சுப்ரபாரதிமணியனின் “ புத்து மண் “ நாவல்

author
0 minutes, 1 second Read
This entry is part 15 of 15 in the series 1 மார்ச் 2015

மணியன் – பகாசுரர்களின் சனியன்

——————————————————————————————–

“அரசாங்க லோன் மூவாயிரம். அதற்கு செய்த செலவு மூவாயிரத்து அய்நூறு. இப்போது அரசாங்கம் எனக்குக் கடன்காரன்” ஆக, பின் கேள்விகள் ஏதுமின்றி மக்களுக்கு நலம்பல தந்துகொண்டிருந்த இயற்கையை இவன்பாட்டுக்கு கண்மண் தெரியாமல் அழித்துவிட்டு, அதனால் வந்துவிட்ட பெரும்பாதிப்பிலிருந்து விடுபட குறுக்கு வழியில் விடை தேடும் பணிக்கு பன்னாட்டுப் பெரும் நிதி ஒதுக்கி, தற்போது இயற்கையிடம் தீர்க்கமுடியாக் கடன்பட்டுக் கிடக்கின்றான்.

படைப்பாளியின் ஏக்கம் பரந்துபட்டது. விரிந்துகொண்டிருக்கின்ற சுற்றுச்சூழல் சீர்கேட்டின் முடிவற்ற தன்மை, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை ஈவு இரக்கமின்றி ரம்பமாய் குறுக்குவெட்டில் சர் சர் என வெட்டுகின்ற அடாவடி தொழிற்சாலைகளின் மூர்க்கம், ஆத்திக மூட நம்பிக்கைகள், அரசு, அதிகாரிகளின் அத்துமீறல், அடாவடி, விட்டேத்தி, கையறு என்ற பன்முக நிலைகள், அரசியல் கட்சிகளின் கொள்கைகளை குழிதோண்டிப் புதைக்கின்ற செயல், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் விரும்பத்தகாத நிலைகள், இன்னபிற இழிசெயல்கள் போன்றவற்றின்பால் தாக்குண்டு தாளாது, இந்த இனிய தேசமானது வெளியேற்றுகின்ற ஈன சத்தம் அத்தகைய படைப்பாளியான சுப்ரபாரதிமணியின் காதுகளில் ஊடுறுவியதை அரியதொரு எழுத்தாக்கி, தனக்கே உரியதான நடையில், புதிய பாணியில் சுட்டிக்காட்டி இடித்துரைத்திருக்கின்றார் இந்த “புத்துமண்” என்ற அழகிய சிறு நாவல் வாயிலாக.

மலை வளம் எத்தனை அரிதானது, எத்தனை அத்தியாவசியமானது என்பது தெரிந்தும் அரசு இயந்திரங்கள் அற்ப பணம் பெறும் பொருட்டு அதனைச் சூரையாட பகாசுர நிறுவனங்களுக்கு காட்டிக்கொடுத்துக் கொண்டிருப்பது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. எதிர்ப்பவர்களின் நிலை கேள்விக்குறி. மலை வளம் மாத்திரமல்ல, ஒட்டுமொத்த இயற்கை வளமே பாதுகாக்கப்பட்டு, அது தன்னைத்தானே மீண்டும் தகவமைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டிய அவசரமும் அவசியமும் இந்த விநாடித் தேவை. “புத்துமண்” அந்த அவசரத்தை மிக நேர்த்தியாகவும், “நறுக்” என்றும் கோடிட்டுக் காட்டுகின்றது. சுற்றுச்சூழல் குறித்து பல கட்டுரைகள், கதைகள் வந்துகொண்டிருக்கின்ற வேளையில் தனது “புத்துமண்” நாவலில் சற்று வித்தியாத்தையும், கற்றுக்கொடுத்தல் தன்மையையும், பூமியின்பாலான தனது ஏக்கத்தையும் குழைத்தளித்திருக்கிறார் சுப்ரபாரதிமணியன்.

நாவலெங்கும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த பல விவரணைகளை மிகத் தெளிவாகவும், பொருத்தமாகவும் மாத்திரமல்ல, சிலேடையுடனும் வைத்திருப்பது பாராட்டுக்குரியது. மணியனின் மனைவி சிவரஞ்சனியின் மனநிலையை ஒத்துதான் பெரும்பாலும் எல்லோருடைய வீட்டிலும் மனைவிமார்கள் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். அதே நேரத்தில் முன்பு மணியன்களாக இருந்த பலபேர், நாளடைவிலோ அல்லது வெகு விரைவாகவோ “MONEYயன்” களாக மாறிவிடுவதுதான் காலக்கொடுமை. உண்மையில் இன்று மணியன்களாக வாழ்ந்து வருபவர்களுக்கு பெருமிதத்தையும், MONEYயன்” களாக மாறி உலா வந்துகொண்டிருப்பவர்களுக்கு சாட்டையடியாகவும் இந்த “புத்துமண்” இருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.

“நம்பிக்கையோடும், விளைவு என்னவாகும் என்ற பயம் இன்றியும் ஒரு காரியத்தில் இறங்குவதுதான் துணிவு. கோழைத்தனம் இருக்குமிடத்தில் துணிவு இருக்காது. நமது மக்கள் கோழைகளாக இருக்கிறார்கள். இந்தக் கோழைத்தனத்துடன் வெற்றியைப் பற்றிப் பேசுவது முரண்பாடான செயல். துணிச்சலான உள்ளமும் ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும் போதும் அபாயத்தை எதிர்கொள்ளும் திறனும் வேண்டும். போர்க்களத்தில் வேறு வழியின்றி அபாயத்தைச் சந்திக்கிறார்கள். ஆனால் நமது போராட்டத்தில் விரும்பியே அபாயங்களைச் சந்திக்க வேண்டும்” என்ற மகாத்மா காந்தியின் கருத்தை உள்வாங்கி இன்றைய தலைமுறைகள், பகாசுர நிறுவனங்களிடமிருந்து நமது இயற்கையின் சூழலைக் காக்கப் புறப்பட வேண்டும் என்ற உந்துதலை இந்த நாவல் படிக்கும்போது ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

பல நாவல்கள் படிக்கின்றோம், பாதிப்படைகின்றோம், சிலாகிக்கின்றோம், பரவசடைகின்றோம். ஆனால் உள்ளபடியே மனதளவிலும் உடலளவிலும் பதற்றப்பட வைக்கின்ற நாவல்களும் இருக்கின்றன. அத்தகைய பதற்றத்தை இந்தச் சிறு நாவல் ஏற்படுத்தியிருக்கிறது என்பதுதான் சுப்ரபாரதிமணியனின் வெற்றி, மகத்தான வெற்றி.

“எல்லாம் என் ஆசிரியர்

அனைவரும் என் குருநாதர்

பாரில் உள்ளதெல்லாம் எனக்குப்

பாடம் சொல்கிறதே…”

“புத்துமண்” நாவலும் பாடம் சொல்கிறது. இந்த மண் ஊர்தோறும் கொண்டு செல்லப்பட வேண்டிய சத்து மண்.

-விசாகன்-

( சுற்றுச்சூழல் சார்ந்து இயங்குகிற ஒருவரின் வாழ்க்கை அனுபவங்களை இந்த ”புத்துமண் “ நாவல் சொல்கிறது. இதை சென்னை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது, பக்கங்கள் 120 விலை ரூ 100 )

Series Navigationஒவ்வொன்று
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *