கன்னையா இன்று ஓய்வு பெறுகிறார். அறுபது வயது தெரியாத தோற்றமும், சுறுசுறுப்பும் அவரது அடையாளங்கள். எந்நேரமும் ஏதாவது செய்து கொண்டே இருப்பது அவரது வழக்கம். கன்னையா வுக்கு கொஞ்சம் போலச் சங்கீதம் தெரியும். சிறுவயதில் மிருதங்கம் கூட வாசிக்கக் கற்றுக் கொண்டார். ஓய்வுக்குப் பிறகு முறையாக பயிற்சி எடுத்தபின், மெல்லிசைக் குழுக்களிலோ அல்லது கர்நாடகச் சங்கீதக் கச்சேரிகளுக்கோ வாசிக்கலாம் என்று ஒரு எண்ணம் அவருக்கிருந்தது.
கன்னையா ஒரு அரசாங்க அலுவலகத்தில் எழுத்தராக சேர்ந்து, இன்று ஒரு அதிகாரியாக ஓய்வு பெறுகிறார். அவருடைய மேலதிகாரிகளுக்கு அவர் ஓய்வு பெறுவது அவ்வளவு இனிப்பான செய்தியாக இல்லை. கன்னையா எதையும் தன் வேலை என்று வரையறுத்துக் கொள்ளாதவர். காலை பத்து மணியில் இருந்து மாலை ஐந்து மணி வரை அவர் ஏதாவது ஒரு வேலையை செய்ய வேண்டும் என்ற கோட்பாட்டை உடையவர். அதற்குத்தானே தனக்கு ஊதியம் கொடுக்கிறார்கள் என்ற அடிப்படையான வாதம் அவரது மனதில் ஆழமாகப் பதிந்து கிடந்தது.
“ வாரத்துல அஞ்சு நாள்தான் வேலையே.. இரண்டு நாள் விடுப்பு. அதிலும் வருசத்துக்கு கூடுதலா 15 நாள் பண்டிகை விடுப்பு வேற.. அதுவுமில்லாம 12 நாள் கேசுவல் விடுப்பு, 30 நாள் பிஎல், நோய் கண்டா விடுப்புன்னு ஏகப்பட்ட விடுப்பு.. மிஞ்சிய நாள்ல வேலை செய்ய இன்னா கடுப்பு? எல்லாம் அரசாங்க வேலதானே? “
அவரது முகத்தில் இருக்கும் சிரிப்பு அவர் மற்றவர் மீது வைக்கும் கடுமையான விமர்சனங்களைக் கூட எளிதாக எடுத்துக் கொள்ள வைக்கும்.
“ சொல்றபடி சொன்னா கல்லுளிமங்கன் கூட கரைஞ்சுதானே ஆவணும் “
அலுவலகத்தில் ஏதேனும் காரணத்திற்காக மல்லுக்கட்டு நடக்கும். சிலசமயம் அது ஜல்லிக் கட்டு போல ரத்த விளாறியாகக் கூட ஆகும். ஆனால் கன்னையா எதிலும் பட்டுக் கொள்ள மாட்டார். நியாயம் கேட்க வருபவர்களைக் கூட கூசிக் குனிய வைக்கும் அவரது பேச்சு.
“ என்னா பிரச்சினை..மணி ? ஒன் கோப்பை அவன்.. அதான் அந்த சந்தானம் பாக்க மாட்டேனுட்டான். நியாயந்தானே? என்னிக்காவது அவன் கோப்பை நீ பாத்துருக்கியா.. இல்லல்லே.. நீ பாத்திருந்தா அவன் இன்னேரம் உன் வேலையை முடிச்சிட்டு உனக்கு தேனீரும் வாங்கித் தந்திருப்பான்ல.. “
“ பாத்தா பாக்கறான்.. பாக்காட்டி போறான்.. எந்த நாயும் என் வேலையை பாக்க தேவையில்லை ஆனா கண்ட நாய் வேலையை எல்லாம் நான் பாக்கணுமான்னு அவன் அதிகாரிகிட்ட சொல்லிருக்கான்.. அவன் என்னை அப்படி எப்படி சொல்லப் போச்சு?”
“ தப்புதான்.. அப்படி சொல்லீருக்கக் கூடாதுதான்.. ஆனால் அதுக்காக அலுவலகத்தில உர்ருன்னு உறுமிக்கிட்டு காலைத் தரையில தேச்சுக்கிட்டு நீங்க ரெண்டு பேரும் கடிச்சுக்கிடணுமா “
சந்தடி சாக்கில் கன்னையா அவர்கள் இரண்டு பேர்களையுமே நாய்களாக்கியது அவர்களுக்கே தெரியாத வண்ணம் அவர் பேச்சு குழைந்திருந்தது.
“ரெண்டு பேர் கோப்பையும் கொண்டுட்டு வாங்க நானே பாத்திடறேன்”
0
பிரிவு உபசார விழாவில் அரங்குநிரம்பியிருந்தது. அலுவலக ஊழியர்கள் எல்லாம் பணம் போட்டு கன்னையாவுக்கு ஒரு புதிய மிருதங்கம் வழங்குவது என்று முடிவாகியிருந்தது. சண்டை போட்டுக் கொண்ட மணியும் சந்தானமும் முன் நின்று விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். வரவேற்பு மணி என்றும் நன்றி நவிலல் சந்தானம் என்றும் கூட முடிவாகியிருந்தது. விழாவுக்கு கன்னையாவின் மனைவி லலிதாமணி வரவேண்டும் என்று வேண்டுகோள் வைக்கப்பட்டு அதுவும் ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தது.
0
லலிதாமணி கொஞ்சம் தாட்டியான சரீரம் உடையவள். அவளுக்கும் கன்னையாவுக்கும் ஆறு வயது வித்தியாசம். லலிதாமணி கேரள நாட்டைச் சேர்ந்தவள். ஆனாலும் அவள் தமிழச்சி தான். அவளது குடும்பம் சில தலைமுறைகளாக அங்கேயே இருந்ததன் அடையாளம் அவளது நெற்றிச் சந்தனக் கீற்றிலும், தேங்காய் எண்ணைக் மணக்கும் கூந்தல் பின்னலிலும் தெரியும். லலிதாமணிக்கு ஏக ஆச்சர்யம். இதுவரை சொந்த நாட்டிற்கு போவது தவிர வேறு எந்த பொது நிகழ்வுக்கும் கன்னையா அவளை அழைத்துச் சென்றதேயில்லை. திருமண நிகழ்வுகளுக்குக் கூட அவள் குடும்பம் சார்ந்தது என்றால் அவள் தனியாகவும், அவர் குடும்பம் சார்ந்தது என்றால் அவர் தனியாகவும் செல்வார்கள். அலுவலகத்தில் விடுப்பு எடுக்காமல் அவர் பணி புரிவதும் அதற்குக் காரணம்.
லலிதாமணிக்கு குழந்தைகள் இல்லை. இருந்திருந்தால் ஒருவேளை அவர்களுக்காக கன்னையா விடுப்பு எடுத்திருக்கக் கூடும். அவர்கள் கட்டளைக்கேற்ப அவர் வளைந்திருக்கக் கூடும். அதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
0
கன்னையா காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து விடுவார். புறநகரில் சிறியதாக ஒரு வீட்டைக் கட்டிக் கொண்டு, மின்சார ரயிலில் அலுவலகம் போய் வருகிறார் அவர். சந்தடி இல்லாத புறநகர் அவருக்கு ஏகாந்தமாக இருக்கிறது.
வீட்டின் பின்னால் துணி தோய்க்கும் பாறாங்கல்லும், உறை இறக்கிய கிணறும் உள்ளது. ராட்டினமும் தாம்பக் கயிறும் பழமையின் அடையாளமாக காடசி அளித்தன.
