தொடுவானம் – 35. நடுக்கடலில் சம்பந்தம்

This entry is part 1 of 25 in the series 28 செப்டம்பர் 2014

0444

(இளம் வயதில் அப்பா.)

          தாத்தா மலாயாவுக்கு போக வர இருந்துள்ளார்  அவர்  ஜோகூர் சுல்தான் மேன்மை தங்கிய அபூபக்கரின் அரண்மனையில் தோட்ட வேலைகள் செய்துள்ளார். அப்போது சிதம்பரத்தில் உயர்நிலைப்பள்ளி படிப்பை முடித்த பெரியப்பாவையும் அப்பாவையும் மலாயாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.அவர்கள குளுவாங்கில் இருந்துள்ளனர். பெரியப்பா அங்கு லம்பாக் தொட்டத்து தமிழ்ப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். பெரியம்மாவும் அதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றியுள்ளார்.
         அப்பா சிறிது காலம் குளுவாங் அரசு மருத்துவமனையில் உதவியாளராகப் பணியாற்றிய பின்பு சிங்கப்பூர் சென்று பாரதிதாசன் தமிழ்ப் பள்ளியில் ஆசிரியரானார்.
         அப்பா இளைஞராக இருந்தபோது தாத்தாவும் கிராமத்தில் இருந்துள்ளார். அவர் வயல்களில் விவசாயம் செய்தபோது அப்பாவும் அவருக்கு உதவியுள்ளார்.அனால் தாத்தாவின் கண்டிப்பு அப்பாவுக்கு பிடிக்காதாம். அதனால் இருவருக்கும் அடிக்கடை சண்டை வருமாம்.
          அப்பா அப்போது கிராமத்து படித்த மைனராக இருந்துள்ளார். அவர் நிறத்தில் சிவப்பாகவும்,   ஆண் அழகராகவும்  திகழ்ந்துள்ளார். . கிண்டல் செய்வதில் கில்லாடியாம். கிராமத்து இளம் பெண்கள் மத்தியில் அவர்தான் கதாநாயகனாம். திருமண வயதில் இருந்த அவர்மீது கிராமத்து பெண்களுக்கெல்லாம்  கிளுகிளுப்பு உண்டானதும் உண்மைதானாம். அவருடைய அந்த இளமைப் பருவ லீலைகளை  அப்பா என்ற காரணத்தால் இதோடு நிறுத்திக்கொள்கிறேன்.
          அப்பாவை நிலங்களைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு தாத்தா மலாயா சென்றுவிட்டார். அப்பாவும் அவருடைய அப்பாவின் தொல்லையும் தொணதொணப்பும் இல்லாமல் நானே ராஜா என்ற பாணியில் கிராமத்தில் செல்வச் செழிப்பில் பெருமையுடன் இளமையை இன்பமாகக் கழித்துள்ளார்.
          சில வருடங்களுக்குப் பின்பு  தாத்தா ஊர் திரும்ப கப்பல் ஏறியுள்ளார். அப்பாவுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற நோக்கம் அவருக்கு. கிள்ளான் துறைமுகத்திலிருந்து சென்னை வந்து சேர ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் கூட ஆகும்.
          அவர் பிரயாணம் செய்த கப்பலில் சோமு என்பவரைப் பார்த்துள்ளார். அவர் தெம்மூர் பெரிய தெருவில் பெரும் பணக்காரர். மலாயாவில் பணம் சம்பாதித்து கல் வீடு கட்டியவர். அவரைப்போன்றே அவருடைய இரண்டு சகோதரர்களும் ஒரு தங்கையும் கூட கல் வீடு கட்டி சிறப்புடன் வாழ்ந்தனர்.
          அந்த பிரயாணத்தின் போது அவர்கள்  பேசிக்கொண்டிருந்தபோது தாத்தா தன்னுடைய மகனுக்கு ( அப்பாவுக்கு ) ஒரு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கப் போவதாகக் கூறியுள்ளார். அது கேட்ட சோமு தாத்தாவும் தானும் தன்னுடைய மகளுக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து மணமுடிக்கப் போவதாகக் கூறியுள்ளார். அந்த ஒரு வார கடல் பிரயானத்தின்போதே இருவரும் நிதானமாகக் கலந்து பேசி சம்பந்தி ஆகிவிட்டனர்! அந்த சோமு தாத்தாவின் மகள்தான் தாரணியம்மாள் – என் அம்மா!
         ஒன்றாக ஊர் திரும்பியவர்கள், மலாயாவிலிருந்து கொண்டு வந்திருந்த பணத்தை வைத்து தடபுடலாக ஊரே வியக்கும் வகையில் சிறப்பான முறையில் திருமணத்தை நடத்தி வைத்தனர். இந்துவான அம்மா கிறிஸ்துவ மதத்தில் சேர்ந்து ஞானதீபம் என்றும் பெயர் பெற்றார். அப்பாவின் பெயர் ஞானவரம்.
          அப்பாவுக்கு அம்மாவை ஆரம்பத்திலிருந்தே அவ்வளவாகப் பிடிக்கவில்லை. அவர் கிராமத்து மைனராக இருப்பவர். அவருடைய சம்மதம் இல்லாமல் திருமணம் நிச்சயிக்கப்பட்டதுதான் காரணம். ஆனால் தூர தேசம் சென்று தியாகம் செய்துள்ள அப்பாவின் சொல்லை தட்ட முடியாத நிர்ப்பந்தம். அப்பா நல்ல சிவப்பு. அம்மா அதற்கு நேர் மாறான கருப்பு! அப்பா உயர்நிலைப் பள்ளி வரை படித்தவர். அம்மா பள்ளி செல்லாமல் வளர்ந்தவர்!
          ஆனால் அம்மாவுக்கு விட்டு வேலைகளுடன் வயல்வெளி வேலைகள் அனைத்தும் தெரியும். மாமனார் மாமியாரை பரிவுடன் பார்த்துக்கொள்ளக்கூடிய கிராமத்து பண்பில் வளர்ந்தவர். அதுபோன்ற பெண்களைத்தான் மருமகளாக விரும்பினர் கிராமத்து பெற்றோர். அதிலும் எங்களைப்போன்ற நிலங்கள் நிறைய உடைய நிலச்சுவான்தாரர்கள் கூட்டுக் குடும்பத்தையும் சொத்தைக் கட்டிக் காப்பதிலும் கண்ணுங்கருத்துமாக இருந்ததால் அம்மா போன்ற மருமகள்களைப் பெரிதும் விரும்பினர்.
          திருமணத்துக்குப் பின்பு எல்லாரும் ( அப்பாவைத்  தவிர ) எதிர்ப்பார்த்தபடிதான் அம்மா குடும்ப வேலைகள் அனைத்தையும் பார்த்துள்ளார் – மாமியார் மெச்சிய மருமகளாக. ஆனால் அப்பாவோ அடிக்கடி சண்டை போட்டு அடித்து துரத்தியுள்ளார். அம்மாவும் பக்கத்து ஊர் என்பதால் அடி தாங்காமல் தாய் வீட்டுக்கே போய் விடுவதுண்டு. வக்காலத்து வாங்கிக்கொண்டு செல்லக்கண்ணு மாமா ( அம்மாவின் அண்ணன் ) வந்தால் அவரிடமும் சண்டைக்குப் போவார். அவர் வீராப்புடன் வீடு திரும்பி இனி அம்மாவை அனுப்புவதில்லை என்று வைராக்கியமாக இருப்பார். அது பற்றியெல்லாம் அப்பா கவலைப்படுவதில்லை. அம்மா குளிப்பதற்கு இராஜன் வாய்க்காலுக்குதான் வந்தாக வேண்டும். அப்போது ஆற்றுப் பக்கமாக அப்பா சுற்றிக்கொண்டிருப்பார். அம்மா நீரில் இறங்கியதும் ஆற்றில் குதித்து அவரை  ஈரப் புடவையுடன் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு ஓடி வந்துவிடுவார்! அதைப் பார்த்து ஊர் மக்கள் ஆரவாரம்  செய்வார்களாம்.
        இது போன்று அடிக்கடி நடந்ததால் தாத்தாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை முற்றியது. வீட்டில் இருந்துகொண்டு விவசாயம் செய்யப் பிடிக்காத அப்பாவுக்கு அங்கிருந்த அம்மாவையும் பிடிக்க வில்லை.  அதோடு பாட்டியின் தொணதொணப்பு வேறு.
          ஒரு நாள் கடலூர் சென்ற அப்பா அப்படியே மலாயாவுக்கு கப்பல் ஏறி விட்டார்!
          ஊரில் யாரிடமும் சொல்லவில்லை.  கர்ப்பமுற்றிருந்த அம்மாவைப் பற்றிகூட அவர் கவலைப்படவில்லை!
         அப்போதெல்லாம் கடப்பிதழ் தேவையில்லை. துறைமுகத்தில் பணம் கட்டினால் கப்பலில் ஏறிக்கொள்ளலாம். பாட்டி வைத்திருந்த உண்டியலை உடைத்து எல்லா பணத்தையும் எடுத்துக்கொண்டு மலாயா புறப்பட்டுவிட்டார். அங்கு அவருடைய அண்ணணும் அண்ணியும் உள்ள தைரியம் அவருக்கு.
          அண்ணன் பிறந்து ஆறு ஆண்டுகள் கழித்துதான் ஊர் திரும்பியுள்ளார். மூத்த மகனை அப்போதுதான் முதன்முதாலாகப் பார்க்கிறார். கொஞ்ச நாட்கள் இருந்தவர் மீண்டும் மலாயா சென்றுவிட்டார். அவர் சென்ற பின்புதான் நான் பிறந்தேன். அவர் என்னைப் பார்க்க வரவேயில்லை!
          எனக்கு அப்பா எப்படி இருப்பார் என்பது எட்டு வயது வரைத் தெரியாது!
         ( தொடுவானம் தொடரும் )
Series Navigation
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *