சிறு தூக்குச் சட்டியில் களியும், களிக்கேற்ற கீரை கடைசைலையும் எடுத்துக் கொண்டு நடந்தாள் யாழினி. மெரூன் நிற தாவணியும், வெள்ளைப் பொட்டுகளும் சந்தனக் கோடுகளும் நிறைந்த பாவாடையும் அணிந்திருந்தாள். அலங்காரம் ஏதும் அற்று சாதாரணமாய் கூந்தலைத் தூக்கிக் கொண்டை போட்டிருந்தாள்.
பச்சைப் பசேல் என்று புல் பரத்தி இருந்த வரப்பில் நடப்பது அலாதியான சுகம். அதிலும் மழை நனைத்து சிறு சிறு பொட்டுக்களாய் தேங்கி நிற்கும் நீர்த் துளிகள். பாதங்களின் உட் புறத்தை நனைத்து சிலிர்க்கச் செய்யும் உணர்வு. கிச்சு கிச்சு மூட்டும் பால்ய சிநேகிதியை நினைவுறுத்தியது.
தூரத்தில் வெள்ளை நாரை ஒன்று சிறகடித்து வானேற, தூரத்தில் அரணாய் நின்ற மலை முகடுகளும், கரு நீல வண்ண மேகங்கள் சூழ்ந்த மறைப்பும், ஒரு அழகியலான இயற்கை எழிலை ஊட்டியது.
யாழினியின் நிலத்தில் சோளமும், உளுந்தும் விதைத்திருந்தார்கள். வரப்பு ஓரங்களில் கொத்து மல்லியும் வளர்ந்து நீலச் சேலைக்கு பார்டராக அமைந்திருந்தது.
தூரத்தில் யாழினியின் அப்பாவோடு பேசுவது யார் அது ? புதியவன் என்று முகம் சுருக்கினாள் யாழினி
அப்பா ஏதோ கையாட்டி பேசிக்கொண்டிருந்தார்.
“கண்ணுக் கெட்டிய தூரம் வரைக்கும் ஒரு காலத்துல எங்க நிலம் தான் தம்பி, அப்படியே பாகம் பிரிச்சதுல அவங்கவங்க வித்தது போய் இது தான் மிஞ்சினது. ஒரு காலத்துல ஜமீன் பரம்பரை, எங்கக்கிட்ட பண்ணையம் பார்த்தவங்க இப்ப நிலச் சொந்தக்காரங்களா யிட்டாங்க; என்ன செய்யறது எங்க நேரம் சொத்தும் செல்வாக்கும் கொறைச்சலாயிடுச்சு, என்ன செல்வாக்கு கொறைஞ்சு என்னப்பா ? என் பொண்ணை இன்னைய வரைக்கும் சாணி அள்ள விட்டதில்லை!”, என்று மேல் துண்டால் கண்ணைத் துடைத்துக்கொண்டார்.
அருகில் வந்த யாழினி திடுக்கிட்டு நின்றாள். அந்த ஆடவன் வேறு யாருமில்லை. கடன் வாங்கிய குடைக்குச் சொந்தக்காரன். அட இங்கெப்படி வந்தான் ? அப்பா ஏன் இவனிடம் சுயப் புராணம் பாடிக்கொண்டிருக்கிறார் ? யாழினியைக் கண்டு ராகவின் முகத்திலும் அதிர்ச்சி தெரிந்தது.
“சரிங்க நான் அப்ப போய் வரேங்க!” என்றான் ராகவ் யாழினியின் அப்பாவைப் பார்த்து.
“இருங்க தம்பி எம்பொஞ்சாதி கிண்டுற களி அவ்ளோ ருசியா இருக்கும்; ஒருவாய் சாப்பிட்டுட்டு போங்க!” என்று மறித்து அமர வைத்தார்.
ரெண்டு பேருக்கும் வைக கண்ணு” என்றவர், “எங்க தம்பி விளைச்சல் வருது ? பருத்தி விவசாயி தற்கொலை பண்ணிக்கிட்டானுங்களாம் பேப்பருல படிச்சேன் நீங்க படிச்சீங்களா?” என்றார்
“ம் படிச்சேங்க” என்றான் குரலில் வருத்தம் தோய்ந்து
“உங்க காலத்துலயாவது வெவசாயத்துல புதுசு கண்டுப்பிடிக்கணும் தம்பி! விளைச்சல் இல்லேன்னு தற்கொலை செஞ்சுக்கிட்டா ஆச்சுதுங்களா? இப்பவெல்லாம் பேப்பர்காரங்க கூட உண்மை எழுதறதில்லை.
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!
என்று பாடின பாரதி இப்ப இருந்திருந்தா இரத்தக் கண்ணீர் வடிச்சிருப்பான்.”
யாழினி இருவருக்குமாக தேக்கு இலை பறித்து அதில் களியை வைத்து கீரை கடைசலை ஊற்றினாள் மனைவி.
அவன் நகரத்து வாசி போல் இருந்தான். இந்த களி தின்பவனாகத் தெரியாத போதும். களியை எவ்வித மறுப்பும் இன்றி உண்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. யாழினிக்கு. இவன் ஏன் இங்கு வந்தான் என்ற கேள்வியினூடே இரு முறை விழிகள் அவன் விழிகளைத் தீண்டி விலகியது.
யாழினி சற்று விலகி கால்வாயில் ஓடிக்கொண்டிருந்த நீரில் காலை விட்டு அளைந்தாள். கெளுத்தி மீன்கள் இங்கும் அங்குமாய் மருண்ட விழிகளோடு ஓடியன. நீரைக் கைகளால் அளைந்தாலும் மனமோ ராகவ் எதற்காக வந்தான் என்பதிலேயே மையமிட்டிருந்தது.
“அப்போ நல்ல நாளா பார்த்து வாங்க தம்பி!” என்றார் அப்பா
“நான் அக்காக்கிட்ட சொல்றேங்க!” என்றான்
“சரிங்க தம்பி ! நானும் வீட்ல சொல்லி வைக்குறேங்க” என்றார் அப்பா
“நீங்க தப்பா நெனக்கிலேன்னா ஒன்னு கேக்கட்டுங்களா?”
“சொல்லுங்க தம்பி”
“எனக்கு உங்க பொண்ணை பிடிச்சிருக்கு, எனக்கு கட்டிக் கொடுக்கறீங்களா?”
யாழினிக்கு பெரிய அதிர்ச்சி !
“என்ன தம்பி இப்படி சொல்றீங்க, உங்க பிரண்டுக்கு பொண்ணைத் தேடி வந்துட்டு” என்று இழுத்தார் அப்பா
“பிரண்டுக்கு பாக்க வந்த பொண்ணு உங்க பொண்ணு இல்லைங்களே!”
“இப்போதைக்கு ஹோம் கார்ட்ல வேலைப் பாக்குறேன். படிச்சுட்டு தான் இருக்கறேன் மாசம் 5000 ரூபாய் சம்பளம், இந்த படக்கதைகளுக்கு படம் போடுறதுல தனியா சம்பாதிக்கறேன். உங்க பொண்ணை நல்லா வச்சுப்பேன்!” என்றான்.
யாழினிக்குப் புரிய வில்லை.
“என் பொண்ணை மேலே படிக்க வைக்கணும்ன்னு நெனைக்குறேன் தம்பி!” என்றார் அப்பா.
கலியாணம் பற்றி அப்பா பேசியதில்லையே !
“கல்யாணத்துக்கப்புறம் படிக்க வைக்குறேன். உங்க பொண்ணை பார்த்ததும் பிடிச்சுடுச்சு, எனக்கு அக்கா, அப்பாதான் உறவுன்னு அம்மா இல்லை. சம்மதம் சொன்னீங்கன்னா அக்காவை கூட்டிட்டு வரேன்”
“வீட்ல என் பொண்டாட்டிக்கிட்ட கேட்டுட்டு சொல்லி அனுப்பறேன் தம்பி!” என்றார் யாழினியின் அப்பா
இவர்களின் பேச்சைக் கேட்ட யாழினியின் மனம் பட படத்தது. கல்யாணம் பற்றி அப்பா என்னிடம் எதுவும் பேச வில்லையே ! என் படிப்பு என்ன ஆவது ?
என்ன துணிவு இவனுக்கு ? அவனுக்கு மட்டும் பிடித்திருந்தால் கட்டிக் கொள்ள வேணுமா? என்று எண்ணியவள். அவர்களைத் திரும்பி பார்க்காமலேயே எழுந்து வீட்டை நோக்கி ஓடினாள்.
[தொடரும்]
- மவுஸ் பிடிக்கும் விமர்சகனும், படமெடுக்கும் மணி – RAT – னமும், சுஹாசினியின் கட்டளையும்.
- சூழலியல் நோக்கில் புறநானூற்றில் நீர் மேலாண்மை
- ரா. ஸ்ரீனிவாசன் கவிதைகள்— ஒரு பார்வை
- சூட்டு யுகப் பிரளயம் வந்து விட்டது ! மாந்தர் செய்ய வேண்டிய கடமை என்ன ?
- இரு குறுங்கதைகள்
- அப்பாவிக் குழந்தைகளின் அன்பான வேண்டுகோள்…
- இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளின் சமுதாயப் பணிகள்
- புறநானூற்றால் அறியலாகும் தமிழர் பண்பாடுகள்
- தமிழ் ஸ்டுடியோவின் இலக்கிய இணைய இதழ் கூடு
- மிதிலாவிலாஸ்-10
- தொடுவானம் 64. நான் ஒரு மருத்துவ மாணவன்
- வைரமணிக் கதைகள் – 12 கறவை
- மறுவாசிப்பில் வண்ணதாசனின் “மனுஷா………மனுஷா……..”
- ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள் ” உரிய நேரம் ” தொகுப்பை முன் வைத்து…
- நான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்] அத்தியாயம் -2
- ஆத்ம கீதங்கள் – 25 காதலிக்க மறுப்பு .. !
- வீடு பெற நில்!
- சென்னையில் ஜெயகாந்தனுக்கு நினைவஞ்சலி
- ஜெமியின் காதலன்