படிக்கலாம் வாங்க… “ வகுப்பறை வாழ்விற்கானப் பந்தயமா..” ஆயிஷா நடராசனின் “ இது யாருடைய வகுப்பறை “ : நூல்

This entry is part 12 of 14 in the series 5 ஏப்ரல் 2015

era.nadarajan

 

கல்வித்துறை சம்பந்தமான பல நூறு விதை   நெல்களின் தொகுப்புகளிலிருந்து புது பரிமாணமான விதைனெல்லாய் இத் தொகுப்பை ஆயிஷா நடராசன் கட்டமைத்திருக்கிறார்.உலக வகுப்பறைகளை ஒரு பார்வை பார்த்து மூச்சுவிட்டுக்கொண்டு  நம்மைப் பற்றியும் கொஞ்சம் யோசித்திருக்கிறார்.ஆசிரியர் மாணவர் உறவு பற்றியும் அந்த உறவு இன்றைக்கு அச்சுறுத்தலாய் மாறி வருவதைப் பற்றிய அபாய பெருமூச்சுகளையும் இத்தொகுப்பு கொண்டிருக்கிறது அந்தப் பெருமூச்சு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தரும் நெருக்கடியில் அவர்களை பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாக மாற்றுவதில் வெற்றி கொள்கிற தோல்வியடைகிற இந்தியச் சூழல் பற்றியக் கவலையும் இதிலிருக்கிறது.

 

“ ஆசிரியர்களே தேவையில்லை” என்ற ரூசோவின் வாக்கியத்தோடு இந்நூல் ஆரம்பித்து ” எந்தச் சமூகமும் தனது ஆசிரியர்களின் நிலையைத் தாண்டும் சிறப்பை அடைய முடியாது.” என்ற வாக்கியத்தோடு முடிகிறது. பொதுவெளிச் சமூகம், ஆசிரயச்சமூகம் ஆகியவற்றுக்கிடையிலான முரண்பட்ட உலகத்தை வெளிச்சமாக்கும் தொகுப்பு இது எனலாம்.

 

மத அடிப்படைக் கல்வியில்  முதன்முதலாகப் பகுத்தறிவை இணைத்த தாமஸ் அக்வினாஸ்  முதல்  கல்வி உளவியலுக்கு  வித்திட்ட  ஹெர்பர்ட் வரை பலரை அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். ரூசோ , ஜான் டூயி பள்ளி முறைகளில் கல்வி என்பது பரந்துபட்ட  செயலாக்கம், பள்ளி ஒரு குறுகிய செயலாக்கம் என்பதை நிறுவுகிறார்.இது இந்தியச்சூழலில் மெக்காலே வருகைக்கு முன்னம் முதல் வார்தா காங்கிரஸ் மாநாட்டுத் தீர்மானங்கள், தோத்தாரிக் கமிசன் , தேசிய உரிமைப்பாதுகாப்புக் கமிசன் வரை என்று விரிவாகச் சொல்லபப்ட்டிருக்கிறது. ” மனிதர்களின் இயற்கையான திறன்களை  வளர விடாமல் சுய இயல்பை மழுங்கடித்து  விடும் அபாயமாக அரசு நடத்தும்  கல்வியில் உள்ளது. ஜனநாயகம் எனும் பெயரில் அதிகாரவர்க்கம் செய்யும்  ஒடுக்குமுறைச் செயல்பாடாக அது மாறுவதையும் விளக்குகிறார்,பத்து வயதிற்கு மேலான சூழல் தனது மதத்தை, அரசியல் பாதையை, எதைக்கறபது எனும் முடிவை குழந்தை எடுக்க வேண்டிய முடிவை வலியுறுத்துகிறார்.

 

கல்வி பாகுபாடு பற்றிய விரிவான ஆய்வுகள் இதில் உள்ளன.இது மெக்காலாவில் ஆரம்பிக்கிறது.குழந்தை பருவம் என்பதே தொழிற்புரட்சியின் கண்டுபிடிப்புதான்.வெகுஜனக் கல்வி இன்று ஆக்கிரமித்து விட்டது. கல்வி முறைகள் பற்றிய தொகுப்புரைகள் சுவாரஸ்யமானவை.கிறிஸ்துவக் கல்வியின் மறுமலர்ச்சி அய்ரோப்பியக் கல்வியாக  மலர்ந்திருக்கிறது.கிறிஸ்துவக் கல்வி பற்றிய ஒரு புகழ் பெற்ற விளக்கம் இப்படி அமைந்திருக்கிறது. ” எங்கள் வசிப்பிடத்திற்கு ஒரு நாள் அவர்கள் வந்தார்கள். அப்போது அவர்கள் கையில் பைபிளும் கழுத்தில் சிலுவையும் இருந்தன. எங்கள் கையில் நிலம் இருந்தது. எங்களுக்குக் கல்வி அளிப்பதாகக் கூறி  கண்ணை மூடிப்பிரார்த்தனை செய்யச் சொன்னார்கள். நாங்களும் செவிசாய்த்தோம். எங்கள் கண்களை நாங்கள் திறந்த போது  எங்கள் கழுத்தில்  சிலுவையும் கையில் பைபிளும் இருந்தன. அவர்கள் கையில் நிலம் இருந்தது” . இந்தியக் கல்விமுறையின் வரலாறு என்பதே ஆங்கிலக்கல்வித் திணிப்பு வரலாறுதான் .காந்தி கூட்டிய  1937ம் ஆண்டின் வார்தா மாநாடுமுதல் 1952  பிராந்திய மொழிக்கல்விசாலைகள் வரையிலான பல்வேறு முறைகளின்    மூலங்கள் ஆராயப்பட்டிருக்கின்றன.

 

ஆசிரியர் தகுதி பற்றிய   கருத்துக்கள் மூலம்  ஆசிரியர் சமூகம் இன்றைக்கு இருக்கும் நிலை பற்றிய விவாதங்களையும் கட்டமைக்கிறார்.குழந்தையைப் புரிந்து கொள்வதே ஒரு ஆசிரியரின் அடிப்படைத் தகுதி. ஆசிரியரின் இரு கண்கள் ஆசிரியர் மாணவர் உறவும், சிறப்பாகப் பாடம் நடத்துவதும்.  பரந்துபட்ட கல்விச் செயல்பாடுகள் குறுக்கப்பட்டு விட்டன.வகுப்பறைகளின் பிராண வாயு என்ற வகையிலானவர்கள் ஆசிரியர்கள் என்பதை நிறுவுகிறார்.

 

கல்வியில் முன்னேற்றமும், முதல் மூன்று இடங்களையும்   பெற்றிருக்கும் பின்லாந்து, சுவிட்சர்லாந்து, கியூபா பொன்ற நாடுகளின் விரிவான கல்வி நடவடிக்கைகளைப் பற்றி விரிவாகச் சொல்கிறார் நடராசன்.கல்வியின் மெக்க பின்லாந்து. கியூபா முழுமனிதனை உருவாக்கும் பட்டறை. அது கலங்கரை விளக்கு.அங்கு மருத்துவர்கள், பொறியாளர்கள் முதல் சாதாரண விடுதிச் சிப்பந்திகள் வரை அனைவரும் நாட்டின் கல்வியில் ஈடுபடுகிறார்கள்  இந்தியாவிடம் இடம் 116.. காப்பி அடிப்பதில் கனடா  முதலிடம். சிங்கப்பூரில் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதோடு குழந்தைகள் கலை இலக்கியத்தில் பங்களிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.பிரேசிலில் பாவ்லோ பிரையரே அதிகாரத்திற்கு எதிரான கல்வி வகுப்பறை ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டது.

ஜப்பான், சீனா, கனடா, ரஷ்யா உட்பட 28 நாடுகளில் பாடப்புத்தகம் இல்லை. இங்கிலாந்தில் பாடபுத்தகங்களுக்கு வேலையிலையென்று, காகிதமும் நிராகரிக்கப்படுகிறது.

 

நடராஜனின் கவலைகள் நீண்டு கொண்டே இருக்கின்றன. அவற்றை நமக்கான அக்கறையாகவும், கவலைகளாகவும் நம்முள் பதிய வைக்கிறார்.  இந்தியக் குழந்தைகளுக்கான கல்வி  உளவியல் கற்றல் கோட்பாடு அவசியம் தேவை என்கிறார்.பள்ளி ஆசிரியராக இருந்து பெற்ற அனுபவங்கள் என்ற அளவில் அவரின் கவலைகள்  முக்கியமானவை.கல்வி சமச்சீராக எவ்வித ஏற்றத்தாழ்வுமின்றி சென்றடைந்தால் ஏற்றத் தாழ்வற்ற  சமூகத்திற்கான காரணியாக அமையும். கல்வி முறைகளில் பெரும்பான்மையானவை சனநயக அமைப்பையோ சமதர்ம சிந்தனைகளையோ  அடிப்படையாகக் கொண்டவை அல்ல.

கல்வி முழுவதும் வியபாரமாகி விட்ட நிலையில்  பொதுப்பள்ளி முறை அவசியம். மார்க்ஸ் குறிப்பிடுவதைப் போல முடிவு பெற்று விட்ட மதக் கோட்பாடுகள் போல கல்வி ஒரு மூடிய வடிவம் அல்ல.  தொடர்ந்து கொண்டே இருக்கும்  அறிவியலின் இயல்பு போல கல்விச்சித்தாந்தம் ஒரு தொடர் நிகழ்வு என்ற வகையில் அது அணுகப்பட வேண்டும்.இந்திய ஆட்சி அதிகாரம் பெற்று இதுவரை கூடுதலான காலங்கள் நம்மை ஆட்சி செய்து வரும் காந்தியின் சீடர்கள்  நம்து வகுப்பறைக்குள் காந்தியின் ராட்டை நுழைந்து விடாமல்  பார்த்துக் கொள்வதில் பிரிட்டிஷ்காரர்களை விட அதிக உக்கிரத்தோடு செயப்பட்டிருப்பதை இனியேனும் மாற்ற செயல்திட்டங்கள் தேவை( 83 பக்கம் ) உலகில் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகளில்தான் கல்வியும் நிறைவாக உள்ளது. அங்கே ஆசிரியர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.  வகுப்பறைகளும் குதூகலமமாக உள்ளன. ( 212 பக்.) சமூகத்தின் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்களை விட முன்னேறிய சமூகத்தின் குழந்தைகள் அதிக நடத்தை முரண்களை வெளிக்காட்டுபவர்களாக இருக்கிறார்கள். பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட சமூகப் பின்னணியிலிருந்து வரும் குழந்தைகள் தன்னம்பிக்கை பெறும் வகையில் ஆசிரியரின் அணுகுமுறை அமைய வேண்டும்.பாவ்லோ பிரையரே நமது கல்விக்கு மாற்றாக முன் வைத்த அதிகாரத்திற்கு எதிரான கல்வி வகுப்பறை சனநாயகத்தை அடிப்படியாகக் கொண்டது.அது வளர்தெடுக்கப்பட வேண்டும்.

உலகளாவிய பல்வேறு  கல்வி முறைகளைப்பற்றியும், அவற்றின் வேறுபாடு பற்றியும் அலசல் இந்நூலில் இருக்கிறது. கல்வித்துறை சார்ந்த பல்வேறு நூல்களின் சுருக்கப்பட்ட தொகுப்பாகவும் இதைக் கொள்ளலாம்.தாய்வழிக்கல்வி குறித்த அழுத்தமானப்பதிவுகளும், மாற்றுக்கல்வி குறித்த செயல்திட்டங்களும் இல்லை. அடுத்த கட்டத்திற்கான நகர்வும் கலாச்சார அரசியல் நடவடிக்கைகளும் சொல்லப்பட்டிருக்கலாம்.ஆசிரியர் என்ற வகையிலும் அவரின் அனுபவம் சார்ந்த படிப்பினைகளின் தொகுப்பு முறையாக இதைக்கொள்ளலாம். பள்ளி ஆசிரியர் என்பதை மீறி படைப்பாளியாக தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறவர் என்ற வகையில் எடுத்துச் சொல்லும் முறையிலும் மொழிப்பயன்பாட்டிலும் நேரடித்தன்மையும் சுவாரஸ்யமும் கூடியிருக்கிறது. அடுத்த கட்டத்திற்கான நகர்வுகளுக்கான தொடக்கங்களை கல்வியாளர்கள் இந்நூலை முன் வைத்து ஆரம்பிக்கலாம் இது தரும் விவாதங்கள் மூலம்.

– சுப்ரபாரதிமணீயன்

 

( ரூ 150, பக்கங்கள் 250., புக்ஸ் பார் சில்ரன், பாரதி புத்தக நிலையம் வெளியீடு, சென்னை

Series Navigationநூல் மதிப்புரை – சாந்தாதத் அவர்களின் “வாழ்க்கைக் காடு”அவநம்பிக்கையின் மேல் நம்பிக்கை
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *