தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 பெப்ருவரி 2019

மருத்துவக் கட்டுரை – கல்லீரல் அழற்சி ” ஏ ” வகை ( Hepatitis A )

                      

கல்லீரல் அழற்சி நோயை ” ஹெப்பட் டைட்டிஸ்  ” என்கிறோம்.

          கல்லீரல் அழற்சி நோய்கள் வைரஸ் கிருமிகளால் ஏற்படுகின்றன. இந்த வைரஸ் நோய்கள் ஏ, பி , சி, டி  இ என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றில் நாம் ஏ வகையான கல்லீரல் அழற்சி பற்றி பார்ப்போம். இதை எச்ஏவி ( HAV ) தொற்று என்பார்கள். இது  Hepatitis A  Virus என்பதின் சுருக்கம். மிகவும் பரவலாக உண்டாகும் வைரஸ் கிருமித் தொற்று இதுவே. உலகளாவிய நிலையில் இந்த வகை வைரஸ் தொற்று சிறு பிள்ளைகளையும் இளம் வயதுடையவர்களையும் எளிதில் பாதிக்கிறது.

இந்த ஏ வகை வைரஸ் கிருமி மலத்தின் வழியாக உண்டாகும் தொற்றால் ஏற்படுகிறது. இந்த வியாதியால் பாதிக்கப்பட்டவர்களின் மலத்தில் இந்த வைரஸ் கலந்திருக்கும். இவர்கள் சுகாதார முறையைப் பின்பற்றாவிடில் இவர்கள் மூலமாக உணவு வகைகளிலும் நீரிலும் இந்த வைரஸ் கலக்கும் வாய்ப்பு உள்ளது. இத்தகைய வைரஸ் கலந்த உணவு, நீரை வேறொருவர் பயன்படுத்தினால் அவருக்கும் நோய் பரவுகிறது. இதனால்தான் உணவகங்களில் வேலை செய்வோர் சுகாதாரம் பற்றி தெரிந்திருப்பது மிகவும் அவசியமாகிறது. அவர்கள் மலம் கழித்தபின்பு கைகளை சோப்பு போட்டு கழுவுவது இல்லை. அவர்களுடைய கைகளில் வைரஸ் கிருமிகள் இருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. அவர்கள மூலமாக இந்த வைரஸ் கிருமி பலருக்கு  பரவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனால்தான் சுகாதாரமான உணவகங்களில் உணவு உன்ன வேண்டும். ஆனால் அதுபோன்ற உணவகங்களைப் பார்ப்பது மிகவும் அரிதாகவே உள்ளது. பெரும்பாலான உணவக ஊழியர்களுக்கு சுகாதாரம் பற்றி ஏதும் தெரியாது.

ஏ வகையான வைரஸ் கிருமிகள் உடலில் புகுந்தபின்பு அவர்களுக்கு நோயின் அறிகுறி தெரியுமுன் 2 வாரமும், நோய் வந்தபின் 1 வாரமும்  அவர்களுடைய மலத்தில் நிறைய வைரஸ் கிருமிகள் வெளியேறும். அது போன்றே மஞ்சள் காமாலை வருமுன் வைரஸ் தொற்று மிகவும் அதிகமாக
இருக்கும்.

                                          அறிகுறிகள்

உடலுக்குள் வைரஸ் புகுந்தபின் அவை பெருகி இரத்தத்தில் கலந்து அறிகுறிகளை உண்டுபண்ண 28 நாட்கள் ஆகும். அதன்பின்பு தோன்றும் அறிகுறிகள் வருமாறு:

* குமட்டல்

* வாந்தி

* பசியின்மை

* சிகரட் சுவை பிடிக்காமல் போவது

* இதன்பின் 1 அல்லது 2 வாரங்கள் கழித்து மஞ்சள் காமாலை தோன்றும். அப்போது சிறுநீர் பழுப்பு நிறத்திலும் , மலம் வெளிறிய நிறத்திலும் வெளியேறும்.

* கல்லீரலில் வீக்கம் உண்டாகும்.

* மண்ணீரலும் வீங்கும்.

* உடலில் கரலைக் கட்டிகள் உண்டாகும்.

* தோலில் சிவந்த நிறத்தில் பொரிகள் போன்று ஏற்படும்.

பெரும்பாலும் அதன்பின்பு 3 முதல் 4 வாரங்களில் நோய் தானாக குறைந்துவிடும். ஆனால் ஒரு சிலருக்கு நோய் முற்றி நினைவு இழத்தலும் மரணமும் நேரிடலாம்.

                                     பரிசோதனைகள்

* கல்லீரல் பௌதிகப் பரிசோதனையில் ” பிலிருபின் ” எனும் பித்தக் கலவை அளவும், ” ஏஎல்டி ” என்ற ஹார்மோனின் அளவும் உயர்ந்து காணப்படும்.

* இரத்தப் பரிசோதனையில் வெள்ளை இரத்த செல்களின் எண்ணிக்கை குறைவாகவும், ” லிம்ப்போ சைட் ” செல்களின் அளவு உயர்ந்தும் காணப்படும். அத்துடன் ” புரோத்துரோம்பின் ” நேரமும் கூடியிருக்கும். இப்படி கூடினால் உடலில் இரத்தக் கசிவு உண்டாகும். ” ஈ எஸ் ஆர் ” என்பதின் அளவும் உயர்ந்திருக்கும். உடலில் நோய் உள்ளது என்பதைக் கூறும் குறியீடு இது.

* இரத்தத்தில் ” IgM anti- HAV ” என்ற குறியீடும் காணப்படும்.

                                       சிகிச்சை முறைகள்

இந்த ” ஏ ” வகையான வைரஸ் கிருமிகளால் உண்டாகும் கல்லீரல் அழற்சி வியாதி மஞ்சள் காமாலையை  உண்டுபண்ணினாலும் அதற்கு முறையான சிகிச்சைகள் கிடையாது. இதற்கு மருத்துவ மனையில் சேர்த்து பார்க்க வேண்டிய அவசியமில்லை.

மது அருந்தும் பழக்கமுடையோர் உடனடியாக அதை நிறுத்தியாக வேண்டும்.

இந்த நோய் அதிகமாக காணப்படும் ஆப்ரிக்கா, ஆசியா, தென் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு போன்ற நாடுகளுக்கு பயணம் செய்பவர்கள் இதற்கான தடுப்பு ஊசி போட்டுக்கொள்ளலாம். கழிவுகளில் வேலை செய்வோரும், மனநலக்குறைவானோரின் இல்லங்களில் பணிபுரிவோரும் இந்த வைரஸ் கிருமியால் எளிதில் பாதிக்கப்படலாம் என்பதால் இவர்களும் தடுப்பு ஊசி போட்டுக்கொள்ளலாம்.

நோய் வாய்ப்பட்ட ஒருவரின் நெருங்கிய உறவினர்கள் நோய் வராமலிருக்க தடுப்பு ஊசி போட்டுக்கொள்ளலாம்.

நோய் தடுப்பு முறையில் இந்த தடுப்பு ஊசியை யார் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம்.

          இந்த நோய் உணவு வழியாகவும், குடிநீர் வழியாகவும் பரவுவதால், இந்த இரண்டிலும் சுகாதாரம் காக்க வேண்டும். கூடுமானவரை கொதிக்க வைத்த நீர், அல்லது பாட்டில்களில் உள்ள நீர் குடிக்கவேண்டும்.சுகாதாரமற்ற உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
          ( முடிந்தது )

Leave a Comment

Archives