தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

21 அக்டோபர் 2018

நாதாங்கி

தேனம்மை லெக்ஷ்மணன்

தாளிடப்பட்ட கதவின் பின்
பயந்து ஒளிந்திருக்கும் ஒருவரை
எத்தனை முறைதான் அழைப்பது ?

தட்டத் தட்ட அதிர்கிறது

நாதாங்கி.

உள் அலையும் சுவாசம்

வெப்பமாக்குகிறது அறைக்கதவை

சண்டையிட அல்ல

சமாதானத்துக்கே அந்த அழைப்பென்பதை

கதவு திறவாத ஒருவரிடம்

கத்தாமல் தெரிவிப்பதெப்படி

மீன்முள்ளாய் மாட்டிய செய்தியை
துப்பவும் விழுங்கவுமியலாது

தினம் வாசல் வரை வந்து திரும்பும்

சூரியனைப் போல மீள்கிறேன்.

புறத்திருந்து உழிந்த எச்சிலாய்

முதுகில் குளிர்கிறது காற்று

சாளரங்கள் திறந்திருக்கக்கூடும்

சுதந்திரமாய்.

திரும்பிப்பார்க்க விழையும்மனதை

இழுத்து விரைகிறேன்.

கவிழ்கிறது இரவு என்பின்

எழும்புகிறது நிலவு
எதையும் உயிர்ப்பிக்காது என்னுள்.

Series Navigationபோபால் : சவத்தின் விலை மிகச் சொற்பம்“மதுரையின் மணிக்குரல் மங்கயர்க்கரசி”

Leave a Comment

Archives