புதிய திசையில் ஒரு பயணம் – திலகனின் புலனுதிர் காலம் –

This entry is part 1 of 21 in the series 19 அக்டோபர் 2014

பாவண்ணன்

எல்லாக் காலங்களிலும் கற்பனையும் அபூர்வமான சொற்கட்டும் அழுத்தமான எளிய வரிகளும் கவிதையை வசீகரமாக்கும் சக்தியுள்ள அழகுகளாகவே உள்ளன. புதிய கவிஞராக அடியெடுத்துவைத்திருக்கும் திலகனின் மொழி அந்த அழகை வசப்படுத்தும் முயற்சியில் இடைவிடாமல் இயங்கிக்கொண்டிருப்பதற்குச் சாட்சியாக அவருடைய தொகுதி அமைந்திருக்கிறது. திலகனின் கவிதைப்பயணம் முயல்களை வேட்டையாடி வெற்றிகொள்ள நினைக்கிற பயணமல்ல. யானையை வசப்படுத்த நினைக்கிற பயணம். அந்த ஆர்வத்தையும் வேகத்தையும் அவருடைய கவிதைகள் புலப்படுத்துகின்றன. கற்பனைக்கு ஈடுகொடுப்பதுபோல அவருடைய சொற்கள் நீண்டும் மடங்கியும் புன்னகைத்தும் சீற்றமுற்றும் இரட்டைமாட்டுவண்டிபோல இணைந்தே கடந்துபோகின்றன.
’சிரிப்பூட்டும் மிருகம்’ என்னும் கவிதை ஒரு விளையாட்டுபோலத் தொடங்குகிறது. ஒரு சிறுமியும் அக்குழந்தைக்கு விளையாட்டு காட்டும் ஓர் இளைஞனும் இக்கவிதையில் இடம்பெறுகிறார்கள். குழந்தையைச் சிரிக்க வைக்க, இளைஞன் குரங்குபோல நடிக்கத் தொடங்குகிறான். அவள் சிரிக்கச்சிரிக்க அவன் தன் நடிப்பில் கூர்மையை ஏற்றிக்கொண்டே போகிறான். அசலான குரங்குபோலவே அவன் மாறிவிட வேண்டியிருக்கிறது. அவள் சிரிப்பு நீடித்திருக்க, அவன் குரங்காகவே நீடித்திருக்கிறான். மெல்லமெல்ல அவன் மனநிலையும் மாறுகிறது. சலிப்பூட்டும் மனிதனாக இருப்பதைவிட சிரிப்பூட்டும் குரங்காக இருக்கவே அவன் விழைகிறான். தற்செயலான ஒரு வாழ்க்கைச்சித்திரம் இது. நாம் அனைவருமே நம் வீட்டில் இப்படி குரங்காக நடித்து வீட்டில் உள்ளவர்களைச் சிரிக்கவைத்திருப்போம். வாழ்க்கையிலிருந்து அச்சித்திரத்தைத் தனியாக துண்டித்து ஒரு கவிதையாக தீட்டிவைத்திருப்பதைப் படிக்கும்போது, அது மானுட வாழ்க்கையை ஏதோ ஒரு கோணத்தில் மதிப்பிட முயற்சி செய்வதைக் கண்டுபிடித்துவிட முடிகிறது. யார்யாரையெல்லாம் நாம் சிரிக்கவைக்க முயற்சி செய்கிறோம் என்று கொஞ்சம் யோசிக்கத் தொடங்கினால், கவிதையின் உலகம் விரிவுகொள்வதை உணர்ந்துகொள்ளமுடியும். அம்மாவை, அப்பாவை, காதலியை, நண்பனை, உறவினர்களை, அதிகாரியை என ஏராளமானவர்களை நாம் நம் மனம்மட்டுமே அறியக்கூடிய காரணங்களுக்காக சிரிக்கவைக்க விரும்புகிறோம். அதற்காக நாம் போடும் புனைவுகள் கணக்கிலடங்காது. குரங்குவேடம் ஒரு சின்ன எடுத்துக்காட்டுதான். நரியாக, நாயாக, பூனையாக, காக்கையாக, பன்றியாக நாம் போடும் வேடங்களுக்கு கணக்கே இல்லை. இறுதியில் ஒரு கேள்வி எஞ்சுவதைப் பார்க்கலாம். நம் வேடங்கள் நமக்கு முன்னால் இருப்பவர்களுக்காகவா, அல்லது உண்மையிலேயே நமக்காகவா? ஒவ்வொருவரும் தன் நெஞ்சைத் தொட்டுச் சொல்லும் பதிலில் எழுதமுடியாத ஆயிரம் கவிதைகள் துயில்கொண்டிருப்பதை உணரமுடியும்.
பாதி மனதில் மிருகம் இருந்து ஆட்டிவைத்தடா, மீதி மனதில் தெய்வம் இருந்து காத்துவிட்டதடா என்னும் திரைப்படப் பாடல்வரியை யாராலும் மறக்கமுடியாது. கல்மேல் எழுத்தாக அது ஒவ்வொருவரின் நெஞ்சிலும் இன்று உறைந்துகிடக்கிறது. அதை ஒவ்வொரு காலத்திலும் எழுதிப் பார்க்காத கவிஞரே இல்லை. திலகன் தன் கவிதையில் (சாத்தான் ஓதுவதும் வேதம்தான்) அதை அழகானதொரு காட்சியாக வடிவமைத்துக் காட்டுகிறார். கடவுள் முன்னால் நடக்கிறார். மனிதன் அவரைத் தொடர்ந்து நடக்கிறான். சாத்தான் மனிதனைப் பின்தொடர்ந்து வருகிறான். மூவரும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறார்கள். என்ன அழகான காட்சி. நடந்துகொண்டே இருப்பதில் அவனுக்கு வேளாவேளைக்குப் பசிக்கிறது. அந்தப் பசியை மட்டும்தான் கடவுள் அவனுக்குத் தருகிறார். சாத்தான் அவனுடைய பசியைப் புரிந்துகொண்டு அவனை வசப்படுத்தப் பார்க்கிறது. பசிக்கிற நேரத்தில் எல்லாம் கனிகளைக் கொடுத்துப் புசிக்கவைத்து, பின்னாலேயே தொடர்ந்து நடக்கிறது. எந்த நீதிக்குறிப்பும் இல்லாமல், கவிதை இப்படி சட்டென்று முடிவது கவிதைக்குக் கூடுதல் அழகைக் கொடுக்கிறது. கவிதையின் மீதிப் பகுதிகளை வாசகன் தன் மனத்துக்குள் எழுதிப் பார்த்து, இன்னும் விரிவானதாக மாற்றிக்கொள்ளலாம். இதுவும் வாழ்க்கையை மதிப்பிடும் ஒரு கவிதையாகவே அமைந்துள்ளது. அவன் அப்படியே கடவுளையே பின் தொடர்ந்து செல்வானா, அல்லது சட்டென ஏதேனும் ஒரு கணத்தில் மனம் மாறி, திரும்பி சாத்தானைப் பின் தொடர்ந்து செல்லத் தொடங்குவானா? கடவுள் பசியை மட்டுமே கொடுப்பதாக ஏன் அவன் புலம்பவேண்டும். தன் பசியே தனக்குள் ஒரு தேடுதலைத் தொடங்கிவைக்கும் உந்துதல் என அவனால் ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை. அவன் அறிவைத் தடுப்பது எது? அவன் பேராசையா அல்லது சோம்பலா? இப்படி பல கேள்விகள் ஒன்றையடுத்து ஒன்றாக எழுந்தபடி உள்ளன.
’நம்மை அழைத்து வந்த கேள்வி’ என்னும் கவிதையின் இறுதி வரிகள் அசைபோடத் தக்கவையாக உள்ளன.
நம்மால் சுமக்க முடியாத
ஏதோ ஒரு கண்ணீர்த்துளி
நம்மை மூழ்கடித்துவிடுகிறது.
எவ்வளவு எளிய மனிதர்களாக நாம் வாழ்கிறோம் என்பதை அடையாளம் காட்டும் கணத்தில் மின்சாரம் பாய்ந்ததுபோல ஓர் அதிர்ச்சி உருவாவதை உணரமுடியும்.
’முதல் கிழமை’ என்னும் கவிதையில் திலகனின் கற்பனையாற்றல் வெளிப்பட்டிருக்கும் விதம் எழில்மிகுந்ததாக உள்ளது. பாதையோரங்களில் ஒப்பந்தக்காரர்கள் கொண்டுவந்து போட்டுவிட்டுப் போகும் பெரியபெரிய குழாய்கள் வழியாக சிறுவர்கள் புகுந்துபுகுந்து சென்று விளையாடுவதை நாம் பார்த்திருப்போம். பல அறைகள் கொண்ட வீட்டில்கூட அறை அறையாக புகுந்து கடக்க வழியிருக்கும். பெளதிக இருப்புள்ள பொருள்கள் வழியாக இல்லாமல் கிழமைகள் ஊடாக புகுந்துபுகுந்து செல்லும் ஒரு உற்சாகமான பயணத்தைத் தீட்டுக்காட்டுகிறார் திலகன். வியாழக்கிழமையைத் திறந்துகொண்டு ஒருவன் அதற்குள் உள்ள புதன் கிழமைக்குள் செல்கிறான். பிறகு, அதையும் திறந்துகொண்டு, அதற்குள் அடங்கியிருக்கும் செவ்வாய்க்கிழமைக்குச் சென்றுவிடுகிறான். அடுத்தடுத்த நொடிக்குள் அடுத்தடுத்த கிழமைகளைநோக்கி மின்னல் வேகத்தில் அவன் பயணம் தொடர்ந்தபடியே உள்ளது. இப்படியே பின்னோக்கிய பயணத்தில் ஒருகணத்தில் அவன் இந்த உலகின் முதல் கிழமைக்கே வந்துவிடுகிறான். இந்தப் பயணத்தின் வசீகரத்தில் திலகனின் கவித்துவம் ஒளிர்கிறது.
’புத்தகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள்’ கவிதையை ஒரு அரசியல் கவிதையாக வாசிக்கமுடியும் என்று தோன்றுகிறது. ஒரு நாட்டின் மக்கள் பதவிசுகம் வேண்டும் ஒரு பைத்தியக்கார அரசனை ஆட்சியில் அமர்த்துகிறார்கள். பைத்தியக்காரனின் அரசவை, அவன் உளறியதை எல்லாம் வேதவாக்குகளாகக் குறிப்பெடுத்துக்கொள்கிறது. அவன் கட்டளையை சிரமேற்கொண்டு நிறைவேற்றுகிறது. இரவில் பகலென ஒளிரும் விளக்குகளைப்போல பகலில் இருளைப் பாய்ச்சும் விளக்குளை தெருவெங்கும் பொருத்தும்படி கட்டளையிடுகிறான் அரசன். சபை அந்தக் கட்டளையை நிறைவேற்றுகிறது. மற்றொரு நாளில் குளம் ஏரி போன்றவற்றை ஊருக்கு நடுவில் வெட்டுவதைவிட ஒரு கடலை வெட்டும்படி கட்டளையிடுகிறான். அதையும் நிறைவேற்றிவைக்கிறது சபை. கடைசியில் மக்களுடைய வாழ்க்கையில் உப்புக் கரிக்கத் தொடங்கிவிடுகிறது. அந்த நேரத்தில் அரசன் புத்தகங்களுக்குள் குடியிருக்கும் எல்லோரும் உடனே வெளியேறிவிட வேண்டும் என்றொரு கட்டளையைப் பிறப்பிக்கிறான். வழக்கம்போல அந்தக் கட்டளையும் நிறைவேற்றப்படுகிறது. பாரதியும் தாகூரும் கீட்ஸும் ஷெல்லியும் போக்கிடமில்லாமல் அந்தத் தேசத்தில் திரிந்தபடி இருக்கிறார்கள். பேய் அரசாண்டால் பிணம்தின்னும் சாத்திரங்கள் என்னும் பாரதியின் வரியைத்தான் நினைத்துக்கொள்ளவேண்டி இருக்கிறது.
இந்தப் போக்கின் தொடர்ச்சியாக வாசிக்கத்தக்க இன்னொரு கவிதை ’உயர்தனிச் செம்மொழி’. செம்மொழி ஒரு பக்கத்தில் வீற்றிருக்கிறது என்றால் மறுபக்கத்தில் காலம்காலமாக யார்யாராலோ கொண்டுவரப்பட்டு தமிழுடன் கலந்து, நம்மோடேயே தங்கிவிட்ட பிறமொழிச்சொற்கள் வீற்றிருக்கின்றன. ஒருநாள் பிறமொழிச் சொற்களெல்லாம் சோகமாகவும் கூட்டமாகவும் நின்றிருக்கின்றன. பிறகு ஏதோ ஒரு முடிவெடுத்ததுபோல, அங்கே வந்து நின்ற நகரப் பேருந்தில் ஏறி கண்ணகி சிலைக்கு அருகில் இறங்கி கடலில் மூழ்கிவிடுகின்றன. மக்கள் அனைவரும் உயர்தனிச் செம்மொழியில் பேசிக் கொள்ள, கடலலைகள் சட்டென ஒரு புதுமொழியில் பேசத் தொடங்கிவிடுகிறது. கேலியும் கிண்டலுமாக தோற்றம் தந்தாலும் இத்தகு கவிதைகளின் அடியோட்டமாக படிந்திருக்கும் துயரம் பாரமானது.
புறாக்கள் சிறகடித்துப் படபடக்கும் காட்சியை நாம் அனைவரும் ஏதோ ஒரு தருணத்தில் பார்த்திருப்போம். பல கவிஞர்கள் அந்தப் படபடப்பை பதறும் மனத்துக்கும் சிதறும் எண்ணங்களுக்கும் கலைந்து நகரும் மனிதக்கூட்டத்துக்கும் இணையாகக் காட்டி எழுதப்பட்ட கவிதைகள் ஏராளமாக உண்டு. திலகனின் ஒரு கவிதையிலும் இத்தகு புறாக்களின் படபடப்பு இடம்பெற்றிருக்கிறது. ஒரு தற்கொலைக்காட்சியை நேர்முக வர்ணனையாக விவரித்தபடியே செல்லும் கவிதையொன்றில் திலகன் எழுதியிருக்கும் அந்த வரிகள் ஒருகணம் உறையவைக்கின்றன.
இறுதியாக
சுருக்கிடப்பட்ட
அவனது உடலிலிருந்து
புறாக்களைப்போல
படபடத்துக்கொண்டிருக்கிறது
அவனது பாதங்கள்
ஒரு கவிஞனாக மலர்வதற்கு திலகன் மேற்கொண்டுள்ள முயற்சியில் அவர் வெற்றியடைந்துள்ளார் என்றே சொல்லவேண்டும். சமீபத்தில் வெளிவந்துள்ள தொகுதிகளில் புலனுதிர் காலம் தொகுதி முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. மிகவும் தாமதமாக எழுத வந்துள்ளதைப்பற்றி தன் முன்னுரைக்குறிப்பில் திலகன் சற்றே வருத்தத்துடன் குறிப்பிட்டிருக்கிறார். அந்த வருத்தம் தேவையில்லை என்றே தோன்றுகிறது. வராததைவிட, தாமதமாக வருவது மேல் என்றொரு ஆங்கிலத் தொடரை இத்தருணத்தில் அவர் நினைத்துக்கொள்ளலாம். தன் வருகையை இன்னும் அழுத்தமாகப் பதிவு செய்யும்வகையில் அவருடைய அடுத்தடுத்த தொகுப்புகள் அமையட்டும்.

( புலனுதிர் காலம். கவிதைகள். திலகன். புது எழுத்து பதிப்பகம். அண்னா நகர், காவேரிப்பட்டினம். விலை. ரூ.70)

Series Navigation
author

பாவண்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *