கட்டிலேறுவதற்கு வரி-கல்வெட்டுக்கள் கூறும் சாட்சியம்

author
0 minutes, 2 seconds Read
This entry is part 8 of 22 in the series 28 டிசம்பர் 2014
வைகை அனிஷ்
பண்டைய காலத்தில் திருமணத்தின்போது ஸ்ரீதனமாக பொருள் கொடுக்கவேண்டும் என்றும் அவ்வாறு கொடுக்க இயலாதவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிகழ்ச்சிகளும் பல நடந்துள்ளன. அதே போல தன்னுடைய தங்கைக்கு ஸ்ரீதனம் கொடுக்க இயலாமல் வேறு ஒரு மணமகனை தேர்ந்தெடுத்து அந்த மணமகன் பிடிக்காமல் தங்கை வேறு ஒரு நபரிடம் தொடர்பு கொள்கிறாள். இதனால் அந்தக்குடும்பம் கொலையும் தற்கொலைக்கும் ஆளாகிறது. வரதட்சணை அதிகமாக உள்ளதால் திருமணம் முடியாமல் பல பெண்கள் முதிர்கண்ணிகளாகவும், திருமணம் முடிக்க முயலாமலும் போகிறது இதனால் காயல்பட்டினத்தில் வரதட்சணையை குறைக்கவேண்டும் என சட்டம் இயற்றி அதனை கல்வெட்டில் பொறித்துள்ளார்கள். இன்று வரை வரதட்சணையால் பல குடும்பங்கள் சீரழிந்தும், நீதிமன்றம், காவல்துறை என அலைவதையும் காண்கிறோம். கல்வெட்டுக்கள் சாட்சியாக உள்ள சில நிகழ்வுகள் இங்கு காண்போம்.
எல்லா சமயங்களும் ஆண், பெண் இடையேயான மகத்துவ உறவைத்தான் திருமணம் என்கிறது. திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் நிகழக்கூடிய அற்புதமான நிகழ்வாகும். உற்றார் உறவினர்களின் தேடுதல் மற்றும் தேர்ந்தெடுத்தல் மூலம் இணையாக்கவும் வாழ்க்கைத் துணையாக்கவும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்ற நிகழ்வின் நிறைவுதான் திருமணம். திருமணத்தில் சடங்குமுறைகள் பின்பற்றப்படுவதுண்டு.
~மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை~~
என்பது வள்ளுவர் வாக்கு. இல்லற மாண்புடைய நற்குணமுடையவள்தான் கணவனுக்கு ஏற்புடையவள்.
பெண் பார்த்தல் மற்றும் மாப்பிள்ளை பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்ற பின்பு நிச்சயதார்த்தம் நடைபெறும். நிச்சயதார்த்தின்போது பல்வேறு சடங்குகள் அரங்கேறும். அதன் பின்னர் திருமணம் நடைபெறும். திருமணத்தின்போது பெண்ணையும் கொடுத்து பொண்ணையும், பொருளையும் கொடுக்கும் வழக்கம் பரவலாக அனைத்து சமயங்களிலும் உள்ளது. ஒரு சில இனத்தில் வரதட்சணை வாங்குவது கிடையாது.  அதே வேளையில் வளைகுடா நாடுகளில் மணமகன்தான் வரதட்சணை கொடுத்து மணமகளை தேர்ந்தெடுக்கவேண்டும். அங்கே பெண் பிள்ளை பெற்றவர்கள் அதிர்ஷ்ட காற்றுதான். அண்டை மாநிலமான கேரளாவில் திருமணத்தின்போது வரதட்சணையாக நகை மற்றும் பணம் மட்டும் கொடுக்கப்படுகிறது. பாய் மற்றும் கட்டில் தருவதில்லை. இதற்கு மலையாளிகள் கூறும் கூற்று. மாப்பிள்ளை படுக்கை பாய் கூட வாங்குவதற்கு தகுதியற்றவன் என தீர்மானம் செய்து பெண்கொடுக்க மாட்டார்கள். கரூர்மாவட்டம்  அருகே உள்ள பள்ளபட்டியில் பெண்ணை திருமணம் முடித்து பெண்ணுக்கு பிள்ளை பிறப்பு வரை என்ன செலவோ அந்தச்செலவு அனைத்தையும் திருமணத்தன்று ஒரு லிஸ்ட் போட்டு வாங்கி விடுகிறார்கள். இவ்வாறு வரதட்சணை பல கோரமுகங்களை காட்டி பல பெண்களை சீரழித்து வருகிறது. அதன் சம்பந்தமாக பல கல்வெட்டுக்கள் பண்டைய காலம் முதல் இருந்ததை இனி காண்போம்.
கட்டிலேறுதலுக்கும் வரியும் கல்வெட்டுப்பார்வையும்
கோயமுத்தூர் பகுதியில் திருமணத்தின்போது மண மகளைத் திருமண மேடைக்கு கூட்டிவரும் சடங்கைக் கட்டிலேற்றிக் கொண்டுவருதல் என குறிப்பிடுகின்றனர். பண்டைய காலத்தில் தமிழகத்தில் திருமணத்திற்கு வரிவிதிக்கப்பட்டது என்பது ~கண்ணாலக் காணம்~ என்ற கல்வெட்டுச் சொல்லாட்சியின் மூலம் அறியப்படுகிறது. திருமணம் முடிந்த பின்பு மனைவியை தொடுவதற்கு முன்பு வரி கட்டவேண்டும் என்றும் அவ்வாறு வரி கொடுக்க இயலாதவர்கள் தற்கொலை செய்த நிகழ்ச்சிகளும் கல்வெட்டு சாட்சியம் கூறிக்கொண்டிருக்கிறது. புதுச்சேரி மாநிலத்தில் கிடைத்த கல்வெட்டு ஒன்று இவ்வாறு விவரிக்கிறது.
இராஷ்டிரகூட மன்னன் கன்னரதேவனின் ஆட்சிக்காலத்தில் அதாவது கி.பி. 961 ஆம் ஆண்டு பாகூரில் வசித்த மன்றாடிகள் சமூகத்தினர் அவ்வ+ர் மூலட்டானத்துப் பெருமான் என்னும் சிவன் கோயிலுக்கு ஒரு தர்மம் செய்வதாக உறுதியளித்துள்ளனர்.
~~நாங்கள் வைத்த தன்மம் கட்டிலேறப் போம்போது
ஒரு ஆடு குடுத்துக் கட்டி லேறு வோமாகவும்~~
 என்று கூறப்பட்டுள்ளது. அதன் பின்னர் அடுத்த வாக்கியத்தில்
~~புறநாட்டினின்று வந்து இந்நாட்டில் கட்டிலேறும்
மன்றாடி வசம் ஒரு ஆடு குடுப்பதாகவும்~~
எனவும் விவரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூடாது இருந்தால் இவ்வ+ராளுங்கணப்பெருமக்களும், தேவராடியாரும்  இரண்டு ஆடுகள் பிடித்துக் கொள்ளலாம் என்றும் இச்செயல்பாட்டை இந்நாட்டில் மதகு செய்கின்ற மதகர், சந்திர ச+ரியர் உள்ளவரை பாதுகாப்பார் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதே போல கரூரில் உள்ள ஜலசயனப் பெருமாள் கோயிலில் காணப்படும் முதலாம் குலோத்துங்கனின் 43 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஒன்று கட்டிலேறுதலை விவரிக்கிறது. இப்பகுதியில் உள்ள மன்றாடிகள் தங்கள் மகனுக்கோ அல்லது மகளுக்கோ திருமணத்தின்போது பெருமாளுக்கு ஒரு ஆடு கொடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். எங்கள் கல்யாணத்து ஒரு ஆண் கட்டிலேறுமிடத்தும் ஒரு பெண் வாட்கைப்படுமிடத்தும் ஆடு கொடுப்பதாக இம்மன்றாடிகள் இசைந்துள்ளனர்.
கட்டிலேறத்தடையும், தற்கொலையும்
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை பகுதியில் திருமலைக்கடம்பர் மலை உள்ளது. அம்மலை தற்பொழுது தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த மலையின் பாறையில் ஒரு கல்வெட்டு அழகிய சிற்ப வேலைப்பாடுடன் கூடியதாக காணப்படுகிறது. அதனை அடுத்து சென்றால் திருமலைக்கடம்பர் கோயில் உள்ளது. அந்தக்கோயிலினுள் சென்றால் ஒரு லிங்கம் பாறையில் அழகிய முறையில் செதுக்கப்பட்டுள்ளது. அந்த லிங்கத்தின் அருகாமையில்  வடக்கு சுவராக அமைந்துள்ள ஒரு பாறையில் உள்ள கல்வெட்டு ஒன்று கட்டிலேறத்தடை விதித்ததால் தற்கொலை செய்து கொண்ட நிகழ்ச்சியை படம் பிடித்துக் காட்டுகிறது. நார்த்தமலை என்ற ஊரின் பழைய பெயர் தெலிங்ககுலகாலபுரம் என்பதாகும்.
இரண்டாம் ராஜேந்திர சோழனின் நான்காம் ஆட்சியாண்டைச்சேர்ந்தது அதனுடைய காலம் (கி.பி.1055-56) வணிகக் குழுவினரான திசையாயிரத்து ஐந்நூற்றுவர் பற்றிய செய்தியை கொண்டுள்ளது. இக்கல்வெட்டு உள்ள பாறை கட்டுமானத்திற்குள் சென்றுவிட்டபடியால் வரிகளின் இடதுபுறம் முழுமையாக படிக்க இயலாத நிலையில் உள்ளது. அக்கல்வெட்டில் அருமொழி என்னும் வியாபாரி ஒருவன் கட்டிலேற ஒரு பெண்ணை நிச்சயம் செய்து கொள்கிறான். ஆனால் ஏதோ காரணத்தால் தில்லைக்கூத்தன் என்பவனும் மற்றும்சிலரும் அதற்கு மறுப்பு தெரிவித்து வேறு ஒரு பெண்ணை ராமன் என்பவரின் மகளைத் திருமணம் செய்ய வற்புறுத்துகின்றனர். இதனை அறிந்து முதலில் முடிவு செய்யப்பட்ட செட்டிச்சி நஞ்சு குடித்து சாகிறாள். இந்த அவலத்தினால் நேர்ந்த பாவத்திற்கு வணிகக் குழுவினர் சங்குபரமேஸ்வரி அம்மைக்கு கோயில் எடுப்பித்து நந்தாவிளக்கு எரிக்கவும் ஏற்பாடு செய்துள்ளனர். இன்றும் ஆண்டுக்கு ஒருமுறை ஒவ்வொரு வீட்டிலும் நேர்த்திக்கடனாக ஆடு வளர்த்து அங்குள்ள ப+சாரிக்கு வழங்கிவருகிறார்கள்.
கைக்கூலி சீதனம் குறைந்து ஒப்பந்தம்
திருச்செந்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள காயல்பட்டினம் கொடிமரப் பள்ளியில் நடப்பட்டுள்ள பலகைக்கல்லில் அந்த ஒப்பந்தம் பொறிக்கப்பட்டுள்ளது.
ஹிஜ்ரி 1271 என்று அரபி மொழியில் ஆண்டை குறிப்பிட்டுள்ளது. பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாருக்கு கொடுக்கும் கைக்கூலி சீதனம் அதிகமாக உயர்ந்ததால் பலர் கைக்கூலி சீதனம் கொடுக்கமுடியவில்லை. அதனால் பல பெண்கள் திருமணம் ஆகாமலேயே இருந்துள்ளனர். அதனால் காயல்பட்டின இஸ்லாமியர் அனைவரும் கூடி கைக்கூலி சீதனம், பெண்ணுக்கு சீதன உடைமை இவ்வளவு தான் கொடுக்கவேண்டும் என்று முடிவெடுத்து எழுதிய ஒப்பந்தம். இதை மீறியவர்கள் வீட்டில் நடைபெறும் நன்மை தீமைக்கு யாரும் போகக்கூடாது என்றும் தீர்மானித்துள்ளனர்.
கல்வெட்டு
1.சிகரத்து 1271 வருஷம் (935)
2.கார்த்திகை மாதம் 5 தேதி காயற்பட்டணத்திலருக்கும முஷ்
3.லிமாகிய நம்மவர் சகலத்தினரும் எழுதிக் கொடு
4.ண்ட சம்மத பத்திரக் கறார் நாமா. என்னவென்றால்
5.நம்முள் இதுமுன் மாப்பிள்ளைமார்களுக்கு கை
6.க்கூலி சீதனம் 150-200-250-300
7.350-400 எல்லை மட்டில் வாங்கிக் கலியாணம்
8.முடிக்கிறபடியினாலே யிந்தப்படி பேசிக் குடுத்த
எனத்துவங்கி 47 வர் வரியில்
47.இந்தப்படிக்கு நடக்காத ………..ச+லு
48.க்கு மாறுபட்டு நவியு…..பெறாமல் போவாராகவும்
49.ஆமின்… அப்படிச் சறுக்குப் போனவன் வீட்டு
50.நன்மை தின்மைக்குப் போகாமலிப்போமாகவும்
51.யெங்கள் மனராசியில் முகாவக்காறரைக் கொண்டே யெ
52.ழுதிக் கொள்கிறது
என முடிவடைகிறது.
குடும்பமே கொலை-தற்கொலை
தேனி மாவட்டம் அனுமந்தன் பட்டியில் தன்னுடைய தங்கைக்கு அண்ணண்மார்கள் மாப்பிள்ளை தேடுகிறார்கள். மாப்பிள்ளை அதிகமான வரதட்சணை கேட்கிறார். அதனால்  வேறு இடத்தில் மாப்பிள்ளை தேடுகிறார்கள். ஆனால் தன்னுடைய தங்கை தனக்கு விரும்பிய காதலனோடு அடிக்கடி சந்தித்து வருகிறாள். தங்கை காதலித்த ஆடவனுக்கு பொருள் கொடுக்கக்கூடிய நிலையில் அண்ணன்கள் இல்லை. இதனால் வேறு இடத்தில் பெண்தேடுகிறார்கள்.  இதனைக்கண்ட அண்ணனும் தம்பியும் இரண்டு பேரும் சேர்ந்து தங்கையை வெட்டி தங்களையும் மாய்த்துக்கொள்கிறார்கள். இதற்காக அப்பகுதி மக்கள் அண்ணன்-தம்பிக்கு ஒரு கல்வெட்டும். தங்கைக்கு ஒரு கல்வெட்டையும் எடுக்கிறார்கள்.ஒரு தோப்பின் நடுவில் கல்லில் செதுக்கப்பட்ட ~அண்ணன்மார்கள்~ கற்பலகை ஒன்று உள்ளது. இது 3 முதல் 4 அடி உயரத்தில் இரண்டு ஆயுதம் தரித்த மனிதர்கள் உருவம் பொறித்ததாக இருக்கிறது. இதற்கு எதிரில் மற்றொரு கற்பலகை ஒன்றும் இருக்கிறது. அதில் சில தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு அவை அழிந்த நிலையில் உள்ளது. இன்றும் அப்பகுதி மக்கள் அப்பகுதியில் விளைகின்ற நெல் நாற்றுக்களை அண்ணன்மார்கள் சிலைக்கும் தங்கை சிலைக்கும் வைத்துவிட்டு விற்பனையை துவக்குகின்றனர்.
இவ்வாறு பொன்; கொடுத்து பெண் பார்க்கும் நிகழ்வும், பெண் கொடுத்து பொன் வாங்கும் நிகழ்வு பண்டைய காலத்திலிருந்து தொட்டுத்தொடரும் பாரம்பரியமாக உள்ளது. இதனால் பல பெண்கள் வாழாவெட்டியாகவும், முதிர்கண்ணிகளாகவும் வாழ்ந்து வருகின்றனர் என்பதற்கு கல்வெட்டுக்களே சாட்சி. எனவே வரதட்சணை என்னும் நச்சுவேரை அப்புறப்படுத்த அனைத்து சமூகத்தினரும் பாடுபடவேண்டும் அதே வேளையில் கடுமையான சட்டம் மூலம் இதனை தடுத்து நிறுத்த முடியும்.
வைகை அனிஷ்
3.பள்ளிவாசல் தெரு
தேவதானப்பட்டி-625 602
தேனி மாவட்டம்
செல்:9715-795795
Series Navigationஇந்து மாக்கடல் பூகம்பத்தில் எமனாய் எழுந்த பூத அலைமதில் அடிப்புகள்!புத்தாண்டு வரவு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *