மட்டில்டா ஒரு அனுபவம்

This entry is part 7 of 25 in the series 15 மார்ச் 2015

சிறகு இரவிச்சந்திரன்
0
Matildaரோஆல்ட் டாஹ்ல் கதைகளைப் பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். யூ ட்யூபில் தற்செயலாக சந்தானத்திற்கு மத்தியில் விழுந்தவள் தான் மட்டில்டா! 1996ல் ட்ரைஸ்டார் நிறுவனத்தால் எடுக்கப் பட்ட படம். கதை மட்டில்டா எனும் அபூர்வ சக்திகள் கொண்ட குழந்தையைப் பற்றியது. ஆனால் அதை இயக்குனர் டேனி டிவிட்டோ படமாக்கியிருக்கும் விதம் காமெடி கார்னிவல்.
ஆரம்பக் காட்சியே அமர்க்களம். ஹாரிக்கும் ஸினியாவுக்கு ஒரு மகனுக்குப் பிறக்கிறாள் மட்டில்டா எனும் பெண் குழந்தை. பழைய கார்களுக்கு திருடிய ஸ்பேர் பார்ட்ஸைக் கொண்டு புதிதாக தோற்றம் அளிக்கும்படி செய்து அதை அநியாய விலைக்கு விற்கும் ஹாரியின் மேல் பிரிட்டனின் மத்திய புலனாய்வு துறைக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. ஆனால் அவனுக்கும் அவன் மனைவி ஸினியாவுக்கும் தொலைக்காட்சி பார்ப்பதிலும் சாப்பிடுவதிலுமே விருப்பம். முதல் காட்சியில், பிறந்த குழந்தையை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு கொண்டு வந்து விட்டு, தொலைக்காட்சி நிகழ்ச்சியின் அவசரத்தில் காரிலேயே குழந்தையை விட்டு விட்டு இறங்கும் தம்பதியரைக் காட்டும் போதே மட்டில்டா அவர்களிடமிருந்து எந்த உதவியும் பெறப் போவதில்லை என்பது புரிகிறது. குழந்தை தானாக வளர்கிறாள். குழந்தைப் பருவத்திலேயே தன் வேலைகளை தானே செய்து கொள்ளப் பழகிக் கொள்கிறாள். நான்கு வயதில் அவளுக்கு படிக்கிற ஆர்வம் வருகிறது. கிடைத்ததை எல்லாம் படிக்கிறாள். ஆனால் அவள் ஒரு அபூர்வக் குழந்தை என்பதை அவளது பெற்றோர் உணரவேயில்லை!
வீட்டில் படிக்க ஏதும் இல்லாமல் தனியாக மட்டில்டா, தன் நான்காவது வயதில் ஊரின் நூலகத்திற்குப் போய் படிக்க ஆரம்பிக்கிறாள். கணிதம் அவளுக்கு சுலபமாக வருகிறது. தந்தை விற்ற கார்களில் வந்த லாபத்தை அவர்கள் கணக்கு போடுவதற்கு முன்பே அவள் அதை மனக்கணக்காக சொல்லி விடுகிறாள். வீட்டின் வாசலில் காரில் உட்கார்ந்து கொண்டு கண்காணிக்கும் இரண்டு நபர்களை அவள் போலீஸ் எனக் கண்டுபிடிக்கிறாள். ஆனால் அவள் சொல்வதை ஹாரி நம்பவேயில்லை. புத்தகம் படிப்பதால் அவளுக்கு பித்து பிடித்ததாக சொல்லி புத்தகத்தை கிழித்துப் போடுகிறாள். அவளை தொலைக்காட்சி பார்க்கச் சொல்லி வற்புறுத்துகிறான். கோபத்தில் அவள் அந்தப் பெட்டியை முறைத்துப் பார்க்க, அது வெடித்து சிதறுகிறது. தனக்கு இருக்கும் இன்னொரு அபூர்வ சக்தியை மட்டில்டா உணருகிறாள்.
மட்டில்டாவின் நச்சரிப்பை பொறுக்க முடியாமல் ஹாரி அவளை ட்ரான்ச்புல் பள்ளியில் சேர்க்கிறான். அதன் தலைமை ஆசிரியை அகாதா ட்ரான்ச்புல் சிறுவர் சிறுமிகளை கொடுமைப் படுத்துவதில் இன்பம் காண்பவள். அவளிடம் வேலை செய்யும் ஆசிரியை மிஸ் ஹனி, மட்டில்டாவிடம் பாசம் காட்டுகிறாள். அவளது அபூர்வ சக்திகளைப் பற்றி அறிந்து கொள்கிறாள்.
மிஸ் ஹனியின் தந்தையைக் கொன்று, அவளது வீட்டை அபகரித்தவள் அகாதா தான் என்பதை உணரும் மட்டில்டா, தன் சக்தியின் மூலம் எப்படி அவளை அந்த ஊரை விட்டே விரட்டுகிறாள் என்பதை சிரிக்க சிரிக்க சொல்லியிருக்கிறார்கள்.
குழந்தைகளுக்கான படங்கள் அருகிவிட்ட கால கட்டத்தில் இப்படி ஒரு படம் பார்த்தது நிறைவைத் தருகிறது. ஹாரியாக நடித்திருக்கும் டானி டிவிட்டோ பிச்சு உதறுகிறார். மட்டில்டாவாக மாரா வில்சன் பிரமாதம். அகாதாவாக பேம் ஃபெரிஸ் பயமுறுத்துகிறார்.
தந்திரக் காட்சிகளில் கரும்பலகை அழிப்பான்கள் பறந்து அகாதாவைத் தாக்குவதும், தூக்கி எறியப்பட்ட சிறுவன் மட்டில்டாவின் சக்தியால் அந்தரத்தில் நிற்பதும் அமர்க்களம். ஹனியின் விருப்பமான பொம்மையை, உள்ளே போகமலே, அகாதாவின் வீட்டிலிருந்து மட்டில்டா வரவழைப்பது கைத்தட்டல் பெறும் காட்சி.
ஸ்டீஃபன் ஸாப்ஸ்கியின் ஒளிப்பதிவு ரம்மியமாக இருக்கிறது. இரவுக் காட்சிகளில் அவர் காட்டும் ஒளிக்கோலங்கள் உலகத் தரம்.
மட்டில்டா, குழந்தைகளாக இருந்த பெரியவர்களும் பார்க்க வேண்டிய படம்!
0

Series Navigationவ. விஜயபாஸ்கரனின் சமரன் களஞ்சியம்திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்தும் பத்துநாள் பயிலரங்க அழைப்பு
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *