ராஜிடம் அவன் பதில் சொன்னான்.
‘மோகன்ராஜு தோழர்கள் எல்லாரும் இங்க வந்துடட்டும். அவுங்க வந்தபெறகு நாம சேந்து டீ குடிக்கலாம்’
‘அதுவும் சரி’ மோகன்ராஜு பதில் சொன்னான்.
‘பேரணியில வருவீர்தானே’ ஜக்கு கேள்வி வைத்தான்.
” வர்ராம நான் இங்க என்னா செய்ய’ மோகன்ராஜ் பதில் சொன்னான்.
திரும்பவும் பேரணி எங்கு வந்துகொண்டிருக்கிறது என்று பார்த்து வரச்சென்ற ஜக்குவும் அவனும் நெமிலி என்னும் கிராமம் அருகே சென்று பேரணியில் கலந்துகொண்டார்கள்.
ஊர் நெருங்கும் சமயம் மட்டுமே கோஷம் எழுப்பிய அவர்கள் மங்கலம் பேட்டை தொலைபேசி நிலையம் அடைந்து பின் புறப்பட்டார்கள்.இப்போது மோகன்ராஜுவும் பேரணியில் சங்கமமானான்.வழக்கம் போல் ஜக்குவும் அவனும் திருமுதுகுன்றம் செல்லும் சாலையில் பேரணிக்கு முன்பாகச்சென்றுகொண்டிருந்தார்கள்.எத்தனையோ கிராமங்கள் குக்கிராமங்கள் எல்லாம் வழியில் வந்தன போயின.சாலையில் பேருந்துகளும் சென்றுகொண்டே இருந்தன. ஆடு மாடுகள் மேய்ப்போர் பேரணியில் செல்பவர்களைப்பார்து ஏதும் விளங்கிக்கொள்ளாமல் திணறினார்கள். சாலை இருபுறமும் புளியமரங்கள் அடர்த்தியாகப் பச்சைப்சேல் என்று இருந்தன.
பெரிய வடவாடி என்னும் ஊர் வந்தது. அங்கு கேரளாக்காரர் ஒருவரின்.’மானுவல் அன் சன்ஸ்’ என்னும் இன்சுலேட்டர் ஆலை வாயிலில் தொழிலாளர்கள் கூட்டமாகநின்று ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். ‘ஆலையை நிர்வாகம் மூடி விட்டதாகவும் இனி வேலைக்கு யாரும் ஆலைக்கு வரவேண்டாம் என்றும் தொழிலாளர்களுக்குச்சேரவேண்டிய பாக்கிதொகை ஏதுமிருப்பின் அது மூன்று மாதத்தில் கொடுக்கப்பட்டுவிடும் ‘என்று எழுதி ஒரு தட்டியை ஆலை வாயிலில் வைத்திருந்தார்கள்.போலிஸ்காவல் போடப்பட்டு ஆலை பாதுகாக்கப்பட்டிருந்தது.
‘இது பார்த்தாலே பயமா இருக்கு. ஆலைய மூடுனா வேலய நம்பி இருந்தவன் என்ன ஆவுறது’ என்றான் ஜக்கு.
பெரிய வடவாடி ஆலை வாயிலில் நின்றுகொண்டிருந்தவர்களில் ஒரு தொழிலாளி பதில் சொன்னான்.
‘அரக்காசு உத்யோகம்னாலும் அரசாங்க உத்யோகம் அது நீங்க பாக்குறது நாங்க அப்ப்டி இல்லே. தெனம் தெனம் செத்து பொழக்கறம்”
‘யாரும் ஒண்ணும் பேசாம வாங்க’ என்று அதிர்ந்து பேசினான் சுந்தரம்.
‘மூடாதே மூடாதே, நிர்வாகமே மூடாதே, ஆலையை நீ மூடாதே’ ஓங்க்கிக்கத்தினான் ஜக்கு. மானுவல் அன் சன்ஸ் தொழிலாளர்கள் ஜக்குவோடு சேர்ந்து குரல் கொடுத்தார்கள்.
‘நம்ம பொறுப்பு முடிஞ்சது ‘ சுந்தரம் ஜக்குவைப்பார்த்து கேள்வி வைத்தான். பேரணி சென்று கொண்டே இருந்தது.

‘ முதுகுன்றம் இண்ணைக்கு இரவு தங்கல்,நாளைக்கு இரவு குறிஞ்சிப்பாடி, அப்புறமா கடலூர்தான்’ என்றான் அவன்.
‘யாரு பிளான் எல்லாம் போட்டது’ ஜக்கு கேட்டான்.
‘எல்லாம் சுந்தரம் திட்டம்தான்’ அவன் பதில் சொன்னான்.
திட்டத்தின் படி பேரணிக்காரர்கள் அனைவரும் முதுகுன்றத்தில் தங்கி மறு நாள் காலை மீண்டும் ஆயத்தமானார்கள்.திருமுதுகுன்றத்தில் பெண்ணாகடம் பிச்சைப்பிள்ளை, கணபதியும்,திட்டகுடிக்காரர்கள் சிரிதரனும், பன்னீரும் , வேப்பூர் தோழர்கள் சின்னசாமியும் பெரியசாமியும் ஊருக்கு இருவர் எனப் பேரணியில் கலந்துகொண்டார்கள். முதுகுன்றம் நகர வங்கப்பணியாளர்கள் கிருட்டினனும், காளியும், வள்ளியும் பேரணியை வாழ்த்திப்பேசினார்கள்.அஞ்சல் இலாகாவில் எழுத்தராய்ப்பணியாற்றிய ‘கட்டுக்கட’ ஜெயராமன் பேரணியில் பங்குகொண்டு முதுகுன்றம் எல்லை முடியும் வரை வந்து போனார்.

அரசாங்கத்துக்கு ச்சொந்தமான டாசல் என்னும் பீங்கான் ஆலையை நிர்வாகம் மூடிவிட முயற்சிப்பதாகவும் அதனை அனுமதிக்கவே முடியாது என்றும் எழுதிய நோட்டீஸ் ஒன்றை டாசல் ஆலை த்தொழிலாளர் தலைவர் காசிநாதன் என்னும் காசி, எல்லோருக்கும் விநியோகித்து ஒத்துழைப்பு நல்க வேண்டுகோள் விடுத்தார்.
‘பிரைவேட்டு பீங்கான் ஆலைங்க இதே முதுகுன்றத்துல ஓகோன்னு ஓட அரசாங்க ஆலைல மாத்திரம் குரங்குக அட்டகாசம் தயாரான புது பீங்கான் பீசுவ எல்லாத்தையும் உடைச்சிடுது அதுலதான் ஏகப்பட்ட நஷ்டம்னு சொல்லுறாங்க’ அவன் தொலைபேசி ஊழியர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.
.
‘ இங்க ஆத்தைப் பாரு பாலாட்டம் ஒரே மணலு, எப்பவும் காஞ்சிதான் கிடக்குது ;என்றான் ஜக்கு முதுகுன்றம் ஊடாக ஓடும் மணிமுத்தாற்றினைப்பார்த்துக்கொண்டே.
‘ கள்ளக்குறிச்சி கிட்ட இருக்கிற கோமுகி டாம் தொறந்தாதான் தண்ணி இங்க வரும்’ என்றான் அவன்.
‘கோமுகி டாம் ரொம்புனாத்தான் அங்க இருக்குறவங்க அந்த அணையைத் தொறப்பாங்க’
‘இதேதான் அந்த கர்நாடகா காரனும் சொல்லுறான் செய்யுறான். காவேரியில இருக்குற அவுங்க அணைங்க எல்லாம் ரொம்புனாத்தான் தொறக்குறான். அப்புறம் மேட்டுர்க்கு தண்ணி வருது’ என்று பதில் சொன்னான் அவன்
பேரணி நெய்வேலியைச்சார்ந்த மந்தாரக்குப்பம் நகரை அடைந்தது.அங்கிருந்த தோழர்கள் பேரணி வந்தோரை வரவேற்று உபசரித்தார்கள். தொலைபேசி அலுவலத்தில் ஒரு புதிய கம்பம் நட்டு தொழிற்சங்கக்கொடி ஏற்றினார்கள். இனிப்புக்கள் வழங்கி வெடி வெடித்து கொடியேற்றத்தைக்கொண்டாடினார்கள்.அவனுக்கும் ஜக்குவுக்கும் அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது.
‘சிரில் கடலூருக்கு வருமுன் இங்குதான் பணியாற்றினார்’ என்றான் அவன்.
” இங்க ரெங்கனாதனும் கணேசனும் அந்த சிரிலுக்கு நெருக்கமானவர்கள் எனக்குத்தெரியும்.’ என்று பதிலுக்குச்சொன்னான் ஜக்கு.
‘தப்பு எங்கு நடந்தாலும் தட்டிக்கேட்கும் டெலிபோன் லைன்மென் ரெங்கனையும்,தோழர்களோடு எப்போதும் ஒரு குழந்தையாய்ப்பழகிய அந்த போன் இன்ஸ்பெக்டர் கணேசனையும். மறப்பதா’
என்றான் அவன்.
பேரணி குறிஞ்சிப்பாடி நோக்கிப்பயணிக்கத்தொடங்கியது.வடலூர் வந்தது. வள்ளலார் ராமலிங்கர் நிறுவிய அருள்ஜோதிக்கோவில் பார்த்து அவனும் ஜக்குவும் ‘அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை’ என் ஓங்கிச்சொன்னார்கள்.
‘இது கோஷம் போடுற சமாச்சாரம் இல்ல ‘ என்றான் லோகு.
அவன் லோகுவைப்பார்த்து ஒரு முறை புன்னகை செய்தான். நான்கு சாலைகளின் சந்திப்பு வந்தது.மக்கள் நடமாட்டம் கூடித்தெரிந்தது.முதுகுன்றத்து சுந்தரமும் பெண்ணாடம் போன் மெக்கானிக் பகத்சிங்கும் விலைவாசி உயர்வு பற்றி கோஷம் போட்டார்கள்.
‘ ஏறுது ஏறுது விலைவாசி, விஷம் போல் ஏறுது விலைவாசி, இறங்குமா விலைவாசி,விலையைக்குறை. விலையைகுறை, விலையைக்குறைக்க முடியாவிட்டால் நடையைக்கட்டு நடையைக்கட்டு’ தோழர்கள் தொடர்ந்து கோஷம் கொடுத்தனர்.
வடலூர் பேருந்து நிலையம் அருகே’ சேஷசாயி பீங்கான் இன்சுலேட்டர் ஆலையை மூடிய நிர்வாகத்தை எதிர்த்து அங்கு பணியாற்றிய ஊழியர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தார்கள்.
‘ ஆலை முதலாளிக்கு பட்டுசொக்கா
ஆலை தொழிலாளிக்கு கோவணமா அம்மணமா
மூடுறதும் தொறக்குறதும் மொதலாளிக்கு வெளையாட்டு
தொழிலாளர் எங்களுக்கு அதுதானப்பா உயிர் மூச்சு’
தொடர்ந்து கோஷம் எழுப்பிக்கொண்டிருந்தார்கள்.ஜக்கு அதனைக் கூர்ந்து கவனித்தான்.
‘ நாம அரசாங்கத்துல வேல பாக்குறம்’ அவன் ஜக்குவிடம் சொன்னான்.’ அதானாலென்ன அரசாங்கம் முடிவு பண்ணினா எதயும் மூடும் எதயும் தொறக்கும்’ ஜக்கு அவனிடம் சொல்லிக்கொண்டான்.
‘ அப்படி எல்லாம் ஆவுற விஷயமில்ல.அரசாங்கமும் தன் இஷ்டத்துக்கு எதயும் செய்துடமுடியாது.நாம்பளும் அத லேசுல வுட்டுட மாட்டம்’ அவன் அழுத்தமாய் பதில் சொன்னான்.
ஜக்கு அவனைப்பார்த்து நிறைவாய் சிரித்துக்கொண்டான்.
குறிஞ்சிப்பாடி நகரம் சமீபித்தது. ஊருக்கு முதலிலேயே தெரியும் குட்டையில் மீன்களை ப்பிடிக்க வலை நட்டு இருந்தார்கள்.எதிரே ஒரு திரையரங்கம் தெரிந்தது.
‘மீனுவ எல்லாத்தையும் புடிக்காம வுட்டுட்டா என்னா ஆவும்’ என்றான் அவன்.
‘உனக்கு என்ன ஆச்சு’ ஜக்கு கடுப்பாகவே பதில் சொன்னான்.
திரை அரங்கில் ஏதோ ஒரு தெலுங்குப் படம் ஓடிக்கொண்டிருந்தது.
அருகே இருந்த தொலை பேசி நிலையத்தில் அனைவரும் இரவு தங்கினார்கள். குறிஞ்சிப்பாடித்தோழர்கள் பேரணியில் வந்த அனைவருக்கும், சுவையான உணவு தந்தார்கள். தோழர்கள் சிலர் தெலுங்கு படம் பார்க்கப்போனார்கள். அவனும் ஜக்குவும் ஏதோ பேசிக்கொண்டே இரவு கழித்தனர்.
. காலை வழக்கம் போல் பேரணி கோஷம் எழுப்பியபடி குறிஞ்சிப்பாடியை விட்டுக்கிளம்பியது. ரெத்தின முதலி தெரு தாண்டிக்கொண்டிருந்த போது மணியம் பதிப்பகம் வாயிலில் சம்பந்தம் நின்று அனைவரையும் வரவேற்றார்.நல்ல நல்ல இலக்கிய நூல்களை பதிப்பிக்கும் தமிழ்ப்பணியை சம்பந்தம் செய்து வருவதாய் சுந்தரம் அவரை அனைவர்க்கும் அறிமுகம் செய்துவைத்தான்.
‘ நல்லது நடந்துகிட்டுதான் இருக்குது’ என்றான் ஜக்கு.
சம்பந்தம் புன்னகைத்தார். அவரே அனைவர்க்கும் தேநீர் கொடுத்து பேரணியை வாழ்த்திச்சென்றார். லோகு விடாமல் கோஷம் கொடுத்துக்கொண்டே வந்தான்.
பேரணி குள்ளஞ்சாவடியை த்தொட்டது.குள்ளஞ்சாவடி தொலைபேசி நிலைய வாயிலில் நான்கு தோழர்கள் காத்துக்கொண்டு நின்றனர். எல்லோருக்கும் மோர் வழங்கி அவர்களின் அன்பை அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.பேரணி வேக வேகமாய் நடக்க ஆரம்பித்தது. கடலூர் சமீபிப்பிததை மீன். விற்கும் பெண்டிர்கள் தம் சுறு சுறுப்பு நடமாட்டத்தால் அறிவித்தனர்.
‘ கடலூர் பழைய டவுன் தாண்டுறம்’ என்றான் சுந்தரம்
தென்பெண்ணை ஆறு சமீபமானது.. ஆற்றுப்பாலத்தில் சுந்தரம் அசுரத்தனமாக கோஷம் போட்டான்.லோகு சுந்தரத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.
பேரணி சுப்புராயலு ரெட்டியார் மண்டபம் நெருங்கியது. கடலூர் தோழர்கள் கவிஞ்ர் கோவி செயராமன் தலைமையில் பேரணியில் வந்தோரை வாழ்த்தினர். கடலூர் நீலகண்டன் தான் அழகழாய் கோஷம் எழுப்பினார்.
செம்படையே வருகுது, செம்படையே எழுகுது, செம்படையே ஓங்குது, செம்படையே உயருது, செம்படையே வெல்லுது சொல்லிக்கொண்டே போனார் நீலகண்டன்.
‘எல்லோரும் ஓர் நிைற்,எல்லோரும் ஓர்விலை,எல்லோரும் இந்நாட்டு மன்னர், சத்திய வார்த்தை சத்திய வார்த்தை,முண்டாசுக்கவியின் சத்திய வார்த்தை,பொய்யாகிப்போயிடுமா, பொய்த்துப்போக விடுவோமா, புறப்பட்டோம் விடமாட்டோம், இறுதி வெற்றி என்றும் எமதே, உறுதி ஏற்போம் உறுதி எற்போம்’ கவிஞ்ர் கோவி விண்ணதிர முழங்கி முடித்தார். அண்ணாந்து பார்த்தான் அவன். கோவி தொழிற்சங்கக் கொடியை வலது கரத்தில் பிடித்து ஓர் ஆனை மீது இருந்து கோஷம் கொடுக்கிறார்.
‘ஜக்கு ஆனையை பாத்தியா’
‘ ஆனயை ப்பார்த்தேன் ஆனை மீதிருந்த கோவிசெயராமனையும் பார்த்தேன், நீரு ஊர்வலத்துல கோஷம் போட்டா ஒலகத்தயே மறந்துடுறீருல்ல’ அவனுக்கு ஜக்கு பதில் சொன்னான். இருந்தாலும் ஆனையை தான் கவனிக்காமல் விட்டது எப்படி என்பதுதான் அவனுக்குப்பிடிபடவில்லை. கொஞ்சம் அசிங்ககமாகக்கூட இருந்தது.இது போல் அவனுக்கு வாழ்க்கையில் இன்னும் எத்தனையோ ஆகியிருக்கிறது அதனில் இதனையும் அவன் கூட்டிக்கொண்டான்.
மூவர்ண் தேசியக்கொடியை கடலூர் பாலன் ஏற்றிவைக்க தொழிற்சங்கக்கொடியை டில்லியிலிருந்து மா நாட்டிற்கு வருகை தந்த ஓம்பிரகாஷ் ஏற்றி வைத்தார்.
அவனும் ஜக்குவும் பெருமிததோடு கொடிகளுக்குக்கீழாக நின்றார்கள்.
‘நாடும் முக்கியம் நம்ம வீடும் முக்கியம்’
என்ற அவனுக்கு’ நாட்டுக்குள்ள வீடு அடங்கும் தானே’ என்று பதிலை சொடுக்கிச் சொன்னான் ஜக்கு.
கடலூர் பாலன். கரிய தாடிக்காரர்.தலை முன்பாதிக்குசொட்டை. கண்கள் வாளினைவிடக்கூரியவை. பெற்றஞானத்தின் அளவு சொல்லும் மூக்கு.நெற்றியின் அகலம் மனத்தின் அகலம்,பேசும் சொற்கள் சித்தபுருடன் பேசுவதுபோலவே ஆகா எத்தனை சௌந்தரியமான ஒரு மனிதப்பிறவி.அவ்ரின் உடல் மறைத்திருக்கும் வெள்ளை வெளேர்க் கதர் சட்டை. நாட்டு விடுதலையில் பங்கு பெற்றவர் என்பது அவர் பேசும் போதே தெரிந்து விடுகிறது.பொருள் நெருக்கிக்கொண்டு நிற்கும் வார்த்தையோ கள். பார்க்க பார்க்க கடலூர் பாலன் தான் பார்ப்போருக்கு எத்தனை உற்சாகம் தருகிறார்.
நெய்வேலி கணேசனோடு எப்போதும் பேசிக்கொண்டிருக்கிறார் கடலூர் பாலன். அவர்களுக்குத் துணையாக சென்னையிலிருந்து வந்த கவிசிவா எல்லோரையும் பார்த்து மகிழ்ந்து மகிழ்ந்து போனான் ஜக்கு.
கடலூர் தோழர் சிரிலின் கண்டெடுப்பான ஜகன் மாநாட்டு மேடையிலிருந்து நெல்சன் மண்டேலாவின் விடுதலைக்கு க்குரல் கொடுத்தார். தமிழக தபால் தந்தி ஊழியர்களின் பெறற்கு அரிய மாணிக்கம் ஜகன்.
கடலூர்.மாநாடு இப்போது களை கட்டியிருந்தது. ஆண்களும் பெண்களும் உற்சாகமாய் மண்டபமெங்கும் காணப்பட்டார்கள்.உள்ளூர் தமிழ் அமைப்புக்களின் தலைவர்கள் க.போ இ,. வளவதுரையன், முனைவர்.பாசுகரன்,குரல் நடராசன், கவிபால்கி, திசை எட்டும் குறிஞ்சிவேலன் , செந்தமிழ்ச்சொலை அரங்க நாதன்,கதிர்முத்தையன்,கடல் நாக ராசன்,திருக்குறள் ராசாராம்,தாடிக்காரர் முத்துராசா, பாட்டாளிக்குரல் சசி, தோழியர் ஜெயஸ்ரீ எத்தனை ச்சான்றோர்கள் இங்கே கூடியிருக்கிறார்கள்..விழுப்புரம் பழமலய் முதுகுன்றம் சபா வடலூர் சத்தியமோகன் என அக்கம் பக்கத்து எழுத்தாளர்களும் மாநாட்டு அரங்கில் அணியாக அமர்ந்திருந்தார்கள்.
‘ இவுங்க எல்லாம் கூட இங்க வருவாங்களா’ அவன் கேட்டான்.
‘ ஏன் அந்த வ உ சி, திரு.வி க, ஜீவா, நம்ப சிரில் எல்லாம் தொழிற்சங்க வாதிங்க எல்லாருமே தமிழ் பற்றாளர்கள் இல்லையா அப்படித்தான்’ என்றான் ஜக்கு.
ஜக்குவுக்கு இவ்வளவு தெரிகிறது. கொஞ்சமும்கூட தலைகனம் இல்லாமல் இது எப்படி? அவன் யோசித்தான்.
கடலூர் பாலன் ஒரு மரத்தின் கீழாக நிழலில் அமர்ந்து ஒரு நிஜ நாடகத்திற்கான குறிப்புக்களைத்தயார் செய்துகொண்டு இருந்தார்.
‘ நீங்க எல்லாம் ஒற்றுமையா இருந்து உங்களைச்சுரண்டுபவர்களை எதிர்த்துப்போராடணும்னு எந்த கடவுளாவது சொல்லி இருக்குறாரா?,எந்த வேத புத்தகத்திலாவது அது எந்த மதத்திலாவது போராடணும்னு. சொல்லி இருக்குறாங்க்ளா இல்லே நீ நேர்மையா இரு ஒழுங்கா கடமையைச்செய்.பாக்கிய நான் பாத்துகுவேன்னுதான் கடவுள் சொல்லுறாரு.ஆக இது அத்தனையும் கடவுள் சொல்லுறது இல்லே நம்பளை கட்டிப்போட யாரோ செஞ்ச ஏற்பாடு.
ஒரு நிஜ நாடகம் நாம பண்ணுறம் அதுல இந்து மதத்துல என்னப்பா சேதி சொல்லுதுன்னு கேட்போம் அதுக்கு ‘ கடமையைச்செய் பலனை எதிர்பார்க்கதே’ ன்னு பதிலு வரும், கிறித்துவ மதம் அது நமக்கு என்னா சொல்லுதுன்னு கேட்போம்.. ‘ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக்காட்டுன்னு’ பதிலு வரும், அந்த இஸ்லாம் மதம் மக்களுக்கு என்ன சொல்லுதுன்னு கேட்போம் அதுக்கு’ அல்லாவே ஆகப்பெரியவர்’ ன்னு பதிலு வரும்.
ஆகப்போராடணும்னு யாரும் சொல்லுல , தொழிலாளிங்க நாம சொல்லுறம், போராடினாத்தான் இங்க மனுஷன், பொறக்குற குழந்தையும் போராடினாத்தான் அது எழுந்து நிற்கவே முடியும் அப்புறம் அது மனுஷனாக உலா வர முடியும். நாம பெற்றிருக்குற எல்லாமே போராட்டம் நமக்கு கொடுத்ததுதான். இல்லன்னா இங்க அந்த சமூக வளர்ச்சிங்கறது அசிங்கமா நின்னு போயிடும் ஆக போராட்டம் மட்டுமே மனித வாழ்க்கை . போராட்டம் போராட்டம் போராட்டம் அதுக்கு முடிவே இல்லே’ போன் இன்ஸ்பெக்டர் நெய்வேலி கணேசனிடம் சொல்லிக்கொண்டே போனார் கடலூர் பாலன்.
அவன் அதைக்கூர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தான்.ஜக்குவோ மாநாட்டில் நடப்பது பற்றி யோசித்துக்கொண்டே இருந்தான்.கடலூர் பெரிய ரகு மாநாட்டில் பேசிக்கொண்டே இருந்தார்.’ சீனாவில் தியானன்மென் சதுக்கத்தில் நடந்தது ஜன நாயகப்படுகொலை அங்கு கொல்லப்பட்டவர்கள் தியாகிகள். அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது நமது கடமை. ஆக அஞ்சலி பகுதியில் தியானன்மென் சதுக்கத்தில் கொல்லப்பட்டோருக்கு அஞ்சலி என்னும் பத்தி அப்படியே இருக்கும்’ சொல்லி முடிக்க மாநாட்டில் ரகளை தொடங்கியது.
‘ அவர்கள் தியாகிகள் அல்ல பொதுவுடைமைத் துரோகிகள் அவர்கட்கு ஏன் அஞ்சலி? அவர்கள் கொல்லப்பட்டது சரியே என்று வாதிட்ட தோழர்கள்,’ காட்டிக்கொடுப்பவனை காட்டிக்கொடுப்பது காட்டிக்கொடுப்பதாகாது’ என்று எதிர்க்குரல் கொடுத்தார்கள்..
மண்டபத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளத்தொடங்கி மாநாடு ஒரே களபரமாகியது.கூச்சலும் குழப்பமும் அதிகரித்தது. எல்லோரும் அரங்கை விட்டு வெளியே மூலைக்கொருவராக ஓட ஆரம்பித்தார்கள்.
கடலூர் பாலன் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டே இருந்தார். திருமுதுகுன்றத்துதோழர்கள் சின்ன ரகுநாதனும், மாத்ருபூதமும் மாநாட்டு வாயிலில் நிறுவப்பட்டிருந்த தியாகிகளுக்கு அஞ்சலிக்கான இடத்திலிருந்து மாநாட்டு ஆண்டறிக்கையில் உள்ள அஞ்சலிப்பகுதி பற்றி ஆழ்ந்து விவாதித்துகொண்டிருந்தனர்.
மாலை நேரம். கடலூர் தலைவர்கள் ஸ்ரீதரும் பக்கிரியும் பறக்கும் தேசியக்கொடியைக் கம்பத்திலிருந்து இறக்கிப்பத்திரம் செய்தனர்.
‘இது நாம் ஏன் சாயந்தரம் சாயந்தரம் இறக்கிடறம்’ பக்கிரி கேட்டான்.
‘ இது இரவுல பறக்கவிடக்கூடாதுன்னு சட்டம்’ பதில் சொன்னார் ஸ்ரீதர்.
‘அது ஏன்னு கேட்டன்’
‘ அப்பா, அது தெரியாது என்ன ஆளவுடு’ ஸ்ரீதர் முடித்துக்கொண்டார் .
ஜக்குவும் அவனும் கடலூர் பாலன் என்ன செய்கிறார் என்று கவனித்துக்கொண்டே இருந்தனர்.
‘ ஒண்ணும் தப்பில்லே. கருத்து வேற்றுமைகள் வரும் அது வரவும் வரணும். வந்தாத்தான் நமக்கு எது சரி எது தப்புன்னு தெரிய வரும் சண்டைபோட்டுகிட்டு வெளியில போவுலாம், தனியா எதுவும் செய்துட முடியாது. அப்படியே செய்தாலும் சரியா வருமா,ஆத்திரத்துல போவுறதுதான் ஆனா தொழிலாளிங்க ஒத்துமையா வராம ஒரு கதையும் ஆவாது. எதுக்கும் ஒரு காலம்னு ஒண்ணு ஆவும்,.நேரம்னு ஒண்ணு வரும்’ கடலூர் பாலன் சொல்லிய வண்ணம் தன் நாடகக் குறிப்புக்களைச் சரிபார்த்துக்கொண்டே இருந்தார்.
‘ராமாயணத்துல அவதாரம் எடுத்த அந்த அயோத்தி ராமர், குரங்கு இன வாலிய மறஞ்சி நின்னு கொன்னது சரியா தப்பான்னு பண்ணுற வாதம் எண்ணைக்கு முடியும்’ அவன் ஜக்குவிடம் சொல்லிக்கொண்டு நின்றான். உடன் ஜக்கு ‘எதைத்தான் நீ வுட்டு வச்சிருக்கே’ அவனுக்குப் பதில் சொன்னான்..

‘ வி ஷல் ஓவர் கம், விஷல் ஓவர் கம், வி ஷல் ஓவர் கம், சம் டே
ஓ டீப் இன் மை ஹார்ட்
ஐ டு பிலிவ், வி ஷல் ஓவர் கம், சம் டே. ‘

விழுப்புரம் தோழர், தொலை பேசி இயக்குனர் அந்த பாட்டுக்கார ஜெயராமன் அற்புதமாகப்பாடிக்கொண்டே இருந்தார். தொழிலாளர்கள் அட்வகேட் என் கே சீனுவும், மகளிர் அணித் தலைவி விஜியும் மாநாட்டுமேடையில் தலைமை இருக்கையில் அமர்ந்து கொண்டு இனி என்ன நடக்க இருக்கிறது என்பதைக் கவனித்துகொண்டே இருந்தார்கள்.
கடலூரில் கூடியிருந்த எல்லா தோழர்களும்,ஆங்காங்கே மரத்தடியில். நின்று ஓயாமல் சொந்தக்கதைபேசிக்கொண்டிருந்தவர்களும் கூட இப்போது ஒவ்வொருவராக மண்டபத்துக்குள் அச்சத்துடன் நுழைந்து கொண்டிருந்தார்கள்.
ஜக்குவும் அவனும் மாநாட்டு அரங்கினுள் நுழைந்து இருக்கை பார்த்து அமர்ந்தனர். பி.எஸ் அவனுக்கும் ஜக்குவுகும் இடையில் அமர்ந்திருந்தார்.
.’ஒரு பாட்டு என்னா வேலை செய்யுது’ என்றான் பி.எஸ்சிடம் ஜக்கு. அவர் அமைதியாய் இருக்க,
‘கீதை அறிவின் ஊற்று
குழலோசை அன்பின் ஊற்று
பார்த்தன் கேட்டது கீதை
பசுவோடு கன்றும் செடி கொடியும் கேட்டு இன்புற்றது குழல்’
தனக்குத் தெரிந்த ஒரு பதிலைச் சொல்லிய அவன், டில்லியில் இருந்து வந்திருக்கும் ஓம்பிரகாஷ் என்ன சொல்லப்போகிறார் என்பதில் கவனமாய் இருந்தான்.
கடலூர் பாலன் இன்னும் தனது நிஜ நாடக குறிப்போடு மரத்தடியில் யோசித்த்படியே இருந்தார்.
———————————————————

Series Navigation
author

எஸ்ஸார்சி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *