திருப்பூர் தொழில் துறை இடி விழுவதைத் தவிர்க்க வேண்டும்

This entry is part 13 of 25 in the series 2 ஆகஸ்ட் 2015

சுப்ரபாரதிமணியன்

திருப்பூர் தொழில் துறை பல்வேறு சிக்கல்களைத் தொடர்ந்து சந்தித்து வருகிறது. வெளிநாடுகளிலிருந்து ஆர்டர் கிடைத்தாலும் தொழிலாளர் பற்றாக்குறை அதை முடிக்க முடியாமல் தாமதமாக்குகிறது.அல்லது நூல் விலை உயர்வு அல்லது மனித உரிமை மீறல்கள் என்னும்படியான சுமங்கலித் திட்டத்தில் பெண்களின் மீதான துன்புறுத்தல், குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை, சாயம் சார்ந்த பிரச்சினைகள் என்று இருந்து கொண்டே இருக்கின்றன. இந்தியாவில் செயல்பட்டு வந்த சில மேற்கத்திய நாடுகளின் ஏற்றுமதி அலுவலகங்கள் மூடப்பட்டு விட்டன. அல்லது பெங்களுருக்கு சென்று விட்டன என்பது இதன் அடையாளம். திருப்பூர் பஞ்சாலையை பயமுறுத்தும் பங்களாதேஷ் போன்ற நாடுகளின் நூல் உற்பத்தி, சாயமேற்றலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவையெல்லாம் திருப்பூரை புறம் தள்ளிக் கொண்டே இருக்கின்றன.

அரசின் தொழிலாளர் கொள்கை அல்லது அணுகுமுறைகளும் இது போல் பெரும் ஏற்றுமதி நிறுவனங்களை விலகிப் போகச் செய்திருக்கின்றன. வடிவமைத்தலிலும் நுகர்வோர் மார்கெட்டை தக்க வைத்துக் கொள்வதிலும் நாம் முன்னணியில் இருக்கிறோம் என்று நம்பிக்கைக் கொண்டிருப்பதில் பல இடிகள் சமீபமாய் விழுகின்றன. நமக்கு வரும் பல முக்கிய ஆர்டர்கள் வெளி மாநிலங்களுக்கும் பங்களாதேஷ், இந்தோனிசியா, சீனா, துருக்கி, கம்போடியா நாடுகளுக்கும் சென்றிருப்பதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் தெருமுனை சப்தமோ, ஒருகை ஓசைகளோ போதாது என்று உணரப்பட்டிருக்கிறது.எல்லோர் உள்ளம் கேட்கும் பொருளாதார மொழி வித்தியாசமாகவே இருக்கிறது. வியாபாரம் சார்ந்த் தன் முனைப்புகளும் நடவடிக்கைகளும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.பொருட்களை விநியோகிக்கும் இணைப்பு முயற்சியில் பல சிரமங்கள் இருக்கின்றன.

அரசின் பொருளாதாரக் கொள்கையின் அணுகுமுறை, தொழிலாள வர்க்கத்தினரின் பங்கேற்பு , குறைகளை நீக்குவதர்கான நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. வறுமை, பாலியல் சுரண்டல், குறைந்த ஊதியம், பெண்கள் தங்கும் விடுதிப் பிரச்சினைகள் என்று நமது போதாமையும் நாம் கற்றுக் கொண்டவையிம் நிறைய இருகின்றன. உலகமயமாக்கல் பலவிதங்களில் புரட்டிப் போட்டு விட்டது. ஒரு நாளைக்கு ஒரு சட்டையை மாற்றும் -லட்சக்கணக்காண ரூபாய் விலையுள்ள சட்டையை மாற்றும் பிரதமர் தொழிலாளர் சட்டங்களை மாற்றுவதில் இன்னும் அக்கறை கொண்டு வருகிறார் என்பது பெரிய ஆபத்தாகவும் கணிக்கப்பட்டிருக்கிறது.

பங்களாதேஷில் நூறு பேர் இறந்த பின்னலாடை தீ விபத்தில் சம்பந்தப்பட்ட தொழிற்சாலையினர், ஏற்றுமதியாளர்கள் மட்டுமில்லாமல் பிராண்ட் சம்பந்தமானவர்கள் பெரும் தொகையை நஷ்டஈடாகத் தந்துள்ளனர் என்பது சமீபத்திய மிக முக்கியமானதாகும்.தொழிலாளர்களைப் பொறுத்த அளவில் சுரண்டல் என்பது சாதாரணமாகிவிட்டது. 12 மணி நேரத்திற்கும் அதிகமான நேரத்தை ஒரு ஷிப்ட்டாக்க் கொண்டு பணிபுரிகிறார்கள்.பின்னலாடை , பஞ்சாலைகளில் இளம் பெண்கள் படும் சிரமங்களுக்கு அளவில்லை. குழந்தைகளை பள்ளிகளை விட்டு விட்டு வெளியே வருவது பெரும் துயரம், பள்ளிகளை விட்டு அவர்கள் வெளியேறும் நேரத்தில் பஞ்சாலைகள் போன்றவை அவர்களை வரவேற்று சுமங்கலித் திட்டத் தொழிலாளிகள் ஆக்கி விடுகின்றன. தொடர்ந்து பணிசெய்தல், ஓய்வின்மை, நோய்களால் அங்கு பெணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் புதிது புதிதாய் இளம் பெண்கள் சேர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

தொழிலாளிகள் மீது அக்கறை கொள்ளாமல் எந்திரங்களாகப் பார்க்கும் பார்வை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த இளம் பெண்கள் பற்றிய செய்திகள் தொடர்ந்து ஊடகங்களில் வெளிவந்து கொண்டே இருகின்றன. அவர்களின் உரிமை சார்ந்த பிரச்சினைகள் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்றன.
உலக அளவில் இப்பிரச்சினைகள் நுகர்வோர் சட வல்லுநர்கள் ம்த்தியில் பெரும் பாதிப்புகளைத் தந்து வந்துள்ளதை பிரிட்டிஷ் அரசின் சமீப சட்டமொன்றைச் சொல்ல்லாம்.

தொழிலாளர் உரிமை மறுக்கப்படும் தொழிற்சாலைகளோடு வியாபாரம் செய்பவர்கள் குற்றவாளிகளாக கருதப்படும் சட்டம் அங்கு அமுலுக்கு வந்துள்ளது அது இந்தியா மற்றும் மூன்றாம் உலக நாடுகளின் உற்பத்தியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளிப்பதாகும்.தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட உரிமை மீறலகள் காரணமாக ஏற்றுமதி வர்த்தகம் வெவேறு மாநிலங்களுக்கும் வெவ்வெவேறு நாடுகளுக்கும் மாறும் போக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது.கொள்முதலாளர்களின் உற்பத்திச் சங்கிலியில் நியாயமான தொழில் வாய்ப்பும் தொழிலாளர் நிர்வாக செய்ல்பாடுகளை பழைய முறைகளிலிருந்து மாற்றி நவீனமாக்கும் முயற்சிகளும் எப்போதைக்கும் இல்லாத அளவில் இப்போது மிகவும் தேவையாக உணரப்பட்டிருகிறன.

Kanavu, 8/2635, Pandian nagar, Tiruppir 641 602 ( ph. 9486101003 )

Series Navigationஇந்தியாவுக்கு அசுர வல்லமை அளித்த ராக்கெட் விஞ்ஞானி ​ டாக்டர் அப்துல் கலாம்​அன்பு + எளிமை + நாட்டுப்பற்று + நேர்மை = அமரர் அப்துல் கலாம் அவர்கள்
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *