பூனையும் யானையும் – முரகாமியின் சிறுகதைகள்

This entry is part 23 of 23 in the series 30 நவம்பர் 2014

தமிழ் நவீன சிறுகதையாக்கத்தில் உலகச் சிறுகதை மேதைகளின் செல்வாக்கு ஒரு முக்கியமான பங்கை நிகழ்த்தியிருக்கிறது. பால்ஸாக், மாப்பசான், செகாவ் ஆகிய மேதைகளின் சிறுகதைகளை தமிழின் நவீன சிறுகதையாசிரியர்களே தமிழ்வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திவைத்தார்கள். புதுமைப்பித்தன் தன்னுடைய சொந்தச் சிறுகதைகளுக்கு இணையான பக்க அளவுள்ள அயல்மொழிச்சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்து அறிமுகப்படுத்தினார். தமிழில் ஒரு சிறுகதையை வாசிக்கும் ஒரு வாசகன், உலகச் சிறுகதைகளில் நிகழ்ந்துள்ள உச்சங்களை அறிந்து தன் வாசிப்பு உலகத்தையும் பார்வையையும் விரிவு செய்துகொள்ள இத்தகைய அறிமுக முயற்சிகள் காலந்தோறும் உதவியபடி இருக்கின்றன. ரஷ்ய எழுத்தாளர்களையும் ஐரோப்பிய எழுத்தாளர்களையும் அமெரிக்க எழுத்தாளர்களையும் தமிழ் வாசகர்களுக்கு பலரும் அறிமுகம் செய்திருக்கிறார்கள். க.நா.சு., சந்தானம், டி.எஸ்.சொக்கலிங்கம் போன்றோரின் அர்ப்பணிப்புணர்வும் அக்கறையும் போற்றத்தக்கவை. எண்பதுகளில் லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகளுக்கு உலக அளவில் ஒருகவனம் உருவான சமயத்தில், அத்தகு கவனம் தமிழிலும் உருவாகும் வகையில் மீட்சி பிரம்மராஜன் முயற்சியால் லத்தீன் அமெரிக்கச் சிறுகதைத்தொகுதியொன்று வெளிவந்தது. போர்ஹெயின் சிறுகதைகளில் தேர்ந்தெடுத்த கதைகளின் தொகுதியொன்றை அவரே மொழிபெயர்த்து வெளியிட்டார். தாஸ்தாவெஸ்கிக்கும் மார்க்யூஸ்க்கும் கல்குதிரை ஒரு சிறப்புமலரையே வெளியிட்டது மறக்கமுடியாத ஓர் அனுபவம். எழுத்தாளர்களின் பல முக்கியமான படைப்புகள் அம்மலர்களில் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தப் பங்களிப்பின் தொடர்ச்சியாக சமீபத்தில் தமிழ்ப்படைப்பாளிகளால் கவனப்படுத்தப்படும் முக்கியமான ஓர் ஆளுமை முரகாமி.
முரகாமி ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர். முற்றிலும் புதிதான ஒரு முறையில் அவர் தன் கதையை முன்வைக்கிறார். தொடர்ச்சியாக அவருடைய சிறுகதைகளை வாசிக்கும் ஒரு வாசகன், சாதாரணங்களில் இணைந்துநிற்கும் அசாதாரணமான ஒரு புள்ளியை அல்லது அசாதரணமானவற்றில் அடங்கியிருக்கும் சாதாரணமான ஒரு புள்ளியைச் சுற்றி அவர் கதையுலகம் இயங்குவதை உணரலாம். அவருடைய சிறுகதைகளைப்பற்றி தோராயமான ஒரு வரையறையைச் சொல்லவேண்டுமென்றால், தனிமைக்கும் மனித வாழ்வுக்கும் உள்ள உறவை மதிப்பிடும் கலைமுயற்சிகள் என்று அடையாளப்படுத்தலாம் எனத் தோன்றுகிறது.
மலைகள் பதிப்பகம் கொண்டுவந்திருக்கும் ‘யானை காணமலாகிறது’ தொகுதி தமிழ்வாசகர்களுக்கு ஒரு நல்விருந்து என்றே சொல்லவேண்டும். நான்கு சிறுகதைகள் மூன்று வெவ்வேறு மொழிபெயர்ப்பாளர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இரண்டு சிறுகதைகளை ச.ஆறுமுகமும் ஒரு சிறுகதையை ஸ்ரீதர் ரங்கராஜும் ஒரு சிறுகதையை வி.பாலகுமாரும் மொழிபெயர்த்துள்ளார்கள். ஒவ்வொரு சிறுகதையும் எந்தத் தொகுதியிலிருந்து எடுக்கப்பட்டது என்கிற தகவல் எந்த இடத்திலும் இல்லை. மூல ஆசிரியரான முரகாமிபற்றிய விரிவான அறிமுகக்குறிப்பும் மொழிபெயர்ப்பாளர்கள்பற்றிய குறிப்புகளும்கூட நூலில் இடம்பெறவில்லை.
’மனிதனைத் தின்னும் பூனைகள்’ முரகாமியின் முக்கியமான கதைகளில் ஒன்று. எகிப்து நாட்டின் துறைமுகப்பகுதியில் தனிமையான ஓர் இடத்தில் ஒரு காதலன் தன் காதலிக்கு ஒரு செய்தித்தாளைப் படித்துக்காட்டும் புள்ளியிலிருந்து அச்சிறுகதை தொடங்குகிறது. ஏதென்ஸ் நகரத்தில் புறநகரொன்றில் தனிமையில் வசித்துவந்த எழுபது வயது மூதாட்டியை அவரே வளர்த்த மூன்று பூனைகள் தின்றுவிட்டன என்பதுதான் செய்தி. ஆர்வமூட்டும் விசித்திரமான செய்தி என்பதால், காதலன் அச்செய்தியைப் படித்துக் காட்டுகிறான். பிறகு, இருவரும் அச்செய்தியை ஒட்டி உரையாடிக்கொள்கிறார்கள். பூனைகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை எப்படி எடுப்பது என நீண்ட நேரம் விவாதிக்கிறார்கள். காதலி தன் பள்ளிப்பருவத்தில் தன் ஆசிரியை சொன்ன ஒரு பூனைக்கதையை நினைவுபடுத்திக்கொண்டு பகிர்ந்துகொள்கிறாள். காதலனும் தன் பிள்ளைப்பருவத்தில் பூனை வளர்த்த கதையொன்றைச் சொல்கிறான். அதைத் தொடர்ந்து, வீட்டுக்குத் திரும்பும் சமயத்தில் எகிப்துக்கு வருவதற்கு முன்பாக ஜப்பானில் வாழ்ந்த அனுபவங்களை நினைத்துக்கொள்கிறார்கள். இருவருக்கும் தனித்தனியாக குடும்பங்கள் இருந்தன. அவ்வுறவில் படிந்த சலிப்பைப் போக்கிக்கொள்ள அவர்கள் தனிமையில் பேசிப் பழகி, காதலித்து வந்தார்கள். பல இடங்களில் தங்கி பல முறை உறவாடினார்கள். இவர்களுடைய காதல், ஒருநாள் இவர்களுடைய குடும்பங்களுக்குத் தெரியவருகிறது. குடும்பங்கள் அவர்களை உதறிவிடுகின்றன. தம் சேமிப்புப்பணத்தை எடுத்துக்கொண்டு அவர்கள் எகிப்து நகரத்துக்கு வந்துவிடுகிறார்கள். எகிப்தில் அவர்களுக்கு வேலை எதுவுமில்லை. நீண்ட நேர காலைநடை, செய்தித்தாள் வாசிப்பு, மது என்ற அளவிலேயே பொழுதுபோகிறது. எங்கெங்கும் நடந்து சுற்றிக்கொண்டே இருப்பதுதான் அவர்கள் வேலை. காதலன் முடிந்தபோதெல்லாம் ஓவியம் தீட்டுகிறான். காதலி கையேட்டின் உதவியுடன் கிரேக்க மொழியைக் கற்க முயற்சி செய்கிறாள். அன்று இரவு வேளையில் படுக்கையில் தூங்கிக்கொண்டிருக்கும்போது காதலி காணாமல் போகிறாள். அதிர்ச்சியும் கவலையும் கொள்ளும் காதலன் அவளைத் தேடிச் செல்கிறான். மலையுச்சியிலிருந்து இசை மிதந்து வருகிறது. அந்த இசையைச் சுவைப்பதற்காக ஒருவேளை அவள் சென்றிருக்கலாம் என மலையுச்சிக்குச் செல்கிறான் காதலன். அவளைக் காணமுடியவில்லை. அதுவரை அவன் கேட்ட இசை அங்கே இசைக்கப்பட்டதற்கான அறிகுறிகூட அங்கே இல்லை. ஏமாற்றத்துடன் அறைக்குத் திரும்பிய அவன் மது அருந்துகிறான். பிறகு, ஓவியம் தீட்டத் தொடங்குகிறான். தன்னிச்சையாக அவன் விரல்கள் பூனைகளை வரைகின்றன. பூனைகள் மெல்லமெல்ல தன்னைக் கடித்து உண்பதை அவன் உணர்கிறான். நுட்பமான அப்புள்ளியில் சிறுகதை முடிவடைந்துவிடுகிறது. ஒருபுறம் உண்மையான பூனைஅனுபவங்களின் வரிசை. மறுபுறம் பூனையைப் படிமமாகக் காட்டும் அனுபவங்களின் வரிசை. இரண்டு தொகுப்புகளையும் மாற்றிமாற்றி முன்வைத்தபடி நகரும் சிறுகதை அதன் உச்சத்தில் தானாகவே முடிவடைந்துவிடுகிறது. தனிமை தவிர்க்கமுடியாத ஒரு பெரும் சவாலாக மனித சமூகத்தின்முன் நிற்கும் தன்மை உணர்த்தப்பட்டு விடுகிறது.
ஒவ்வொரு சிறுகதையாசிரியனும் புதியபுதிய விஷயங்களைத் தேடித்தேடி அலைந்துகொண்டே இருக்கிறான். புதியவற்றைக் கேட்க அவன் காதுகள் ஏங்கிக்கொண்டே இருக்கின்றன. புதியவற்றைப் பார்க்க அவன் கண்கள் நாலாபுறமும் சுழன்றுகொண்டே இருக்கின்றன. இரைக்காகக் காத்திருக்கிற அல்லது அலைகிற ஒரு விலங்கைப்போல பதற்றத்துடன் இருக்கிறது அவன் மனம். முரகாமியின் தேடல்கள் அவருக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கின்றன. கையெட்டும் தொலைவில் தொங்கும் ஒரு பழத்தைப் பறித்துத் தரும் லாவகத்துடன் ஒரு புதிய அம்சத்தை ஒவ்வொரு கதையிலும் அவர் மனம் பகிர்ந்துகொள்கிறது.
’யானை காணாமலாகிறது’ சிறுகதையும் ஒரு பத்திரிகைச்செய்தியோடுதான் தொடங்குகிறது. நகராட்சியால் தனியிடத்தில் பராமரிக்கப்பட்டு வந்த வயதான யானை இரவோடு இரவாக காணாமல் போய்விடுகிறது. அதன் கால்களில் கட்டப்பட்ட விலங்கு அப்படியே உள்ளது. ஆனால் யானை இல்லை. யானையைப் பார்த்துக்கொண்டிருந்த பாகனும் காணவில்லை. அதையொட்டி யானையைப்பற்றி தான் அறிந்ததையெல்லாம் அசைபோடுகிறான் ஒருவன். அன்று நிகழ்ந்த விருந்தில் சந்தித்த ஓர் இளம்பெண்ணிடம் அந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்கிறான். சங்கிலிகள் அப்படியே இருக்கும் நிலையில் யானை தப்பித்துச் சென்றிருக்க வாய்ப்பே இல்லை என்கிறான். அவள் தப்பித்துத்தான் போயிருக்கவேண்டும் என்கிற ஐயத்தை முன்வைக்கிறாள். விவாதங்களும் ஐயங்களும் வளர்ந்தபடி செல்கின்றன. அவள் ஐயத்தைக் களையும்பொருட்டு, தானே அந்த யானையை கடைசியாகப் பார்த்த ஆள் என்றும் சொல்லிக்கொள்கிறான். ஒவ்வொருநாளும் மாலநடையின்பொருட்டு குன்றின் உச்சியை நோக்கிச் செல்லும் பழக்கமுள்ள அவன் அங்கேயே உட்கார்ந்து சிறிது நேரம் வேடிக்கை பார்க்கிறான். அப்போதுதான் அவன் பார்வையில் யானையும் பாகனும் படுகிறார்கள். அந்த நெருக்கம் அவன் மனத்தை நெகிழ்ச்சியடையச் செய்கிறது. இரவு உணவை ஊட்டிவிட்டுச் செல்கிறான் பாகன். அந்த நேரம் இருட்டு கவிந்துவிடுகிறது. விளக்குகள் அணைந்துவிடுகின்றன. அதுதான் யானையை கடைசியாகப் பார்த்த தருணம் என்றான் அவன். அதற்குப் பிறகு உரையாடலைத் தொடரமுடியாததால் அந்த இளம்பெண் எழுந்துபோய்விடுகிறாள். பல திறப்புகளுக்கு வழியுள்ள ஒரு நுட்பமான புள்ளியில் சிறுகதையை முடித்துவிடுகிறார் முரகாமி. பூனை என்பதைத் தனிமையின் அடையாளமாக பல கதைகளில் முன்வைத்த முரகாமி, யானை என்பதை உறவின் அடையாளமாக, நெருக்கத்தின் அடையாளமாக முன்வைக்கிறார் என எண்ண வழியிருக்கிறது. கதையின் போக்கையொட்டி யோசிக்கும்போது ஓர் உறவு கரைந்துபோவதை அல்லது காணாமல் போவதையே அவர் யானையை முன்வைத்து உணர்த்துகிறார் என்று நினைக்கத் தோன்றுகிறது.
’தூக்கம்’ சிறுகதையில் முரகாமி சித்தரிக்கும் குடும்பத்தலைவி விசித்திரமானவள். திடீரென அவள் இரவுநேரத்தில் தூங்கமுடியாதவளாக மாறிவிடுகிறாள். எவ்வளவு முயற்சி செய்தும் அவளுக்குத் தூக்கம் வருவதில்லை. அருகில் படுக்கும் கணவன் சில நொடிகளில் ஆழ்ந்த தூக்கத்தில் அமிழ்ந்துவிடுகிறான். அடுத்த அறையில் துயிலும் மகனும் படுத்ததுமே தூங்கிவிடுகிறான். அவள்மட்டும் தூக்கமின்றித் தவிக்கிறாள். அந்தத் தவிப்பையும் தூக்கமற்ற தனிமையையும் அவள் ஓர் ஆக்கபூர்வமான செயலாக மாற்ற முயற்சிசெய்து, அதில் வெற்றியையும் அடைகிறாள். இளம்பருவத்தோடு நின்றுபோன வாசிப்புப்பழக்கத்தை மீண்டும் தொடங்குகிறாள். தல்ஸ்தோயின் அன்னா கரினினா நாவலை மீண்டும்மீண்டும் படிக்கிறாள். ஒவ்வொரு வாசிப்பிலும் அந்தப் படைப்பு அவளுக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தருகிறது. சில நாட்களில் வீட்டைவிட்டுக் கிளம்பி யாருமற்ற தெருக்களில் வாகனத்தை ஓட்டிச் சென்று பொழுதைக் கழிக்கிறாள். துறைமுகத்தின் பக்கமாக வண்டியை நிறுத்திவிட்டு கடலை வேடிக்கை பார்க்கிறாள். அவள் மனம் புத்துணர்ச்சியால் நிரம்புகிறது. பதினேழு நாட்களுக்கும் மேலாக தூக்கமின்றி இருந்தபோதும், சிறிதுகூட களைப்பற்றவளாக காணப்படுகிறாள். புதிதாகச் செய்யும் ஒவ்வொரு செயலையும் துடிப்போடு செய்கிறாள்.
‘தினம் நகரும் சிறுநீரக வடிவக்கல்’ என்னும் சிறுகதை ஒரு எழுத்தாளனின் வாழ்வில் நிகழும் சம்பவங்களின் தொகுப்பைப்போன்ற தோற்றத்தைத் தரும் கதை. ‘மூன்று பெண்கள்’ என்னும் விதியொன்றை அவனுடைய அப்பா அவனுக்குச் சொல்லிச் சென்றுள்ளார். அது கதையின் புதிய அம்சங்களில் ஒன்று. வாழ்வில் அவன் முதன்முதலாகச் சந்திக்க நேரும் மூன்று பெண்களில் தன் வாழ்வுக்கு அர்த்தம் தேடித்தரக்கூடிய ஒருத்தி யார் என்பதை அச்சந்திப்புகளில் ஒருவன் கண்டடைந்துவிடவேண்டும் என்பதுதான் அவர் வகுத்துத் தந்திருக்கும் விதி. முதல் பெண்ணின் சந்திப்பு தோல்வியில் முடிவடைந்துவிடுகிறது. இரண்டாவது பெண்ணின் நட்பு கதையில் விரிவாகச் சொல்லப்படுகிறது. அவன் எழுத்தாளன் என்பதால் அவன்பால் ஈர்க்கப்பட்டவள் அவள். அவன் எழுதும் கதைகள் அவளைக் கவர்கின்றன. ஆனால் தன்னைப்பற்றிய எந்த விஷயத்தையும் அவள் சொல்வதில்லை. தன் ஊகத்தின்மூலம் அவனையே கண்டுபிடிக்கும்படி தூண்டுகிறாள். ஒருநாள் அவன் எழுதிக்கொண்டிருக்கும் கதையைப்பற்றிச் சொல்லும்படி அவள் கேட்கிறாள். முற்றுப்பெறாத தன் சிறுகதையை சொல்வதில் அவனுக்குள் நிறைய தயக்கமிருக்கிறது. அது கதையைக் குழப்பிவிடக்கூடும் என அவனுக்குத் தோன்றுகிறது. மனதிலிருப்பதை வார்த்தைகளாக்கிவிட்டால் அவனுக்குள்ளிருக்கும் ஏதோ முக்கியமான ஒன்று காலைப்பனிபோல ஆவியாகிவிடும் என்றும் திட்டமிட்டிருக்கும் நுண்ணிய அர்த்தங்கள் தட்டையாகிவிடும் என அஞ்சுகிறான். ஆனால் படுக்கையில் அவள் அருகில் படுத்துக்கொண்டு, அவள் கூந்தலை வருடிக்கொண்டிருக்கும் சூழலில் அவனால் சொல்லாமலும் இருக்கமுடியவில்லை. ஒருவேளை, முடிவின்றி நிறுத்தப்பட்டிருக்கும் கதையைத் தொடர்ந்து செலுத்தும் விசையை தன் மனம் உரையாடலின் தொடர்ச்சியாகக் கண்டடைந்தாலும் கண்டடையலாம் எனவும் தோன்றியதால் மெதுவாக அந்தக் கதையை விவரிக்கிறான். விடுமுறையில் தனியாகப் பயணம் செய்த ஒருத்தியைப்பற்றிய கதை அது. அப்பயணத்தில் ஓர் ஓடைப்படுகையின் அருகில் விசித்திரமான ஒரு கல்லைக் கண்டெடுக்கிறாள் அவள். கருநிறத்தில் சிவப்பு கலந்து, வழவழப்பாக ஒரு சிறுநீரகத்தின் அமைப்பில் அந்தக் கல் காணப்படுகிறது. அவள் அதைத் தன்னுடன் எடுத்துச் சென்று மேசையின்மீது வைத்திருக்கும் தாட்கள் பறக்காமல் தடுக்கிற எடைப்பொருளாக பயன்படுத்துகிறாள். சில நாட்கள் கழித்து அவள் ஒரு விசித்திரத்தை உணர்கிறாள். அந்தக் கல் ஒவ்வொரு நாள் காலையிலும் ஒவ்வொரு இடத்தில் தென்படுகிறது. கல்லின் இடமாற்றத்துக்கான காரணம் தெரியாமல் அவள் குழம்புகிறாள். இதுதான் அவன் எழுதிய பாதிக்கதை. உரையாடிக்கொண்டே இருவரும் உறங்கிவிடுகிறார்கள். அடுத்த ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக உட்கார்ந்து அவன் மீதிக்கதையையும் எழுதி முடிக்கிறான். எழுதும்போதே தன் காதலியை அழைத்து, அவளிடம் சொல்லவேண்டும் என நினைக்கிறான். ஆனால் அவளைத் தொடர்புகொள்ளவே முடியவில்லை. அதற்குப் பிறகு, அவளைச் சந்திக்கவே முடியவில்லை. அவள் விலகலால் அவன் தனிமையிலும் வேதனையிலும் தவிக்கிறான். இதற்கிடையில் அவளுடைய பணிபற்றிய விவரங்களைக்கூட அவன் கண்டுபிடித்துவிடுகிறான். ஆனால் அவள் சந்திக்க வரவே இல்லை. அந்தச் சிறுகதையை அவன் அவளுக்குப் பிடித்தமான இதழில் பிரசுரிக்கிறான். அதைப் பார்த்தாவது அவள் தொடர்புகொள்ளக்க்கூடும் என அவள் நினைக்கிறாள். அதுவும் நிகழவில்லை. சிறுநீரகக்கல் இடம்மாறுவது எப்படி புதிர்நிறைந்த ஒன்றோ, அதே அளவுக்கு அவள் விலகிச் சென்றதும் புதிர்நிறைந்த ஒன்றாக இருக்கிறது. அப்பாவின் மூன்று பெண்கள் விதி நினைவுக்கு வருகிறது. காணாமல் போனவளை பட்டியலின் இரண்டாவது இடத்தில் வைத்துக்கொண்டான். அர்த்தமுள்ள உறவை அளித்த இரண்டாவது பெண். இரண்டாவது தோல்வி. இன்னமும் ஒன்றுதான் மீதமிருக்கிறது. ஆனால் இப்போது பயமேதும் இல்லை, இந்த வரிசைக்கும் அர்த்தமில்லை என்று அவனுக்குத் தோன்றிவிடுகிறது. மற்றொருவரை விரும்பி, மனதால் முழுமையாக ஏற்றுக்கொள்வதுதான் முக்கியம். அதுவே முதலும் கடைசியுமாக இருக்கவேண்டும் என நினைத்துக்கொள்கிறான்.
ஏற்கனவே சொல்லப்பட்ட கருக்களைத் தாண்டி, கதைகளுக்கான புத்தம்புதிய கருக்களுக்கான தேடல் மொழிபேதமின்றி ஒவ்வொரு சிறுகதைக்கலைஞனையும் அலையவைத்தபடியே இருக்கிறது. புதிய மொழி, புதிய கோணம், புதிய கரு என எழும் தவிப்புகளுக்கு அளவே இல்லை. இருளடர்ந்த அந்தத் திசையைநோக்கி வெளிச்சத்தைப் பாய்ச்சுவபவை உலகச்சிறுகதை எழுத்தாளர்களில் உச்சத்தில் இருக்கும் ஜப்பானிய எழுத்தாளர் முரகாமியின் படைப்புகள்.
(யானை காணாமலாகிறது. மொழிபெயர்ப்புச் சிறுகதைகள். மூல ஆசிரியர் முரகாமி. மலைகள் பதிப்பகம். 119, முதல் மாடி, கடலூர் மெயின் ரோடு. அம்மாப்பேட்டை. சேலம் – 3. விலை. ரூ.150)

Series Navigationஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 3 எனக்குப் பிடித்த சிறுகதை: கி ராஜநாராயணனின் ‘நாற்காலி’
author

பாவண்ணன்

Similar Posts

Comments

  1. Avatar
    ச.ஆறுமுகம் says:

    பாவண்ணன் அற்புதமான ஒரு சிறுகதையாளர். அவருடைய சிறுகதைகளின் அமைதி எப்போதுமே என்னை வியக்க வைக்கிறது. ஆர்ப்பாட்டமில்லாத மொழிநடைக்குச் சொந்தக்காரரான அவரது நூல் அறிமுகம் அருமையாக அமைந்துள்ளது. மிக்க நன்றி.

Leave a Reply to ச.ஆறுமுகம் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *