மிருக நீதி

This entry is part 2 of 19 in the series 24 மே 2015

0
சர்வதேச விமான தளத்தை ஒத்திருந்தது அந்த விமான தளம். இலங்கையை ஒட்டிய ஒரு சிறிய நாட்டின்  பிரதான விமான தளம் அது. உள்நாட்டுப் போர் எவ்வளவு மோசமாக நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் வெளிநாட்டுப் பயணிகளைக் கவரும் வகையிலும், வெளிநாட்டு வர்த்தகம் செழித்து வளரவும் சிகப்புக் கம்பளம் விரித்திருந்தது அந்த நாட்டு அரசாங்கம். பல வகைகளிலும் செழிப்பு நிறைந்த நாடுதான் அது என்றாலும் தொடர்ந்த பிரச்சினைகளால் முன்னேற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நாடுகளில் அதுவும் ஒன்று. உதவிக் கரம் என்ற பெயரில் அன்னிய வியாபாரக் கழுகுகள் அதன் உடல் மேல் அமர்ந்து ரத்தம் உறிஞ்ச ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகிப் போய்விட்ட நிலையில் சமகால தலைமுறை இளைஞர்கள் எல்லோரும் வெளிநாட்டில் கிடைத்த கல்வி அறிவாலும் வேலை வாய்ப்பாலும் கற்று தெளிந்து ரகசியமாக ஒரு இயக்கம் ஆரம்பித்திருந்தார்கள். அவர்களது இலட்சியமே தாய்நாட்டை அன்னிய முதலைகளிடமிருந்து காப்பாற்றுவது தான். அதற்கான செல்வமும் வசதியும் இந்த தலைமுறையில் அவர்களுக்கு வாய்த்திருந்தது. அடுத்த தலைமுறையைக் காப்பாற்ற வேண்டியது தங்களது கடமைகளில் ஒன்றாகவே அவர்கள் எண்ணினார்கள்.
டபுள்யூ ஜெ என்ற அமைப்பு ஒன்று தயாரானது. வைல்ட் ஜஸ்டிஸ் என்ற கோட்பாட்டின் சுருக்கமே அது. பேச்சு வார்த்தைகளால் பயனில்லை. அதனால் விரயப்படும் காலமும் நேரமும் கிடைக்கப்படும் தீர்வை நீர்த்துப் போக வைத்துவிடும். உடனடித் தீர்வு என்பது தீவிர செயல்பாடுகளால்தான் ஏற்படும் என்று திடமாக நம்பும் இளைஞர்கள் அதில் உறுப்பினர்களாக இருந்தார்கள். அவர்கள் யாரும் படிப்பினை பாதியில் நிறுத்திவிட்டு தீவிர வாத இயக்கத்தில் சேர்ந்தவர்கள் அல்ல. உண்ண உணவும் இருக்க இடமும் உடுக்க உடையும் இல்லாத ஏழைகளும் அல்ல. சிலர் கணிப்பொறு வல்லுநர்கள். சிலர் வியாபார நிறுவனங்களில் உயர் பதவி வகிப்பவர்கள். குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ள சிலர் தாங்கள் குடிபெயர்ந்த நாடுகளில் ராணுவம், விமானப் படை போன்ற வற்றில் உயர் பதவிகளில் இருப்பவர்கள்.

உலக வரைபடத்தில் இன்னும் அறியப்படாத ஒரு இடமாக அந்தத் தீவு இருந்தது. அங்கிருக்கும் பழங்குடியினர் இதுவரை எந்த ஆராய்ச்சியாளனின் கண்ணிலும் படவில்லை. நல்லவேளை. பட்டிருந்தால் இன்னேரம் அவர்களை டிஸ்கவரி, அனிமல் ப்ளேனட், பி.பி.சி. என்று சகட்டு மேனிக்கு பிறந்த மேனியாய் காட்டியிருப்பார்கள். பிறந்த மேனியாய் காட்டுவது இவர்களுக்கெல்லாம் ஒரு மேனியா போலும். சில சமயம் ஊடக வியாபாரங்களில் சோகம் கூட கூடுதல் விலை விற்கிறது. எங்காவது எரிமலை வெடித்தாலோ, நில அதிர்வு ஏற்பட்டாலோ, சுனாமி தாக்கினாலோ அதை வித வித கோணங்களில் படமெடுத்து உலக மக்களின் ராத்திரி தூக்கத்தை பிளவு படுத்தும் வணிக வக்கிரம் மலிந்துதான் போய்விட்டது. குரூரம் அதிக அளவில் ரசிக்க இயந்திரத்தனமும் எதையும் சரீர உழைப்பின்றி செய்யும் தன்மையுமே காரணம் என்று தேர்ந்த மனவியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். அவர்களில் ஒருவன் பிராய்டுசன் என்று பெயர் போட்டுக் கொண்டு சென்ற வாரம் நரம்புகளில் மின்சாரம் பாய்ச்சியபடியே தற்கொலை செய்து கொண்டான்.
அந்தத் தீவின் பழங்குடியினர் மொத்தம் அறுபத்து எட்டு பேர். ஆயிரக் கணக்கில் இருந்தவர்கள் தாம். இன்று நாகரீகம் இன்னும் சென்றடையாத நிலையில், தங்கள் பழங்குடி மருத்துவத்தையே பூரணமாக நம்புவதாலும், அதை மீறி புதிய நோய்கள், சூழல் மாசு காரணமாக அவர்களைத் தாக்குவதாலும், அவர்களது சனத்தொகை அருகிவிட்டது. அவர்களின் கூட்டத்தில் வயதானவன் அரசன். அவன் மனைவி அரசி. சில தலமுறை மலட்டு ஆண்களாலும் பெண்களாலும் அவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது என்பதும் அவர்களே அறியாத உண்மை.

நான்கு பிரதான சாலைகள் சந்திக்கும் இடத்தில் அவன் நின்றிருந்தான். பிரதான சாலைகள் என்றால் ஒவ்வொன்றும் இரு நூறடி அகலம் உள்ள சாலைகள். அதில் பறந்து கொண்டிருக்கும் கார்கள் எல்லாம் வெண்ணையில் செய்யப் பட்ட சாலையில் செல்வது போல் வழுக்கிக் கொண்டு சென்றிருந்தன. மணிக்கு நூறு மைல் வேகத்திற்கு குறைந்து வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்ட சாலை அது.
அவன் செல்ல வேண்டிய அலுவலகம் எதிர்புறத்தில் இருந்தது. அதை அடைவதற்கு அவன் சிறிது காத்திருக்க வேண்டியிருந்தது. மான் தோலின் நிறத்தை ஒத்த கோட் ஒன்றை அவன் அணிந்திருந்தான். அவன் சார்ந்த தேசத்தில் கோட் அணிவது திருமணத்தின் போதுதான் என்பதை நினைக்கும் போது அவனுக்குச் சிரிப்பு வந்தது. இங்கே எல்லாவற்றிற்கும் கோட்தான். அணியாவிட்டாலும் மடித்து கை மேல் போட்டுக் கொள்ள வேண்டும். கருநில வண்ணத்தில் அவன் சட்டை அணிந்திருந்தான். அதை இன்சர்ட் பண்ண வேண்டிய கட்டாயத்தில் இருந்தான். கழுத்தில் மஞ்சள் கலரில் பெயிண்டட் டை. நீலம், மஞ்சள், மான் தோல் நிறம். தன் ஊரில் இவ்வாறு அணிந்தால் ஒரு கூத்துக்காரனைப் பார்ப்பது போல் பார்ப்பார்கள் என்று எண்ணிக் கொண்டான். வாகனப் போக்குவரத்து சிறிது தடைபட்டு பாதசாரிகளுக்கான சமிக்ஞை வெளிப்பட்டபோது அவன் இயல்பு நிலைக்குத் திரும்ப நிரம்ப பிரயாசைப்பட வேண்டியிருந்தது. அவசரமாக அவன் சாலையைக் கடந்தான். எதிர்திசை நடைபாதையில் கால் வைத்து ஏறும் முன் ஒரு கார் அவனை உரசியபடி கடந்தது.
“ பக் அப் மேன்” என்று திட்டியபடியே கடந்து போனான் ஒரு கறுப்பன். இந்த ஊரில் இது “ வூட்ல சொல்லிகினு வந்தியா ”  ரகம்.

அவர்கள் நால்வர் ஒரு குழுவாக நின்றிருந்தார்கள். சரியான விகிதத்தில் அமைந்த குழு. இரண்டு ஆண் இரண்டு பெண். சராசரி வயது இருபத்தி ஐந்துக்குள் இருக்கும். அதிலும் ஒருவள் மிகவும் துறுதுறுப்பாக இருந்தாள். அவள் போட்டிருந்த வலை பனியனில் திணறிக் கொண்டிருந்தது அவளது மார்புப் பிரதேசம். அதை சர்வ பிரக்ஞையோடு உணர்ந்தவளாக அவள் நெஞ்சை முன்னிறுத்தி பேசிக்கொண்டிருந்தாள்.
ஜமைக்காவின் பிரதான விமான தளம் அது. சர்வதேச விமானங்கள் வந்து போகும் இடம். சுற்றுலா என்பதே மிகப் பெரிய அன்னிய செலாவணி ஈட்டித் தரும் நாட்டின் விமான தளம். எதைக் கொண்டு வருவதற்கும் எதைக் கொண்டு போவதற்கும் அங்கு தடையில்லை.
நால்வரில் ஒருவன் தூக்கக் கண்களுடன் இருந்தான். வலை பனியன்காரி அவனை சீண்டிக் கொண்டிருந்தாள்.
“ தூங்குவதாக இருந்தால் என்னோடு வராதே. இங்கேயே தங்கிக் கொள். வேறு நல்ல ஆணாக நான் தேடிக் கொள்கிறேன். “
இதை அவள் சற்று உரத்த குரலில் சொன்னாள். பல தலைகள் அவளைத் திரும்பிப் பார்த்தன. அதைத் தெரிந்தே அவள் சொன்னாள்.
மனைவியிடமிருந்து சொற்ப விடுதலை பெற்ற ஒரு வழுக்கை மண்டைக்காரன் சற்று அவளை நோக்கி நகர்ந்தான். அவன் கையில் அந்த ஊரில் விளையும் தேங்காயைப் போன்ற ஒரு பழம் இருந்தது.
அவள் அவனைப் பார்த்துக் கேட்டாள்.
“ உன் கையிலிருக்கும் பழம் ஆணா? பெண்ணா ?
அவனுக்கு அவள் கேள்வியின் அர்த்தம் புரியவில்லை. அவன் கவனம் கையிலிருக்கும் பழத்தின் மீது இல்லை.
அவன் பதில் சொல்லாமல் விழிப்பது அவளுக்கு மேலும் உற்சாகத்தைக் கொடுத்திருக்க வேண்டும். தன் சகாக்களைப் பார்த்து கண்ணடித்துச் சிரித்தாள்.
“ இதைச் சாப்பிட்டு பார்த்திருக்கிறாயா? இதை முழுவதுமாகச் சாப்பிடமுடியாது. ஏனென்றால் இது ஆண் பழம். பழத்தின் நடுவில் நீளமாக ஒரு தண்டு இருக்கும். “
சுற்றி இருந்தவர்கள் சத்தம் போட்டுச் சிரித்தார்கள். அவன் சிரிப்பதாக வேண்டாமா என்ற யோசனையில் தடுமாறியிருக்கும்போது அவன் மனைவி வந்து அவனைக் காப்பாற்றி கவர்ந்து போனாள்.

