தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 ஜனவரி 2021

என் வாழ்வின் வசந்தம்

Spread the love

பாவலர் கருமலைத்தமிழாழன்

அறுபதினை நெருங்குகின்ற வயதில் கூட
அறுபதுநாள் முப்பதுநாள் ஆசை மோகம்
நறுமணமாய் திருமணம்தான் நடந்த அந்த
நாள்களிலே காட்டியபோல் குறைந்தி டாமல்
குறுந்தொகையின் இன்பம்போல் பாவேந் தர்தம்
குடும்பத்து விளக்கிலுள்ள முதியோர் போல
முறுவலுடன் தாயாகப் பெற்றெ டுத்த
மூவருடன் நான்காகப் பேணு கின்றாள் !

எங்கிருந்தோ வந்தவள்தான் பெற்றோர் தம்மை
ஏந்திநின்ற சுற்றத்தை ஊரை யெல்லாம்
பொங்கிவந்த அழுகையுடன் புதைத்து விட்டுப்
பொறுப்புடனே வந்தபுது உறவை நெஞ்சுள்
தங்கவைத்துப் பிறந்தவீட்டுப் பண்பாட் டோடு
தழைக்கவைக்கப் புகுந்தவீட்டில் உறுதி யேற்று
மங்கலத்தை என்வாழ்வில் ஏற்றி வைத்து
மகளென்றே என்பெற்றோர் புகழ நின்றாள் !

மூத்தவன்நான் என்பின்னே இரண்டு தங்கை
மூன்றுதம்பி அனைவருக்கும் தாயாய் ஆனாள்
பூத்தரோசா மலரோடு முளைக்கும் முள்ளாய்ப்
பூசலினை முளையிலேயே கிள்ளிப் போட்டுப்
பாத்திரத்தில் சோறுபொங்கி வழிந்தி டாமல்
பக்குவமாய்க் கூட்டாகக் குடும்பம் காத்துச்
சூத்திரத்தில் தொல்காப்பி யர்தாம் தந்த
சுடரும்மூ விலக்கணம்போல் சுடர வைத்தாள் !

அருங்கவிதை நானெழுதக் கவலை வந்து
அண்டாமல் எனக்குவரும் வருவா யோடு
வருவாயைப் பெருக்குதற்கே தையல் வேலை
வண்ணமிகு பூவேலை கற்றுத் தந்து
பொறுப்புடனே மூவரினை வளர்த்தா ளாக்கிப்
பொலிவுடனே பலநூல்கள் எழுதிப் பேரும்
பெருமையினை நான்பெறவே வேராய் நிற்கும்
பேரழகி என்மனைவி வசந்தா என்பேன் !

Series Navigationபரிசுபந்தம்
Previous Topic:
Next Topic:

Leave a Comment

Archives