ரஸ்கின்பாண்ட்
(மரங்களின் மரணம் – ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் : வளவ. துரையன் )
ஒரு குளிர்காலத்தில் ‘ மேப்பில்வுட் ’ மலைப்பக்கத்தில் இருந்த அமைதியும் நிதானமும் எப்பொழுதும் இல்லாதபடி மறைந்துவிட்டன. அரசாங்கம் மலைகளுக்குப் புதிய சாலை அமைக்கத் தீர்மானித்து விட்டது. பொதுப்பணித்துறையானது வீட்டின் வலப்பக்கத்தில்,நான் காட்டை நன்றாகப் பார்க்க வசதியாய் இருந்த ஜன்னலிலிருந்து ஆறு அடி தூரத்தில் அமைத்தால் பொருத்தமாக இருக்கும் என எண்ணியது.
என்னுடைய குறிப்புப் புத்தகத்தில் நான் எழுதினேன்: அவர்கள் பல மரங்களை வெட்டிவிட்டார்கள். முதலில் ‘வால்நட்’ மரம் போனது. பிரேமுடைய சிறிய மகன் ராகேஷின் வளர்ச்சியைப் பத்தாண்டுகளாகக் கவனித்து வந்தது போல் அம்மரத்தைக் கவனித்து வந்தேன்.
கோடையில் தளிர்க்கின்ற அதன் இலைக்குருத்துகளையும், அகலமான பச்சை இலைகளையும், செப்டம்பரில் வால்நட்டுக்காய்கள் பழுத்து விழத்தயாராகும்போது பொன் நிறத்தில் மின்னும் இலைகளையும் பார்த்துக் கொண்டிருப்பேன். இம்மரத்தைப்பற்றி மற்றவர்களைவிட நான் நன்கு அறிவேன். அது ஜன்னலின் அடியில் சாலையைத் தாங்கப்போகும் சுவர் வரப்போகும் இடத்தில் இருந்தது.
இந்தப் பரந்த காட்டில் மட்டுமே வளர்ந்து கொண்டிருந்த ‘தியோதர்’ மரம் நான் இழந்த மற்றொரு மரமாகும். சில ஆண்டுகளுக்குமுன் சூரிய ஒளி பற்றாக்குறையால் அது வளர்ச்சி குன்றியிருந்தது. கண்டபடி வளர்ந்திருந்த ஓக் மரங்களின் கிளைகள் அதை மறைத்திருந்தன. மேலிருந்து தொங்கிக் கொண்டிருந்த அதன் கிளைகளை நான் வெட்டிய பிறகு அந்த தியோதர் மரம் வேகமாக வளர்ந்தது. அது இந்த ஆண்டுதான் முழுமையடைந்திருந்தது. டெல்லிக்குச் சென்ற என் இளைய சகோதரனை நான் இழந்ததுபோல வாலிபப் பருவத்தில் அம்மரமும் வெட்டப் பட்டுவிட்டது.
இரண்டுமே சாலைகளினால் வஞ்சிக்கபட்டதுதான். பொதுப் பணித்துறையால் அந்த மரம் கொல்லப்பட்டது. என் சகோதரன் ஒரு பெரிய லாரியால் கொல்லப் பட்டான்.
வீட்டிற்கருகில் இந்தச் சிறிய விசாலமான இடத்தில் இருந்த இருபது ‘ஓக்’ மரங்கள் வீழ்ந்தன. இப்புறவழிச்சாலை இங்கிருந்து சுமார் ஆறு மைல்கள் தொலைவில் உள்ள ஜாபர்கோட்டையை அடைய ஓராயிரம் ஓக் மரங்கள் வெட்டப்பட்டன. அவை தவிர இன்னும் சிறந்த ‘மேப்பில்’ மரங்களும், தியோதர் மரங்களும், ‘பைன்’ மரங்களும் தேவையில்லாமலே வெட்டப்பட்டன. அவை சாலையிலிருந்து ஐம்பதிலிருந்து அறுபது கெஜங்கள் தள்ளியே வளர்ந்திருந்தன.
கஷ்டம் என்னவென்றால் யாருமே [ விழுந்த மரங்களை வாங்கிய ஒப்பந்தக் காரர்களைத்தவிர்த்து ] மரங்களும் புதர்ச் செடிகளும் தேவையென உண்மையிலேயே நம்பவில்லை. அவர்கள் எந்தக் கவலையுமின்றிப் போய்க் கொண்டிருந்தார்கள். பால்காரனுக்கோ தீவனத்திற்காக இலைகளைப் தரும் மரம் மட்டுமே உபயோகமான மரம். “பௌரிக்கு வாருங்கள், பார்ப்பதற்கே அருமையாய் இருக்கும். வழியில் அங்கே மரங்களே இல்லை” என ஒரு வாலிபன் கூறினான்.
சரி, அவன் இப்போது இங்கே தங்கலாம்; மொட்டையடிக்கப்பட்ட மலைப்பகுதியைக் கண்டு மகிழலாம். ஆனால் ஓக் மரஙகள் எல்லாம் போனபிறகு பால்காரன் தீவனத்திற்காக வேறு ஒரு களத்திற்குப் போகவேண்டும்.
ராக்கேஷ் ‘மேப்பில்’ மரங்களைப் பட்டாம்பூச்சி மரங்கள் என்பான். ஏனெனில் அம்மரத்தின் விதைகள் பறந்து கீழே விழும்போது பட்டாம்பூச்சிகள் பறப்பதைப் போல இருக்கும். இப்போது மேப்பில் மரங்கள் இல்லை. ஆகாயத்தில் கொழுந்துவிட்டு எரிவது போன்ற பிரகாசமான சிவப்பு இலைகள் இல்லை.பறவைகளும் இல்லை.
வீட்டின் அருகேயும் பறவைகள் இல்லை. ஜன்னல் கதவைத் திறந்து வைத்துச் சிவந்த பறவைகள் ஓக் மரங்களின் கரும் பச்சை இலைகளுக்கிடையில் இடம்விட்டு மாறி மாறி உட்காருவதை இன்னும் சிறிது காலத்திற்குப் பிறகு பார்க்க முடியாது.நீண்ட வாலுள்ள எப்போதும் சத்தமிடும் பறவை, தியோதர் மரத்தில் அமர்ந்துகொண்டு வற்புறுத்தி அழைக்கும் ‘பர்பெட்’ பறவை. இவற்றையும் காணமுடியாது. காட்டுப் பறவைகள். அவையும் இப்போது தப்பித்திருக்கும் காடுகளில் தங்க இடம் தேட வேண்டி இருக்கும். மனிதர்களுடன் வாழக் கற்றுக் கொண்ட, சாலைகளிலும், வீடுகளிலும் மனிதர்களுடன் சேர்ந்து விருத்தி செய்து கொள்ளத்தெரிந்த காகங்கள் மட்டுமே வந்துகொண்டிருக்கும். மனிதர்கள் மறைந்தாலும் சுற்றுப்புறங்களில் காகங்கள் மட்டும் இருக்கும்.
இரவில் பெரும் சத்தத்துடன் செல்லும் பெரிய லாரிகள், அந்த மூலையில் ஒரு தேநீர்க் கடை, கற்களைப் பொடியாக்கும் இயந்திரங்களின் சக்கரங்களின் ஓசை , மோட்டார் வண்டிகளின் ஹார்ன் ஒலிகள், ஆகியவையும் விரைவில் வந்துவிடும். ‘த்ரஷ்’ என்னும் பறவையின் கீச்சிடும் ஒலியை அவற்றை மீறிக் கேட்க முடியுமா? வெடிச் சத்தங்கள் தொடர்ந்து மலையின் அமைதியைச் சிதைக்கின்றன. ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறைகள் வெடி வைத்துத் தகர்க்கப் படுகின்றன. தைரியமான பறவைகளும், விலங்குளும் கூட பயந்து நடுங்குகின்றன. இரண்டு வாரங்களாக நீண்ட வாலுள்ள தைரியமான லங்கூர் குரங்குகள்கூட தங்கள் முகத்தைக் காட்டவில்லை.
எப்படியோ; ஒரு தேநீர்க் கடை வேண்டுமென நாங்கள் காத்திருக்க வேண்டிய நிலை வருமென நான் நினைக்க வில்லை. புதிய சாலைகள் இன்னும் அமைக்க வேண்டிய அந்த மலையின் மற்ற மூலைகளில் எங்காவது ஒரு தேநீர்க்கடை இருக்கலாம். இது ஓர் எதிர்மறை என்ணம் என்பதில் சந்தேகம் இல்லை. எனக்குக் கொஞ்சமாவது அறிவிருந்தால் ஒரு தேநீர்க் கடை திறக்க வேண்டும். ஒதுங்கி நின்றால் இழந்தவன்தான். மரங்கள் கூட கீழே விழும்போது எல்லாம் இழந்தவைதான். ஆனால் ஒரு நிச்சயமான கௌரவத்தைப் பெறுகின்றன.
கவலைப் படவேண்டாம்; மனிதர்கள் வருவார்கள், போவார்கள்,
மலைகள் நீடித்து இருக்கும்.
[ ரஸ்கின் பாண்டின் “Our Trees Still Grow in Dehra” எனும் தொகுப்பிலிருந்து “Death of the Trees” எனும் கதை மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. ]
”ரஸ்கின்பாண்ட்”
1934—இல் இமாசலப் பிரதேசத்தில் கவிலியில் ரஸ்கின்பாண்ட் பிறந்தார். குஜராத்தின் ஜாம்நகரிலும், டேராடூனிலும், ஷிம்லாவிலும் வளர்ந்தார். Room on the roof எனும் தன் முதல் நாவலைப் பதினேழாவது வயதில் எழுதினார். 1957—இல் “ஜான் லியுலைன் ரைச்” நினைவுப் பரிசப் பெற்றார். அதன் பிறகு முன்னூறு சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் எழுதினார்.
குழந்தைகளுக்கான முப்பது நூல்களை எழுதி உள்ளார். தன் சுய சரிதையை இரண்டு பாகங்களாக எழுதி உள்ளார். 1992—இல் அவரின் ஆங்கில எழுத்திற்காக அவருக்குச் சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. 1999—இல் அவர் பத்மஸ்ரி விருது வழங்கப்பட்டது.
- விளக்கின் இருள்
- தொடுவானம் 46. காலேஜ் லைப் ரொம்ப ஜாலி
- அளித்தனம் அபயம்
- மருத்துவ படிப்பு – ஒரு சமூக அந்தஸ்துக்காக மட்டுமே
- காத்திருக்கும் நிழல்கள்
- புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரி முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு
- நீரிழிவு நோயும் சிறுநீரக பாதிப்பும்
- ஜன்னல் கம்பிகள்
- ஆத்ம கீதங்கள் – 9 முறிந்த உன் வாக்குறுதி .. !
- பூவுலகு பெற்றவரம்….!
- கைவசமிருக்கும் பெருமை
- ஆனந்த பவன் நாடகம் வையவன் காட்சி-17
- எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ) மற்றும் காவலூர் ராஜதுரை – மெல்பனில் நினைவரங்கு – விமர்சன அரங்கு
- Goodbye to Violence – A transcreation of Jyothirllata Girija novel Manikkodi – Published
- ஜோதிர்லதா கிரிஜா புத்தகங்கள் மறுபதிப்பு
- மரங்களின் மரணம் [ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் : வளவ. துரையன் ]
- ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 5 வினா-விடை: ப குருநாதன்
- நிலவுக்கு அப்பால் பறக்கக் கூடிய நாசாவின் புதிய ஓரியன் விண்வெளிக் கப்பல் முதல் சோதனை முடிந்தது
- சமூக நல்லிணக்க பூஜையான ஆயுத பூஜை
- (3) – யாமினி க்ருஷ்ணமூர்த்தி
- வரலாற்றுப்பார்வையில் -பெரியகுளம்-இரண்டுமுறை தமிழக முதல்வரை தேர்ந்தெடுத்த தொகுதி
- மிருகத்தனமான கொலைத்திட்டம் (பங்களாதேஷின் கொலையுண்ட அறிவுஜீவிகள் நாள்)
- சாவடி – காட்சிகள் 13-15