நாகரீக வளர்ச்சி அவ்வளவாக எட்டிப் பார்த்திராத பகுதியாக அது இருந்தது. கொஞ்சம் மலைப்பாங்கான பிரதேசம். சாலைகளும் கொஞ்சம் கரடு முரடாகத்தான் இருந்தன. இரு மருங்கிலும் தைல மரங்கள் நிறைந்த பூமி. காற்றின் வாசனையே புது விதமாக வினோதமாகக் கூட இருந்தது. அடர்ந்தக் காட்டுப்பகுதியாக தென்பட்டாலும் மருந்துக்குக் கூட வனவிலங்குகள் நடமாட்டம் ஏதுமில்லாதது கொஞ்சம் அதிசயமாகவும் ஏன் அதிர்ச்சியாகவும் கூட இருந்தது.
அந்த சாலை கொஞ்சம் செங்குத்தாக ஏறி இரண்டாகப் பிரியும் இடத்தில் இரும்பு வேலி ஒன்று அமைக்கப் பட்டிருந்தது. திருப்பத்தை தவற விடும் எவரும் அந்த வேலியில் தான் முட்டிக் கொள்ள வேண்டும். வேலி இரண்டு ஆள் உயரம் இருந்தது. ஏன் அவ்வளவு உயரம் என்று பார்ப்பவர் எவரும் கேட்கக் கூடும். ஆனால் எவரும் அப்பகுதிக்கு வந்து பார்ப்பார்களா என்பது சந்தேகமே. அந்தளவுக்கு மனித நடமாட்டம் அற்ற பகுதியாக அது இருந்தது.
வேலியின் நடுவே இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட கதவு ஒன்று இருந்தது. அதுவும் இரும்பாலானதுதான். ஈட்டிகளைச் செருகி வைத்தாற்போல் அமைக்கப்பட்டிருந்த கதவு அது. அதை ஒட்டினாற்போல் உள்பக்கம் ஒரு மரக் கூண்டு இருந்தது. அதன் கதவு சாற்றி வைக்கப்பட்டிருந்தது.
அந்தப் பெண்ணுக்கு சுமார் அறுபது வயதிருக்கலாம். அவள் உடை அவள் உடலை முழுவதும் மறைப்பதாக இருந்தது. முன்பக்கம் நாடா வைத்து மூன்று இடங்களில் இறுக்கிக் கட்டப் பட்டிருந்தது. அதன் மேல் கரும் பச்சை நிறத்தில் மருத்துவ மனையில் பயன்படுத்தப்படும் மேலாடை ஒன்றை அவள் அணிந்திருந்தாள். மேலாடை கட்டப்படவில்லை. அது காற்றில் அங்குமிங்கும் ஆடிக்கொண்டிருந்தது. அவள் ஓடிக் கொண்டிருந்தாள். பின் பக்கம் திரும்பிப் பார்த்தபடியே ஓடிக்கொண்டிருந்தாள். திடீரென்று மேகங்கள் கருக்க ஆரம்பித்தன. இடியுடன் கூடிய மழை பெய்தது.
அவள் ஓட்டத்தை நிறுத்திவிட்டு பின்பக்கம் திரும்பிப் பார்த்தாள். அவள் தாண்டி ஓடிவந்த பகுதியில் வெயில் சுளீரென்று காய்ந்து கொண்டிருந்தது. அவள் முகத்தில் இனம் புரியாத பீதி குடிகொள்ள ஆரம்பித்தது. அவள் மீண்டும் வேலிக் கதவை நோக்கி ஓட ஆரம்பித்தாள். அப்போதுதான் அது நிகழ்ந்தது.
அவள் காலடியில் இருந்த பூமி பிளவு பட ஆரம்பித்தது. அவளை மேல்ல அது விழுங்க ஆரம்பித்தது. முழுவதுமாக அவள் பூமிக்குள் போன பிறகு பூமி மீண்டும் மூடிக்கொள்ள ஆரம்பித்தது. அது பழைய நிலையை அடைய சரியாக மூன்று நிமடங்களே ஆனது.

இயற்கையின் மாற்றங்களும் சீற்றங்களும் என்ற தலைப்பில் ஒரு மாநாடு பிரான்ஸில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பாரிஸின் மிகப் பெரிய ஓட்டலின் பிரதான கருத்தரங்க மண்டபத்தில் அது ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அனைத்து நாடுகளின் விஞ்ஞானிகளும் கலந்து கொண்டிருந்த கருத்தரங்கம் அது. பேராசிரியர் யூனுஸ் முகமது என்ன சொல்லப் போகிறார் என்பதுதான் கலந்து கொண்ட அனைத்து விஞ்ஞானிகளின் கவனமாக இருந்தது.
யூனுஸ் முகமது இயற்கை குறித்தான ஆராய்ச்சிகளின் பிதாமகன். அவரது ஆராய்ச்சிகளின் பலனாக பல நாட்டு இயற்கை சீற்றங்கள் முன்கூட்டியே அறியப் பட்டு சேதங்கள் தவிர்க்கப் பட்டிருக்கின்றன. இதுவரை இயற்கையின் சீற்றங்களை முன்கூட்டியே அறிவது தொடர்பான ஆராய்ச்சிகள் மட்டுமே நடைபெற்று வந்திருக்கிற காலகட்டத்தில் யூனுஸ் இயற்கையின் சீற்றங்களை முறியடிப்பதற்கும், அதனை ஆக்கப் பூர்வமாக பயன்படுத்துவதற்கும் ஆராய்ச்சி மேற்கொண்டிருந்தார். அதில் அவர் வெற்றி கண்டுவிட்டதாக விஞ்ஞான உலக சஞ்சிகைகள் கிசு கிசுக்களும் வெளியிட்டு விட்டன. இந்த மாநாட்டில் அவர் அது தொடர்பான தீஸீஸ் ஒன்றை வாசிக்கப் போவதாக உலகமே நம்பியது.
யூனுஸ் முகமது அந்தக் கருத்தரங்கத்திற்கு நிறைவு நாளன்றுதான் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதுவரையிலான  அவருடைய கண்டுபிடிப்புகள் மூலம் அவர் உலக நாடுகளிடமிருந்து பெறும் ராயல்டி தொகையே அவரை உலகக் கோடிஸ்வரர்களில் ஒருவராக ஆக்கிவிட்டிருந்தது. அவருடைய சமீபத்திய ஆராய்ச்சிக்கு அமெரிக்காவும், பிரிட்டனும், பிரான்ஸ¤ம் நிதியுதவி செய்திருந்தன. ஆராய்ச்சியின் பலன்களை பிற நாடுகளுக்கு விற்கும் உரிமை இந்நாடுகளுக்கு மட்டுமே இருந்தது.
ஆசிய நாடுகள் ஐநா சபையில் இதற்கு ஏற்கனவே பெரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இயற்கையின் சீற்றங்களைக் கட்டுப்படுத்தவும் திசை திருப்பவும் கூடுமென்றால் அதுவே பணக்கார நாடுகளின் ஆயுதமாக மாறக்கூடிய அபாயம் இருப்பதாக அவை அச்சப்பட்டன. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், சுனாமி போன்ற பேரலைகள் உருவாவதை தடுக்கவும் திசை திருப்பவும் சாத்தியம் என்றால், அதை செய்யாமல் இருந்தே இந்தியா போன்ற நாடுகளை அச்சுறுத்தலாம் என்று அவை நம்பின.

அவனை கறுப்பு வசியக்காரன் என்று அழைத்தனர். அவன் உடைகள் வினோதமாக இருந்தன. இந்தியக் கழைக் கூத்தாடி போல் ஒட்டுத் துணிகளால் ஆன உடைகளை அவன் அணிந்திருந்தான். சிகப்பும் கறுப்பும் பிரதானமாக இருந்தன. தென் ஆப்பிரிக்க பின் தங்கிய கிராமம் ஒன்றில் அவன் வசித்து வந்தான். அவன் சமயங்களில் ஒரு புத்தி பிறழ்ந்தவனைப் போல் ஓலமிட்டு தெருவெங்கும் ஓடுவான். அவன் வாயிலிருந்து நுரை கக்கிக் கொண்டிருக்கும். வாய் ஓயாமல் உலகின் பல மொழிகளில் ஓலமிட்டுக் கொண்டிருக்கும். கூடவே அவனது தாய் மொழியான லிபியேதுமில்லாத ஆப்பிரிக்க பழங்குடியின் மொழியும் வெளிப்படும். அது அவன் தாய மொழியாக இருப்பதே அதன் காரணம்.
கொஞ்ச நாட்களாக அவனைக் காணவில்லை என்று அந்த கிராம மக்கள் பேசிக்கொண்டார்கள். அவன் மலைப் பாங்கான இடம் ஒன்றில் குகை ஒன்றில் வசிப்பதாகவும், உணவும் நீரும் இல்லாமல் அவனால் பல நாட்கள் உயிரோடு இருக்க முடியும் என்றும், அதற்குக் காரணம் அவன் கற்று வைத்திருக்கும் கறுப்பு வசியமே என்றும் மக்கள் நம்பினார்கள்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு அவனது நடமாட்டம் ஊருக்குள் தெரிய ஆரம்பித்தது. தெரு முனைகளில் நின்று மக்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பான் அவன். அவ்வூர் மக்கள் சாவு ஊர்வலத்திற்கு பயன்படுத்தும் ஒரு வித மரக் குழலை அவன் ஊதிவிட்டு அங்கிருந்து அகன்று விடுவான்.
ஆறு நாட்களுக்குப் பிறகு அவனைக் காணவில்லை. அவன் மீண்டும் மலைமேல் சென்று விட்டதாக மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்.

பூமியின் நிலப்பரப்பு தட்டையான தட்டுகளால் ஆனது. ஒரு சம அளவுள்ள பீங்கான் தட்டுகளை அடுக்கி ஒரு மேசையின் மீது வைத்துவிட்டு, மேசையை லேசாக நகர்த்திப் பாருங்கள். பல திசைகளில் பீங்கான் தட்டுகள் நகரும். இதுபோன்றே பூமியின் சுழற்சியில் ஒரு நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமித் தட்டுகள் நகர்கின்றன. இந்தத் தட்டுகளின் மேல் வைக்கப்பட்ட பிரம்மாண்ட கோப்பை நீராக இருக்கிறது கடல். தட்டுகள் நகரும்போது கோப்பை நீர் தளும்புகிறது. அது பேரலையாகி சுனாமி போன்ற பேரழிவை ஏற்படுத்துகிறது.

சரியாக பதினொரு மணி நாற்பத்தொன்பது நிமிடங்களுக்கு உலகின் பல பாகங்களில் பல நிகழ்வுகள் நடந்தேறின. அதற்கு முன்னோடியான விஷயங்கள்தாம் மேற்குறிப்பிட்ட பாராக்கள்.

டபுள்யூ ஜே அமைப்பினர் அவர்களது ரகசிய இடத்தில் கூடியிருந்தார்கள். அது ஒரு விசாலமான அறையாக இருந்தது. அவர்கள் மொத்தம் இருபது பேர். எல்லோருமே கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். ஆனால் பல பணக்காரநாடுகளில் குடியுரிமை பெற்றவர்கள். அவர்கள் இருந்த அறையில் ஒரு மிகப்பெரிய கம்ப்யூட்டர் திரை. கிட்டத்தட்ட அந்த அறையின் ஒரு பக்க சுவராக அது இருந்தது. அவர்களில் ஒருவன் அமெரிக்க ராணுவத் தலைமையகத்தில் வேலை பார்ப்பவன். அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. அவனுடைய நடமாட்டத்தை எப்பொழுதும் கண்காணித்துக் கொண்டிருக்கும். இப்போதுகூட அவர்கள் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு அவன் வந்திருக்கிறான். அதிவேக ஜெட் விமானத்தில் இன்னும் ஒரு மணிநேரத்தில் அவன் அலுவலகம் செல்ல வேண்டும்.
அவனுடைய செல் போனில் அவனை ராணுவ அலுவலகத்திலிருந்து அழைத்தார்கள். அந்த அறையில் ஒரு நவீன கணிப்பொறி நிறுவப்பட்டிருந்தது. அது சில மைக்ரோ செகண்டுகளில் அழைப்பு வந்த திசையையும், இடத்தையும் துல்லியமாக கணக்கிட்டது. அவன் மெல்ல சுவரோரம் போய் நின்று கொண்டான். அவன் பின்னே இருக்கும் கம்ப்யூட்டர் திரை அவனது அடுக்குமாடி வீட்டின் வரவேற்பரையைக் காட்டியது. அவன் வீடு இருக்கும் பகுதியில்  கேட்கும் இயல்பான சத்தங்கள் கேட்க ஆரம்பித்தன. அவன் வளர்க்கும் செல்ல நாய் புரூனி அவ்வப்போது குரைக்கும் சத்தமும். அவன் இயல்பாக பேச ஆரம்பித்தான். கேமரா பொருத்திய அவனது செல்போனை தன் முகத்துக்கு மிக அருகில் வைத்து அவன் பேசினான். அதிலிருக்கும் கேமரா அவன் முகத்தைத் தாண்டி பின்புலமாக இருக்கும் அவனது அறையின் பிம்பத்தையும் உள்வாங்கிக் கொண்டது.
செல்போன் தொடர்பை துண்டித்துவிட்டு அவன் தன் சகாக்களை நோக்கி கட்டை விரலை உயர்த்தினான். அமெரிக்காவின் மிகப் பெரிய வணிக மையத்தைத் தகர்க்கும் திட்டத்தின் கடைசி செப்பனிடுதல்களில் அவர்கள் மூழ்கிப் போனார்கள்.

இரண்டு பேர் அமரும் இருக்கைகளில் அவர்கள் ஜோடியாக அமர்ந்திருந்தார்கள். ஒரு ஆண் ஒரு பெண் என்ற சரியான விகிதத்தில் அமர்ந்த அவர்கள் ஆளுக்கு ஒரு முதுகுப் பை மட்டுமே கொண்டு வந்திருந்தார்கள். கூடவே ஜமைக்காவின் பழம் ஒன்றும் அவர்கள் கையில் இருந்தது. இடுப்பில் இருக்கும் செல்போன் பவுச்சிலிருந்து சிறிய கத்தியை எடுத்து அவர்கள் நால்வரும் ஒரே சமயத்தில் அந்தப் பழத்தை அறுக்க ஆரம்பித் தார்கள். அதனுள்ளிருக்கும் ஒரு சிறிய வஸ்துவைக் கையில் எடுத்துக் கொண்டு அவர்கள் நால்வரும் இருக்கை களை விட்டு எழுந்தார்கள். வலை பனியன்காரி காக்பிட்டை நோக்கி நடந்தாள். அவளுக்கு பாதுகாப்பாக தூங்கி வழிந்து கொண்டிருந்த தடியன் போனான். ·பிளைட் டெக்கிற்கு நுழையும் வாயிலில் அவர்களைத் தடுக்க முயன்ற விமானப் பணிப்பெண் முரட்டுத்தனமாக ஓரம் தள்ளப்பட்டாள். அவள் விழும் காட்சியைக்கூட பார்க்கா மல் அவர்கள் பைலட் இருக்கும் பகுதிக்கு போனார்கள். மற்ற இருவரும் மேல் சட்டையைக் கழட்டி விட்டு உள்ளே அணிந்திருந்த சிவப்பு பணியன் தெரிய கையில் இருக்கும் வஸ்துவுடன் இருக்கைகளின் இடையில் இருக்கும் எய்ஸலில் நின்று கொண்டார்கள். இது அத்தனையும் அரங்கேற சரியாக பதினொரு செகண்டுகள் ஆனது.

அமெரிக்காவின் பெண்டகனுக்கு ஒரு ரகசிய தகவல் வந்தது. ஜமைக்காவில் ஒரு விமானம் கடத்தப் பட்டிருக் கிறது. கடத்தியவர்கள் நான்கு பேர். இரண்டு ஆண் இரண்டு பெண். அவர்கள் முன்வைத்திருக்கும் கோரிக்கை கள் இரண்டு. ஒன்று சர்வதேசக் குற்றவாளிகள் எனக் கருதி அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இருபத்தி ஆறு தீவிரவாதிகளை உடனே விடுதலை செய்யவேண்டும். அவர்களுக்கு போதிய எரிபொருள் நிரப்பிய அதிவேக விமானம் ஒன்றும், ஆயிரம் கிலோ தங்கமும் தரப்பட்டு அவர்கள் போக விரும்பும் இடத்திற்கு அனுப்ப வேண்டும். அவர்கள் பத்திரமாக போய் சேர்ந்த தகவல் வந்தவுடன் கடத்தப்பட்ட விமானம் பயணிகளுடன் விடுவிக்கப்படும். கெடு நான்கு மணி நேரம். அதற்கப்புறம் ஒவ்வொரு மணி நேரத்திற்கு நான்கு பயணிகள் கொல்லப்படுவார்கள்.

எல்லோரும் மான் தோல் நிறக் கோட்டுக்காரனைப் பார்த்தார்கள். அவன் சொன்னான்: இவர்கள் அந்த தீவிர வாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான். இப்போது இவர்கள் கேட்பதை ஒப்புக்கொண்டால், இனி வாரத்திற்கு ஒரு விமானம் கடத்தப்படும். அதிரடியாக விமானத்திற்குள் நுழைய அனுமதி வேண்டும்.விமானம் இப்போது எங்கே இருக்கிறது?
தென் ஆப்பிரிக்காவில் ஒரு சிறிய விமான தளத்தில் இறக்கியிருக்கிறார்கள். எமெர்ஜென்ஸி லேண்டிங். அவர்களுக்கு போதிய உணவு அனுப்பப் பட்டு விட்டது.
உணவு எடுத்துப் போன வண்டியில் அதிரடிப்படை வீரர்கள் சென்று விமானத்திற்குள் நுழைந்திருக்கலாமே?
கலாம்.. ஆனால் உணவுபொட்டலங்கள் கிரேன் மூலமாக வலைகளில் கட்டப்பட்டு விமானத்திற்கு அருகே கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து விமானத்திற்கு உள்ளே இழுத்துக் கொள்ளப்பட்டது. மனிதர்கள் யாரும் அருகே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
அவர்கள் கொடுத்த கெடு முடிந்து விட்டதா?
இன்னும் ஒரு மணிநேரம் நாற்பது நிமிடம் இருக்கிறது.
அதற்குள் நாம் ஒரு தனிப்படையை தேர்வு செய்து அதிரடியாக விமானத்தை தாக்க முடியுமா?
கொஞ்சம் கடினம். இங்கிருந்து அந்த இடத்திற்கு அதிவேக ஜெட் விமானத்தில் போவதற்கே இரண்டு மணி நேரம் ஆகும்.
பின் என்ன செய்வது?
தங்கத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டியதுதான்.
தீவிரவாதிகள் விடுதலை?
அது கொஞ்சம் சிக்கல். இதில் ஐரோப்பாவும், மத்திய கிழக்கு நாடுகளும் சம்பந்தப்பட்டிருக்கின்றன. எல்லோரும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

ஒரு வித சுழற்சியில் பூமி லேசாக அசைந்து கொடுத்தது. பூமியின் தட்டுகள் உராய்ந்ததில் கடல் நீர் இடம் பெயர்ந்தது. ஐந்நூறு கிலோ மீட்டர் வேகத்தில் கடல் அலைகள் கொந்தளித்து கரையைத் தாண்டி புகுந்தன.
இதுவரை இந்தக் கதையில் வந்த அனைத்து கதாபாத்திரங்களும், இடங்களும் உருத்தெரியாமல் அழிந்து போயின. கரையோரம் ஒதுங்கிய சடலம் ஒன்றில் வைல்ட் ஜஸ்டிஸ் என்று எழுதப்பட்ட பனியன் காணப்பட்டது. இயற்கையின் நீதியும் சிலசமயம் வைல்ட் ஜஸ்டிஸ்தானோ என்று இயற்கை விஞ்ஞானிகள் வாதிட்டுக் கொண்டிருந்தார்கள்.

Series Navigationபுறநானூற்றில் மனிதவள மேம்பாடுஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி-2015
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *