இரா. பூபாலன் கவிதைகள்

author
0 minutes, 7 seconds Read
This entry is part 14 of 24 in the series 9 ஆகஸ்ட் 2015

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

‘ பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு ‘ என்ற பூபாலன் தொகுப்பில் உள்ள கவிதைகளை , தலைப்புள்ளவை , தலைப்பற்றவை என் நாம்
காணலாம். இவர் கவிதைகளில் மொழி ஆளுமை ஒரு முக்கிய இடம் பெறுகிறது. இது இன்று எழுதும் பலரிடம் இல்லாததாகும். தலைப்பில்லாத முதல் கவிதையில் புனைவு ஒளிர்கிறது, கச்சிதமான சொற்களால் கவிதை பிசிறில்லாமல் அமைந்திருக்கிறது. எளிய
கட்டமைபில் கவிதை உள்ளது.
சுவரில் [ சுவற்றில் என்று எழுத வேண்டாம் ] மாட்டியிருக்கும் படத்தில் ஒரு கொக்கு காத்திருக்கிறது.
ஒற்றைக் காலைத்
தூக்கியபடி
வெறிக்க வெறிக்க
என்னையே
பார்க்கும்
கொக்கின் அலகில்
மீனாகிறேன்
——- அதென்ன கொக்கு நேசம் ? அதுதான் கவிமனம் ! கவிதையின் தொடக்கத்தில் ஒரு நுணுக்கமான பார்வை காணப்படுகிறது.

எந்தச் சலமுமின்றி
மிக அமைதியாக இருக்கிறது
அந்தக் குளம்
குளத்தின் கரையில்
உறுமீனை எதிர்பார்த்துக்
காத்திருக்கும்
கொக்கும் அப்படித்தான்….

துளி அசைவும் இல்லை
இவ்விரண்டிடத்தும்…….
——- கடைசி இரண்டு வரிகளின் நுணுக்கத்தால் கவிதை மேலும் துல்லியம் பெறுகிறது.
பூபாலன் தன் கவிதை ரசனை பற்றிக் கீழ்க்கண்டவாறு பதிவு செய்கிறார்.
சில கவிதைகள்
எத்தனை முறை
படித்த போதிலும்
இன்னொரு முறையென
மனது ஏங்க வைக்கும்

குழந்தையின்
முத்தம் போல்
புத்தகத் தலைப்புக் கவிதை ‘ பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு ‘ ஒரு யதார்த்தக் கவிதை.

தனித்துக் கிடக்கும்
ஒற்றை இறகு
ஓராயிரம் அதிர்வுகளைத்
துவக்கி விட்டிருக்கிறது மனதில்
—— என்ற தொடக்கமே கவிதையின் அவசியத்தை உணர்த்திவிடுகிறது. இறகு சிறகிலிருந்து பிரிந்தது எப்படி என்று ஆய்கின்றன தொடரும்
வரிகள். பூனை அல்லது நாயின் இரைக்காகவோ அல்லது மனிதனின் உப உணவுக்காகவோ பறவை கொல்லப்பட்டிருக்கலாம். அடுத்து
முத்தாய்ப்பு :
காற்று வீசும்
கணம் தோறும்
இன்னும்
பறக்க எத்தனித்தவாறே
இருக்கிறது அந்த
இறகு
—— காற்றடித்தால் இறகு பறக்கும் என்பது அறிவியல். இங்கு , இறகு என்றாலே பறப்பதற்கு உதவும் ஒரு உறுப்புதான் என்பது
உட்பொருள் !
கவிதை எப்படி உயிர் காக்கும் கவசமாக அமைகிறது என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது ‘ ஒரு தனிமையை ‘ என்று தொடங்கும்
கவிதை. இதில் புதிய புதிய சிந்தனைகள் சரளமாக ஓடி வந்து வரி வரியாய் அமர்ந்து கவிதை உருப்பெற்றுள்ளது.
ஒரு தனிமையை
இனிமையாக மொழி
பெயர்க்கத் தெரியாதவன்

ஒரு வலியை
அதன் போக்கிலேயே
ஆளத் தெரியாதவன்
ஒரு துரோகத்தை
துடைத்துவிட்டுக்
கடந்து வராதவன்
—— இதில் முதல் பத்தியிலேயே கவிமொழி வாசகனை உள்ளே இழுத்துவிடுகிறது.
வெறுப்புகளின் மேல்
நிம்மதியாகப்
படுத்துறங்கப் பழகாதவன்

தாராளமாகத்
தூக்குப்போட்டுக்
கொள்ளலாம்
என்கிறேன் நான்

ஆனாலும் அவன் இன்னும்
கவிதை எழுதிக் கொண்டிருக்கலாம்
காதல் தோல்வியை வித்தியாசமான கோணத்தில் இக்கவிதை பதிவு செய்துள்ளதாகவே நான் நினைக்கிறன். இதில் அவன் தான் இவன்
என்ற ஒரு பொறி தட்டுகிறது.
‘ இந்தக் கவிதையை ‘ என்று தொடங்கும் கவிதை [ பக்கம் 50 ] சவால்விடும் தொனி கொண்டது. விளிப்பு நிலை மனிதர்களுக்காகப்
பரிந்து பேசும் இக்கவிதையில் ஆணவம் கண்டிக்கப்படுகிறது.
குருதிக் கறை படிந்த உங்கள்
குறுவாளை அடையாளங்காட்டும்
—— எனக் குற்றவாளிகளின் முன் விரல் நீட்டிச் சுட்டுகிறது !
உங்கள் முகத்துக்கும் முன்
கண்ணாடியாய் நின்று
உங்களின் அகோரத்தைப்
பிரதிபலிக்கும்
—— என்று சமுதாய அவலத்தைப் படம் பிடிக்கிறது மேற்கண்ட பத்தி !

புதிய அறிமுக நண்பன் மறைவைப் பற்றிப் பேசுகிறது ஒரு சுவரொட்டி.
சுவரொட்டியிலிருந்த
கண்களில் வழிந்து கொண்டிருந்தது
இப்போது
எனது கண்ணீர்
——- என்ற வலுவான முத்தாய்ப்பு கவிதையை முடித்து வைக்கிறது
‘ பொன் முட்டையிடும் ‘ என்று தொடங்குகிறது ஒரு கவிதை. இக்குறியீட்டுக் கவிதை வித்தியாசமானது. தன் பொன் முட்டையிடும்
வாத்தை அடித்தே கொல்கிறான் ஒருவன். ஏன் ?
வாத்துக் கொட்டிலில்
வெண்ணிறக் கோழி முட்டையைக்
கண்டவன்
அடித்தே
கொன்றுவிட்டான் அதை
—— பொன் முட்டையிடும் வாத்து குற்றமற்றதாக இருக்கலாம். இடையில் யாராவது தவறு செய்திருக்கலாம்.
‘ சாத்தானின் கதை ‘ என்ற கவிதை , குடிப்பழக்கத்தைக் கண்டிக்கிறது. குடிப்பவன் சாத்தானாக மாறுகிறான் என்று அழுத்தமாச் சொல்கிறது.
யாரின் சாபமோ
திரவ வடிவில்
புட்டியிலடைத்துக்
கிடக்கிறது சாத்தான்
—– மதுக்குப்பியை ‘ சாத்தானின் குடுவை ‘ என்கிறார் பூபாலன் !

இரா. பூபாலன் இலக்கியப் பத்திரிகைகளில் மட்டுமல்லாமல் வணிகப் பத்திரிகைகளிலும் கவிதை எழுதி வருகிறார். நம்பிக்கை தரும்
கவிஞராக இருக்கிறார். பாடு பொருள் எதுவானாலும் இவர் கவிமொழி அதை அழகான கவிதையாக மாற்றிவிடுவது வெற்றியே ! நூல்
வெளியீடு ; பொள்ளாச்சி இலக்கிய வட்டம் செல் ; 90955 07547. பக்கங்கள் 95 விலை ரூ. 70.

Series Navigationசுப்ரபாரதிமணியனின் ஆதாரக் கவலைகள் -தேநீர் இடைவேளை நாவல் மறுபதிப்பு : என்சிபிஎச் வெளியீடுபரிசு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *