தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

14 ஜூலை 2019

நினைவுகளைக் கூட்டுவது

கு.அழகர்சாமி

Spread the love

 

 

காலம் தன்னிடம் மண்டியிட்டு அகாலமாய் இறுகியது போல் முகம் கொண்டு கைகளில் குச்சியில் கட்டிய துடைப்பத்தை ஏந்தி, அணி வகுத்து நிற்கும் மரங்களிடம் முன் பின் சொல்லாமல் உதிரும் சருகு மேல் சருகு சேர்ந்த சருகுக் குவியலின் இரகசியத்தைக் கலைத்துப் பார்த்து விட்டு மறுபடியும் குவித்து வைப்பது போல் சருகுகளைக் கூட்டிச் சேர்க்கிறானே முதியவன் அவனைப் பார்.

 

தன் முகச் சுருக்கங்களில் காலம் தன் மடிப்புக்களைச் சேர்க்க, விழிகளின் தீட்சண்யத்தில் சூரிய ரேகைகளைச் சுருக்கி , சருகுகளைச் சுடாமல் கூட்டிச் சேர்க்கும் விதத்தில், வீழும் ஒவ்வொரு சருகின் கதையையும் காற்றெழுதி நிலம் சேர்க்கும் முன்னரே கவனமாய் மரங்கள் மொழிவதை மரங்களின் மொழியில் புரிந்து கொண்டதை மெளனத்தில் சருகுகளைக் கூட்டிச் சேர்க்கிறானே முதியவன் அவனைப் பார்.

 

காற்று வீசினாலென்ன வீசாவிட்டாலென்ன என்று தன் காலம் தெரிந்து, விட்டுப் போகத் தயாராயிருக்கும் சருகுகள் விழும் போதும் எங்கு போய் எப்படி விழுந்தாலென்ன என்று பற்றற்று நிலம் பரவிச் சேர்வதெல்லாம் பழைய நினைவுகளை இரசம் போன தன் கண்ணாடி மனத்தில் தூசி சேர்ப்பதாய்ச் சருகுகளைச் கூட்டிச் சேர்க்கும் போது தன் பழைய நினைவுகளையும் தனிமையில் கூட்டிச் சேர்க்கிறானே முதியவன் அவனைப் பார்.

 

தினம் தினம் கூட்டிச் சேர்த்த சருகுகளைக் கடைசியில் கலங்காமல் புகையினும் தீ வைத்து கடமை செய்யும் அவனிடம் கூட்டிச் சேர்த்த அவனின் நினைவுகளும் தீப்பற்றி சாம்பலாகினவா என்பது தெரிய முதியவன் அவனிடம் கேட்டுப் பார்.

 

சாகாது தினம் தினம் சாகும் இரகசியம் சொன்னாலும் சொல்வான்.

கு.அழகர்சாமி

Series Navigationஉதிராதபூக்கள் – அத்தியாயம் -3ஹாங்காங் தமிழ் மலரின் பிப்ரவரி 2015

Leave a Comment

Archives