கன்னையா எப்போதும் கதர் வேட்டி தான் கட்டுவார். உள்ளே வெள்ளை நிற அண்ட்ராயர் இருக்கும். காலைக் கடன்களை முடித்து விட்டு, கிணற்றங்கரையில் அவர் வாளி தண்ணீரை இழுத்து கொட்டிக் கொண்டு தனக்குப் பிடித்த ஸ்வரங்களையோ பாடல்களையோ பாடிக் கொண்டிருப்பார். லலிதாமணி விழிப்பு வந்தாலும் படுக்கையிலேயே படுத்துக் கொண்டு அவரது கானத்தை ரசித்துக் கேட்டுக் கொண்டிருப்பாள். ஒரு முறை கூட லலிதாமணிக்கு சங்கீதம் பிடிக்குமா என்று கன்னையா கேட்டதில்லை. அவளும் சொன்னதில்லை.
குளித்து, தன் துணிகளைத் தானே தோய்த்து, காயப்போட்டு விட்டு தான் கன்னையா கிணற்றடியிலிருந்து வருவார். கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆகும் அதற்கு. கட்டிய ஈரத்துண்டுடன், பூசை அறையை எட்டிப் பார்த்து விட்டு, தன் அறைக்குப் போய் விடுவார் அவர். அலுவலகம் கிளம்பும்வரை அவர் வெளியே வரமாட்டார்.
சங்கீதத்தைத் தவிர எதிலும் ரசனை இல்லாதவர் கன்னையா. லலிதாமணியின் கேரள சமையலைப் பற்றி புகாரோ, பாராட்டோ அவரிடமிருந்து வந்ததில்லை. போட்டதைச் சாப்பிடுவார். கட்டிக் கொடுப்பதை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவார். “ வரேன்” என்றோ “ ஏதாவது வேணுமா?” என்று அவர் ஒரு நாள் கூடக் கேட்டதில்லை.
லலிதாமணி இதற்கெல்லாம் பழகிக் கொண்டாள். அவளே எல்லாவிதமான நிர்வாகத் திறன்களையும் கற்றுக் கொண்டாள். மாதச் சம்பளம் வந்த உடன் பூசை அறையில் வைக்கப்பட்டிருக்கும் பணக்கட்டு அவளது குடும்பத் தேவைகளுக்கு என்று கன்னையாவும் சொன்னதில்லை. அவளும் கேட்டதில்லை. மாதக் கடைசியில் அது கட்டு குலைந்து இளைத்திருக்கும். ஆனால் முதல் தேதியன்று புது கட்டு வரும்போது மீதமான பணம் காணாமல் போயிருக்கும்.
மாலை கன்னையா வீடு வரும்போது புதிய திரைச்சீலைகளோ, நாற்காலிகளோ வீட்டில் இருக்கும். அதைப் பற்றியும் கன்னையா கேட்க மாட்டார்.
அவருக்கென்று இருக்கும் தனி மேசையில் அவர் போய் உட்கார்ந்து கொண்டு, அலுவலகத்திலிருந்து கொண்டு வந்த கோப்புகளைப் பார்க்க ஆரம்பித்து விடுவார். உணவு மேசையிலிருந்து, வாசனை அவர் நாசியை எட்டும்போது தான் அவருக்கு ஸ்மரணையே வரும்.
லலிதாமணிக்கு சங்கீதம் தெரியும். முறையாக அவள் அதைக் கற்றுக் கொண்டிருக்கிறாள். கன்னையா தன்னைப் பெண் பார்க்க வந்தபோது அவள் திருவாங்கூர் வித்வான் சுவாதி திருநாள் இயற்றிய கீர்த்தனங்களில் ஒன்றைப் பாட அவள் தேர்வு செய்திருந்தாள். ஆனால் கன்னையா அவளைப் பாடவே விடவில்லை. அவர் ஒரு மணி நேரம் தாமதமாக வர, சலுகை வாங்கிக் கொண்டு அலுவலகத்திலிருந்து வந்திருந்தார். பெண் பார்க்கும் வைபவத்தை தான் தங்கியிருக்கும் ஆண்கள் விடுதிக்குப் பக்கத்திலேயே வைக்க வேண்டும் என்பது மட்டும்தான் அவரது ஒரே நிபந்தனை. முடித்து விட்டு அவர் அலுவலகம் போக வேண்டும்.
சரிகை வைத்த வெள்ளைப் பட்டுப்புடவை, நெற்றியில் சந்தனக் கீற்று, தலை நிறைய மல்லிகைப் பூவுடன் அழகுச் சிலையாக வந்து நின்ற லலிதாமணியை அவர் ஏறெடுத்துப் பார்க்கவேயில்லை. தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
“ என்ன பிடிச்சிருக்கா?” என்றார் தூரத்து சொந்தமான ஒரு மாமா.
“ இப்போ கெளம்பினா 9 மணி லோக்கலை பிடிச்சிரலாம் “
கூட்டமே சிரித்தது.
“ நான் கேட்டது லோக்கல் இல்லே! கேரளா.. பொண்ணு பிடிச்சிருக்கான்னு கேட்டேன்”
“ ம்!ம்! “ எழுந்திருக்க யத்தனித்தார் கன்னையா. மாமா தோளை அழுத்தி உட்கார வைத்தார். “ பலகாரம் கொடுப்பாங்க.. இரு “
“ மாமா அதுக்கெல்லாம் நேரமில்லே! பலகாரத்தை இந்த டிபன் டப்பாவுல போட்டுரச் சொல்லுங்க.. சாவகாசமா மதியம் சாப்பிட்டுக்கறேன்!”
அடுத்த ஐந்தாவது நிமிடம் அவர் கிளம்பி விட்டிருந்தார். லலிதாமணி சிலையாக நின்று கொண்டிருந்தாள்.
0
லலிதாமணி ஒன்றும் தெரியாதவள் அல்ல. அவருடைய லயிப்பு வேலையிலும் சங்கீதத்திலும் இருப்பதை அவள் பூடகமாக உணர்ந்து கொண்டாள். ஒலி நாடாப் பெட்டிகளில் கிடைக்கும் அவருக்குப் பிடித்த சங்கீதத்தை வாங்கி வந்து அவர் மேசையில் வைப்பாள். அதைப் போட்டுக் கேட்கும் பெட்டி அவள் சீதனமாகக் கொண்டு வந்தது. ஆனால் அவைகளை புதுக் கருக்கு கலையாமல் மேசை மேலேயே வைத்திருப்பார் கன்னையா. மனைவியின் பொருள் என்று நினைத்து தொடாமல் இருந்தாரோ என்னவோ! மனைவியே ஒரு பொருள் என்று நினைத்து தொடாமல் இருப்பவருக்கு ஒலி நாடாவும், நாடாப் பொருள் தான்.
ஒரு கட்டத்தில் கன்னையாவை ஈர்க்கும் முயற்சியில் லலிதாமணி சலித்துப் போனாள். வீட்டில் தனியாக இருக்கும் நேரங்களில், மெலிதான குரலில் தனக்குப் பிடித்த பாடல்களை பாடுவதை ஒரு வழக்கமாக ஆக்கிக் கொண்டாள். அவளுக்கு அதில் ஒரு ஆனந்தம் கிடைத்தது!
0
மாலை ஆறுமணிக்கு விழா ஏற்பாடு செய்திருந்தார்கள். பெரிய ரோஜாப் பூ மாலை ஒன்று சுவற்றின் ஆணியில் மாட்டி வைக்கப்பட்டிருந்தது. லலிதாமணி மாலையைக் கன்னையாவுக்கு போடுவதாக ஏற்பாடு. தும்பைப்பூ நிறத்தில் சட்டை அணிந்து, இன்னமும் இளமையுடன் அமர்ந்திருந்தார் கன்னையா. அவருக்கருகில் ஒரு நாற்காலி போடப்பட்டு காலியாக இருந்தது. அது லலிதாமணிக்கான நாற்காலி. அதிகாரிகள் முன் வரிசையில் அமர்ந்து ஆவலோடு காத்திருந்தனர். இதுவரை கன்னையாவின் மனைவியை யாருமே பார்த்ததில்லை. அவர் எப்படியிருப்பார். கன்னையா போன்ற நல்ல மனிதரின் மனைவி நல்லவளாகத்தானே இருக்க முடியும்?
மணியும் சந்தானமும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தனர்.. இன்னமும் லலிதாமணி வந்த பாடில்லை..
“ ஐயா அம்மா வர நேரமாகுது.. நாம விழாவ ஆரம்பிச்சுடலாமா., நடுவில வந்தா அப்ப மாலையை போடச் சொல்லிடலாம் “
மேலதிகாரிக்கும் வேறு வழி தெரியவில்லை. சரி என்று தலையாட்டினார்.
0
அலுவலகத்தின் பக்கத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு இருந்தது. அதன் மொட்டை மாடியில் பல பெண்மணிகள் பேசிக் கொண்டே இந்த அலுவலகத்தில் நடைபெறும் விழாவை பார்த்த வண்ணம் இருந்தனர். ஒலிபெருக்கி மூலமாக கன்னையாவின் புகழ் பாடப்பட்டபோது, அவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.விழா முடிவில் கன்னையாவுக்கு மிருதங்கம் பரிசளிக்கப் பட்டது. மேலதிகாரியே மாலையையும் போட்டார்.
கடைசி வரை லலிதாமணி வரவேயில்லை. அவள்தான் அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியிலிருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறாளே!
0
வாசலில் ஆட்டோ ரிக்ஷா ஏற்பாடு செய்து கன்னையாவை வழியனுப்ப வந்தனர் அலுவலக ஊழியர் அனைவரும். கன்னையா ஏறியவுடன் மணி மிருதங்கத்தை எடுத்து அவருக்குக் கொடுக்க யத்தனித்தான். சட்டென்று அவர் பக்கத்தில் ஏறி அமர்ந்த லலிதாமணி மிருதங்கத்தை வாங்கி மடியில் வைத்துக் கொண்டாள். கன்னையா கழுத்தில் இருந்த ரோஜாமாலை உதிர்ந்து, பூவிதழ்கள் அவள் மடியில் விழுந்தன. மிருதங்கம் இருவருக்குமான குழந்தையாய் அவள் மடியில் கிடந்தது.
சில்லென்று வீசிய காற்றில், மெய்மறந்து கண்களை மூடி இருந்தாள் லலிதாமணி. கன்னையாவின் கை அவள் தோள் மீது படர்ந்திருந்தது!
0
- இந்திரனின் நெய்தல் திணை
- ஆத்ம கீதங்கள் –23 மாறியது மேலும் மாறும் ..!
- மிதிலாவிலாஸ்-8
- பிரபஞ்ச உருவாக்கத்தில் பேபி ஒளிமந்தைக் கொத்துக்கள் வடிப்பில் கரும்பிண்டத்தின் பங்கு
- தொடுவானம் 62. நேர்காணல்
- மிதவை மனிதர்கள்
- வைரமணிக் கதைகள் – 10 ஓட்டங்களும் இலக்குகளும்
- ‘சார்த்தானின் மைந்தன்’
- தமிழ் ஸ்டுடியோவின் புதிய முன்னெடுப்பு – படச்சுருள் (அச்சிதழ்)
- வெட்டிப்பய
- நூல் மதிப்புரை – சாந்தாதத் அவர்களின் “வாழ்க்கைக் காடு”
- படிக்கலாம் வாங்க… “ வகுப்பறை வாழ்விற்கானப் பந்தயமா..” ஆயிஷா நடராசனின் “ இது யாருடைய வகுப்பறை “ : நூல்
- அவநம்பிக்கையின் மேல் நம்பிக்கை
- ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் ” நெய்தல்” ( கடலும் கடல் சூழ்ந்த நிலமும்)- பொன் விழா நிகழ்ச்சி