இலக்கிய வட்ட உரைகள்:8
துறவியின் புதிய கீதை
எஸ். வைதேஹி
##
(27 ஆகஸ்ட், 2006 அன்று ஹாங்காங் இலக்கிய வட்டம் “புதினங்கள்” எனும் பொருளில் நடத்திய கூட்டத்தில் பேசியது)
மின்சாரப் பேச்சாளர் ராபின் ஷர்மா, அவர் எழுதிய The Monk Who Sold His Ferrari என்கிற புத்தகத்தின் வாயிலாக/மூலமாக/வழியாக தன்னுடைய ஆன்மீகத் திறமையை நிரூபிக்க முயன்றுள்ளார்.
எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற இன்றையச் சூழலில், இவரது இந்த புத்தகம் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மேற்கத்திய பாணியில் வாழும் மக்களுக்கான புத்தகம் இது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை!
புத்தகத்தைப் பற்றி குறிப்பிடும் முன்பு புத்தகம் எழுதிய ராபின் ஷர்மாவை பற்றிச் சொல்லியாக வேண்டும். பிறப்பால் இந்தியரான இவர், கனடாவிலும்மொரிஷிஸிலும் குடியுரிமை பெற்றுள்ளவர். தற்சமயம் வட அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார். ‘முதன்மை வளர்ச்சி’ – Leadership Development என்கிற அமைப்பை நடத்தி வரும் இவர் மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காகச் சூறாவளிப் பயணம் மேற்கொண்டு கூட்டங்கள் நடத்தி வருகிறார்.
இன்று, நான் இவர் எழுதிய The Monk Who Sold His Ferrari என்கிற புத்தகத்தைப் பற்றிய எனது கருத்துக்களைச் சொல்கிறேன்.
முதலில் கதை. ஜுலியன் மான்டேல் (Julian Mantle) என்கிற மிகப் பிரபலமான வழக்குரைஞர், ஒரு பெரிய வழக்கின் நடுவில் மாரடைப்பு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் படுகிறார். அவர் உடல் செயலிழந்து போகும் நேரத்தில் வாழ்க்கையைப் பற்றிய கேள்விகளும் சந்தேகங்களும் அவர் முன் வந்து விழுகின்றன.
மிகப் பெரிய செல்வந்தரான இந்த வழக்குரைஞருக்கு கணக்கிடமுடியாத பணம், கனவில் கூட அமையாத பெரிய வீடு, அதன் முகப்பையே அடைத்து விடக் கூடிய அளவில் நிற்கும் சிவப்பு நிற ‘Ferrari’ கார்.. ..என்று ஏராளமான சொத்துகள் உண்டு.
மாரடைப்பு அவருடைய வாழ்க்கையில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வருகிறது. தன்னுடைய சொத்தையெல்லாம் விற்கிறார். பழம் பெருமை வாய்ந்த இமாலய மலையை நோக்கிப் பயணப் படுகிறார். யோகிகளையும் ஞானிகளையும் சந்திக்கிறார். தெய்வீக சுகமளிக்கும் இந்த பயணத்தில், உடல், அறிவு, மற்றும் ஆன்மாவைச் சுத்தப் படுத்தி மேம்படுத்தும் பலனையும் சக்தியையும் அறிந்து கொள்கிறார். வாழ்க்கையை ஆதாரத்துடனும் அர்த்தத்துடனும் அமைதியுடனும் நடைமுறையில் வாழும் வழியை கற்றுக் கொள்கிறார்.
தான் கற்றுக்கொண்டு வந்ததை தன்னுடன் வேலை பார்த்த ஜான் என்பவரிடம் பகிர்ந்து கொள்கிறார். கதை இவர்கள் இருவருக்குமான உரையாடல்களாக அமைகிறது. ஜுலியன் தன்னுடைய ஆன்மீக அனுபவத்தை ஜானிடம் பகிர்ந்து கொள்கிறார். அந்த ஆன்மீக அனுபவத்தை பற்றிக் கொள்ளும்படி அறிவுறுத்துகிறார். எல்லாவற்றையும் துறந்து விடக்கூடிய வழிகளை எடுத்துரைக்கிறார். இதையெல்லாம் அவர் ஒரு பிரபலமான வழக்குரைஞர் என்கிற இடத்தில் இருந்து சொல்லவில்லை. தன்னுடைய ஆன்மீப் பயணம் முடிந்து திரும்பி வந்த ஒரு ‘துறவி’யாகத் தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.
கதை முழுக்க ஜுலியனின் பயணத்தைப் பற்றிய விவரிப்பாக அமைந்துள்ளது. மோன நிலையை அடைய நாவலாசிரியர் பெரிதும் ‘ஜென்’ (Zen) குட்டிக்கதைகளையும் பகவத் கீதையையும் நம்பி உள்ளார்.
திருக்குறள், அத்திச்சூடி, பாரதியாரின் கவிதைகள் என்று இளவயதிலேயே நிறைய போதனைகளைக் கற்றுக் கொள்ளும் தமிழர்களாகிய நமக்கு இந்த புத்தகம் பெரிய விளைவுகளை ஏற்படுத்தாது என்று எனக்கு தோன்றுகிறது.
இந்த புத்தகம் சுய-மேம்பாட்டுக்கான ஒன்று என்று சொல்லப் படுகிறது அல்லது விளம்பரப் படுத்தப்படுகிறது. இந்தப் புத்தகத்தில் நாவலாசிரியர் சொல்ல வரும் சாராம்சம்:
“நாம் எல்லோரும் ஒரு சிறப்பான காரணத்திற்காக இப்புவியில் வாழ்கிறோம். முடிந்துபோன பழைமையான விஷயங்களில் மனதைச் சுழல விடும் கைதியாய் இருப்பதை நிறுத்தி, எதிர்காலத்தைக் கட்டும் ஒரு கட்டடக்கலை நிபுணராக இருப்பதே நல்லது”.
அழகாய் சொல்லியிருக்கலாம்! ஆனால் பக்கத்துக்கு ஒரு குட்டிக் கதையச் சொல்லிப் புதிர் போடுபவரைப் போல் சொல்லியிருக்கிறார்.
என்னதான் இருவருக்கும் இடையில் நடக்கும் உரையாடல் போல அமைந்தாலும், எதற்கெடுத்தாலும் ஜான், “அப்படியா?”, “நீ சொல்வது நம்பக்கூடியதாக இல்லை”, “நிஜமாகவா?” என்றெல்லாம், ஜிலியனைப் பார்த்துக் கேட்பது நம்பக்கூடியதாக இல்லை; அது நகைப்புக்குரியதாகவும் இருக்கிறது.
முதலில் இருந்து ஜானின் பார்வையில் இருந்து கதையை நகர்த்திக் கொண்டு வரும் கதாசிரியர், ஜுலியன் மான்டேல் துறவியாகத் திரும்பி வந்தவுடன், ஜானை ஒரு வானொலி நாடகக் கதாபாத்திரம் போல் சாதாரணமாக்கி விடுகிறார்.
அதே போல், பழைய விஷயங்களைப் பற்றி மட்டுமே யோசிக்காமல், அந்த பழைய எண்ணங்களிலே மட்டுமே உழன்று கொண்டிருக்காமல், புதிய எதிர்காலத்தப் பற்றி யோசி என்று ஞானம் புகட்டும் துறவி, பல வருடங்களுக்கு முன் விபத்து ஒன்றில் பலியான தன் மகளை நினைத்து அழுது, அந்த ரகசியத்தையும் ஜானிடம் பகிர்ந்துகொள்கிறார். எல்லாவற்றையும் துறந்து ஞானியானவருக்கு ஏன் கண்ணீர்? எதற்குச் சொந்த கதை? நடைமுறையில் வாழும் வழிகளைத் தன் ஆன்மீக பயணத்தின் மூலம் கற்றுக் கொண்ட ஒரு துறவிக்கு ஏன் ரகசியங்கள்? – இப்படிப்பட்ட கேள்விகள் எல்லாம் இந்த புத்தகத்தை படித்து முடிக்கும் போது எழாமல் இல்லை!
“தவறுகள் என்று ஒன்றும் இல்லை பாடங்கள் தான் எல்லாம்.”
“நீ என்ன கேட்கிறாயோ, அதை வாழ்க்கை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது- இப்படிப்பட்ட வாழ்க்கையில், பெரிய சந்தோஷம் என்று நினைத்துக் கொண்டு ஓடுவதை நிறுத்தி விட்டு, சிறிய விஷயங்களை ரசிக்க கற்றுக்கொள்ளுங்கள்”- இப்படிப்பட்ட ‘புதிய கீதை’ கருத்துக்கள், இயந்திரத்தனமாக வாழும் வாசகர்களுக்கு ஒரு வரப்பிரசாதந்தான்.
பணத்தையும், சொத்தையும் ஒரு பொருட்டாக மதிக்காதீர்கள் என்று சொல்லும் ராபின் ஷர்மாவை ‘ஷர்மானந்தா’ என்று அழைப்பதில் தவறு ஒன்றும் இல்லை தான்!
பல மைல்கள் கடந்து, ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு, வாழ்வியலை கற்றுக்கொண்ட துறவி, மிகப் பிரபலமான Ferrari-யை விட்டுவிடவில்லை! விற்றுவிடுகிறார்!
Chicken Soup for the Soul – போன்ற ஆன்மீகத் தேடல் வரிசையில் வெளிவந்திருக்கும் பரபரப்பான இப்புத்தகம் ராபின் ஷர்மாவை புகழின் உச்சிக்கு கொண்டு செல்லப் போகிறது என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை!
“What is popular is not always right; What is right is not always popular”-என்று கூறியஆல்பர்ட் ஐன்ஸ்டினின் வரிகள்தான் இப்புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது எனக்கு நினைவுக்கு வந்தது.
வாய்ப்பளித்த திரு. இராமனாதனுக்கும் இலக்கிய வட்ட நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பெரியவர் யூனூஸ் பாய் அவர்களுக்கு வணக்கத்தைத்
தெரிவித்துக் கொள்கிறேன்!
vaidehi.sridharan@gmail.com
***
27 ஆகஸ்ட், 2006 அன்று ஹாங்காங் இலக்கிய வட்டம் “புதினங்கள்” எனும் பொருளில் நடத்திய கூட்டத்தில் பேசியது.
தொகுப்பு: மு இராமனாதன், தொடர்புக்கு: Mu.Ramanathan@gmail.com
- கர் வாபஸி – வீடு திரும்புவோரை வாழ்த்தி வரவேற்போம்.
- தொடுவானம் 49. உள்ளத்தில் உல்லாசம்.
- அம்பு பட்ட மான்
- கலவரக் கறைகள்
- பெண்களுக்கு அரசியல் அவசியம் “ திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2014 ”
- வேழம்
- நீரிழிவு நோயும் நரம்புகள் பாதுகாப்பும்
- சிங்கப்பூர் ஜெயந்தி சங்கரின் படைப்புலகம்: கோவையில் இலக்கியச்சந்திப்பு கூட்டம்
- துணிந்து தோற்கலாம் வா
- எஸ் ராமகிருஷ்ணனின் சஞ்சாரம்- உயிர்மை நாவல் வெளியீட்டு விழா
- ‘அந்த இரு கண்கள்’
- ஆனந்தபவன் – 20 நாடகம் காட்சி-20
- சுற்றாடல் முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு நிகழ்வு
- கண்ணாடியில் தெரிவது யார் முகம்?
- ஜல்லிக்கட்டின் சோக வரலாறு
- பிரசிடண்டுக்கும் வால்டருக்குமிடையிலான உரையாடல் அல்லது ஏகாதிபத்தியவாதியின் மக்கள் மீதான பற்று
- ஆத்ம கீதங்கள் – 12 நேசித்தேன் ஒருமுறை .. ! (தொடர்ச்சி)
- காலச்சுவடு வெளியீடுகள்
- இலக்கிய வட்ட உரைகள்:8 துறவியின் புதிய கீதை எஸ். வைதேஹி
- நூலறுந்த சுதந்திரம்
- சைனாவின் புது வேகப் பெருக்கிச் சோதனை அணு உலை முழுத்திறனில் இயங்குகிறது
- பீகே – திரைப்பட விமர்சனம்
- Muylla Nasrudin Episodes by jothirlatha Girija
- மீண்டும் இமையத்துடன் ஒரு சந்திப்பு
- பாண்டித்துரை கவிதைகள்
- தொடு நல் வாடை
- “2015” வெறும் நம்பர் அல்ல.
- ரவா தோசா கதா
- தினம் என் பயணங்கள் – 40 புதிய உறவைத் தேடி .. !
- இளஞ்சிவப்பின் விளைவுகள்
- கோவில் பயணக் குறிப்புகள். இது ஆத்மார்த்தமான அனுபவ கோர்வை.
- மழை மியூசியம் பிரதாப ருத்ரனி’ன் கவிதைத் தொகுப்பு குறித்து சில எண்ணப்பதிவுகள்_
- சாவடி காட்சி 22 -23-24-25