ஒரு விநோதமான இரவும் அதன் பின்னும்

This entry is part 9 of 22 in the series 16 நவம்பர் 2014

(1)
ஒரு விநோதமான இரவும் அதன் பின்னும்

ஒரு
விநோதமான இரவு.

முதல்
யாமம்.

யாரோ கைகளாலல்ல
ஆனால் கதவைத் தட்டுவது போலிருக்கும்.

இந்த வேளையில் இப்படி யாரென்று கதவைத் திறக்கவில்லை.

நடு
யாமம்.

யாரோ கைகளாலல்ல
ஆனால் கதவைத் தட்டுவது போலிருக்கும் மறுபடியும்.

இந்த வேளையில் இப்படி யாரென்று கதவைத் திறக்கவில்லை.

கடைசி
யாமம்.

யாரோ கைகளாலல்ல
ஆனால் கதவைத் தட்டுவது போலிருக்கும் மறுபடியும் மறுபடியும்.

இந்த வேளையில் இப்படி யாரென்று கதவைத் திறக்கவில்லை.

விடியலில் தென்பட்ட நிலா களைத்து மிகவும்
வெளிறியிருக்கும்.
ஒரு வேளை
’விருந்தாளியாய்’ நிலா தான் இரவில் வந்து கதவைத் தட்டிப் போயிருக்குமோ?

எப்படிச்
சொல்ல முடியும்?

’வா’ என்று
வருவிருந்தாய் அழைப்பேன் பன்முறை பின்.

நிலாவோ கருமேகங்களைக் கூப்பிட்டு ஒளிந்து கொள்ளும்.

உலகெல்லாம்
ஒளி வீசும்.

என் மன வெளியில் மட்டும் ஒளி வீசாமல் வெற்றிடம் விட்டுச் செல்லும்.

நிலாவின் மறுபக்கம் போல் தெரியவில்லை
ஏனென்று.

அந்த இரவுக்குப் பின்
எந்த இரவிலும் கதவு தட்டப்படுவது நின்று போயிருக்கும்.

(2)
விட்டில் பூச்சியின் விடுதலை

விட்டில் பூச்சியே!

சுடர் விளக்கில் சூட்சுமமாகும் ஒளிக் கண்ணாடியில்
என்ன கண்டாய்?

உன்னையா?
இல்லை
நீ உன் கனவென்றா?

உன்னைக் காணாவிட்டாலும்
நீ
உன் கனவென்று காணாமல் இருக்கக் கூடாதா?

ஒளி சிதறும் சிறு துகள்களில் ஞானத்தின் முழுமை தேடி முற்றும்
விழைந்தாயா?

உன் சிறகுகள் காற்று வெளியில்
விடுதலைக்கு வழி நடத்திச் செல்லுமென்பது உனக்குத் தெரியாதா?

எதை விட்டு விடுதலையாக வேண்டி மயக்குற்று ஒளிக் கண்ணாடியில் இப்படி விடாது பால் முட்டி மோதினாய்?

உதிர்ந்து கிடக்கும்
உன் சிறகுகள் சொல்லும்.

உடைந்து போனது
நீ.

நீ
உன் கனவென்ற கனவல்ல.

(3)
கூண்டில்லாத கூண்டு

கூண்டு
திறக்கிறது.

கூண்டுக்குள்ளிருக்கும் கூண்டிலிருந்து
வெளியே வா.

விட்டு
விடுதலையாகிப் போ.

பசுஞ்சோலையில்
பறந்து திரி.

கனிகளைக்
கொத்தி உண்.

’கீச் கீச்’சென்று
உன் கூட்டத்தோடு காற்றின் மொழி பேசிச் சிரி.

கானம்
பாடு.

கலந்து
உறவாடு.

சீட்டெடுத்துக் கொடுப்பதற்கு உன் சிறகுகளை விலை கொடுத்து விடாதே.

அலகிலா வானம் ‘ பறக்க மாட்டாயா நீ’ என்று காத்திருக்கிறது.

சுதந்திரம்
விழை.

ஒடுக்கப்பட்ட உன் சிறகுகள்
பறக்கும்.

உண்மையில் உன் சிறை
கூண்டல்ல.

கூண்டில்லாத
கூண்டு.

ஒரு பெண்ணைத் தவிர யார் இதை உனக்குச் சொல்ல முடியும் எனதருமைக் கூண்டுக் கிளியே?

கு.அழகர்சாமி

Series Navigationவே பத்மாவதியின் கைத்தலம் பற்றி ஒரு பார்வைநர்சிம்மின் அய்யனார் கம்மா ஒரு பார்வை

1 Comment

  1. Avatar seyon yazhvaendhan

    ஒரு வினோதமான இரவு ஓர் அழகிய கவிதை. வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *