கார்டியன் பத்திரிக்கை செய்தி- டேவிட் ஸ்மித்
கருப்பு திரைக்கு பின்னால் வெள்ளை துணி மீது ஒவ்வொரு சடலமாக கொண்டு வந்து வைத்தார்கள். அவர்களில் 20 வயதுமதிக்கத்தக்க மனிதரது உடல், இடது புறம் தலை திருப்பப்பட்டு அவரது தலை ஒரு புறம் உடைக்கப்பட்டு மற்றொரு புறம் தலை சிதறி இருந்தது. மற்றவர்களுக்கும் இதே போல தலை சிதறடிக்கப்பட்டு அந்த துணியை சிவப்பாக்கியிருந்தன. அந்த ஐந்து உடல்களின் மீது ஈக்கள் மொய்க்க ஆரம்பித்தன.
வெளியே கோபத்துடனும் புதிருடனும் குரல்கள் எழும்பின. ரோஸ் கலர் மற்றும் ஊதா ஹிஜாபில் இருந்த தாய்மார்கள் கதறி அழுதார்கள். மத்திய வயதுடைய ஒரு மனிதர், உணர்ச்சிகளை காட்ட பழக்கமில்லாதவர் போல, உட்கார்ந்து விசும்பிக்கொண்டிருந்தார். இறுதியாக மசூதியின் இரும்பு கதவுகள் திறக்கப்பட்டன. ஏராளமானவர்கள் உள்ளே வந்து இறந்தவர்களை பார்த்தார்கள். தன் வெள்ளை உடை மீது பிளாஸ்டிக் போர்த்திக்கொண்டு அந்த உடல்களை கழுவ ஆரம்பித்தார் ஒரு இமாம். மற்றொருவர் புதைப்பதற்காக வெள்ளை துணிகளை கொண்டுவந்தார்.
மத்திய ஆப்பிரிக்க குடியரசு (Central African republic) என்ற நாட்டின் தலைநகரான பாங்குயி நகரின் PK5 என்னுமிடத்தில் இந்த கொலைக்காட்சிகள் சாதாரணமான விஷயமாக ஆகியிருக்கின்றன. இங்கே முஸ்லீம் பொதுமக்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள். இது நாடெங்கும் கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் நடந்துகொண்டே இருப்பதால், மக்கள் தொகை இரண்டாக பிரிந்துகொண்டிருக்கிறது.
19ஆம் நூற்றாண்டில் இந்த நாட்டுக்கு வியாபார நிமித்தம் முஸ்லீம்கள் வந்தார்கள். 2013இல் கணக்கிட்டபோது இந்த நாட்டில் சுமார் 15 சதவீதத்தினராக முஸ்லீம்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது என்ன எண்ணிக்கை என்று சொல்லவியலாது. ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஏராளமானவர்கள் பக்கத்து நாடுகளுக்கு தப்பியோடியிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபை கணக்கின்படி 130000-இலிருந்து 145000 வரை முஸ்லீம்கள் இருந்த தலைநகரில், சென்ற டிசம்பரில் 10000 பேரே இருந்ததாகவும் இப்போது 900ஐவிட குறைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தென்னாப்பிரிக்காவின் அபார்த்தெய்ட் முடிவு மற்றும் ர்வாண்டா படுகொலைகளின் இருபதாண்டு நிறைவின் போது, ஆப்பிரிக்காவின் இந்த கண்டுகொள்ளப்படாத நாட்டில் நடப்பவை மன்னிப்பும், சேர்ந்துவாழ்தலும் வெறும் வார்த்தைகள் அல்ல என்பதைமறுபடி நினைவூட்டுகின்றன. கிறிஸ்துவ தீவிரவாத குழுக்கள் அவர்களது வேலைகள் பழிக்குப்பழி வாங்குதலே என்பதை பகிரங்கமாகவே ஒத்துகொள்கிறார்கள். கண்ணுக்குக் கண், என்பதையும், நாட்டிலிருந்து எல்லா முஸ்லீம்களையும் துரத்திவிடும் வரைக்கும் அவர்களது வேலை முடிவுறாது என்றும் கூறுகிறார்கள். இனப்படுகொலை நடந்ததா என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தும் என்று திங்கட்கிழமை அறிவித்தது (பின்னர் இனப்படுகொலை நடக்கவில்லை ஆனால், முஸ்லீம்களை நாட்டை விட்டு துரத்தும் வேலை நடக்கிறது என்று அறிக்கை வெளியிட்டது)
இதற்கான விதைகள் மார்ச் 2013இல் செலெகா என்ற முஸ்லீம் தீவிரவாத குழு பங்குயி தலைநகரை கைப்பற்றி மைகல் ட்ஜோடோடியா (Michel Djotodia) அவர்களை நாட்டின் முதலாவது முஸ்லீம் ஜனாதிபதியாக நியமித்து, பெரும்பான்மையாக இருக்கும் கிறிஸ்துவ மக்களை பயங்கரவாதத்துக்கு உட்படுத்தி, பெண்கள் ஆண்கள் குழந்தைகள் ஆகியோரை கொல்ல ஆரம்பித்தபோது ஊன்றப்பட்டன. அதன் பதிலாக, கிறிஸ்துவ தீவிரவாத குழுக்கள் (பலகா எதிர்ப்பு)( anti-balaka (balaka means machete in Sango, the local language) என்ற பெயரில் துவக்கப்பட்டு செலெகாவையும் முஸ்லீம் ஆதரவாளர்களையும் தாக்கத்துவங்கின.
உலகளாவிய எதிர்ப்பின் காரணமாக ஜனவரி 2014இல் ட்ஜோடோடியா பதவி இறங்கினார். செலெகா என்ற முஸ்லீம் தீவிரவாத குழுக்கள் தலைநகரிலிருந்து வெளியேறி நாட்டின் வடக்குப்புறத்துக்கு சென்று அங்கு தொடர்ந்து கிறிஸ்துவ பொதுமக்களை தாக்குவதில் தொடர்ந்தனர். பலகா எதிர்ப்பு (கிறிஸ்தவ) குழுக்கள் பலம் பெற பெற கிராமம் கிராமமாக முஸ்லீம் மக்கள் வெளியேற ஆரம்பித்தனர். அவர்களது வீடுகள் சூறையாடப்பட்டன. மசூதிகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இவ்வாறு முஸ்லீம்கள் தங்களுக்கு எதிராக நிலைமை திரும்பியதும், பிரஞ்சு அமைதிப்படையினர் மீதும், புதிய ஜனாதிபதியான காத்ரீன் சம்பா பான்ஸா(கிறிஸ்துவர்) அவர்களுக்கு எதிராகவும் கசப்பை காட்டினர்.
pk5 போன்ற முஸ்லீம் பெரும்பான்மை பாங்குயி நகர் வாழ்விடங்கள் இப்போது யாருமற்ற இடங்களாக ஆகிவருகின்றன. சமீபத்தில் ஒரு செவ்வாய்க்கிழமை மாலையில் நூற்றுக்கணக்கான பெருங்கடைகளும் சிறு கடைகளும் காலியாக கிடக்க, ஒரு சாலையோரத்தில் ஒரு உடல் கிடக்க, ஆப்பிர்க்க அமைதிப்படை வீரர்கள் ஆயுததாரியான லாரியில் ஊர்வலம் செல்வதை பார்க்க நேரிட்டது. இங்கே 7000 இலிருந்து 1000ஆக முஸ்லீம்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று கணக்கிடப்படுகிறது.
ஐந்து சடலங்கள் கிடந்த மசூதியில் கோபமும் எதிர்ப்பும் குழப்பமுமே மிஞ்சியிருந்தது. இந்த கொலைகளை செய்தது பலாக்கா எதிர்ப்பு கிறிஸ்துவ குழுக்களா, புருண்டி அமைதிப்படைவீரர்களா என்ற குழப்பம் நீடித்தது. “இது ஒவ்வொரு நாளும் நடக்கிறது” என்று அப்துர்ஹமான் சவுதி என்ற 45 வயதுக்காரர் கூறினார். “நீங்கள் முஸ்லீமாக இருந்தால், நீங்கள் pk5ஐ விட்டு வெளியேற முயன்றால், நீங்கள் சடலம்தான். இது ஒரு சிறைச்சாலை” என்றார்.
அவர் சூளுரைத்தார். “என்னைப்பொறுத்தமட்டில் எல்லாமே முடிந்துவிட்டது. இன்றிலிருந்து நாங்கள் பலியாடுகளாக இருக்கமாட்டோம். ஏனெனில் நாங்கள் கிறிஸ்துவர்களை தாக்குவோம். நாங்கள் எங்களை காப்பாற்றிக்கொள்ளப்போகிறோம். இன்றிலிருந்து உலக நாடுகளாவது ஒன்றாவது. எங்களுக்கு கவலையில்லை. எங்களை அவர்கள் காப்பாற்றவில்லை. ஆகவே அவர்களையும் தாக்குவோம்”
pk12 என்னும் இன்னொரு முஸ்லீம் பகுதியில் என்னேரமும் தங்கள் மீது கிரனேட் குண்டுகள் வீசப்படும் என்ற பயத்தோடு, புல்வெளியிலும் புழுதியிலும் வாளிகள், படுக்கைகள், தூக்கியெறியப்பட்ட குப்பைகள், திறந்த வெளியில் சூடாகும் சமையல் பாத்திரங்கள் நடுவே குடும்பங்கள் தங்கியிருக்கின்றன. இங்கிருந்து வெளியேற விரும்பும் குடும்பங்கள் வெளியே சுற்றியிருக்கும் கிறிஸ்துவ கும்பல்களின் அச்சுருத்தலுக்கு ஆளாகவேண்டும். ஒரு நிகழ்வில், வண்டியிலிருந்து வெளியே விழுந்த ஒரு முஸ்லீம் அங்கேயே கொல்லப்பட்டார். இன்னொரு நேரத்தில், ஏராளமானவர்களை கூட்டிச்சென்ற வண்டியில் மூச்சடைத்து ஐந்து சிறுவர்கள் இறந்தார்கள்.
இப்ரஹீம் அலவாட் என்ற 55 வயது வக்கீல் ஒரு குழியை காட்டி இங்கே சில நேரங்களுக்கு முன்னால் 22 வயது மாணவனை புதைத்ததாக கூறினார். இந்த இடத்தில் 25000 பேர்களிலிருந்து 2700ஆக மக்கள்தொகை குறைந்துவிட்டது. நான்கு மசூதிகள் அழிக்கப்பட்டுவிட்டன. “அவர்கள் முஸ்லீம்களை கொல்லவில்லை. அவர்கள் முஸ்லீம்களை குப்பைகளை வாருவது போல வாருகிறார்கள். யாராவது ஒருவர் உங்களை கொன்று, நெருப்பில் சுட்டு சாப்பிடுவதாக கற்பனை செய்துபாருங்கள். நரகத்தின் நரகம். இங்கே யாரும் வாழ முடியாது”
பிரஞ்சு அமைதிப்படையினர் சாவடியில் நின்றுகொண்டிருந்தனர். ஆனாலும் முஸ்லீம்கள் அவர்களையும் வெறுத்தார்கள். அலவாட் சொன்னார். “எங்கள் பிரச்னையே பிரஞ்சுக்காரர்கள்தான். அவர்கள் வெள்ளையர்கள். அவர்கள் பலாக்கா எதிர்ப்பு ஆதரவாளர்கள். (கிறிஸ்துவ தீவிரவாத குழு). இது ர்வாண்டா போலத்தான். அதே மாதிரி இங்கேயும் செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால், நாங்கள் விடமாட்டோம்”
முஸ்லீம்களின் எந்த அளவு துயரமும், பலக்கா எதிர்ப்பு கிறிஸ்துவ குழுக்களிடமிருந்து இரக்கத்தை சம்பாதிக்கமுடியவில்லை. செலகா (முஸ்லீம் தீவிரவாத குழு)க்களின் குற்றங்களுக்கு தகுந்த தண்டனையையே தருவதாக அவர்கள் நம்புகிறார்கள். டாக்டர் ஜீன் கிறிஸ்தோத்தோமே கோடி என்ற சிறுவர் குழந்தை மருத்துவ மனையின் இயக்குனர் கூறினார். “தங்கள் குழந்தைகள் கொல்லப்பட்டதையும் காயமடைந்ததையும் பார்த்த தாய்மார்களை பார்த்திருக்கிறேன். அவர்களது இதயத்தில் வெறுப்பு மட்டுமே இருக்கிறது”
(பலாக்கா எதிர்ப்பு) கிறிஸ்துவ குழுக்கள், முஸ்லீம்களின் தீவிரவாத செயல்களுக்கு பதிலடியாக களத்தில் இறங்கியபோது குழந்தைகள் சண்டையின் நடுவே சிக்கவில்லை. மாறாக குழந்தைகள் குறிப்பிட்டே தாக்கப்பட்டார்கள். “குழந்தைகளின் தலையிலும் நெஞ்சிலும் குண்டுகள் பாய்ந்திருந்தன. அது ஒரு விபத்தாக நடந்திருக்கமுடியாது. அது இன்னொரு இனத்தை குறிவைத்து ஒழித்துவிட முயற்சி போலத்தான். இது மிகவும் தீவிரமான பழிவாங்கல். கொடுமை!”
பலாக்கா எதிர்ப்பு கிறிஸ்துவ தீவிரவாதிகளின் ஒரு முகாமின் பெயர் போயிங். ஏனெனில் பாங்குயி ஏர்போர்ட்டுக்கு அருகே இது இருக்கிறது. மரங்களின் நடுவே இருக்கும் மண் வீடுகளில் ஆறு தீவிரவாதிகள் இரண்டு சோபாக்களில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஒருவர் பார்சலோனா புட்பால் டி-ஷர்ட்டை அணிந்திருக்கிறார். அதன் பின்னால் மெஸ்ஸி (ஒரு புட்பால் விளையாட்டுக்காரர்) என்று எழுதியிருக்கிறது. இன்னொருவர் கையில் அம்பும் வில்லும் வைத்திருந்தார். பலர் தங்கள் கையில் கோடலி வைத்திருந்தார்கள். பிரஞ்சு அமைதிப்படை வீரர்கள் இங்கே வந்து இவர்களின் ஆயுதங்களை பறிமுதல் செய்யவந்தால் இந்த ஆயுதங்களை புதர்களில் மறைத்து வைத்துவிடுகிறார்கள்.
மன்னிப்பு என்பது இவர்களின் அகராதியிலேயே இல்லை. தனது பெற்றோர்களும் சகோதரர்களும் செலெகா (முஸ்லீம் தீவிரவாத குழு)வால் கொல்லப்பட்டு அவர்களது வீடுகள் எரிக்கப்பட்ட பின்னால், தானே மலாக்கா எதிர்ப்பு கும்பலை தூண்டியதாக, செபாஸ்டியன் வெனெழோயி என்ற 32 வயது சிவில் எஞ்ஜினியர் கூறினார். “நான் எதிர்பார்க்கவே இல்லை. இன்றைக்கு நான் என்ன செய்கிறேன் என்பதை வைத்து என்னுடைய உணர்ச்சிகளை நீங்கள் பார்க்கலாம். நான் நினைப்பதை செய்துதான் ஆகவேண்டியிருக்கிறது. நீங்கள் நானாக இருந்திருந்தால், அமைதியாக இருந்திருப்பீர்களா?”
அப்பாவியான பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதை நியாயப்படுத்த முடியுமா என்று கேட்டபோது, வெனெழோயி பதிலிறுத்தார்.” செலெகே செய்ததற்குதான் நாங்கள் பதில் சொன்னோம். அவர்கள் எங்களது குழந்தைகளையும் எங்கள் மனைவிகளையும் கொன்று எங்கள் வீடுகளை அழித்தார்கள். சில நேரங்களில் பழிவாங்குவது நல்லது. சில நேரங்களில் பழிவாங்குவது கெட்டது. ஆனால் நாங்கள் செய்துதான் ஆகவேண்டும்”
முஸ்லீம்கள் வெளியேற்றம் பற்றி எந்த விதமான வருத்தமும் வெனெழொயி அவர்களிடம் இல்லை. “செலெகா ஆட்சியை கைப்பற்றியபோது, எந்த முஸ்லீம்களெல்லாம் எங்கள் உயிர் நண்பர்களாக இருந்தார்களோ அவர்கள்தான் எங்கள் வீடுகளை கொளுத்தினார்கள், எங்கள் சுற்றங்களை கொன்றொழித்தார்கள். ஆகையால் அவர்கள் வெளியேறியதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அது ஒரு மாதிரியான பாடம். அவர்கள் நம்பிக்கை துரோகிகளாகத்தான் நடந்துகொண்டார்கள். ஆகவெ அவர்கள் வெளியேறத்தான் வேண்டும். ஒருவேளை அவர்கள் பாடத்தை கற்றுகொண்டார்கள் என்றால் திரும்பி வந்து மற்றவர்களுக்கு மரியாதை காட்டலாம்”
இருப்பினும் வெனெழோயி அருகேயும் அவரது நண்பர்கள் அருகே இருந்தது ஒரு முஸ்லீம்தான். இப்ராஹிம் அமதூ என்ற 22 வயது இளைஞர். பலாகா எதிர்ப்பு (கிறிஸ்துவ) அணியில் தான் சேர்ந்ததன் காரணம் தனது மனைவியும் மூன்று குழந்தைகளையும் பெற்றோரும் ஏழு சகோதர-சகோதரிகளும் செலெகா (முஸ்லீம்) தீவிரவாதிகளால் சுட்டுகொல்லப்பட்டதுதான் என்றார். இன்னமும் வெள்ளிக்கிழமைகளில் அவர் தொழுகை செய்கிறார் ஆனால், தனது வீட்டுக்குள்ளேயேதான். ஏனெனில் அவர் மசூதிக்கு சென்றால், அவரை அங்குள்ள முஸ்லீம்கள் அடையாளம் கண்டுகொள்வார்கள் என்பதனால்.
“நான் என்ன செய்கிறேன் என்ற முழு விவரத்தையும் நான் தரமுடியாது” என்று அமதூ சொல்கிறார். இவரது கழுத்திலும் தோள்பட்டைகளிலும் மிருகங்களில் தோல்களை போட்டு வைத்திருக்கிறார். இதனால், எதிரிகளின் கண்களுக்கு தென்படமாட்டோம் என்று நம்புகிறார். “நான் நாட்டுக்காக உழைக்கிறேன். ஒரு ராணுவவீரன் எப்போதுமே ஒரு ராணுவ வீரன் தான். அவன் தன் ரகசியங்களை வெளியே சொல்லமுடியாது” என்கிறார்.
அருகே பன்னாட்டு விமானநிலையத்தின் அருகே பல்லாயிரக்கணக்கான மக்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். திரும்ப நகரத்துக்கு செல்ல அஞ்சுகிறார்கள். பெப்ருவரியில் பத்துக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள் என்று செஞ்சிலுவை சங்கம் அறிவித்திருந்தது. சிலரது வாயில் அவர்களது வெட்டப்பட்ட பாலுறவு உறுப்புகள் திணிக்கப்பட்டிருந்தன. தெரு சந்தைகளில் 30 ரூபாய்களுக்கு கிரனேட் வெடிகுண்டுகள் கிடைக்கின்றன. 1200 ரூபாய்களுக்கு கலாஷ்னிகோவ் துப்பாக்கிகள் கிடைக்கின்றன. நாடு இரண்டாக உடையும் அபாயம் இருக்கிறது. முழு வீச்சில் ஐக்கிய நாடுகள் அமைதிப்படை வந்துதான் இந்த நாடு உடைவதை தடுக்கமுடியும்போல இருக்கிறது.
போவலி என்ற நகரத்தில் கத்தோலிக்க பாதிரியார் சேவியர் அர்னால்ட் ஃபாக்பா என்பவர் வீடுவீடாக சென்று முஸ்லீம்கள் தனது சர்ச்சுக்கு வந்து பாதுகாப்பாக இருக்கலாம் என்று கூறினார். “முஸ்லீம்கள் தாக்கப்பட்டபோது மக்கள் அவர்களுக்கு உதவவில்லை” என்று 31 வயது ஃபாக்பா கூறினார். இவர் நான்கு மாதங்களுக்கு முன்னர்தான் பாதிரியாராக ஆனார்.
சுமார் 700 பேர்கள் அவரது வேண்டுகோளை ஏற்று சர்ச்சுக்கு சென்றனர்.
ஆனால் அங்கிருந்த கிறிஸ்துவர்களோ, பாக்பாவின் தைரியமான நிலைப்பாட்டை எதிர்த்தனர். ஒரு நாள் அவரது கார் கோடாலிகளும் கத்திகளும் தாங்கிய பலாக்கா-எதிர்ப்பு (கிறிஸ்துவ) தீவிரவாதிகளால் சூழப்பட்டது. தான் பயப்படவில்லை என்று காட்ட அவர் வெளியே வந்தார். நல்லவேளையாக பலாக்கா எதிர்ப்பு கமாண்டர்கள் அவரை தாக்கவேண்டாம் என்று கூறிவிட்டனர்.
மற்றொரு நேரம், 300க்கும் மேற்பட்ட பலாக்கா எதிர்ப்பு தீவிரவாதிகள் சர்ச்சை சூழ்ந்துகொண்டு துப்பாக்கிகளால் சுட்டனர். எல்லோரையும் அவர் தரையில் படுக்கச்சொன்னதால் பலரது உயிர் தப்பியது.
முஸ்லீம்கள் ஒவ்வொரு வெள்ளியும் அந்த சர்ச்சிலேயே தொழுகை நடத்தினர். அதன் பின்னர் ஞாயிற்றுகிழமை கிறிஸ்துவ பிரார்த்தனைக்காக கழுவி வைத்தனர்.
அமைதி பாலங்களை கட்டுவது கடினமானது. ஒரு முறை அங்குள்ள அதிகாரிகள் முஸ்லீம்களும் கிறிஸ்துவர்களும் சேர்ந்து அமைதி ஊர்வலம் நடத்தலாம் என்று முடிவு செய்தனர். ஆனால் முஸ்லீம்கள் வந்தபோது பலாக்கா எதிர்ப்பு தீவிரவாதிகள் மறுத்துவிட்டனர்.
மார்ச் 1 ஆம் தேதி, ஆப்பிரிக்க அமைதிப்படை வீரர்கள் அங்கிருந்த முஸ்லீம்களை பாதுகாப்பாக எடுத்து சென்று காமரூன் நாட்டுக்கு அனுப்பினர். அதனால் பாவோலி நகரில் இப்போது முஸ்லீம்களே இல்லை.
—
மூலம்
உபரி செய்திகள்
1. பிரஞ்சு அமைதிப்படை வீரர்கள் சிறுவ சிறுமிகளை பாலுறவுக்கு உட்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டு ஐக்கிய நாடுகள் விசாரணைக்கு வருகிறது. 3 ஜூன் 2015
2. கிறிஸ்துவ தீவிரவாத குழுக்களும், முஸ்லீம் தீவிரவாத குழுக்களும் பிடித்து வைத்து பாலுறவு, அடிமை வேலை ஆகியவற்றுக்காக உபயோகப்படுத்திய 354 சிறுவர் சிறுமிகள் ஐக்கிய நாடுகள் தலையீட்டால் விடுதலை செய்யப்பட்டார்கள். 15 மே 2015
2. ஐக்கிய நாடுகள் தலையீட்டால் கிறிஸ்துவ முஸ்லீம் தீவிரவாத குழுக்கள் அமைதி ஒப்பந்தத்துக்கு வருகின்றன. 8 மே 2015
மொபெ: ஆர் கோபால்
- மத்திய ஆப்பிரிக்க குடியரசில் கிறிஸ்துவ பயங்கரவாத குழுக்கள் முஸ்லீம்களின் மீது ரத்தப்பழி தீர்க்கின்றன.
- தொடுவானம் 71. சாவிலும் ஓர் ஆசை
- மிதிலாவிலாஸ்-21
- வைகறை கவிதைகள் ‘ ஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான் ‘ தொகுப்பை முன் வைத்து…
- இரை
- பி. சேஷாத்ரியும் அவரது “மலைவாழ் வாழ்க்கையும்” (பெட்டாடே ஜீவா)
- அப்பா 2100
- வல்லிக்கண்ணன் எனும் ரசிகர்
- வரைமுறைகள்
- கண்ணப்ப நாயனார்
- நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -9
- அல்பம்
- பேரறிஞர் டாக்டர் ஜெயபாரதி 3.6.2015 தமிழர்களின் மானம் காத்த மாமனிதர்
- சாவு செய்திக்காரன்
- கம்பரின் கடலணை – திருமாலின் பாம்பணை
- கணையாழியும் நானும்
- கனவு திறவோன் கவிதைகள்
- நாய் இல்லாத பங்களா
- அழகின் விளிப்பு
- கடந்து செல்லுதல்
- என் பெயர் அழகர்சாமி
- ஏகலைவன்
- புளுடோவின் துணைக் கோள்கள் தாறுமாறாய்ச் சுற்றுவதை நாசா ஹப்பிள் விண்ணோக்கி கண்டுபிடிப்பு
- ஜெயகாந்தன் நினைவு அஞ்சலி மற்றும் ஸ்டாலின் குணசேகரன் சிறப்புச் சொற்பொழிவு.. நியூஜெர்ஸியில் சிந்தனைவட்டம் ஜூன் 13, 2015