வைரமணிக் கதைகள் -7 என் சின்னக் குருவியின் சங்கீதம்

This entry is part 23 of 25 in the series 15 மார்ச் 2015

வையவன்

ஆராவமுதனின் ஆஸ்பத்திரித் தவம் போன வாரமே முடிந்து விட்டது. மயோ கார்டியல் இஸ்கீமியாவில் அவன் மனைவி மல்லிகா ஆறாம் நெம்பர் வார்டில் காலமானது, போன வெள்ளிக்கிழமை. இன்றோடு எட்டு நாள். இனிமேல் அவனுக்கு விடுதலைதான் இந்த ஆஸ்பத்திரியிலிருந்து. இப்படி நிவேதிதா எண்ணியது பிழையாயிற்று.

விஸிட்டர்ஸ் பெஞ்சில் அவன் உட்கார்ந்திருந்தான். பேஷண்ட்ஸ் ரிஜிஸ்டர் எழுதிக் கொண்டிருந்த நர்ஸ் நிவேதிதா ஒருமுறை நிமிர்ந்தபோது அதை மனசில் குறித்துக் கொண்டாள்.

அவன் திரும்பவும் வந்திருக்கிறான்.

என்ன விஷயம்?

இன்னொரு பேஷண்டின் பெயர் தகப்பனார் பெயர் வயது என்று விவரம் எழுதி முடித்தபோது நிவேதிதா தன்னையறியாது திரும்பினாள். அவள் பார்வை பெட் நம்பர் 24-க்குச் சென்றது.

படுக்கைக்குப் பக்கத்தில் ஸ்டூலின் மீது சுமி உட்கார்ந்திருந்தாள்.

நிவேதிதா பார்வையை மீட்டு ஆராவமுதனைக் கவனித்தாள்.

லேசான தாடி சிவந்த முகத்தில் துயரத்தின் காலடிச் சுவடு கனமாகப் பதிந்தது போலக் கண்களை சுற்றிய கருவளையம்.

‘மாண்டவளுக்கென்ன… போய்விட்டாள்!’ என்று நிவேதிதா நினைத்தாள்.

தொடர்ந்து ஆறு மாதங்கள் ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் ஆபீஸுக்குமாக அவன் அலைந்த அலைச்சல் ஞாபகம் வந்தது.

எவ்வளவு நேசித்தவன் இவன்!

அவன் கொண்டு வந்த பழக் கூடைகள், ஏந்தி வந்த ஊசி மருந்துகள், விஸிட்டர்ஸ் பெஞ்சில் உறங்கி வழிந்து, சிலிர்த்து விழித்த இரவுகள். கட்டிலருகில் ஸ்டூலின் மீது கழிந்த பகல்கள்.
சாயங்காலங்கள். சின்னச் சலிப்பு கூடத் தெரியாத மிருதுவான புன்னகைகள். மல்லிகாவை மென்மையாகத் தூக்கி உட்கார வைத்துப் புகட்டிய ஆரஞ்சுச் சாறு… அவள் விரல்களைப் பற்றித் தலையை மெல்ல நீவிய வருடல்கள்.

அந்த ஆறாம் நம்பர் வார்டை விட்டு அவை முழுக்க இன்னும் வெளியேறாதது போல் நிவேதிதா உணர்ந்தாள்.

நோயாளி மனைவியை மரணத்தின் சில்லிப்புத் தாக்கி விடாத வண்ணம், தன் நேசத்தின் சிறகுச் சூட்டில் போர்த்திப் போர்த்திப் பாடுபட்டவன்.

ஒரு நர்ஸாக உயிர்ப்புக்கும் சாவிற்குமிடையே பல போராட்டங்களை அவள் பார்த்திருக்கிறாள். ஒவ்வொன்றும் ஒரு மாதிரி. ஒரு நோயாளி உயிர்த்திருக்கக் கோரும் ஒவ்வொரு பிரார்த்தனையும் ஒவ்வொரு விழைவும் ஒரு மாதிரி.

இது வேறு. உயிர் பிழைத்து உடன் வாழ ஒரு மனைவி வேண்டும் என்ற எண்ணமின்றி மரணத்தின் காளவாயிலிருந்து தன் நேசக் குருத்தைப் பிரித்தெடுக்கச் செய்த முயற்சி.

“நிவேதி” என்று கூப்பிட்டவாறே படபடவென்று வந்தாள் பூர்ணிமா. அவளுக்கு எல்லாம் பரபரப்பு. எப்பவும் பரபரப்பு.

“சொல்லு” என்று ரிஜிஸ்டரிலிருந்து தலையைத் தூக்காமல் கேட்டாள் நிவேதிதா.

“பெட் நம்பர் 24-க்கு இஞ்செக்ஷன் கொடுக்கணுமே.”

நிவேதிதா இடது கையைத் திருப்பிக் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே சொன்னாள்.

“ஞாபகம் இருக்கு! இன்னும் அஞ்சு நிமிஷம் போகணும்.”

“கேஸ் தப்பிக்குமா?”

“டவ்ட்ஃபுல். மூணு நாளுக்கு முன்னாடியே கிரிட்டிகல் டாக்டர் மிருத்யுஞ்சன் உதட்டைப் பிதுக்கிட்டார். மூணு நாளா இந்த இழுபறி. ரியலி ஒண்டர்ஃபுல், பேஷண்டுக்கு நல்ல வில் பவர்.”

“பாவம் அந்தப் பொண்ணு, சுமி! நைஸ் லிட்டில் டார்லிங்.”

பூர்ணிமா வாயிலிருந்து தற்செயலாக வெளிவந்த அந்த அபிப்பிராயம், குறிப்பாக சுமி பற்றியது நிவேதிதாவுக்கு வியப்பளித்தது.

‘நைஸ் லிட்டில் டார்லிங்’ இப்படிக் கூட உன்னால் உணர முடியுமா என்கிற மாதிரி கண்களை விரித்து அவளைப் பார்த்தாள் நிவேதிதா.

அதற்குள் அவள் குனிந்து ஒரு கையால் நிவேதிதாவின் தோளை அணைத்தவாறு கிசுகிசுத்தது, “ஏய்… அதோ பாரேன் ஹீரோ வந்திருக்கான்” என்றாள் பூர்ணிமா. அவள் குறிப்பிட்டது ஆராவமுதனை.

“பார்த்தேன்.”

“நான் சொன்னா என்னமோ கற்பனைன்னு சொன்னாயே. பாரு கரெக்டா ஹீரோயினைத் தேடி வந்துட்டான்” என்றாள் பூர்ணிமா.

“ஒன் நாக்கிலே ‘ஆஸிட்’ வச்சுச் சுடணும்டீ! பாவம் அந்த மனுஷன். மனைவி போன துக்கத்திலே என்னமா இளைச்சிருக்கான் பாரு.”

“ஏது ரூட் திரும்புது? என்னம்மா கண்ணு புதுசா எதாவது அசௌக்கியமா?” என்று அர்த்த புஷ்டியாகச் சிரித்தாள் பூர்ணிமா.

யாருமில்லாதிருந்தால் அவள் காதைப் பிடித்து நிவேதிதா நறுக்கென்று ஒரு குட்டுக் குட்டுவாள்.

பூர்ணிமா வாயாடி. பட்டாம் பூச்சி. அரட்டை ஆனாலும் சமயத்தில் ஏதாவது சொன்னால் குறி தப்பாது தைத்து விடுவாள்.

அவள்தான் சுமிக்கும் ஆராவமுதனுக்கும் ஜோடிப் பொருத்தம் செய்து ரசித்தவள். அந்த இருவர் மட்டுமில்லை, வேறு எவரும் அறியாது அவளும் இவளும் மட்டும் பிணைத்த பிணைப்பு அது.

சுமியின் கணவன் சுரேந்திரனுக்கு மைட்ரல் ஸ்டெனாசிஸ். இதயத்தில் சிறு துவாரம். நாள் எண்ணுகிற வியாதி. ஆபரேஷன் சாத்தியமில்லை. நிறையக் ‘காம்ப்ளிகேஷன்ஸ்’

“இது மனுஷத் தன்மையே இல்லே பூர்ணிமா. அவங்க ரெண்டு பேரும் மரணத்தோட போராடிக்கிட்டிருக்காங்க.”

“இப்ப நான் என்ன சொல்லிட்டேன்? சுமிக்கும் அவனுக்கும் நல்ல பொருத்தம்னேன். இழுத்துட்டுப் போயி டைவர்ஸ் வாங்க வச்சி ரிஜிஸ்தர் ஆபீஸுக்கா தொரத்தினேன். இட்ஸ் ஜஸ்ட் எ மெண்டல்கேம். அவனைப் பாரு ஹீரோ மாதிரி இருக்கான். சுமியைப் பாரு ஹீரோயின் கெட்டா.!”

“இட்ஸ் நன் ஆஃப் அவர் பிஸினஸ்.”

இடுப்பில் அன்று இரண்டு கைகளையும் வைத்து கண்ணைச் சுருக்கிப் பூர்ணிமா சிரித்தாள்.

“நீ ஒரு குக்கூ. ஊறுகாய் ஜாடி. உள்ளேயே மூடி வச்சிருப்பே.”

பூர்ணிமாவை எவராலும் திருத்த முடியாது. அவள் பாதித்து விடுவாள்.

நிவேதிதா கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். இஞ்செக்ஷன் நேரம். பார்மஸியில் வாங்கி ஷெல்பில் வைத்திருந்த ஊசி மருந்தையும் ஸ்டெரிலைசரில் கொடுத்த ஸிரிஞ்சையும் எடுத்துக் கொண்டு அவள் எழுந்தாள். 24-ஐ நெருங்கினாள்.

வாட்டமான சிரிப்புடன் அவளை வரவேற்றாள் சுமி. சட்டென்று பூர்ணிமாவின் வர்ணனை கவனம் வந்தது. நைஸ் லிட்டில் டார்லிங்! மிதமான உயரத்தில் துறுதுறுவென்று இமைகளும் கொஞ்சம் பேதைமையில் தோய்ந்த சுட்டித்தனமுமாக அவளைப் பார்க்கும் போது மனசு குளு குளுவென்று பசுமையாகிறது. லேசாகிறது. ஒரு குழந்தையாகிறது.

நிவேதிதா சுரேந்திரனை நெருங்கினாள்.

எலும்புக்குத் தோல் போர்த்திய மாதிரி ஒரு கூடாகக் கட்டிலில் படுத்திருந்தான் அவன்.

ஊசி இறங்கியது. கண் விழிக்கவில்லை. வலி புருவத்திலும் நெற்றிலும் நெளிந்தது ஒரு சிறு வேதனை. மீண்டும் சிலை போன்ற முகம்.

“சுமி சாப்பிட்டியா?”

“இல்லே ஸிஸ்டர். பசிக்கலே.”

“பொய்தானே.

“ஐயய்யோ…”

“எனக்குப் பசிம்மா. நான் சாப்பிடணும்.”

“சாப்பிடுங்களேன்.”

“நீயும் கூட வந்து கொஞ்சம் ‘ஷேர்’ பண்ணிக்கிட்டா நல்லாருக்கும்.”

“நெஜம்மா எனக்குப் பசிக்கலியே.”

சுமி ஒரு நாளில் எத்தனை முறை சாப்பிடுவாள்? ஒரே ஒரு வேளையோ? அது கூட பன்னைப் பிய்த்துப் பாலில் நனைத்து மென்று விழுங்குகிறாளோ!

“கொஞ்சூண்டு… ப்ளீஸ்… ஒன்னைப் பத்திப் பூர்ணிமா என்ன சொன்னா தெரியுமா?”

“என்ன சொன்னாங்க?” சுமியின் முகத்தில் மருட்சி பரவிற்று. அந்தப் பெரிய விழிகளில் மருட்சி அற்புதமாய்ப் பொருந்துகிறது. ஒரு விரல் வட்டமளவு கண் அவளுக்கு.

“பயமா இருக்கா?”

“எதுக்கு?”

“ஏதாவது தப்பாச் சொல்லியிருப்பாளோண்ணு.”

“சீச்சீ.”

“சொல்லட்டுமா?”

“சொல்லுங்க.”

“சொல்லிடுவேன்.”

பயமுறுத்தினாள் நிவேதிதா. வாடிச் சோர்ந்திருந்த அந்த முகத்தில் ஒரு வருத்தி வரவழைத்த மலர்ச்சி. சோகம் கூட ஒரு சௌந்தர்யம்தான். இவ்வளவு பிரியத்திற்கு நான் தகுதியா என்று கேட்கிற மாதிரி தொய்வாகச் சுமி சிரித்தாள்.

“எ நைஸ் லிட்டில் டார்லிங்.”

குப்பென்று அவள் முகம் சிவந்தது. என்ன சிவப்பு!

“ஆகையினாலே” என்று நிறுத்தினாள் நிவேதிதா.

“சொல்லுங்க.”

“ஹலோ மை நைஸ் லிட்டில் டார்லிங்! நீ இன்னிக்கு என்னோட சாப்பிடறே.”

சுமி திரும்பிச் சுரேந்திரனைப் பார்த்தாள். அவன் கண்கள் விழிக்கவில்லை.

“டோண்ட் ஒரி! சீக்கிரமா வந்துடலாம். அதுவரைக்கும் அவர் முழிக்க மாட்டாரு.”

“எனக்கு வேண்டாமே ஸிஸ்டர்!”

“ப்ளீஸ்…”

இந்தப் பெண் இன்று ஒருவேளையாவது மனமாரச் சாப்பிடட்டும்.

அவள் தயங்கிக் கொண்டே எழுந்து வந்தாள்.

“பூர்ணிமா கொஞ்சம் ஸீட்ல உட்காரு, நாங்க சாப்பிட்டுட்டு வந்துடறோம்.”

இருவரும் விஸிட்டர்ஸ் பெஞ்சைக் கடக்கும் போது ஆராவமுது எழுந்து நின்றான்.

முதலில் நிவேதிதாவையும் பிறகு சுமியையும் பார்த்து விட்டு அவன் கேட்டான்.

“இப்ப அவரு எப்படியிருக்காரு?”

“பரவாயில்லே” என்று சொல்லி விட்டுப் பளிச்சென்று பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள் சுமி.

“அவரைப் பார்க்கவா வந்தீங்க?”

“ஆமாங்க ஸிஸ்டர்! டாக்டர்ஸ் ரவுண்ட் வர நேரமாச்சே. அதுக்காகத்தான் பெஞ்சிலே காத்திருந்தேன்.”

“சாப்பிட்டாச்சா?”

“ம்ம்ம்… ஆச்சு”

“இல்லேன்னா வாங்க, நாங்க சாப்பிடத்தான் போறோம்.”

“நோ… தாங்க்ஸ்.”

“போய்ச் சாப்பிட்டுட்டு வர்றதுன்னாலும் வாங்க. நாங்க உடனே வந்துடுவோம்.”

“சரி”

அவனை அங்கேயே விட்டு விட்டு அவர்கள் ஸ்டாஃப் ரெஸ்டிங் ரூமிற்குப் போனார்கள். நல்ல வேளை அங்கு கூட்டமில்லை.

அந்த மாடியறை ஜன்னலின் கீழே ஆஸ்பத்திரித் தோட்டம். நிவேதிதாவுக்கு அந்த ஜன்னலோர பெஞ்சில் அமர்ந்து சாப்பிடத்தான் பிடிக்கும். கீழே குரோட்டன்ஸ் அசோகக் கன்றுகள் பல வண்ணங்களில் ரோஜா, தண்ணீர் செழிப்பில் களை கட்டி நிற்கும் பசுமை.

ஷெல்பில் இரண்டு தட்டுகள் கொண்டு வந்து டிபன் பாக்ஸைப் பிரித்தாள் நிவேதிதா.

ட்வீக்… ட்வீக்… ட்வீக்… ட்வீக் என்று ஒரு மணிக்குரல் தோட்டத்திலிருந்து வந்தது. ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள். விரலளவு குருவி. வயிறு மேனி எங்கும் மஞ்சள். சின்னக் கண்கள். சின்னஞ்சிறு அலகு.

அவர்களைப் பார்ப்பது போல் ஒரு பார்வை.

பின்பு ஜிவ்வென்று எழுந்து ஓர் அசோகக் கன்றின் மீது உட்கார்ந்து குருவி.

“அதைப் பார்த்தியா சுமி”

சுமி குனிந்து பார்த்தாள் அந்தக் குருவியின் லகுவில் – உற்சாகத்தில் – சுறுசுறுப்பில் – அதுபாய்ந்த பாய்ச்சலில் அவள் மனசு பங்கேற்றது. அதை நிவேதிதாவும் கவனித்தாள்.

“எனக்கு அந்தக் குருவியை ரொம்பப் பிடிக்கும் சுமி… உனக்கு?”

“இது என்ன கேள்வி ஸிஸ்டர்? யாருக்குத்தான் அதைப் பிடிக்காது?”

பரிமாறிக் கொண்டே தொடர்ந்தாள் நிவேதிதா.

“எங்க வீட்டுத் தோட்டத்திலும் இப்படி ஒரு குருவி உண்டு. தெனம் அது ட்வீக்… ட்வீக்னு பாடற சங்கீதம் கேட்பேன். சாப்பிடு!”

சுமி ஒரு கவளத்தை வாயிலிடும் வரை காத்திருந்தாள். பின்பு தானும் தொடங்கினாள்.

“அது ரொம்ப சுதந்திரமான குருவி. மழையோ வெயிலோ எதுக்கும் பயப்படாது. சந்தோஷத்துக்குப் பயப்படவே பயப்படாது.”

மறு கவளத்தை வாயிலிட்ட சுமி நிமிர்ந்து வேறு ஏதோ ஒரு தொனி கேட்பது மாதிரி பார்த்தாள்.

நிவேதிதா சிரித்தாள்.

“என்னோட நீ இப்போ சாப்பிடறது எவ்வளவு சந்தோஷம் எனக்கு! உனக்கு எப்படியோ?”

“எனக்கும்தான் ஸிஸ்டர்.”

“இதுக்கு நீ பயப்படறே! ஒன் நிலையிலே நான்கூடப் பயப்பட்டிருப்பேனோ என்னமோ!”

“அது… வந்து அது பயமில்லே சிஸ்டர்.”

“ஒரு குற்ற உணர்வு! தெரியறது. அது வேணுமா? உனக்கு இருக்கிற அன்பும் ஈடுபாடும் தெரியுதே. அப்புறம் எதுக்கு குற்ற உணர்வு? அதைப் பாரேன்…”

மீண்டும் நிவேதிதா குருவியைக் காட்டினாள்.

இப்போது அது குதூகலம் தாங்காது அந்த வெயிலை லட்சியம் செய்யாது குதித்துக் குதித்து ஒரு கிளையிலிருந்து மறுகிளைக்குத் தாவி ‘ட்வீக்… ட்வீக்’கென்று கூவிற்று.

சுமி அதன் பரவசத்தைப் பங்கிட்டுக் கொண்டவள் போல் சிரித்தாள். என்ன பிரகாசம்! இந்த முகத்துக்கு இதுதான் பொருத்தம் என்பது போல் என்ன ஒளி.

அவளைச் சுரேந்திரனின் கட்டிலிலிருந்து இங்கு அழைத்து வந்த இடைவேளையில் மரணத்திடமிருந்து, மன உறுத்தல்கள், கவலைகள், சஞ்சலங்கள், பயங்கள் என்று ஓடிய நச்சுக் காற்றோட்டத்திலிருந்து பிரித்துக் கொண்டு வந்த மாதிரி நிவேதிதா உணர்ந்தாள்.

‘நீ அந்த ஆராவமுதனை நேசிக்கிறே தானே’ என்று ஒரு கேள்வி வாய்வரை வந்து நின்றுவிட்டது.

இவள் அவனை வேறெதற்குமல்ல, ஒரு மனிதன் ஒரு மனைவியை எவ்வளவு நேசிக்க முடிகிறது என்று அறிந்ததற்காகவே நேசிக்கிறாள். ஆராவமுதன் – சுமி மனசிற்குள் அந்த ஜோடிப் பொருத்தத்தை முன் மொழிந்த பூர்ணிமாவை பாராட்டினாள்.

அவள் சொன்னபோது அது குரூரமாகத் தென்பட்டது.

தப்பிக்க முடியாத மரணத்தோடு இரண்டு வாழ வேண்டிய ஜீவத் துடிப்புள்ள உயிர்கள் பின்னிப் பிணைக்கப்பட்டிருப்பது – அதற்காக முழு நேர்மையோடு போராடியது, போராடுவது! ஒன்று முடிந்தது.

ஆயிற்று. சுரேந்திரனுக்கு மூன்று நாட்களுக்கு முன்பே கெடு. இப்போது அவன் நாட்களை, மணிகளை… நிமிஷங்களை… ஒருவேளை விநாடிகளையோ எண்ணுகிறான்.

பின்… அதற்குப் பின்?

வயிற்றில் ஒரு குடல் முறுக்குவது போல் திக்கென்று உணர்ந்தாள் நிவேதிதா.

சுமியின் கதி என்ன?

வெள்ளைப் புடவையும் விதவைப் பட்டமுமா?

“எ நைஸ் லிட்டில் டார்லிங்!”

“அதைப் பாருங்களேன் ஸிஸ்டர்… அது குட்டிக்கரணம் போடறாப்பிலே மேலே போய்க் கீழே வந்து மேல போறதைப் பாருங்களேன்.”

கண்களில் ஒளி துள்ள வேறோர் உயிரின் குதூகலத்தில் கரைந்து போய் அவள் சிரிக்க சிரிக்கப் பார்ப்பது எத்தனை அற்புதமாக இருக்கிறது.

நிவேதி… நிவேதி… என்று தடதடவென்று ஓடி வந்தாள் பூர்ணிமா. சில சமயம் நிவேதிதா வுக்குள் ஓர் உட்குரல் கேட்கும். சரியாகச் சொல்லும்.

அது முடிந்து விட்டது.

உள்ளே ஓடி வந்த பூர்ணிமாவைப் பார்த்து, சுமி அறியாமல் முகம் திருப்பி, இடது கை ஆட்காட்டி விரலை வைத்துச் சொல்ல வேண்டாம் என்று தலையாட்டி எச்சரித்தாள் நிவேதிதா.

அவள் சைகை பூர்ணிமாவிற்குப் புரிந்தது. ஏன் சொல்ல கூடாது என்றுதான் விளங்கவில்லை. ஒர் அற்புதமான கணத்தை இவ்வளவு குரூரமாகச் சிதைக்கக் கூடாது என்பதை விளக்கினால் தான் அவள் அறிவாள்.

“என்ன பூர்ணிமா?”

“ஒண்ணுமில்லே சாப்பிடறீங்களா… சாப்பிடுங்க… நான் அவசரமாகப் போகணும்னு பார்த்தேன்.”

சுமிக்காக மளமளவென்று வழிந்த நிவேதிதாவின் கண்ணீரைப் பூர்ணிமா புரிந்து கொண்டாள். வியர்வையை வழிப்பது போல் அவள் வழித்துத் துடைக்கும் லாவகத்தையும் பார்த்தாள்.

வெளியே குருவி கத்திற்று. ட்வீக்… ட்வீக்… ட்வீக்… ட்வீக்… சிரித்தவாறே சுமி கூடச் சொன்னாள். “ட்வீக்… ட்வீக்… ட்வீக்…”

+++++++++++++++++++++++++++++++

வைரமணிக் கதைகள்
[வையவன் ]
முதற் பதிப்பு : 2012

பக்கங்கள்:500
விலை:ரூ. 500

கிடைக்குமிடம்: தாரிணி பதிப்பகம்
4 A, ரம்யா ப்ளாட்ஸ்
32/79, காந்தி நகர் 4வது பிரதான சாலை
அடையார், சென்னை-20
மொபைல்: 99401 20341

Series Navigationவேடந்தாங்கல்உதிராதபூக்கள் – அத்தியாயம் 6
author

வையவன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *