என்சிபிஎச் வெளியீடு மெய் வருத்தக் கூலி தரும் : ஸ்டாலின் குணசேகரன் கட்டுரைகள்

This entry is part 1 of 21 in the series 19 அக்டோபர் 2014

தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளர்களில் ஒருவர் ஸ்டாலின் குணசேகரன். ஈரோடு புத்தகக் கண்காட்சியின் முக்கியத் தூண். பொதுவுடமைகட்சி சார்ந்து இயங்குகிற முக்கிய நிர்வாகி. இவரின் பேச்சுக்கள் பல்லாயிரக்கணக்கானவர்களை ஈர்க்கும். அவை பெரும்பாலும் காற்றில் கரைந்த பேரோசையாக கரைந்து விடும். ஆனால் அவற்றில் சிலவற்றை புத்தகமாக்கும் பதிவில் இந்நூல் வெளிவந்திருக்கிறது..கோவை வானொலி , சென்னை வானொலி நிலையங்களில் ஒலிபரப்பப்பட்ட 55 உரைகள் ( 5 நிமிட உரைகள் ) சிறுகட்டுரைகளாக்கப்பட்டிருக்கின்றன. அவை வலியுறுத்தும் விசயங்களாக சமூக அறம் சார்ந்தவற்றை முன்னிலைப்படுத்தலாம். தனிமனித ஒழுக்கம், பொதுக்கட்டுப்பாடு, புத்தக வாசிப்பு, விடுதலைக்குப் போராடியவர்க்ள், செய்தித் தாள்களில் படித்தவற்றில் பாதித்தவை என்று வகை பிரிக்கலாம். ( வானொலி உரைகளை இப்படி புத்தகமாக்கும் முயற்சிகள் – படைப்புப் பதிவுகளாக இடம் பிடிப்பதற்கும் உதவும். கோவை வானொலி இயக்குனர் ஸ்டாலின் அவர்களின் வானொலி நேர்காணல் 3 தொகுப்புகள் இவ்வாண்டு வெளிவந்திருப்பது ஞாபகம் வருகிறது)
மேடையில் ஸ்டாலின் குணசேகரன் அவர் பேசும் உரத்த தொனி இதிலில்லை. நிதானமாக செய்திகளைச் சொல்லும் தன்மை உள்ளது. புத்தகங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம் இன்னும் மெல்லிய, நுணுக்கமானக் குரலில் பேசுகிறார். வாசிப்பு பழக்கம் பற்றி நிறைய சொல்கிறார். தனிமனித ஒழுக்கம் சமூக வாழ்க்கைக்கு மிக முக்கியமானது என்பது பற்றிய வலியுறுத்தல் உள்ளது. மனிதாபிமானம் படைப்புகளிலோ, தினசரி நடவடிக்கைகளிலோ இருக்க வேண்டியது பற்றிய அறிவுறுத்தல் உள்ளது. காலம் உருவாக்கிய புத்தகங்களாய் மனிதர்கள், எழுத்துக் காவியங்களைச் சுட்டிக் காட்டுகிறார். விடுதலைப் போரில் உயரைக் கொடுத்தவர்களைப் பற்றி தொடர்ந்து பேசி சும்மா வந்த்தில்லை சுதந்திரம் என்பதை சுட்டிக்காட்டுகிறார்.வகை வகையான அறுசுவை, சமச்சீர், சரிவிகித உணவு போல் பல்வேறு தலைப்புகள்.சுவாரஸ்யமான தகவல்கள். நவீன வாழக்கையில் புதிய தலைமுறை சிதைந்து போயிருப்பதைக் காட்டும் பலசம்பவங்கள்( உ-ம். தன்னிடம் ஒரு கை பேசி இருக்கும்போது இன்னொரு நவீன கைபேசி கேட்டு பெற்றோர் வாங்கித் தராததால் உணர்ச்சிவசப்பட்டு தற்கொலை செய்து கொண்ட இளம் பெண் ) இடம்பெற்றுள்ளன.விடுதலைப் போராட்ட வீரர் ஒருவரின் புகைப்படம் தேடி அவரிடம் தர முயலுகையில், அவருக்குத் தேவையான குருதிக் கொடையை ஏற்பாடு செய்து கொண்டு அவரை அணுகுகையில் அவ்ர் இறந்து போய் விட்டது தெரிகிறது.
இது போன்ற சம்பவங்களை விவரிக்கையில் ஒரு தேர்ந்த படிப்பாளியின் இயல்புடன் பேசுகிறார். எழுதுகிறார். படைப்புத் தன்மை தலை காட்டுகிறது. மேடையின் உரத்தக் குரலோடு பேசுவதைப் போலவே, இன்னொரு புறம் மெல்லியகுரலில், படைப்புத்தன்மையோடு அவர் மிளிர்வதுதான் எழுத்தாளர்களுக்கு ஆறுதலானது. வாசக உலகத்திற்கும்.

( ரூ 125 – மெய் வருத்தக் கூலி தரும். ஸ்டாலின் குணசேகரன், என்சிபிஎச் வெளியீடு , சென்னை)

Series Navigation
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *