பாரம்பரிய வீடு

This entry is part 5 of 16 in the series 26 அக்டோபர் 2014

 

1956ல் அடித்த புயல் தஞ்சாவூர் திருச்சி மாவட்டங்களை தலைகீழாய்த் புரட்டிப்போட்டது. விமானங்கள் தாழப் பறந்து அரிசி மூட்டைகளைத் தள்ளிவிட்டுப் பறந்தன. அப்போதுதான் முதன்முதலாக பலர் விமானத்தையே பார்த்தார்கள். மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியில் அறந்தாங்கியும் ஒன்று. ஆவிடையார் கோவில் ரோட்டுப் பகுதியில் கிட்டத்தட்ட 300 பேர் வீடுகளை இழநது தங்கதுரையின் வீட்டில் அடைக்கலம் புகுந்தார்கள். செம்பராங்கற்களைக் கூட்டி அடுப்பு வைத்து பெரிய பெரிய அண்டாக்களில் கஞ்சி காய்ச்சி பருப்புத் துவையலுடன் பரிமாறப்பட்டதும் தங்கதுரையின் வீட்டில்தான். தங்கதுரையும் மனைவி மரகதமும் படகுக்கு இரண்டு துடுப்புபோலாகி எல்லாரையும் கவனித்துக்கொண்டார்கள். 15 நாட்கள் விடாமல் பெய்த மழை ஒரு முடிவுக்கு வந்தது. வானம் வெளிவாங்கியது. தங்கதுரையின் பாரம்பரிய வீட்டிலிருந்து ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்கினார்கள். எல்லாரும் போனபிறது தங்கதுரை வீட்டில் சில ஓடுகளை மாற்றினார். சுவர்களில் வெடிப்புகள் விழுந்திருந்தன. பாரம்பரிய வீடு. இப்படியே விடுவது ஆபத்து. எடுத்துக் கட்டவேண்டுமென்று முடிவு செய்து 1960ல் வீடு கட்ட ஆரம்பித்தார். மூத்த மகன் ரகு என்கிற ரகுவரன். அப்போது 10 வயது. அடுத்தவன் முரு என்கிற முருகேசன். 7 வயது. மூன்றாமவள் பத்மினி. 3 வயது. மணப்பாறைக்கு முறுக்கு முகவரி தருவதுபோல் அறந்தாங்கிக்கு முகவரி தந்தது தங்கதுரை டீக்கடையின் புரோட்டாவும் டீயும். எட்டுப்பட்டி கிராமமும் அறந்தாங்கி வந்தால் அவர்கள் சந்தித்துக்கொள்ளும் இடம் தங்கதுரை டீக்கடைதான். 3 வயது பத்மினியின் தலையில் ஒரு மயிலிறகைச் செருகி கையில் ஒரு புல்லாங்குழலைக் கொடுத்து கிருஷ்ணனாக்கி எடுத்த நிழற்படத்தைக் கடையில் தொங்கவிட்ட பிறகுதான் கடை மறு அவதாரம் எடுத்தது என்று தங்கதுரை அடிக்கடி சொல்வார். தன் குலதெய்வமே கடையில் வந்து அமர்ந்திருப்பதுபோல் உணர்ந்தார்.

1960ல் வீடு கட்டத் தொடங்கினார். ஜன்னல் நிலைகள் சுவற்றலமாரிகள் எல்லாம் பர்மா தேக்கு. அந்த சாமான்கள் அப்படியே பத்திரமாக பிரிக்கப்பட்டது. ஒரு செங்கல் கூட உடையாமல் சுவர்கள் பிரிக்கப்பட்டு காரைகள் சுரண்டப்பட்டது அதே கற்களையே வைத்து புதிய சுவர் எழுப்பப்பட்டது. ஒவ்வொரு கல்லையும் தன் அப்பாலின் கரங்களைத் தொடுவதுபோல் தங்கதுரை தொட்டார். சித்தாட்களோடு சேர்ந்து தானும் மரகதமும் செங்கல் சுமந்தார்கள். மண் சுமந்தார்கள். அவர்களின் எளிமை அப்போது பலராலும் பேசப்பட்டது. தன்னை யாரும் முதலாளி என்று சொல்லக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். அதே வீடுதான். அதே வரைபடம்தான். ஆனால் தரையிலிருந்து மூன்றடி உயர்த்தியிருந்தார். 1970ல் வீட்டுவேலைகள் முடிந்தன. ரகு கடையை கவனித்துக்கொண்டான்.

ரகுவுக்கு சம்பாதிக்கவும் தெரியும். செலவு செய்யவும் தெரியும். ஞாயிற்றுக்கிழமைகளில் சினிமாத் தியேட்டரில் அவனைப் பார்க்கலாம். நாலைந்து பேர் அவனைச் சுற்றி இருப்பார்கள். எல்லாரும் நண்பர்கள் போன்ற எடுபிடிகள். அடுத்தவன் முரு. அரவிந்த் 8 முழ வேட்டி. மடிப்புக் கலையாத அரைக்கை சட்டை. ஒரு மோட்டார்சைக்கிள் கடந்து சென்றால்கூட கைக்குட்டையால் மூக்கைப் பொத்திக்கொள்வான். ஏதோ இந்த ஊரில் தப்பிப் பிறந்தவன்போல் ஒரு நினைப்பு. டாடா எண்ணெய் தான் தலைக்கு. இரண்டு முடிகளை நெற்றியில் சுழலவிட்டிருப்பான். பத்மினி. அவள் மரகதத்துக்கு வலதுகை மாதிரி. எப்போதும் அம்மாவுடன்தான் இருப்பாள்.

1980ல் மூன்றுபேருக்கும் ஒரே சமயம் திருமணம் கூடியது. மூன்று திருமணங்களையும் ஒரே நாளில் நடத்த தங்கதுரை ஏற்பாடு செய்திருந்தார். அவரால் முடிந்தது. கடை வியாபாரம் அப்படி. 1000 ரூபாய் கல்லா கட்டினால் 500ஐ தனியாக ஒதுக்கிக்கொள்ளலாம். விவசாய வருமானம் வேறு. எல்லா வருமான உபரியும் மரகதம் கைக்குப் போய்விடும். தங்கதுரை அப்பாவுடைய பெரிய இரும்புப் பெட்டகத்துக்கு 7 ரகசிய சாவிகள். அது இப்போது மரகதத்தின் கட்டுப்பாட்டில். மரகதம் தங்கதுரை தவிர வேறு யாருக்கும் அதைத் திறக்கத் தெரியாது. தங்கதுரை பணம் கொடுக்கும்போதெல்லால் சொல்வார். ‘பொட்டகத்தில வை. எண்ணாதே. எவ்வளவு தேவையோ எடுத்துக்க. எல்லாத்தயும் எடுத்துப்போட்டு எண்ண ஒரு நாள் வரும்.’ என்று.

மூன்று திருமணங்களும் தங்கதுரையை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. சுமுகமாக முடிந்தது. பத்மினிக்கு அரிமளத்து மாப்பிள்ளை. சரியான மோட்டார்சைக்கிள் பைத்தியம். புல்லட் ஓட்டுகிறான். நாளொன்றுக்கு மூன்று மணி நேரம் வண்டியைத் துடைப்பான். எங்கு போனாலும் வண்டியைப் பார்க்க ஒரு கூட்டம் கூடிவிடும். பத்மினி வாழ்க்கைப்பட்டு மூன்றே ஆண்டுகள்தான். ஒரு லாரியில் நேரெதிராக மோதி அகால மரணமடைந்துவிட்டான். ஒரு வயதில் மகன். தங்கையா என்று பெயர் வைத்திருந்தாள். குழந்தையாயிருக்கும்போது தங்கதுரை அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். பத்மினி இப்போது இளம்விதவை. கணவன் இறந்தபின் ஓராண்டு மாமியார் வீட்டில் எதிர்நீச்சல் போட்டுவிட்டு அம்மா வீட்டுக்கே வந்துவிட்டாள்.

பத்மினி வந்து சில நாட்களிலேயே தங்கதுரைக்கு முதல் மாரடைப்பு வத்து துடித்துப்போனார். அந்த நஞ்சுவலி யாருக்கும் வரக்கூடாது என்பார். ரகு கடையைக் கவனித்துக்கொண்டான். முரு ஹாங்காங் போக ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கிறான். தங்கதுரை நடமாட்டத்தைக் குறைத்துக்கொண்டார். பகலெல்லாம் எப்படியோ ஓடிவிடுகிறது. இரவு 10 மணிக்கு ரகுவின் மனைவி தன் அறைக்கதவை படார் என்று சாத்திக்கொள்வாள். முருவின் மனைவியும் சாத்திக்கொள்வாள். ஒரு தம்ளர் தண்ணீரைக் குடித்துவிட்டு மகன் தங்கையாவுடன் பத்மினி தனக்கருகே வந்து படுக்கும்போது ஒரு மல்லிகை மொட்டு நெருப்பில் விழுந்ததுபோல் பொசிங்கிப்போனார் மரகதம். எப்படித் தாங்குவது. ரகசியமாக அழுதார். தலையணையே நனையும் அளவுக்கு அழுதார்.

ஒரு தீபாவளியன்று கடைசி சங்குச் சக்கரமும் சுற்றி முடிந்தது. எல்லாரையும் வைத்துக்கொண்டு ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி தங்கதுரை சொன்னார். ‘எனக்குப்பிறகு யாரும் எதற்காகவும் சண்ட பிடிக்காதீங்க. 20 ஏக்கர் நிலத்த அப்படியே தெக்குவடக்கில பிரிச்சு மேத்துண்டு 10 ஏக்கரை மூத்தவன் எடுத்துக்கிறட்டும். கீத்துண்டு 10 ஏக்கர எளயவெ எடுத்துக்கிறட்டும். கடை யாவாரம் தெரிஞ்சவெ ரகுதான். கடை அவனுக்குத்தே. வீடு முருவுக்குத்தே. தனியாகக் கிடக்கிற கொளத்துவெளி ஒரு ஏக்கர் பத்மினிக்கு. மாதாமாதம் ரகு 1000 முரு 500 மரகதத்துக்கு குடுத்துறணும் பத்மினியையும் தங்கையாவையும் பொதுவில் எல்லாரும் கவனிச்சுக்க வேண்டியது. அடுத்த பொதெங்கெழமெ பத்திரம் பண்ணுவோம். சொல்லி முடிக்குமுன் ரகு குறுக்கிட்டான். ‘பத்மினி எங்களோடெதானே இருக்கா. அவளுக்கு ஏன் தனியா சொத்து. நாங்கதான் பாத்துக்குவோமே’ முரு தொடர்ந்தான். ‘அம்மாவுக்கு தனியா ஏன் காசு வேணுங்கிறத அவுஙக கேட்டு வாங்கிக்கலாமுள்ள. இவ்வளவு குடுக்கணும்னு என்ன கணக்கா?’ என்றான். தங்கதுரை சொன்னார். ‘என் அம்மாவுக்கு நா அப்புடித்தான் குடுத்தேன். இப்ப நா நல்லாயிருக்கேன். நீங்க குடுங்க. நல்லாயிருப்பீங்க. ஒன்னும் கட்டாயமில்ல. உங்க இஷடம்’ என்றதோடு அப்படியே கண்களை இறுக்கமில்லாமல் மூடிக்கொண்டார் அதற்குமேல் எதுவும் பேசவிரும்பவில்லை என்று அதற்கு அர்த்தம். எல்லாரும் எழுந்து போய்விட்டார்கள்.

புதன்கிழமை. பத்திரப்பதிவுகள் முடிந்தன. ஆளுக்கு ஒரு நகல் கொடுத்தார். தங்கதுரை அன்று இரவு மரகதத்திடம் கேட்டார். ‘வெத்தல போட ஆசையா இருக்கு மரகதம்’. மனம்விட்டு பேச நினைக்கும்போது அவருக்கு வெற்றிலை போடப்பிடிக்கும். பாக்கு சுண்ணாம்பு மரகதம்போல் யாரும் சேர்க்கமுடியாது. வாயில்போட்டு மெல்வதற்கு முன்னேயே சிவந்துவிடும். ‘ஒம்மேல ஆசயில்லேன்னு சொல்லுவியே. பாரு எப்புடி செவந்திருக்கு.’ மரகதமும் சொல்வார். ‘எனக்குந்தான்’ என்று. மனம்விட்டு சிரித்தார்கள். தங்கதுரை சொன்னார். ‘பத்மினிக்கு குடுக்க அவிங்களுக்கு மனசே இல்ல பாத்தியா. ரெண்டு பயல்களுக்கும் மூஞ்சி சுண்டவத்த மாரி ஆயிடுச்சி. ஒனக்கு ஏன் காசு தரணும்னு கேக்குறான் சின்னவெ. இவிங்களா ஒன்ன வச்சு கஞ்சி ஊத்துவாங்கெ. நாளக்குப் பாரு எல்லாத்தையும் தவுட்டுவிட்டுட்டு காசுக்கு நகைக்கும் ஒன்கிட்ட வந்து நிப்பானுவ தாயழிங்க. இவிங்களுக்கு எரக்கமே படாத. நம்பிக் குடுத்தே நடுரோட்ல நிக்கவச்சிருவாங்கெ. எனக்குத் தெரியும். என்னடா இப்புடிச் சொல்றேன்னு நெனக்காத. பாரு. இதுக்காகத்தான் ஒரு ஏற்பாடு பண்ணியிருக்கேன். நம்ம சிமிண்டுக்கட ஜெகா இந்த மாதத்திலேருந்து அடுத்த வெரலுக்குத் தெரியாம 2000 மாதாமாதம் குடுப்பான். வாங்கி வச்சுக்க. அவிங்கள்ட சொன்னதுமாரி ஒரு மாதங்கூட நீ காசு வாங்கமுடியாது. எதுக்காகவும் அவிங்கள்டபோயி நிக்காத.’ சொல்லிக்கொண்டே இருந்தவர் மரக……. என்று நெஞ்சைப் பிடித்தார். அந்ந இரண்டாவது நஞ்சுவலி வந்தேவிட்டது. கடைவாயில் வெற்றிலை எச்சில் ரத்தம்போல் ஒழுகியது. சில நொடிகளில் தன் கணக்கை முடித்துக்கொண்டார். ‘என்னங்க’ என்று மரகதம் அலறியதில் தெருவே கூடிவிட்டது சில நிமிடங்களில் ஊரே கூடிவிட்டது. வீடுகளை போட்டதுபோட்டபடி எல்லாரும் கூடிவிட்டார்கள்.

சடங்குகள் சம்பிரதாயங்கள் ஒவ்வொன்றாய் முடிந்தன. எதிர்பார்த்துக்கொண்டிருந்தவன்போல் முரு ஹாங்காங் புறப்பட்டுவிட்டான். தங்கையா இப்போது உயர்நிலையில் படிக்கிறான். ரகு வீடு கட்டிக்கொண்டு தனியே போய்விட்டான். கடை வருமானம் பொதுவில் வந்துவிடக்கூடாது என்ற பயம் அவனுக்கு. எதிலுமே ஒட்டாமல் பாதரசம்போல் ஆடுகிறான்.

மரகதத்தின் தம்பி வாசுதேவன் குவைத்தில் இருக்கிறான். அவனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. ‘குவைத்திலிருக்கும் டாக்டர் ஒருவருக்கு புத்திசுவாதீனமில்லாமல் மூன்றுவயதில் ஒரு மகன் இருக்கிறானாம். அவனைக் கவனித்துக்கொள்ள ஒரு குடும்பப்பெண் வேண்டுமாம். நர்ஸ் வேண்டாமாம். பத்மினி ஒப்புக்கொண்டால் ஏற்பாடு செய்கிறேன். அவளுக்கும் ஒரு மாறுதலா இருக்கும். அவளை வைத்துக்கொண்டு படும் வேதனைக்கு இது தேவலாம். மிகப்பாதுகாப்பான இடம் சரியென்றால் அடுத்தமாதம் நான் விசாவோடு வருகிறேன்.’ இதுதான் செய்தி. பத்மின் உடனே ஒப்புக்கொண்டாள். மரகதம் முதலில் மறுத்தாலும் பிறகு அவருக்கும் சரியென்றுதான் பட்டது. தங்கையா முதலில் அழுதான். பிறகு அவனே அவனை சமாதானப்படுத்திக்கொண்டான். சொன்னபடி வாசுதேவன் விசாவுடன் வந்தான். பத்மினியும் சேர்ந்து விமானம் ஏறிவிட்டாள். வீடு அறுவடை முடிந்த நிலம்போல் ஆகிவிட்டது.

பத்மினியிடமிருந்து மாதாமாதம் 10000 ரூபாய் அரசாங்கச் சம்பளம்போல் மரகதம் கைக்கு வந்தது. சிமிண்டுக்கடை ஜெகா 2000 பொட்டிலடித்தாற்போல் மாதாமாதம் கொடுத்தனுப்பினார். எல்லாம் அந்த பெட்டகத்தில் சங்கமமாகின. அதை எண்ணிப்பார்க்கவேண்டுமென்ற நினைப்பே மரகதத்துக்கு வரவில்லை.

ஒரு மழைமாதம். குடையைப் பிடித்துக்கொண்டு சிலட்டூர் ஆறுமுகம் செட்டியார் வீட்டுக்கு வந்தார். மரகதத்தை பார்க்கவேண்டுமென்றார். திண்ணையில் பாய் விரித்து உட்காரச் சொன்னார் மரகதம். காபி கொடுத்தார். பாதி சாப்பிட்டுவிட்டு பாதியை கையிலேயே வைத்துக்கொண்டு அவர் சொன்னார். ‘முரு வீட்டுப் பத்திரத்த குடுத்து அடமானமா 2 லட்சம் கேட்டாரு. நாலைந்து மாதத்துல திருப்பிர்ரேன். யார்ட்டையும் சொல்லாதீங்கன்னார். இப்ப மூணு வருஷமாச்சு. வட்டியொட மூன்றை லட்சமாகுது. முருக்கிட்ட சொல்லி ஏற்பாடு செய்யச் சொல்லுங்க. இல்லாட்டி நீங்களாச்சும் ஏற்பாடு பண்ணுங்க. இல்லாட்டி நா கோர்ட்டுக்கு போறமாரி இருக்கும் அது ரெண்டுபேருக்குமே நல்லதுல்ல. தங்கதுரை முகத்துக்காகத்தான் பாக்கிறேன்’ அவர் சொன்ன சேதியில் இரண்டு கால்களும் பூமியில் புதைவதுபோல் இருக்கிறது மரகதத்தம்மாளுக்கு. தங்கையா எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். கை நடுக்கத்தை சமாளிக்க அவனைப் பிடித்து அணைத்துக்கொண்டார் மரகதம். ‘ஒரு மாசம் டயம் குடுங்க. எப்புடியும் முடிக்கச் சொல்றேன். அதுவரக்கும் இது வேற யாருக்கும் தெரியவேண்டாம்’ என்றார் மரகதம். முரு இப்படிச் செய்தது அவன் மனைவிக்கே கூட தெரியாது. வீட்டுப்பத்திரம் கோர்ட்டுக்குப் போகக்கூடாது. அதுவும் பாரம்பரிய வீடு. முருவின் மனைவி அதை உணர்ந்தாள். உடனே முருவை வரவழைக்க ஏற்பாடு செய்தாள். அடுத்த ஒரு வாரத்தில் முரு வந்துவிட்டான். எல்லாம் வெட்டவெளிச்சமாகிவிட்டதில் நேருக்குநேராக ஒரு கார்வந்து மோதிவிட்டதுபோல் அதிர்ந்தான்.

மரகதம் சொன்னார். ‘இருக்குற காசெ குடுத்து பத்தரத்த வாங்கிடுய்யா’

‘எங்கிட்ட காசில்ல. ஏதாச்சும் ஏற்பாடு செஞ்சி நீங்களே வாங்கிடுங்க. நான் லண்டன் போக ஏற்பாடு செஞ்சிட்டிருக்கேன். நல்ல சம்பளம். ஒரே வருஷத்தில நாலு லட்சத்த குடுத்து பத்திரத்த வாங்கிக்கிறேன்.’ என்றான் முரு. எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான் தங்கையா. ‘வாங்கீறலாமா?’ மரகதம் யோசித்தார். தங்கதுரை சொன்னது பிடரியில் அடித்ததுபோல் ஞாபகத்துக்கு வந்தது. ‘நாளக்குப் பாரு எல்லாத்தையும் தவுட்டுவிட்டுட்டு காசுக்கு நகைக்கும் ஒன்கிட்ட வந்து நிப்பானுவ தாயழிங்க. இவிங்களுக்கு எரக்கமே படாத. நம்பிக் குடுத்தே நடுரோட்ல நிக்கவச்சிருவாங்கெ.’ அடுத்த கணம் சுதாரித்துக்கொண்டார். பத்திரமே இல்லாமல்கூட அவனால் கடன் வாங்கமுடியும். இவனை நம்பி எப்படிக் கொடுப்பது? துணியவேண்டியதுதான். முடிவுசெய்துகொண்டார் மரகதம். அடுத்த சில மாதங்களில் குவைத்தை முடித்துக்கொண்டு பத்மினியும் ஊர்வர இருக்கிறாள். ஜப்தி, அது இதென்று ஏதாவது வந்தால் மானம் போயிடும். ஒரு முடிவுக்குவந்தார். முருவிடம் சொன்னார். ‘வீட்டு மேல் பகுதியில அறுபதடிக்கு பதினஞ்சடிய பிரிச்சு பத்மினி பேருக்கு பத்திரம் பண்ணிக்குடுத்துடுய்யா. நாலு லச்சத்த ஏற்பாடு செய்றேன்.’ என்றார். ‘பத்மினிக்காக தரமுடியும். எனக்குத் தரமுடியாதா? சூடாக வந்து விழுந்தது வார்த்தை. ‘அந்தப் பணமே பத்மினி பணந்தே, ஏங்கிட்ட ஏது அம்புட்டு பணம்.’ என்றார் மரகதம். ‘சரி. நாளக்கே பத்திரம் பண்ணித்தர்றேன். காச வச்சிட்டு பத்தரத்தெ வாங்கிக்கங்க’ என்றான் முரு. எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான் தங்கையா.

‘பொட்டகத்தில வை. எண்ணாதே. எவ்வளவு தேவையோ எடுத்துக்கொள். எல்லாவற்றையும் எடுத்துப்போட்டு எண்ண ஒரு நாள் வரும்.’ என்று தங்கதுரை சொன்னது இந்த நாள்தானோ? பெட்டகத்தைத் திறந்து முதல்முறையாக எண்ணத் தொடங்கினார். நாலு லட்சத்தையும் தாண்டியது இருப்பு. நான்கு லட்சத்தை மட்டும் எடுத்துக்கொண்டு பெட்டகத்தைப் பூட்டினார். வீட்டுக்கு நடுவுல குறுக்கே ஒரு கோடு போட்டான். ‘இதுக்கு மேற்புறம்தான் உன் பங்கு’ என்றான். திடீரென்று அவன் ஒருமையில் பேசியதில் மாங்காயைத் துணியில் கட்டி தரையில் ஓங்கி அடித்ததுபோல் நொறுங்கிப்போனார் மரகதம். நான்கு லட்சத்தை வாங்கிக்கொண்டு பத்திரத்தைக் கொடுத்தான் முரு. அந்தக் கோட்டின்மீது ஒரு கல் அகலத்துக்கு சுவர் எழுப்பினான். அவன் கோட்டுமேல் சுவர் எடுக்கவில்லை. தங்கதுரையின் நெஞ்சின் மீது சுவர் எழுப்புகிறான்.

‘மந்தரையின் சோதனையால் மனம் மாறிக் கைகேயி

மஞ்சள் குங்குமம் இழந்தாள்

வஞ்சக சகுனியின் சேர்க்கையால் கௌரவர்கள்

பஞ்ச பாண்டவரைப் பகைத்து அழிந்தார்.

சிந்தனையில் இதையெல்லாம் சிறிதேனும் கொள்ளாமல்

மனிதரெல்லாம் மந்தமதியினால் அறிவு மயங்கி மனம்போனபடி

நடக்கலாமோ……

 

பாகப்பிரிவினை படம். எஸ். வி. சுப்பையாவுக்கும் பாலையாவுக்கும் பாகப்பிரிவினை. அதிலும் சுவர் எழுப்பப்படும். இந்தப் பாட்டு பின்னணியில் ஒலிக்கும். அந்தக் காட்சி அப்படியே கண்முன்னே நடக்கிறது. தங்கையா மரகதத்தை அழைத்துப்போய் உட்காரவைத்தான். சுவற்றில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டார். கண்ணீர் பெருக்கெடுத்தது. தங்கையா கன்னத்தோடு கன்னம் வைத்து அழுதான். முரு எந்தச் சொரணையும் இல்லாமல் செங்கல் எவ்வளவு சிமிண்டு எவ்வளவு என்று கணக்குப் பார்த்துக்கொண்டிருக்கிறான்.

சுவர் வேலை முடிந்தது. முரு சொன்னான். ‘ஒங்க சாமா எல்லாத்தயும் அள்ளி ஒங்க பங்குல வச்சுக்கங்க. இந்தப் பக்கம் ஒங்க யாரோட நடமாட்டமும் இருக்கக்கூடாது. ஒம் மகளோ ஒம் பேரனோ அண்ணே மாமான்னு வந்தா நடக்குறது வேற.’ அவன் வார்த்தைகள் மரகதத்தால் மட்டுமல்ல முருவின் மனைவிக்கே கூட தாங்கமுடியவில்லை. சடாரென்று வாயைப் பொத்தி கைகளை இழுத்துத் தள்ளிவிட்டாள். ‘இனிமேல எதுவும் பேசாதீங்க’ என்று அதட்டினாள். தங்கையா இப்போது வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கவில்லை. அவனுக்குள் ஒரு தீ எரிந்தது. இப்போது அவன் பிளஸ் டூ. பத்மினி குவைத்திலிருந்து திரும்பிவிட்டாள். அவள் வருவதற்கு முன்னேயே முரு லண்டனுக்குப் பறந்துவிட்டான்.

மலேசியாவின் கோலாலம்பூரில் உணவுக்கடை நடத்திக்கொண்டிருக்கும் பூபதியின் மகன் தங்கையாவின் வகுப்பில்தான் படிக்கிறான். பூபதி கோலாலம்பூரிலிருந்து அறந்தாங்கி வந்திருந்தார். பிளஸ் டூ தேர்வு முடிந்த கையோடு அவரைப்போய்ப் பார்த்தான் தங்கையா. ‘எனக்குப் படிக்கப் பிடிக்கல. எனக்கு மலேசியாவுல ஒரு வேல வாங்கித் தர்றீங்களா?’ என்றான். ‘ஏன் புடிக்கல’ என்று கேட்டார் பூபதி. ‘எனக்காக எங்க அம்மாவும் பாட்டியும் ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க. அவங்கல நான் நல்லா வச்சிக்கிறணும். அவங்களுக்கு வீடு கட்டித் தரணும். எம் பாட்டி அழுதா எனக்கு சாகலாம் போல இருக்கு. எங்க மாமாவ நெனச்சா பயமா இருக்கு. அவரு என்ன வேணாலும் செய்வாரு’ தொடரமுடியாமல் தேம்பினான். அம்மாவுக்காகவும் பாட்டிக்காகவும் அவன் துடிப்பதை பூபதியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ‘உடனே ஏற்பாடு செய்றேன். ரெண்டு பேரும் சேந்தே மலேசியாவுக்கு போவோம்.’ என்றார். பத்மினியும் மரகதமும் சம்மதித்துவிட்டார்கள். பூபதியோடு கோலாலம்பூருக்குப் பறந்தான் தங்கையா.

ஒரு எடுபிடியாகத்தான் பூபதி கடையில் இருந்தான் தங்கையா. ஒருநாள் புரோட்டா போடும் ஆள் வரவில்லை. பூபதி வேறு ஆளைத் தேடிக்கொண்டிருந்தார். ‘நான் போடுகிறேன்’ என்றான் தங்கையா. ‘ ‘ ‘நீயா புரோட்டா போடுவியா… ‘ நக்கலாகச் சிரித்தார் பூபதி. அவன் மாவைப் பிசைந்து அப்படியே குடைபோல் விரித்ததைப் பார்த்து திகைத்துப் போனார். சில வெளிநாட்டவர்கள் அவன் புரோட்டா சுழற்றுவதை புகைப்படம் எடுத்தார்கள். இமைக்க மறந்தார் பூபதி. எப்ப எப்படிக் கற்றான் இவன். எல்லா வேலையுமே இவனுக்கு எப்படித் தெரிகிறது. ஒரு சரித்திரம் முகவரி எழுதுகிறது. வளர்கிறான் தங்கையா. பூபதிக்கு இன்னொரு கடை தேடிவந்தது. உடனே வாங்கினார். முழுப்பொறுப்பையும் தங்கையாவிடம் கொடுத்து உட்காரவைத்தார். பூபதியின் கடையைவிடச் சிறப்பாக அந்தக் கடையை அவன் நடத்தினான். இனிமேல் என்னால் எதுவும் செய்யமுடியும் என்ற நம்பிக்கை அவனுக்குள் முளைவிட்டது. பூபதியிடம் ஒரே ஒரு மாதம் அனுமதி வாங்கிக்கொண்டு அறந்தாங்கி புறப்பட்டான்

 

வண்டனுக்குப் போன முருவுக்கு அங்கேயும் சரியான அடி. அவனை அழைத்துச் சென்ற ஏஜண்ட் அவனை விட்டுவிட்டு ஓடிவிட்டான். ஊர்க்காரர்கள் உதவியோடு சில சில்லரை வேலைகள் பார்த்தான். பயந்து பயந்து ஒளிந்து ஒளிந்து செத்துச்செத்துப் பிழைத்தான். எப்படியோ அங்கிருந்த ஊர்க்காரர்களிடமெல்லாம் கடன்வாங்கி ஊர் வந்து சேர்ந்தான். வந்ததும் வராததுமாய் வீட்டை விலை பேசினான். எல்லா புரோக்கர்களிடமும் சொல்லிவிட்டான். ஏகப்பட்ட கடன்கள். உடனே விற்றே ஆகவேண்டும். வீட்டை வாங்க யாரும் முன்வரவில்லை. வீட்டில் இருக்கும் முக்கிய ஆதாரமான பெரிய தேக்கு உத்தரத்தின் ஒரு பகுதி பத்மினி பங்கில் இருக்கிறது. இவன் பங்கை மட்டும் வாங்க எப்படி முன்வருவார்கள்? இரண்டே வழிகள்தான். பத்மினியின் பங்கை முரு வாங்கவேண்டும். அது முடியாத காரியம். அல்லது அவன் பங்கை பத்மினி வாங்கவேண்டும். அது முடியலாம். ஏஜண்டுகள் கைவிரித்துவிட்டார்கள். எந்த முகத்தை வைத்துக்கொண்டு பத்மினியிடம் கேட்பான். புழு சேற்றில் விழுந்ததுபோல் நெளிந்தான். இனி கௌரவம் பார்த்துப் பயனில்லை. வந்தது வரட்டும்.

 

பத்மினி வீட்டுக் கதவைத் தட்டினான்.

 

மரகதம்தான் கதவைத் திறந்தார். ‘அய்யா முரு என்று அணைத்துக்கொண்டார். நல்லாயிருக்குயாய்யா? வாய்யா வா. ஏன் வாசல்ல நிக்கிறே. உள்ள வந்து உக்காருய்யா.’ அம்மா என்றால் என்ன என்று இப்பொதுதான் அவனுக்குப் புரிகிறது. அடுப்படியிலிருந்து பத்மினி வந்தாள். ‘வாங்கண்ணே. நல்லா இருக்கீங்களா. மீன் பொரிச்சுக்கிட்டிருக்கே. உங்களுப்புடிச்ச கெழக்கெ மீனு. கொஞ்ச நேரத்தில சாப்பாடு வக்கிறே. சாப்பிட்டுப் போங்கண்ணே’ என்றாள். தங்கை என்றால் என்ன என்று இப்போதுதான் அவனுக்குப் புரிகிறது. வெளியே போயிருந்த தங்கையா அப்போதுதான் வந்து நுழைந்தான். அவனைப் பார்த்ததும் எழுந்து நின்றான் முரு. மரியாதை இடம் மாறுகிறது. ‘உக்காருங்க மாமா’ என்றான். மல்லாக்கப்போட்ட ஆமை மாதிரி உட்கார்ந்தான். அசைவில்லை. எல்லாரும் சாப்பிட்டார்கள். முரு மானம் மரியாதையெல்லாம் மறந்துபோய் சொன்னான் ‘கொஞ்சம் பிரச்சினை. ‘வீட்ட விக்கணும். வீட்ட நீங்கதான் மாப்புள வாங்கணும். வேற யாரும் வாங்க முடியாது’ என்றான். ‘மாப்புளே’ என்ற வார்த்தையில் அவனுக்கு சிரிப்பு வந்தது. வெளியே தெரியாமல் விழுங்கினான். ‘ஆமா மாமா. அது வீடில்ல. தாத்தாவோட உசுரு. நம்ம கையவிட்டு வீடு போனா நம்மல்லாம் பொணம்னு அர்த்தம். என்ன வெல மாமா?’ தரையில சாதாரண பேப்பரா கெடந்த தங்கையா பட்டம் மாதிரி இப்ப பறக்கிறான். அன்னாந்து பார்க்கிறான் முரு. ‘மார்க்கெட்ரேட்டு 13 லட்சம்’ என்று விலையைச் சொன்னான். மலேசியா ரிங்கிட்டில் கணக்குப் போட்டான் தங்கையா. தொகை தூசாகத் தெரிந்தது. அந்த அளவுக்கு வளர்ந்துவிட்டான். ‘சரிங்க மாமா. பத்திர வேலய பாருங்க நா. வாங்கிக்கிறே. அதுக்காக நீங்க போயிடனும்னு அவசியமில்ல. நீங்க வீட்லயே இருங்க மாமா’ தங்கையா செருப்பால் அடித்திருந்தால்கூட அவனுக்கு வலித்திருக்காது. இந்த வார்த்தைகள் அவனுக்கு வலித்தது.

 

பத்திர வேலைகள் முடிந்தன. ஒரு லாரியில் முருவின் சாமான்கள் ஏறிக்கொண்டிருக்கின்றன. முருவும் அவன் மனைவியும் செல்ல ஒரு வாடகைக் காரும் நின்றுகொண்டிருந்தது. மாமியார் வீட்டில் கொஞ்சநாள் இருந்துவிட்டு வேறு முயற்சிகள் செய்யலாம் என்பது அவன் திட்டம். அவன் இருளை நோக்கி பரதேசிபோல் போகிறான் என்பது அப்போது அவனுக்கு விளங்கவில்லை. பாரம்பரிய வீட்டின் அருமை தெரியாதவன் அதைப் பாதுகாக்கத் தெரியாதவன் பரதேசிதான் என்பதை அவன் வெகு சீக்கிரம் விளங்கிக்கொள்வான்.

 

யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigationகுண்டல​கேசியில் யாக்​கை நி​லையா​மைஅரசற்ற நிலை (Anarchism)
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *