ஒரு பழங்கதை

author
0 minutes, 0 seconds Read
This entry is part 24 of 28 in the series 12 ஏப்ரல் 2015

மாதவன் ஸ்ரீரங்கம்

அவன் மூச்சடக்கி காத்திருந்தான். இரை கண்ணுக்குமுன்பாக நகர்ந்துகொண்டிருந்தது. ஒரு பன்றியை வேட்டையாடுவது அத்தனை சுலபமில்லை. மிகக்கடினமான அதன் தோலினை சாமான்யமாக எந்த அம்பும் ஊடுருவிவிடாது. அருகில் சென்றுதான் தாக்கவேண்டும். மிகத்தேர்ந்த பயிற்சிவேண்டும் அதற்கு. அது அவனுக்கு இருந்தது.

தலைவி கற்றுக்கொடுத்திருக்கிறாள். நீர்நிலைகளெல்லாம் வற்றிவிட்ட இந்த வெப்பக்காலத்தில் இரைகிடைப்பதே பெரும்பாடு. இதில் கிடைத்த இரையையும் தப்பிக்கவிட்டு வெறுங்கையுடன் நின்றால் தலைவியின் கோபத்தை சமாளிக்கவே முடியாது. அவன் மெல்லமெல்ல நகர்ந்தான்.

வெம்மை தாங்காமல் காய்ந்து உதிர்ந்திருந்த சருகுகளில் படாமல் நுனிக்கால்களால் நடந்துமுன்னேறினான். சிறிய சலசலப்பு கேட்டாலும் இரை உஷாராகிவிடும். லூமூ கூட இருந்திருந்தால் இந்த தொல்லையில்லை. சற்றும் அச்சமில்லாதவன் அவன். இரையை அச்சமூட்டி அதை தப்பிக்கவிடாதபடி முடக்குவதில் அவன் மிகுந்த சாமர்த்தியம் பெற்றிருந்தான். அவனை வேறுவேலையாய் வெகுதூரத்திற்கு அனுப்பிவைத்திருக்கிறாள் தலைவி.

உணவு உண்டு ஆறுநாட்களாயிற்று. வழிந்த வியர்வையை விரல்களால் வழித்து சுன்டினான். பன்றி முசுமுசுவென பெரிதாக மூச்சுவிட்டபடி நகர்ந்துகொண்டிருந்தது. அவன் கையிலிருந்த நீள குச்சியை தயாராக பிடித்துக்கொண்டான். குச்சிமுனையில் கட்டப்பட்டிருந்த கல் கூர்மைதீட்டப்பட்டிருந்தது. பன்றியின் இரண்டடித் தொலைவில் புதருக்குப்பின் மறைந்து காத்திருந்தான்.

சட்டென்று எழுந்து அதன் தொடைப்பகுதில் பலமாக குத்தினான். அதுதான் முதல்படி. தப்பித்து ஓடிவிடாதபடி தாக்குவது. அதன் அலறல் காடெங்கும் அதிர்ந்தது. சொருகியிருந்த ஆயுதத்தை பிடுங்குவது சிரமமாக இருந்தது. இப்படியும் அப்படியுமாக புரண்டு முரட்டுத்தனமாக மூர்க்கத்துடனிருந்தது. மிகுந்த சிரமத்துடன் அதை விடுவித்தபோது ரத்தம் சீறித்தெறித்து அவன் கால்களை நனைத்தது. அடுத்த தாக்குதலை அதன் கழுத்துப்பகுதியில் சொருகினான். அது பலங்கொண்டமட்டும் உருண்டபடி குரலெழுப்பியது.

இனி பயமில்லை. தலைக்குமேல் சூரியனை மண்டியிட்டு வணங்கினான். பன்றி இன்னும் முனகியபடி மூச்சுவாங்கிக்கொண்டிருந்தது. அவன் எழுந்து அதனருகில் சென்று இன்னொருமுறை அதன் கழுத்தில் குத்தி அமைதி படுத்தினான். பிறகு அதன் கால்களை கட்டி தூக்கி அன்றைய இரவுவிருந்தின் கொண்டாட்டம் பற்றிய குதூகலத்துடன் இரையைத் தோள்களில் சுமந்தபடி நடக்கத்தொடங்கினான்.
————————————————-

கையில் இரையுடன் வருவதை பார்த்ததுமே அவன் கூட்டத்தினர் உற்சாகமாக வரவேற்றார்கள். ஒருவன் வந்து இவன் தோளிலிருந்த பன்றியை வாங்கிக்கொண்டு இவன் முதுகில் தட்டிக்கொடுத்தான். முலைபருத்த அவன் இணை வயிறும் பெருத்திருந்தது. அனேகமாக இன்றிரவோ நாளையோ பிரசவித்துவிடக்கூடும். பிள்ளைகளெல்லாம் விளையாடிக்கொண்டிருந்தன.

பன்றியை வாங்கிச்சென்றவன் வந்து தலைவி அழைப்பதாக சைகை செய்துவிட்டுச் பன்றியின் தோலை உரிக்கத்தொடங்கினான். இவன் குகைக்குள் நுழைந்தான். தலைவி வாய் எதையோ முனுமுனுத்துக்கொண்டிருந்தது. கூட்டத்திற்கே அவள்தான் தலைவி. சிறந்த நிமித்தக்காரியும். அவள் விழிகள் சிவந்து விரிந்து ஒருவித மோனநிலையிலிருந்தாள். அவள் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. வற்றித்தொங்கிய முலைகள் சுருங்கியிருந்தன. அவள் கண்விழிக்கக் காத்திருந்தான்.

மெல்ல கண்விழித்து காலருகே அமர்ந்திருந்த இவன் தலைதொட்டு ஆசிகூறியபோது முகத்தில் சற்று துயரமிருந்தது. அவனுக்கு சைகை செய்தபடி எழுந்து நடந்தாள். குகை சற்று குறுகலாகத்தான் இருந்தது. சற்றுதள்ளி தலைவி நின்ற இடத்தருகே பாறைச்சுவரில் சித்திரம் தீட்டியிருந்தது.தலைவி தீட்டியதுதான். அருகில் பாறைக்குழிகளில் இலைச்சாறு காய்ந்துகிடந்தது.

அவன் சித்திரத்தையே பார்த்தபடியிருந்தான். அவள் காட்டிய முதல் சித்திரத்தில் பொழியும் மழைத்துளிகளோடு நடுநடுவே மீன் வடிவங்களிருந்தன. அடுத்த கட்சியில் உயரமான நாலுகால் விலங்குகள் கூட்டமாக இருந்தன. ஒவ்வொரு விலங்கின்மேலும் யாரோ மனிதர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் முகம் நீளமாகவும், உயரமாகவும் இருந்தார்கள். ஒரு கை விலங்கை கட்டியிருந்த கயிற்றினை பிடித்திருக்க, மற்றொரு கையில் வைத்திருந்த நீளமான பொருள் நிச்சயம் ஆயுதமாகத்தான் இருக்கவேண்டும்.

அடுத்த சித்திரத்தில் நிறைய மனிதர்களும் பிராணிகளும் படுத்துக்கிடந்தன. அதிலிருந்தவர்கள் முகங்கள் அவனுக்கு சற்றே பரிச்சயமானதாக தோன்றியது. தலை துண்டிக்கப்பட்டு தனியாகக் கிடந்த முகத்தில் லூமூவின் முகச்சாயலிருந்தது. அவனுக்குப்புரிந்தது. தலைவி வரைந்திருக்கும் இந்த சித்திரங்களின்வழி எதையோ சொல்லவிரும்புகிறாள். அது வரக்கூடிய அபாயத்தைப் பற்றிய எச்சரிக்கையாக இருக்கலாம். முன்பொருமுறை அப்படித்தான் நடந்தது.

நிறைய பறவைக்கூட்டங்களும் அடர்த்தியான மழையையும் வரைந்திருந்தாள். சிலநாட்களிலெல்லாம் பெருமழை அடித்துப்பெய்தது. குகைக்குள் மிகநெருக்கமாகப் புழுங்கியபடி உட்காரநேர்ந்தது. வெளியில் எங்கும் இரைதேடக்கூட இயலாத சூழல். மழை குறைந்தபின் பிரதேசம் முழுக்க சிதறிக்கிடந்த மீன்கள் வெகுநாட்களுக்கு உப உணவாக எஞ்சியது. தலைவியும் அவனும் குகைவிட்டு வெளிவந்தார்கள்.

பன்றியை முழுதாக உரித்திருந்தார்கள். தோலினை தனியாக எடுத்து வெயிலில் உலர்த்தப்பட்டிருந்தது. கால்களை உதைத்தபடி தாயின் முலை சப்பியபடி இருந்தது ஒரு குழந்தை. அவள் குத்துக்காலிட்டு அமர்ந்து ஒருகையால் குழந்தையை பிடித்தபடி இரையையை கொறித்துக்கொண்டிருந்தாள். அடித்தொண்டையில் குரலெழுப்பி அருகிலிருந்தவனை பார்த்து சிரித்தாள்.
___________________________________________

அவன் மிகுந்த யோசனையிலிருந்தான். பல்லிடுக்கின் உண்ட மாமிசத்தின் பிசிறுகளை நாவால் நிரடிக்கொண்டிருந்தான். அவன் இணை அருகில்வந்து அமர்ந்துகொண்டாள். வெயில் உச்சியில் எரிந்துகொண்டிருந்தது. இணையின் நிறைவயிற்றில் குழந்தையின் அசைவு சதைத்தளும்பலாக தெரிந்தது. மெல்ல அவள் வயிற்றில் கைவைத்து தடவினான். அவள் உடல் சிலிர்க்க தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள். இவன் முகத்திலிருந்த கவலையை உணர்ந்துகொண்டவளாக என்ன என்பதுபோல சைகை செய்தாள். இவன் ஏதும் செய்யாமல் வேறுபக்கம் திரும்பிக்கொண்டான்.

தோளில் சில முயல்களை தொங்கவிட்டபடி லூமூ வந்துகொண்டிருந்தான். எல்லோரும் வேகமாக அவனை சுற்றி சூழ்ந்துகொண்டார்கள். அவன் முகம் மிகப் பயங்கரமாக இருந்தது.

எல்லோரும் அவனை மொய்த்துக்கொண்டிருக்க, தலைவி மெல்ல நடந்துவந்து அந்த பெருமரத்தின் அடித்தண்டில் உட்கார்ந்துகொண்டாள். அவன் சைகையில் தான் சென்றுவந்ததன் அனுபவங்களை விளக்கியது அங்கு யாருக்கும் சரியாகப் புரியவில்லை. அவன் ஏதோ புதிய பொருளை பார்த்திருக்கவேண்டும்.

அறிமுகமற்ற ஒன்றினைப்பற்றிய விளக்கங்கள் யாருக்கும் உணரச் சிரமமானதே. எல்லோரும் குழப்பமாக அவனையே பார்த்துக்கொண்டிருக்க தலைவி மட்டும் மிககவனமாக அவனை கவனித்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு சற்று புரிவதுபோல இருந்தது அவள் முகமாறுதல்களிலிருந்து.

ஆனால் அவன் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன சைகயின்போது. அவன் அச்சப்பட்டிருப்பதை எல்லோருக்கும் உணர முடிந்தது. ஏதோ பெரிய நெருக்கடியினை சந்திக்க போகிறோம் என்கிற அளவில் எல்லோருக்கும் புரிதலிருந்தது. தலைவி அவனை சித்திரம் தீட்டும்படி கட்டளையிட அவன் மெல்ல குகைநோக்கி நகர்ந்தபோது கிழவன் மூச்சிரைக்க ஓடிவந்தான்.

அவன் காட்டிய திசைநோக்கி லூமூவும் இவனும் சென்றார்கள். தங்கள் எல்லையோரம் சென்றதும் கிழவன் நின்று இவர்களை அமைதியாயிருக்கும்படி சைகை செய்தான். புதர்மறைவிலிருந்து பார்க்கையில் லூமூவின் கண்களில் பயங்கரத்தின் நிழல் வழிந்தது. இவன் சற்றுமுன் குகைச் சித்திரத்தில் பார்த்த விலங்கின்மேல் அதே சாயல்கள் கொண்ட மனிதன் உட்கார்ந்திருந்தான். அந்த விலங்கு அடிக்கடி முன்னங்கால்களை உயர்த்தியபடி கத்திக்கொண்டிருந்ததை அவன் அலட்சியப்படுத்தினான்.

அவன் யாருக்காகவோ காத்திருப்பதுபோல தோன்றியது. கிழவன் தன் ஆயுதத்தை எடுத்து அவனை வீழ்த்துவதுகுறித்து கேட்க லூமூ தடுத்துவிட்டான்.

விலங்கின்மேல் அமர்ந்திருந்தவன் உயரமாக இருந்தான். அவன் இடுப்பில் எதையோ உடுத்தி குறியினை மறைத்துவைத்திருந்தான். அவன் உடுத்தியிருந்தது ஒரு விலங்கின் தோல். மிகப்பெரிய விலங்கு அது. அதனைக் கொல்வது அத்தனை சுலபமில்லை.

இவர்கள் இருப்பிடம் நோக்கி ஒருமுறைவந்தபோது தொண்டையில் குரலெழுப்பி கூட்டமாக விரட்டினார்கள். அப்படியும் அது சிலரை தனது நீண்ட முன்னுறுப்பினால் பற்றி வீசியெறிந்தது. தனது பருத்த கால்களால் மிதித்துக்கொன்றது.

அவன் இன்னும் நகராமல் நின்றிருந்தான்.அமர்ந்திருந்த விலங்கின்மேல் கிடந்த தோலின் மேற்பரப்பிலிருந்து மூங்கில்குடுவையை எடுத்து அதிலிருந்த எதையோ உறிஞ்சினான். நீராக இருக்கலாம். அந்த குடுவை அழகாக இருந்தது.

சற்றுநேரத்தில் அவன் அங்கிருந்து நகர இவர்கள் மெல்ல வசிப்பிடம் திரும்பினார்கள். வேகமாக குகைக்குள் சென்று லூமூ சித்திரம் தீட்டத்தொடங்கினான்.

முழுக்க தீட்டியபின் தலைவி எல்லோரையும் அழைத்து அதனை காட்டினாள். அந்த சித்திரத்தில் லூமூ பார்த்துவந்த விஷயங்கள் இருந்தன. அந்த விலங்கும், உயரமான மனிதர்களும் இருந்தன. பெரிதாக உயரமாக கூம்புவடிவிலிருந்த ஒன்றினை எவராலும் புரிந்துகொள்ள இயலவில்லை. லூமூ விளக்கினான். அந்த கூம்பிற்குள்தான் அவர்கள் அனைவரும் இரவுகளில் உள்ளிருப்பார்களாம். பிறகு ஒரு ஓரத்திலிருந்த ஒரு அலைபாயும் பொருள் பார்க்க பயங்கரமாக இருந்தது.

அதை அடிக்கடி காட்டிற்குள் பார்த்திருக்கிறார்கள். வெயில்காலத்தில்தான் அதனை அதிகம் பார்க்கநேரும். இரைக்காக காத்திருக்கும் சமயங்களில் அதன் வாசம் கிளம்பும். தூரத்திலேயே அது ஏதோ ஒன்றினை கக்கும். அது மெல்ல மேலெழும்பி காற்றில் அலையும். தலைவி அதற்கு சாத்தான் என்று பெயரிட்டிருக்கிறாள்.

திடீரென்று அது சுற்றிலும் சூழ்ந்துகொள்ளும். தப்பிக்க இயலாமல் அதற்கு இரையானால் எலும்புமட்டுமே எஞ்சும். ஆனால் அவர்கள் அந்த சாத்தானை வசப்படுத்தி வைத்திருக்கிறார்கள் போல.

சாத்தானை நடுவில்வைத்து சுற்றிலும் உட்கார்ந்திருப்பதை இவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். லூமூ விளக்கியதிலிருந்து எல்லொருக்கும் புரிந்தது ஒன்றுதான். அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.

அவன் வரைந்திருந்த சித்திரங்களில் நிறைய புரியவில்லை. நிறைய மனிதர்களின் கைகளும் கால்களும் தலைகளும் விழுந்துகிடந்தன. அவர்கள் கழுத்திலிருந்த மாலைகளில் நிறைய எலும்புகள் தொங்கின.

சற்றுநேரத்தில் தலைவி தன் நரைகூந்தல் புரள ஆடத்தொடங்கினாள். அவள் விழிகள் நிலைகுத்திக்கிடந்தன. குருதி தெறித்து வழிவதுபோல சிவந்துகிடந்தன.
ஓலமிடும் கூக்குரலில் அவள் பிதற்றத்துவங்கினாள். எல்லோரும் அழுது அரற்றியபடி அவள் முன்பு மண்டியிட்டார்கள். பிள்ளைகள் புரியாமல் விழித்தபடியிருந்தார்கள். மெல்லமெல்ல அவள் சைகயின் வழி உத்தரவிட்டுக்கொண்டிருந்தாள். அங்கிருந்து பறப்பட்டு வேறிடம் செல்வதற்கான சமயம் வந்துவிட்டதாக அறிவுறுத்தினாள்.

எச்சில் தெறிக்க நரைமயிர் விரித்தபடி அசைந்தபடியே ஆவேசமாக ஆடத்தொடங்கினாள். நீண்டு தொங்கிய அவள் காதில் அணிந்திருந்த களிமண்கட்டியும் சேர்ந்து ஆடியது. வற்றிய அவள் வயிற்றின் சுருக்கங்கள் மெல்ல அகமும்புறமுமாக அசைந்தது. நரம்போடிய அவள் தொடையின் துருத்தி நின்றன எலும்புகள்.

வெளியே பெருமழைக்கான முன்னோட்டமாக பேரிடியொன்று இறங்கியது. இந்த வெப்பகாலத்தில் மழைவந்து பார்த்ததில்லை அவர்கள். லூமூ குகைவாயிலுக்கு சென்று பார்த்தபோது மழை பொழியத்தொடங்கியிருந்தது. எல்லோரும் வெளிவந்து மழையில் நடனமாடத்திவங்கினார்கள். மழைவிடாமல் பொழிந்தது.
கிழவன் முன்வந்து முடியவே முடியாதென்று மறுத்தான். அவன் தலைவியைவிட வயது முதிர்ந்தவன். சந்நதம் குறைந்த தலைவி அவன் கைகளை இறுகப்பற்றி இழுத்துச்சென்று சித்திரத்தின் முன்பாக நிறுத்தினாள். வரக்கூடிய அபாயம் பற்றி எச்சரித்தாள்.

அவன் பெருங்குரலெடுத்து அழுதான். பிறந்ததுமுதல் அவன் இங்குதான் வசிக்கிறான். அவனுக்குப்பிறந்த அத்தனை பிள்ளைகளும் இந்த பிரதேசத்து விலங்குகளுக்குத்தான் இரையாகியிருந்தார்கள். அவன் இணையை புதைத்த இடமும் இங்குதான் இருக்கிறது. தான் இங்கிருந்து வரப்போவதில்லை என்றான். அழுகை இப்போது எல்லோருக்குமாக தொற்றியது.
எத்தனை முயன்றும் கிழவன் மனம் மாறவில்லை. மெல்ல அவனை கட்டியணைத்து விடைகொடுத்தபடி
தங்கள் சேமித்திருந்த எல்லாவற்றையும் பொறுக்கிக்கொண்டு அவர்கள் நடக்கத்தொடங்கியபோது மனம் கனத்திருந்தது. லூமூ பார்த்துவிட்டு வந்த இடம்செல்ல வெகுதூரம் பயணிக்கவேண்டும். அவனும் கர்ப்பம்தரித்த அவன் இணையும் இறுதியாக தொடர்ந்துகொண்டிருந்தார்கள்.
தலைவி ஓரிடத்தில் நிற்க கூட்டமும் நின்றது. அவள் முகம் சலனமின்றி இருந்தது. அருகில் எங்கோ நீரின் ஓசைகேட்டது. லூமூ அவளருகே வந்து நின்றான். அவள் சைகையில் தான் வரவில்லை என்றும் மற்றவர்களை அழைத்துச்செல்லும்படியும் கூறினாள். எல்லோரும் அழுதார்கள். அவளுக்கு எதிராக நடந்துகொள்ள எவரும் முன்வரவில்லை.

தொண்டைக்குள் சுழலும் துயரத்தின் முனகலுடன் அவர்கள் தங்கள் பயணத்தை தொடர்ந்தார்கள். தயக்கத்துடன் லூமூவும் நகர்ந்தான்.

__________________________________________

 

இறுதியாக வந்தவளுக்கு ஓரிடத்தில் வலிகண்டது. இடித்துப்பெய்த மழையில், பெருமரமொன்றின் அடியில் அவள் படுத்துக்கொண்டாள். அடிவயிற்றிலிருந்து வழியத்துவங்கிய திரவத்தைத் துடைத்தபடி உடனிருந்தான் அவன்.

வலியில் கத்திக்கதறியழுதாள். முக்கிமுக்கி பிரசவித்தலின்போது சிசுவின் தலை வெளிவருவதும் உள்செல்வதுமாக இருந்தது. அவனுக்கு தெரியும் இப்போது என்ன செய்யவேண்டுமென்று. மெல்ல தன் அரையில் கட்டியிருந்த பன்றியின் தோலிலிருந்து கூர் ஆயுதத்தை எடுத்தான். மெல்ல சிசுவரும் பாதையில் கோடிழுத்தான்.

வலியின் உச்சத்தில் அவளது குரல் காடெங்கும் எதிரொலித்தது. சீறிப்பொங்கிய குருதி தரையெங்கும் வழிந்தது. சுசுமெல்ல வெளிப்பட இன்னொருத்தி வாங்கிக்கொண்டாள். கைவசமிருந்த காட்டுக்கொடிகளால் சிசுவை சுத்தம்செய்தாள். பிரசவித்தவள் தன் சிசுவை அள்ளி முலைகொடுத்தபடி அமர்ந்துகொண்டாள்.

அன்றிரவிற்குப்பிறகு மறுபடி அவர்கள் பயணம் துவங்கியது. காடு முடிவற்று நீண்டுகொண்டேயிருந்தது. எல்லோரும் லூமூவை நம்பிக்கையின்றி பார்த்தார்கள்.அவன் முகம் வெளிறிக்கிடந்தது. வழிப்பட்ட விலங்குகளை கொன்று புசித்து, எத்தனை நாட்களென்ற கணக்கின்றி நகர்ந்துகொண்டேயிருந்தார்கள்.

மழையும் அவர்களை தொடர்ந்துகொண்டேயிருந்தது. முற்றிலும் களைத்து இனி முடியாது என்னும் நிலையில் அவர்கள் இலக்கை அடைந்தார்கள். மிக அழகான நதியொன்று ஓடிக்கொண்டிருந்தது அங்கே.
எல்லையற்ற மகிழ்வுடன் எல்லோரும் நதியில் சென்று விழுந்தார்கள். வியர்வையும் சேறும் அப்பிக்கிடந்த தங்கள் உடல்களை கழுவிக்கொண்டார்கள்.

இரவில் தங்குவதற்கான குகை இல்லாததில் பெரும் வருத்தம் எல்லோருக்கும். தலைவியை யார் சென்று அழைத்துவருவதென்பதில் போட்டியிருந்தது அவர்களுக்குள். இறுதியாக லூமூவே செல்லட்டுமென்று ஏற்பாடானது. இரவிற்கான உணவை முடித்துக்கொண்டு கிளம்ப முடிவுசெய்தார்கள்.

நதியில் பிடித்த மீன் கள் சுவையோடிருந்தன. மணற்பரப்பில் அவ்வப்போது உருளும் நண்டுகளைக்கண்டு நிரம்ப பயந்தார்கள். பிள்ளைகள் அதை துரத்தி விளையாடினார்கள். ஒரு சிறுமி மட்டும் காட்டிற்குள்ளிருந்து எதையோ எடுத்துவந்தாள். கற்கள்தான். பிறகு எல்லா பிள்ளைகளும் சென்று நதிக்குள்ளிருந்தும் காட்டிலிருந்தும் கற்களை பொறுக்கிவந்து விளையாடினார்கள்.

மெல்ல இரவு கவிழத்திடங்கியபோது பிள்ளைகளுக்குள் சலசலப்புகேட்க எல்லோரும் சென்று பார்க்க. அந்த சிறுமி கற்களை உரசி சாத்தானை உருவாக்கினாள். பயந்துபோய் அவளிடமிருந்து கற்களை பிடுங்கி நதியில் விட்டெறிந்தார்கள்.
சற்று தூரத்தில் உயரமான விலங்கின்மேல் அமர்ந்தபடி ஒரு சிறு கூட்டம் இவர்களை பார்த்துக்கொண்டிருந்தது.
மெல்லிய சலனத்துடன் நதி. நகர்ந்துகொண்டிருந்தது
____________________________________________

 

Series Navigationவைரமணிக் கதைகள் – 11 ஓர் உதயத்தின் பொழுதுஆத்ம கீதங்கள் – 24 கேள்வியும் பதிலும் .. !
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *