சொப்பன வாழ்வில் அமிழ்ந்து

This entry is part 15 of 26 in the series 26 ஏப்ரல் 2015

 

இது கனவு சீசன் போலிருக்கிறது. முதலில் கன்னடத்தில் ‘லூசியா’ வந்து சக்கை போடு போட்டது. போதை மாத்திரை தருவிக்கும் மாயா ஜால பிம்பங்களே அதன் முடிச்சு. அதையே தமிழில் “ எனக்குள் ஒருவன்” என பேசியது சித்தார்த் படம். படம் கன்னட வெற்றியைப் பெறவில்லை என்றாலும் பரவாயில்லை என ஓடியது.

ஆனால் கணிப்பொறி விளையாட்டுகளை உருவாக்க, அதில் வேலை செய்யும் இளைஞர்கள் / யுவதிகளுக்கு டானிக் மாத்திரை என போதை மாத்திரைகளைக் கொடுத்து தற்கொலை வரை கொண்டு செல்லும் நிறுவனம் பற்றிப் பேசிய ‘அனேகன்’ அமோக வெற்றி பெற்றது. மைய இழை மூன்றிலும் ஒன்றுதான் என்றாலும், கே.வி.ஆனந்த், சுபா திரைக்கதையும், பல் வேறு கால கட்டங்களில் பின்னப்பட்ட காட்சிகளும் அதற்கு வலு சேர்த்தன. அச்சாணியாக இருந்தது தனுஷின் நடிப்பு.

இப்போது மணிரத்தினத்தின் “ ஓ காதல் கண்மணி” யும் கணிப்பொறி விளையாட்டைத் தான் கையில் எடுத்திருக்கிறது. அதற்காக நாயகன் சிறைக்குக் கூட அனுபவத் தேடலாக செல்கிறான். ஆனால் க்ளிஷேவாக சிறைக் காட்சிகள் காட்டப்படவில்லை என்பது ஆறுதல்.

இந்த கனவு மேட்டர் இப்போது நாடக மேடைக்கும் வந்து விட்டது. ஒய்.ஜி.மகேந்திரனின் அடுத்த நாடகம் “ சொப்பன வாழ்வில் “ பல்வேறு வேடங்களைத் தரிக்க ஒய்ஜிஎம்மிற்கு ஒரு வாய்ப்பு. முன்னாலேயே “ அந்த ஏழு ஆட்கள் “ என்று பல வேடங்களை அவர் தரித்து நாடகம் போட்டதாக ஞாபகம்.

தொண்ணூறுகளின் பின் பாதியில், ஜரூராக நான் நாடகங்கள் எழுத முனைந்தபோது, அப்போதிருந்த பிரபல நடிகர்களுக்கு கதை யோசிக்க ஆரம்பித்தேன். திரு. ஒய்ஜிஎம்மிற்கு நான் புனைந்த கதை ஒன்று இந்த கனவு அடிப்படையில் இருந்தது.

பரம்வீர் குமார் சரியான பயந்தாங்கொள்ளி. ஆனால் அவன் கனவு காணும் காட்சிகளி லெல்லாம் அவன் சுத்த வீரன். நிசமாகவே பரம் வீர் தான். வங்கிக் கொள்ளையர்களைப் பிடிப்பான். தீவிரவாதிகளிடமிருந்து கடத்தப்படும் விமானத்தை மீட்பான். ஆற்றில் அடித்துக் கொண்டு போகும் படகை தடுத்து பல உயிர்களைக் காப்பான் இத்தியாதி இத்தியாதி. அதில் என்ன ஆச்சர்யம் என்றால், மறுநாள் செய்திகளில் அவன் கனவு நிசமாக இருக்கும். யாரோ ஒரு வீரன் அதை செய்திருப்பான். கனவுகளில் அவன் பெயர்கள் சரவணன், பார்த்திபன் என்று மாறும். நிசத்தில் அந்த வீரச் செயல்களை செய்யும் ஆட்களின் பெயர்களும் அதுவாகவே இருக்கும்.

பரம்வீருக்கு செயல் பிடிக்காது. ஆனால் பேசப் பிடிக்கும். தன் கனவுகளை நிசம் போலவே தன் நண்பர்களிடம் சொல்லுவான். அவர்களும் அதை நம்புவார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவனது தீரச் செயல்களை நம்பும் மேஜர் பரந்தாமன், தன் ஒரே மகள் பத்மலோசனியை அவனுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணுகிறார். பத்மா மிலிட்டரி சூழலில் வளர்ந்தவள். தைரியசாலி. துப்பாக்கி சுடுவதிலும், கராத்தே போன்ற சண்டைப் பயிற்சிகளும் பதக்கம் வென்றவள். திருமணத்திற்குப் பிறகு தேன்நிலவு செல்லும் பரம், பத்மா தம்பதியின் விமானம் கடத்தப்பட, பரமின் கோழைத்தனமும் பத்மாவின் வீரமும் ஒரு சிரிப்பு க்ளைமேக்ஸை அரங்கேற்றும். சுபம்.

ஒரு வேளை இப்படித்தான் இருக்குமோ ஒய்ஜிஎம்மின் புதிய நாடகம் என்று ஒரு எண்ண ஓட்டம் ஓடுகிறது. இதுவரை நான் என் கதையை யாரிடமும் சொல்லவில்லை. அதனால் என் கதையைப் போலிருந்தால், நான் சண்டை போட மாட்டேன். புத்திசாலிகள் ஒரே மாதிரி சிந்தனை உடையவர்கள் என்று விட்டு விடுவேன்!

யூ ஏ ஏ எனும் நாடகக் குழு மூன்று தலைமுறைகளாக இயங்கி வருகிறது. டயல் எம் ஃபார் மர்டர் எனும் நாடகத்தில் ( மறைந்த திரு. பட்டு எழுதியது ) ஒரு ஷஃப்லிங் நடையோடு, தொளதொள பேண்டோடு ஏஆர் எஸ் இல்லாத பிணத்தை தாண்டுவதாக வரும் காட்சியில் நான் வியந்து கைத்தட்டி இருக்கிறேன். அதற்கப்புறம் ஃப்ளைட் 172ல் திரு மகேந்திரா காற்றில் கைவீசி டிரம்ஸ் வாசித்ததும், ஒரு இடைவெளியில் அடிக்கட்டையை தூக்கிப் போட்டு பிடித்ததும், இன்னும் என் பசுமை நினைவுகளில்.

அதனால் நான் ஆவலுடன் “ சொப்பன வாழ்வில் “ நாடகத்தை எதிர்பார்க்கிறேன். ஒய்ஜிஎம் ஏமாற்ற மாட்டார் என்று நம்புகிறேன்!

0

 

Series Navigationமுக்காடுவைரமணிக் கதைகள் – 13 காலம்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *