என்னை
வரைய கோடுகள் தேடினேன்.
காலம் வழிந்த கீற்றுச்சாரல்கள்
என் உள்ளே
உடைத்துப்பெருகியது
ஆயிரம் சுநாமி.
வயது முறுக்குகளில்
வண்ண ரங்கோலிகள்.
வாழ்க்கை திருக்குகளில்
நெற்றிச்சுருக்கங்கள்.
ஒரு ஆலமரத்து அடியில்
ஒருவனிடம்
உள்ளங்கை நீட்டி
வரி படிக்கச்சொன்னேன்.
சுக்கிர மேடும் வக்கிர மேடும்
தெரிவதாய் சொன்னான்.
ஆயுள் ரேகையில் ஆழ்ந்து இறங்கினான்.
என்ன சொல்லப்போகிறான்?
காத்திருக்கிறேன் கரையில்.
கடிகாரத்தின் முள்ளில்
கட்டித்தொங்கவிட்டிருக்கும்
அந்த தூண்டில் முள்
என்றைக்கு தைக்கும்
என் இதயத்தை
தெரியவில்லை.
அன்று
ஒரு பட்டு உடுத்திய நிழலாய்
வெள்ளையும் சிகப்புமாய்
பட்டைகள் தீட்டிய
அந்த கோவில் சுவர் அருகில்
பளீரென்று
அவள்
சிரித்துவிட்டுப்போனாள்.
அந்த
நிழலுக்குள்ளும் எத்தனை வர்ணங்கள்?
அந்த அர்த்தம் புரியும் வரை
இந்த ரேகைகள்
என்றும் இனிக்கும் ஆரண்ய காண்டம்.
ஆயுள் கடலும்
அலையடித்துக்கொண்டிருக்கட்டும்.
கவலை இல்லை.
==============================