வாழ்வின் வண்ணமுகங்கள் – பாரதி கிருஷ்ணகுமாரின் சிறுகதைகள்

This entry is part 16 of 29 in the series 19 ஜூலை 2015

பாவண்ணன்

பாரதி கிருஷ்ணகுமார் தமிழுலகத்துக்கு அறிமுகமான நல்ல பேச்சாளர். பாரதியின் பாடல்களில் மனம் தோய்ந்தவர். முதல் முயற்சியாக அப்பத்தா என்னும் தலைப்பில் ஒரு சிறுகதைத்தொகுதியை வெளியிட்டிருக்கிறார். 2008 முதல் 2011 வரை எழுதிய அவர் எழுதிய பத்து சிறுகதைகள் இத்தொகுதியில் உள்ளன. 2012-ல் முதல் பதிப்பும் 2013-ல் மேலும் இரு பதிப்புகளும் வெளிவந்துள்ளன.
கிருஷ்ணகுமாரின் கதைமாந்தர்கள் அனைவரும் மிக எளிய மனிதர்கள். சாதாரண வாழ்க்கைச் சம்பவங்கள் வழியாகவே அவர்களை கிருஷ்ணகுமார் நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார். மிகவும் குறைவான வரிகளிலேயே சம்பவங்களை முன்னும்பின்னுமாகக் கோர்த்து கதையை முன்வைத்தபடி செல்கிறார். சீரான வேகத்தில் செல்லும் சிறுகதையை அவர் முடித்துவைக்கும் தருணம் மிகவும் இயற்கையாகவும் நம்பகத்தன்மை மிகுந்த ஒன்றாகவும் இருக்கிறது. அத்தருணத்தில் கதையின் அடர்த்தியும் அழகும் இன்னும் கூடுதலாகின்றன. அக்கணத்தில் எதிர்பாராமல் கதையின்மீது விழும் வெளிச்சம் கதையின் மற்றொரு பரிமாணத்தைக் காட்சிப்படுத்துவதை உணரமுடிகிறது. இந்தச் சாத்தியத்தின் காரணத்தாலேயே கிருஷ்ணகுமாரின் சிறுகதைகள் கவனிக்கப்படுபவையாக உள்ளன.
புத்தகத்தின் தலைப்புக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ‘அப்பத்தா’ மிகச்சிறந்த சிறுகதை. தமிழின் மிகச்சிறந்த நூறு சிறுகதைகளின் பட்டியலில் இச்சிறுகதையின் பெயரையும் இணைத்துக்கொள்ளலாம். ஆண்பெண் உறவின் நுட்பத்தையும் சிக்கலையும் ஒருசேர இணைத்து முன்வைக்க இச்சிறுகதை முயற்சி செய்திருக்கிறது. வென்றிலன் என்றபோதும் கர்ணனை நினைத்து ஒருகணம் மயங்கியதாக, வாழ்வின் இறுதிக்கட்டத்தில் திரெளபதை சொல்லும் சம்பவம் மகாபாரதத்தின் முக்கியமான கட்டங்களில் ஒன்று. அந்தப் புராணப்பாத்திரத்தின் சாயல் படிந்த ஏராளமான பெண்களை இந்த உலகம் இன்றுவரை கண்டுவிட்டது. நம் கண் முன்னால் வாழ்ந்து மறைந்த திரெளபதையாகவே அப்பத்தாவைச் சொல்லவேண்டும்.
பதினைந்து வயதைத் தொட்டிருந்த சமயத்தில் அப்பத்தாவின் மீது ஆசைப்பட்டவர் அதே ஊரைச் சேர்ந்த கண்ணுச்சாமி. தூரத்துச் சொந்தம். படிப்பை முடித்துவிட்டு திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்று இரு தரப்பிலும் ஒரு சின்ன ஒப்பந்தம் உருவாகிறது. துரதிருஷ்டவசமான சூழலால் நான்காண்டு கால இடைவெளியில் குடும்பச்சொத்தை இழந்து வறுமையில் சரிந்துவிடுகிறது கண்ணுச்சாமியின் குடும்பம். அதனால் ஒப்பந்தத்தை முரித்துக்கொள்ளும் அப்பத்தாவின் குடும்பம் வேறொருவரைப் பார்த்து மணம் முடித்துவைக்கிறது. குடும்பத்தாரின் புறக்கணிப்புக்கு ஆளான கண்ணுச்சாமியின்மீது எழுந்த இரக்கத்துடன் அப்பத்தா புகுந்தவீடு சென்றுவிடுகிறாள். அந்த இரக்கம் அவள் நெஞ்சில் ஆழத்தில் கிணற்றில் விழுந்த முத்தாக படிந்திருந்தாலும் அதை ஒருபோதும் அவள் வெளிப்படுத்தியதில்லை. அவளுடைய இல்வாழ்வு மிக இனிய அனுபமாகவே கழிகிறது. தன் கணவன்மீது வற்றா அன்புடனும் காதலுடனும் வாழ்கிறாள் அவள். முதுமையில் உயிர் பிரிய இருக்கும் தருணம்வரைக்கும் அதில் ஒருசிறிதும் மாற்றமே இல்லை. நாடி அடங்கி ஒடுங்கியிருந்தாலும் அவள் உயிர் பிரிய மறுக்கிறது. நெஞ்சுக்குழிக்கும் தொண்டைக்குழிக்கும் இடையே உயிர் ஊசலாடுகிறது. ஆறு நாட்கள் கடந்த நிலையிலும் ஒரு மாற்றமும் இல்லை. பால் ஊற்றுகிறார்கள். எண்னெய் ஊற்றுகிறார்கள். பொன்னைத் தேய்த்தும் ஊற்றுகிறார்கள். சுற்றியிருப்பவர்கள் முன்வைக்கும் ஒவ்வொரு ஆலோசனையும் நடைமுறைப்படுத்தப் படுகிறது. ஆயினும் ஊசலாடும் உயிர் ஊசலாடியபடியே இருக்கிறது. இறுதியில் எப்படியோ, ஓர் ஊகத்தின் வேகத்தில் அப்பத்தாவின் கணவர் அவளுடைய பிறந்த ஊருக்குச் சென்று, திருமணம் செயுதுகொள்ளாமலேயே இன்னும் பிழைத்திருக்கும் கண்ணுசாமித் தாத்தாவைத் தேடிப் பிடித்து கையோடு பிடித்திழுத்து வருகிறார். அன்று இரவு இரண்டு தாத்தாக்களும் அப்பத்தாவின் அறையில் தங்கியிருக்கிறார்கள். விடியும் வேளையில் அப்பத்தாவின் வாய்க்குள் ஒரே ஒரு மிடறு பாலை ஊற்றுகிறார் கண்ணுசாமித் தாத்தா. அப்பத்தாவின் உயிர் அதற்காகவே காத்திருந்ததுபோல அக்கணமே பிரிந்துபோய்விடுகிறது
செல்வமில்லாத குடும்பம் என்பதால் கண்ணுசாமியைப் புறக்கணித்த பெற்றோரின் மீது உருவான வெறுப்பு அப்பத்தாவிடம் இருந்தது. தன்னிடம் அத்தகு புறக்கணிப்பு எதுவும் இல்லை என்று புலப்படுத்த, அப்பத்தா இறுதிமூச்சுவரைக்கும் காத்திருக்கிறாள். அந்த நீண்ட இடைவெளியில் அவள் எண்ணம் என்னென்ன விதமாக மாறியது என்பதைக் கண்டறிய அவள் வாழ்வில் எந்தத் தடயமும் இல்லை. தன் மனத்தை வெளிப்படுத்த திரெளபதைக்குக் கிடைத்த வாய்ப்பு, எதார்த்தத்தில் அப்பத்தாவுக்குக் கிடைக்கவில்லை. கண்ணுசாமி ஊற்றிய மிடறை விழுங்கி உயிர் பிரியும் இறுதிக்கணம் கதையில் கவித்துவம் மிகுந்த கணம்.
பாலுணர்வுச் சிக்கலை வேறொரு விதமாக முன்வைத்திருக்கும் ‘துறவு’ சிறுகதையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்றாகும். அன்னபூரணி- சுந்தரராஜன் தம்பதியினர் கருத்தொருமித்த போக்கும் காதலும் நிறைந்தவர்கள். பதினைந்தாண்டு கால இல்வாழ்க்கைக்குப் பிறகும் குழந்தை இல்லை என்கிற குறையைத் தவிர அவர்களுக்கு வேறெந்தக் குறையும் இல்லை. குழந்தையின்மைக்குக் காரணம் கணவனிடம் உள்ள குறை என்பதை அறிந்த நிலையிலும் அவள் மனத்தில் நிறைந்திருந்த காதல் ஒரு சிறிதும் குறைவற்றதாகவே இருக்கிறது. மாறாக, சுந்தரராஜன் தனக்கிருக்கும் குறையை மறைத்து தன் கடையில் வேலைக்குச் சேர்ந்த சுசிலாவுடன் மூன்றாண்டுகளுக்கும் மேல் பழகி, ஒரு குழந்தைக்காகவே அத்திருமணம் என்று பொய்யுரைத்து கோவிலில் வைத்து திருமணமும் செய்துகொள்கிறான். அவளுக்காகவே புதிய வீடும் தயாராகிறது. அடுத்த நாளே, அதை அறிய நேர்ந்த அன்னபூரணி, அவளை அழைத்து வந்து தன் வீட்டில் குடியேற்றிவிட்டு, வீட்டைத் துறந்து வெளியேறிவிடுகிறாள். ஆண்டுக்கணக்கில் தேடுதல் வேட்டை நடைபெறினும் யாருடைய பார்வையிலும் படாத வகையில் உலகில் எங்கோ ஒரு மூலையில் முப்பதுக்கும் மேற்பட்ட அனாதைக் குழந்தைகளைத் திரட்டி, அவர்களுக்குத் தாயாக வாழத் தொடங்கிவிடுகிறாள். தன் நம்பிக்கை சிதைந்துபோன நிலையில் இல்வாழ்க்கையில் தொடர விருப்பமின்றி, அந்த வாழ்வையே துறந்து சென்றுவிடுகிறாள் அன்னபூரணி. அன்னபூரணியின் நம்பிக்கையைப் பெறமுடியாத ஏமாற்றத்தில், ஒரே கூரையின் கீழே வாழ்ந்தாலும் கணவனைத் துறந்தவளாக வாழத் தலைப்படுகிறாள் சுசிலா. காமத்தின் வசப்பட்டு, பொய்யுரைத்து மணம்புரிந்த சுந்தரராஜன் அன்னபூரணியையும் இழந்து, சுசிலாவையும் இழந்து ஒரு துறவிபோல ஒதுங்கி வாழும் துரதிருஷ்டவசமான சூழலுக்குத் தள்ளப்படுகிறான். ஒவ்வொன்றுக்கும் ஒரு பெரிய விலையை வாங்கிக்கொள்கிறது வாழ்க்கை.
பதினாறு வீடுகளுக்கு நீர் வழங்கும் ஊற்றாக பல ஆண்டுகள் சுரந்த கிணற்றை, ஒரு கட்டத்தில் ஒவ்வொரு வீட்டுக்காரர்களும் ஒவ்வொரு காரணத்துக்காக புறக்கணிக்கத் தொடங்குகிறார்கள். முதலில் மேல்தளத்தில் தண்ணீர்த்தொட்டியை அமைத்துக்கொண்டு, மோட்டார் வழியாக அதில் நீரை நிரப்பி ஒவ்வொருவருக்கும் கிடைக்கும்படியான ஏற்பாடுகளைச் செய்துகொள்கிறார்கள். பிறகு மாறிவரும் தொழில்நுட்பங்களின் விளைவாக, சாலையிலிருந்து குழாய்களைப் பதித்து நேரிடையாக வீட்டுக்குள்ளேயே நகராட்சி வழங்கும் நீர் வரும்படி செய்துகொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் கிணற்று நீர் என்பதே யாருக்கும் தேவைப்படாத ஒன்றாக மாறிவிடுகிறது. கிணறே தேவைப்படவில்லை என்பதால் தண்ணீர்த்தொட்டியும் தேவைப்படாத ஒன்றாகி விடுகிறது. பயன்பாட்டிலும் கண்காணிப்பிலும் இல்லாத தண்ணீர்த்தொட்டி, மறைவான கெட்ட காரியங்களுக்குப் பயன்படத் தொடங்கிவிடுகிறது. அதைத் தடுப்பதற்காக, கிணற்றை மூடிவிடும் முடிவை எடுக்கிறார்கள். கற்களும் பாறைகளும் மண்ணும் கொட்டப்பட்டு வேகவேகமாக கிணறு மூடப்படுகிறது. மூச்சுமுட்டிப் புரளும் மூதாட்டியைப்போல, ஒன்றிரண்டு நாட்கள் வரைக்கும் கிணற்றுக்குள் தண்ணீர் தளும்பி குமிழ்விடும் ஓசை கேட்டபடி இருக்கிறது. பிறகு, மூடப்பட்டிருந்த மேற்பரப்பில் முத்துமுத்தாக வியர்த்துக் கசிந்துகொண்டே இருக்கிறது. முடிவில் எல்லாம் அடங்கி உலர்ந்துவிடுகிறது.
தனக்கு தனிப்பட்ட முறையில் வசதியாக இருக்கும்படியாக ஒவ்வொருவரும் நடந்துகொள்கிறார்களே தவிர, யாருக்கும் பொதுக்கிணற்றைப் பாதுகாப்பதைப்பற்றியோ பராமரிப்பதைப்பற்றியோ அக்கறை இல்லை. அக்கறை கொண்டிருந்த அம்மாவுக்கு தெம்பில்லாமல் போய்விடுகிறது. கிணறு அடைக்கப்படுவதையும் அம்மாவின் மரணத்தையும் இணைத்துக் காட்டும் வகையில் கிணற்றை அம்மாவின் உருவகமாக நிலைநிறுத்துகிறது கதை. ஒரு வாசிப்பில் அது ஒரு தோற்றம் மட்டுமே. அடுத்தடுத்த வாசிப்புகளில், மானுடத்தின் தன்னலத்தின் காரணமாக புறக்கணிப்புக்குள்ளாகி பாதுகாக்கப்படாத பொதுச்சொத்தின் படிமமாக கிணறு விரிவாக்கம் கொள்வதை உணரமுடியும்.
கிணறு என்பது வெறும் கிணறின் பெளதிகவடிவம் அல்ல. அது ஒருவகையில் நமது ஆழ்மனம். எந்தப் பொதுநலத்தையும் கருதாமல், எந்த இரக்கத்துக்கும் இடமில்லாமல் நம் ஆழ்மனத்தின் ஊற்றுக்கண்ணை நாமே மண்ணையும் கல்லையும் போட்டு அடைத்துவிடுகிறோம். கதவுகளை அடைத்துவிட்டு, வெளிச்சத்தைப் பார்ப்பது எப்படி?
தொகுப்பின் மற்றுமொரு நல்ல சிறுகதையாக ’லுங்கி’யைக் குறிப்பிடலாம். அக்கதை, ஏக்கத்தால் நிறைந்திருக்கும் மனம் மெல்லமெல்ல கனிவு ஊறிச் சுரக்கும் சுரங்கமாக மாறும் ரசாயனத்தை எந்த மேற்பூச்சும் இல்லாமல் அழகாகச் சித்தரிக்கிறது. சற்றே கவனம் பிசகியிருந்தாலும் ஓர் இலட்சியவாதப்படைப்பாக மாறிவிட சாத்தியமான கருவைக் கொண்ட கதை இது. ஆனால் அப்படி எதுவும் நிகழ்ந்துவிடாதபடி, பக்குவமாகக் கடந்துவிடுகிறது கதை. கலைமுதிர்ச்சியும் மனமுதிர்ச்சியும் இணைந்து அதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது.
அப்பா, அண்ணன், தம்பி என அனைவருமே வேட்டி கட்டி உலவுகிற ஒரு குடும்பச் சூழலில் ஓர் இளைஞனுக்கு லுங்கி அணிந்துகொள்ள உருவாகும் விருப்பத்திலிருந்து தொடங்குகிறது இக்கதை. அவனுடைய தந்தைக்கோ, லுங்கி என்பது அணியக்கூடாத ஓர் ஆடை. லுங்கியணிந்து கொள்ள வேண்டும் என்கிற பெருவிருப்பமும் அதைத் தடுக்கிற தந்தைமீதான கசப்பும் சம அளவில் வளர்ந்து அவன் மனத்தை நிறைக்கிறது. வேலை கிடைத்து வெளியூரில் தங்கியிருக்க வேண்டிய சூழல் தற்செயலாக உருவானபோது, சுதந்திரமாக லுங்கி அணிந்துகொள்ளலாம் என்கிற எண்ணமே அந்த வெளியூர் வாசத்தை விரும்பத் தூண்டுகிறது. புத்தம்புதுசாக ஒரு லுங்கியை வாங்கி அணிந்துகொண்டு, தன்னந்தனியாக தன் அறையில் உறங்கிய இரவு, அவனைப் பொறுத்தமட்டில் மறக்கமுடியாத ஓர் அனுபவம். ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்ட காலம் நிலைத்திருக்கவில்லை. துவைத்துக் காயவைத்த லுங்கி களவாடப்பட்டுவிடுகிறது. அந்தத் திருட்டால் அவன் முதலில் பதற்றம் கொள்கிறான். நிப்புப்பட்டறைத் தொழிலும் தீப்பெட்டித் தொழிலும் தேங்கி நின்றுவிட ஊரில் வேலையிழந்த ஆயிரக்கணக்கான பேர்கள் வாழ்கிற ஊரில், சாப்பாட்டுக்கோ துணிக்கோ வழியில்லாத யாரோ ஒருவன் அதை எடுத்துச் சென்றிருக்கலாம் என நினைத்து அவன் மனம் நாளடைவில் அமைதியடைகிறது. ஒருநாள் குளிப்பதற்காக ஆற்றைநோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, எதிரில் வந்த இளைஞன் அவனுடைய லுங்கியை அணிந்திருப்பதைப் பார்க்க நேர்கிறது. புதிய இளைஞன் பதற்றத்தில் மடித்துக்கட்டியிருந்த லுங்கியை இறக்கிவிட்டு, வாளியைக் கீழே வைத்துவிட்டு தலைகுனிந்து நின்றுவிடுகிறான். அவனோ, எந்தப் பதற்றமும் இல்லாமல் அவனுடைய தோளைத் தொட்டு ‘லுங்கி உனக்கு நல்லா இருக்குது’ என்று சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறான்.
கதையில் இடம்பெறும் மகன் பாத்திரம், அப்பா பாத்திரத்துக்கு நேர் எதிரான பாத்திரமாக கட்டமைக்கப்பட்டிருப்பது கவனத்துகுரியது. அப்பா அணியக்கூடாது என்று ஒதுக்கும் ஆடையை அவன் அணிய விரும்புகிறான். அப்பா அளவோடு பேசு என்று சுட்டிக்காட்டும் ஆளிடம் சுதந்திரமாக விருப்பத்தோடு பேசிப் பழகி நட்பை வளர்த்துக்கொள்கிறான். அப்பா சகமனிதர்களிடம் கசப்பும் எச்சரிக்கை உணர்வும் கொண்டிருக்கும் நிலையில் மகன் பாத்திரம் கனிவாலும் அன்பாலும் தன் மனத்தை நிறைத்துக்கொண்டவனாக, அனைவரையும் நேசிக்க நினைப்பவனாக இருக்கிறான். அப்பாவின் முன்னிலையில் தன்னை ஓர் ஆளுமையாக நிறுவிக்கொள்ள விழையும் ஆழ்மனம் நிகழ்த்தும் விளையாட்டு இது. இந்த ஆழ்மனத்தில் விளையாட்டையும் புற உலகச் சம்பவத்தையும் நுட்பமாக இணைத்துப் பார்க்க முயற்சி செய்கிறது இந்தச் சிறுகதை.
உறவின் சிக்கலையும் வலியையும் முன்வைக்கும் மற்றுமொரு சிறுகதை ’கோடி’. முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக ஆசைப்பட்டவனோடு சென்றுவிட்ட அத்தையைப்பற்றி என்னென்னமோ சொல்லி, குடும்பத்தின் இளைய உறுப்பினர்களை நம்பவைத்துக்கொண்டிருந்த தாத்தாவின் வேஷமும் அப்பாவின் வேஷமும் ஒருநாள் கலைந்துவிடுகிறது. அது, தன் மகளுடைய திருமணத்துக்கு அழைப்பதற்காக பத்திரிகையோடு நீண்ட இடைவெளிக்குப் பிறகு படியேறி வந்து அந்த அத்தை நின்ற நாள். அப்பாவும் தாத்தாவும் வெறுப்பையும் பிடிவாதத்தையும் விட மறுக்கிறார்கள். இளைய உறுப்பினர்களால் எதுவும் செய்யமுடியவில்லை. சில ஆண்டுகள் கழித்து, அந்த வீட்டுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. அத்தையின் கணவர் இயற்கையெய்திவிட்டதாக அது சொல்கிறது. அப்போதும் மூத்த உறுப்பினர்கள் தம் பிடிவாதத்தைத் தளர்த்திக்கொள்ள விரும்பவில்லை. தங்கை வழியாக அதை அறிந்துகொள்ளும் அண்ணன், தான் இருக்கும் ஊரிலிருந்தே கோடித்துணியோடு அத்தையைப் பார்க்கச் செல்கிறான். பிறந்தவீட்டுக் கோடியை வாங்கிக்கொள்ளும் அத்தை, அண்ணே என்று கூவியபடி அவன் கால்களைப் பற்றுகிறாள். முப்பது ஆண்டுகளாக அவள் எதிர்பார்த்ததெல்லாம் உடன்பிறப்பின் ஆதரவையும் அன்பையும்தான். கல்யாணம் செய்துகொண்டு வந்த கணவனை இழந்த நிலையிலும் அந்த ஆதரவு அவளுக்குக் கிடைக்கவில்லை என்பதுதான் துரதிருஷ்டம். அன்பற்ற பாறைகளாக மனிதர்களை மாற்றுவது எது என்பது பெரிய புதிராகவே இருக்கிறது. அவர்களை மாற்றும் அளவுக்கு சாதிக்கும் மதத்துக்கும் சக்தி உள்ளதா என்பதும் புதிராக இருக்கிறது. மானுட வாழ்வுக்குத் தேவையானது அனுசரனையான ஆதரவா அல்லது மதமா என்னும் கேள்வியை ஒட்டி மதத்தைத் தேர்ந்தெடுப்பவர்களாக மனிதர்கள் ஒவ்வொருவரும் மாறத் தொடங்கினால் இறுதியில் என்ன எஞ்சும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
பத்து சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பில் ஐந்து சிறுகதைகளை மிகச்சிறந்த கதைகளாக எழுதியிருக்கிறார் பாரதி கிருஷ்ணகுமார். அந்தச் சிறுகதைகளை வாசிப்பது நல்ல அனுபவமாக இருக்கிறது.

(அப்பத்தா- சிறுகதைகள். பாரதி கிருஷ்ணகுமார். 7/4 ஏழாவது தெரு, தசரதபுரம், சாலிகிராமம். சென்னை -93. விலை. ரூ.100 )

Series Navigationஆறாண்டு காலத் தவிப்பு –கள்ளா, வா, புலியைக்குத்து
author

பாவண்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *