வரிசை

This entry is part 19 of 23 in the series 21 டிசம்பர் 2014

நூறு பேர் வரிசையில் நிற்கும் பொழுது ஒருவன் மட்டும் தன்னை புத்திசாலித்தனமாக நினைத்துக் கொண்டு அனைவரையும் தாண்டிக் கொண்டு முன்னாள் சென்று தன்னுடைய வேலையை முடிக்க நினைக்கும் கயவாளித்தனத்தை சற்றும் சகித்துக் கொள்ள முடியாது. எல்லோருக்கும் வேலை உண்டு. எல்லோருக்கும் அவசரம் தான். அனைவருக்கும் வேலை முடிந்தாக வேண்டும். ஆனால் ஒரு சிலர் மட்டும் தன்னை முன்னிறுத்திக் கொண்டு, தன்னைப்போல் அவசரம் வேறு யாருக்கும் இல்லை என்பது போல்,எல்லோரையும் ஆட்டு மந்தைகளைப் போல் நினைத்துக் கொண்டு முன்னேறிச் சென்று தன்னுடை வேலையை முடித்துக் கொள்ள நினைப்பது மனித நாகரீகத்திற்கு புறம்பான விஷயம்.
அப்படிப்பட்டவர்களின் மனதில் என்னதான இருக்கும்… மற்றவர்கள் எல்லாம் புத்தியற்றவர்கள். தனக்கு மட்டும் அது சற்று அதிகமாக முளைத்துக் கொண்டு நிற்கிறது என்கிற நினைப்பா?… மற்றவர்கள் எல்லாம் அவ்வளவு முக்கியமானவர்கள் இல்லை அல்லது தன்னளவுக்கு முக்கியமானவர்கள் இல்லை, அவர்கள் ஆடு மாடுகளைப் போன்றவர்கள் பொறுமையாக தங்களுடைய வேலையைப் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் தான் அப்படி இல்லை. தன்னுடைய ஒவ்வொரு மணித்துளியும் மிக முக்கியமானது. தன்னுடைய ஒவ்வொரு நொடியையும் இது போன்ற சில்லறை விஷயங்களுக்காக ஒதுக்க முடியாது. அதனால் இந்த சீப்பான ஆடு மாடுகளை கடந்து சென்று தன்னுடைய வேலையை முடித்துக் கொண்டு செல்லலாம்… என்றெல்லாம் தோன்றுமோ?…
பெரும்பாலும் காரில் வருபவர்களோ, அல்லது சற்று மேம்பட்ட தரமான ஆடைகளை அணிந்து கொண்டு, வாசனை திரவியங்களை அளவுக்கு அதிகமாக உபயோகிப்பவர்களோ, மற்றவர்களை விட சற்று சிவப்பாக இருப்பவர்களோ, (இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால் பல இடங்களில் பார்க்க நேர்கிறது, சற்றும் நிறமானவர்கள், பொதுவாக எந்த வரிசையிலும் நிற்பதில்லை. ஏதோ வேறு இனத்தாருடன் தன்னை இனைத்துக் கொள்ள தயங்குவதைப் போல சற்று தள்ளி நின்று தயங்கி தயங்கி பார்ப்பார்கள். வேறு வழி இல்லை என்று தெரிந்த உடன் வரிசையில் நிற்கும் யாராவது ஒரு அமைதியானவனை, அம்மாஞ்சியை தேடிக் கண்டுபிடித்து அவனிடம் தன்னுடைய வேலையை ஒப்படைத்து தனக்காக முடித்துத் தருமாறு வேண்டி கேட்டுக் கொள்வார்கள். இதில் ஆண், பெண் வேறுபாடு இல்லை.) இவர்கள் வரிசையில் நிற்பதாய் இருந்தால், அமெரிக்கா செல்வதற்கு வீசா வழங்குவதற்காக, தெரு நாயைப் போல வெளியில் நிற்க வைத்திருப்பார்களே… அது போன்ற இடங்களில் மிகுந்த பெருமையுடனும், தன்னம்பிக்கையுடனும் வரிசையில் நிற்கத் தயங்க மாட்டார்கள். (அமெரிக்கன் தனதுநாட்டிற்கு வீசா வழங்குவதை ஏதோ நாய்க்கு எலும்புத்துண்டை வீசுவது போன்று நினைக்கிறான். அந்த எலும்புத் துண்டை எப்படி வீச வேண்டும் என்பது எல்லாம் அமெரிக்கன் எம்பசி அதிகாரிகளுக்கு நன்றாகத் தெரியும், தனி மனித நாகரீகத்தைப் பற்றி பக்கம் பக்கமாக உலகத்திற்கு பாடம் எடுக்கின்ற நாடு இந்த நாடுதான். இங்கு பொதுவாக டீ கடைகளில் கூட உட்காருவதற்கு 4 நாற்காலிகளைப் போட்டிருக்கிறார்கள். தங்கள் நாட்டுக்கு வீசா எடுக்க வருபவர்களை நாயைப்போல் நடத்தும் இவர்களை எப்படி… எந்த அடிப்படையில் இங்கு அனுமதிக்கிறார்கள் என்பது புரியவில்லை.)
தான் ஒரு பெண் என்கிற சிம்பதியைக் காட்டி, வரிசையில் தன்னை முன்னிறுத்திக் கொள்ள நினைக்கும் பெண்களும் உண்டு. 60 வயதான பெண்கள் கூட பொறுமையாக வரிசையில் நின்று தங்கள் வேலைகளை முடித்துச் செல்லும் பொழுது, ஒருசில இளம் பெண்கள் சற்றும் பொறுமையின்றி மற்றவர்களுடைய உணர்வுகளைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் வரிசையை புறக்கணித்து விட்டு தங்கள் காரியங்களை சாதிக்க நினைப்பதை கேவலமான செயல் என சற்றும் நினைப்பதில்லை. இவர்களிலும் சிலர் தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்ள குறுக்கு வழியை கடைபிடிப்பது உண்டு. இவர்களுக்கு யாரேனும் ஒரு அம்மாஞ்சி கிடைப்பது எளிது. இதுபோன்ற நிகழ்வை பொதுவாக வரிசையில் நின்று எலெக்ட்ரிக் ட்ரெய்ன் டிக்கெட் வாங்கும் இடங்களில் பார்க்கலாம். லேசாக சிரித்தபடி “சார் எனக்கு ஒரு டிக்கெட்” என்று கேட்டு விட்டால் போதும். தன் வாழ்க்கையில் முதலும் கடைசியுமாக சார் என்று குறிப்பிட்ட ஒரு பெண்ணுக்கு உதவி செய்யவில்லை என்றால் உயிர் வாழ்வதில் என்ன பயன் என்கிற உத்வேகத்துடன் அந்த அம்மாஞ்சி இளைஞனும் அக்கடமையை தன் சிரம்மேற்கொண்டு ஏற்றுக் கொள்வான். வரிசையில் ஏற்கெனவே எரிச்சலில் நின்றுகொண்டிருப்பவர்களின் வயிறு பற்றிக் கொண்டு எரியும். இவையெல்லாம் தங்களை முட்டாளாக்கும் செயல் என அவர்கள் நன்றாக உணர்ந்திருந்தாலும், ஒரு இளம் பெண்ணுடன் எதற்கு தேவையில்லாம் பொது இடத்தில் சண்டை பிடிக்க வேண்டும் என்கிற அடிப்படை நாகரிக உணர்வுடன் பொறுத்துக் கொண்டு கடந்து சென்று விடுவார்கள்.
எந்த வரிசை என்றாலும் பெண்கள் தங்களுக்கென தனி வரிசை போட்டுக் கொள்வது உண்டு. இந்த குடுமிப்பிடி சண்டையே வேண்டாம் என்றுதான் மின்சார ரயில் பயணச் சீட்டு வழங்கும் இடங்களில் “பெண்களுக்கு தனி வரிசை கிடையாது” என்கிற போர்டை பெரிதாக தொங்கவிட்டிருப்பார்கள். அதையும் பார்த்துக் கொண்டு சில பெண்கள் தனி வரிசை போடுவார்கள்.
ஆதிகாலங்களில் போர்க்குணம் மறந்து விடக்கூடாது என்பதற்காக மஞ்சுவிரட்டு, சிலம்பம், மல்லுகட்டுதல் உள்ளிட்ட போட்டிகளை நடத்தி தங்களது திறமைகளை மெருகேற்றிக் கொள்வார்கள். ஆனால், தற்காலத்தில் சாதாரண வாழ்க்கையை மேற்கொள்வதற்கே ஒரு வித போர்க்குணத்தை தக்க வைத்துக் கொள்ளக் வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற வீர விளையாட்டுகள் நிறைந்த மையமாக இன்று ரேஷன் கடைகளைக் காணலாம். ரேஷன் கடைகள் என்பது ஒரு வித மஞ்சுவிரட்டு மைதானம்போலவே காட்சியளிக்கும். அனைவரும் வரிசையில்நின்று பொருட்களை வாங்குவது போலத்தான் தெரியும். ஆனால் தூரத்தில் நின்று பார்த்தால் அது வரிசை இல்லை – அங்கு ஏதோ கலவரம் நடைபெற்று கொண்டிருக்கிறது போல என்று நினைக்கத் தோன்றும். இன்னும் சற்று தள்ளி நின்று பார்த்தால் அப்பகுதியே சற்று தூசி படர்ந்த, ஏதோ அசம்பாவித சம்பவம் நடைபெற்ற இடம் போல் காட்சியளிக்கும். ரேஷன் கடை அருகில் வீட்டில் வசிப்பவர்கள் அனைவரும் சத்தம் பொறுக்காமல் கதவுகளை மூடிக்கொண்டுதான் இருப்பார்கள். சில சமயங்களில் சிலபல வசவுச் சொற்கள் கூட வாய்த்தகராறு மூலம் ஏற்படுவதுண்டு. நடுத்தர மற்றும் ஏழை வர்க்கத்து பெண்கள் தங்களது குடும்பத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களை வாங்குவதற்கு படும் பிரயத்தனங்கள் சொல்லி மாளாது. அவர்களில் போர்க்குணம் இல்லாத எவரும் தனக்கான உணவுப் பொருட்களை வாங்கிச் சென்று விட முடியாது. தமிழ்நாட்டில் காலம் காலமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இது போன்ற வரிசையை முறைப்படுத்தும் எந்தவிதச் செயலும் இதுவரை திட்டமிடப்பட்டு அமல்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. இங்கே வரிசையில் நிற்பவர்கள் எல்லாம் விலங்குகள். அவர்கள் எக்கேடோ கெட்டு தங்களை உய்வித்துக் கொள்ளட்டும் என்பதுதான் வரிசைக்குக் காரணமானவர்களின் நோக்கமாக இருக்கிறது.
சென்னையை சுற்றி அத்தனை வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்தனை கம்பெனிகளும், தங்கள் நாட்டில் உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்ட பொருட்களையே இந்தியாவில் வந்து தயாரிக்கின்றன. அவர்கள் இங்கு பூமியின் அடியில் இருக்கும் தண்ணீரை சுத்தமாக உறிஞ்சி எடுத்து விடுகிறார்கள். கூடிய விரைவில் தமிழ்நாட்டை பாலைவனமாக ஆக்காமல் விட மாட்டோம் என்கிற ரீதியில் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்கின்றன லாப வெறிபிடித்த இந்த கம்பெனிகள். இந்நிலையில், வருடத்திற்கு 6 மாதங்களுக்கு சென்னையில் தண்ணீர் பஞ்சம் என்பது சர்வசாதாரணமாக இருக்கிறது. புவி அடி நீரை சுத்தமாக உறிஞ்சி எடுத்த பின்னர் மழை நீரை சேமிக்க வேண்டும் என்று சட்டம் போடுவதன் மூலம் மட்டும் எப்படி புவி அடி நீரை பாதுகாக்க முடியும். ஏதோ புளங்குவதற்கு தண்ணீர் கிடைத்தால் சரி என்கிற ரீதியில் கலங்களாகவும், மங்கலாகவும் ஆங்காங்கே ஏரிகளில் தேங்கி கிடக்கும் நிறம் மாறிய குளோரின் கலக்கப்பட்ட தண்ணீரை வேறு வழியில்லாமல் பொதுமக்கள் உபயோகப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள். பல சமயங்களில் சாக்கடை நீர் கலந்த தண்ணீரைத் தான் பொதுமக்களுக்கு அரசு விநியோகிக்கிறது. அதுவும், ஏழை குடிசை மக்களுக்குத் தான் இதுபோன்ற கலங்களான தண்ணீர் முறை மாறாமல் வருடந்தோறும் சில மாதங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. அவர்கள்தான் புலம்பிவிட்டு சென்று விடுவார்கள். மேலும் இதுபோன்ற ஏழை மக்களை வைத்து செய்தி வெளியிட்டு அரசியல் செய்யவும் முடியும். இதுபோன்ற சமயங்களில் கூட ஸ்டார் ஹோட்டல்களிலும், மேல் தட்டு மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் கலங்களற்ற நல்ல விதமான தண்ணீர் கிடைக்க அரசு ஏற்பாடு செய்து விடுகிறது.
இந்த தண்ணீர் பிரச்னையை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் அரசாங்கத்திற்கு தேவையாக இருக்கிறது. அதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் தண்ணீர் தட்டுப்பாடும், அவர்களுக்கு 50 சதவீதம் அளவுக்கு தண்ணீர் தேவையை நிறைவு செய்து புலம்பிய படியே வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் அரசாங்கத்திற்கு அவசியம் ஏற்படுகிறது.
இவர்களைப் போன்றவர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டிய பாரம்பரியம் இங்கு விதைக்கப்பட்டு விட்டதால், அவர்களுக்கு லாரியில் தண்ணீர் கொண்டு சென்று விநியோகிக்கும் முறை இங்கு நடைமுறையில் உள்ளது. ஊருக்குள் தண்ணீர் ஒழுகாத ஒரு தண்ணீர் வண்டி கூட கிடையாது. இவர்கள் ஒவ்வொரு தெருவாகச் சென்று தண்ணீர் விநியோகிக்கும் காட்சி உலகப் பிரசித்தி பெற்றது. இங்கு 4 குடத்தை வைத்துக் கொண்டு தங்களது குடும்பத்திற்குத் தேவையான தண்ணீரை பிடித்துக் கொண்டு வருவதை விட சந்திர மண்டலத்துக்குச்சென்று மண் எடுத்து வந்துவிடலாம். வரிசையில் நின்று தண்ணீர் லாரியில் தண்ணீர் பிடித்துக் கொண்டு செல்வது போல் கனவு வந்தால் கூட அது ஏதோ கெட்ட கனவு என்பது போல் தோன்றும். சினிமாவிலோ, கற்பனையான ஓவியத்திலோ பதிவுசெய்யப்படாத ஒரு காட்சி தண்ணீர் லாரியில் தண்ணீர் பிடிக்கும் காட்சி. இங்கே தண்ணீரும் இல்லை. இருக்கும் தண்ணீர் வளத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அக்கறையும் இல்லை. இருக்கும் தண்ணீரை பொறுமையாக பகிர்ந்துகொள்ளக் கூடிய குணமும் இல்லை. விலங்கினங்கள் உணவை பிய்த்துக் கொள்வது போல், உனக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு போ என்கிற காட்டுவாசித்தனமே இங்கு மிஞ்சியிருக்கிறது.
உலகில் தண்ணீருக்காக அடித்துக் கொள்ளும் ஒரு இனத்தை வாழ்வித்துக் கொண்டிருக்கும் அரசாங்கம் நமது அரசாங்கம் தான். இவர்கள் அடித்துக் கொள்ளும் வரைதான் தங்களது அரசியல் வாழ்வு நிலைக்கும் என்பது இங்குள்ளவர்கள் பாரம்பரியமாக கற்று வந்த அரசியல் சித்தாந்தமாகும். ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட வீராணம் ஏரி போன்ற ஒரு ஏரியைக் கூட தற்போதைய தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கிக் கொள்ள முடியாத நிலையில் தான் இவர்கள் இருக்கிறார்களாம்.
இதேபோல், புதுப்படங்கள்வெளியாகும் நாட்களில் சினிமா தியேட்டர்களில் வரிசை என்பதை யோசித்துக் கூட பார்க்க முடியாது. மொத்தமாக 200 பேர் ஒரு டிக்கெட்டுக்காக அடித்துக் கொள்வதைப் பார்த்தால் இது என்னவிதமான நாகரீக வளர்ச்சி என்றே புரியவில்லை. வெள்ள காலங்களில் ஹெலிகாப்டர்களிலிருந்து உணவுப் பொட்டலங்களைப் போடும் போது 2 நாட்கள் பசியிலும், பட்டினியிலும் வாடியவன் கூட அப்படி அடித்துக் கொண்டு ஓடி வந்து முட்டிக்கொள்ளமாட்டான். அவர்களைப் போன்றவர்களுக்கு கூட ஒரு நியாயமான காரணம் இருக்கிறது. தாங்கள் உயிர் பிழைத்திருப்பதற்காக, தங்களுக்கான உணவைத் தேடிக் கொள்வதற்காக அவர்கள் தங்களுக்கான உணவைத் தேடிக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால் சம்பந்தமே இல்லாமல் விழாக்காலங்களிலோ, புதிய திரைப்படங்கள் வெளியாகும் நாட்களிலோ பஞ்சத்தில் அடிபட்டவன் கூலுக்கு அலையும் மோசமான சூழ்நிலையைப்போல் டிக்கெட்டுகளுக்கு அடித்துக் கொள்வது என்பது சகிக்கவே முடியாத விஷயங்களுள் ஒன்று.
தமிழ்நாட்டில் சினிமா தியேட்டர்களுக்கென்று ஒருவித வரைமுறை வகுக்கப்பட்டு இருக்கிறது. இங்கே சினிமா காட்டுபவர்களுக்கு கட்டுக்கடங்காத வரிசையும், சண்டை சச்சரவுகளும், வெறித்தனமாக கோஷங்களும் தான் படத்தின் வெற்றிக்கான அறிகுறியாக கருதப்படுகிறது. திரைப்படங்கள் மூலம் லாபம் அடைபவர்களுக்கு பணம் ஒருபக்கம் நிறைவைத் தருகிறது என்றால் இந்த தறிகெட்ட கூட்டம் மற்றொரு வகையில் நிறைவைத் தருகிறது. அவர்களைப் பொறுத்தவரை நகரின் மையம் திரைப்படம் பார்க்க வந்தவர்களின் கூட்டத்தால் நிலைகுலைந்தது என்கிற வாசகம் மாலை நாளிதழ்களில் வந்தால் தான் மகிழ்ச்சி…மனநிறைவு… இங்கு விசாலமான சாலைகள் என்று ஒன்று இருப்பதே அதிசயம், அதிலும் அவற்றிற்கு சாலை ஓரங்கள் இருப்பது அதை விட அதிசயம், அப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் சாலை ஓரங்களில் கட் அவுட்டுகளையும், விளம்பர பதாகைகளையும் பதித்து நெரிசலை ஏற்படுத்துவதை சர்வசாதாரணமாக செய்துகொள்கிறார்கள். இதுபோன்ற நெரிசல்களால் நகருக்குள் லட்சக்கணக்கில் பயணிக்கும் வாகனங்கள் செல்லும் 100 அடி சாலைகள் கடைசியில் ஒற்றையடிப்பாதை போல சுருங்கி, வேகத்தடைகளுக்கு மத்தியில் செல்வது போல ஊர்ந்துசெல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள்.
இந்திய சினமா ரசிகர்களும் தியேட்டர்களில் அடிதடி சண்டைகளுக்கு மத்தியில் டிக்கெட் வாங்கி பார்த்தால் தான் தங்களுக்கு திருப்தி என்கிற நிலைமைக்கு வந்து விட்டனர். அவ்வாறு உடலை வருத்தி சினிமா பார்க்கவில்லை என்றால் சினிமா பார்த்த திருப்தியே தனக்கு கிடைக்காது என்பது போல் உணர ஆரம்பித்து விட்டார்கள். இவையெல்லாம் ஏதோ பாரம்பரியமாக மாறிவிட்டதைப் போல் தெரிகிறது. அமைதியாக இடித்துக்கொள்ளாமல் வரிசை என்கிற ஒரு விஷயம் இங்கு காணக்கிடைக்காமலே போய்விடும் போல.
இந்தியாவில் வரிசை என்றால் அது வெறும் வரிசை இல்லை. அது ஒரு நீண்ட சகிப்புத்தன்மைக்கான சத்திய சோதனை. ஜப்பானில் வரிசையை மீறுவதில்லை… அமெரிக்காவில் வரிசையை மதிக்கிறார்கள்… ஐரோப்பிய நாடுகளில் வரிசையை கடைபிடிக்கிறார்கள் என்று சொல்வதெல்லாம் அங்கு மட்டும் தான் சாத்தியம். அவர்கள் அனைவரும் இந்தியாவில் வந்து வரிசை என்றால் என்ன என்று பாடம் படித்துக் கொண்டு செல்ல வேண்டும். வரிசை என்றால் என்ன? அது எத்தகைய கொடுமையானது. அது எத்தனை விதமாக பொறுமையை சோதிக்கும்,அங்கு எத்தனை விதமான மனிதர்களை சந்திக்க வேண்டும், என்பதை பற்றியெல்லாம் இந்தியாவில் தான் பாடம் கற்றுக் கொள்ள முடியும். இங்கே 2 ஆயிரம் பேர் வரிசையில் நின்றாலும் ஒரு அலுவலரை வைத்து வேலை பார்த்துக் கொள்ளலாம் என்கிற நிலைமைதான் அரசாங்கத்திடமும், மற்ற அலுவலகங்களிலும் உள்ளன. இதுபோன்ற இடங்களில் அந்த ஒரு அலுவலர் ஒன் பாத்ரூம் போக வேண்டும் என்றால் கூட எழுந்து செல்ல முடியாது.
வரிசைகளை கையாளத் தெரியாத நாடுகளைப் பட்டியலிட்டால் இன்றும் என்றும், என்றென்றும் முதலிடத்தில் நிற்கக் கூடிய நாடு இந்தியாவாகத்தான் இருக்கும். சினிமா தியேட்டர்களில் ஆரம்பித்து, ரயில் டிக்கெட், பஸ் டிக்கெட், பூங்காக்கள் என எங்கு சென்றாலும் கும்பல், கும்பல், கும்பல் மட்டுமே, கண்ணுக்குத் தெரியும்.
வரிசையை கடைபிடிக்க வேண்டும் என்கிற சுயகட்டுப்பாடு மக்களுக்கும், வரிசையை கண்டிப்பாக்க வேண்டும் என்கிற சுயகடமை சம்பந்தப்பட்ட துறைசார்ந்தவர்களுக்கும் ஏற்படும் வரை இந்த அவல நிலை ஒரு கருப்புப் கரையாகவே நம்மீது படிந்திருக்கும்.

Series Navigationமருத்துவக் கட்டுரை – நீரிழிவு நோயும் இருதய பாதிப்பும்ஆனந்த பவன் நாடகம் வையவன் காட்சி-18
author

சூர்யா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *