வைரமணிக் கதைகள் – 15 குளிப்பாட்டுதல்

0 minutes, 0 seconds Read
This entry is part 14 of 26 in the series 10 மே 2015

வையவன்

தூங்கிக் கண் விழித்ததும் ஜின்னிக்கு சிரிப்புதான். மாயா ஜாலம் போல மனசை மாற்றும் சிரிப்பு. மூன்று மாதம் முடிந்து நான்கு ஓடுகிறது. கைக் குழந்தை.

ஷேவிங் நுரையோடு தற்செயலாகத் திரும்பினான் அதியமான்.

ஜின்னி சிரித்துக் கொண்டிருந்தது. எந்தப் பறவை, எந்தப் பூ இப்படி சிரிக்கும்? யார் கற்றுத் தந்தது?

அவனுக்கு ஞான மேரி நினைவு வந்தது. சிசுவான ஜின்னியைக் குளிப்பாட்ட வந்தவள்.

அவள்தான் சிரிக்க வைத்தாள்.

சிரித்துச் சிரித்துக் கற்றுக் கொடுத்தால் குழந்தைகள் சிரிக்கின்றன, நிலா வெளிச்சம் போல ஆனந்தம் கொப்புளிக்க.

“காஞ்சனா!” சமையலறைப் பக்கம் திரும்பிக் கூப்பிட்டான்.

“என்ன?” குரல் மட்டும் வந்தது, அதிகாரமாக.

“ஜின்னி முழிச்சிட்டா.”

“முழிச்சுட்டா தூக்குங்களேன்!”

“நான் ஷேவ் பண்றேன்.”

“நான் சமையல் பண்றேன்.”

குரல் உயர்த்திப் புண்ணியமில்லை.

இது வீடு. போலீஸ் ஸ்டேஷன் அல்ல. தான் சப் இன்ஸ்பெக்டர் அதியமானுக்கு அடங்கிய கான்ஸ்டபிள் அல்ல. இவ்வளவும் கேட்க வேண்டி வரும்.

சில சமயங்களில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிலிருந்து மேற்கோள்கள் கூட கிட்டும்.

திரும்பினான்.

இன்னும் ஜின்னி சிரித்துக் கொண்டிருந்தாள்.

அவனுள் நட்சத்திரங்கள் முளைத்தன. ஒன்று, இரண்டு… கணக்கற்றவை. என்ன குதூகலம்!

அடிக்கடி மாறும் ஆளும் கட்சிப் பிரமுகர்களின் உதைப் பந்தான உத்தியோகம் பார்த்தா லென்ன?

மேலிடத்து மேய்ப்பர்களின் சுய பாதுகாப்புச் சவுக்கடிகளுக்கு எத்தனை தடவை முதுகு காட்டினால் என்ன?

வக்கீல் மனைவியின் குற்ற விசாரணைக் கூண்டில் ஏறி ஏறி நின்றாலென்ன?

சமூக சக்திகளின் பயம் கலந்த விரோதத்தை அன்றாடம் சந்திக்க நேரிட்டால் என்ன?

தூங்கி விழித்ததும் அற்புதமாகச் சிரிக்கிற ஒரு பெண் குழந்தை உண்டு!

ஜின்னி, மேக மண்டலத்திற்கு ஏந்திச் செல்லும் குஞ்சுப் புறா.

ஷேவிங் கிரீம் நுரையோடு அதியமான் நாற்காலி நகர்த்தி எழுந்தான்.

குழந்தையைத் தொட்டிலில் இருந்து தூக்கினான்.

ஜின்னி சிரித்துக் கொண்டே கைவிரல் நீட்டியது.

நுரை எட்டாதவாறு தலை சாய்த்து அவளை மார்பில் தழுவிக் கொண்டான்.

அந்த மிருதுவான உடம்பு அவன் மேல் படர்ந்து ஏதோ செய்தி பரிமாறியது.

யுக யுகாந்திரங்களின் செய்தி.

நான் மகள். நீ தந்தை, வம்சச் சங்கிலியின் புதிய கண்ணி. உன் தீபம் என் வசம்.

உன் குலம் என் கதிர்மணிகளின் ஒளிக்கரு.

நான் ஆனந்த ஊற்றின் பிரவேச வாயில்.

சப் இன்ஸ்பெக்டர் அதியமானின் கல்லூரிக் கவியரங்க முயற்சிகள் கத்தரித்து அறுந்தன. எதிர்பார்த்தபடியே அவன் லுங்கியில் ஜின்னி சிறுநீர் கழித்தாள்.

ஜின்னியைச் சுத்தம் செய்தான். வந்து டவலில் அவளைத் துடைத்தான். ஜின்னி சிரித்தது.

அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்த உணர்வு எழவே மணி பார்த்தான். ஏழு. எட்டு மணிக்கு மூன்றாவது தடுப்பூசி போட வேண்டும். ஜின்னிக்கு. டாக்டரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி இருந்தான்.

ஒன்பது மணிக்கு காமராஜ் அரங்கில் பந்தோபஸ்த். யாருக்கோ பொன்விழாவோ, மணிவிழாவோ!

அமைச்சர் வந்து போனதும் உச்சி வெயில் பன்னிரெண்டு மணிக்கு ஏரோட்ராம் போக வேண்டும். மத்திய அமைச்சர் வரப் போகிறார்.

ஐந்து மணிக்கு சீரணி அரங்கு நோக்கி ஒரு பேரணி.

ஆறு மணிக்கு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவருக்கு ஹோட்டல் பிரஸிடெண்டில் ஒரு பாராட்டு விழா. அவர் நிறையக் குளிப்பாட்டுதல்களை எதிர்பார்ப்பவர்.

எட்டு மணிக்காவது எட்டிப் பார்த்துவிட வேண்டும். இல்லையென்றால் மோப்பம் பிடித்து, வைக்க வேண்டிய வத்தியை உரிய இடத்தில் வைத்து விடுவார்.

“ப்ப்ப்பா!” ஜின்னி பேச அவன் கவனம் கவர முயன்றாள். அவன் உச்சி மோந்தான். கன்னத்தில் முத்தமிட்டான்.

குளிப்பாட்டுதல் நினைவு வரவும் இன்று ஜின்னியைக் குளிப்பாட்டுவது யார் என்ற கேள்வி எழுந்தது.

சிசுப் பருவத்தில் அதியமான் அம்மாவின் நீட்டிய கால் மீது கவிழ்ந்து படுத்தால் எத்தனை சொம்பு தண்ணீர் ஊற்றினாலும் தலை தூக்க மாட்டானாம்.அம்மா சொல்வாள். காஞ்சனா?
கைக்குழந்தையாய் இருக்கும்போது காஞ்சனாவைக் குளிப்பாட்டியது யார்?

கேட்டதில்லை. அவளும் சொன்னதில்லை.

“நாம் மிகவும் நெருங்கி இருக்கிறோம். அதிகம் விலகி வசிக்கிறோம்” என்றான் ஒருநாள்.

அன்று சமாதானம். சமரசத்திற்குப் பின் வந்த சமாதானம்.

“இன்ஸ்பெக்டர்” என்றாள் காஞ்சனா.

“ஐ லவ் யூ.”

“ப்ச்” என்றாள் அவள். அசுவாரஸ்யமாக.

“காஞ்சனா… காஞ்சனா. நான் சொல்றது சத்தியம்.” அதியமான் குரல் உறுமிற்று.

“நான் மறுத்தேனா?” என்று திருப்பிக் கேட்டாள்.

அவளது இரண்டு கைகளையும் ஏந்திப் பிடித்து நெற்றியை அவற்றின் மீது கவிழ்த்துப் புரட்டினான்.

“என்ன அசட்டுத்தனம்” அவள் கைகளை உருவிக் கொண்டாள்.

“நீ என்னை நம்பலே.”

“அப்படி நான் சொல்லலியே!”

“ஏன் ஞானமேரியை வரவேண்டாம்னு சொன்னே?”

“….”

“ஜின்னி ரொம்பச் சின்னவ. அவளைக் குளிப்பாட்ட எனக்கும் தெரியாது. ஒனக்கும் தெரியாது. அவ அற்புதமாக குளிப்பாட்டினா. மூன்று நாள் சிசுவா இருந்ததில்லே பிடிச்சு குளிப்பாட்டினா.”

காஞ்சனா நிமிர்ந்து அவன் கண்களை ஊடுருவினாள். அது ஒரு துப்பறியும் பார்வை.

அவன் நேர்மையைச் சந்தேகிக்கும் கூர்மை.

காஞ்சனா தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தாள்.

தன் உத்தியோகத்தின் பலவீனங்களுக்கும் பழிச் சொற்களுக்கும் அதியமான் தலைகுனியும் சந்தர்ப்பம் நேர்ந்ததுண்டு.

இது அப்படியல்ல. ஆனால் அவள் நம்பவில்லை.

ஞானமேரி இரண்டு தொடைகளும் தெரிய சேலை வழித்து ஜின்னியைப் படுக்க வைத்துக் குளிப்பாட்டுவாள். அது அவள் பாணி. தான் பொறுப்பல்ல.

ஜின்னி அந்தக் குளிப்பாட்டுதலை மிகவும் நேசித்தாள். கிளுகிளுத்துச் சிரித்தாள்.

ஞானமேரி அதை மிகவும் ரசித்தாள்.

ஜின்னியை மேலும் சிரிக்க வைப்பாள். அவள் குளிப்பாட்டும் கலையில் அவன் மனம் தோய்ந்து ஈடுபடுவான். விடாது கவனிப்பான்.

இரண்டு மாதங்களில் ஞானமேரிக்கும் ஜின்னிக்கும் இடையில் ஒரு தனி உறவுப் பாலம்.

ஞானமேரி ஃப்ளாட்டில் நுழைந்ததும் ஜின்னி துள்ளிக் குதித்து குதூகலிக்கத் தொடங்கி விடுவாள்.

குளிப்பாட்டி முடிந்ததும் ஞானமேரி போய்விட மாட்டாள். பவுடர் பூசுவாள். ஜின்னிக்கு கருகருவென்று நிறையத் தலைமுடி. லேசாக எண்ணெய் தடவி நோவாமல் தலை சீவி விடுவாள். கவுனைப் போடுவாள்.

ஃபீடிங் பாட்டிலில் பால் புகட்டி விடுவாள்.

ஒரு மணி நேரம் இருப்பாள். பிரிய மனமில்லாமல்தான் போவாள்.

முதல் மாதம் முடிகிறவரை காஞ்சனாவின் மனோநிலை வேறுவிதம். பேசாமல் ஞானமேரியை வீட்டு வேலைக்கு வைத்துக் கொண்டால் என்ன?

மாதம் முடிந்தது. இருநூறு ரூபாயை ஞான மேரியிடம் நீட்டினாள் காஞ்சனா.

“எதுக்கும்மா?”

“வச்சுக்க.”

“வேண்டாம்மா?”

“அதிகமா வேணுமா?”

“சீச்சீ!” ஞானமேரி வாங்கிக் கொள்ளாமல் நின்றாள்.

“வேலை செய்யறே. சம்பளம் வாங்கிக்க.”

“என்னம்மா சொல்றீங்க. கொயந்தைய குளிப்பாட்டறேன். இது வேலை இல்லே”

“ஷேவ் பண்ணிட்டு சீக்கிரம் குளிங்க. ஜின்னியை வேற குளிப்பாட்டணும் இல்லே?”

“இன்னிக்கு நீ குளிப்பாட்டேன்.”

“எனக்கு இன்னிக்கு ஒரு முக்கியமான கேஸ். நோட்ஸ் எடுத்து வக்கச் சொல்லி ஸீனியர் ஸ்ட்ரிக்டாகச் சொல்லியிருக்கார். குழந்தைக்கு தடுப்பூசி போட்டு நேரா அம்மா வீட்டில் விட்டு விட்டு நான் ஹைக்கோர்ட் போகணும்.”

அதியமான் ‘அப்பீல்’ தோற்றதற்கு வருந்தவில்லை.

“பத்து நிமிஷம் வச்சிட்டிரு. நான் ஷேவிங் முடிச்சுடறேன்.”

ஏழே முக்காலுக்குத்தான் எல்லாம் முடிந்தது.

கீழே இறங்கினர். சோதனை காத்திருந்தது.

யமாஹா டயர் பஞ்சர்.

காலி ஆட்டோ ஒன்றை நிறுத்தினர்.

டிராஃபிக் ஜாமில் நீந்தி காஞ்சனாவுக்கு ஸிஸேரியன் நடந்த நர்ஸிங் ஹோமை நெருங்கும்போது ஏழு ஐம்பத்தெட்டு.

இடையில் ஒரு நாற்சந்தி. டிராஃபிக் ஸிக்னல். தாண்டிவிட முடியும் என்றுதான் ஆட்டோ சீறிப் பறந்தது.

சாலையின் வெள்ளைக் கோட்டைத் தொடும்போது சிக்னல் சிவந்து விட்டது. டிராபிக் கான்ஸ்டபிளின் விசில்.

ஆட்டோ நறுக்கென்று நின்றது.

வாகன வெள்ளம் இடை மறித்துப் பாய்ந்தது. சைக்கிள்கள். கால்நடைகள். முகங்கள், முகங்கள், தூரத்தில் ஒரு முகம்.

ஞானமேரி! பார்த்து விட்டாள், சிரித்தாள். நெருங்கி வருவாள் போலிருந்தது.

அதியமான் காஞ்சனாவைப் பார்த்தான்.

அவள் ஜின்னிக்கு நாப்கின் மாற்றிக் கொண்டிருந்தாள். கவனிக்கவில்லை.

ஞானமேரியைப் பார்த்து அதியமான் வருத்தமாய்ச் சிரித்தான்.

ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு பைக்குகளும் அவற்றின் பின் ஒரு தள்ளு வண்டியும் ஞானமேரியை நெருங்கிவிடாது தவிர்த்தன.

அவள் சாலை கடந்து பிளாட்பாரம் ஏறும் வரை அவன் பார்த்தான்.

இந்நேரத்தில் இவள் எங்கே?

ஞானமேரி பிளாட்பாரத்தில் இருந்தவாறே இன்னும் தடுக்கப்பட்டிருந்த ஆட்டோவைப் பார்த்தாள். அதியமான் கவனித்தான்.

ஜின்னியை அவள் என்னமாய் நேசித்தாள்!

அவள் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே சாலை ஓரத்திலிருந்து மாதா கோவிலுக்குப் போகும் பாதையில் திரும்பினாள்.

அவன் நிமிர்ந்து பார்த்தான்.

லூர்து மேரி ஆலயம்.

சிக்னல் விடுவித்தது.

சரியாக எட்டு ஐந்துக்கு அவர்கள் நர்ஸிங்ஹோமில் நுழைந்தனர்.

அதியமான் அப்பாயிண்ட்மெண்ட்டைச் சொன்னான்.

“ப்ளீஸ் பீ ஸீடட்” என்றாள் நர்ஸ்.

டாக்டர் அறையில் விளக்கு எரியவில்லை.

“டாக்டர் வரலியா?”

“லேட்டாவும். ஒரு சீரியஸ் ஆபரேஷன்.”

அதியமான் மணி பார்த்தான்.

“ரொம்ப நேரம் ஆகுமா?”

“ஒன் அவர் ஆகலாம்.”

அவன் காஞ்சனாவைப் பார்த்தான்.

“எங்க சீனியருக்கு ஒரு போன் பண்ணிடறீங்களா?” என்று சொன்னாள் அவள்.

“நானும் போன் பண்ணனும். நீ வெயிட் பண்றியா?”

காஞ்சனா தலையசைத்தாள்.

நர்ஸிங்ஹோமை விட்டு வெளியே வந்தான். வானம் காலையிலேயே கறுத்து விட்டது.

அவன் இரண்டு ஃபோன் செய்தான்.

சில்லென்று குளிர் காற்று வீசியது.

ஒரு காப்பி குடித்தால் நன்றாயிருக்கும்.

அவன் நல்ல ஹோட்டல் தேடி நடந்தான். ஹோட்டல் வந்ததும் நுழையவில்லை. நின்றான். எதிரில் லூர்துமேரி ஆலயம்.

ஞானமேரி அங்கேதான் வேலை செய்கிறாள். அப்படித்தான் ஹெட்கான்ஸ்டபிள் சொல்லியிருந்தார்.

அவன் பர்ஸை எடுத்துப் பிரித்தான். ஆயிரம் தேறும்.

பரிசுத்தமான நேசம் ஒரு பாக்கியல்ல. அது திருப்பவே முடியாதது. வரவு செலவற்றது.

எனினும் அதை கௌரவிக்க வேண்டும்.

பக்கத்துக் கடையில் ஒரு கவர் வாங்கினான்.

எண்ணாமல் ஒரு கொத்து நோட்டுக்களை அள்ளி அதில் திணித்தான். பாக்கெட்டில் தனியே வைத்தான்.

ஹோட்டலில் நுழைந்து காப்பி குடித்துவிட்டு லூர்துமேரி ஆலயத்திற்குப் படியேறினான்.

வானம் மேலும் கறுத்தது. சாயங்காலம் ஆறு மணியான கறுப்பு.

லூர்து மேரி ஆலயத்தின் உள்ளே பெருக்கிக் கொண்டிருந்த ஞானமேரி விளக்குப் போட ஸ்விட்சை நோக்கிப் போனாள்.

ஷூ ஓசை கேட்டுத் திரும்பிப் பார்த்தவள் சிரித்தாள்.

அந்த அரையிருளில் ஒளி வீசிய பல்வரிசை விளக்கைப் போட்டு அவனை நெருங்கி வரும் வரை மூடவில்லை.

“ஸார் வாங்க. டிராபிக்கிலே சந்தி கடக்கும் போது பார்த்தேன். என்னை கவனிக்கல. ஆட்டோகிட்டே வரலாம்னா ரெண்டு மோட்டார் சைக்கிள்காரனுங்க பூந்து மறிச்சிட்டானுங்க.”

ஞானமேரி புதுப்பானை மாதிரி பொங்கி வழிந்தாள்.

“ஜின்னி நல்லாருக்குங்களா… அம்மா நல்லாருக்காங்களா… புள்ளய மறக்கவே முடியலீங்க. வளந்துருக்கும் இல்ல. என்னை மறந்துருக்கும்.”

அதியமான் அபூர்வமானதொரு சாந்தியை அனுபவித்தான்.

“ஒன்னைப் பாக்கணும்ன்னு வந்தேன் ஞானமேரி! ஜின்னி சிசுவாயிருந்தப்ப குளிப்பாட்டினே. சிரிக்க வச்சே… சிங்காரிச்சே.”

“ஆமாம் எப்பவும் சிரிப்புதான்.”

எப்படித் தொடங்குவது? துணிந்தான்.

“நீ எனக்கு ஒரு உதவி செய்யணும் ஞானமேரி.”

“சொல்லுங்க ஸார்.”

“இதை நீ வாங்கிக்கணும்.”

நீட்டிய கவரில் துருத்திக் கொண்டிருந்த நோட்டுக்களைப் பார்த்தாள். ஒரு வினாடி அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

“குடுங்க ஐயா” அவள் வாங்கினாள்.

திரும்பி விடுவிடுவென்று காணிக்கைப் பெட்டியை நோக்கி நடந்தாள். பெரிய பித்தளைப் பூட்டு அதில் மினுமினுத்தது.

துவாரத்தின் வழியே கவரைத் துருத்தித் துருத்திச் செலுத்தினாள்.

சப்தித்த சில்லறைகளின் மத்தியில் அது பொத்தென்று விழுந்தது.

திரும்பி வந்தாள். சிரித்துக் கொண்டே கை கூப்பினாள்.

“என்ன ஞானமேரி?”

“ஜின்னிக்காக வேண்டிக்கிட்டிருந்தேன். செலுத்திட்டேன்.”

அதியமான் நிமிர்ந்து ஞானமேரியையும் அவள் தலைக்குப் பின்னால் குழந்தை ஏசுவை ஏந்திய லூர்து மேரியையும் மாறி மாறிப் பார்த்தான்.

“ஜின்னியைக் குளிப்பாட்ட குடுத்து வச்சிருந்ததுங்க ஸாரு. ஒவ்வொரு கொழந்தையும் ஏசுதான். கொயந்தயக் குளிப்பாட்டினா ஏசுவைக் குளிப்பாட்டறாப்பிலே.”

“ஜின்னி பொண்ணாச்சே.”

“பொண்ணானா என்ன? லூர்து மேரி, அவங்களுக்குள்ளாற ஏசு அடைக்கலம்.”

வெளியே மழை சீற்றத்தோடு தொடங்கி விட்டது. அலை அலையாக குளிர்காற்று உள்ளே பிரவேசித்தது.

காஞ்சனாவைப் பற்றி ஏதாவது சொல்வாளோ, என்று அவன் எதிர்பார்த்தான்.

ஒன்றும் சொல்லவில்லை.

அதியமான் வெளியே பார்த்தான். வெக்கை தணியத் தணிய பூமியை வானம் குளிப்பாட்டிக் கொண்டிருந்தது.

மண்ணுக்கு அந்த நேசம் புரிந்திருந்தது. மணம் வீசியது.

ஜின்னிக்கு ஞானமேரி செய்தது புனித நீர்க் குளிப்பாட்டல் !

++++++++++++++++++++++

வைரமணிக் கதைகள்
[வையவன் ]
முதற் பதிப்பு : 2012

பக்கங்கள்:500
விலை:ரூ. 500

கிடைக்குமிடம்: தாரிணி பதிப்பகம்
4 A, ரம்யா ப்ளாட்ஸ்
32/79, காந்தி நகர் 4வது பிரதான சாலை
அடையார், சென்னை-20
மொபைல்: 9940120341

Series Navigationமிதிலாவிலாஸ்-13தொடுவானம் 67. விடுதி வாழக்கை
author

வையவன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *