இந்திரனின் நெய்தல் திணை

This entry is part 1 of 14 in the series 5 ஏப்ரல் 2015

indiran bk

“கவிதை அனுபவம் என்பது அழகியல் பார்வை மட்டுமல்ல.

சமகால அரசியல், மானுடவியல், சமூகவியல் இவை

அனைத்தும் சேர்ந்திருக்க வேண்டும் . நான் இப்படி சொல்லும்

போதெல்லாம் அப்படியானால்

கவிதைக்கு அழகுத் தேவையில்லையா? என்று கேட்கிறார்கள்

சில கவிதைப் பிதாமகன்கள்.

கவிதை வெறும் அழகியல் சார்ந்தது மட்டும் தான் என்றால்

ப்ளாஸ்டிக் ரோஜாக்கள் வந்தப் பிறகு தோட்டத்து ரோஜாக்கள்

தேவையற்றுப்போயிருக்கும்.

ப்ளாஸ்டிக் ரோஜாவில் அழகு உண்டு. மிக நேர்த்தியாக வண்ணங்களும்

மென்மையும் பனித்துளியின் காட்சிப்படிமமும் செதுக்கப்பட்டு

உருவாக்கப்பட்டிருக்கும்,

ஆனால் தோட்டத்து ரோஜாவின் அழகிற்கு தனி இடம் உண்டு.

தோட்டத்து ரோஜாவின் அழகுடன் சேர்ந்திருக்கிறது

அதன் அரசியல், அதன் சமூகவியல் , அதன் வணிகவியல்

அதன் மானுடவியல். கவிதையும் இதெல்லாம் கலந்த

ஒரு தோட்டத்து ரோஜாவாக மட்டுமே இருக்க வேண்டும்

வெறும் அழகியல் சார்ந்தது மட்டுமல்ல கவிதை.

கவிதையில் தோட்டத்து ரோஜாவைப் போல இவை அனைத்தையும்

ஒரு தேர்ந்த படைப்பாளி கொடுத்துவிடுவான்.

 

 

.

 

இந்திரன் அவர்களின் ‘மின் துகள் பரப்பு” கவிதையை வாசித்து விமர்சனம்

செய்திருக்கிறேன். கவிதை வரிவடிவத்தையும் தாண்டி நவீன கணினி

யுகத்தில் காட்சிப்படிமத்திற்கும், ஏன் டிஜிட்டல் வடிவத்தையும்

சேர்த்துக்கொண்டு புதியதோர் முகத்துடன் வர முடியும் என்பதை

அக்கவிதைகளின் மூலம் இந்திரன் காட்டி இருப்பார். அது ஒரு வகையான

சோதனை முயற்சி என்று என் விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

(பார்க்க: http://www.vaarppu.com/review.php?rvw_id=29)

அண்மையில் வெளிவந்திருக்கும் “மிக அருகில் கடல்” கவிதைகளில்

கவிதைக்கான அழகியல் மிக நேர்த்தியாக வெளிவந்திருப்பதுடன்

சம கால அரசியல், மானுடவியல் , சமூகவியல், அறிவியல்

பார்வைகள கவிதைக்கடலில் அலைகளாக தொடர்ந்து படைப்புலகை

ஈரமாக வைத்திருக்கின்றன.

 

தமிழ் மரபின் திணை ஒழுக்கம் இக்கவிதைகளின் அடிநாதமாக

அமைந்திருப்பது ரொம்பவும் தற்செயலானதாக அமைந்துவிட்டதா?

அல்லது அப்படியான ஒரு திட்டமிடலுடன் இகக்விதைகள் எழுதப்பட்டதா?

என்பது தெரியவில்லை. க்டலும் கடல் சார்ந்த வாழ்வும் நெயதல் திணைக்குரிய

“பிரிவு , பிரிவு ஆற்றாமை ‘ சார்ந்தவை. கொதுலூப் தீவுகளில் எங்கிருந்து

இந்த திணை ஒழுக்க ஆழ்மனம் விழித்துக்கொண்டது ? !

 

“க்டல் செதுக்கிய சிற்பத்தில் பாண்டிச்சேரியிலிருந்து கொதுலுப்புக்குக்

கப்பல் ஏறி வந்த கரும்புத் தோட்டத்து கூலி அடிமையின் முகஜாடை

திடுக்கிட்டு எழுந்து விளக்கைப் பொருத்தினேன்… க்டல் தன் ஞாபகார்த்தமாக

சங்கு ஒன்றை தரை விரிப்பின் மேல் கிடத்தியிருந்தது”

பாண்டிச்சேரியில் இருந்து பிரிந்தவனின் முகஜாடையும்

அப்பிரிவும் அப்பிரிவு பல தலைமுறைகள் கழிந்தப்பிறகும்

சுற்றுலா பயணியாய் தன் கடற்கரைக்கு வந்தவனைத் திடுக்கிட்டு

முழிக்க வைப்பதும் அவன் தன் சாயலை அதில் உணர்வதும்..

பிரிவாற்றமையின் சமூக அரசியல் பார்வையின் உச்சம்!

அகத்திணையின் மானுடவியல் பிரிவு ஒழுக்கத்தை

புறத்திணையின் அரசியலுடனுன் இணைக்கும் படைபபாளனின்

மிக நுண்ணிய கண்ணி. அக்கடல் தன் சாயலைச் சுமந்து

வந்திருப்பவனுக்கு பரிசாகக் கொடுத்திருக்கும் ‘சங்கு”

ஒரு காட்சிப்படிமம். காட்சிப்ப்டிமம் கவிதை அழகியலின்

ரசனை.

 

 

படிமங்களிலும் உத்திகளிலும் உருவகங்களிலும்

காலத்திற்கேற்ற காட்சிகளை உள்வாங்கிக்கொண்டு அதைத் தன்

கவிதை மொழியில் கொண்டு வர வேண்டியதே நவீன கவிதையின்

நாற்காலியாக இருக்க முடியும். எத்தனைக் காலங்கள் ஏற்கனவே

கம்பனும் காளிதாசனும் சொல்லிய உவமானங்களை அப்படியே

சொல்லிக்கொண்டிருப்பது? கம்பனுக்கும் காளிதாசனுக்கும் கிடைககாத

அறிவியல் வளம் இன்றைய கவிஞ்னுக்கு கிடைத்திருக்கிறது.

தொலைக்காட்சிகள் நம் வாழ்வியலையும் வாழ்விடத்தையும்

மிகவும் சுருக்கிவிட்டன. இந்தப் பூமி உருண்டை ஒரு கால்ப்பந்து

போல நம் கண்களுக்குத் தெரிகிறது தொலைக்காட்சி திரையில்.

அந்த உருண்டையில் எங்கோ ஒரிடத்தில் நாமும் நம் கவிதைகளும்

சிறிய எறும்பு போல ஊர்ந்துக் கொண்டிருக்கிறோம். இக்காட்சியை

அன்றைய கவிஞ்ன் தன் கற்பனையில் மட்டுமே கண்டிருக்க முடியும்.

இன்றைய படைப்பாளிக்கு இது கற்பனை அல்ல, நிஜம். எனவே

கற்பனைகள் அனைத்தும் அனுபவங்களாகிவிடும் யுகத்தில்

இன்றைய கவிஞ்ன் வாழ்ந்துக் கொண்டிருக்கிறான். எனவே

அவன் படைப்புகள் அவன் அனுபவங்களை உணர்த்தியாக

வேண்டும். மின் துகள் பரப்பு கவிதைகளில் இவை அனைத்தையும்

சோதனை முயற்சியாக செய்திருக்கும் கவிஞர் இந்திரன்

கொதுலூப் தீவுகளில் இம்முயற்சிகளின் வெற்றியை முழுவதுமாக

தன் கடல்மொழியில் கண்டடைகிறார்.

 

காதலாய் தன் பிரதிபிம்பமாய் வரும் வரிகளில்,

 

இதுவ்ரைப் பரிச்சயப்பட்டிராத அந்நிய தீவு ஒன்றில்

சம்பிரதாயமாய் எல்லோரையும் போல்தான்

நாம் சந்தித்துக் கொண்டோம் முதல் முறையாக

 

உன் புருவ வளைவில்

புன்னகை ஒன்றை

சரலென் என்னிடம் நீட்டியபோது

என்னிடமிருந்த எல்லா திசைக்காட்டும் கருவிகளும்

வழிகாட்டும் வரைபடங்களும்

ஏனோ திடீரெனத் தொலைந்துப் போயின

(பக் 36)

 

ஒரு கட்லோடியின் பார்வையில் திசைக்காட்டும் கருவியும்

வழிகாட்டும் வரைபடமும் தானே வரமுடியும்!

என்ற உணர்வு வாசகனுக்கு வருகிறது. வாசகன் இப்போது

கடலோடியாக கடல் அலைகளில் பயணிக்க ஆரம்பித்துவிடுகிறான்.

இப்பயணத்தில் கரீபியக்கடலும் அட்லாண்டிக்கடலும்

சங்கமிக்கும் இடத்தில் கடல் கொள்ளைக்காரர்கள் தொலைத்தக்

கப்பல்களின் பெயர்கள் நம் காதில் விழுகின்றன.

முதல் முறையாக தமிழன் என்ற அடையாளம் மங்கி

மிக இயல்பாக வெளிநாடுகள் செல்லும் போதெல்லாம்

“இந்தியன்’ என்ற அடையாளம் கடவுச்சீட்டு வழியாக

நம்மிடம் ஒட்டிக்கொள்ளும்.

இக்கவிதைகளில் வரும் கருப்பினத்தமபதிகள் தங்களை

இந்தியாவின் பூர்விகக்குடிகள் என்றே அறிமுகம்

செய்து கொள்கிறார்கள்.

க்டல் பாறையில் வந்தமரும் பறவையோ தன் கருத்த வாலை

அசைத்து சொந்தம் கொண்டாடுகிறது..

கவிதை இத்துடன் முடிந்திருந்தால் இக்கவிதை வெறும்

காட்சிப்படிமமாக மட்டுமே முடிந்துப் போயிருக்கும்.

ஆனால் கவிதையோ அழகியலையும் தாண்டி காட்சிகளின்

ஊடாக அரசியலையும் சமூகவியலையும் பேச வேண்டும்

என்பதை தன் இலக்காக தன் நேர்காணல்களில் முன்வைக்கும்

இந்திரன் தன் கவிதையில் அதைச் செய்திருக்கும் இடம்

இக்கவிதையின் கடைசிவரிகள்.

 

“தீவின் தனிமையில்

என் உண்மை சொரூபம் தேடி

அமர்ந்திருக்கிறேன்

மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து

நிறமிழந்த மரப்பெஞ்சின் மீது..” (பக் 55)

 

‘நான் இந்தியாவின் பூர்விகக்குடியா” இந்தியனா?

இல்லை ஆப்பிரிக்கா தான் மனித குலத்தின் பிறப்பிடம்

என்றால் இந்தக் கறுப்பனான நான் யார்? ”

மிக நுண்ணிய அரசியலை வைத்திருக்கும் இந்திரனின்

பார்வை ..இது.

 

.

 

“பாறையில் பதிந்த டைனோசரின் பாதச்சுவடுகளை

ஆய்வாளர்கள் தூரிகையினால் சுத்தம் செய்து வாசிப்பது போல

நான் உன்னை வாசிக்கத் தொடங்குகிறேன்” (பக் 63)

 

 

“பிளாட்பாரம் கிடைக்காமல்

வெளியே நிற்கும் ரயில்கள் போல

திறந்து வாசிக்கப்படாத உனது ஈமெயில்கள்

எங்கே காத்திருக்க நேருமோ என

கணந்தோறும் அஞ்சுகிறேன்” (பக்44)

 

 

“கவிதை என்பது ஒரு புதிய புரிதல் முறை. தற்கால வாழ்க்கை – வாகன

நெரிசல், கணிப்பொறி, மின் துகள் பரப்பு, விமானத்தின் வேகம், தார் உருக்கும் இயந்திரத்தின்

அழகு, சின்னத்திரை பிம்பங்கள், வெள்ளித்திரை வேடிக்கைகள், தனக்கான புதிய கவிஞனை எதிர்பார்த்து

நிற்கிறது. ” என்று சொல்லும் கவிஞ்ர் இந்திரன் தன் ஒவ்வொரு கவிதைகளிலும்

அதைச் செய்திருக்கிறார்.

 

நவீன கவிதை குறித்த தன் புரிதல்களை அவரே சோதனை முயற்சி

செய்து அம்முயற்சிகளில் வெற்றி அடைந்து நவீன கவிதையின்

ஒரு வழிகாட்டியாகவே திகழ்கிறார் கவிஞர் இந்திரன்

நம் கவிதைக்கடலில் கடலோடியாக பயணிக்கிறார்.

கடலின் மொழி கவிஞ்ருக்கு தன் இலக்கை நோக்கிய

பயணத்தில் மிக அற்புதமாக தன் பாய்மரக்கப்பலை

விரித்து பயணித்துவிட்டதற்காய் கொதுலூப் தீவுகளுக்கு நாம்

நன்றி சொல்லலாம்…

 

அதிலிருந்து ஒரு கவிதை:

 

நம்பிக்கை நட்சத்திரம்

———————–

 

இருளின் சுவர்களுக்குள்

ஆயுதம் தாங்கிய நிழல்களால் சூழப்பட்டு

நான் காவலில் வைக்கப்பட்டிருக்கையில்

 

நீ என் காதில் கிசுகிசுத்தாய்:

‘இருளின் கர்ப்பப் பை

வெளிச்ச விதைகளை

சூல் கொண்டிருக்கிறது’

 

காய்ந்த முள் பொடிப்பொடியாய் காற்றில் பறக்கும்

கோடை வெயிலில்

நதியாய் நீர் வற்றிப்போய்

பாலை மணல் வெளியாய் நான் திரிந்து கிடக்கையில்

 

நீ என் அருகமர்ந்து

விழி நீர் துடைத்து கண்களில் முத்தமிட்டுச் சொன்னாய்:

‘மணலுக்கும் கீழே

பல நதிகள் பாய்ந்து கொண்டிருப்பதை

அறியாதவனா நீ”

 

இலையுதிர் காலத்தில்

நம்பிக்கையின் எல்லா இலைகளும் உதிர்த்து

சோக மரமாய் நான் தனிமையில் நிற்கையில்

சந்தனம்போல் மணக்கும் உன் குளிர்ந்த கரங்களை

என் நெற்றியின் மீது படிய வைத்து

ஒரு கவிதை வரி சொன்னாய்:

 

‘புதிய தளிருக்கு இடம் கொடுத்து

பழைய சருகுகள் உதிர்ந்தன என்று

புரிந்து கொண்டவை பறவைகளே’

 

——

 

 

கவிதை தொகுப்பு:

மிக அருகில் கடல்”

 

கொதுலூப் தீவுகளில் எழுதிய கவிதைகள்

 

வெளியீடு: யாளி .

பக் 72

விலை ரூ 70/

 

———————–

 

 

Series Navigationஆத்ம கீதங்கள் –23 மாறியது மேலும் மாறும் ..!
author

புதிய மாதவி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *