தவறாத தண்டனை

This entry is part 13 of 16 in the series 26 அக்டோபர் 2014

 

 

பள்ளியின் ஓய்வறையில் உட்கார்ந்திருந்த பொழுது ஒரு மாணவன் வந்து நின்றான். அவனைப் பார்த்த போது சொன்னான். “என் தமிழ்ப் புத்தகத்தைக் காணோம் ஐயா; ஆறுமுகம்தான் எடுத்திருக்கணும்”

”எப்படி சொல்ற?” என்று கேட்டேன்.

”என் பை பக்கத்துல அவன்தான் ஒக்காந்திருந்தான். நான் வெளியே போயிட்டு வந்தா புத்தகத்தைக் காணோம்.”

”சரி; போய் ஆறுமுகத்தை அழைத்து வா; கேட்போம்” என்றேன்.

அழைத்து வரப்பட்ட ஆறுமுகம் தான் எடுக்கவே இல்லை என்று சாதித்தான். ஆனால் சந்தர்ப்ப சூழல்களால் அவன் மேல்தான் சந்தேகம் இருந்தது.

”இதோ பாரு ஆறுமுகம்; இன்னும் மூணு நாளைக்குள்ள அவனுக்குத் தமிழ்ப் புத்தகம் கொடுத்திரணும்; நீ உன் புத்தகத்தைக் கொடுப்பியோ, இல்ல புதுசா வாங்கிக் கொடுப்பியோ எனக்குத் தெரியாது. அதோட கடவுள் வாழ்த்துப் பாடலை ஐம்பது தடவை எழுதிக் கிட்டு வரணும்.” என்று தீர்ப்பையும் தண்டனையும் வழங்கிவிட்டேன்.

பிற்பகலில் மீண்டும் புத்தகத்துக்குரியவன் வந்தான். “ஐயா, புத்தகம் கிடைச்சுடுச்சு” என்றான்.

”எப்படி? ஆறுமுகம் கொடுத்திட்டானா?” எனக் கேட்டேன்.

”இல்லிங்கய்யா, தணிகாசலம்தான் எடுத்திருக்கான்; எல்லார் பைகளையும் சோதனை போட்டோம். அவன் பையிலிருந்து கிடைச்சுது. அவனும் ஒத்துகிட்டான்.” என்று கூறிப் புத்தகத்தையும் காட்டினான்.

அவன் சென்ற பிறகும் ஆறுமுகமே கண்முன் வந்து நின்று ஒரு விரல் நீட்டித் “தணிகாசலம் எடுக்க ஆறுமுகத்துக்குத் தண்டனையா?” என்று கேட்பதுபோல் இருந்தது.

கூடவே பளீரென்று மின்னல் வெட்ட “கன்று மேயக் கழுதை காது அரிய” என்ற சொற்றொடர் நினவின் ஆழத்திலிருந்து வந்தது.

அதுவும் தவறாக அளிக்கப்பட்ட தண்டனைதான். இது தொன்றுதொட்டு வருகின்ற மரபு போலும்.

ஒருவன் தன் வயலில் உழுத்தங்காய்களைப் பயிர் செய்தான். அவை நன்றாய் வளர்ந்து காய்த்தன. பிறகு அவன் அவற்றை எல்லாம் பறித்து விட்டு நிலத்தை உழுது விட்டான். உழுத நிலத்தில் இப்போது பசும்புல் தழைத்து வளர்ந்திருந்தது. அவன் அதைத் தன் விட்டுக்காக விட்டிருந்தான். ஆனால் அப்புல்லைச் சில பசுவின் கன்றுகள் மேய்ந்துவிட்டுப் போய்விட்டன. நிலத்தின் உரிமையாளன் சென்று பார்க்கும் போது வயலுக்குப் பக்கத்தில் சில கழுதைகள் மேய்ந்து கொண்டிருந்தன. இந்தக் கழுதைகள்தாம் தன் வயலில் புல்லை மேய்ந்துவிட்டன என்று கருதிய அவன் அக்கழுதைகளைப் பிடித்தான். அவற்றின் காதுகளை அறுத்துத் துரத்தினான். இக்காட்சியைத்தான் கன்று மேயக் கழுதை செவியரிந்தற்றால் என்று இப்பாடல் காட்டுகிறது.

”உழுத உழுத்தஞ்செய் ஊர்க்கன்று மேயக்

கழுதை செவியரிந் தற்றால்—–வழுதியைக்

கண்டநம் கண்கள் இருப்பப் பெரும்பணைத்தோள்

கொண்டன மன்னோ பசப்பு”

{முத்தொள்ளாயிரம்—-60}

============================================================================================================================================================

 

Series Navigationசிறந்த நாவல்கள் ஒரு பட்டியல் -2தந்தையானவள் அத்தியாயம்-6
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *