ஹரீஷ்
“இன்னும் கொஞ்சம் ஹீல் இருக்கற மாதிரி கட் ஷூ குடுங்க” .
ஒவ்வொரு முறையும் பாயிடம் சொல்லும் அதே வார்த்தை தான். ஒவ்வொரு முறையும் பார்ப்பது போலவே இந்த முறையும் அதிசயமாகப் பார்த்தார். அவனுக்குப் பழகி விட்டது. இது போன்ற பார்வைகள்.பாய் அந்த மாதிரிப் பார்த்தவுடன் கீழே ஷூவைப் பார்க்கக் குனிவது போல் குனிந்து கொண்டான்.
பள்ளி முடியும் வரை இது ஒரு பெரிய விஷயமாகத் தெரிந்ததே இல்லை அவனுக்கு. பள்ளி முடிந்து புது கல்லூரியில் சேர்ந்த போது தான் உணர ஆரம்பித்தான். இவன் வகுப்பு மாணவர்கள் எல்லாருமே தடித் தடியாக இருந்தனர். குறைந்தபட்சம் ஐந்தே முக்கால் அடி.
அவர்களுக்கு மத்தியில் நிற்கவே கூச்சமாக இருந்தது.இவனிடம் பேசுபவர்கள் எல்லாரும் கீழே நோக்கிக் குனிந்தே பேசுவது சொல்ல முடியாத வலியை ஏற்படுத்தியது. அப்படிக்கொன்றும் இவன் அவ்வளவு குறைவெல்லாம் இல்லை, சராசரிக்குச் சற்றே குறைவு. இரண்டல்லது மூன்று அங்குலங்கள். அவ்வளவே.அதுவே அவர்களிடமிருந்து இவனைப் பல்லாயிரக் கணக்கான மைல்கள் தள்ளி இருக்கிறாற் போல் உணரச் செய்தது.
அவனைப் பெரிதும் வருந்த வைத்தது, பதினேழு வயதுக்கு மேல் வளர்ச்சி நின்று விடும் என்று அவன் பல்வேறு புத்தகங்களையும் அறிவியல் சஞ்சிகைகளையும் தேடிப் படித்துக் கண்டுபிடித்து வைத்திருந்த பேருண்மையே.தன் வகுப்புப் பெண்கள் எல்லாரும் இவனை விட உயரமாக இருப்பதாகப் பிரமை தோன்றியது. கண்களாலேயே அளந்து கொண்டிருக்கத் துவங்கினான் ஒவ்வொரு பெண்ணையும் தினம் தினம். தினமுமா உயரம் மாறுவார்கள்?
பெரிய பசங்கள் இருக்கும் இடங்களுக்குப் போவதைக் குறைத்து விட்டான். அப்போது ஆரம்பித்த பழக்கம் தான் இந்த அடி பெருத்த ஷூக்கள் போடுவது. உயரமாய்க் காண்பிக்க ஒரு உத்தி. அவன் தேடலும் நின்றபாடில்லை. வளர்ச்சியை அதிகப் படுத்துவதாய்ச் சொல்லி விற்ற சந்தைப் பொருள்களையும் ஓரிரு முறைகள் வாங்கிக் காசைக் கரியாக்கியது தனிக் கதை.
ஊரில் இருந்த போது கட்டுக்குள் இருந்த இந்த மனப்பான்மை சென்னை வந்ததும் பல மடங்கு அதிகமாகி விட்டது.புதிதாய் வேலைக்குச் சேர்ந்த இடத்தில் , மகாபாரதத்தில் தண்ணீருக்குள் குறி பார்த்து அந்தரத்தில் சுற்றிக் கொண்டிருந்த மீனை அம்பால் வீழ்த்திய அர்ஜுனன் மாதிரி ஆண் பெண் பேதமின்றி எல்லாரும் இவன் தோளைப் பார்த்தே பேசுகிறாற் போல் உணரத் துவங்கினான்.
