நார்த்தா குறிச்சியில் லைஃப்பாய் சோப்பு போட்டுக் குளித்துக் கொண்டிருந்தவர்கள், நந்திசேரியில் ரின் சோப்பு போட்டு குளித்துக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் இன்று லக்ஸ் சோப்பு போட்டு குளிக்கிறார்கள் என்றால் அதற்கு ஷாப்புக்கடை ஓனர் சேதுராஜன் தாத்தாதான் காரணம். ஆம் ஐஸ்வர்யாராய் தேய்த்துக்குளித்த அதே லக்ஸ் சோப்பு. அபிராமத்தில் உள்ள லக்ஸ் சோப்பு ஷாப்புக்கடை என்றால் சுத்துப்பட்டு கிராமங்களுக்கு எல்லாம் நன்கு பரிச்சயம். இராமநாதபுரம் மாவட்டம், கமுதிக்கு அருகில் அமைந்துள்ள ஷாப்புக்கடையின் புகழ் , இந்த அளவுக்கு மூலை முடுக்கெல்லாம் பரவியிருக்கிறது என்றால், மேனி அழகைக் கூட்டும் லக்ஸ் சோப்பும் ஒரு முக்கிய காரணமாகும். கடந்த 20 ஆண்டுகளாக லைஃப்பாய் சோப்பு பிடித்திருந்த மார்க்கெட்டை ஒரே மாதத்தில் உடைத்தெறிந்தார் சேதுதாத்தா, ராமநாதபுரத்திலிருந்தோ, ராஜபாளையத்திலிருந்தோ, கமுதியிலிருந்தோ வாங்கி வரப்படும் லக்ஸ் சோப்புக்கு அவ்வளவு மரியாதை கிடையாது. ஷாப்புக்கடை லக்ஸ் சோ்பபில் தான் ஏதோ மந்திரம் இருக்கிறது. ஷாப்புக்கடைக்கு அப்படி ஒரு பெயர் கிடைத்து விட்டது.
சரியாக சொல்ல வேண்டும் என்றால் அது ஒரு ஃபேன்சி ஸ்டோர். ஃபேன்ஸி என்ற வார்த்தை அந்த கிராம மக்களின் வாயில் நுழையாததால், ஷாப்புக்கடை என்று பெயர் பெற்று நாலா புறமும் தனது புகழ் ஒளியை பரப்பியது.
ஷாப்புக் கடையில்வாங்கிய சோப்பு
ஷாப்புக் கடையில்வாங்கிய ஷாம்பு
ஷாப்புக் கடையில் வாங்கிய கம்மல்
ஷாப்படையில் வாங்கிய டப்ஸ், பொட்டு, ரப்பர் பேண்ட், ஹேர்பின், சென்ட் என அனைத்துப் பொருட்களுக்கும் அவ்வூர் மக்கள் தாங்களாகவே ஐ.எஸ்.ஐ. முத்திரையை குத்திக் கொண்டார்கள். பெரும்பாலான கிராமத்தினர் ஷாப்புக்கடையின் அனைத்துப் பொருட்களும் சிங்கப்பூரிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்படுவதாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர். ஒரு முறை சிங்கப்பூரில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் அபிராமம் பகுதியிலிருந்த தனது சொந்த ஊரான பார்த்திபனூருக்கு வந்திருந்தார். அவர் சிங்கப்பூரிலிருந்து வாங்கி வந்திருந்த பொருட்களையெல்லாம் பெருமையாக அனைவருக்கும் வழங்கிக்கொண்டிருந்தார். ஆனால் அவர் அடைந்ததோ அவமானம் மட்டுமே.
“தம்பீ நீங்க கொண்டு வந்திருக்கிற கடிகாரம், சென்ட் இதெல்லாம் நம்ம ஷாப்புக்கடையிலேயே கெடைக்குதே, இதை ஏன் சிங்கப்பூருல இருந்து சொமந்துகிட்டு வந்திருக்கீங்க”
“என்ன இருந்தாலும் ஷாப்புக்கடைக்கு ஈடாகாது”
“ஒரு வேளை ஷாப்புக்கடையில் திருட்டுத்தனமாக வாங்கிவிட்டு சிங்கப்பூர் என்று சொல்கிறானோ”
என கிண்டல் தொனியில் பேசியது அவரின் அவமானத்தை மட்டமல்ல ஆர்வத்தையும் தூண்டியது. அதென்ன ஷாப்புக்கடை. ஷாப் என்றாலும் கடை என்றாலும் ஒன்றுதானே. அப்படி என்ன அந்தக்கடையில் விற்பனை செய்கிறார்கள் என்று ஆச்சரியப்பட்டார்.
இப்படிப்பட்ட உலகப் புகழ்பெற்ற ஷாப்குக்கடைக்கு எதிரிகள் பெருகி விட்டிருந்தார்கள். கமுதியில் இருக்கும் அமுதம் ஃபேன்சி ஸ்டோர் ஓனரின் மனைவி ஒரு சோப்பு வாங்குவதற்காக அபிராமம் வரை திருட்டுத்தனமாக வருகிறார் என்றால் நிலைமை கைமீறி போய்விட்டது என்றுதானே அர்த்தம். உடனடியாக ஃபேன்சி ஸ்டோர் முதலாளிகள் அனைவரும் ஒன்று கூடி சதித்திட்டம் தீட்டினர்.
ஒன்று சேதுதாத்தாவை அழிக்க வேண்டும். அல்லது ஷாப்புக்கடையை அழிக்க வேண்டும். ஆனால் இந்த சதியில் நாம்தான் ஈடுபட்டிருக்கின்றோம் என்று யாருக்கும் தெரியக்கூடாது.
அவர்கள் சேது தாத்தாவையும், ஷாப்புக்கடையையும் ஒரே நேரத்தில் அழிக்க அந்த பாரம்பரிய முறையைக் கையாளலாம் என்கிற முடிவுக்கு வந்தனர்.
இந்த அழிவுச்செயலுக்கு அவர்கள் தான் சரி…அந்த கிராம மக்கள் தான் சரி…. ஷாப்புக்கடையை இருந்த இடம் தெரியாமல் அழிக்க வேண்டும் என்றால் அந்த கிராமத்தினர் தான் சரி. ராமநாதபுரம் மாவட்டமே ஒரு கட்டத்தில் அந்த கிராமத்தினரை பார்த்து பயந்து ஒதுங்கியது. அவர்களிடம் வியாபாரிகள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சம் அல்ல. அவர்களை ஒரு வழியாக கட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள். அந்த முதலாளிகள் ஷாப்புக்கடையை ஒழிக்க அருணாச்சலம் படத்தில் வரும் ரகுவரனைப்போல வித்தியாசமாக யோசித்தார்கள்.
அவர்கள் சேது தாத்தாவுக்கு அதிக வாடிக்கையாளர்களை ஏற்படுத்திக் கொடுத்தனர். குறிப்பாக ஷாப்புக்கடைக்காக அந்த கிராமத்தில் இலவச விளம்பரம் செய்தனர். நோட்டீஸ் அச்சடித்து விநியோகித்தனர். வீடு வீடாகச் சென்று ஷாப்புக்கடையைப் பற்றி எடுத்துக் கூறினர். ஷாப்புக்கடையில் உள்ள அனைத்துப் பொருட்களும் ஐ.எஸ்.ஐ. முத்திரை குத்தப்பட்ட தரமான சிங்கப்பூர் இறக்குமதி என்று எடுத்துரைத்தனர். குறிப்பாக லக்ஸ் சோப்பை ப்றறி எடுத்துரைத்தனர். அது ஏதோ அண்டார்ட்டிக்காவில் தயாரிக்கப்படுவதாக வியப்புடன் கூறினர். ஷாப்புக்கடை லக்ஸ் சோப்பில் ஏதோ மருத்துவ குணம் அடங்கியிருப்பதாக வதந்தியை கிளப்பினர். போகர் உருவாக்கிய பாசான சிலையின் மூலிகை குணம் அடங்கியிருப்பதாகக் கூறி அக்கிராமத்தினர் மனதிற்குள் உறங்கிக் கொண்டிருந்த மிருகத்தை தட்டி எழுப்பினர்.
அந்த வியாபரிகளுக்கு அந்தக் கிராமத்தினரைப் பற்றி நன்றாகத் தெரியும். அவர்கள் தரத்தை பரிசோதிப்பதில் வல்லவர்கள். அவர்கள் ஷாப்புக்கடைக்கு படையெடுக்க ஆரம்பித்தனர்.
ஒருநாள்…
கோவணம் மட்டுமே அணிந்த ஒரு மனிதன் ஷாப்புக்கடைக்கு வந்தான். தன்னிடம் ஒரு கோவணம் மட்டுமே இருப்பதாகவும் மற்றொரு கோவணம் அணிந்து கொள்வதற்கு வேண்டும் என்றும் கேட்டான். அவனது மான உணர்ச்சியை கண்டு வியந்துபோன சேதுதாத்தா, தேடிப்பிடித்து ஒரு கர்ச்சீஃப்பை எடுத்துக் கொடுத்தார். 2 ரூபாய் விலை என்று கூறினார்.
அதற்கு அவர் தனக்கு பாதி கோவணம் போதும் என்று கூறிவிட்டு சேதுதாத்தாவைக் கேட்காமலேயே டர்ர்ர்ர்ர்ர்ர்ர்…… என்று பாதியாக கிழித்து விட்டு, ஒரு ரூபாய் பணத்தைக் கொடுத்துவிட்டு கிளம்பினார். சேதுதாத்தா அப்பொழுது ஏற்பட்ட திடீர் அதிர்ச்சியில் அந்த பாதி கர்சீஃப்பையும், ஒரு ரூபாயையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார்.
“நியாயமான வியாபாரம்தானே, ஒன்றும் மோசமில்லை – நாட்பேட் ” என்று மனதில் நினைத்துக் கொண்டார்.
மற்றொரு நாள்….
வாழைத்தார் ஒன்றை சுமந்தபடி ஷாப்புக்கடைக்குள் புகுந்த ஒருவர் பளபளவென இருந்த கண்ணாடி ட்ரே மீது வாழைத்தாரை நிமிர்த்தி வைத்தார். சேது தாத்தாவுக்கு முதல் ஹாட் அட்டாக் வந்திருக்க வேண்டியது… ஆனால் ஏனோ வரவில்லை…அந்த மனிதன் தனக்கு பாலிடாயில் ஒன்றரை லிட்டர் வேண்டும் என்றும் அதுவும் உடனடியாக, சற்றும் தாமதிக்காமல் வேண்டும் என்றும், ஒரு நிமிடம் கூட தன்னால் தாமதிக்க முடியாது என்பது போலவும் விடுவிடுவெனக் கேட்டார். ஷாப்புக்கடைக்கும், உரக்கடைக்கும் உள்ள வித்தியாசத்தை வெகுவாக எடுத்துரைத்ததை அந்த மனிதரால் புரிந்து கொள்ள முடியவில்லை. பாலிடாயில் இல்லாத கடை ஒரு கடையா என காரித்துப்பிவிட்டு (உண்மையிலேயே) சென்றார் அவர். அடுத்தவாரம் தாம் வருவதாகவும், அதற்குள் பாலிடாயிலை வாங்கி வைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துவிட்டுச் சென்றார்.
சேதுதாத்தா சிறிது கலங்கித்தான் போனார். தான் தவறு செய்துவிட்டோமோ என்று கூட நினைத்தார். பேசாமல் 4 எருமை மாடு வாங்கி வீடு வீடுக்கு பால் ஊற்றியிருக்கலாமோ என்று நினைக்கலானார்.
வேறொரு நாள்…
2 பள்ளிச் சிறுவர்கள் வந்தார்கள். அவர்கள் இருவர் கைகளிலும் 2 உண்டியல் இருந்தது. அவர்கள் தங்கள் வருடாந்திர சேமிப்பை சேது தாத்தாவின் முன் கொட்டினார்கள. 25 பைசா, 10 பைசா, 5 பைசா போன்ற நாணயங்கள் செல்லாது என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு இன்னும் அவர்கள் காதுகளுக்கு எட்டவில்லை.
சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு, அந்த நாணயங்கள் அத்தனையும் எண்ணி 36 ரூபாய்தொகையை சேதுதாத்தாவின் முன் ஒரு சிறு மலைக்குன்று போல் குவித்தார்கள். தங்களுக்கு ஒரு லக்ஸ் சோப்பு வேண்டும் என்று கூறினார்கள்.
சேதுதாத்தா லக்ஸ் சோப்பை அழகாக அடுக்கி வைத்திருந்தார். அந்த சிறுவர்கள் வாயின் அருகே ஆட்காட்டி விரலை வைத்து யோசிக்க ஆரம்பித்தனர்.
பிரதமர், முதலமைச்சர், தங்களுடைய பள்ளி ஹெட்மாஸ்டர், தாளாளர் போன்ற பெரிய மனிதர்கள் எல்லாம் குழுப்புகைப்படம் எடுத்துக் கொள்ளும் பொழுது மற்ற சாதாரணமானவர்கள் எல்லாம் சுற்றி அமர்ந்திருக்க, அவர்கள் மட்டும் நடுநாயகமாக அமர்ந்திருப்பார்கள்.
அப்படியென்றால் என்ன அர்த்தம்????
அதேபோல் ஒலிம்பிக்கில் நீச்சல், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் போன்ற போட்டிகளில் நடுவில் இருப்பவர்களே பெரும்பாலும் வெற்றி பெறுகிறார்கள் இரு ஓரங்களில் இருப்பவர்கள் எப்பொழுதும் வெற்றி பெறுவதில்லை.
அப்படி என்றால் என்ன அர்த்தம்????
எல்லா திரைப்படங்களிலும் கதாநாயகனும், கதாநாயகியும் சுற்றிலும் துணை நடிகர்கள் நடனம் ஆட தாங்கள் மட்டும் நடுவில் நின்றே நடனம் ஆடுகிறார்கள்.
அப்படி என்றால் என்ன அர்த்தம்???
தகுதிவாய்ந்தது, பிரமாதமானது, தரமிக்கது,வெற்றிபெறக்கூடியது எப்பொழுதுமே நடுவில்தான் இருக்கும். அந்த இரு சிறுவர்களும் ஆட்காட்டி விரலை வாயில் வைத்தபடி வெகு நேரமாக யோசித்துவிட்டு ஒரு முடிவுக்கு வந்திருந்தனர்.
அந்த முடிவு : “தகுதி வாய்ந்தது எப்பொழுதும் நடுவில் தான் இருக்கும்“
அவர்கள், அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான சோப்புகளுக்கு மத்தியில், நடுநாயகமாக வீற்றிருந்த அந்த தரம் மிகுந்த சோப்பை சிரித்துக் கொண்டே உருவி எடுத்தார்கள். சீட்டுக்கட்டு சரிவது போல் அத்தனை சோப்புகளும் சரிந்து கீழே விழுந்தன. அதைப் பற்றியெல்லாம் கவலைகொள்ளாத அந்த சிறுவர்கள், தங்களுடைய மதிப்புமிக்க வியாபாரம்முடிவடைந்த திருப்தியோடு ஓடி மறைந்தார்கள்.
சேதுதாத்தா கண்ணங்களில் கைகளை வைத்தபடி கப்பல் கவிழ்ந்து போன சோகத்தில் வெகுநேரம் அமர்ந்திருந்தார்.
ஒருமுறை ஒருவர் துண்டுபீடி வேண்டும் என்று அரை மணி நேரம் சண்டையிட்டார். மற்றொருவர் அடுப்புக்கரி வேண்டும் என்றும், இதற்காகவெல்லாம் தன்னால் கமுதிக்கு செல்ல முடியாது என்றும் வேதனையோடு வாதிட்டார். மற்றுமொருவர், தனக்கு இப்பொழுதே உடனடியாக ஒரு ஆஃப்பாயில் வேண்டும் என்றும் அவ்வாறு வரவில்லை என்றால் இங்கு ஒரு கொலை நடக்கும் என்றும் ஆவேசமாகக் கூறினார். அவர் சிறிது குடித்திருந்தார். எதற்கு குடிகாரனிடம் வம்பு என்று ஆஃபாயிலுக்கு ஏற்பாடு செய்தார். ஆஃப்பாயிலுக்குப் பிறகு தனக்கு ஒரு பிளேட் ஈரல் வேண்டும் செங்கமலம் என்று சிரித்துக் கொண்டே கேட்டார். அவருக்கு அவர் மனைவி நியாபகம் வந்துவிட்டது போல.
மற்றொரு நாள் ஒருவர் தனது சைக்கிளுககு பஞ்சர் ஒட்டுத்தரமுடியுமா? என்று பாவமாகக் கேட்டார். வேறொருவர் தனக்கு முத்துபடத்தில் ரஜினிகாந்த் அணிந்திருந்தது போல் சட்டை தைத்து தர வேண்டும். ஆனால் கூலி கம்மியாகத்தான் தருவேன் என்று அடம்பிடித்தார். மற்றொரு நாள் ஒருவர் ஒரு பெரிய அண்டாவை எடுத்து வந்து கவிழ்த்தார். அந்த அண்டாவிற்கு ஈயம் பூசித்தர வேண்டும் என்றும்,மறுத்தால் கன்ஷ்யூமர் கோர்ட்டுக்குப் போவேன் என்றும் மிரட்ட ஆரம்பித்தார். சற்று நேரத்திற்கு முன்புதான், அரசு கட்டண கழிப்பறை டோக்கன் போடுபவரிடம் கன்ஷ்யூமர் கோர்ட் பற்றி எடுத்துக் கூறி 2 ரூபாய் கட்டணத்தை 50 பைசாவாக குறைத்திருந்தார். அந்த கோர்ட் டெல்லியில் இருப்பதாகவும், அநாவசியமாக தன்னை டெல்லிக்கு செல்ல வைத்து விட வேண்டாம் என்றும் மிரட்டல் விடுத்தார். மேலும் அந்த கோர்ட்டில் தனது ஒன்றுவிட்ட மாமா டவாலியாக வேலை பார்ப்பதாகவும் பீதியைக் கிளப்பினார்.
ஒரு அண்டாவிற்கு ஈயம் பூசுவதற்காக தாங்கள் டெல்லி வரை செல்ல வேண்டாம் என்றும், மேலும் தங்கள் ஒன்றுவிட்ட மாமாவை தொந்தரவுசெய்ய வேண்டாம் என்றும் கெஞ்சி கேட்டுக் கொண்டார் சேதுதாத்தா.
மற்றொரு நாள் ஒரு பெண்மணி இந்த ஊரிலேயே உங்களைப் பார்த்தால் தான், நாணயமானவராகவும், நல்லவராகவும் தெரிகிறது என்றும், தங்களது முகத்திலதான் தெய்வீகக்கலை தாண்டவமாடுகிறது என்றும் பிடிகொடுக்காமல் புகழ்ந்துதள்ளிக் கொண்டிருந்தார். பின்னர் ஒரு வழியாக தனது பரம்பரை நகைகளுக்கு பாலீஷ் போட்டுத்தரும்படி வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டார்.
இதனாலெல்லாம் சற்றும் மனம் தளராத சேது தாத்தா விக்ரமாதித்தன் வேதாளத்தை தோளில் சுமந்துசெல்வது போல் ஷாப்புக்கடையை மனம் தளராது நடத்தி வந்தார்.
ஒருநாள் ஒரு தீவிரமான முடிவுக்கு வந்தார் சேதுதாத்தா. குறிப்பிட்ட அவ்வூர் மக்களுக்கு ஷாப்புக்கடையில் என்னவெல்லாம் விற்கப்படும் என்பதை புரியவைக்க வேண்டும் என்று விரும்பினார். ஷாப்புக்கடையில் இன்ன இன்ன பொருட்கள்தான் விற்பனை செய்யப்படுகின்றன என்பதை விளக்கும் வகையில், ஒரு பெரிய கரும்பலகையில் பொருட்களின் பட்டியலை குறிப்பிட்டு எழுதி கடைக்கு வெளியே கம்பீரமாக நிறுத்தி வைத்தார் சேதுதாத்தா.
இனிமேல் தனக்கு எவ்வித பிரச்னையும் ஏற்படாது என நம்பினார் சேதுதாத்தா. ஷாப்புக்கடையை பிடித்த திருஷ்டி இன்றோடு விலகியது என்று பெருமிதம் கொண்டார்.
அன்று, அந்த கரும்பலகையை வெகுநேரமாக பார்த்துக் கொண்டிருந்த ஒரு மனிதர், ஒரு முழு பீடி தீரும் வரை கரும்பலகையின் 4 புறத்தையும் கவனமாக ஆராய்ச்சி செய்தார். தனது யுக்தி பலித்துவிட்டது குறித்து சேதுதாத்தா மகிழ்ந்தாலும், கரும்பலகையின் முன்புறம் மட்டும் வாசித்துப் பார்க்காமல், அதன் பின்புறம் எதை வாசிக்கிறார் என்று சற்று சந்தேகம் அடைந்தார். தனது கடும் ஆராய்ச்சியை முடித்துக் கொண்ட அம்மனிதர் சேதுதாத்தா அருகில் வந்தார்.
சகாய விலையில் கொடுப்பதாக இருந்தால் அந்த கரும்பலகையை தானே வாங்கிக்கொள்வதாகவும், விலை பேச தயாராக இருந்தால் கையைக் கொடுங்கள் என்று கூறி துண்டைப் போட்டு விரலைப் பிடித்தார் அந்த மனிதர்.
சேதுதாத்தா கண்கலங்கிப் போனார். இருந்தாலும் மனம் கலங்க வில்லை.
பொறுமை இழந்த வியாபாரிகளின் இந்த சிறு சிறு யுக்திகள் எல்லாம் எடுபடாத காரணத்தால், அந்த படுபாதக செயலைச் செய்யத் துணிந்தனர்.
அய்யோ அது மட்டும் வேண்டாம் என சில வியாபாரிகளே அதற்கு கண்டனம் தெரிவித்தனர். என்னதான் நமக்கு எதிரி என்றாலும் அந்த சேதுதாத்தாவிடம் இந்த படுபாதகச் செயலை மட்டும் நாம் செய்ய வேண்டாம் என்று கூறினர். மற்றவர்கள் வேறு வழியில்லை என்று வாதாடவே அந்த செயலைச் செய்ய துணிந்தனர் அந்த படுபாதக வியாபாரிகள்.
கடைசியில் அந்த பெண்மணிக்குத் தகவல் தெரிவித்து விட்டார்கள். அந்தபெண்மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட தகவலை அனைத்து முதலாளிகளுக்கும் தெரிவித்துவிட்டு ஜாக்கிரதையாக ஊரை காலி செய்துவிட்டுசென்றுவிடும் படி எச்சரிக்கை விடுத்தும் விட்டனர்.
சேதுதாத்தாவை ஒழித்துக் கட்டும் நோக்கில் இந்தப் பெண்மணி என்னும் அணுஆயுதம் நிரப்பப்பட்ட ஏவுகனையை முதுகுளத்தூரிலிருந்து ஏவியிருந்தார்கள் எதிரிகள். ஷாப்புக்கடை ஒரு ஹிரோஷிமாவாக, நாகசாகியாக, ஆகி சின்னாபின்னமாக வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்.
ஒரு மனிதனால் 35 ரூபாய் பெருமானமுள்ள பொருளை பேரம் பேசி 25 ரூபாய்ககு வாங்க முடியும். ஆனால் அந்த அசாதாரணப் பெண்மணியோ வரலாற்றில் எங்கும் கேள்விப்பட முடியாத வகையில் 30 ரூபாய் பெருமானமுள்ள பொருளை ஒரு ரூபாய் 50 பைசாவுக்கு கேட்டு மனசாட்சியே இல்லாமல் பேரம் பேசுவார். பேரம் பேசும் பொழுது நாடாளுமன்றத்தில் ஃபைனான்ஸ் மினிஸ்டர் பேசிய வார்த்தைகளையெல்லாம் உபயோகப்படுத்துவார். குரலை மேலும் கீழுமாக உயர்த்தி லாவகமாக ஒரு பேருரையாற்றி கடைக்குச் சொந்தக்காரர் மயக்கமுறும் நிலைக்குச் செல்லும்பொழது, கொலை வழக்கில் உள்ளே சென்று விடக் கூடாது என்கிற ஒரே நோக்கத்தில், மூச்சு விடுவதற்கு சிறிது அவகாசம் கொடுப்பார்.
தூக்கில் தொங்கவிடப்பட்ட ஒருவன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அவனது கால் பெருவிரல் நுனியை எந்தஅளவுக்கு தரையில் அனுமதிக்க வேண்டுமோ, அந்த அளவுக்கு மட்டுமே அந்த பெண்மணி கடைக்காரர் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள இடைவெளி விடுவார். அந்த ஒருநிமிட இடைவெளியில் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முடிந்தவர்கள் முந்தைய ஜென்மத்தில் ஏதோ புண்ணியம்செய்தவர்களாகத்தான் இருக்க வேண்டும்.
மீண்டும் பேரத்தை ஆரம்பிக்கும் அந்த பெண்மணி சுமார் ஒன்றரை மணி நேரம் அதாவது 90 நிமிடங்கள் இடையில் சோடா கூட குடிக்காமல் தம் கட்டி பேருரையாற்றுவார். ஆனால்இதுவரை அவருடைய பேருரையை கேட்கக்கூடிய அளவுக்கு நெஞ்சுரம்படைத்த கடைக்காரர் சுற்றுவட்டாரப் பகுதியில் யாரும் கிடையாது.
ராமநாதபுர ஜில்லாவே அந்தப் பெண்மணியைப் பார்த்து ஆடிப்போயிருந்தது. அப்படியொரு டேஞ்சர் டயபாலிக்கை, ஷாப்புக்கடையை நிர்மூலமாக்குவதற்கு அனுப்பி வைத்திருந்தார்கள் ஷாப்புக்கடையின் எதிரிகள்.
காலையிலேயே அபிராமம் முழுவதும் செய்திபரவிவிட்டது. அந்தப் பெண்மணி முதுகுளத்தூரில் பேருந்தில் ஏறிவிட்டாராம் என்கிற செய்தி காட்டுத்தீ போல, ஆனால் ரகசியமாக ஊரெங்கும் பரவிவிட்டது. சில கடைக்காரர்கள், வீட்டைப் பூட்டிவிட்டு மனைவி குழந்தைகளுடன் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குச் சென்றுவிட்டனர். சிலர் வயிறுவலி என்று மருத்துவமனைகளில் சென்று தஞ்சமடைந்து விட்டனர். ஆனால் தங்களுக்கு உண்மையாகவே வயிறு கலங்கியிருப்பதை அவர்கள் யாரிடமும் சொல்லாமல் மறைத்து விட்டார்கள். சிலர் இதற்காகவே திண்டுக்கல்லுக்கு ரயிலேறிச் சென்று வாங்கிவந்திருந்த திண்டுக்கல் பூட்டை எடுத்துக்கொண்டு, அடியாட்கள் சூழ கடைக்குச்சென்று கடையை பூட்டிவிட்டு சுமார் 120 கிலோ எடை கொண்ட 4 பேரை காவலுக்கு நிற்கச்செய்து விட்டுச் சென்றனர்.
அப்பாவி சேதுதாத்தா என்ன நடைபெறுகிறது என்பது புரியாமல், அதிகாலையில் சுப்ரபாதம் ஒலிக்க, சாம்பிராணி போட்டு கடையை மணங்கமழ திறந்து வைத்திருந்தார். தனது இஷ்ட தெய்வமான லட்சுமி தேவியை நெடுஞ்சான்கிடையாக விழுந்துவணங்கி, தனது அருட்பார்வையை 180 டிகிரிக்கு நேர்குத்தாக தன் மீது விழச் செய்ய வேண்டும் என்று விண்ணப்பித்துக் கொண்டார். போட்டோவில் இருந்த லட்சுமி தேவியைப் பார்த்தால் சற்று பயந்திருப்பது போலத்தான் காணப்பட்டது.
அதர்மம் தலைதூக்கும் பொழுதெல்லாம் அங்கே தர்மம் தலையெடுக்கும் என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் கூறியது உண்மையா? பொய்யா என்று இன்று தெரிந்துவிடும். கடவுள் சக்தியை மனித சக்தி வெல்ல முடியாதுதான். ஆனால் சரித்திரத்தை சற்று பின்னோக்கிப் பார்த்தால் அதர்மம் 99 சதவீதம் வெற்றி பெற்றிருக்கும். இறுதியாக ஒரு சதவீதம் மட்டுமே தர்மம் வென்றிருக்கும். அத்தகைய, ஊட்டச்சத்துக் குறைந்த சோமாலிய குழந்தையைப்போல் காணப்படும் தர்மத்திற்கு இன்று சோதனை ஏற்பட்டுள்ளது.
அந்தப் பெண்மணி சரியாக 9:25க்கு அபிராமத்தில் காலடி எடுத்து வைத்தார். தற்கொலை எண்ணம் கொண்ட – வீட்டில் மனைவியின் தொல்லை தாங்காத- அதிக வட்டிக்கு கடன் வாங்கிய- விவசாயம் செய்து நொடிந்து போன – நிலபுலன்களை விற்று சமுதாயத்திற்கு மெசேஜ் சொல்லும் தமிழ்படம் எடுத்த என ஒரு நான்கைந்து பேர் மட்டும் கடைகளை திறந்து வைத்திருந்தார்கள்.
அறியாமையின் காரணமாக சேதுதாத்தா ஷாப்புக்கடையை திறந்து வைத்திருந்தார். அன்று இந்தியா-பாகிஸ்தான் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதாக இருந்தாலும், ஷாப்புக்கடையின் பேரழிவைப் பார்க்க அங்குஎதிரிகள் பலர் குவிந்திருந்தனர். மதிய உணவுக்கு எந்த உணவகமும் அருகில் திறந்திருக்காது என்கிற காரணத்தால் மதிய உணவுக்காக கட்டுச்சோறு கட்டி எடுத்து வந்திருந்தார்கள்.
நியாயமாக கொடுப்பதாக இருந்தால் வில்லன் நடிகர் கோட்டா சீனிவாசராவுக்கு கொடுத்திருக்க வேண்டிய பில்ட் அப்பை அந்த பெண்மணிக்கு கொடுத்திருக்க வேண்டும். ஆனால் நிஜ வாழ்வில் ரீரிக்கார்டிங், கிராபிக்ஸ் போன்றவற்றின் உறுதுணை இல்லாத காரணத்தால் மிகச்சாதாரணமாக ஷாப்புக்கடைக்குள் நுழைந்தார்.
30 நிமிடங்களுக்குப் பிறகு…
சேது தாத்தாவுக்கு முற்பிறவி நியாபகங்கள் எல்லாம் தோன்றி மறைந்தன. அது எவ்வாறெனில்….
சேதுதாத்தா போன பிறவியில் ஒரு நாள் தவம் செய்துகொண்டிருந்த பொழுது அவர் முன் சனிபகவான் தோன்றினார். தாம் உம்மை பிடிக்கும் காலம் வந்து விட்டது. இன்று முதல் உமக்கு ஏழரை சனி தொடங்கப் போகிறது. தவத்தில் இருக்கு முனி சிரேஷட்டரை பீடித்தால் தமக்கு தோஷம் வந்து சேரும் என்பதால் தவத்தை இத்துடன் முடித்துக் கொள்ளுங்கள் என சனிபகவான் சேது தாத்தாவிடம் கூறினார். அதற்கு சேதுதாத்தா ” எம்மை பிடிப்பதாக இருந்தால் அடுத்த பிறவியில் பிடித்துக்கொள், இப்பிறவியில் எம்மால் தவத்தை நிறுத்த இயலாது” என்று கூறிவிட்டு, சனி பகவானை அவமானப்படுத்தும் விதமாக கண்களை மூடிக் கொண்டு அந்தப் பக்கமாகத் திரும்பி உட்கார்ந்து கொண்டார்.
கடுப்பாகிப் போன சனிபகவான் “எம்மையா அவமானப்படுத்துகிறாய், அடுத்த பிறவியில் உம்மை தொலைத்து கட்டிவிடுகிறேன் பார்” என்று பற்களை நறநறவென கடித்தபடி சென்றார்.
தமது தவம் நிறைவடைந்தால் இனிமேல் தமக்கு பிறவியே இருக்காது, ஞானமடைந்து சிவனடி அடைந்துவிடலாம் என மனப்பால் குடித்துக்கொண்டிருந்த சேதுத்தாத்தாவை, இந்திரனோடு சேர்ந்து கூட்டு சதி செய்து, ரம்பை, ஊர்வசி, மேனகை போன்றவர்களுக்கு சிலுக்கு போன்று உடை அணிவித்து “ஜிங்கினமணி, ஜிங்கினமணி ” பாடலுக்கு சென்சார் இல்லாமல் ஆட வைத்து சேதுதாத்தாவின் தவத்தை கலைத்து விட்டார் சனிபகவான். பயந்து போன சேதுதாத்தா சனிபகவானின் காலில் விழுந்து கதறினார்.
மிகப்பெரும் தவசீலர்… சிவபெருமானின் பக்தர்… தம் காலில் விழுந்து கதறியதைக் கண்டு மனம்வெதும்பிய சனிபகவான் சேதுதாத்தாவுக்கு ஒரு வரம்கொடுத்தார். தாம், சேது தாத்தாவிடம் கூறியபடியே அடுத்த பிறவியில் வந்து பிடிப்பதாகவும், ஆனால் மற்றவர்களைப்போல் ஏழரை ஆண்டுகள் அல்லாமல், விதிகளைத் தளர்த்தி, சலுகை அடிப்படையில் ஒரே ஒரு நாள் மட்டும் பீடிப்பதாகவும் வரமருளினார்.
அகமகிழ்ந்த சேதுதாத்தா தனது நெஞ்சார்ந்த நன்றிகளை சனிபகவானுக்குத் தெரிவித்துக் கொண்டார்.
சனி பகவான் அன்று தான் கொடுத்த வரத்தை நிறைவேற்றுவதற்காக இன்று ஷாப்புக்கடைக்கு வந்திருந்தார் அப்பெண்மணி வடிவில்….
அப்பெண்மணி பேசத் தொடங்கிய அரை மணி நேரத்தில் சேதுதாத்தாவின் ஞான திருஷ்டி திறந்துகொண்டதால் அனைத்தையும் உணர்ந்துகொண்டார். தனக்கு முக்தியளிக்க வந்த சனிபகவானின் (அப்பெண்மணியின்) காலில் நெடுஞசான்கிடையாக விழுந்து வணங்கினார். ஆனந்த மிகுதியால் பொலபொலவென கண்ணீர் உகுத்தார்.
இறுதியில்….
இந்தியா-பாகிஸ்தானை வென்றது…..
சேதுதாத்தா சிவபதம் அடைந்தார்…..
அப்பெண்மணி சிறைபுகுந்தார்…..
ஒரே கல்லில் 2 மாங்காய்…. மறைமுகமாக உலகை ஆளும் வியாபாரிகள் அனைவருக்கும் மகிழ்ச்சி…
முற்றும்
- தொடுவானம் 60. கடவுளின் அழைப்பு
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூதக்கோள் வியாழனின் மிகப் பெரிய துணைக்கோளில் அடித்தளப் பெருங்கடல் கண்டுபிடிப்பு
- கம்பன் திருநாள் – 4-4-2015
- பாட்டி வீட்டுக்கு போறோம் ( To Grandmother’s House we go )
- ஞாழல் பத்து
- எழுத்துப்பிழை திருத்தி
- சான்றோனாக்கும் சால்புநூல்கள்
- என்னைப்போல
- மிதிலாவிலாஸ்-7
- குளத்துமீனாக விரும்புமா பாத்திரத்து மீன்?
- மருத்துவக் கட்டுரை – இதயக் குருதிக் குறைவுநோய்
- நிழல் தந்த மரம்
- கருவூலம்
- வையவன் & ஜி.ஜே. தமிழ்ச்செல்வி நடத்தும் “இதயத்துடிப்பு” பணிப் பயிற்சி
- ஹாங்காங் தமிழ் மலரின் மார்ச் 2015 மாத இதழ்
- யாமினி கிருஷ்ணமூர்த்தி – (7)
- ஆத்ம கீதங்கள் –21 ஆடவனுக்கு வேண்டியவை
- உளவும் தொழிலும்
- வைரமணிக் கதைகள் -8 எதிரி
- சீஅன் நகரம் -5 மதில் மேல் சவாரி
- ஒட்டுண்ணிகள்
- தினம் என் பயணங்கள் – 43 பட்ட காயமும் சுட்ட வேலையும்.. !
- English rendering of Thirukkural
- ஷாப்புக் கடை
- தொல்காப்பிய அகத்திணையியலில் இளம்பூரணர் உரைவழி தமிழர் அகம்சார் சிந்தனைகள்
- உலகம் வாழ ஊசல் ஆடுக
- உதிராதபூக்கள் – அத்தியாயம் 6
- செல்மா கவிதைகள்—-ஓர் அறிமுகம்