முக்கியமாய்ப் பெண்கள்.அதென்னவோ ஆண்கள் இவனை விட உயரமாக இருந்து விட்டால் சாதாரணமாகப் பதறும் மனசு பெண்கள் உயரமாய் இருந்தால் தாறுமாறாகப் பதற ஆரம்பித்தது.
புதிதாய் யாரிடம் பேச நேர்ந்தாலும் உயரமானவராய் இருந்தால் தள்ளி நின்று பேசுதல் கொஞ்சம் கம்மியாய் இருந்தால் பாதுகாப்பான தூரத்தில் நின்று தோள்பட்டையைப் பார்த்துக் கொண்டே உயரத்தை அளந்தபடியே பேசுதல், இவனை விடக் குறைவான உயரம் என்று சர்வ நிச்சயமாகத் தெரிந்தால் அருகில் நெருங்கி வந்தோ தோளில் கை போட்டோ பேசுதல் ஆகிய விதிமுறைகளைக் கடைபிடிக்க ஆரம்பித்தான்.
பேருந்துகளிலோ ரயில்களிலோ பயணிக்கும் போது இது ஒரு பெரும் பிரச்னையாகத் தோன்ற ஆரம்பித்து விட்டது அவனுக்கு. கூட்டத்தில் நிற்கும் போது முதல் பிரச்னை கையைத் தூக்கி மேலே இருக்கும் கம்பியைப் பிடிப்பது. இவன் கம்பியைப் பிடித்தால் அதைப் பிடித்து தொங்குவது போல் இருக்கும். வேறு வழியில்லை. அடுத்த பிரச்னை சுற்றியிருக்கும் கூட்டம். உயரம் காரணமாய் எல்லாருடைய வியர்வைகளையும் கிட்டத்தில் முகர்ந்து பார்க்கும் வாய்ப்பு. எந்தப் பக்கம் திரும்பினாலும் அக்குள்களாகவே இருக்கும்.
ரயிலிலோ பஸ்ஸிலோ இருந்து இறங்கும் போது எத்தனையோ பேரின் வியர்வைத் தடங்கள் முகத்தின் மேல். அந்த மாதிரி சமயங்களில் படும் வேதனையை சொல்லி மாளாது.ஒரு இரண்டரை அங்குல உயர வித்தியாசம் வாழ்வில் ஏற்படும் இத்தனை துன்பங்களுக்கும் காரணமாய் இருக்கிறதே என்று கண்ணீர் விட்டு அழக் கூட செய்திருக்கிறான்.
வாழ்க்கையில் இதைத் தாண்டி எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன என்பது அவனுக்கு நன்றாகவே தெரிந்தது. பிரச்னையே அவனால் இதைத் தாண்ட முடியாதது தான். வேறு வேலைகள் எதிலேனும் ஈடுபடும் போது தலை காட்டாமல் இருக்கும் இது, வெளியிடங்களுக்குச் செல்லும் போது சற்றே உயரமானவர்களைப் பார்த்தால் கூட வேலையைக் காட்டத் துவங்கியது.
பைக் வாங்குவதைப் பற்றி நண்பர்களிடம் பேசும் போது முளைத்தது அடுத்த பிரச்னை. எல்லா நண்பர்களிடமும் கருத்து கேட்டவன், தானும் ஒரு பைக்கை மனசில் வைத்திருந்தான். ஆளாளுக்கு ஒரு யோசனை சொன்னார்கள்.இவன் மனசில் இருந்த பைக் பெயரை அவர்களிடம் சொன்னான். உடனே தயக்கமோ யோசனையோ இன்றி எல்லாப் பக்கமிருந்தும் வந்து விழுந்த கேள்வி “ உனக்கு கால் எட்டுமாடா” என்பது தான்.துடித்துப் போனான்.
இதை யாரிடமேனும் சொன்னால் இதை ஒரு பிரச்னையாகப் பார்ப்பதெல்லாம் பிறகு. இதை ஒரு விஷயமாகக் கொள்வார்களா என்பதே சந்தேகம். அதனால் பெரும்பாலும் இது போன்ற சம்பவங்கள் நடக்கும் நாட்களில் கடவுளுக்குக் காது கூசும் வார்த்தைகளில் அர்ச்சனை உண்டு.அவனுக்கு இதைப் பற்றியெல்லாம் என்ன கவலை?
ஓட்டுவதற்குக் கஷ்டமாயிருந்தாலும் பரவாயில்லை என்று அந்த பைக்கையே வாங்கினான். சுய கவுரதைக்குக் கொஞ்சமே கொஞ்சம் களிம்பு தடவினாற் போல் ஆறுதல்.
அடுத்த பிரச்னை அவனுக்கு இருபத்தேழு வயதான போது ஆரம்பித்தது.கரெக்ட்.. அதே தான்.எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவர்களின் எதிர்பார்ப்பை விட இரண்டு அங்குலங்கள் குறைவாகவே இருந்தான். சராசரி உயரம் என்கிற எதிர்பார்ப்பு எல்லாப் பெண்களுக்கும். அது தவறில்லை. இவன் தான் கூனிக் குறுகினான். ஏற்கனவே குறுகி இருந்தவன் மேலும் குறுகினான்.
சொந்த முயற்சியில் காதலை அடையும் விஷயமெல்லாம் அவன் மனநிலைக்கு எட்டாத தூரத்தில் இருந்தது. ஹரி படங்களுக்கும் அமைதிக்கும் இருந்த தூரத்தை விட அதிகம்.
அதையும் மீறி அவனை அசைத்துப் பார்க்க வந்தவள் காதலி 1.அவன் அலுவலகத்தில் புதுசாய்ச் சேர்ந்தவள். வழக்கமான மனத் தடைகள் காம்ப்ளக்ஸ் எல்லாவற்றையும் மீறிப் பீறிட்டுக் கொண்டு புறப்பட்டது காதல். இருந்தாலும் சுய பரிசோதனை என்று ஒன்று இருக்கிறதல்லவா. உயரத்தை அளந்து விட்டு அவளும் தன் உயரம் தான் என்று உறுதி செய்து கொண்ட பின் தான் காதலிக்க ஆரம்பித்தான்.
ஒரு நாள் மாலை மங்கிய வேளையில் சுவாரசியமாக அலுவலகத்தின் தெரு முனைக் கடையில் பானிப்பூரி சாப்பிட்டுக் கொண்டிருந்த போது சர்ரென்று ஒரு பைக் கடந்து போன நொடியில் அந்தக் காதல் முடிவுக்கு வந்தது. பைக்கில் அவள் தான். முகத்தை இறுக துப்பட்டாவால் கட்டிக் கொண்டு போனாலும் நன்றாய் அடையாளம் தெரிந்தது. பைக்கை ஓட்டிக் கொண்டு போனவன் ஒரு ஆஜானுபாகு. அடுத்த பல நாட்களுக்கு அவள் வந்தாளோ இல்லையோ கனவில் தவறாமல் அவன் வந்தான். இவனைப் பார்த்து சிரிக்க வேறு செய்து வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டான்.
அன்று பட்ட சூடு வெகு நாட்களுக்கு நீடித்தது. அதை மறப்பதற்கு அவன் அலுவலகம் மாற வேண்டியிருந்தது. புது அலுவலகத்தில் ஏகப்ப்பட்ட பெண்கள். பல விதமான வண்ணங்களிலும் வடிவங்களிலும், ஆமாம். உயரங்களிலும். தேடிச் சலித்து தன் தேவதையைக் கண்டுபிடித்தான். காதலி2. இந்த முறை சென்ற முறையின் தவறுகளைக் களைய வேண்டும் என்று முடிவு செய்தவன் முதல் டெஸ்டாக உயரம் பார்த்தான். இவனை விட ஓரங்குலம் குறைவு. அன்று அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
அடுத்ததாக அவளுக்குக் காதலன் எவனாவது இருக்கிறானா என்று தகவல் திரட்டினான். மீண்டும் மீண்டும் மகிழ்ச்சி. அப்படி யாரும் இல்லை. தாமதிக்காமல் போய்க் காதலைச் சொல்லி விட்டான்.ஒன்றும் சொல்லாமல் இரண்டு நாள் அல்லைய விட்டவள் மூன்றாம் நாள் இவனைக் கூப்பிட்டு சொல்லி விட்டாள். இது ஒத்து வராதென்று. அவளிடம் அதற்கு மேல் கேட்கத் திராணி இல்லாமல் விட்டு விட்டான். பிறகு சுற்றிலும் விசாரித்ததில் தெரிந்தது, அவள் எதிர்பார்ப்பது சராசரி உயரத்திலொரு ஆணையாம். அன்று இரவு இவன் பாத்ரூம் சுவற்றில் முட்டிக் கொண்டு அழுத சத்தம் கேட்டு அம்மா வந்து “ என்னத்துக்கு சுவத்தை உடைக்கிறே?” என்று சத்தம் போட்டதை மறக்கவே முடியாது.
வாழ்க்கை அதன் போக்கில் போகும் என்று சொல்வார்களல்லவா. அது மாதிரி அவன் வாழ்க்கையும் அதன் போக்கில் போனது. இன்னொரு அலுவலகம் மாறினான். ஆனால் இந்த சொந்தமாகப் பெண் தேடும் படலத்தையெல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டான்.இவன் தேடிப் போகவில்லை என்றாலும் பிரச்னை தானாக வந்தது.
இந்த முறை வேறு மாதிரியான பிரச்னை.இவன் டீமிலேயே பிரச்னை. இவன் தான் டீம் லீடர். இவன் டீமில் வந்து சேர்ந்தான் அவன். இன்டர்வியூ பேனலில் இவனை அமர வைத்திருந்தால் அவனை அப்போதே நிராகரித்திருப்பான். ஆனால் நடப்பதெல்லாம் நாம் நினைக்கிற படியேவா நடக்கிறது? அவன் அலுவலகத்தில் சேர்கிற அன்று தான் இவன் பார்த்தான். நல்ல ஆஜானுபாகு, ஆறடிக்கும் மேல் உயரம். திடகாத்திரன். அவனைப் பார்க்கப் பார்க்க இவனுக்குப் பற்றிக் கொண்டு வந்தது.
முடிந்த வரை அவனை மட்டியாக நடத்தினான். அவன் முன் எழுந்து நிற்காமல் அமர்ந்தபடி காலாட்டிக் கொண்டே பேசினான். எழுந்து நின்றால் அவன் முட்டிக் கை உயரம் தான் வருவோம் என்று நினைத்ததும் ஒரு காரணம். அவனானால் பணிவின் சிகரமாக இருந்தான். எதற்கெடுத்தாலும் ஜி சொல்லுங்கஜி பண்ணிடலாம் ஜி ஓகே ஜி போன்றவை தவிர அவன் வாயிலிருந்து வேறு வார்த்தைகளே வரவீல்லை.
இதற்கெல்லாம் அவ்வளவு சீக்கிரம் மயங்கி விடக் கூடியவனா இவன்?விறைப்பாகவே இருந்தான். அதற்கும் ஒரு நாள் வந்தது கேடு. சக டீமன் ஒருவனுக்குத் திருச்செங்கோட்டில் திருமணம். கல்யாணம் என்றால் குடி இல்லாமலா.. எல்லாரும் பேச்சிலர்கள் வேறு.
எல்லாரும் குழுமினர். இவனும். கூடவே அந்த ஆறரையடியனும். கச்சேரி துவங்கி மெல்ல மெல்ல சூடு பிடித்து உச்சகட்டத்தை எட்டி முக்கால்வாசிப் பேர் சரிந்து விட்டார்கள். சரியாகச் சொன்னால் இவனையும் ஆஜானுபாகனையும் தவிர.
அப்போது தான் அது நடந்தது.திடீரென்று விசும்பலாக ஆரம்பித்த ஆறரையடியன் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தான்.இவனுக்கு திடுக்கென்று தூக்கி வாரிப் போட்டது. ஐந்து ஜோக்கர்களுடன் ரம்மியில்லாத சீட்டு வைத்திருப்பவன் எதிராளியைப் பார்ப்பது போல் பார்த்தான்.
அவன் பேசத் துவங்கினான். “ என்னைய யாழுக்குமே புழிக்கழ ஜி” என்றவன் மீண்டும் மூக்கொழுக அழ ஆரம்பித்தான். இவன் எவ்வளவு குடித்தாலும் தெளிவாகத் தான் பேசுவான். “ யோவ் என்னய்யா ஆச்சி.. ஏன் இப்ப பீலாவுற? மேட்டரென்ன? சொல்லு” என்றான் போதையினால் ஏற்பட்டிருந்த திடீர் பாசத்தால்.
வாயைத் துடைத்துக் கொண்டவன் அழுகையினூடே சொன்னான். “ என்னைய யாருக்குமே புழிக்கழ ஜி… நான் ர்ரொம்ப ஹைட்டா இழுக்கேனாம். எந்த பொண்ணுக்கும் என்ன புழிக்கழ ஜி…எல்லா பொண்ணுங்களும் என்னைய பாத்தாவே ஒதுங்கிடறாங்க ஜி ” என்றவன் சற்று நிறுத்தி இவனைப் பார்த்தான். “ பேசாம உங்க மாதிரி சின்ன சைஸா இழுந்திழுக்கழாம் ஜி…. “ என்றவன் சட்டென்று இவன் மடியில் சாய்ந்தான். பின் ஓவெனப் பெருங்குரல் எடுத்து அழ ஆரம்பித்தான்.
“பேசாம உங்க மாதிரி இருந்திருக்கலாம்.,,,,” அவன் சொன்னது இவனுக்கு டால்பி அட்மோஸ் எபெக்டில் எக்கோ அடித்தது. இடப் பக்கம் வலப் பக்கம் என எல்லாப் புறங்களிலிருந்தும் கேட்டது.
மெல்லிய புன்னகையாகச் சிரிக்கத் துவங்கிய இவன், பின் பெருங்குரலெடுத்தக் கபகபவெனச் சிரிக்க ஆரம்பித்தான். சிரித்துக் கொண்டே இருந்தான்.
- ஏன் எப்போதுமே இந்துக்களே தாக்குதல்களுக்கு ஆளாகிறார்கள்?
- கைவிடப்படுதல்
- ஏமாற்றம்
- நிழல் 38 குறும்பட பயிற்சி பட்டறை
- வெடிக்கும் விண்மீன்கள் வெளியேற்றும் அகிலக் கதிர்கள் (Cosmic Rays) பூமியின் இடிமுகிலில் மின்னழுத்தம் அளக்க உதவுகிறது
- தமிழிசை அறிமுகம்
- கலை காட்சியாகும் போது
- யாமினி கிருஷ்ணமூர்த்தி (8)
- பயணம்
- ஒரு மொக்கையான கடத்தல் கதை
- நல்ல காலம்
- பின்நவீனத்துவ எழுத்தாளர் வருகிறார்
- Release of two more books in English for teenagers
- விவேக் ஷங்கரின் ஐ டி ( நாடகம் )
- எட்டுத்தொகை இலக்கியங்களில் வியாபாரம் (வீதி நடை பெண் வியாபாரிகள்)
- போன்சாய்
- மஞ்சுளா கவிதைகள் – ஒரு பார்வை ” மொழியின் கதவு ” தொகுப்பு வழியாக …..
- இந்த கிளிக்கு கூண்டில்லை
- நான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்] அத்தியாயம் -4
- வைரமணிக் கதைகள் – 14 காபி குடிக்காத காதலன்
- நாடக விமர்சனம் வாட்ஸ் அப் வாசு
- தொடுவானம் 66. இனி சுதந்திரப் பறவைதான்
- மிதிலாவிலாஸ்-12
- பிரியாணி
- நற்றமிழ்ச்சுளைகள் – [நாஞ்சில் நாடனின் “சிற்றிலக்கியங்கள்” கட்டுரைத் தொகுப்பை முன்வைத்து]